Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துவாரகாவின் தந்தை பெயர் பிரபாகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துவாரகாவின் தந்தை பெயர் பிரபாகரன்

1

இலங்கையில் முப்பது வருடங்களாக நீடித்து வந்த உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்த கையுடன், எல்லா TV காரரும் தங்களின்ர தலைப்புச் செய்தியில பிரபாகரனின்ர சடலத்தையும், மூளையையும் தகட்டையும், பிஸ்டலையும் பல்வேறு கோணங்களில் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் காட்சி குறைந்தது ஐந்து பத்து நிமிடங்கள் நீடித்தது. இதற்கு அடுத்ததாக, பிரபாகரனது மகன் சாள்ஸ் அன்ரனியினது உடலைக் காண்பித்தார்கள். மூன்றாவதாக பிரபாகரனது மகள் துவாரகா என ஒரு உடலைக் காண்பித்தார்கள். இவ்வளவு சங்கதிகளையும் எங்கட தமிழ் ஆக்கள் TV-யில பார்த்துக்கொண்டிருக்கினம் - என்ன செய்யிறதென தெரியாத பதகளிப்புடன். கொஞ்சப் பேருக்கு சந்தோசமாகவும் இருந்திருக்கும். இதில இது இல்ல முக்கியம். முக்கியமான சங்கதி வேறொன்று. இவ்வளவு சங்கதிகளையும் எல்லா சனத்தையும் போலவே பிரபாகரனும் துவாரகாவும் tv யில பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் சங்கதி.

நீங்கள் என்னை சந்தேகத்துடன் பார்க்க வேண்டியதில்லை. முக்கியமாக, துவாரகா குறித்து ஏற்கனவே உலாவும் நான்கு விதமான கதைகளிற்கு அடுத்ததாக ஐந்தாவது கதையை அவிட்டு விடுவதாக நினைக்கக் கூடாது. ஏற்கனவே நீங்கள் நான்கு கதைகளை அறிந்து வைத்திருக்கின்றீர்கள். இறுதி யுத்தத்தில் தப்பிய துவாரகா கனடாவில் இருக்கிறார், இலண்டனில் இருக்கிறார், ஐந்தாவது ஈழப் போரிற்காக காட்டிற்குள் தயாராகும் பிரபாகரனுடன் இருக்கிறார், யுத்தத்தில் கொல்லப்பட்டதாக அரசு காட்டிய வீடியோ என்ற கதைகள் போன்றதல்ல இது.

செட்டிக்குளம் ஆனந்தகுமாரசாமி முகாமின் D பிரிவில் உள்ள 28வது இலக்க வீட்டிற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த இருபத்தொரு இஞ்சி பனசொனிக் TVயில இவ்வளவு விசயங்களையும் ஆட்களுடன் ஆட்களாக குந்தியிருந்து பிரபாகரன் பார்த்துக் கொண்டிருக்கின்றார். தலையில ஒரு துவாய் போட்டு முகத்தை மறைச்சுக் கொண்டு பக்கத்தில் துவாரகா. தகப்பன்காரனோட சாய்ந்து இருக்கிறா.

இந்த கன்றாவிகளைப் பார்த்த அன்று இரவு தான் ஆனந்தகுமாரசாமி முகாமிலிருந்து பிரபாகரன் தப்பித்தார். இதற்காக சுமார் இரண்டரை இலட்சம் ரூபாயை செலவிட்டார். காசை வாங்கிக்கொண்டு ஆளை வெளியில் கொண்டு வந்தது ஒரு இராணுவப் புலனாய்வாளன். அவன் தனது மோட்டார் சைக்கிளிலேயே அவரை ஏற்றி வந்து, வவுனியா – மன்னார் வீதியிலுள்ள தனக்கு தெரிந்த ஒரு முஸ்லீம் வீட்டில் அன்றிரவு தங்க வைத்தான். அடுத்த நாள் விடியப் புறம் ஆறரைக்குப் போன மன்னார் பஸ்சை மறிச்சு, நூறு ரூபா ரிக்கற் எடுத்து மன்னார் போய் இறங்கினார்.

