Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Inception (2010) - விமரிசனத்துக்கு அப்பால்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Inception (2010) - விமரிசனத்துக்கு அப்பால்...

சமீபத்தில் பார்த்து அதிசயித்த படம், இந்த Inception. Christopher Nolan தான் இந்த கிரியேட்டர். மேக்கிங்கில் தனித்துவம் கொண்டிருக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில், தன் திரைக்கதையால் தனித்துவம் கொண்டிருக்கும் இயக்குநர் தான் இந்த நோலன்

இந்த படத்தை பற்றி ஏற்கனவே ஜெய் அவர் ஸ்டைல்ல எழுதிய அழகான விமர்சனம். இருந்தாலும், சில விஷயங்களை சொல்லவேண்டும், படம் பார்ப்பவர்களுக்கு உதவியாக சில டெக்னிக்கல் விஷயங்கள். இந்த பதிவு இந்த படத்தை பற்றின என் 'ஆராய்ச்சியின்' பதிவும் கூட (சிரிக்கப்படாது).

கதையும் அதன் முடிச்சும் பிரமிக்க வைப்பவை. ஒரு கனவை ஒருவர் காணமுடியும். இரு வேறு மனிதர்கள் 'சேர்ந்து' ஒரு கனவை காணமுடியுமா? சினிமாவில் முடியும். நிஜத்தில்? அதற்கு பயிற்சி தேவை. இந்த படம் இந்த Sharing based கனவை பற்றி தான். மேலும், கனவுக்குள் கனவுக்குள் கனவுக்குள் கனவு...மொத்தம் 5 நிலைகள் (layers).

Inception-ன் சுவையான technical rules-க்கு போகும் முன், முதலில் கதை சுருக்கம்:

நாயகன் காஃப் (Cobb), நம்ம டி காப்ரியோ, ஒரு Con artist. அழகாக திரைக்கதை அமைத்து திருடுபவன். இந்த முறை திருடுவது அனைவரின் (இதயத்தை அல்ல) மூளையை. மூளைக்குள் இருக்கும் தகவலை. சைட்டோ (Saito) என்ற தொழிலதிபரிடம் தன் வேலையை காட்ட முனைய, வெற்றியின் அருகில் வந்து, ஒரு சிறு தவறால், தவற விடுகின்றனர் காஃப் & டீம். கனவில் டி காப்ரியோவின் மனைவி மால் (Mal) நுழைந்து காரியத்தை கெடுத்துவிடுகிறாள். இவர்களை பற்றி அறிந்தே சைட்டோ இந்த நாடகத்தை டி காப்ரியோவை நடத்த விடுகிறான் (auditioning). தப்பிக்க முயலும் போது சைட்டோ காஃப் & டீமை வழிமறிக்கிறான். காரணம், சைட்டோவிற்கு காஃபால் ஒரு காரியம் நடைபெற வேண்டியிருகிறது.

காஃப்பால் கனவில் இருந்து ஒரு தகவலை எடுக்க முடியுமென்றால் (extraction), ஏன் விதைக்க (inception) முடியாது? அதனால் தன் பிஸினஸ் எதிரி பிஸ்சரின் (Fischer) மனதில் ஒரு தவறான் தகவலை விதைக்கவேண்டும். காஃப்பிற்கோ அமெரிக்கா திரும்பவேண்டும். தன் மனைவி(!) மால் மரணத்திற்கு இவன் தான் காரணம் என்பதால் அமெரிக்க போலீஸ் இவனை தேடுகிறது. சைட்டோவும் அந்த ஆப்பரேஷனுக்குள் வருவேன் என்கிறான். காரணம் இவர்கள் வெற்றி பெற்றார்களா என்று அறிய. காஃப் சம்மதிக்கிறான்.

மால் தான் காஃப்பின் மனைவி. இதற்கு முன் இவர்கள் இருவரும் தான் இந்த 'வேலை'யை காட்டிக் கொண்டிருந்தனர். இருவரும் பரிசோதனை முயற்சியாக அடிக்கடி இந்த கனவின் மூலம் வாழ்ந்து கொண்டிருந்த போது, மாலுடன் limbo என்ற ஸ்டேட்டுக்குள் சுமார் 50 வருடங்கள் வாழ்ந்திருந்தான். limbo - பிறகு வருகிறேன். காஃப் செய்யும் அதிபுத்திசாலித்தனத்தின் பக்க விளைவால் மால் இறக்கிறாள்.

நிற்க. சைட்டோவின் வேலைக்காக தனக்கான ஒரு டீமை உருவாக்கிக்கொள்கிறான் காஃப். தன் தந்தை மைல்ஸ் (Miles) உதவியுடன் அரியாட்னி (Ariadne) என்ற திறமையான மானவியை Architect ஆக்கிக் கொள்கிறான். ஈயம்ஸ் தன் உருவத்தை (கனவில் தான்) மாற்றுவதில் கில்லாடி. யூசுப் மயக்க மருந்து கலவையில் கில்லாடி. ஆர்தர் - the Point Man. மைல்ஸ் தான் கனவுக்குள் ஊடுருவும் கலையை உருவாகியவர். ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொருத்தர் கனவு கான்கிறார்கள்.

