உலக நாடுகள் என்ன செய்தன?
ஹிற்லரின் நாசிக் கட்சியின் ஆட்சியில் ஜேர்மனி வந்த காலப் பகுதி ஒரு அசாதாரணமான உலகக் சூழல் நிலவிய காலம். முதல் உலகப் போரினால் ஒரு லட்சம் இளைஞர்களையும், அதே காலப்பகுதியில் ஐந்து லட்சம் வரையான மக்களையும் இன்புழுவன்சாப் பெருந்தொற்றினால் இழந்த அமெரிக்கா, 1929 இல் உருவான பொருளாதார மந்த நிலையினால் கடுமையாகப் பாதிக்கப் பட்டது (இந்த மந்த நிலை- Great depression, ஏதோ ஒரு வகையில் 1939 வரை நீடித்தது). எனவே அமெரிக்கா ஒரு உலக சக்தியாக யாருக்கும் தோன்றவில்லை அப்போது. ஆனால், தங்கள் காலனிகள், சக்தி மிக்க கடற்படைகள் என்பவை காரணமாக பிரிட்டனும், பிரான்சும் இராணுவ ரீதியில் பலமாக இருந்த காலம் அது.
நாடுகளின் சங்கம் (League of Nations) என்ற ஐ.நாவின் முன்னோடியான அமைப்பு அமெரிக்காவினால் முன்னின்று உருவாக்கப் பட்டாலும், அமெரிக்கா அந்த அமைப்பில் நிரந்தர உறுப்பினராகவில்லை. மாறாக, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் ஆகிய நிரந்தர உறுப்பினர்களோடு, சில டசின் நாடுகளை உறுப்பினர்களாக வைத்துக் கொண்டு "கூட்டுப் பாதுகாப்பு (collective security)" என்ற அடிப்படையில் நாடுகளின் சங்கம் இயங்கியது. ஆனால், செயல் திறன், அமலாக்கல் சக்தி என்பன குறைந்த ஒர் அமைப்பாக இருந்ததால் உண்மையிலேயே உலகின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பிரச்சினைகளை நாடுகளின் சங்கத்தால் தீர்க்க இயலவில்லை. உதாரணமாக, நிரந்தர உறுப்பினரான ஜப்பான், சீனாவின் மஞ்சூரியாப் பகுதியை ஆக்கிரமித்த போது, நாடுகளின் சங்கத்தினால் கண்டனம் மட்டுமே தெரிவிக்க முடிந்தது - இந்தக் கண்டனமே ஜப்பான் தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளக் காரணமாக இருந்தது. ஜேர்மனி கூட ஒரு குறுகிய காலப்பகுதியில் நாடுகளின் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப் பட்டது. ஹிற்லர் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் காரியங்களில் ஒன்றாக அந்த அமைப்பில் இருந்து ஜேர்மனியை விலக்கிக் கொண்டார். இதன் மூலம், உலகப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக வரப் போகும் இரு நாடுகள் நாடுகளின் சங்கத்தைப் புறக்கணிக்கும் வசதி வாய்ப்பு அமைந்தது. இப்படி உலக நாடுகள் - குறிப்பாகப் பலம் பொருந்திய நாடுகள்- தங்கள் உள்விவகாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்த காலப்பகுதி (isolationism என்பார்கள்)ஹிற்லருக்கும், கிழக்கில் ஜப்பானியர்களுக்கும் மிக வாய்ப்பான காலமாக இருந்தது.
மொத்தத்தில், ஜேர்மனியின் புதிய நாசி அரசை உலக நாடுகள் வித்தியாசமாகப் பார்க்கவில்லை என்று தான் பின்னர் வெளி வந்த இராஜதந்திரப் பரிமாற்றங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மாறாக, அரவணைத்துச் செல்லும் (appeasing) முயற்சி கூட 1932 முதல் ஆரம்பித்து விட்டது. உதாரணமாக, அமெரிக்கா, வெர்சை உடன்படிக்கையின் படி ஜேர்மன் மீது விதித்த பொருளாதாரத் தண்டனைகளை ஈடு செய்ய, குறுகிய காலக் கடன்களை வழங்கியிருந்தது. 1932 இல், ஜேர்மனியின் பொருளாதரப் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு அந்தக் கடன்களை வசூலிப்பதை தற்காலிகமாக ஒத்தி வைத்தது (debt moratorium - வட்டி மட்டும் கட்ட வேண்டிய நிலை). இதன் பின்னர், 1934 இல் ஹிற்லர் ஒரு சட்டத்தை இயற்றி, சகல வெளிநாட்டுக் கடன்களையும் ஒரு தலைப் பட்சமாக நிறுத்தி வைத்தார். இதனால், ஜேர்மன் பணம் நாட்டை விட்டு வெளியே செல்வது வெகுவாகக் குறைக்கப் பட்டது.
பொருளாதாரத்தில் ஒரு கண் வைத்திருந்த நாசிகள்
கடன்களின் சுமையில்லாமல் மூச்சு விடக் கிடைத்த இடைவெளியில் நாசிகள் ஜேர்மன் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் தீவிரமாக ஈடுபட்டனர். ஜேர்மன் மக்களின் தொழில் நுட்பத் திறமை, உயர்ந்த கல்வி மட்டம், அதிகாரத்திற்குப் படிந்து எதையும்செய்யும் நடத்தைப் போக்கு (இதை முறைப்பாடு செய்யாமல் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் stoicism என்றும் சொல்வார்கள் - இது ஜேர்மன் தேசிய அடையாளங்களுள் ஒன்று என்று கூடச் சிலர் சொல்வர்!) என்பன நாசிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன.
