தமிழீழத்திலிருந்து வீசிய ந.கேசவராஜனின் "கடலோரக்காற்று" (முழுநீளத் திரைப்படம்)
- சுவிஸில் இருந்து அனலை அரிகரபுத்திரன் -
பிரமாண்டங்களை அள்ளித் தெளித்தும், கோடிக்கணக்கான ரூபாய்களை விரயம் செய்யும் தமிழக வர்த்தக சினிமா சூழலில், மெகாசீரியலில் மூலம் மகாஜனங்களை மந்த புத்திக்குள்ளாக்கும் விசச் சூழலில் தமிழீழத்தில் இருந்து வெளிவந்திருக்கிற அற்புதமான சினிமா 'கடலோரக் காற்று' என்றால் அது மிகையாகாது. நீண்ட இடைவெளிக்குப் பின்பு வெளிவந்திருக்கும் படம் இது. வீடியோபடம் என்றாலே அது நாடக பாணியில் தான் அமைந்திருக்கும், அதில் காட்சிப்படுத்தல்களை வெளிப்படுத்துவது கடினம் என்ற கூற்றுக்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சினிமா என்ற மொழி, இலக்கணங்களை உள்வாங்கி காட்சிக் கவிதையாக வீசியிருக்கிறது கடலோரக்காற்று. சில தொழில்நுட்ப குறைபாடுகளையும், கலைநுட்ப குறைபாடுகளையும் கொண்டுள்ளபோதும், அதன் எளிமைத் தன்மைக்காகவும், சினிமா என்ற மொழியை புரிந்து கொண்டு அதனை படைப்பாற்றலுடன் வெளிப்படுத்தியிருக்கும் இயக்குநர் கேசவராஜனின் திறமைக்காகவும் நாம் கடலோரக் காற்றையும் அதன் கலைஞர்களையும் பாராட்டியே தீர வேண்டும்.
தமிழீழ சினிமா தனக்கான தனித்தன்மையுடன் மிளிர்வதற்கான வீரிய வித்து ஊன்றப்பட்டுவிட்டது. 'காற்றுவெளி', 'செவ்வரத்தம்பூ', 'இனி', போன்ற நல்ல குறும்படங்களைத் தந்த தமிழ்சினிமா இன்று அதன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. மண்ணும், மண்சார்ந்த போராட்டங்களும் அதில் போராளிகளும் மக்களும் கொண்டுள்ள உறவுகள், மனித உணர்வுகள், மானுட விழுமியங்கள் போன்ற பல கோணங்களில் இருந்தெல்லாம் இவை பேச முனைகின்றன. குறும்படங்கள் இவற்றை தமக்கேற்ற மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வெளிப்படுத்தின என்றால் கடலோரக்காற்று அதைத்தாண்டி ஒரு முழுநேரத் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. ஏற்கனவே உருவான நல்ல குறும்படங்களின் தாக்கம் கடலோரக்காற்றில் வெளிப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் தமிழக தமிழ்சினிமாவிலிருந்தும் தனக்கான சில அம்சங்களை தேர்ந்தெடுத்திருக்கிறது. அவற்றை வர்த்தக சினிமா என்றோ அல்லது குப்பைகள் என்றோ ஒதுக்காமலும் அதேநேரத்தில் தமிழீழ சினிமா பாரம்பரியத்தில் நின்று கொண்டு மண்வாசனையுடன் வீசியிருக்கிறது 'கடலோரக்காற்று'. இதுதான் இதன் கலைரீதியான வெற்றியாகிறது. பிரச்சாரரீதியான படங்கள் வெறும் பிரச்சாரம் என்றளவிலேயே குறுகிப்போக காற்றுவெளி, கடலோரக்காற்று, செவ்வரத்தம்பூ போன்ற படங்கள் சிரஞ்சீவியாக நிலைத்து நிற்கப் போகின்றன. அது மட்டுமல்லாமல் அவைதான் தமிழீழத் திரைப்படங்கள் என்ற தேசிய அடையாளத்தையும் பெற்றுத்தரப் போகின்றன. இவை குறித்தெல்லாம் நீண்ட மதிப்பீடுகள், விமர்சனங்கள் செய்யப்பட வேண்டும். இது விமர்சகர்களும் படைப்பாளிகளும் இணைந்து பணியாற்ற வேண்டிய களம். அதற்கு சற்று நீண்ட காலமும் தேவைப்படும். எனவே கடலோரக்காற்று மதிப்பீட்டுடனே இதனை நான் தற்போதைக்கு நிறுத்திக்கொள்கிறேன்.