நிஜம், நிலை 1 - விமானத்தில்

பிஸ்சரின் தந்தை மரணமடைய அவன் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் விமானத்தில் கூடவே பயனித்து அவனுக்கு தெரியாமல் மயக்க மருந்து கொடுத்து தங்கள் கனவில் சேர்த்துக் கொள்கிறார்கள். கவனிக்க, இந்த முயற்சி வெற்றி பெற்றால் மட்டுமே காஃப்பால் அமெரிக்காவுக்குள் நுழைய முடியும், சைட்டோவின் ஒரே ஒரு ஃபோன் கால் மூலம். தோற்றால் லாஸ் ஏஞ்சல்ஸ் இறங்கியதுமே Coff-க்கு Cop-ஆல் Cuff தான். ஜெயிலுக்கு போக வேண்டும்.

கனவு, நிலை 2 - மழையில்

பிஸ்சரை காஃப் & டீம் கடத்துகின்றனர். ஆனால், பிஸ்சரின் ஆழ்மனம் உருவாக்கிய கமாண்டோக்கள் இவர்களை தாக்க, சைட்டோ படுகாயமடைகிறான். அவனை அங்கேயே கொன்று நிஜ உலகில் முழிக்கவைக்கவும் முடியாது. காரணம், பல நிலைகளில் பயனிக்க வேண்டியிருப்பதால், 'மேலே' அனைவருக்கும் அதிகமாக தூக்க மருந்து கொடுக்கபட்டிருக்கிறது. பின், அங்கு பிஸ்சரின் காட்ஃபாதர் ப்ரௌனிங்குடன் (Browning) பிஸ்சரை பேசவைக்கிறார்கள். ஈயம்ஸ் தான் ப்ரௌனிங்க் தோற்றத்தில் பேசுகிறார். இன்னொரு உயில் இருப்பதாக பிஸ்சரை நம்ப வைக்கிறார்கள். ஒரு வேனில் அனைவரையும் ஏற்றி யூசுப் வண்டியை ஓட்ட அனைவரும் அதற்குள் இன்னொரு கனவுக்கு செல்கிறார்கள்.

கனவு, நிலை 3 - ஆப்பரேஷன் சார்லஸ் - ஹோட்டலில்

இடம் ஒரு ஹோட்டல். பிஸ்சரிடம் சென்று நீ எப்படி இங்கு இருக்கிறாய் என்று உன்னால் உனரமுடிகிறதா என்று கேட்டு, அவன் இருப்பது ஒரு கனவுலகம், அந்த கடத்தலை நடத்தியதே ப்ரௌனிங்க் தான் என்று நம்பவைக்கிறார்கள். அதனால் ப்ரௌனிங்கின் கனவில் சென்று உண்மையை கண்டறியலாம் என்று முடிவெடுத்து அங்கு வரும் (பிஸ்சரின் ஆழ்மன) ப்ரௌனிங்கை கடத்தி அவனையும் மயக்கி இன்னொரு கனவுக்குள் செல்கிறார்கள்.

கனவு, நிலை 4 - பனிப்பிரதேசத்தில்

ப்ரௌனிங்கின் ரகசியம் அங்குள்ள சேஃப் லாக்கரில் இருக்கிறது. அதை உடைக்க வேண்டியது பிஸ்சரின் வேலை. பிஸ்சர் அங்கு வரும் மாலால் கொல்லப்படுகிறான். அவன் லிம்போவிற்கு செல்கிறான். அவனை மீட்க காஃபும் அரியாட்னியும் அடுத்த நிலைக்கு செல்கின்றனர்.

கனவு, நிலை 5 - லிம்போ

அங்கு மால் காஃபை அங்கேயே தங்கும்படியும் அப்படி நடந்தால் பிஸ்சரை விட்டுவிடுவதாகவும் கூறுகிறாள். அதனால் அவள் காஃப்பை கொல்ல முயற்சிக்கும் போது அரியாட்னியால் மால் கொல்லப்படுகிறாள். பிஸ்சர் திரும்புகிறான். அரியாட்னியும் திரும்புகிறாள். ஆனால், காயம்பட்ட சைட்டோவும் இறந்து லிம்போவுக்குள் விழுந்துவிடுவதால் அவனை தேட காஃப் லிம்போவுக்குள்ளேயே இருக்கிறான். பின் அவனை கண்டுபிடித்து அவனுக்கு புரியவைத்து வெளியேறுகின்றனர். நான்காம் நிலையில் இருக்கும் சேஃப் லாகரை திறந்தால் அங்கு பிஸ்சரின் தந்தை இருக்கிறார். அதற்குள் இருக்கும் மற்றொரு சேஃப் லாகரை திறந்தால் பிஸ்சருக்கு விடை கிடைக்கிறது. இரண்டாம் நிலை கனவில் உணருகிறான், அவன் தந்தை அவனை யாரையும் சார்ந்திருக்காமல் தனி ஆளாய் உருவாகவேண்டும் என்று விரும்பிகிறார் என்று. இது தான் இவர்கள் விதைக்க நினைக்கும் எண்ணமும் கூட. இந்த எண்ணத்தால் தன் தந்தையை சார்ந்திருக்காமல் இருக்க அவருடைய சாம்ராஜ்யத்தை உடைக்கலாம் இல்லையா?

வேலை முடிந்ததும், ஒவ்வொரு முந்தைய நிலைக்கு திரும்ப கிக் தேவை. அதனால் யூசுப் பாட்டு போட்டு பின் வேனை ஒரு பாலத்தின் மேல் இருந்து தண்ணீருக்குள் தள்ளுகிறான். அந்த வேன் மேலிருந்து கீழ் விழும்போது இருக்கும் 5 வினாடிகளில் நடப்பவை தான் கடைசி ஒரு மணிநேர படம். இரண்டாம் நிலையில் ஆர்த்தர் (Arthur) அனைவரையும் லிஃப்டில் 'போட்டு' பாம் வைத்து கிக் கொடுக்கிறான். மூன்றாம் நிலையில் ஈயம்ஸ் அந்த பனிபிரதேசத்தை வெடிவைத்து தகர்த்து கிக் கொடுக்கிறான். நான்காம் நிலையில் (லிம்போ) அரியாட்னி மேலிருந்து குதித்தும், பிஸ்சரை தள்ளிவிட்டும் கிக் கொடுக்கிறாள்.