இயக்கத்தின்ர சப்போட்டரான சம்மாட்டி ஒராள் இந்தியாவிலிருந்து ஐயிற்றம் கடத்திக் கொண்டு வாறவர். அவருக்கு ஐம்பதாயிரம் காசடிச்சார். அடுத்த நாள் விடிய ஆள் இராமேஸ்வரத்தில. இந்த இடத்தில உங்களுக்கு இயல்பாகவே ஒரு டவுட் வரும். உந்த நெடுமாறன் ஐயா, தம்பி இருக்கிறார் தம்பி இருக்கிறார், இப்பதான் ரெலிபோன் கதைச்சவர் என்று இடைக்கிடை கதை விடுறவர். இது ரீல் என்றுதான் இவ்வளவு நாளும் நினைச்சம். உண்மை போல என. உண்மை என்னவென்றால், சீமான், வைகோ, ஐயா ஒருத்தருக்குமே பிரபாகரன் அங்க வந்தது தெரியாது. நம்பிக்கையான சொந்தக்காரப் பொடியன் ஒருவன்தான் சென்னைக்குக் கூட்டிக்கொண்டு போனான்.

அடுத்த நாள் இரவு பிரபாகரனின் மிக நெருங்கிய ஒருவர் கிருஸ்ணா ஸ்வீட்டில் கொஞ்சம் ஸ்வீட் வாங்கிக் கொண்டு போய் பிரபாகரனைச் சந்திச்சார். அப்போது இரவு ஏழு மணியாக இருக்க வேண்டும். TV யில செய்தி பார்த்துக் கொண்டு இருவரும் ஸ்வீட் சாப்பிட்டனர். அதில் தமிழ்நாட்டு காவல்துறை ஆணையாளர் சொல்லிக் கொண்டிருந்தார்- இறுதி யுத்தத்தில் தப்பிய புலிகளோ, பிரபாகரனோ தமிழகத்திற்கு வர முடியாதளவுக்கு பாதுகாப்பு இறுக்கமாக்கப் பட்டுள்ளதாக.

மூன்றாம் நாள் ஆள் தாய்லாந்தில் நின்றார். எப்பிடி எதால போனவர் என்றெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது. பணம் பாதாளம் மட்டும் பாயும். அவர் தாய்லாந்தில் நிற்கும் போதுதான் மகள் துவாரகாவை முகாமில் வைத்து ஆமி பிடித்த தகவல் வந்தது, அன்று முழுவதும் அப்செற்றாக இருந்தார். அடுத்த நாள் வெள்ளைக்காரன் இலங்கையில் செய்துவிட்டுப் போன குழப்பங்களில தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை விபரமாக எழுதி பிரித்தானியா எம்பசிக்கு ஒரு விசா விண்ணப்பம் அனுப்பினார்.

2

இராணுவ புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் பேரில் செட்டிக்குளம் ஆனந்தகுமாரசாமி முகாமிற்குப் போனார்கள். D வலயத்தில் பழைய இலக்கம் 72/1. புது இலக்கம் 42. இதுதான் ஸ்பொட்.

கதவைத் தட்ட ஒரு பெண்மணி வந்தார். ஆள் பார்க்கிறதுக்கு ஊரில இருக்கிற ஐயர்ப் பொம்பிளையள் மாதிரி நல்ல நிறம். ஆளை விசாரணை செய்து ஆரம்பக் கட்ட தகவல்களைப் பெற்றனர். அதாவது, அந்தக் குடும்பத்தில் ஐந்து பேர் இருந்திருக்கிறார்கள். மூத்த மகன் செல்லடியில் இறந்து விட்டானாம். கணவன் பற்றி கேட்டபோது, சற்று தடுமாறி அவர் காணாமல் போய்விட்டார் என்று சொல்லியிருக்கிறார். மகளது பெயர் துவாரகாவாம்.

அனைத்தையும் உறுதி செய்த பின், துவாரகாவை கைது செய்து வாகனத்தில் ஏற்றினார்கள். துவாரகாவினது தம்பி மிகச் சிறுவனாக இருந்தமையினால் அவனை விட்டு விட்டனர். வாகனம் முகாம் வாசலுக்கு வர முகாம் பொறுப்பதிகாரி ஓடிவந்து வாகனத்தை மறித்தான். இவ்வளவு நாளும் தனக்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்த துவாரகாவை பார்க்கும் ஆவலுடன் வாகனத்தினுள் எட்டிப் பார்த்தான். முகத்தைக் கைகளால் மூடியபடி ஒரு பெண் பிள்ளை அழுதுகொண்டிருந்தா.

