2003 , இலங்கை கிழக்கு மாகாணம்
சுலக்சனின் வரவை எதிர்நோக்கியவாறு கதவினை நோட்டம்விட்டுக்கொண்டிருந்தான் அவன், களஞ்சிய அறைக்குள் பாத்திரக்கடைக்குள் யானை புகுந்தது போல் ஒரே சத்தம், புகுந்திருப்பதும் ஒரு யானை தானே என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டு நொண்டிக்காலன் என்ன செய்கிறானோ ஒரு தடவை எட்டிப்பார்ப்போம் என்று கதவோரத்தை நெருங்கிய கணத்திலேயே சுலக்சன் கையில் ஒரு பொருளுடன் வெளிப்பட்டான்,
அது ஒரு நாட்குறிப்பு, 1962 என்று புழுதி படிந்த அட்டை முகப்பில் ஆண்டு தெளிவாகவே தெரிந்தது.
என்ன மச்சான் இது ..?
யாரோ ஒரு பழைய பிரதரின் டைரி போல...
அதுசரி...அதெப்பிடி உனக்கு கிடைச்சுது ...?
நான் தான் ஒவ்வொருநாளும் வாறனானெல்லோ என்று விட்டு அவனை பார்த்தான் சுலக்சன்
போடா லூசு ஒவ்வொரு நாளும் வாறநீயோ...? என்று அவன் கேட்கவும் ,ஒற்றைக்கண்ணடித்து சிரித்துவிட்டு
சுலக்சன் மேலும் தொடர்ந்தான்,
"அது டா ஒருநாள் அதிபரோடு வந்து ஒரு அட்டைப்பெட்டியை தோண்டும் போது கையில் அகப்பட்டது, திறந்து பார்ப்போம் என்று பார்த்தால் வெளியே அதிபர்,
வாய்ப்பு கிடைக்கும் போது உருவிவிடுவோம் என்று அகப்பட்ட ஒரு மரப்பலகைக்கு கீழே சொருகி விட்டு வந்தேன், இண்டைக்கு வாய்ப்பு கிடைத்து விட்டது,அடுத்தவர்களோட டயரியை வாசிப்பதே தனி சுகம் இது வேற பழைய டயரி வா சேர்ந்து வாசிக்கலாம் "
அவனுக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ள இருவரும் அருகிலுள்ள மேசையை மின்விளக்கிற்கருகில் இழுத்து போட்டுக்கொண்டு ஒற்றைகளை திருப்ப துவங்கினர்.
முதல் ஒற்றையில் உரியவரின் பெயர் கறுப்பு ஆங்கில கூட்டெழுத்தில் Rev.Bro Felix Rodrigez என்று மினுமினுத்தது, பெயரை வாசித்துவிட்டு இந்தப்பெயரை இதற்க்கு முன் கேள்விப்பட்டிருக்கிறோமே என்று யோசித்து விட்டு சற்று தலையை உயர்த்திய அவனது கண்கள் மண்டபத்தினுள் வரிசையாக தொங்கவிடப்பட்டிருந்த ரெக்டர்களது புகைப்படங்களை வரிசையாக மேய்ந்தன, அவனுக்கு பிடித்தமான
Wilheim பிரதரது புகைப்படத்திற்கு அடுத்ததாக இருந்த புகைப்படத்தில் இதே பெயர் இருந்தது, ஓ இவரது நாள்குறிப்பா என்று நினைத்தவாறு ,ஒற்றையை பிரிக்கமுன் சுலக்சனோ பத்து பதினைந்து ஒற்றைகளை கடந்து வேறு எதுவொன்றையோ தேடுவது போல் படு சீரியஸாக வாசித்துக்கொண்டிருந்தான்,
என்ன மச்சான் இப்பிடி வேகமாக பார்க்கிறாய் என்று கேட்கவும் சுலக்சனோ எழுதியிருக்கும் எல்லாமே ஒரேமாதியாகவே இருக்கு டா அதுதான் கொஞ்சம் வேகமாக வசிக்கிறேன் என்று விட்டு ஒற்றைகளை பிரட்டுவதிலேயே குறியாக இருந்தான். இப்படியே சிறிதுநேரம் போயிருக்கும் சுவாரசியமாக எதுவுமில்லை
அப்போதுதான் அவன் ஒன்றை கவனித்தான் நாளேடு பெரிதாக தோன்றினாலும் பக்கங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது, இனி அவர்கள் படிக்கப்போகும் பக்கத்திலிருந்து தொடர்ந்து வர வேண்டிய அனைத்து ஒற்றைகளும் கையினால் கோணல் மாணலாக அவசரமாக கிழிக்கப்பட்டிருந்தது.