Inception-ன் சுவையான technical rules:

* நிஜ வாழ்வுக்கும் கனவுக்கும் நேரமானது 1க்கு 20 என்ற விகிதத்தில் மாற்றம் உள்ளது. ஒருவர் 5 நிமிடம் கனவு கான்கிறார் என்றால், அந்த கனவுலகில் அதன் நீளம் 'சுமார்' 20x5 நிமிடங்கள். கனவுக்குள் கனவு என்னும் போது, நிஜம் முதல் நிலை (layer). கனவு இரண்டாம் நிலை. நிஜத்தில் 5 நிமிடங்கள் என்னும் போது, கனவுலகில் அதன் நீளம் சுமார் 100 நிமிடங்கள். அந்த கனவுக்குள் ஒரு கனவு (மூன்றாம் நிலை) என்னும் போது, அந்த நிலையில் அதன் நீளம் சில வாரங்கள் அதாவது compounded. நான்காம் நிலையில், சில வருடங்கள். இப்படி, அந்த நிலைகளை பொருத்த அளவில் காலம் மாறுபடும், ம்ஹூம், அதிகமாகும்.

ஆக, முதல் நிலையில் ஐந்து நிமிட கனவு என்பது கனவுலகின் நான்காவது நிலையில் சுமார் 50 வருடங்கள். லிம்போவில்...அம்போ. மேலும், நிஜம் + மூன்று நிலைகளும் அதற்கு மேலும் செல்வது அந்த கனவையே குலைத்துவிடும் (unstable).

* கனவுக்குள் கனவு என்னும் போது அந்த கனவை நிகழ்த்த இருக்கும் Extractor-க்கு நிறைய நேரம் கிடைக்கும். ஆனால், நிலைகள் அதிகமாக அதிகமாக ரிஸ்க் அதிகம். கனவில் காணாமல் போய்விட்டால் தொலைந்தவர் செல்லும் இடம் தான் limbo. காணாமல் என்றால்? நீங்கள் limbo-வில் இருந்தாலும் நிஜத்தில் அதிகபட்சமாக 1-10 மணிநேரம் தான் இருப்பீர்கள். ஆனால், லிம்போவில் அது சுமார் 1000-2000 வருடங்கள், சில நேரங்களில் முடிவு இல்லாதது. வலி மனதில்/மூளையில் என்பதால் லிம்போ உங்களை மனரீதியாக பாதிக்கக்கூடியவை. கனவு முடிந்தாலும் உங்களால் நிஜ வாழ்க்கைக்கு திரும்ப முடியாது. அதற்கு நிறைய பயிற்சியும் சாதுர்யமும் தேவைப்படும். அந்த சாதுர்யம் இல்லாததால் தான் மால் மீளமுடியாமல் தற்கொலை செய்துகொள்கிறாள், நிஜத்திலும்(!)

* எல்லோரும் சேர்ந்து ஒரு கனவை கான்பதற்கு, அந்த ஒவ்வொரு நிலை கனவையும் ஒருவர் மட்டும் கன்ட்ரோல் செய்ய முடியும். அந்த கனவை கலைக்க ஒவ்வொரு நிலையிலும் யாராவது அங்கேயே இருந்து கொள்ள வேண்டும். ஆனால், லிம்போ என்பது எவர் கன்ட்ரோலிலும் இல்லாதது. அது ஒரு shared dream state. இதற்கு முன் லிம்போவில் சென்றவர்கள் உருவாக்கியவைகளின் மிச்ச சொச்சம் அதில் இன்னும் இருக்கும். காஃப்பும் மாலும் ஏற்கனவே அங்கு இருந்ததால் அவர்கள் 50 வருடங்களாக கட்டிவைத்த கட்டிடங்களின் மிச்சம் பின் கடைசியில் அவன் மறுபடியும் செல்லும் போதும் இருக்கின்றன.

* தகவலை திருடுவதற்கு காஃப் ஒரு வழிமுறையை உருவாக்கிக்கொள்கிறான். அதாவது யாரிடம் இருந்து தகவலை திடுகிறானோ அவர் தான் the mark. அவரிடம் முதலில் எந்த தகவலை திருடப்போகிறோமோ அந்த தகவலை ஒரு சேஃப் லாக்கரில் வைத்துவிட்டதாக நம்பவைக்கப்படுகிறார். அந்த சேஃப் லாக்கர் தான் the mark-ஐ பொருத்தவரை சேஃப் இல்லையா? பின் அந்த லாக்கரை உடைத்து தகவலை திருடுவது தான் அந்த கனவின் மீதி திரைக்கதை. இங்கே அந்த சேஃப் லாக்கர் என்பது the mark-ன் ஆழ்மனம் (subconscious). ஆழ்மனதில் அந்த தகவல் புதைக்கப்பட்டிருப்பதாக அர்த்தம்.

* கனவு நிகழும் இடம் architect-ஆல் வடிவமைக்கப்பட்டது. அது அரியாட்னி. எல்லோரும் கனவு காண்பார்கள். மற்றவைகளை the mark நிரப்பும். ஒரு லாக்கரை உருவாக்கினால் the mark அதில் தன் ரகசியத்தை நிரப்பும். மற்றவர்களுக்கு எங்கே/எப்படி எடுப்பது என்று தெரியும். எப்பூடி?