வாகனம் நின்றது ஜோசப் காம்பின் நடுச் சென்ரரில். அதுதான் புலனாய்வுக்காரரின்ர இடம். அங்கயிருந்த 10க்கு10 அடி இரும்புக் கூண்டினுள் ஆளை அடைத்தார்கள். இரவு வரையும் பிள்ளை அழுதபடியேயிருந்தது. இரவு ஒன்பதரைக்கு மேல்த்தான் விசாரணையை ஆரம்பித்தனர்.

உண்மையைச் சொன்னால் இந்தக் கேஸ் இராணுவ புலனாய்வுத் துறையின் விசாரணையாளர்களிற்கு மிகுந்த சோதனையான ஒரு விடயமாகவேயிருந்தது, வெவ்வேறு விசாரணைக் குழுக்கள் வெவ்வேறு கோணங்களில் விசாரணையை நடத்திக்கொண்டிருந்தனர். எவரது விசாரணையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமில்லை. எந்தக் குறுக்கு வழியினால் நுழைந்தாலும் திரும்பத் திரும்ப ஒரே இடத்திற்கே வரவேண்டியிருந்தது; மூன்று நான்கு கோணங்களில் விசாரணையை மேற்கொண்ட எல்லா விசாரணையாளர்களும் குறிப்பிட்ட இடத்தைக் கடக்க முடியவில்லை.

“பெயர்…”

“துவாரகா…”

“வயது…”

“இருபத்தியிரண்டு…”

“ம்… உமது அப்பா எங்கே…? “

“அவர் .இஞ்சயிருந்து தப்பி வெளிநாடு போயிற்றார்…”

“உண்மையாகவா….?”

“ஓம்”

“ஸ்ஸ்… ஆண்டவரே… அப்படியெனில் நமது ஆட்கள் கைப்பற்றியது பிழையான சடலமா…? சரி உமது அப்பாவை ஒத்த சாயலுடைய வேறு யாராவது அங்கிருந்தனரா..? “

“தெரியாது…”

“ம்.. நல்லது. உமது அப்பாவின் கீழிருந்தவர்கள் எத்தனை பேர்? எங்கேயவர்கள்?..”

“இருவர் இறந்துவிட்டனர். மூவர் முகாமிலுள்ளனர்…”

“ஆக ஐந்து பேரா…? “

“ஓம்…”

“ஐந்து பேரை வைத்தா உமது அப்பா இவ்வளவும் செய்தார்? யார் அவர்கள்? என்னென்ன வேலை செய்தனர்?”

“சிவமண்ணையும் மனோன்மணியக்காவும் பிழியிற, வறுக்கிற, பொரிக்கிற வேலையள் செய்வினம். வசந்தியக்கா எல்லா செக்சனையும் ஒன்றாக்கிற வேலை செய்வா. குமார் அண்ணை வழமையாக வசந்தியக்காவுக்கு கடலை போட்டுக் கொண்டிருப்பார். கடாபி அண்ணைதான் பைக்கற் பண்ணி ஸ்பொட்டுக்கு அனுப்புறது….”

3

பிரித்தானியா எம்பசியிலயிருந்து பிரபாகரனுக்கு அவசரமாக ஒரு கடிதம் வந்தது. சில குழப்பங்களைத் தீர்க்குமாறு அதில் கேட்கப்பட்டிருந்தது. முக்கியமாக பெயர்க் குழப்பம். V. பிரபாகரன் என சுருக்கமாக குறிக்கப்பட்டிருந்த பெயரை வாசிக்கும்போது வீரப்பிள்ளை பிரபாகரன் என வருகிறது. அவரது சரியான பெயர் வீரப்பிள்ளை பிரபாகரனா அல்லது வேலுப்பிள்ளை பிரபாகரனா என்றும் நோர்வே அல்லது எரித்திரியா போன்ற நாடுகளில் அரசியல் தஞ்சம் கோராமல் பிரித்தானியாவை தேர்வு செய்தமைக்கு ஏதேனும் விசேட காரணங்கள் இருக்கின்றனவா எனக் கேட்டிருந்தனர்.

அவர்கள் கேட்டிருந்த அத்தனை சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் மீண்டுமொரு விபரமான விண்ணப்பம் தயார் செய்து அனுப்பினார். வெள்ளைக்காரன் செய்துவிட்டுப்போன குழப்பங்களிலிருந்து ஆரம்பித்தது பிடிக்காமல் போயிருக்குமோ என நினைத்து விட்டு ஐம்பத்தாறாம் ஆண்டு கலவரத்திலிருந்து ஆரம்பித்தார்.

