பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான பழங்குடி ஓவியரின் மனைவிக்கு அரசுப்பணி பட மூலாதாரம்,Getty Images நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குறும்பர் பழங்குடி ஓவியர் கிருஷ்ணன் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள நிலையில், அவரது மனைவிக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் கல்வியைத் தொடரவும் அரசு வழிவகை செய்துள்ளது. கடந்த ஆண்டில் கிருஷ்ணன் மறைந்துவிட்ட நிலையில், அவரின் குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கிருஷ்ணனின் மனைவி சுசீலா, ஒரு மகன், 3 மகள்களுடன், கிருஷ்ணனின் வெள்ளரிக்கோம்பையில் வசித்து வந்தார். கிருஷ்ணன் மறைவுக்குப் பின், பாதுகாப்பு கருதி, கல்லாறு அருகேயுள்ள புளியமரத்தூர் என்ற கிராமத்திற்கு அவரின் குடும்பம் குடிபெயர்ந்தது. சுசீலாவின் தாய், தந்தை, அங்குள்ள ஒரு பாக்குத்தோட்டத்தில் பணியாற்றி வந்தனர். அவர்கள் குடியிருப்பதற்கு அந்தத் தோட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்த குடிசை வீட்டில், சுசீலாவும் 4 குழந்தைகளும் வாழ்ந்து வருகின்றனர். சுசீலா அதே தோட்டத்தில் ரூ.300 கூலிக்கு பணியாற்றி வந்தார். இவர்களின் மூத்த மகள் வாசுகி, பிளஸ் 2 முடித்து விட்டு, உதகையிலுள்ள தனியார் பாரா மெடிக்கல் கல்லூரியில் பார்மஸி டிப்ளமோ படித்துவந்தார். ஆனால் அதற்கான கல்விக்கட்டணத்தைச் செலுத்த முடியாமல் வீட்டில் இருந்துவந்தார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் ராகுல், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள அரசு உண்டு உறைவிடப்பள்ளி விடுதியிலும், ஏழாம் வகுப்பு படிக்கும் கீதா, நான்காம் வகுப்பு படிக்கும் கீர்த்திகா ஆகிய இருவரும் நீலகிரியிலுள்ள அரசு உண்டு உறைவிடப்பள்ளியிலுள்ள விடுதியிலும் தங்கிப் படித்து வந்தனர். இந்நிலையில்தான் கிருஷ்ணனுக்கு கடந்த மாதத்தில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. தங்களின் குடும்ப நிலை குறித்து சுசீலா, பிபிசி தமிழ் உள்ளிட்ட ஊடகங்களிடம் பேசியிருந்தார். தன்னுடைய கல்வித்தகுதிக்கேற்ப அரசுப்பணி வழங்கவேண்டும், தனது மூத்த மகள் அவள் படித்த அதே கல்லூரியில் படிப்பதற்கும், மற்ற குழந்தைகள் கல்விக்கும் அரசு உதவ வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். அதன் விளைவாக, தமிழக அரசு சார்பில் கிருஷ்ணன் குடும்பத்தினரை நீலகிரி மற்றும் கோவை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அணுகினர். அவர்களுடைய விருப்பத்தின்பேரில், தற்போது நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள அரசு ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளியில் தோட்டப்பணியாளர் பணிக்கான ஆணையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா வழங்கினார். அதே பள்ளியில் அவர்கள் குடியிருக்க வீடும் ஒதுக்கப்பட்டுள்ளது. மூத்த மகள் வாசுகி, அவர் படித்து வந்த கல்லூரியில் டிப்ளமோ படிப்பில் தொடரவும், மற்ற 3 குழந்தைகளும் சுசீலா பணியாற்றும் அதே ஏகலைவா பள்ளியில் விடுதியில் தங்கிப்படிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பிபிசி தமிழிடம் பேசிய கிருஷ்ணனின் மனைவி சுசீலா, ‘‘எனது கணவர் இறந்தபின்பும் எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார். அவரால்தான் எனக்கு இந்த பணி கிடைத்துள்ளது. என் மூத்த மகள் வாசுகியை இந்த ஆண்டில் டிப்ளமோ பார்மஸி படிப்பில் தொடரவும், அடுத்த ஆண்டில் அவள் விரும்பியபடி பி.பார்ம் படிப்பில் இணையவும் நீலகிரி ஆட்சியர் ஏற்பாடு செய்திருக்கிறார்.’’ என்றார். மேலும் பேசிய அவர், ‘‘எனக்கு மாதம் ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் பணி ஆணை தரப்பட்டுள்ளது. இனிமேல் என்னுடைய 3 குழந்தைகளையும் நன்றாகப் படிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. எங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு வேண்டுமென்ற கோரிக்கையையும் அரசிடம் வைத்திருக்கிறோம். அதற்கும் ஆவன செய்வதாக ஆட்சியர் கூறியுள்ளார். வரும் 22, 23 ஆகிய நாட்களில் சென்னை ஆளுநர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் 15 பேருடன் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. அங்கே செல்கிறோம். ’’ என்றார். https://www.bbc.com/tamil/live/clyx48qxzddt?post=asset%3A3cb5d876-3db9-425e-bc74-55638be241d8#asset:3cb5d876-3db9-425e-bc74-55638be241d8