ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் அவர்களுக்கும், எனக்கும் இன்று ஒரே விடயம் பற்றியே கவலை என்பதும், அத்துடன் நாங்கள் இருவரும் சிறிது நேரத்திலேயே இதை மறந்து விட்டு, எங்களின் அடுத்த வேலையை பார்க்க போய் விடுவோம் என்பதும் நம்ப முடியாத ஒற்றுமையாக இருக்கின்றது. எத்தனை எத்தனை காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஒரு நாட்டை இன்னொரு நாடு ஆக்கிரமிப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஒவ்வொரு ஆக்கிரமிப்பாளர்களும் இன்னும் அதிக அழிவுகளையும், அவலங்களையும் அன்றி வேறு எதையும் ஆக்கிரமிக்கப்படும் நாடுகளுக்கும், சமூகங்களுக்கும் வழங்குவதில்லை. அந்த நாடுகளின் வளங்களையும், செல்வங்களையும் சுரண்டுதல் அன்றி, இங்கு வேறு எதுவுமே ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கம் அல்ல. ஆக்கிரமிப்பை அந்த நாட்டு மக்களே விரும்பினார்கள், அந்த நாட்டின் அதிபர் ஒரு சர்வாதிகாரி, அந்த நாடு போதைப் பொருட்களை உற்பத்தி செய்கின்றது, அந்த நாட்டினால் எங்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து என்றெல்லாம் காரணங்களை இட்டுக் கட்டிக் கொண்டே ஒரு வலிய நாடு ஒரு மெலிய நாட்டை அடித்துப் பிடிக்கலாம் என்னும் மன்னர் ஆட்சி காலம் நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அடிமைத்தளையும், அடக்குமுறையும் சொல்லொணா துன்பங்கள். ஒவ்வொரு மனிதருக்கும் கிடைக்கும் ஒரேயொரு வாழ்வையும் இவை அழித்துவிடுகின்றன. இவ்வாறான ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக குரல் கொடுப்பதும், இவை எவ்வடிவில் வந்தாலும் அவற்றை ஆதரிக்காமல் விடுவதும், ஒவ்வொரு சாதாரண மனிதனும் நிச்சயம் செய்ய வேண்டியவை. ஐநா பொதுச் செயலாளரே அவ்வளவு தான் செய்கின்றார், அவரால் கூட அவ்வளவு தான் செய்யமுடியும்.