பாகம் - 1 தனிநாடு கோரப்படுகிறது:- ஈழத் தமிழர்க்கொரு தனி நாடு வேண்டும் என்று முதன் முதலில் கோரியவர் சிலோன் நாடாளுமன்றத்தில் டி.எஸ். சேனனாயக்காவின் முதலாவது அமைச்சரவையில் பதவி வகித்த செ. சுந்தரலிங்கம் ஆவார். இவர் செப். 8, 1947 தேர்தலில் வவுனியாவில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றவராவார் [5.1] [1.1]. இவரைப் பற்றிய சிறு முன்குறிப்பு யாதெனில், இவர், டி.எஸ் சேனநாயக்காவின் அமைச்சரவையினுள் அமைச்சர் பதவி ஆசை காட்டப்பட்டு உள்வாங்கப்பட்டவராவார்; வணிகம் மற்றும் பண்டமாற்று அமைச்சு வழங்கப்பட்டது [5.1]. தமிழரை நிகராளித்துவப்படுத்தி இவர் சிறிலங்கா சுதந்திரம் அடைவதற்கு டி.எஸ் சேனநாயக்காவிற்கு ஆதரவு அளிப்பதை தமிழரசுக் கட்சியினர், எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில், கடுமையாக எதிர்த்தனர் [1.2]. இருப்பினும் தனது ஆதரவை சிங்களவருக்கு கொடுத்து சிங்கக் கொடியேறுவதற்கு வழி வகுத்தார் [2]. பின்னர் தனது தவறையுணர்ந்தோ என்னவோ மார்ச் 3, 1951 இல் சிங்கக் கொடி ஏற்றப்பட்டதிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இவர் தனது பதவியைத் துறந்தார் [5.2]. இவர் மீண்டும் 1952 நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றார் [6]. இத்தேர்வின் போது கிடைத்த ஆசனத்தைக் கொண்டுதான் பிரிவோம் என்பதை அறிவித்தார்! 'அடங்காத் தமிழர்' செ. சுந்தரலிங்கம் | படிமப்புரவு: விக்கி இவர் 1956ம் ஆண்டு சூன் மாதம் 24ம் திகதி, தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து சிலோன் நாடாளுமன்றத்தில் செய்த அரியணை உரையின் உச்சக்கட்டத்தின் போது எமக்கான தனி நாடு உருவாக்கப்படல் வேண்டும் என்றார்[4]. தனிச் சிங்களச் சட்டம் இயற்றப்படும் மாற்றங்கள் நடக்குமாயின், தமிழ் மொழிபெயர்ப்பு: "சிலோனில் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட "தமிழ் இலங்கை" என்ற தனியான பந்தப்படா(independent) தன்னாட்சி நாடு பொதுநலவாய நாடுகளுக்குள் உருவாக்கப்படல் வேண்டும்" என்றார், ஆங்கிலத்தில்[4]. இதன்மூலமே தான் முதன் முதலில் எமக்கு தனி நாடு வேண்டும் என்றும் அறிவித்தார். தனிநாட்டிற்காக குழுசேருமாறு முதலில் அழைத்தவர்:- இத்துடன் தனிநாட்டிற்காக குழுசேருமாறு தமிழர்களிற்கு முதலில் அழைப்புவிடுத்தவரும் செ. சுந்தரலிங்கம் ஆவார். இவர் 1962ம் ஆண்டு மே மாதம் 19/20ம் திகதி நடைபெற்ற வெசாக் பண்டிகை நாளன்று அவர் வெளியிட்ட 'EYLA THAMILS! DEDICATE YOURSELVES FOR A FREE INDEPENDENT THAMIL NATION-STATE OF EYLOM' என்ற தலைப்பிலான கடிதத்தின் உள்ளடக்கத்தின் இறுதிப் பந்தியில் கீழ்வருமாறு எழுதியுள்ளார் [3.1]. தமிழ் மொழிபெயர்ப்பு: இழந்த எழுவுதியை (liberty) மீண்டும் பெறும் வரை, பரியான (free), பந்தப்படா (independent), தமிழ் தேச ஈழ அரசின் காரணியத்தையும் செழுமையையும் மேம்படுத்தும் பணிக்கடத்திற்கு நம்மை நேர்ந்தளித்துக்கொள்வோம் என்ற ஒரு முறைசாரானதும் கண்ணியமானதுமான