சரி, பேசலாம்.
2005 இல் வன்னியில் ரணிலுக்கு வாக்களிக்கவேண்டாம் என்று இயக்கம் கேட்டது உண்மைதானே? இதனை எவரும் மறுக்கவில்லையே? பிறகேன் இந்த Cherry picking கேலிகள்?
ரணிலிலிருந்தே ஆரம்பிக்கலாம்,
2002 மாசியில் ரணில் அரசாங்கம் புலிகளுடனான பேச்சுக்களை ஆரம்பித்ததன் நோக்கம் என்ன? தமிழர்களுக்குத் தீர்வொன்றினை வழங்கவேண்டும் என்பதற்காகத்தான் என்று இங்கு எவராவது உண்மையாகவே நம்புகிறீர்களா? போர்க்களத்தில் ஏற்பட்ட அடுத்தடுத்த தோல்விகள், கட்டுநாயக்க விமான நிலையம் மீதான தாக்குதல், அதனால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகள் என்பவற்றைத் தவிர இலங்கை அரசாங்கத்திற்கு பேச்சுவார்த்தைகளுக்குப் போகவேண்டிய தேவை இருந்ததா?
சரி, பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தாயிற்று. பேச்சுக்கள் நடந்துகொண்டிருக்கும்பொழுது, 2004 இல் பங்குனியில் கருணாவை புலிகள் இயக்கத்திடமிருந்து பிரித்தெடுத்து புலிகளைப் பலவீனமாக்கியது யார்? பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை என்று இழுத்தடித்து, நியாயமான தீர்வெதனையும் முன்வைக்காது, சர்வதேச வலைப்பின்னலுக்குள் புலிகளைச் சிக்கவைத்து, படிப்படியாக பேச்சுக்களில் புலிகளை வேண்டாத தரப்பாக ஓரங்கட்டியது யார்? ரணில் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராகவிருந்த மிலிந்த மொரகொடை மற்றும் நவீன் திசாநாயக்கா ஆகியோர் அக்காலத்தில் வெளிப்படையாகவே கூறிய விடயங்களை எவராவது கவனித்தீர்களா? புலிகளைப் பலவீனப்படுத்தி அழிப்பதற்காகவே கருணாவைப் பிரித்தெடுத்து, புலிகளை சர்வதேச வலைப்பின்னலுக்குல் வீழ்த்தி அமுக்கினோம், மகிந்த தானே புலிகளை அழித்தேன் என்று மார்தட்டலாம், ஆனால் புலிகளை நாம் பலவீனமாக்கி ஒடுக்கியிருக்கவிட்டால், மகிந்தவால் யுத்தத்தில் வெற்றிகொண்டிருக்க முடியாது என்று கூறினார்களே? ரணில், மிலிந்த மொரகொட, ரொகான் குணரட்ண, பீரிஸ், ரோகித்த போகொல்லாகம என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் புலிகளைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் பேச்சுவார்த்தைக் காலத்திலிருந்தே ஈடுபடவில்லையா? அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் , ஜப்பான், உதவி வழங்கும் நாடுகள் என்று அனைத்துமே புலிகளுக்கெதிராக ஐக்கியதேசியக் கட்சியினால் திருப்பிவிடப்படவில்லையா?
அப்படியான நிலையில் 2005 இல் தம்மை வஞ்சித்த ரணிலை தேர்தலில் தோற்கடிக்க புலிகள் எடுத்த முடிவு எந்தவிதத்தில் தவறானதாக இருக்க முடியும்?
நோர்வேயின் மத்தியஸ்த்தத்துடன் பேச்சுக்கள் நடைபெறப்போகின்றன எனும் செய்திகள் முதன்முதலில் வெளிவந்தபோதே 1993 இல் நோர்வே தலைமையில், அமெரிக்காவின் அனுசரணையுடன், பாலஸ்த்தீனத்திற்கும், இஸ்ரேலிற்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டது பற்றியும் அதன் முற்றான தோல்விபற்றியும் பலராலும் பிரஸ்த்தாபிக்கப்பட்டதே? அவ்வொப்பந்தம் முற்றாகக் கிழித்தெறியப்பட்டு, அரபாத் இஸ்ரேலியர்களால் நஞ்சூட்டப்பட்டுக் கொல்லப்பட்ட, இஸ்ரேல் சார்பாக சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பிரதமரும் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்றுவரை பலஸ்த்தீனர்களுக்கு காஸாவிலும், ரபாவிலும் நடப்பது என்ன? இவ்வாறான ஒப்பந்தங்களை மேற்குலகு செய்வதன் காரணமே, தமது பிணாமிகளான நோர்வேஜியர்களை இறக்கி போரிடும் மக்களை சோர்வடையச் செய்து, பலவீனப்படுத்தி, ஈற்றில் போராட்டத்தைத் தோற்கடிப்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
2005 தேர்தலில் மகிந்த ஆட்சிக்கு வந்தான். அவன் ஆட்சிக்கு வந்ததை இந்தியா உட்பட மேற்குலகு சற்றும் விரும்பியிருக்கவில்லையாயினும், புலிகளை அழிக்க அவனைப் பாவித்தன. பல தருணங்களில் மகிந்தவே "இந்தியாவின் யுத்தத்தையே நாம் நடத்தினோம்" என்று கூறியிருக்க மகிந்தவை ஆட்சிக்குக் கொண்டுவந்ததாலேயே நாம் அழிக்கப்பட்டோம் என்று கூறுவது எவ்விதத்தில் சரியாக இருக்கும்?
