1993 கார்த்திகை மாதம். உயர்தரம் எழுதிவிட்டு பெறுபேற்றிற்காகக் காத்திருந்த காலம். கொழும்பு தெகிவளையில் அமைந்திருந்த மயோன் கம்பியூட்டர் நிறுவனத்தில் புலமைப் பரிசிலூடாக ஒரு வருட காலம் கற்கை நெறி ஒன்றை மேற்கொள்ளும் தகுதி பெற்றிருந்தேன். எனது வகுப்பில் ஆண்களும் பெண்களுமாக சுமார் 15 அல்லது 16 மாணவர்கள் இருந்தார்கள். தமிழர்கள், முஸ்லீம்கள் என்று ஆண்களும் பெண்களும். இவர்களுள் ஒரு சிலருடன் உடனடியாகவே நட்பாகிப் போய்விட்டேன். மலர்மன்னன் (என்னுடன் உயர்தரத்தில் சில டியூஷன் வகுப்புகளுக்கு வந்ததனால் முன்னரே பழக்கமானவன்), மதியக்கா(உடுப்பிட்டி), கலா அக்க (சிலாபம்), பைரூஸ் (புத்தளம்), சிவா (காரைநகர்) என்று விரல் விட்டு எண்ணக் கூடிய சில நண்பர்கள். இவர்களுள் மலர் மன்னனும், பைரூஸும் என்னூடன் மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள். வகுப்புக்கள் முடிந்த நேரங்களுள் இவர்களுடன் ஊர்சுற்றுவதே வழமையாகிவிட்டது. பைரூஸ் பாணதுறையில் இருந்தே கொழும்பிற்கு வந்து போவான். மலர்மன்னன் கொட்டாஞ்சேனையில் வசித்து வந்தான். மலரும், பைரூஸும் இயல்பாகவே கவிதை எழுதுவதில் வல்லவர்கள். வைரமுத்து, கவிக்கோ எழுதிய கவிதைகளை எனக்கு அடையாளம் காட்டி கவிதைகளில் ஈடுபாட்டினை உருவாக்கித் தந்தவன் பைரூஸ். அவன் தமிழ் எழுதுவது அச்சியந்திரத்தில் எழுதப்பட்டதுபோல அழகாயிருக்கும். விரயமாகும் வேளைகளில் ஏதோவொரு தலைப்பிற்குக் கவிதை எழுதுவோம். பைரூஸ் எழுதும் கவிதைகள் இரு வரிகளில் ஹைக்கூ வடிவத்தில் பளிச்சென்று பற்றிக்கொள்ளும். மலர் மன்னனும் அப்படித்தான். இப்படிச் சென்று கொண்டிருந்த நாட்களில் நான் கொழும்பிலிருந்து வெளிவரும் சரிநிகரில் எழுதத் தொடங்கியிருந்தேன். ஒரு முறை இந்தியப்படை ஈழத்தமிழர்களுக்கு தியாகங்களைப் புரிந்தது என்று மாலன் எனும் பெயரில் வெளிவந்த கட்டுரைக்கு நான் எழுதிய எதிர்வினையினை சரிநிகர் அப்படியே பிரசுரித்திருந்தது. அதனை நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆகவே அதுபற்றி நான் பைரூஸுடனும், மலருடனும் பேசும்போது வெகுவாகவே பாராட்டியிருந்தார்கள். ஒரு நாள் தனது கதைபற்றி பைரூஸ் பேசிக்கொண்டிருக்கும்போது, தனது தகப்பனார் ஒரு தமிழ் ஆசிரியர் என்றும், மன்னாரில் அவர்கள் வசித்து வந்தார்கள் என்றும், புலிகள் வெளியேறச் சொல்லி அறிவித்ததன் பின்னர் கையில் அகப்பட்ட ஒரு சில உடைகளோடு தாம் கிளம்பி புத்தளத்திற்கு வந்ததாகக் கூறினான். தமிழரின் விடுதலைப் போராட்டம் குறித்து ஆதரவான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்த அவன் புலிகளின் தாக்குதல்கள் குறித்து நானும் மலரும் கிலாகித்துப் பேசும்போது தவறாமல் அவனும் கருத்துப் பகிர்வான். ஆகவே, அவன் முன்னால் எமது விடுதலைப் போராட்டம் குறித்துப் பேசுவது எமக்குச் சிரமாமாக இருந்ததில்லை. ஒருமுறை அவனது வெளியேற்றம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது முதன்முறையாக அவனது இடத்தில் இருந்து அவ்வெளியேற்றத்தினை என்னால் உணர முடிந்தது. ஆகவே அன்றிரவு வட மாகாணத்திலிருந்து முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றியதுபற்றி சரிநிகரில் எழுதுவதென்று தீர்மானித்தேன். முதன்முறையாக புலிகளுக்கெதிராக என்னால் முன்வைக்கப்பட்ட விமர்சனம் அது. முஸ்லீம்களை எதற்காக அன்று வெளியேற்றினார்கள், வெளியேறும்போது எவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன, எத்தனை முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டார்கள் என்கிற எதுவித தெளிவும் இன்றி என்னால் அந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஏனென்றால் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட காலத்தில் நான் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை. 1988 இற்குப் பின்னர் அங்கு வாழ்ந்ததுகூடக் கிடையாது. ஆகவே வெளியேற்றம் குறித்த சரியான பார்வையின்றி என்னால் அந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே சரிநிகரும் எந்தத் தணிக்கையும் இன்றி அதனைப் பிரசுரித்தது. பைரூஸுடன் அக்கட்டுரை பற்றி பகிர்ந்துகொண்டேன். உணர்ச்சி மேலீட்டால் கண்கலங்கிய அவன், அக்கட்டுரையினை எழுதியதற்காக எனக்கு நன்றி கூறினான். பின்னர் ஒருநாள் என்னிடம் வந்து எனது கட்டுரையினை அகதி என்ற பெயரில் வெளிவந்த முஸ்லீம்களுக்கான பத்திரிக்கை ஒன்றில் மீள் பிரசுரிக்க அனுமதியளிக்கிறாயா என்று கேட்டான். நானும் ஆமென்று கூறவே, அக்கட்டுரை மீளவும் பிரசுரமானது. இதனை அறிந்தபோது மலர்மன்னன் கொதித்துப் போனான். வெளியேற்றியது பிழை என்று உன்னால் எப்படிக் கூறமுடியும்? கிழக்கில் அவர்கள் எம்மை நடத்தும் முறை பற்றி நீ அறிந்திருக்கிறாயா? கொழும்பில் இருந்துகொண்டு, நீ நினைத்தபடி இப்படி எழுதியிருக்கிறாய் என்று கடிந்துகொண்டான். கல்முனை பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட அவனுக்கு 90 களின் ஆரம்ப காலப்பகுதியில் அங்கு இடம்பெற்ற தமிழ் மக்கள் படுகொலைகள், அவற்றில் முஸ்லீம் ஊர்காவற்படையினரின் பங்களிப்பு என்பன நன்கு தெரிந்தே இருந்தது. ஆகவே, நான் வெறுமனே புலிகளை விமர்சித்து எழுதியிருந்தது அவனுக்குக் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. எது எப்படியிருந்தபோதிலும், முஸ்லீம்களை வெளியேற்றியதில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. பேரினவாதத்தில் இருந்து விடுபட போராடும் ஒரு சிறுபான்மையினம், தன்னிலும் சிறுபான்மையான இன்னொரு இனத்தை பேரினவாதம் போன்று நடத்துவது சரியாகப் படவில்லை. அதனாலேயே அப்படி எழுத நேர்ந்தது. ஆனால் வெளியேற்றத்தின்பின்னர் அவர்களின் அரசியல்த் தலைமைகளும், ஊர்காவற்படையினரும், சாதாரண முஸ்லீம்களில் ஒருபகுதியினரும் நடந்துகொண்ட விதம் இதுபற்றித் தொடர்ந்து நான் பேசுவதை நிறுத்தி விட்டது.