இருவருக்கும் ஆர்வம் பற்றிக்கொள்ள கிழிக்கப்பட்டிருக்கும் ஒற்றைகளுக்கு மேலிருக்கும் கடைசி பக்கத்தை
கூர்ந்து படிக்க ஆரம்பித்தனர்
"இன்று நான் செய்யப்போகும் செயல் எனது மனச்சாட்சிக்கும் சபைக்கு நான் கொடுத்திருக்கும் வார்த்தைப்பாடுகளுக்கும் எதிரானது, இருந்தும் எனது மானம்,மரியாதையை காத்துக்கொள்ள வேண்டுமென்றால் இதனை தவிர்க்கமுடியாது, அன்று மட்டும் Wilhem கண்ணில் நாங்கள் பட்டிருக்காவிடில் வரப்போகும் இரத்தப்பழி என்மீது இருக்கப்போவதில்லை, Wilheim என்றாவது ஒருநாள் உன்னிடம் மன்னிப்பு வேண்டும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமானால் அது அடுத்த பிறவி என்றாலும் அன்று நிச்சயம் உனது காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வேண்டுவேன் " என்று முடிந்திருந்தது அந்த ஒற்றை
இருவரும் ஆளை மாறி ஆள் விறைத்துப்போய் நோக்க , சுலக்சனோ அந்த ஒற்றையை திருப்பி பார்த்தான்
அதன் பின் இருந்த ஒற்றைகள் முழுவதுமாக கிழிக்கப்பட்டிருந்தன, அப்போதுதான் அவன் கவனித்தான்
கிழிக்கப்பட்ட ஒற்றையில் ஒன்று முழுவதுமாக கிழியாமல் ஒரு நூலிழையில் தொங்குவது போல் நாட்குறிப்பில் தொங்கிக்கொண்டிருந்தது, அவசரமாக கிழிக்கப்பட்டதால் கிழித்தவரும் அதனை கவனிக்கவில்லை போலும், நூலிழையில் தொங்குவது போல் இருந்தததால் அது ஒரு பக்கம் மடிந்து
நாட்குறிப்பின் கடைசி மட்டையில் இருந்த உறையினுள் புகுந்து விட்டிருந்தது, அந்த பக்கத்தை உருவி எடுத்த அவனும் சுலக்சனும் ஆர்வம் தாங்காது வாசிக்கத்தொடங்கினர்.
அதுவரை மிகவும் தெளிவாகவும் அழகாகவும் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் இந்த பக்கத்தில் இலகுவில் வாசிக்க முடியாதவாறு மிகவும் அலங்கோலமாக எழுதப்பட்டிருந்தது.
