மயிலிறகு ....... 05.
எடேய் ....அப்போது நீ கவனிச்சனியே அவன் தன்ர மோட்டர் சைக்கிள் சைட் பெட்டியில் இருந்து ஒரு மஞ்சள் பை எடுத்து அவளிடம் பணம் பத்திரம், கவனமாய் கொண்டுபோய் பெட்டியில் வை என்று கொடுத்ததை. தோராயமாய் பார்த்தாலும் ஐந்தாறு லட்சங்களாவது இருக்கும் இல்லையா.....அதை சொல்லும்போது சுந்துவின் குரலில் ஒரு அவாவும் தடுமாற்றமும் இருக்கு.
ஓமடா .....நானும் கவனித்தனான் ஆனாலும் அதடா என்பவனை இடைமறித்து அதுமட்டும் கிடைத்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துடுமடா. பூவனத்தின் கல்யாணம்,என்ர படிப்பு,உன்ர மோட்டார் சைக்கிள் மற்றும் ஊருக்குள் ஒரு மளிகைக் கடை என்று எல்லாம் செய்யலாம்டா......
சுந்துவுக்கு கொஞ்சம் வெறி ஏறீட்டுது. டேய் வாமு அவன்ர சேட்டைக்கு எப்படியாவது அதை அடிச்சுக்கொண்டு வரவேணும். குரல் உசாராய் சத்தமாய் வருகிறது.
உனக்கென்ன பைத்தியமாடா சுந்து ....அப்படி ஏதாவது நடந்தால் உடனே அவருக்குத் தெரிந்து போயிடும் நாங்கள்தான் செய்திருப்பம் என்று...... பிறகு உன்ர படிப்பு, தங்கச்சியின் கல்யாணம் எல்லாம் பாழாகிடும்.இப்ப நீ ஒன்றுக்கும் யோசிக்காமல் போய்ப்படு.பிறகு பார்க்கலாம் என்று சொல்கிறான்.
மயிலம்மா அறைக்குள் தன் அலுமாரியில் எதையோ தேட பூவனம் அங்கு தேநீர் கோப்பைகளுடன் வருகிறாள்.தாயைப் பார்த்து என்னம்மா தேடுகிறாய் .....இல்லையடி இன்று முழுதும் செத்தவீடு, மார்அடிச்சு அழுதது, நடை என்று ஒரே அலுப்பாய் இருக்கு அதுதான் இந்த மருந்துப் போத்தலை இங்கினதான் எங்கேயோ வைத்தனான் காணேல்ல
ஓ......அதுவா அதைத்தான் அவங்கள் இரண்டு பேரும் எடுத்து குடிச்சுட்டு அலட்டிக் கொண்டிருக்கிறாங்கள்.
அப்படியே.....சரி சரி அத விடு, உந்தத் தேத்தண்ணியைத் தா குடிப்பம்.
நீ அவங்களுக்கு நல்லா இடங் குடுக்கிறாய் சொல்லிப் போட்டன் என்று தாய்க்கும் தேநீரைக் குடுத்துட்டு தனது தேநீரை எடுத்துக் கொண்டு வெளியே போகிறாள் பூவனம்.
அடுத்தநாள் காலை பத்து மணியளவில் தபால்காரர் சைக்கிளில் மயிலம்மா வீட்டுக்கு முன் வந்து நின்று மணியடிக்க பூவனம் சென்று அவரிடமிருந்து பதிவுத்தபால் ஒன்றை கையெழுத்திட்டு வாங்கி வருகிறாள். வரும்போதே அண்ணா உனக்கொரு கடிதம் வந்திருக்கு வந்து பாரேன் என்று அழைக்கிறாள். அடுக்களையில் இருந்து மயூரியும் சுந்துவும் ஒரே நேரத்தில் வெளியே வருகிறார்கள். சுந்து வந்து தங்கையிடம் இருந்து கடிதத்தை வாங்கிக் கவனமாகப் பிரித்துப் படிக்கிறான்.அதில் அவன் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படிப்பதற்குத் தேர்வாகி இருப்பதாகவும் வரும் திங்கள் கிழமை குறிப்பிட்ட ஆவணங்களுடன் வந்து சேந்து கொள்ளும்படி தெரிவிக்கப் பட்டிருந்தது.அதை அறிந்ததும் அவர்களுக்கு மிகவும் சந்தோசமாய் இருக்கு. அம்மா நான் இந்த நல்ல செய்தியை வாமனிடம் போய் சொல்லிப்போட்டு வாறன்.இதைக் கேட்டதும் அவன் மிகவும் சந்தோசப்படுவான் என்று சொல்லிவிட்டு தாயைப் பார்க்க அவளும் இருடா வாறன் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று கொஞ்ச பணம் எடுத்துவந்து மகனிடம் குடுக்கிறாள். பணத்தை வாங்கியதும் சுந்து சந்தோசத்துடன் சைக்கிளில் சிட்டாய்ப் பறக்கிறான்.இதை பார்த்த பூவனம் அம்மா இவங்கள் குடிக்கப் போறாங்கள், நீ வேற அவங்களுக்கு காசு குடுக்கிறாய்....