யார் இவர்கள்? கைகளில் மலர்களை ஏந்திய வண்ணம் கடலை நோக்கிச்செல்கிறார்கள். இளம் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், நடுத்தர மனிதர்கள், என்ற சிறிய கூட்டம் தான் அந்த கடலோர கிராமத்து மக்கள். அவர்கள் மெல்ல மெல்ல அடியெடுத்து அலையை அண்மித்தவுடன் குனிந்து மலர்களை அலைகளில் தவழ விடுகிறார்கள். மற்றவர்க்காய், தமக்காய் மரணித்த அந்த மனிதப்பிறவிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். அவர்கள் ஆண்களும், பெண்களும், சிறுவர்களுமாய் சிறியகூட்டம்தான். ஆனால் அவர்களில் பலமுகங்களைப் பார்க்கின்றோம். தாய், தந்தை, உற்றார், நண்பர், போராளிகள், காதலி, சகோதரி என ஒருவருக்கே பல முகங்கள். அந்த கூட்டத்தில் சம்மாட்டியாரும் இருக்கிறார். அவரிடம் வட்டிக்கு கடன் வேண்டி தொழில் புரியும் மீனவனும் நிற்கிறான். பள்ளி மாணவ மாணவிகளும் நிக்கிறார்கள். புலம்பெயர்ந்து வந்து தொழில் புரியும் மீனவன் ‘மட்டக்கிளப்பான்' நிற்கிறான். ஆக இவர்கள் தான் சமூகம். கமறா இப்போ கீழிறங்குகிறது. அவர்களின் கால்களையும், அதில் மலர்கள் வந்து தழுவித்தழுவி விலகிச்செல்வதையும் காண்பிக்கிறது. அடுத்த காட்சி சகோதரியின் முகம் நெருக்கமாகத்தெரியும் பின்னணியில் அவளது தம்பி அவள் கூப்பிட்டும் நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறான். இந்தக் காட்சி படத்தின் இறுதியில் இடம்பெறும் காட்சி. இந்த காட்சி ஒன்றே போதும் இதன் தரம் குறித்து உணர.
கதை இதுதான். யுத்தம் நடந்து கொண்டு இருக்கும் காலகட்டம். கடலலைகள் வந்து தாலாட்டும் அழகிய கடலோரக்கிராமம். அங்கே மீன்பிடித்தொழிலையே பிரதானமாக கொண்ட சில குடும்பங்கள், ஆண் போராளிகளின் ஒரு அணியின் முகாமும், பெண்போராளிகளின் ஒரு அணியின் முகாமும் அமைந்திருக்கின்றன. ஆண் போராளிகள் அணியில் நாலைந்து பேரில் ஒருவன் மட்டும் சற்று வித்தியாசமானவன். நகைச்சுவையுணர்வு நிரம்பியவன். அதிக மனித நேயம் கொண்டவன். இவனுக்கும் அவனது சகபோராளிகளுக்கும் இடையேயான போராட்ட உணர்வையும், கிண்டலும் கேலியும் கலந்த வாழ்வை எடுத்துச்சொல்கிறது ஒரு பகுதிக்கதை. மற்றைய இரண்டு குடும்பங்களில் ஒரு குடும்பம் சம்மாட்டியார் குடும்பம், மற்றது அவரை அண்டிப்பிழைக்கும் நடுத்தர குடும்பம். சம்மாட்டியாருடைய மகனும் மற்றைய