கஸ்டம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. அந்த நாட்களில் புலம்பெயர்வு என்பது போரின் பின்னணியில்தான் இருந்தது. இன்று போல இலவச தொலைத்தொடர்பு வசதிகள், சமூக ஊடகங்கள் எதுவும் இல்லை. ஊரில் ஏதாவது நிகழ்ந்தால், வேலை முடிந்தவுடன் பதற்றத்தோடன் ஓடி வந்து தொலைபேசியில் ஊருக்குப் பேசினாலே, அந்த மாத சம்பளத்தில் பாதி போய்விடும். அவசரத் தேவை என்று அவர்கள் கேட்டு பணம் அனுப்பினால், “எங்கடை வீட்டுக்கு அவசரத் தேவை ஒன்றும் கிடையாதுதானே” என்ற முணுமுணுப்பு இங்கே வந்துவிடும். முதல் புலம் பெயர்ந்தவர்கள், எப்போதும் நாட்டில் உறவுகளுடன் ஒட்டியே இருந்தார்கள். ஊரில் இருந்த உறவுகளின் வாழ்வாதாரத்தை இவர்களே பார்த்துக் கொண்டார்கள். இங்கே பிள்ளைகள், குடும்பம், அங்கே உறவுகள் எல்லாவற்றுக்குமாக முழு நேரம், பகுதி நேரம் என வேலைகள் செய்தார்கள். ஓய்வில்லை, பொழுது போக்குகள், விளையாட்டுக்கள் எதுவுமேயில்லை. வாழும் நாட்டவர்களோடு பழக முடியவில்லை. வாழும் நாட்டின் பழக்க வழக்கங்களுடன் ஒன்றிப் போக முடியவில்லை. தன் வரம்புக்கு மீறிய சுமைகள். அதைச் சுமந்து நடந்த கால்கள், இன்று தள்ளாட வைக்கிறது. அநேகருக்கு முழங்கால் முக்கிய பிரச்சினையாகிப் போனது. இலங்கையரின் பாரம்பரிய நீரழிவு நோயும் சேர்ந்து கொண்டிருக்கிறது. உடல் உழைப்பும், மன அழுத்தமும் சேர்ந்து இன்று அவர்களுடைய உடல்நலத்தை பாதித்திருக்கிறது. மூட்டுவலி, நீரழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவை (முதல் புலம் பெயர்ந்தவர்கள்) பலருக்கு இன்று சாதாரண நிலையாகவே போய்விட்டன. மகனோ? மகளோ? ‘இனி உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்’ என இவர்களால் ஒதுங்கிப் போக முடியவில்லை. ஏனென்றால் இன்னமும் இவர்கள் தங்களது வடிவத்தை விட்டுக் கொடுக்காமல் பாரம்பரியம், பண்பாடு பேணுகிறார்கள். அதனால், முகநூலில் அவர் குறிப்பிட்டது போல் பிள்ளைகளும் தங்களது தேவைகளுக்கு இவர்களை இலகுவாகப் பயன்படுத்த முடிகிறது. நீங்கள் குறிப்ப்பிட்ட பணப் பிரச்சினை எல்லா இடத்திலும் இருக்கிறது. யேர்மனியில் ஓய்வூதியம் பெற வேண்டுமாயின் 67 வயதுவரை உழைக்க வேண்டும் 45 வருடங்கள் வேலை செய்திருந்தால் மட்டுமே வெட்டுக்கள் கொத்துக்கள் இல்லாமல் முழுமையான பென்சன் கிடைக்கும். வாழ்வாதாரத்துக்கு வரும் பென்சன் காணாது என்று சமூகநல உதவி கேட்டால் சொத்துக்களை காட்டு என்பார்கள். கடந்த பத்து வருடங்களில் சொத்துக்கள் விற்கப்படனவா? அல்லது மாற்றப்பட்டனவா? என்பதைச் சொல்லவும் வேண்டும். 80களில் வந்தவர்களில் ஓரளவு வயதில் முதிர்ச்சியாக இருந்தவர்களால் நல்ல பென்சன் எடுக்க வாய்ப்பில்லை. நான் யேர்மனிக்கு வந்த போது யாருமே எனக்கு முன்னர் அறிந்தவர்களாக இருக்கவில்லை. வழிகாட்ட யாரும் இருக்கவில்லை. பின்னாட்களில் வந்தவர்களுக்கு அந்த நிலை இல்லை. சொல்லித் தரவும் உதவிகள் செய்யவும் யாராவது இருக்கிறார்கள். எங்கள் வாழ்க்கையை மிக அடிமட்டத்தில் இருந்தே கட்ட எழுப்ப வேண்டி இருந்தது. இந்த நிலை அடுத்த சந்ததிக்கு இல்லை. அவர்களுக்கு ஏதும் தேவையென்றால் உடனே கண்ணுக்குத் தெரிபவர்கள் பெற்றோர்கள்தான். ஆக தொல்லைகளும், சுமைகளும் தொடரத்தான் செய்கின்றன. கோசன் சார் மொழி தெரியாது எழுந்து நின்று முழித்த கதையொன்றை போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறேன். அப்பொழுதெல்லாம் அகதியாகப் போன தமிழர்களுக்கு நல்ல வாழ்க்கை சுவிஸ் நாட்டில் இருந்தது. யேர்மனியில் இருந்த தமிழர்களில் சிலர் அங்கு போவதற்கு களவாக ரயிலில் பயணிப்பார்கள். இரவு இரயிலில் பயணிகளின் சீட்டுக்கு அடியில் படுத்துக் கொண்டால் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஒரு தடவை நம்மவர் ஒருவர் சீட்டுக்கு அடியிலே படுத்திருந்தார். அவர் படுத்திருந்த பெட்டிக்குள் வந்த ரிக்கெற் பரிசோதகர், “மோர்கன்” எனச் சொல்லிக் கொண்டு அங்கிருந்தவர்களின் ரிக்கெற்றை பரிசோதித்துக் கொண்டு வந்தார். திடேரென பயணிகளின் கால்களை விளக்கிக் கொண்டு நம்மவர் வெளியே வந்து எழுந்து நின்றார். பயணிகளும், பரிசோதகரும் திகைத்து நின்றிருந்தார்கள். (Guten) Morgen என்றால் காலை வணக்கம். ஆனால் கீழே படுத்திருந்த நம்மவருக்கு, எப்படி என் பெயர் ரிக்கெற் பரிசோதகருக்குத் தெரிந்தது? யாரோ போட்டுக் கொடுத்து விட்டார்கள். அது யாரா இருக்கும்? என்ற கேள்வி. அவரின் பெயர் மோகன்.