4

தெடுத்தனையில முந்தி மீசை வீரப்பிள்ளை மீசை வீரப்பிள்ளை என்று ஒரு ஆள் இருந்தவர். ஆளின்ர பெயர் தெடுத்தனை கடந்து முழு வடமராட்சியிலும் பேமஸ். இதுக்கு இரண்டு காரணம். முதலாவது, அனேக தெடுத்தனையாரைப் போலவே ஆளும் பெரிய சண்டியன். இரண்டு, ஆள் வைத்திருந்த மொரிஸ் மைனர் கார்.

மீசையரோட கொழுவிப் போட்டு யாராவது இரத்தக் காயம் படாமல் போக முடியாது. அனேகமாக எதிராளியின்ர மூக்கைத்தான் உடைப்பார். பல்லுக் கழன்ற ஆட்களும் இருக்கினம். ஆள் எம்.ஜி.ஆர் ரசிகன். எம்.ஜி.ஆரின்ர புதுப் படம் வந்தால் அவரின்ர மொரிஸ் மைனர் கொள்ளாத ஆட்களோட வின்சருக்கோ, சிறிதருக்கோ போவார். அந்த நேரத்து அனேக இளம் பொம்பிளையளும் வாத்தியார் ரசிகைகளாகவே இருந்தார்கள். பஞ்சவர்ணக் கலர் உடுப்போட ஒரு அரைக் கிலோ மீற்றர் தூரம் ஓடி வந்து மரத்தைச் சுத்தி வந்து பாடுறதில அப்பிடி என்னத்தைக் கண்டுதுகளோ தெரியாது. இப்பிடி எம்.ஜி.ஆர் ரசிகையான ஒருத்தியையே லவ் பண்ணி, எம்.ஜி.ஆர் பாணியிலேயே கூரை பிரிச்சு இறங்கி பெட்டையைக் கடத்திக் கொண்டுபோய், எல்லாரும் செய்யிறது மாதிரியே சன்னதி கோயிலில வைச்சு தாலி கட்டினார்.

அது சிங்களம் மட்டும் சட்டம் வந்த நேரம். ஆரம்பத்தில் மீசையருக்கு இதிலயெல்லாம் இன்ரஸ்ற் இருக்கயில்லை. ஆளுக்கு தமிழ் மட்டும் சட்டம் வந்தாலும் ஒன்றுதான். சிங்களம் மட்டும் சட்டம் வந்தாலும் ஒன்றுதான். தூசணம் மட்டும் சட்டம் வந்தாலும் ஒன்றுதான். ஆனால், அவரது கூட்டாளியள் சிலருக்கு தமிழரசுக் கட்சியில நல்ல ஈடுபாடு. அவையளோட திரிஞ்சு திரிஞ்சு ஆளுக்கும் அரசியல் மெல்லப் பிடிபடுது. அந்த நேரம் பருத்தித்துறை முற்றவெளியில் நடந்த தமிழரசுக் கட்சிக் கூட்டத்தில, ஆர் என்ன என்று இல்லாமல், மேடையில் நின்ற அனைவருக்கும் இரத்தத் திலகமிட்டார். இப்படியாக மற்றையவர்களின் இரத்தத்தை சிந்த வைத்துக்கொண்டிருந்தவரின் இரத்தம் சிந்த ஆரம்பித்தது.

தலை போனாலும் பரவாயில்லை, சிங்களச் சிறீயுள்ள இலக்கத் தகட்டை காருக்குப் போடுவதில்லை என முடிவெடுத்தார். அப்ப பருத்தித்துறையிலதான் பொலீஸ் ஸ்ரேசன். இலக்கத் தகட்டில் தார் பூசியபடி மீசையரின் மொரிஸ் மைனர் கார் நெல்லியடிச் சந்தியில சுத்திக் கொண்டிருக்கும். ஒரு நாள் இன்னும் கொஞ்சப் பேரைக் கூட்டிக் கொண்டு போய் நெல்லியடிச் சந்தியில நின்று போற வாற அரசாங்கப் பேருந்துகளின் இலக்கத் தகட்டிற்கு தார் பூசினார். இந்த அமளி துமளிகள் நடந்துகொண்டிருந்த போது ஒரு நாள் மீசையருக்கு நல்ல வெறி. அன்று கள்ளுத் தவறணையில் சின்னப் பிரச்சினை. பிரச்சனைப்பட்டவரின்ர பெயரும் சிறீ. மீசையருக்குச் சிங்கள சிறீதான் ஞாபகம் வந்துகொண்டிருந்தது. அடுத்து வந்த சில நாட்களை சிறீ மந்திகை ஆஸ்பத்திரிகையிலேயே கழிக்க வேண்டியிருந்தது. கடைசி மட்டும், சிறீயின் முறிந்த கை எலும்பு வெளியில் தள்ளிக் கொண்டேயிருந்தது.