நீ சும்மா இருடி அவங்கள் என்னண்டாலும் செய்யட்டும். அங்க படிக்கப்போனால் இனி எப்ப அவனைப் பார்க்கபோறோமோ....நீ போய் அடுப்பில மா அவிய வைத்தனான் என்னெண்டு போய்ப் பார்....நான் ஒருக்கால் கனகத்தைப் பார்த்துட்டு வருகிறேன்.....பக்கத்து வீட்டுக்கு நடந்து செல்கையில் அவளின் மனம் கணக்குப் போடுகிறது. இன்று வெள்ளி அடுத்து சனி,ஞாயிறு பின் திங்கள் வந்துடும்.இதற்குள் பணத்துக்கு என்ன செய்வது. இப்ப ஒரு இரண்டாயிரம் இருந்தால் கூட போதும் பிறகு பார்த்து நிலத்தை ஈடு வைத்து எண்டாலும் பிள்ளையின் படிப்புக்கு உதவ முடியும். அவன் படித்து ஆளாயிட்டான் என்றால் எங்கட பஞ்சம் தீர்ந்திடும்.அதுக்குள் இவளின் சம்பந்தம் வேற நான் முந்தி, நீ முந்தி என்று நிக்குது.எல்லாவற்றையும் நினைக்க நினைக்க மயூரிக்கு மண்டை விறைக்குது. அங்கு வீட்டு வாசலில் கனகம் நிற்பதைக் கண்டு விரைவாக நடக்கிறாள்.
வாமு வீட்டை போன சுந்து அங்கு அவனைக் காணாது அவனின் தாயிடம் விசாரிக்க அவவும் அவன் அரசு விதானையார் கூப்பிட்டு போயிட்டான். இப்ப வரும் நேரம்தான் நீ உந்த வாங்கில இரு தம்பி. நான் தேத்தண்ணி போட்டுக்கொண்டு வாறன் என்று உள்ளே போகிறாள். சிறிது நேரத்தில் வாமுவும் சைக்கிளில் வந்து இறங்குகின்றன். அவனைக் கண்டதும் ஓடிச்சென்று வாமுவைக் கட்டிப்பிடித்த சுந்து தனக்கு பல்கலைக்கழகத்துக்கு வரச்சொல்லி கடிதம் வந்திருக்கு என்று சொல்லிவிட்டு சட்டென்று அமைதியாகின்றான்.அவனின் முகவாட்டத்தைப் பார்த்த வாமு என்னடா சொல்லு என்று கேட்க அவனும் வாற திங்கள் போகவேணும் இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு அதற்குள் பணத்துக்கு என்ன செய்யிறதென்றுதான் யோசிக்கிறன். எட மடையா, அதெல்லாம் வெல்லலாம், நீ ஒன்றுக்கும் யோசிக்காத.நீ இருந்து தேத்தண்ணியைக் குடி நான் உடுப்பு மாத்திக்கொண்டு வாறன் என்று உள்ளே போகிறான்.சிறிது நேரத்தில் இருவரும் தாயிடம் சொல்லிக்கொண்டு சைக்கிள்களில் வெளியே போகின்றார்கள்.
அந்த ஊரில் இருக்கும் ஒரேயொரு பாரில் சுந்து ஒருபோத்தல் சாராயம் வாங்கப் போக வாமு அவனிடம் கணக்க வேண்டாம் அரைப் போத்தல் வாங்கு போதும் என்று சொல்லி அரைபோத்தல் சாராயமும் இரண்டு பிளாஸ்டிக் கப்பும் அத்துடன் குடல் கறியும் வாங்கிக்கொண்டு வருகிறான். இருவரும் அங்கிருந்த சிறு மேசையில் அமர்ந்து கொள்கிறார்கள். பக்கத்தில் ஒரு மேசையில் நாலுபேர் ஊர் உலகத்தில் நடக்கிற பல விஷயங்களையும் கதைத்து சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். சுந்துவும் போத்தலை எடுத்து உள்ளங்கையில் ரெண்டு குத்து குத்தி மூடியிலும் குத்திவிட்டு மூடியைத்திருக அதுவும் மெல்லிய இழை தளர்ந்து புதுமணப்பெண்போல் முனகிக் கொண்டு திறந்து கொள்கிறது.ஒரு சுகந்தமான வாசனை அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது. அப்படியே அந்தப் பொன்னிறத் திரவத்தை இரண்டு கிளாஸ்களிலும் பாதி பாதியாக ஊற்ற வாமுவும் பக்கத்து மேசையில் இருந்து தண்ணி வாங்கி அதில் கலந்து விடுகிறான்.இருவரும் ஆளுக்கொரு மிடறு குடிக்கிறார்கள்.பின் வாமு பொக்கட்டில் இருந்து சிகரெட் பெட்டியை எடுத்து அவனுக்கும் ஒன்றைக் குடுத்து தானும் ஒன்றை வாயில் வைத்துக் கொண்டு தீப்பெட்டி தேட பக்கத்து கதிரையில் இருந்தவர் இங்காலுப்பக்கம் திரும்பாமல் தன்னிச்சையாய் தனது சிக்ரெட்டை நெருப்புடன் இவனிடம் தருகிறார். வாமனும் அதை வாங்கி தன் வாயில் இருந்த சிக்ரெட்டைப் பற்றவைத்து சுந்துவிடம் குடுத்துட்டு அவனிடமிருந்த சிக்ரெட்டை வாங்கி தான் பத்தவைச்சுக்க கொண்டு அவரிடம் அவருடையதைக் குடுத்து விடுகிறான்.
🦚 மயில் ஆடும் ........!