துரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, புரட்டாதி 2013
முன்னாள்ப் போராளிகளை ராணுவத்தில் பலவந்தமாக இணைக்கத் தொடங்கியிருக்கும் கருணா மற்றும் பிள்ளையான்
கிழக்கில் முன்னாள் விடுதலைப் புலிகள் போராளிகளை ராணுவத்தில் பலவந்தமாக இணைக்கும் கைங்கரியத்தில் கருணாவும் பிள்ளையானும் அரசாங்கத்தால் பணிக்கப்பட்டிருப்பதாக முன்னாள்ப் போராளிகள் தெரிவிக்கின்றனர். ஆண்கள் மற்றும் பெண் போராளிகளை பலவந்தமாக இணைக்க ஆரம்பித்திருக்கும் இத் துணை ராணுவக் கொலைக்குழுக்கள் அவ்வாறு இணைய மறுக்கும் போராளிகளின் பெற்றோரை அல்லது குடும்பஸ்த்தவர்களைக் கொன்றுவிடப்போவதாக மிரட்டிவருகின்றனர் என்று இப்போராளிகள் தெரிவிக்கின்றனர்.
வாகரை, வெள்ளாவெளி, குடும்பிமலை, வேப்பவெட்டுவான் ஆகிய பகுதிகளில் முன்னாள்ப் போராளிகளின் வீடுகளுக்குச் செல்லும் துணைராணுவக் கொலைக் குழுக்கள் போராளிகளை மிரட்டி வருவதுடன் அவர்களைப் பலவந்தமாக ராணுவத்தில் இணைக்கும் கைங்கரியத்தையும் ஆரம்பித்திருப்பதாகத் தெரிகிறது.
இறுதிப் போரின்பின்னர் ராணுவத்திடம் சரணடைந்து, புணர்வாழ்வு எனும்பெயரில் கடுமையான உடல், உல சித்திரவதைகளுக்குப் பின்னர் சமூகத்திற்கு அனுப்பப்பட்ட பல போராளிகள் இன்னும் மன ரீதியிலான அழுத்தங்களுக்கு உட்பட்டே வாழ்ந்துவருகின்றனர். இவர்களில் பலர் திருமணம் முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையிலேயே இப்போராளிகளை மிரட்டி ஆக்கிரமிப்பு ராணுவத்தில் இணைக்கும் கைங்கரியத்தினை ராணுவப் புலநாய்வுத்துறையினரால் ஏவப்படும் கொலைக்குழுக்களான கருணாவும் பிள்ளையானும் செய்துவருகின்றனர்.
ராணுவப் புலநாய்வுத்துறையினரால் ஏவப்படும் கருணா மற்றும் பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்களுக்கு அவர்களின் எஜமானர்களால் வழங்கப்பட்டுள்ள பணிப்புரையில் ஒவ்வொரு துணைப்படை உறுப்பினரும் குறைந்தது இரு போராளிகளையாவது ஒரு மாதத்தில் ராணுவத்தில் இணைக்கவேண்டும் என்றும், அப்படி இணைக்கத் தவறும் பட்சத்தில் அவர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படும் என்றும் கட்டளையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே கருணாவும் பிள்ளையானும், திருமணம் முடித்த அல்லது தனியே இருக்கும் ஆண் மற்றும் பெண் போராளிகளைக் கட்டாயப்படுத்தி இணைத்துவருவதாகத் தெரியவருகிறது.
இந்த பலவந்த ஆட்சேர்ப்புப் பற்றி மனிதவுரிமை அமைப்புக்களிடம் தெரிவித்தால் தாக்குதலுக்கு உள்ளகலாம் என்கிற அச்சத்தில் இப்போராளிகள் வாழ்ந்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை ராணுவத்திடம் சரணடைந்து கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் நடைபிணங்களாக சமூகத்தில் உலவ விடப்பட்டிருக்கும் முன்னாள்ப் போராளிகளை ராணுவப் புலநாய்வுத்துறையும், துணைப்படைக் கொலைக் குழுக்களும் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது. அண்மையில் தனது வீட்டிற்கு வந்த ராணுவப் புலநாய்வுத்துறையினர் தனது வீட்டிற்கு வந்துபோகும் உறவினர்கள் பற்றிக் கடுமையாக விசாரணை செய்ததாக ஒரு பெண்போராளி கூறினார்.
அரச சார்பற்ற நிறுவனங்களால் முன்னாள்ப் போராளிகளுக்கு வழங்கப்படும் ஒரு சில நிவாரணங்களைக் கூட ராணுவப் புல்நாய்வுத்துறையினரும், துணைப்படைக் கொலைக் குழுவினரும் சந்தேகிப்பதாகவும், இவ்வாறான அரச சார்பற்ற அமைப்புக்கள் போராளிகளைச் சந்தித்த மறு நிமிடமே புலநாய்வுத்துறையினரும், கொலைக்குழுக்களும் போராளிகளை விசாரணைகளுக்கு இழுத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிங்களத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணங்களைத் தம்மிடம் காண்பித்து கையொப்பம் இடும்படி தம்மைச் சித்திரவதை செய்யும் ராணுவப் புலநாய்வுத்துறை, ஒவ்வொருமாதமும் தம்மால் இவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதாகப் பொய்யான ஆவணங்களைத் தயாரித்து போராளிகளின் ஒப்புதல் கையொப்பத்தினைப் பெற்றுக்கொள்வதாகவும், நிவாரணம் என்று இதுவரை அரசால் தமக்கு எதுவுமே வழங்கப்படவில்லையென்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.