ஆரோ ஒருத்தன் மீசையருக்கு நல்லா ஏற்றி விட்டிட்டான். இப்பிடி சிங்களச் சிறீக்கு மேலே தார் பூசிக் கொண்டு தமிழ் ஏரியாவில ஓடித் திரிஞ்சு என்ன பிரியோசனம் என. அடுத்த கிழமை இன்னும் நாலு பேரைக் கூட்டிக் கொண்டு அனுராதபுரம் போனார். கார் மதவாச்சி தாண்டயில்லை. போனதில ஒரேயொருத்தனைத் தான் குற்றுயிரும் குறையுயிருமாக எடுத்தினம். மிச்ச ஆட்களும் இல்லை. காரும் இல்லை.

இந்தக் காலத்தில கனபேர் இந்தச் சட்டத்தை எதிர்த்து தங்களின்ர அரசாங்க உத்தியோகத்தையும் கைவிட்டினம். தமிழ்ப் பகுதி கொந்தளிப்பாக இருந்தது. இதையெல்லாம் சின்ன ஆளாக இருந்த பிரபாகரன் பார்த்துக் கொண்டிருந்தார். ஆளுக்கு தார் பூசப்பட்ட சிங்களச் சிறீதான் மனசுக்குள்ள நிற்குது. ஆளின்ர மாமனொருவர் வல்வெட்டித்துறையில இருந்து இந்தியாவுக்கு கடத்தல் வேலைகள் செய்யிறவர். பொடியன் ஏன் இஞ்சயிருந்து இந்தக் கன்றாவிகளைப் பார்ப்பான் என பிரபாகரனை இந்தியா கொண்டுபோய் தெரிந்த வீடொன்றில் விட்டார். தகப்பனைப் போலவே பிரபாகரனுக்கும் வாத்தியார் படமென்றால் உயிர். வாத்தியார் நடிக்கிற படங்களும் அப்பிடித் தானே. அனேகமான படங்களின்ர கதையை ஒரு வரியில் சொல்வதென்றால் ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருவராக இருந்து ஆதிக்க சக்திகளை வீழ்த்தினார் என்றுதான் வரும். அவர் அனேக படங்களில் அணியும் சிவப்புச் சட்டைக்கும் ஒரு அர்த்தமிருப்பது மாதிரி பிரபாகரனுக்குப் பட்டது.

இந்தியாவில இருக்கும் போது ஆளுக்கு ஒரு லவ் வந்தது. பெட்டையின்ர பெயர் துவாரகா. நல்ல தமிழ்ப் பெயர். சொன்னால் வாய் மணக்கும். ஆளுக்கு லவ் வந்ததுக்கு முக்கிய காரணமே பெயர்தான். பெட்டைக்கும் பிரபாகரனில நல்ல பிடிப்பு. இதுக்குப் பிறகு, இலங்கையில நடக்கிற சத்தியாக்கிரகம், மறியல் செய்திகளை ஒன்றுக்கு இரண்டு தரம் வாசிக்கத் தொடங்கினா. சிங்களம் மடடும் சட்டக் கொந்தளிப்பு கொஞ்சம் தணிய, பிரபாகரனை மீண்டும் இலங்கைக்கு கூட்டி வந்து விட்டுவிட்டனர். அந்த தமிழ்க் காதல் அற்ப ஆயுளுடன் முடிந்தது.

