நூல் அறிமுகம் : கி.இளம்பிறை அவர்களின் 'வழித்துணை நினைவுகள்'
- சுப.சோமசுந்தரம்
03-11-2024 அன்று எழுத்தாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் பாசத்திற்குரிய திருமதி கி.இளம்பிறை என்ற பிரபா அவர்கள் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா நெல்லை தியாகராஜநகரில் அமைந்திருக்கும் மின் ஊழியர் சிஐடியு சங்கக் கட்டிடத்தில் இனிதே நடைபெற்றது. 'வழித்துணை நினைவுகள்' மற்றும் 'திருவாசகம் - ஒரு தேடல்' என்பன அந்நூல்கள். இவற்றுள் 'வழித்துணை நினைவுகள்' எனும் கவிதை நூல் மீது பேசுமாறு இளம்பிறை அம்மா அவர்கள் முன்னரே எனக்கு அன்புக் கட்டளையிட்டிருந்தார்கள். புத்தகத்தை மின்னஞ்சலில் எனக்கு அனுப்பியும் தந்திருந்தார்கள். நான் பேசியது நன்றாக அமைந்ததாக விழாவிற்கு வருகை தந்த நண்பர்கள் பாராட்டியதோடு, வர இயலாத நண்பர் ஒருவர் முகநூலில் எழுதிடுமாறு கூறினார். அவர் முகநூல் நண்பர் மட்டுமல்லாது எனது முகநூல் பதிவுகளைத் தவறாமல் வாசித்துப் பின்னூட்டம் அளிப்பவர்; அன்ன மாட்சியர்தாமே முகநூலில் நம்மை உயிரோட்டமாய் வைத்திருப்போர் ! உடனே எழுதினால்தான் நான் மனதளவில் தயாரிப்புடன் பேசியவை கோர்வையாய் வந்து விழும் எனும் முனைப்புடன் இறங்கினேன். ஒரு கவிதை நூலை அறிமுகம் செய்வதில் எனது முதல் அனுபவம் என்பதாலும் உடனே பதிவிட விழைந்தேன். பேச நினைத்து அங்கே பேசாமல் விட்டதையும் இங்கு எழுத்தில் சேர்க்கும் உரிமை எனக்கானது. எனவே நூலுக்கு எழுத்து வடிவில் ஓர் அறிமுகமாய் இதனைக் கொள்ளலாம்.
இதனை எழுதும் எனக்கு மரபிலக்கியங்களின் (Classic literature) மீது தனித்த ஈர்ப்பு உண்டு. எனவே எந்தவொரு புதுக்கவிதையினை வாசிக்கும் போதும் எனக்குத் தெரிந்த மரபுவழிப் பாடல்களின் தாக்கம் ஏதும் தென்படுமானால் அதனை மகிழ்வோடு குறிக்கத் தவறுவதில்லை. அது அப்புதுக்கவிதையினை இயற்றிய கவிஞரின் முன்னோர் மொழி பொன்னே போல் போற்றும் திறமாக இருக்கலாம்; அல்லது கவிஞரே கவனிக்கத் தவறிய உவப்பான தற்செயல் நிகழ்வாக இருக்கலாம். மரபு வழிப் பாடல்களில் எத்துணையோ சிறப்புகள் இருப்பினும் அவற்றிற்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு புதுக்கவிதையில் உண்டு. வாசகர் ஒவ்வொருவரும் தமக்கே உரிய கண்ணோட்டத்துடன் விளக்கம் தரலாம் - ஒரு புத்தியல் ஓவியத்திற்கு (Modern art) ஒவ்வொருவரும் ஒரு விளக்கம் தருவதைப் போல. அப்புதுக்கவிதை எனும் வானூர்தியில் ஏறி கவிஞரே காணாத உலகையும் வாசகன் காணலாம். மரபு இலக்கியம் நமது காலத்தைச் சாராததால், அக்காலகட்டத்தில் தோன்றிய சான்றோர் தந்த விளக்கங்களே அறிவுலகத்தில் ஏற்கப்படும், ஏற்கப்பட வேண்டும் - சிறு விலகல்களைத் தவிர. அச்சிறு விலகல்களைத் தீர்மானிப்பதற்கும் அத்துறை சார்ந்த சான்றாண்மை இன்றியமையாததாகிறது.