வேலையற்ற ஜேர்மனியருக்கு வேலை வழங்க, கட்டுமானத் திட்டங்கள் உருவாக்கப் பட்டன - உலகின் முதல் நெடுஞ்சாலை வலையமைப்பு ஆட்டோ பான் (Autobahn) என்ற பெயரில் ஜேர்மனியில் உருவானது. இரும்புப் பொருட்கள் உற்பத்தி, எண்ணை சுத்திகரிப்பு, செயற்கை இறப்பர், இரசாயனங்கள் என ஏராளமான பொருட்களின் உற்பத்தி அளவு ஒரிரு ஆண்டுகளிலேயே பல மடங்குகளால் அதிகரித்தது நாசிகளின் ஆட்சியில். அதே வேளையில், வேலையில்லாதோருக்கு சீருடைகளை அணிவித்து, புதிது புதிதாக ஆயுதப் படைப்பிரிவுகளை உருவாக்கும் வேலையும் நடந்தது. காக்கிச் சட்டைகள் (brown shirts) என்று அழைக்கப் பட்ட ஹிற்லர் இளைஞரணியும் ஒரு தனிப் படையாக வளர்க்கப் பட்டது. நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் அதிகரித்தது. நாசிகளை நம்பிக்கையுடன் ஆதரித்த மக்கள் "இது பொற்காலம்" என மகிழ்ந்து அவர்களது கூட்டங்களில் மந்திர சக்தியால் ஆட்கொள்ளப் பட்ட பொம்மைகள் போலக் கலந்து குதூகலித்தனர், ஆர்ப்பரித்தனர்.
ஆனால், இந்த 1930 களின் நாசி ஜேர்மன் பொருளாதாரம் ஒரு போர்க்காலப் பொருளாதாரம் என்பது முன்னுரிமை வழங்கப் பட்ட துறைகளைப் பார்க்கும் போதே தெளிவாக யாருக்கும் தெரிந்து விடும். அதாவது, வெர்சை உடன் படிக்கையின் படி ஆயுதப் படைகளை நவீன மயப்படுத்தும் உரிமையை இழந்த ஜேர்மனி, மறைமுகமாக தன் இராணுவப் பற்களைத் தீட்டிக் கொண்டிருந்தது. இதனை எத்தனை உலக நாடுகள் புரிந்து கொண்டிருந்தன என்பதில் வரலாற்றியலாளர்கள் முரண்படுகின்றனர் - ஆனால், ஹிற்லர் தன்னைச் சுற்றி வைத்திருந்த ருடோல்f ஹெஸ், ஜோசப் கோயபல்ஸ், ஹேர்மன் கோறிங் ஆகிய பெரிய தலைகள் ஜேர்மனியின் ஆயுத மயமாக்கலின் நீண்டகால நோக்கத்தை அறிந்திருந்தனர். உதாரணமாக, வெர்சை உடன் படிக்கையின் படி, ஜேர்மன் விமானப்படையொன்றைக் கட்டியெழுப்ப தடை இருந்தது. ஆனால், ஜேர்மனியில் பல சிவிலியன் விமான நிறுவனங்கள் முதல் உலகப் போர் காலத்திலேயே இருந்திருக்கின்றன. ஹெர்மன் கோறிங், இந்த சிவிலியன் விமான நிறுவனங்களின் திறமை வாய்ந்த விமானிகளை இரகசியமாக ஒன்று சேர்த்து, பயிற்சியளித்து ஜேர்மன் விமானப் படையை கண்காணிப்புக் குறைந்த ஜேர்மன் நாட்டுப் புறங்களில் கட்டியமைத்து வந்தார். இவ்வாறு உருவாக்கப் பட்ட ஜேர்மன் விமானப்படை (Luftwaffe), இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனுக்கு மிகுந்த சவாலாக விளங்கியது குறிப்பிடத் தக்கது.
இருளிரவின் ஆரம்பம்
இவ்வளவு தொழில்நுட்ப, பொருளாதார, கல்வி மேலாண்மை கொண்ட ஜேர்மன் சமுதாயம், "ஆரியர்கள்" அல்லாத யூதர்கள், றோமா மக்கள் ஆகியோரையும், ஓரினச் சேர்க்கையாளர்களையும், லூதரன் கிறிஸ்தவர்கள் அல்லாத ஏனைய கிறிஸ்தவர்களையும் எப்படி ஒதுக்கி வைத்தது? ஒதுக்கி வைத்தது மட்டுமல்லாமல், அவர்களை எப்படி வகை தொகையின்றிக் கொன்றொழித்தது? இத்தகைய இருண்ட மாற்றங்கள் 1933 இலிருந்து ஆரம்பிக்கின்றன - ஹிற்லரின் பேச்சுக்கள் செயல் வடிவம் பெற்றன. சாதாரண ஜேர்மன் மக்களும், ஜேர்மனியில் வசித்த வெளிநாட்டவர்களும் கூட "நாசிகள் ஒன்றும் மோசமில்லை"😎 என்று சான்றிதழ் கொடுக்கும் அளவுக்கு எப்படி பொருளதாரம், கலாச்சார மேன்மை ஆகிய பொன்முலாம் கொண்டு நாசிகள் தங்கள் மிருகத் தனத்தை மறைத்தனர்?
இது தான் நண்பர்களே வரலாறு திரும்பும் ஒரு சிறந்த உதாரணக் கதையாக இருக்கிறது.
-இன்னும் வரும்
ஜஸ்ரின்