பிரபாகரன் யாழ்ப்பாணத்தில காலடி எடுத்து வைக்கும் போது, பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோயிலில வைச்சு துரையப்பாவின்ர தலையில வெடி விழுது. பிறகு கே.கே.எஸ் றோட்டில இரண்டு ஆமிக்காரர், முருங்கன் காட்டிற்குள் இன்ஸ்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை என மரணங்கள் தமிழர்களை மகிழ்விக்கத் தொடங்கியது. பிரபாகரனுக்கும் இயக்கங்களோட தொடுப்பிருந்தது, தலைமறைவாக இருந்த சிவகுமாரனின் பொடியளில தொடங்கி, தாஸ், கிட்டு மட்டும் ஆட்களைத் தெரியும். நெல்லியடியில் நாலு ஆமிக்காரரைச் சுட்ட சம்பவம் அப்ப பெரிதாகக் கதைக்கப்பட்டது, டெலிக்கா வாகனத்தில போய்த் தான் வெடி வைச்சவையள். அந்த வாகனம் அன்று முழுவதும் பிரபாகரனின் வீட்டில்தான் நின்றது. கலியாணம் செய்ததுக்குப் பிறகும் இயக்கங்களோட இருந்த தொடுப்பை விடவில்லை. எப்பவும் மேலதிகமாக ஐந்து பத்துப் பேருக்கு சமைப்பதே அவரின் மனைவியின் தொழிலானது. உமா மகேஸ்வரனில தொடங்கி, தாஸ், பேபி, கிட்டு, பண்டிதர் வரை எல்லாரும் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு படுத்துப் போயினர்.

பிறகு புலிகளின் கையில் முழுக் கொண்றோளும் வந்ததுக்குப் பிறகு, பிரபாகரனுக்கு ஒரு சிற்றூரவை தலைவர் போஸ்ற் கிடைச்சது. அந்த நேரம் கோயில், வாசிகசாலைகளில் நடக்கும் நிகழ்வுகளில் கண்டிப்பாக ஆளின் பேச்சிருக்கும். கண்ணில் தெரியும் தமிழீழம், கிழக்கு வானம் சிவக்கிறது, ஆண்ட பரம்பரை போன்ற வசனங்களை அடிக்கடி உச்சரித்தார். “போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம்” என்ற ஜே.ஆரின் புகழ் பெற்ற வசனத்தை, ஜே.ஆருக்கு அடுத்ததாக தமிழர் தரப்பில் உச்சரித்ததென்றால் அது ஆளாகத் தானிருக்கும். களத்தில் காத்தான் முடிய, ஒரு நடுச் சாமத்தில் இந்த வசனத்தை உச்சரித்தார்.

பிள்ளையளுக்கு வைச்சதெல்லாம் நல்ல நல்ல பெயர்கள். குறிப்பாக மகளுக்கு வாய் மணக்க மணக்க துவாரகா எனப் பெயரிட்டார். பின்னாளில் ஒரு மிக்சர் கொம்பனியை ஆரம்பித்து, ஐந்து வேலையாட்களுடன் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார்.

5

மனிசியும், தானும் செல்லடியில் காயம்பட்டது, மகன் செத்தது, இதைவிட பல்லாயிரம் சனம் செத்தது என ஒரு பெரிய ஸ்ரோரியை எழுதிக் குடுத்தும் அவரது விசா விண்ணப்பத்தை பிரித்தானியா எம்பசிக்காரன் நிராகரித்தான். தனது பெயரை வீரப்பிள்ளை பிரபாகரன் எனக் குறிப்பிடாமல் வேலுப்பிள்ளை பிரபாகரன் எனக் குறிப்பிட்டிருந்தால் சிலவேளை விசா கிடைத்திருக்கலாமென எண்ணத் தலைப்பட்டார்.

தாய்லாந்தின் ஒதுக்குப்புற கிராமமொன்றில்தான் ஆள் தங்கியிருந்தவர். அன்று முழுப் போதையில் இருந்தார். இவரது அறையில் கூட இருந்த பொடியனுக்கு தெரிந்த யாரோ, ஒரு படகை ஏற்பாடு செய்திருந்தார்களாம். திடீரென கிடைத்த வாய்ப்பு. அவுஸ்ரேலியா நோக்கி பயணித்த அந்த படகிலிருந்த எழுபத்தியிரண்டு பேரில் ஒருவராக இருந்தார். இடையில் அவுஸ்ரேலிய கடற்படையினர் படகை வழிமறித்து கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு போனார்கள்.