'வழித்துணை நினைவுகள்' எனும் தலைப்பைப் பார்த்ததும் இளம்பிறை அம்மா அவர்கள் தமது வழித் துணையின் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த வாழ்க்கைத் துணைவரின்) நினைவுகளில் மூழ்கி எடுத்த முத்துகளைப் பதிவிட்டு இருப்பார் எனும் எண்ணம் மேலோங்கியது. வாசிக்க ஆரம்பித்ததும் தெரிந்தது - வாழ்க்கைத் துணைவரின் மறைவுக்குப் பின்னர், நினைவுகளை வழித்துணையாகக் கொண்டதன் பதிவு என்று. வாசிப்பதற்கு முன் என்னுள் தோன்றிய ஊகத்திற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இலக்கியக் கூட்டமானாலும் போராட்டக் களமானாலும் எழுத்தாளர் இளம்பிறை அவர்களும் அவரது இணையரான உயர்திரு இரா.கிருஷ்ணன் அவர்களும் இணைந்து பங்கெடுத்து 'இணையர்' என்னும் சொல்லுக்கு இலக்கணம் வகுப்பர். இறப்புக்குப் பின் தம் பூத உடல்களை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிக்கு எழுதி வைத்த முற்போக்காளர்கள் என்பது கூடுதல் செய்தி. திரு. கிருஷ்ணன் அவர்கள் மறைந்த போது மதச் சடங்குகளின்றி அதனை நிறைவேற்றியவர் திருமதி கி.இளம்பிறை. இவை கட்டுரையில் இருந்து சற்றே விலகிய செய்திகளாகத் தோன்றலாம். சொல்லும் செயலும் ஒன்றாய்க் கொண்ட ஒருவரின் எழுத்தைப் (நூலை) பேச வருகிறேன் என்பதை முன்மொழியவே இச்செய்திகள். மேலும் நூல் அறிமுகத்தில் நூலாக்கியோர் அறிமுகமும் மரபுதானே !
இக்கவிதை நூலில் என்னைக் கவர்ந்த இரண்டு பொருள்களைக் கையிலெடுத்துப் பேசுவது எனது வாசிப்புக்குப் பொருத்தமாய் அமைவது. ஒன்று, கவிஞர் அறம் பாடுவது; மற்றொன்று, என் மனதிற்கு நெருக்கமான மரபிலக்கியங்களுக்கு என்னை இழுத்துச் செல்வது. இந்த இரண்டில் ஒவ்வொரு பொருளுக்கும் சில மேற்கோள்களைக் காட்ட எண்ணம்.
அறம் சொல்ல வந்தவர்,
"தூவுவது அன்பாக இருப்பின்
விலகுவது வம்பாக இருக்கும்"
என்று (பக்கம் 18) நச்செனக் குறிப்பது நினைவில் கொள்ளத்தக்கது.
"எவரும் புத்தன் இல்லை
ஏனெனில்
புத்தன் என்று ஒருவன்
இல்லவே இல்லை"
என்று (பக்கம் 20) குறிப்பது உடனே கடந்து செல்ல விடாத ஒன்று. அகவைக்கு ஏற்ப உணர்வுகள் இருக்கும் எனும் உலகியல் நடைமுறை சொல்ல வந்தவர், "புத்தன் என்று ஒருவன் இல்லவே இல்லை" என்றது கூட "எவரும் புத்தன் இல்லை" என்பதை மீண்டும் வலியுறுத்தவே எனப் புரிய சற்று நேரமும் பக்குவமும் அவசியமாகிறது.
"பிறந்தது ஆண் குழந்தை எனில்
அன்று மட்டும் மகிழ்ச்சி
பிறந்தது பெண் குழந்தை எனில்
வாழும் வரை மகிழ்ச்சி"
என்று (பக்கம் 50) பெண்ணியம் பேசுமிடத்துச் சற்று சிந்திக்க வைக்கிறார். "அன்று மட்டும் மகிழ்ச்சி", "வாழும் வரை மகிழ்ச்சி" எனச் சொல்வதெல்லாம் ஓசை நயம் கருதி ஒரு கவிஞருக்கான உரிமம் என்பதும், பாடலின் மெய்ப்பொருள் "ஆண் என்றால் மகிழ்ச்சி, பெண் என்றால் பெரு மகிழ்ச்சி" என்பதும் கவிஞர் சொல்லாமல் சொல்லி நிற்பது. "ஆணென்ன பெண்ணென்ன ?" எனும் சமநோக்கு எத்துணை அவசியமோ, ஆணாதிக்கச் சமூகமாய் இருக்கும் வரை பெண் என்பது உயரிய நிலைதான் என முழங்குவதும் அவசியமாகிறது. இது தொடர்பில், "ஆண் மகவு பெற்றோர் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டோர்; பெண்ணைப் பெற்றோர் அந்த இறைவனையே பெற்றோர்" என்று எங்கோ வாசித்த நினைவு.
