2007, நான் அத்தொழிற்சாலையில் இணைந்து கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகியிருந்தது. என்னைப்போலவே இங்குவந்து, தம்மை நிலைநிறுத்திக்கொள்ள பல இந்தியர்களும், இலங்கையர்களும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலம். வெள்ளை நிறத்தவரின் தொழிற்சாலை, வேலைத்தளத்தில் அணியின் மேலாளர்களில் இருந்து அதியுயர் நிர்வாகத் தலைவர்கள் எல்லோருமே வெள்ளை நிறத்தவர்கள். அவர்களுடன், அவர்கள் பேசும் மொழியினையும், பேசும் சங்கேத வார்த்தைகளும் விளக்கமேயின்றிக் கேட்டுக்கொண்டு, அருகில் இருப்பவன் சிரித்தால், நாமும் சிரித்துக்கொண்டு, வேலைத்தளத்தில் சமூகப் படிகளில் நாம் ஏறலாம் என்று நினைத்திருந்த காலம்.
எனது வேலைத்தள அணியில் 20 பேர் இருந்தோம். எமது மேலாளர் ஒரு வெள்ளையினத்தவர். சுவிட்ஸர்லாந்தில் பிறந்து, இங்கு வளர்ந்தவர். சிலவேளைகளில் அவர் பேசுவதைக் கிரகிப்பதற்குள் அவர் அடுத்த வசனத்தைத் தொடங்கிருப்பார். புரிந்துகொள்வதற்குச் சிரமப்பட்டுக்கொண்டே பணிபுரிந்த காலம். சிலவேளைகளில் நாம் அவர்கள் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே ஆறுதலாய்ப் பேசுவர்கள். அதுகூட சிலவேளை சிரமாகத் தெரிந்தது. என்ன உலகமடா இது என்று சலித்துக்கொண்ட பொழுதுகள்.
ஆனால், அணியிலிருந்த வெள்ளையர்களை விட நம்மவர் வேலைகளில் சுறுசுறுப்பானவர்கள். ஊரில் கஸ்ட்டப்பட்டு வேலை தேடி, அதனைத் தக்கவைத்துக்கொள்ள அதைவிடக் கஸ்ட்டப்பட்டு வேலை செய்யும் எமக்கு இங்குள்ள வேலை கடிணமானதாகத் தெரியவில்லை. ஆகவே, வேலையென்றால் கூப்பிடுங்கள் இலங்கையர்களையும் இந்தியர்களையும் என்று வெள்ளையர்களே அவ்வப்போது பேசுவது கேட்கும். கடிண உழைப்பாளிகள் என்கிற பெயரும் எமக்கு இருந்தது. அதனால், வழமை போலவே மேலாளரின் செல்லப்பிள்ளைகள் யாரென்பதில் எமக்குள்ப் போட்டி ஏற்படுவதுண்டு. எம்மிடம் வேலை வாங்கலாம் என்று அவர் எண்ணி வந்தபோதிலும், நாம் அதனை ஒரு கெளரவமாக பார்க்க ஆரம்பித்தோம். ஆகவே, எம்மைத்தவிர வேறு எவரும் மேலாளரின் மதிப்பிற்கு பாத்திரமாயிருப்பது எமக்கு எரிச்சலைத் தரும். அந்தக் காலமொன்றில்த்தான் அவன் வந்தான்.
என்னை விட வயதில் சிறியவன். 26 அல்லது 27 வயதிருக்கலாம். மிகவும் திடகாத்திரமானவன். வெள்ளையினத்தவன். சுருள் சுருளான மயிர்க்கற்றைகள் பொன்னிறத்தில் வளர்ந்திருக்க தனது பெயர் சொல்லி ஒருநாள்க் காலையில் அணியின் கூட்டத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டான். அவன் பற்றி மேலாளர் அறிமுகம் கொடுத்தபோது மனதிற்குள் சிறிய எரிச்சல். "எமக்கெல்லாம் இந்த அறிமுகம் கொடுத்தார்களா, இல்லையே? இவனுக்கு மட்டும் எதற்கு இந்த அறிமுகம்?" என்கிற கேள்வி. விடை எமக்குத் தெரியவில்லை.
