தொடர்ந்து மூன்றாவது முறையாக பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டின் மாரியப்பன்
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார்.
2 மணி நேரங்களுக்கு முன்னர்
பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் (T63) வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்த போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த ஃப்ரெச் 1.94 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்.
இந்திய வீரரான ஷரத் குமார் 1.88 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். தமிழகத்தைச் சேர்த்த வீரரான மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார்.
மாரியப்பன் தங்கவேலு இதற்கு முன்பாக, 2016 ரியோ டி ஜெனிரோ பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் (T42) தங்கமும், 2020 டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் (T63) வெள்ளியும் வென்றுள்ளார்.
கடந்த மே மாதம் ஜப்பானில் நடந்த 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றிருந்தார் மாரியப்பன் தங்கவேலு. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் அரங்கில் அவர் வென்ற முதல் தங்கம் அது.
அந்த இறுதிப் போட்டியில், 1.88 மீட்டருக்கு மேல் உயரம் தாண்டி மாரியப்பன் அசத்தியிருந்தார். அதன் மூலம் புதிய சாதனையையும் படைத்தார். அதற்கு முன்னர், அதே சாம்பியன்ஷிப் தொடரில் ஷரத் குமார் தாண்டிய 1.83 மீட்டர் உயரமே சாதனையாக இருந்தது.
மாரியப்பன் கடந்து வந்த பாதை
தமிழகத்தின் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டி கிராமத்தில் 1995ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி பிறந்தவர் மாரியப்பன். இவருக்கு நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி உள்ளனர்.
தந்தை குடும்பத்தை கைவிட்டதால், தாயார் சரோஜா குழந்தைகளை வளர்த்துள்ளார். தாயார் செங்கல் தூக்கும் தொழிலாளியாகவும், காய்கறிகள் விற்றும் ஒரு நாளைக்கு 100 ரூபாய் வருமானத்தில் குடும்பத்தை வளர்த்தெடுத்தார்.
மாரியப்பனுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது நடந்த ஒரு விபத்தில், பேருந்து சக்கரத்தில் சிக்கி அவரது வலது கால் மூட்டு நசுங்கியது. அது அவரை நிரந்தர மாற்றுத்திறனாளி ஆக்கியது.
தமது பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் ராஜேந்திரனால் உந்தப்பட்டு தடகளத்தில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார் மாரியப்பன். 2016 பாராலிம்பிக் போட்டிகளின் போது அளித்திருந்த பேட்டியில், “பள்ளிப் பருவத்தில் உயரம் தாண்டுதலில் அசாத்தியமான எனது திறமையை அறிந்த உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன், எனக்கு ஊக்கம் கொடுத்து பயிற்சி அளித்தார்.” என்று மாரியப்பன் கூறியிருந்தார்.
பள்ளியில் படித்துக்கொண்டே மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாரியப்பன், 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தேசிய, சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றார்.
2013இல் நடந்த தேசிய பாரா அத்லெடிக் சாம்பியன்ஷிப்பில் மாரியப்பன் உயரம் தாண்டிய விதம், பயிற்சியாளர் சத்யநாராயணனுக்குப் பிடித்துப் போக, மாரியப்பனுக்கு பெங்களூருவில் வைத்து பயிற்சி அளிக்கத் தொடங்கினார். 2015இல், தமிழ்நாட்டின் ஒரு தனியார் கல்லூரியில் பிபிஏ (BBA) பட்டப்படிப்பை முடித்தார் மாரியப்பன்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, கடந்த மே மாதம் ஜப்பானில் நடந்த 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 1.88 மீட்டருக்கு மேல் உயரம் தாண்டி மாரியப்பன் அசத்தியிருந்தார்
ரியோ பாராலிம்பிக்-2016 போட்டியில் தங்கம்
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, 2016 ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிறகு மாரியப்பனுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்தன
2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் தகுதி பெற, துனிசியாவில் நடந்த ஐபிசி கிராண்ட் பிரிக்ஸ் தொடரில், மாரியப்பன் 1.78 மீட்டர் உயரத்தை தாண்டினார். இதைத்தொடர்ந்து ரியோ பாராலிம்பிக் போட்டியில், T42 பிரிவில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி ஆசிய அளவிலான சாதனையைப் படைத்தார் மாரியப்பன். அவர் தங்கம் வென்ற பிறகு, அவருக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்தன.
நவம்பர் 2019இல், துபாயில் நடந்த ‘2019 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில்’ ஆண்களுக்கான T63 உயரம் தாண்டுதலில் 1.80 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தை மாரியப்பன் வென்றார்.
அதைத் தொடர்ந்து, டோக்கியோ 2020 (கொரோனா காரணமாக 2021இல் நடத்தப்பட்டது) பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
அப்போது நடந்த, T63 உயரம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் சாம் கிரீவுக்கும் மாரியப்பனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் சாம் கிரீவ், 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். 1.86 மீட்டர் உயரம் தாண்டிய மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டிக்குப் பிறகு மாரியப்பன் அளித்த பேட்டியில், "இன்று விளையாட்டை ஆரம்பித்தபோதே லேசாக மழை தூரல் இருந்தது. ஆரம்பத்தில் சிரமம் தெரியவில்லை. ஆனால், 1.80 மீட்டர் உயரத்தைக் கடந்து தாண்டும் போது மழை அதிகமானது. மழைநீரில் நனைந்து எனது சாக்ஸ் ஈரமானது. அப்போது தான் நான் உண்மையான சவாலை சந்தித்தேன். எனக்கு டேக் ஆஃபில் (Take off) பிரச்னை தென்பட்டது. இல்லாவிட்டால் நிச்சயமாக 1.90 மீட்டரைக் கடந்திருப்பேன்" என்று கூறியிருந்தார்.
மத்திய அரசு மாரியப்பனுக்கு, 2017ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதையும், 2020ஆம் ஆண்டில் இவருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் வழங்கி கெளரவித்தது. 2017ஆம் ஆண்டு மாரியப்பனின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தை திரைப்பட இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ், ‘மாரியப்பன்’ என்ற பெயரிலேயே இயக்குவதாக அறிவித்திருந்தார். பின்னர் சில காரணங்களால் இத்திரைப்படம் கைவிடப்பட்டது.
2016இல் ரியோ பாராலிம்பிக், 2021இல் டோக்கியோ பாராலிம்பிக் என இரு சர்வதேச போட்டிகளில் தங்கம், வெள்ளி என பதக்கங்களை வென்றதன் மூலம், பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக ஒரே பிரிவில் இரண்டு முறை பதக்கம் வென்ற பாராலிம்பிக் வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் மாரியப்பன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/ckgw531xy30o