இனி என்னைக் கவர்ந்த பகுதிகளில் இரண்டாவதுக்கு வருவோம். சில இடங்களில் நமக்குத் தோன்றும் பண்டைய இலக்கியங்களின் தாக்கம் இயற்கையானதே என்பதற்குக் கவிஞர் இளம்பிறை அவர்களே சான்று தருகிறார். எடுத்துக்காட்டாக,
"எத்தனை எத்தனை முறை படித்தாலும்
புதுப்புது சிந்தனை தோன்றும்"
என்று (பக்கம் 31) அவர்கள் சொல்லுமிடத்து, "படிக்கப் படிக்கப் புதுமை" என்பதும், அதற்கு இணையாக "அறிதோறும் அறியாமை" எனும் குறளொலியும் நம் செவிப்புலனில் கேட்கின்றன. அவ்வொலி இயற்கையான ஒன்றே என்று அறிவிப்பது போல் பாடலின் அடுத்த வரியிலேயே "அறிதோறு அறியாமை கண்டற்றால்" எனும் குறளை இணைக்கிறார் கவிஞர். திருக்குறள் பிரபா என்று நட்பு வட்டத்தில் அறியப்படும் கி.இளம்பிறை அவர்கள் மேலும் சில இடங்களில் திருக்குறளை எடுத்தாள்கிறார். உதாரணமாக பக்கம் 11 ல் ஊடலில் தோற்றவர் வெல்லும் மாண்பு குறிக்கப்படுகிறது; பக்கம் 20 ல் தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறலும் சுட்டப் பெறுகின்றன.
ஏற்கெனவே குறிப்பிட்டது போல் பழந்தமிழ் இலக்கியங்களின் தாக்கத்தைக் குறிக்க நமக்குக் கவிஞரே வழங்கிய உரிமத்தின் படி ஒன்றிரண்டு இடங்களைக் காணலாமே !
"என்னைத் தேடினால் நான் இல்லை
ஒன்றாகவும் பலவாகும் எனை ஏற்ற
தோழர்கள் ஊடே ஊடுறுவி விட்டேன்"
என்று பக்கம் 28 ல் நட்பில் கரைந்து போகிறார்.
"என்னைத் தேடாதே
உன்னுள் நான் வாழ்கிறேன்"
என்று பக்கம் 36 ல் தலைவனும் தலைவியும் ஒருவர் மற்றவரிடம் தொலைந்து போதலைப் பேசுகிறார். இவ்விரண்டு இடங்களும்,
"வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்"
"ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந் தானே"
எனும் திருமந்திர வரிகளை மனக்கண்ணில் நிறுத்துதல் இயல்பான ஒன்று.
பக்கம் 31 ல் அன்புடையார் அனைவரும் தம் நெஞ்சகத்தில் குடி கொண்டதால் தம் நெஞ்சம் கனப்பதைப் பாங்குடன் சொல்லிச் செல்கிறார் கவிஞர் இளம்பிறை. உணர்வுபூர்வமான பொருளான நெஞ்சம் இலக்கிய நயத்துடன் ஒரு உடற்கூறாக ஆளப்படுவது இலக்கிய உலகில் அரிதன்று. நம் நினைவுக்கு உடனே வரும் குறள்
"நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து"
(குறள் 1128; அதிகாரம்: காதற் சிறப்புரைத்தல்).
அஃதாவது, காதலர் தன் நெஞ்சத்தில் உறைவதால் அவருக்குச் சுடுமே என அஞ்சி வெம்மையான பொருளைத் தான் உண்பதில்லை என்று தலைவியின் கூற்றாகக் குறளில் வருகிறது. இது தொடர்பில்,
"கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து"
(குறள் 1127; அதிகாரம்: காதற் சிறப்புரைத்தல்)
எனும் குறள் நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாத ஒன்று. இவ்வாறு சங்கிலித் தொடராக நினைவலைகளை எழுப்பும் 'வழித்துணை நினைவுகள்' காற்றினிலே வரும் கீதம் என்பது மிகையில்லை.
பக்கம் 52 ல்
"பற்றியது பற்றிய பின்
பற்றைத் தவிர வேறு எதுவும் இல்லை
....................................................
.....................................................