குடும்பத்துப்பெண்ணும் காதலிக்கிறார்கள். அவளது தங்கை அங்கு தொழில் புரியும் பாவனையில் இரகசியமாக வந்து இருக்கும் போராளிகளில் உள்ள ஒருவன் மேல் காதல் வயப்படுகிறாள். இன்னொருவர் சற்று முதிய மனிதர் தனிக்கட்டை தனியே வாடியமைத்து வாழ்கிறார். இவருடன் புலம்பெயர்ந்து வந்து அந்த கிராமத்து மக்களிடையே ஐக்கியமாகிவிட்ட இன்னொரு தனிமனிதன் மட்டக்கிளப்பான். இந்த பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்வில் யுத்தம் குறிப்பாக கடற்படை ஏற்படுத்தும் அனர்த்தங்கள், கிராமத்து மக்கள், தமக்கிடையில் கொண்டுள்ள உறவுகள், முரண்கள், போராளிகளுடனான அவர்களது பிணைப்புகள் இவைதான் இப்படத்தின் கதை. பல்வேறு முரண்களுடன் நெருக்கடிகளுடன் வாழும் இந்த மனிதர்களுடன் பம்பலாக வாழ்ந்த இளைஞர்கள் திடீரென காணாமல் போவதும் அவர்கள் தமக்காக மரணித்தார்கள் என்ற நிதர்சனமும் அவர்களை விழிப்படையவைக்கிறது. தேடிச்சோறு நிதமும் திண்டு பல சின்னஞ் சிறுகதைகள் பேசிக்கூடிக் கிழப்பருவம் எய்யும் வேடிக்கை மனிதராய் தாம் வாழ்கையில் தமக்காய் சிலர் மரணிப்பது எல்லாவற்றையும் கடந்தது. அவர்களை ஒற்றுமைப்படுத்துகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் தமக்காய் மரணித்த அந்த இளைஞர்களுடன் ஏதோவொரு விதத்தில் உறவுடையவர்கள். இறுதிக் காட்சியில் அவர்கள் இணைந்து வருவது இதையே குறிக்கிறது.. நிஜத்தில் எப்படியோ? ஆனால் திரைப்படப்படைப்பில் கேசவராஜன் என்ற கலைஞன் தன்னலங்களற்ற ஒரு சமூகத்தையே கனவு காண்கிறான். திரைக்கதையமைப்பும் இந்தப் படத்தை பொறுத்தவரையில் வெற்றியென்றே சொல்லவேண்டும். இன்னும் கறாறாகச் சொன்னால் இத்திரை ஓவியத்தின் வெற்றிக்கு மூலகாரணமே அதன் தெளிவான திரைக்கதை அமைப்புத்தான். அதே நேரத்தில் வித்தியாசமான திரைக்கதை அமைப்பும்கூட. பல்வேறு பிரிவினரின் கதைகளையும் தனித்தனியே அதற்கேயுரிய முக்கியத்துவத்துடன் சொல்லியும், அதேவேளை அதன் மைய இழை பிசகாமலும் சொல்லப்பட்டிருக்கிறது. கதாநாயகன், நாயகி அல்லது சில முக்கியபாத்திரங்கள் என்றமைய நேர்கோட்டு முறையில் கதை சொல்லப்படாமல் இருப்பது இதன் விசேசம். இதில் எல்லாப் பாத்திரங்களுமே முக்கியத்துவமானவை தான். இந்த வித்தியாசமான அணுகுமுறையினால்தான் இயக்குநர் தானொரு சிறந்த படைப்பாளியாகவும், கலைஞனாகவும் முத்திரை பதிக்கிறார்.