தீர்மானத்திற்கு அனைத்து தமிழர்களும் குழுசேருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அழைத்தது மட்டுமின்றி 1958இல் வவுனியாவின் எல்லைகளிலிருந்த தமிழ் சிற்றூர்களினுள் சிங்களவர் ஊடுருவுவதைத் தடுக்க தமிழரை திரட்டி சிங்களவருக்கு எதிராக சண்டைக்கு களமிறக்கியதும் இவரே ஆவார். தமிழருக்கு வேட்டைச்சுடுகலன்களை இவர் வழங்கியதாக கூறக்கேள்வி. அதற்காக இவர் 'அடங்காத் தமிழர் முன்னணி' என்றவொரு அமைப்பையும் தோற்றுவித்திருந்தாராம். இதன் மூலம் தான் இவருக்கு "அடங்காத் தமிழன்" என்ற பட்டமும் கிடைக்கப்பெற்றதாக கருத்தப்படுகிறது. இதன் பின்னர் 1959 இல் 'ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி' என்றவொரு தேர்தல் திணைக்களத்தில் பதியப்படாத அரசியல் கட்சியினையும் தோற்றுவித்தார். தனிநாட்டிற்காக சண்டைக்கு வருமாறு முதலில் அழைத்தவர்:- தனிநாட்டிற்கான சண்டைக்கு வருமாறு தமிழர்களிற்கு முதன் முதலில் அறைகூவல் விட்டவரும் செ. சுந்தரலிங்கமே ஆவார். "Eylom: Beginning of the Freedom Struggle; Dozens Documents" (1967) என்ற நூலின் பின்குறிப்பில் [3.2] இல் இவ்வாறு எழுதியுள்ளார்: தமிழ் மொழிபெயர்ப்பு: சிலோனின் பிரிவினைக்கும் 1802 ஆம் ஆண்டு அமியன்ஸ் உடன்படிக்கைக்கு முன்னரிருந்த தமிழ் அரசை மீட்டெடுப்பதற்குமான நேரம் வந்துவிட்டது என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ளும் ஈழத் தமிழர்களை, ஈழத் தமிழ் தேசத்தின் பரியுடைமையானதும் (freedom) பந்திலாமையானதுமான (Independence) சண்டைக்கு சேர முன்வருமாறு அழைக்க முன்மொழிகிறேன். 'கிளாப்' என்பவர் வகைப்படுத்திய 17 வகையான நாயகன்களில் இவரை "குமுகாய மரபொழுங்குக்குப் புறம்பானவர்"/Bohemian என்று எழுதுவினைஞர் சச்சி சிறிகாந்தா அவர்கள் ஈழத்தமிழர் வரலாற்றில் வகைப்படுத்தினார், தனது நூலான "The Pirabhakaran Phenomenon" இல் [7.1]. எனினும் இவர் "தேசத் தந்தை" எனப்படாமைக்கு இவர் செய்த ஊத்தை நாச வேலைகளே காரணமாகும்! உசாத்துணை: The Fall And Rise Of The Tamil Nation (1995) - V. Navaratnam Chapter 2 pg. 41-42 It Happened 65 Years Ago: When two independent Tamils pawned Eelam rights - Sachi Sri Kantha, October 12, 2012 Eylom: Beginning of the Freedom Struggle; Dozens of Documents (1962) - C Suntheralingham EYLA THAMILS! DEDICATE YOURSELVES FOR A FREE INDEPENDENT THAMIL NATION-STATE OF EYLOM The Prophesy of Mr. C. Suntheralingham, December 20, 1963 - Pg 72-73 C. Suntharalingam - Reminiscences - Prof. Bertram Bastiampillai - Ceylon Daily News - 20 August 2005 Sri Lanka: The Untold Story - K T Rajasingham Chapter 12: Tryst with Independence Chapter 14: Post-colonial realignment of political forces 1952 Election Result The Pirabhakaran Phenomenon - Sachi Sri Kantha Part 53 ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்