* காஃப் ஒரு காலத்தில் architect-ஆக இருந்தாலும், மால் மறைவுக்கு பின் கனவுலகை கட்டுவதை நிறுத்திவிட்டான். காரணம், இவனுக்கு கனவுலகின் கட்டமைப்பு தெரிந்தால் கட்டாயம் மாலுக்கும் தெரிந்துவிடுமல்லவா? அதான்.

* இன்னொரு இன்ட்ரஸ்டிங் பாடின்ட். கனவில் இருக்கும் atmosphere characters எல்லாமே கனவு காண்பவரின் ஆழ்மன உருவாக்கங்கள். Atmosphere characters என்பவை இடத்திற்கு தகுந்தார் போல் இருக்கும் கேரக்டர்கள். உதா, டீக்கடையில் காட்சி என்றால், ஒரு நாலைந்து பேர் அமர்ந்து டீ குடிப்பார்கள் / பேப்பர் படிப்பார்கள் இல்லையா? அவர்கள் தாம்.

கனவை கலைப்பவர்களை இந்த கேரக்டர்கள் ரத்தத்தில் உள்ளே நுழைந்த எதிரிகளான நோயை வெள்ளை அணுக்கள் தாக்குவது போல தாக்க ஆரம்பிப்பார்கள்.

* கனவில் ஒரு கதாபாத்திரத்தில் இருப்பின் ஆரம்பம் தெரியாது. கனவில் திடீரென்று ஒரு கதாபாத்திரம் தோன்றும். அந்த கேரக்டர் அந்த இடத்தில் எப்பொழுது வந்தது என்ற கேள்வியை நம் உள்மனது கேட்காது, இல்லையா? இதை உனரவைத்தாலேயே ஒருவர் கனவில் தான் இருக்கிறார் என்பதை தெளிவுபடுத்திவிடமுடியும். (பார்க்க: "Charles" - கீழே)

* தாம் தற்போது இருப்பது கனவா / நிஜமா என்று அறிய ஒவ்வொருத்தரும் தன்னுடன் ஒரு சிறு பொருளை வைத்திருப்பர். அதன் பெயட் டோட்டம் (totem). அது எந்த ஒரு கனவிலும் கூடவே எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். உதா, காஃப் வைத்திருக்கும் totem ஒரு சிறு பம்பரம் போல் இருக்கும். அதை சுற்றிவிட்டால் இரு action-கள் நடக்கும். நிற்காமல் சுற்றிக்கொண்டே இருந்தால் அது கனவு என்று பொருள். சில வினாடிகளில் நின்று விட்டால் அது நிஜம் என்று பொருள். சரி! இது எதற்கு? அடுத்த பாயின்ட் அதை சொல்லும்.

* நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். கனவில் நீங்கள் கீழே விழுவது போல் இருக்கும். சடாரென்று முழிப்பீர்கள். இப்படி நடப்பதற்கு பெயர் Hypnic jerk. சிம்பிளாக kick. கனவில் இருந்து ஒருவர் திடீரென்று வெளியேற வேண்டுமென்றால் இந்த kick-கை பயன்படுத்தலாம். வெளியேற நிறைய காரணம் இருக்கும். உதா, கனவு தோல்வியை நோக்கி செல்லும் போது, அதிலிருந்து தப்பிக்க. அப்படி அந்த கிக்கை கொடுக்கமுடியாத பட்சத்தில் மற்றொரு வழி தற்கொலை/கொலை. கனவா அல்லது நிஜமா என்று தெரியாமல் நிஜத்தில் கொலை/தற்கொலை செய்துகொண்டால்? அதற்கு தான் இந்த totem-கள்.

* ஒரு கனவில் ஒருவர் தான் அந்த கனவை கன்ட்ரோல் செய்வர். அந்த level கனவை முடித்து வைப்பவர் அவராக தான் இருக்க முடியும். மற்றவர் அனைவரும் தூங்கிய நிலையில் இருக்க, இவர் மட்டும் விழித்த(!) நிலையில் இருப்பார். கிக்கை நிறைவேற்றுவார்.

* ஒருவர் தான் ஒரு கனவின் ஓனர். அவர் திடீரென்று அந்த கனவைவிட்டு வெளியேறினால்? உதா, கனவு ஃபெயில் ஆகும் போது கனவுக்குள் இருக்கும் காஃப் ஆர்த்தரை சுட்டுவிட (kick), ஆர்த்தர் தான் அந்த கனவின் இன்சார்ஜ் என்பதால் அவர் வெளியேறியவுடன் அந்த கனவே சிதைய ஆரம்பிக்கும். கட்டிடங்கள் இடியும். ஒவ்வொரு கேரக்டரும் மறைந்து விடுவர். மாஸ்டரே இல்லாமல் எப்படி டீக்கடை நடத்த முடியும்? ;)

* கிக்கை பயன்படுத்தும் முன் சம்பத்தப்பட்ட கனவுலகின் கன்ட்ரோலருக்கு கொடுக்கப்படும் சிக்னல் ஒரு இசை. அந்த இசையை அவருக்கு ஒரு வாக்மேன் மூலம் போட்டுவிட, கனவுலகில் அவர் தெரிந்து கொள்ள வேண்டும், இந்த கனவு முடிக்கப்படப்போகிறது என்று.