நடிப்பு, நடிகர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அந்தந்த பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஒப்பனை பூசிய முகங்கள் இல்லாமல் நாம் சந்திக்கும் நமது சமூக மனிதர்களாகவேயுள்ளார்கள். நடிகர்களுக்கு ஏற்ற பாத்திரங்களைத் தேடாமல், பாத்திரங்களுக்கேற்ற நடிகர்களை தேடியிருக்கிறார் இயக்குநர். அதில் வெற்றியும் கண்டுள்ளார். நண்பர்களை (சகபோராளிகளை) மக்களை நேசிக்கும் 'நீதி' என்ற அந்தப் போராளியின் பாத்திரம் கச்சிதம். நகைச்சுவை இரட்டையர்களாக வரும் அந்த வெற்றுடம்பு மனிதர்கள் இருவரின் நடிப்பும் சற்று மிகையாக தோன்றினாலும் அது தேவையான ஒன்று என்றே கருதுகின்றேன். ஏனெனில் எல்லாமே இயல்பு யதார்த்தப் பாணியில் அமைந்திருந்தால் அது வரட்சியாகத் தானிருக்கும். அதேவேளை அது எல்லைகடந்தால் கேலிக்கூத்தாகவும் போய்விடும். இது அவர்களின் நடிப்பில் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. கடலில் கடற்படையிடம் சிக்கி அந்த இரு நண்பர்களும் மரணத்தின் தறுவாயில் நிற்கையில் தனது நண்பனை கடலில் தள்ளி 'தப்பிப்போ' என்று கூறிவிட்டு தான் மரணத்தை எதிர்கொள்கிறான் அந்த 'மட்டக்கிளப்பான்'. கோமாளிகளாகவும், நாடோடிகளாகவும் வாழ்ந்த அந்த மனிதர்களின் நட்பு நம்மை நெகிழச் செய்கிறது. அவனது மரணமும் தற்கொடை போராளிக்கு குறைந்ததல்ல. அதேபோல போராளி நண்பர்கள் தாங்கள் தற்கொடைத் தாக்குதலுக்கு போகும் பொழுது நீதியை மட்டும் 'நீ பஞ்சிபிடிச்சவன்', 'உனக்கு உது சரிவராது நீ இரு நாங்கள் போறம்' என அவனைத் தவிர்த்துவிட்டு போவது ஒன்றும் தற்செயலானது அல்ல. அது அவர்கள் அவன் மேல் கொண்ட நட்பாலும், பாசத்தாலும் நேர்வது. சகமனிதர்களை நேசிக்கும், நகைச்சுவை உணர்வு நிரம்பிய, எதிரியை கூட மனிதாபிமானத்துடன் கவனிப்பதோடு அவனுக்கு சிகரட் வேண்டிக்கொடுக்கும் நீதிதான் எதிரிகளை அழிக்க தற்கொலைப் போராளியாகவும் செல்கிறான். இதுதான் வாழ்வின் முரண். இந்த பாத்திரப்படைப்புக்கள் மூலம் தற்கொலைப்போராளிகள் பற்றிய இறுக்கமான பார்வைகள் தகர்த்தெறியப்பட்டிருக்கிறது.
காதலையும் கூட அந்தந்த மண்வாசனைக்கேற்ப அந்தந்த வெளிப்பாட்டு வடிவங்களுடன் வெளிப்படுத்தும் போதுதான் அதுகூட உயிரோட்டமான கலைப்படைப்பாகிறது. காதலிக்கும் இரண்டு ஜோடிகளில் ஒன்று கைகூடுகிறது. மற்றது இனிய நினைவாகவே நின்று விடுகிறது. குடிதண்ணீர் எடுக்கச்செல்லுமிடம் காதலர் சந்திக்கும் இடங்களாகவும், முதல் சம்பாத்தியத்தில் காதலிக்கு காப்பு, சட்டை வாங்கித் தருவதும் காதலை வெளிப்படுத்தும் மண்ணின் அடையாளங்கள். பழங்காலத்தில் காதல்விடுதூது புறாக்கள் என்றால், நவநாகரீக சமூகத்தில் ஈமெயில் என்றால் கடலோரக் காதலர்களுக்கு நண்டு விடுதூது. இயக்குநரின் முத்திரைகளுக்கு இப்படி ஏராளமான காட்சிகளைச் சொல்லலாம்.
ஒளிப்பதிவை செய்துள்ள கிருபாவின் தனித்தன்மை படம் முழுவதும் காட்சிகளாய் விரவியுள்ளது. கடலுக்கும் கடல் சார்ந்த கிராம மக்களுக்குமிடையிலான உறவும் பிணைப்பும் உயிரோட்டமானது. தமிழீழத்தின் அழகான அந்த கடலையும் அந்த கிராமத்தையும் அதன் மக்களையும் அவற்றுக்கிடையிலான உறவையும் தனது மாறுபட்ட ஒளிப்பதிவுக் கோணங்களினாலும் காட்சிகளினாலும் உயிரோட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஒளி இயக்குநர் கிருபா. இதன் மூலம் படத்தின் பல பாத்திரப்படைப்புகளினூடே கடலையும் ஒரு பாத்திரமாக உலாவ விட்டிருக்கின்றார். யுத்தகாலங்களில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வது ஆபத்தானது.