ஆட்சியில் மகிந்த இருந்தாலென்ன, ரணில் இருந்தாலென்ன, முள்ளிவாய்க்கால் நிச்சயம் நடந்தேயிருக்கும். ஏனென்றால், அது மகிந்தவின் போரல்ல, மாறாக மேற்குலகின் முற்றான அனுசரணையோடு இந்தியாவால் நடத்திமுடிக்கப்பட்ட போர். ரணில் ஆட்சிக்கு வந்திருந்தால் இந்தியாவோ அல்லது மேற்குலகோ முள்ளிவாய்க்கால் யுத்தத்தினை நிச்சயம் நடத்தியிருக்காது என்று இங்கு எவராலும் உறுதியாகக் கூறமுடியுமா?
மகிந்தவைக் காட்டிலும் ரணில் நல்லவனாக எம்மில் பலருக்குத் தெரிவது எப்படி? தீவிர இனவாதியான ஜெயவர்த்தனவினால் பயிற்றுவிக்கப்பட்ட ரணில் எப்படி தமிழர்களைப்பொறுத்தவரை நல்லவனா மாறினான்? 2002 இல் சமாதானப் பேச்சுகளில் அவன் ஈடுபட்டான் என்பதாலா? அதனால் நாம் அடைந்த நண்மையென்ன?
1977 ஆம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தலில் இருந்து இனவாதியான ஜெயாரின் அரசில் முக்கிய அமைச்சராக இருந்து வந்தவன். தமிழர்களுக்கெதிரான பல இனவாதச் செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபட்டவன். யாழ் நூலக எரிப்பில் காமிணி, சிறில் மத்தியூவோடு களமிறங்கியவன். ஜெயாரின் அரசாங்கத்தில் இருந்த தீவிர இனவாதிகளான காமிணி, லலித் போன்றோருடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டவன். 1988 - 1989 ஆகிய காலப்பகுதியில் தெற்கில் சிங்கள இளைஞர்களைச் சித்திரவதை செய்து படுகொலை செய்தான் என்கிற வெளிப்படையான குற்றச்சாட்டுக்கள் பட்டலந்தை ஆணைக்குழுவால் இவன் மீது முன்வைக்கப்பட்டிருந்தன. 1994 இல் சந்திரிக்கா தமிழர்களுக்கு நாடு கொடுக்கப்போகிறாள் என்று பாராளுமன்றத்திலேயே தீர்வுப்பொதியினை எரித்து தனது இனவெறியைக் காட்டியவன். 2015 இல் தமிழர்களின் தயவில் நல்லிணக்க அரசாங்கம் என்று ஒன்றை அமைத்துக்கொண்டு, தமிழர்களுக்கு 100 நாட்களில் தீர்வு தருவேன் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தான், ஆனால் நான்கு வருடகால ஆட்சியில் அவனால் செய்யப்பட்டவை என்று எதுவுமே இல்லை. இன்றும் ஆட்சியில் இருக்கிறான். தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வாக எதனையும் தருவேன் என்று இதுவரை சொல்லவுமில்லை, இனிமேலும் அப்படித்தான். இவனது ஆட்சியிலேயே முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்கான பொலீஸ், இராணுவத்தினது அடாவடித்தனங்களும், அட்டூழியங்களும் நடக்கின்றன.
ஆக, இவனை 2005 இல் தோற்கடித்தமைக்காகவே தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள் என்று சிலர் கூறுகிறார்கள். இவனிருந்தாலும் முள்ளிவாய்க்கால் நடந்துதான் இருக்கும். ஏனென்றால், அதற்கான புறச்சூழலை உருவாக்கி, புலிகளைப் பலவீனப்படுத்தியது இவனே. ரணில் அமைத்துக்கொடுத்த கொலைக்களத்தில் மகிந்த சுதந்திரமாக தமிழர்களைக் கொன்று முடித்தான்.
இல்லை, ரணில் மிகவும் நல்லவன், அவனிருந்தால் தமிழர்கள் அழிக்கப்பட்டிருக்கவே மாட்டார்கள் என்றால், 2009 இற்கு முன்னதாக, இவன் அங்கம் வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலங்களில் தமிழர்கள் கொல்லப்படவே இல்லையா?
உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதற்கு குற்றஞ்சுமத்த ஒருவர், இருக்கவே இருக்கிறார்கள் புலிகள். ஆகவே, அவர்கள் மீது இலகுவாகப் பழியினைப் போட்டுவிட்டு உங்கள் கடமை முடிந்ததாக நீங்கள் ஆறுதல்ப் பட்டுக்கொள்ளலாம். உங்களுக்காகப் புலிகள் போராடும்வரை அவர்கள் தேவையானவர்கள், இன்று போராட்டம் முற்றுப்பெற்று விட்டதால் அவர்கள் குற்றவாளிகள். நன்றாக இருக்கிறது உங்களின் வாதம்.