* 'மேலே' ஏதேனும் நடந்தால், அது கனவிலும் நிகழும். நிஜத்தில் தண்ணீரில் விழுந்தால் கணவில் அந்த தண்ணீர் ஏதோ ஒரு விதத்தில் வரும். யூசுப் வண்டியை பாலத்தின் மேல் இருந்து விழவைப்பதால் அடுத்த நிலை கனவில் ஆர்த்தரும் அனைவரும் ஹோட்டலில் மிதந்தபடியே இருப்பர். வேன் பல்டி அடிக்கும் போது, ஆர்த்தரின் ஹோட்டல் கனவில் அந்த ஹோட்டலே உருளும்.

* காஃபிற்கு இந்த கனவில் 'விதைப்பதில்' அனுபவம் உள்ளது. எதேச்சையாக காஃப்பும் மாலும் லிம்போவில் மாட்டிக்கொள்கிறார்கள். அதில் காஃப் சீக்கிரம் உணர்ந்து கொள்கிறான். ஆனால் மால் உணர மறுக்கிறாள். அதில் இருந்து வெளியே வருவதற்கு அவன் மாலிற்கு 'கனவில் இருக்கிறோம்' என்ற எண்ணத்தை விதைக்கிறான் (Inception). இதற்கு மாலின் totem-ஐ சுழன்றுகொண்டிருக்கும் போது அதை ஒரு சேஃப் லாக்கரில் வைத்து பூட்டிவிடுகிறான். கனவில் எதிர்பார்த்ததை போல் மால் தற்கொலை செய்துகொள்கிறாள். பின், லிம்போவில் இருந்து மீண்டும் விடுகிறார்கள். ஆனால் அவன் விதைத்த தகவல் எதிர்பாராமல் விஷ செடியாக வளர்ந்து, நிஜ வாழ்க்கையிலும் அவள் 'கனவில் இருக்கிறோம்' என்றே நினைத்துக் கொண்டு தற்கொலை செய்துகொள்கிறாள்.

* சைட்டோ Incept செய்யவேண்டும் என்று சொல்லும்போது அனைவரும் கஷ்டம் என்று கூற, காஃபுக்கு மட்டும் அது முடியும் என்று நினைக்க காரணம், அவன் ஏற்கனவே அதை மால் மூலம் நிகழ்த்தியிருப்பது தான். மால் இறக்கும் போது இவன் தப்பிக்கக்கூடாது என்பதற்காக தன் வக்கீலிடம் காஃப் அவளை கொடுமைப்படுத்துவதாகவும் கொல்லக்கூடும் என்று ஏற்கனவே சொல்லியிருப்பதால் காஃப்பால் அமெரிக்க போலீஸிடம் தப்பிக்க முடியாமல் போகிறது.

* லிம்போவில் Mal உருவாக்கிய அந்த விஷயம் தான் totem. அதை அந்த லாக்கரில் வைத்துவிடுவதால் தான் கனவா/நிஜமா என்று தெரியாமல் தற்கொலை செய்துகொள்கிறாள்.

* அரியாட்னி (Ariadne) ஒரு ஆர்கிடெக்ட். அவளுடைய வேளை, கனவுலகத்தை வடிவமைப்பது. எந்த இடமும் புதிதாக இருக்கவேண்டும். ஏற்கனவே வந்த இடம் திரும்ப வரக்கூடாது. இப்படி வந்து தொலைத்ததால் தான் சைட்டோவுடன் தோற்க நேர்ந்தது. அதில், அவன் பயன்படுத்திய அதே கார்பெட் கனவிலும் இடம் பெற்றது. கனவுலகத்தில் வடிவமைப்பு மட்டுமே அவளுடையது. அந்த கனவின் subject? காஃப்பினுடையது. சிம்பிள்.

இவள் வடிவமைப்பது நிஜத்தில் இல்லாத/இயலாத விஷயங்களை. உதா, முடிவற்ற படிக்கட்டுகள் (Penrose stairs) போன்றவை. இந்த படிக்கட்டை உபயோகித்து தான் ஹோட்டலில் ஆர்த்தர் தன்னை தாக்கவருபவனை கொல்கிறான்.

* இந்த படத்தில் வரும் மால் (Mal) காஃபின் குற்றவுணர்ச்சியின் வடிவம். புரிகிறதா, ஏன் ஒவ்வொரு ஆப்பரேஷனிலும் அவள் வில்லியாகிறாள் என்று?

* ஒவ்வொருவருக்கு ஏற்றவாரு கனவு நடைபெறும் இடம் மாறுபடும். யூசுப் நிறைய குடித்திருப்பதாலும், உச்சா போகாமல் விட்டதாலும் அவன் கனவு ஒரு மழை பெய்யும் உலகில். இதன் காரணமாகவே பிஸ்சரை டாக்ஸிக்காக காத்திருக்கும் இடத்தில் பிடிக்கின்றனர். ஈயம்ஸின் வேலை உருவம் மாறுவது. அதில் அவன் ஸ்பெஷலிஸ்ட். கனவில் அவன் வேறு உருவம் மாறக்கூடியவன். அவன் the mark-இடம் அவன் காட்ஃபாதர் உருவில் பேசுகிறான்.

* பொதுவாக ஒவ்வொரு நிலையிலும் சாவகாசமாக கிக் கொடுக்கலாம் தான். ஆனால், இவர்கள் 5 நிலைகள் வரை செல்வதால் அதனை தாக்கு பிடிக்க அதிகமாக மயக்க மருந்து தேவைப்படுகிறது. அதனால் லிம்போ வரை சென்றவர்கள் வெளியேற synchronised கிக் அவசியமாகிறது. அதனால் யூசுப் பாட்டு போட்டு பின் வேனை ஒரு பாலத்தின் மேல் இருந்து தண்ணீருக்குள் தள்ளுகிறான். இரண்டாம் நிலையில் ஆர்த்தர் (Arthur) அனைவரையும் லிஃப்டில் 'போட்டு' பாம் வைத்து கிக் கொடுக்கிறான். மூன்றாம் நிலையில் ஈயம்ஸ் அந்த பனிபிரதேசத்தை வெடிவைத்து தகர்த்து கிக் கொடுக்கிறான். நான்காம் நிலையில் அரியாட்னி மேலிருந்து குதித்தும், பிஸ்சரை தள்ளிவிட்டும் கிக் கொடுக்கிறாள்.