ஆழ்கடலுக்கு செல்வதை "உயரப்போவது" என்கிறார்கள் அவர்களது வட்டாரமொழி வழக்கில். அப்படி 'உயரப் போபவர்கள்' எந்நேரமும் கடற்படையினரின் நரவேட்டைக்கு பலியாகலாம். அவர்களின் பிடியிலிருந்து தப்பிப்பது கடினம். தனது சுயஉழைப்பில் முன்னேறத் துடிக்கும் சம்மாட்டியாரின் மகன் பலர் தடுத்தும் கேளாமல் உயரப்போகிறான். உயரப் போனால் தான் நிறைய மீன்பிடிக்கலாம். அப்படி உழைத்தால் தான் தன் காதலியின் குடும்பம் தனது தகப்பனாரிடம் பட்ட கடனை அடைக்கலாம். அன்றும் ஒருநாள் மீனவர்கள் கடலுக்கு செல்கிறார்கள். சம்மாட்டியார் மகன் உயரப்போகிறான். நேவி கலைக்கிறான். பலரும் தப்பினோம் பிழைத்தோம் எனக் கரை திரும்புகிறார்கள். சம்மட்டியார் மகன் மட்டும் வரவில்லை. எல்லோர் முகங்களிலும் தவிப்பு. மறுநாள் அதிகாலை கடற்கரையில் எல்லோரும் காணாமல் போனவர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கமரா எல்லோர் முகங்களையும் ஊடுருவி அதன் உணர்வுகளை நமக்கு காட்டுகிறது. முரட்டு சுபாவமுள்ள சம்மாட்டியார் முகத்திலும் புத்திரசோகம். ஆனாலும் அதைக் காட்டிக்கொள்ளாத 'அவன் எப்படியும் வருவான்' என்ற உறுதியான நம்பிக்கை. காதலியின் முகத்தில் இனம்புரியாத தவிப்பு. கமரா உயரே நோக்கி வானத்தைப் பார்க்கிறது. அதிகாலை இருளில் கடற்பறவைகள் மேலே வட்டமிடுகின்றன. ஒருவிதமான மரண ஓலத்தை காட்டும் பறவைகளின் ஒலியுடன் கூடிய பின்னணி இசை. நாமும் அவர்களுடன் சேர்ந்து பரிதவிக்கிறோம். திடீரென சம்மாட்டியாரின் மகன் மீண்டு வருகிறான். நமக்கும் 'அப்பாடா!' என்றிருக்கிறது. இப்படியாக பலகாட்சிகளை நாம் உற்று நோக்கலாம். இசையமைப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளரின் தனித்திறமைக்கும் ஒன்றினைந்த செயல்பாட்டிற்கும் பொருத்தமான கூட்டிணைவு.
இசையமைப்பாளர், பின்னணி இசையால் தனது படைப்பாற்றலையும் வெளிப்படுத்தியிருக்கிறார். வசதிகுறைந்த தொழில்நுட்பத்துடனும் இவ்வளவு தூரம் உழைத்திருப்பது பாராட்டத்தக்கதே.. இருப்பினும் பாடல்களில் அவரது தனித்துவம் வெளிப்படவில்லை என்றே சொல்லவேண்டும். ஆயினும் ஒரு படைப்பாற்றலுள்ள பின்னணி இசைக்கலைஞனாக வளர்வதற்கான சாத்தியங்களை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக நகைச்சுவைக் காட்சிகளுக்கு இசைப்பிரியனின் இசைதான் மெருகூட்டுகிறது.