ஈவது தாளாண்மை என்று
பின் சென்றாள் அப்பேதை"
எனும் பாடலைக் கொள்ளலாம். முதல் இரண்டு வரிகள் மனக்கண்ணில் நிறுத்துவது,
"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"
(குறள் 350; அதிகாரம்: துறவு)
என்ற பொய்யாமொழியை. குறளில் இறைப்பற்று வலியுறுத்தப்படுவது போல இங்கு மானிடப்பற்றை வலியுறுத்துவது கவிஞரின் பகுத்தறிவு. இவர் வலியுறுத்துவது மானிடப்பற்றே என்பது பாடலின் கடைசி வரிகளில் தெளிவு. அங்கு "பின் சென்றாள் அப்பேதை" என்று உடன்போக்கு மேற்கொண்டு தலைவன் பின் செல்லும் தலைவியைக் குறிக்கிறார். உடன்போக்கு என்னும் துறை தழுவிய எத்தனையோ அகப்பாடல்கள் இருப்பினும், இளம்பிறை அம்மாவின் சொல்லாட்சியானது நாவுக்கரசரின் திருத்தாண்டகத்தில் "முன்னம் அவனது நாமங் கேட்டாள்" எனத் தொடங்கும் பாடலை நம்முன் இழுத்து வந்து நிறுத்துகிறது. நாவுக்கரசர் பாடலில் 'பிச்சி' ("பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்") என்பது நமது கவிஞரின் பாடலில் 'பேதை' என்றானது; "தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே" என்று திருத்தாண்டகத்தில் ஒலித்தது, "பின் சென்றாள்" என்று வழித்துணை நினைவானது.
இதுகாறும் குறித்த இரண்டு பொருள்கள் தவிர ஒன்றிரண்டு குறிப்புகளும் உண்டு.
மானிடக் காதல் சிற்றின்பம் என்றும், இறைப்பற்று பேரின்பம் என்றும் வகைப்படுத்தல் உலகியலில் உண்டு. இரண்டும் பேரின்பமே என்பது எனது தனிப்பட்ட கருத்து. எனது கருத்துக்கான அடிப்படை என்னவெனில், தன்னை இழத்தல் பேரின்பம்; அது இரண்டிலும் உண்டு - அவ்வளவே ! திருநாவுக்கரசரின் திருத்தாண்டகமும் மாணிக்கவாசகரின் திருக்கோவையாரும் நமக்கு உணர்த்தும் பொருள் இதுவே. இரண்டும் அகம் சார்ந்த பக்தி இலக்கியங்கள். இரண்டிலும் இறைவன் தலைவனாகவும் பக்தன் தலைவியாகவும் உருவகிக்கப்படுகின்றனர். பக்தனாகிய தலைவி இறைவனாகிய தலைவனை அடைவது பாடல் பெற்றது. இப்போது நாம் கையில் எடுத்துள்ள கவிதை நூலிலும் கவிஞர் இக்கருத்தைச் சிறிய மாறுதலுடன், "சிற்றின்பம் தவிர்த்து எவரும் பேரின்பம் அனுபவிக்க இயலாது" என்று பக்கம் 42 ல் பதிவிடுகிறார்.
பக்கம் 33 ல் "உணவில் கலப்பு உயிர்க் குற்றம்; மொழியில் கலப்பு கொலைக் குற்றம்" என்ற கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. நூலுக்கான அணிந்துரை அளித்த பேரா. வ.ஹரிஹரன் அவர்கள் இக்கருத்தில் மாறுபட்டுள்ளது அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய நியாயம்தான். என்னைப் பொறுத்தமட்டில், எனக்குக் கவிஞரின் கருத்தில் முழு உடன்பாடு இல்லை; முழுமையான மாறுபாடும் இல்லை எனச் சொல்லியே ஆக வேண்டும். மொழிக் கலப்பினால் மொழி வளரும் என்பது வளரும் மொழிக்குச் சரிதான்; தமிழ் போன்ற வளர்ந்த மொழிக்கு எங்ஙனம் பொருந்தும் எனும் எண்ணம் தோன்றுவதால் கவிஞரின் கருத்தில் உடன்பாடு. பேருந்தில் இருந்து இறங்கியதும் ஆட்டோ ஓட்டுநரிடம், "சந்தைக்குத் தானி வருமா ?" என்பது செயற்கையாகவும், "சந்தைக்கு ஆட்டோ வருமா ?" என்பது இயற்கையாகவும் தோன்றுகிறது; ஆட்டோ வெளியிலிருந்து இந்நிலத்திற்கு வந்த பொருள்தானே எனும் எண்ணம் முன்வர கவிஞரின் கருத்தில் எனக்கு மாறுபாடு.
இவை போல் இன்னும் எத்தனையோ ! அத்தனையும் பேச முனைந்தால், நூலைப்போல் இரு மடங்காவது நான் எழுத வேண்டி வரும். எனவே இவ்விடத்தில் இக்கட்டுரைக்கு நிறைவுத் திரையிடல் பொருந்தி வரும். எழுத்தாளர் இளம்பிறை அவர்களின் கவிதைப் பெட்டகத்தில் உறையும் மேலும் பலவற்றை வெளிக் கொணர்வது வாசகர்தம் வாசிப்பில் கை கூடுவது.
நூலாசிரியர் மற்றும் பதிப்பக விவரங்கள் பின் வரும் முகநூல் இணைப்பில் உள்ள புத்தக அட்டையில் :
https://www.facebook.com/share/p/17dPe1MQr4/