இவை நான்கு நிலை தொடர் கிக்குகளால் இவர்கள் அனைவரும் மீளுகின்றனர்.

* இந்த படத்தில் மற்றொரு சுவையான விஷயம், சார்லஸ் என்ற பெயர். இது ஒரு சங்கேத வார்த்தை. சார்லஸ் என்றால் ஒரு திட்டம். இதன்படி யாரை ஏமாற்றுகிறார்களோ அவரிடம் சென்று அவர்கள் கனவுலகில் இருப்பதாக நிரூபித்து பின் அதிலிருந்து அவர்களை மேலும் குழப்பி தங்கள் வலையில் விழ வைப்பது.

* முக்கியமா ஒன்ன மறந்திட்டேன். காஃப் தன்னிடம் உள்ள ஒரு குறையை சுயநலத்துக்காக தன் டீமிடம் சொல்லாமல் மறைத்து அவர்களை ஆபத்தில் விட்டுவிடுகிறான். அது தான் மாலின் வருகை. அதனை கண்டுபிடிக்கிறாள் அரியாட்னி. அதனால் தான் அவளுக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் போடப்படுகிறது. யாராவது ஒருத்தர் உண்மையை சொல்லி மற்றவர்களை காப்பாற்ற வேண்டும் இல்லையா?

Conclusion:

எத்தனையோ படங்கள் பார்த்திருந்தாலும், சில படங்கள் மட்டும் நம்மை அதிர்ச்சியிலோ/ஆச்சரியத்திலோ ஆழ்த்தும். உதா Sleuth. இப்படி கூட ஒரு படத்திற்காக 10 வருடங்கள் உழைக்க முடியுமா? அதுவும் நாம் இதுவரை கண்டிறாத உலகத்தில்? Matrix படம் கூட ஒரு வித்தியாசமான உலகம் தான். அதன் கான்சப்ட் வித்தியாசமானது தான். ஆனால் அதில் வெகு சில முடிச்சுகள் தான். மீதி கிராபிக்ஸ். மனித உடம்பு ஒரு பேட்டரி போல, நிகழ்காலத்திற்கு செல்ல டெலிபோன் தேவை...இப்படி சில விஷயங்கள் மட்டுமே. ஆனால் இந்த படத்தில் உள்ள வசனங்கள் ஒவ்வொன்றையும் 'படித்து' அறிந்தோமானால் நோலன் எவ்வளவு மெனக்கெட்டிருப்பார் என்று தெரியும். முதல் 20 நிமிட படத்தை பார்க்க நான் 2 மணிநேரம் படம் பார்த்தேன். வசனங்கள், அதன் அர்த்தங்கள் அனைத்தும் பிரமிக்க வைப்பவை.

கதை தெரியாமல் முதல் முறை பார்க்கும் போது சில காட்சிகள் அட்டகாசமாக இருந்தது. அரியாட்னியுடன் பேசும் போது நிகழும் சம்பவங்கள். அவர்கள் கடையில் உட்கார்ந்திருக்கும் போது சுற்றிலும் இருப்பவை வெடித்து சிதறும் காட்சி. அப்புறம் சில இடங்களில் அவர்கள் சொல்லித்தான் அவர்கள் கனவில் இருப்பதாக நமக்கே தெரிவது போன்றவை சின்ன சின்ன ட்விஸ்ட்டுகள்.

நிச்சயம் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.

Inception-ன் ஐந்து நிலைகள்

levels-of-inception.jpg

படத்தின் முடிவில் இது நிஜமா/கனவா என்று சோதிக்க காஃப் தன் டோட்டமை சுழல விடுகிறான். குழந்தைகளை பார்த்த மகிழ்ச்சியில் அதை கண்டுகொள்ளாமல் அந்த இடத்தை விட்டு சென்றுவிடுகிறான். காமெரா அந்த பம்பரத்தை நோக்கி திரும்புகிறது. அது நிஜம் என்றால் அந்த பம்பரம் விழவேண்டும். கனவு என்றால் சுற்றிக் கொண்டே இருக்கவேண்டும். பம்பரம் சுற்றிக் கொண்டிருகும் போதே படம் முடிகிறது. இப்போ சொல்லுங்கள் காஃப் நிஜ உலகில் இருக்கிறானா? கனவில் இருக்கிறானா? கனவுலகில் என்றால் இந்த படம் முழுதும் கனவா?

Bibliography:

http://screenrant.com/inception-spoilers-discussion-kofi-68330/2

http://www.cinemablend.com/new/inception-explained-unraveling-the-dream-within-the-dream-19615.html

Edith Piaf - Non, je ne regrette rien (1961) - படத்தில் கனவு முடிக்கப்பட போடப்படும் பாடல்...

http://www.youtube.com/watch?v=kFRuLFR91e4&feature=player_embedded

8 ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

http://jeeno.blogspot.com/

கனடாவில் எனக்கு கிடைத்த இலவசமான டிக்கட்டில் பார்த்த படம்.... படம் பாத்து அடுத்த நாள் முழுக்க மனதை குடைந்து கொண்டு இருந்த படம்... கருத்து ஊட்டல் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் எண்டால் இந்த படத்தை தாராளமான பார்த்து அறிந்து கொள்ளலாம்...