இனிமேலும் என்னால் முடியாது, உயிருடன் இந்த வேதனையை அனுபவிப்பதை விட நரக வேதனை எவ்வளவோ மேல், நீ என்னை விடப்போவதில்லை என்று தெரிந்து கொண்டேன் Wilheim, எனக்கு அடிக்கடி அறிவுரை தரும் வேளையில் பாவத்தின் சம்பளம் என்ற வசனத்தை நீ பாவிப்பாய், அது உனக்கு பைபிளில் பிடித்த வசனமும் கூட எந்த பாவமும் அறியா உனக்கு அந்த சம்பளத்தை அளித்த அந்த பாவத்திற்காக இன்று இரவு எனது பாவத்தின் சம்பளத்தை தேடிக்கொள்கிறேன், இதுவே இந்த ஜென்மத்தில் நான் எழுதும் இறுதி வாக்கியம்
என்று முடிந்த அந்த ஒற்றையை இறுதிவரியின் பின் பேனா குத்திக்கிழித்திருந்தது. வாசித்து முடிந்து விட்டு நிமிர்ந்தான் அவன் அருகில் இருந்த சுலக்சனோ காணாமல் போயிருக்க, மண்டபத்திற்கு வெளியே சுலக்சனின் காலடியோசை கேட்டது, மெதுவாக எழுந்த அவன் மண்டபத்திற்கு வெளியே செல்ல சுலக்சனோ
மண்டபத்தின் சுவற்றில் ஒருக்களித்தவாறு தனது இருகைகளையும் அவனது காட்சட்டை பையினுள் விட்டவாறு நிலவினை பார்த்துக்கொண்டிருந்தான், அவனது தோரணையே அன்று வித்தியாசமாக இருந்தது
மெதுவாக அருகில் சென்ற அவன், சுலக்சன் தோளில் கையை வைத்து
"மச்சான் wilheim பிரதருக்கு என்னடா நடந்திருக்கும்...? எதுவோ விவகாரமாக நடந்திருக்கிறது, முழுவிடயமும் அந்த டயரியில இருந்திருக்கு யாரோ ஒருத்தன் சபையை காப்பாற்றவோ அல்லது பிலீக்சின் பெயரை காப்பாற்ற ஒற்றைகளை கிழித்திருக்கிறான் " என்று முடித்தான்
சற்று நேரம் அதனை காதில்வாங்காதவன் போல் நிலவையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த சுலக்சன் அவனை நோக்கி திரும்பினான், அவனது கண்ணில் அப்படியொரு தெளிவும் ஈர்ப்பும் இதுவரைக்கும் சுலக்சனின் கண்ணில் அப்படியொரு காந்தவிசையை அவன் கண்டதில்லை, இன்று என்னவோ சுலக்சன் அவனுக்கு வித்தியாசமாக தெரிந்துகொண்டேயிருக்கிறான், திரும்பிய சுலக்சன் அவன் தோளில் கையைவைத்து
"உண்மை எப்போதாவது வெளிவந்தே தீரும் மச்சான் , இன்று இல்லாவிடினும் என்றாவது" என்று சொல்லிவிட்டு "அந்த பாவத்தின் சம்பளம் என்ற வசனம் நல்லாயிருக்கில்ல' என்று அவனது கன்னத்தை தட்டிவிட்டு மண்டபம் உள்ளே சென்றுவிட்டான்,
சற்று நேரத்தில் இருவரும் கண்ணயர , சிறிதுநேரம் கழித்து,
"மச்சான் விடிஞ்சுபோட்டு பள்ளிக்கு பிள்ளைகள் வரப்போகினம் வா போவோம்" என்று அவனை உலுப்பினான் சுலக்சன், கண்முழித்து நேரத்தைப்பார்த்தான் அதிகாலை 5:45
சரி வா போவோம் என்று இருவரும் தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேற, சுலக்சனும் வீட்டைநோக்கி கெந்தி கெந்தி நடக்கும் பரிதாபம் பார்க்கமுடியாது அவனும்
"சைக்கிளில் ஏறு டா கொண்டு போய் வீட்ட விடுறன்" என்று சொல்ல அவனோ "ஓ இவ்விடத்தில் இருக்கும் வீட்டிற்கு சைக்கிள் ஒரு கேடு" என்று சிரித்துவிட்டு "நீ வீட்டை போ கொஞ்சநேரத்தில் பள்ளியில் சந்திப்போம் "
என்று விட்டு மெதுவாக நடந்து அவனது பார்வையில் இருந்து மறைந்து போக, சிறிது நேரம் அவனை பார்த்துக்கொண்டிருந்தவன் மெதுவாக வீட்டை நோக்கி சைக்கிளை விரட்டினான்
(தொடரும்)