கதை வசனத்தைப் பொறுத்தவரையில் பல பாத்திரங்கள் உரையாடும் பேச்சு மொழி நமக்கு புரிவதற்கு சற்று சிரமமாக இருந்த போதும், வசனங்களைக் குறைத்து காட்சிப்படுத்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதினால் அவர்களின் உணர்வுகளுடனும், உணர்ச்சிகளுடனும் நாமும் ஒன்றிக்கிறோம். பக்கம் பக்கமாக வசனங்களைப் பேசி வீடியோ நாடகமாக மாற்றாமல் இதனை ஒரு சினிமாவாக ஆக்கியிருப்பதன் மூலம் ஒரு இயக்குநர், வசனகர்த்தா என்றவகையில் கேசவராஜா வெற்றிபெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஆனால் இடைக்கிடை பேச்சுவழக்கில் இருந்து திடீரென எழுத்து நடைக்கு (இலக்கணபாணி) மாறிப் பாத்திரங்கள் உரையாடுவது உறுத்தலாகவேயுள்ளது. உதாரணமாக மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்கான பெண்போராளிகளின் உரையாடல், மற்றும் சம்மட்டியாரின் மகனுடைய காதலியின் குடும்பத்துடன் சண்டைக்கு நிற்கும் போது போராளிகளின் உரையாடல் போன்ற காட்சிகளைக் குறிப்பிடலாம்.
படத்தின் கதையோட்டத்தை குழப்பியடிக்காமலும், காட்சிகளின் தொடர்பினை உறுத்தாவண்ணமும் செய்யப்பட்டுள்ள படத்தொகுப்பில் சில தொய்வான காட்சிகளையும், நீண்ட பாடல்காட்சிகளையும் வெட்டிச் சுருக்கியிருந்தால் படத்திற்கு இன்னமும் விறுவிறுப்பும், செறிவும் கூடியிருக்கும். பிரச்சாரப்பாணியில் அமைந்த காட்சிகளையும், போராளிகளின் கடல் சாகசக்காட்சிகளையும் தவிர்த்திருந்தால் இதன் கலை ஆளுமை இன்னமும் சோபித்திருக்கும். சில சமரசங்களின் நிமித்தம் இயக்குநர் இந்த காட்சிகளை சேர்த்திருந்த போதும் அவை திரைக்கதை ஓட்டத்துடன் ஒட்டாமலே தனித்து நிற்கிறது. உண்மையில் மேற்படி சாகச காட்சிகளைவிட போராளிகளின் வாழ்வை திரைக்கதையோட்டத்துடன் பொருந்தும்படி சொல்லியிருக்கும் காட்சிகள் அழுத்தமானவை. உணர்வு ரீதியானவை. மாறாக உப்பு தாராளமாகக் கிடைக்கிறது என்பதற்காக அதை அளவுக்கு மீறிச்சேர்ப்பது உணவையே கெடுத்துவிடும் என்பது இயக்குநர் கேசவராஜனுக்கு தெரியாததல்ல.
எது எப்படியிருப்பினும் இயக்குநர் கேசவராஜனும் அவரது அணியினரும் தமது உழைப்பில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். விமர்சகன் என்ற நிலைக்கு அப்பால் ஒரு ரசிகனாக, வாசகனாக சோகம், துக்கம், மகிழ்ச்சி, அழுகை, உணர்வைத் தொடுதல் என எல்லாமுமாக என்னை ஆட்டி வித்ததினால் அவர்கள் சாதித்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்களின் சாதனைகள் தொடர வேண்டும். பொ.தாசன் போன்ற படைப்பாளிகளின் பணியினை இவர்களால் ஈடுசெய்ய முடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. இந்த திரைப்படம் தமிழீழ சினிமாவுக்கு நல்ல முன்மாதிரியாகவும் திகழப்போகிறது. இதன் வழியே தமிழ் சினிமாவை தரணியின் தரத்துக்கு தமிழீழச் சினிமா உயர்த்தும் என நம்புவோம்.
நன்றிகள்:
ஈழநாதம்-2003.07.25 (வெள்ளிநாதம்) - பக். 16
ஈழநாதம்-2003.08.01 (வெள்ளிநாதம்) - பக். 17
https://tamileelamarchive.com/wp-content/uploads/2019/09/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2003.07.25-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.pdf
https://tamileelamarchive.com/wp-content/uploads/2019/09/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2003.08.01.pdf