அணியில் பணிபுரிந்தவர்களில் கீழ்மட்ட வேலைகள், இடைநிலை வேலைகள், உயர் நிலை வேலைகள் என்று மூன்று பிரிவுகளாகாப் பிரிக்கப்பட்டிருந்தோம். இடைநிலை வேலைகளை பெரும்பாலும் இந்தியர்களும் இலங்கையர்களும் செய்துகொள்ள கீழ்மட்ட வேலைகளையும் உயர் மட்ட வேலைகளையும் வெள்ளையர்களே பார்த்துக்கொண்டார்கள். அவனும் கீழ்மட்டத்திலிருந்தே ஆரம்பித்தான். எமக்குக்கீழ் இருக்கிறான் என்பதால் அவன் பற்றி அதிக அக்கறை காண்பிப்பதை நாம் மறந்துவிட்டோம். ஆனால், அடிக்கடி அணிக் கூட்டங்களில் அவனின் பெயர் அடிபடும். அவனது பெயரை அணியின் மேலாளர் உச்சரிக்கும்போது வியப்பும், எரிச்சலும் ஒருங்கே வந்து போகும். ஆனாலும் அவன்குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை என்று இருந்துவிட்டோம்.
நாட்கள் செல்லச் செல்ல அவன் அணியில் முக்கியமானவர்களில் ஒருவனாகிப் போனான். கூட்டங்களில் அவன் பேசுவதை மேலாளர் உன்னிப்பாகக் கேட்பது புரிந்தது. அவன் ஈடுபட்டிருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து அவர் அடிக்கடி பெருமையுடன் பேசும்பொழுதுகளில் அதே எரிச்சல் வந்து போகும். ஆனால், அவன் குறித்த எமது பார்வைகள் தவறானவை என்பதை அவன் தொடர்ச்சியாக நிரூபித்து வந்தான்.
இலங்கையில் பொறியியல் படித்துப் பட்டம் பெற்றவன் என்கிற பெருமையும், இங்கிருக்கும் வெள்ளைக்காரனை விடவும் நாம் படித்தவர்கள் என்கிற எண்ணமும் அவனை எம்மிலும் கீழானவனாகப் பார்க்கத் தூண்டியது எமக்கு. அதனாலேயே அவனின் திறமைகளை ஏறெடுத்தும் பார்க்க நாம் நினைக்கவில்லை. ஆனால் எமது எண்ணங்களையும், பெருமைகளையும் அவன் மிக இலகுவாக உடைத்துக்கொண்டே எம்மை நோக்கி வந்துகொண்டிருந்தான்.
ஒருநாள் திடீரென்று கீழ்மட்ட அணியில் இருந்த அவனை எமது, அதாவது நடுத்தர வர்க்க அணியில் கொண்டு வந்து இணைத்தார் மேலாளர். எமக்கோ தூக்கிவாரிப் போட்டது. "இது எப்படித் தகும்? நாம் படித்தவர்கள் இல்லையா? பண்ணைகளில் ஆடு மாடு மேய்த்துக்கொண்டு நின்றவனை எம்மோடு, சரிக்குச் சமமாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். வெள்ளைக்காரன் என்பதால்த்தானே இதுவெல்லாம்?" என்கிற எண்ணம் தலையில் ஏறி அமர்ந்துகொள்ள அவன் மீது தேவையில்லாமல் எரிச்சலை வாரியிறைக்கத் தொடங்கினோம்.
ஆனால், அவனுக்குத்தான் நாம் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறோம் அல்லது எமக்குள் என்ன பேசிக்கொள்கிறோம் என்பதுபற்றி எதுவும் தெரியாதே? அவனோ எம்மிடம் மிகவும் சகஜமாகப் பழகினான். சில வேளைகளில் எம்மிடமே வந்து சில விடயங்களை எப்படிச் செய்யலாம் என்று கூடக் கேட்பான். விரும்பாதுவிடினும் கூட, அவன் கேட்கும்போது நாம் உதவியிருக்கிறோம். அவனும் நன்றியுடன் சென்றுவிடுவான்.
சில காலத்தின் பின்னர் இந்தியர்கள் மற்றும் இலங்கையர்கள் என்று கிட்டத்தட்ட ஒரே காலப்பகுதியில் வேலையில் இணைந்தவர்களுக்கு அணியில் மேல்த்தட்டுப் பிரிவில் பதவி உயர்வு கிடைத்தது. அவ்வாறு பதவி உயர்வு கிடைத்துச் சென்றவர்களில் நானும் ஒருவன்.
மூன்று அல்லது நான்கு வருடங்கள் இருக்கலாம். 2010 வாக்கில் அவனையும் பதவியுயர்வு கொடுத்து எமக்குச் சமனானவனாக ஆக்கி அழகுபார்த்தது நிர்வாகம். இத்தனைக்கும் அவன் எம்மை வெறுக்கவில்லை. நிர்வாகத்திற்கு நெருக்கமானவன் என்பதைத்தவிர அவனை நாம் வெறுப்பதற்கு வேறு எந்த காரணங்களும் எமக்கு இருக்கவில்லை. அவன் குறுகிய காலத்தில் காட்டிய அதீத வளர்ச்சி எமக்குள் அச்சத்தை ஏற்படுத்தியிர்ந்தாலும் கூட, அவன் எமக்குப் போட்டியாக வரலாம் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.