அங்கு விசாரணை நடந்தது. எல்லோருடனும் சிடுசிடுத்துக் கொண்டிருந்த கிழட்டு வெள்ளையன் இவரது பெயரைக் கேட்டான். V.பிரபாகரன் என்றார். அவன் திடுக்கிட்டு விறைத்து நின்றான். பிறகு, ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு கைலாகுக்காக தனது கையை நீட்டினான்.

நயினாதீவுக்கு படகில போறது மாதிரி அந்த சீசனில அவுஸ்ரேலியாவுக்கு எங்கட ஆக்கள் சாரிசாரியாக போனார்கள். கடலில் மூழ்கிச் செத்தவையள் போக, எஞ்சியவர்கள் கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டனர். அங்கிருந்து பெருநிலப் பரப்பிற்கு கொண்டு செல்லப்பட்டு அகதி அந்தஸ்து வழங்கப்பட்ட முதல் தொகுதியினரில் ஒருவராக பிரபாகரனுமிருந்தார்.

இந்த சந்தோசத்தை வீட்டுக்குச் சொல்ல ரெலிபோன் எடுத்தார். இதுக்கு முதல் நாள்த் தான் துவாரகாவை இராணுவம் விடுதலை செய்திருந்தது. தவறுதலாக கைது செய்து விட்டோம் என வருத்தம் வேறு தெரிவித்திருந்தார்களாம். பிள்ளை ரெலிபோனில ஒரு வசனம் கதைக்குதில்லை. அழுது கொண்டேயிருக்குது. பிரபாகரனுக்கும் மனமுடைஞ்சு போயிற்றுது. அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு கதைச்சார்.

“பிள்ளை அழாதையம்மா.. எல்லாம் சரிவந்து கெதியில உங்களையும் கூப்பிடலாமென்று நினைக்கிறன்… கொஞ்சம் பொறுத்துக் கொள்ளம்மா..”

“இல்லையப்பா….. எனக்கு எங்கட நாட்டை விட்டிட்டு வர விருப்பமில்லை…”

அவர் ஒரு நிமிசம் மௌனமாக இருந்தார். பிறகு -

“நாடும் மசிரும்” என்றார்.

நன்றி: புது விசை - ஜூன் issue 32

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதையை முதலில் கிருபன் இணைத்திருந்தார்

...என்ன இருந்தாலும் தலைவர் பிரபாகரனின் பெயரை கதையின் தலைப்பில் போட்டது செரியான பிழை பாருங்கோ...

:D

  • கருத்துக்கள உறவுகள்

துவாரகாவும் பிரபாகரனும் இல்லாது விடில் எவர் கண்ணில் படும் இக்கதை?

  • கருத்துக்கள உறவுகள்

...என்ன இருந்தாலும் தலைவர் பிரபாகரனின் பெயரை கதையின் தலைப்பில் போட்டது செரியான பிழை பாருங்கோ...

:D

அது :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேறு பிதற்றுவதற்கு ஒன்றும் அகப்படவில்லை போலும்.

சாத்திரியும் தமிழக அரசியல்வாதியோல தலைவரையும்,தருமத்தையும்----

ஏய்யா உங்களிற்கு வேறு பொழுதே இல்லையா?

இந்த லட்சண்தில் எழுத்துப் பொழைப்பு வேறு.

நல்லா வருது வாயிலை

வேண்டாமே.

வேறு பிதற்றுவதற்கு ஒன்றும் அகப்படவில்லை போலும்.

சாத்திரியும் தமிழக அரசியல்வாதியோல தலைவரையும்,தருமத்தையும்----

ஏய்யா உங்களிற்கு வேறு பொழுதே இல்லையா?

இந்த லட்சண்தில் எழுத்துப் பொழைப்பு வேறு.

நல்லா வருது வாயிலை

வேண்டாமே.

என்னத்த சொல்ல சிங்கமுத்து பரவாய் இல்லை போல இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டு நாழிதழ்கள் ரஜனி காந்த் செய்தி போட்டு காசு பார்ப்பது போல் சிலர் தலைவரின் பேரை பாவித்து "கிளிக்" பார்க்கிறார்கள்.

எல்லாம் மார்க்கெட்டிங்பா.

>இந்த லட்சண்தில் எழுத்துப் பொழைப்பு வேறு

பொழைப்பா? எழுதியா? எந்த உலகத்தில் ஐயா இருக்கிறீர்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.