முக்கியமாக எப்படி திட்டம் இட்டு ஏற்க்கனவே இருக்கும் ஒரு கருத்தை மனத்துக்குள் இல்லாமல் செய்ய முடியும் என்பதும், சிறி பொறியை குடுத்து வேறு ஒரு கருத்து அந்த இடத்தில் வர முடியும் என்பதையும் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்...

கனவு எண்று இல்லாமல் நிஜவாழ்விலும் இந்த முறை சாத்தியமே... எங்களை எப்படி மன மாற்றம் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேணும் எண்டால் தமிழ் மக்கள் பார்க்க வேண்டிய படம்...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை மனம் மாற்ற இப்படி எல்லாம் கஷ்டப்படவேண்டியதில்லை. :lol:

நண்பன் ஒருவன் சீடியில் தந்தான். நல்ல படம் என்று கூறி வீட்டிலுள்ளவர்கள் அனைவரையும் அழைத்து படத்தைப் போட்டேன். படம் தொடங்கி 20 நிமிடத்தில் 'உதென்ன விசர்ப் படம்' என்று எல்லோரும் எழுந்து போய்விட்டார்கள். சண்ரீவி நாடகத்தை மெய்மறந்து பார்ப்பவர்களுகு இப்படியான படங்கள் அதிகம் தானே. :)

தமிழர்களை மனம் மாற்ற இப்படி எல்லாம் கஷ்டப்படவேண்டியதில்லை. :lol:

ஆனால் நடந்ததும் நடப்பதும் இதுதான்... !

பல தடவைகள் சொல்லப்பட்ட தமிழர் போராட்டம் பற்றிய பொய்கள் தான் இண்டைக்கு தமிழர் மத்தியில் உண்மையாக உலா வருகின்றது... அதிலை பகுத்தறிவு எண்டது எல்லாம் இரண்டாம் பச்சம்... வரலாறுகள் கூட வளிகாட்டவில்லை... வெறும் கட்டுக்கதைகள் மட்டும் தான் உண்மை எண்டு சாதிக்கப்படுகின்றன... அர்ப்பணிப்புக்கள் கூட பொய்களால் புறக்கணிக்கப்படும் நிலை தான் தமிழர்களுக்கு...

ஏன் இவ்வளவும் ஒரு உதாரணத்துக்கு பாருங்கள்... போராட்டம் உக்கிரமான காலங்களில் தமிழர்கள் தெளிவான நிலை எடுக்க வேண்டிய காலங்களில் இங்கை கூட பிராமணிகளின் கோமணங்கள் அவிள்க்க படுவது பற்றி தானே போர் நடந்தது...??? இண்டைக்கு பிராமணிகளின் கோவணங்கள் பிரச்சினையாக இல்லையா.. இல்லை கோயில் மணிகளால் பிரச்சினை இல்லையா எங்கை போனது அவை எல்லாம்... முதலிலை இந்த பொறி எங்கை இருந்து கிழம்பியது....?? எப்பவாவது யோசிச்சு பாத்து இருப்பார்களா...??

இப்படி பல திசை திருப்பல்களை கடந்து வந்தது தான் எங்கள் போராட்டம்...

Edited by தயா

கனடாவில் எனக்கு கிடைத்த இலவசமான டிக்கட்டில் பார்த்த படம்.... ..

அப்பு எப்ப கனடா வந்தீங்க? ஒரு சொல் சொல்லியிருக்கலாம் தானே ?

அடுத்த முறை வரும் பொது என் சின்ன வீட்டுக்கும் (அட விட்டின் அளவு சின்னது என்று சொல்ல வாறன்) வந்து விட்டு போங்கள்

அப்பு எப்ப கனடா வந்தீங்க? ஒரு சொல் சொல்லியிருக்கலாம் தானே ?

அடுத்த முறை வரும் பொது என் சின்ன வீட்டுக்கும் (அட விட்டின் அளவு சின்னது என்று சொல்ல வாறன்) வந்து விட்டு போங்கள்

வந்து திரும்பி ஒரு 4 மாதம் இருக்கும், நான்கு நாட்க்கள் ரொறன்ரோவிலையில் மூண்று நாட்கள் ஒட்டாவாவிலையில் நிண்டு போட்டு திரும்பி வந்திட்டன்.. ஆனால் அப்போ விடுமுறைக்கு எண்டு வரவில்லை இருந்த சின்னப்பிரச்சினையாலை வரவேண்டி இருந்தது... விடுமுறை எண்டு வந்தால் கட்டாயம் சொல்லி நானே தேடி வந்து இருப்பன்...!

படம் பாக்க போனதே மண்டை காஞ்சு போய் தான்...

அதுசரி கனடாவிலை சின்னவீடு எண்டு நீங்கள் சொன்னால் லண்டனிலை இருக்கிறதுகள் என்ன புறாக்கூடுகளா....?? இந்த உள் குத்துதானே வேண்டாம் எண்டுறது... :D :D :D

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி கனடாவிலை சின்னவீடு எண்டு நீங்கள் சொன்னால் லண்டனிலை இருக்கிறதுகள் என்ன புறாக்கூடுகளா....??

