உக்ரேனில் ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்களால் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய தொகுப்பு
தற்போது உக்ரேன் மீது ரஸ்ஸியா நடத்திவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் போர்க்குற்றங்களாகக் கருதப்படக்கூடியவை, மனிதநேயத்திற்கெதிரான குற்றங்களாகக் கருதப்படக்கூடியவை என்று சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களாலும், செயற்பாட்டாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. சர்வதேச நியமங்களினை மீறி ரஸ்ஸிய ராணுவம், இலங்கையில் தமிழர்களுக்கெதிராக சிங்கள இனவழிப்பு ராணுவம் புரிந்த மிருகத்தனமான படுகொலைகளுக்கு நிகராக உக்ரேனியர்கள் மீது மேற்கொண்டுவரும் அட்டூழியங்கள் கருதப்படக்கூடியவை என்றால் அது மிகையில்லை.
ரஸ்ஸிய ஆக்கிரமிப்பு ராணுவம் உக்ரேனில் புரிந்துவரும் முக்கியமான மனிதவுரிமைகளுக்கு எதிரான, சர்வதேசச் சட்டங்களுக்கு முரணான செயற்பாடுகளைப் பார்க்கலாம்.
1. சிவிலியன்கள் செறிந்து வாழும் பகுதிகள் மீது, அதியுச்ச மக்கள் அழிவை மட்டுமே நோக்காகக் கொண்டு வேண்டுமென்றே நடத்தப்படும் கடுமையான குண்டுவீச்சுக்கள்.
2. குறைந்தது 110 நாடுகளில் பாவிப்பதற்குத் தடைசெய்யப்பட்டுள்ள கொத்தணிக்குண்டுகளை மக்கள் செறிந்துவாழும் நகர்ப்பகுதிகள் மீது தொடர்ச்சியாகப் பாவித்து வருதல். இவற்றிற்கு மேலதிகமாக பரந்த நிலப்பரப்பில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற வாயுக் குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் பல்குழல் உந்துகணைச் செலுத்திகளைப் பாவித்து பெருமளவு உயிரிழப்புக்களை நோக்கமாகக் கொண்டு ஏவப்படும் தாக்குதல்கள்.
3. பொதுமக்களின் வாழிடங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், பாலர் பள்ளிகள், அணுமின் நிலையங்கள், கலாசாரத் தொன்மை கொண்ட கட்டடங்கள், பாரம்பரிய தேவாலயங்கள் உட்பட்ட மக்களின் பாவனைக்கென்று இருந்த கட்டடங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள்.
4. தன்னால் ஆக்கிரமிக்கப்பட்டுவரும் உக்ரேனின் நிலப்பகுதியில் வாழும் மக்களை விருப்பத்திற்கு மாறாக, கட்டாயமாக ரஸ்ஸியாவினுள் நாடு கடத்துதல்.
5. உக்ரேனியர்களைக் கொல்வதை தமது படைநடவடிக்கையின் ஒரு நோக்கமாகக் கொன்டு செயற்படும் ரஸ்ஸிய ராணுவத்தால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கனக்கான உக்ரேனியர்களின் மரணங்கள். உதாரணத்திற்கு ரஸ்ஸிய ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பூச்சா பாகுதியை விட்டு ஆக்கிரமிப்பாளர்கள் நீங்கியபின்னர் அங்கே கண்டெடுக்கப்பட்ட குறைந்தது 500 அப்பாவிகளின் சடலங்களும், அவர்கள் கொல்லப்பட்ட விதமும் ரஸ்ஸிய ராணுவம் போர்க்குற்றங்களிலும், மனித நேயத்திற்கெதிரான குற்றங்களிலும் ஈடுபட்டிருக்கின்றனன் என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றன. இவை தவிரவும் ரஸ்ஸிய ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில் தற்போது கண்டுபிடிக்கப்படும் பாரிய மனித புதைகுழிகள், மற்றும் உக்கிரமான ஆக்கிரமிப்பும் அழித்தொழிப்பும் நடைபெற்றுவரும் மரியோபுல்லில் இதுவரை கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் பற்றி வெளித்தெரிய ஆரம்பித்திருக்கும் விபரங்களும் ரஸ்ஸிய ராணுவம் போர்க்குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றதென்பதையே சுட்டி நிற்கிறது.
6. ரஸ்ஸியாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வசித்துவந்த ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களைக் கைதுசெய்தது மற்றும் கொடுமைப்படுத்திவருவது. இதுவரை 24 ஊடகவியலாளர்களும், 21 மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களும் இவ்வாறு ஆக்கிரமிப்பு ரஸ்ஸிய ராணுவத்தால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், பலர் கடுமையான சித்திரவதைகளுக்கும் உள்ளாகியிருக்கின்றனர்.
சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களின் துணையோடு, உக்ரேனில் ரஸ்ஸிய ராணூவத்தால் நடத்தப்பட்டு வரும் போர்க்குற்றங்களை ஆவணப்படுத்திவரும் உக்ரேனின் மனிதவுரிமை அமைப்பும், நீதிபதிகளும் இதுவரையில் குறைந்தது 2500 சாட்சியங்களை ஆவணப்படுத்தியுள்ளதுடன், பல நூற்றுக்கணக்கான ரஸ்ஸியப் போர்க்குற்றவாளிகளின் பெயர்களையும் வெளியிட்டிருக்கின்றது.
உக்ரேனில் ரஸ்ஸியா புரிந்துவரும் போர்க்குற்றங்கள் மற்றும் இனவழிப்போடு ஒப்புநோக்கக் கூடிய குற்றங்களுக்காக, இம்மாதம் 7 ஆம் திகதியிலிருந்து, ஐ நா மனிதவுரிமைச் சபை ரஸ்ஸியாவை தனது அமர்வுகளிலிருந்து நீக்கியிருக்கிறது.
உக்ரேனில் ரஸ்ஸியாவின் போர்க்குற்றங்களும், மனிதநேயத்திற்கெதிரான குற்றங்களும், இனவழிப்பின் வழிசெல்லும் குற்றங்களும் தொடரும்.................................