இஸ்ரேலின் அடக்குமுறைகளுக்கெதிராக, பாலஸ்த்தீனர்கள் மீதான அவர்களின் அட்டூழியங்களைப் பொறுக்கமுடியாமலேயே ஹமாஸ் இத்தாக்குதலை நடத்தியதாக கூறுகிறார்கள் பாலஸ்த்தீன ஆதரவாளர்கள். சரி, அப்படியானால் இஸ்ரேலிய அரசையும் அதன் ஆக்கிரமிப்பு இராணுவத்தையும் அல்லவா குறிவைத்துத் தாக்கியிருக்க வேண்டும்? 1200 பொதுமக்கள் வேட்டையாடப்பட்டதற்குக் காரணம் என்ன? குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் , முதியோர் என்று ஆயிரக்கணக்கானோர் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பதோடு தலைகள் கொய்யப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கு மேலாக பலர் கடத்திச் செல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரே நாளில் 1200 இஸ்ரேலியர்களை, குறிப்பாக பொதுமக்களைக் கொன்றுவிட்டு இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபடாமல் இருக்கும் என்று ஹமாஸ் எதிர்பார்த்ததா? சாதாரண கல்வீச்சுப் போராட்டத்திற்கே துப்பாக்கித் தாக்குதல் நடத்தி சில பலஸ்த்தீனர்களையாவது கொல்லும் இஸ்ரேலிய இராணுவம், 1200 பொதுமக்கள் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் என்ன செய்யும் என்று ஹமாஸ் எதிர்பார்த்தது? இல்லை, இஸ்ரேல் என்ன செய்யும் என்று தெரிந்தே இத்தாக்குதலை நடத்தியிருந்தால், அப்பாவிப் பாலஸ்த்தீனர்கள் இஸ்ரேலின் பதில்த் தாக்குதலில் கொல்லப்படவிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துதானே இதனைச் செய்திருக்கிறது? அப்படியானால், பாலஸ்த்தீன மக்களின் மேல் ஹமாஸ் உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறதே?
இஸ்ரேல் என்பது அதனை உலகின் வரைபடத்திலிருந்தே முற்றாகத் துடைத்தழித்துவிடக் காத்திருக்கும் நாடுகளால் சூழப்பட்டிருக்கிறது. ஆகவே, தனது பாதுகாப்பிற்காக எந்த மனிதவுரிமை மீறல்களிலும், இனக்கொலைகளிலும் அது ஈடுபடத் தயாராகவே இருக்கிறது. அயலில் உள்ள நாடொன்றினை ஆக்கிரமித்தல், எல்லைகள் மீறி ஊடுருவித் தாக்குதல், அயல்நாடுகளில் நாசகார வேலைகளில் ஈடுபடுதல் என்று தன்னிச்சையாகச் செயற்பட்டுவரும் ஒரு எதேச்சாதிகார அரசு. ஐ. நா வோ அல்லது சர்வதேச மனிதவுரிமைச் சபையோ அல்லது எந்த அமைப்போ இஸ்ரேலைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம். அமெரிக்காவும், இன்னும் சில மேற்கு நாடுகளும் பின்னால் இருக்கும் தைரியத்தில் இஸ்ரேல் இதனைச் செய்கிறது. கொத்தணிக்குண்டுகளை இஸ்ரேல் பாவிப்பது இதுவே முதல்த் தடவையல்ல. இதற்கு முன்னரும் பலமுறை இஸ்ரேல் இதனைப் பாவித்திருக்கிறது. இதனை அமெரிக்கா கொடுத்திருக்கலாம், அல்லது இஸ்ரேலே சொந்தமாகத் தயாரித்திருக்கலாம். முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு, சாலை, புதுமாத்தளம், வலைஞர்மடம் ஆகிய பகுதிகளில் ஹேலோ கண்ணிவெடி அகற்றும் அமைப்பினரால் கண்டெடுக்கப்பட்ட 46 கொத்தணிக்குண்டுகளின் எச்சங்களும், கோதுகளும் ரஸ்ஸியாவில் தயாரிக்கப்பட்டவை என்பதையே காட்டுகின்றன. மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் அதிகளவு மக்களைக் கொல்லும் நோக்கத்திற்காகவே இவை வீசப்பட்டன. இன்று இஸ்ரேல் செய்வதும் அதுதான். அதிகளவு பலஸ்த்தீனர்களைக் கொல்லுதல்.
உண்மையான விடுதலைப் போராட்டம் ஒன்றினை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கடத்திச் சென்று அப்பாவிகள் இருபக்கமும் கொல்லப்படக் காரணமாகிவிட்டிருக்கிறார்கள். சர்வதேசத்தில் பலஸ்த்தீன மக்களுக்கு இருந்த சிறிது அனுதாபத்தினையும் ஹமாஸின் மிருகவெறி இன்று முற்றாக அழித்திருக்கிறது. பலஸ்தீனர்களை அழிப்பதில் சிறிதும் கவலை கொல்லாத இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசுக்கு தனது மக்களைக் கொல்ல தானே வழிசமைத்துக் கொடுத்திருக்கிறது ஹமாஸ். ஒவ்வொரு யூத மகனின் இறப்பிற்கு 10 பலஸ்த்தினர்களைக் கொல்லும் இஸ்ரேலிய அரசு, தனது 1200 மக்களின் படுகொலைக்கும் எத்தனை ஆயிரம் பலஸ்த்தீனர்களின் உயிர்களைக் காவு கொள்ளப்போகிறது?
இஸ்ரேலின் விமானக் குண்டுவீச்சிற்குள்ளும், ஏவுகனை வீச்சுக்குள்ளும் உயிரைக் கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டிருக்கும் தாய்மாரினதும், குழந்தைகளினதும் முகங்களில் தெரிவது வன்னியில் இலங்கை விமானப்படைக் குண்டுவீச்சில் கதறியபடி ஓடிய எனது உறவுகளே. ஹமாஸின் நரவேட்டையில் பலியான 1200 அப்பாவி இஸ்ரேலியர்களும், இஸ்ரேலின் குண்டுவிச்சில் கொல்லப்பட்டுவரும் பலநூற்றுக்கணக்கான பலஸ்த்தீனர்களும் செய்த தவறு என்ன? இக்கொலைகளை எப்படி நியாயப்படுத்த முடியும்?
இதில் நாம் எத்தரப்பையும் சார்ந்து கருத்தெழுததுவதென்பது தவறானது. ஏனென்றால், இருபக்கமும் கொல்லப்படுவது அப்பாவிகளே.