இந்த உள் குத்துதானே வேண்டாம் எண்டுறது... :D :D :D

:D:D:D

அதுசரி கனடாவிலை சின்னவீடு எண்டு நீங்கள் சொன்னால் லண்டனிலை இருக்கிறதுகள் என்ன புறாக்கூடுகளா....?? இந்த உள் குத்துதானே வேண்டாம் எண்டுறது... :D :D :D

லண்டனுக்கு ஒருக்காலும் வரவில்லை என்றபடியா தெரியாது அங்கு எப்படி வீடுகள் என்று...இந்த வருடம் (வேலை மாறாவிடின்) ஒரு முறையாவது எட்டிப் பார்க்க வேண்டும்

Inception (2010) - விமரிசனத்துக்கு அப்பால்...

சமீபத்தில் பார்த்து அதிசயித்த படம், இந்த Inception. Christopher Nolan தான் இந்த கிரியேட்டர். மேக்கிங்கில் தனித்துவம் கொண்டிருக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில், தன் திரைக்கதையால் தனித்துவம் கொண்டிருக்கும் இயக்குநர் தான் இந்த நோலன்

இந்த படத்தை பற்றி ஏற்கனவே ஜெய் அவர் ஸ்டைல்ல எழுதிய அழகான விமர்சனம். இருந்தாலும், சில விஷயங்களை சொல்லவேண்டும், படம் பார்ப்பவர்களுக்கு உதவியாக சில டெக்னிக்கல் விஷயங்கள். இந்த பதிவு இந்த படத்தை பற்றின என் 'ஆராய்ச்சியின்' பதிவும் கூட (சிரிக்கப்படாது).

கதையும் அதன் முடிச்சும் பிரமிக்க வைப்பவை. ஒரு கனவை ஒருவர் காணமுடியும். இரு வேறு மனிதர்கள் 'சேர்ந்து' ஒரு கனவை காணமுடியுமா? சினிமாவில் முடியும். நிஜத்தில்? அதற்கு பயிற்சி தேவை. இந்த படம் இந்த Sharing based கனவை பற்றி தான். மேலும், கனவுக்குள் கனவுக்குள் கனவுக்குள் கனவு...மொத்தம் 5 நிலைகள் (layers).

------------

---------------

இந்தப் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று இருக்கின்றன்....ஆனால் லேசில புரியாது என்றும் சொல்லினம். Matrix படத்தையே மூன்று முறை பார்த்து தான் புரிந்து கொள்ள முடிந்தது

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

அறிவூட்டல்களை எல்லாம் திசை திருப்பல்கள் என்று சொல்லக்கூடாது. <_<

நானும் 3D இல் பார்த்தேன். கனவுக்குள் புகுந்து மனதை மாற்றும் வித்தை கிடைக்கும் வரம் கிடைத்தால் யார் கனவுக்குள் புகலாம் என்று யோசித்தேன்.

அறிவூட்டல்களை எல்லாம் திசை திருப்பல்கள் என்று சொல்லக்கூடாது. <_<

நானும் 3D இல் பார்த்தேன். கனவுக்குள் புகுந்து மனதை மாற்றும் வித்தை கிடைக்கும் வரம் கிடைத்தால் யார் கனவுக்குள் புகலாம் என்று யோசித்தேன்.

ஒவ்வொண்டுக்கும் எங்களுக்கு வசதியாக பெயர் வைச்சு க்கொள்ள வேண்டியதுதான்... <_<

லண்டனுக்கு ஒருக்காலும் வரவில்லை என்றபடியா தெரியாது அங்கு எப்படி வீடுகள் என்று...இந்த வருடம் (வேலை மாறாவிடின்) ஒரு முறையாவது எட்டிப் பார்க்க வேண்டும்

லண்டன் வந்தால் சொல்லுங்கோ ஒரு சந்திப்பை கிருபண்ணா தலைமையிலை போடுவம்...

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் வந்தால் சொல்லுங்கோ ஒரு சந்திப்பை கிருபண்ணா தலைமையிலை போடுவம்...

நிழலியும் நானும் போகக்கூடிய இடங்களுக்கு நீங்கள் வருவீர்களோ தெரியாது :lol:

நிழலியும் நானும் போகக்கூடிய இடங்களுக்கு நீங்கள் வருவீர்களோ தெரியாது :lol:

போய்வாற வாகனத்துக்கு சாரதி வேலை தன்னும் தர மாட்டியளோ....?? மட்டையாய் போனால் கூட்டிக்கொண்டு போக ஆள் வேணும் தானே....?? :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை மனம் மாற்ற இப்படி எல்லாம் கஷ்டப்படவேண்டியதில்லை. :lol:

கிருபன் அண்ணா இப்ப மொத்தத்தில இப்ப என்னதான் சொல்றீங்கள்?

மனம் இருந்தால்தான் மாற்றம் பற்றி பேசமுடியம் அப்படிதானே?

  • கருத்துக்கள உறவுகள்

போய்வாற வாகனத்துக்கு சாரதி வேலை தன்னும் தர மாட்டியளோ....?? மட்டையாய் போனால் கூட்டிக்கொண்டு போக ஆள் வேணும் தானே....?? :lol: :lol: :lol:

படுகுழியில் விழுத்தாமல் வாகனத்தை ஓட்டினால் சாரதி வேலை தரலாம். சில இடங்களுக்கு உள்ளுக்கை வர வெக்கப்பட்டுப் போட்டு என்ன பாத்தனீங்கள் எண்டு கேட்டுக்கொண்டிருக்கப்படாது :wub:

மனம் இருந்தால்தான் மாற்றம் பற்றி பேசமுடியம் அப்படிதானே?

ஒருவகையில் உண்மைதான். தமிழர்களுக்கு சுயநலம்கூட, எனவே மனம் இல்லையென்று கொள்ளலாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.