Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் இணையத்தின் பதினைந்தாம் அகவையை முன்னிட்டு சிறப்புப் பட்டிமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மாவீரர் மலரடிகள்பணிந்துகொண்டு..
 
யாழை அழகாக உருவாக்கி எம் கைகளில் தவழவிட்டிருக்கும் மோகன் அண்ணாவே,அயராது யாழுக்காய் உழைக்கும் இணையவன் அண்ணாவே,நிழலி அண்ணாவே,நியாணி அண்ணா/அக்காவே,நுணா அண்ணாவே..உங்களுக்கு தலைவணங்கி..
 
பட்டிமன்றத்துக்கு முட்டிமோதிவந்து முன்னால் உட்காந்திருக்கும் யாழ்கள ரசிகர்களே..உங்களுக்கே முதல் வணக்கம்..பின்னால் மேசையில் கண்ணைகட்டும் நித்திரையயும் பொருட்படுத்தாமல் இவ்வளவு நேரமும் குத்தென கதிரையில் உட்காந்திருக்கும் நடுவர்களே..எண்ணிலடங்கா வெற்றிபெருமிதத்துடன் கண்ணில் மகிழ்ச்சி பொங்க கால்மேல் கால் போட்டு உட்காந்திருக்கும் எனதணியினரே...எதிரே தலையை கவிழபோட்டுக்கொண்டு எப்படியே வெளியே போவது பட்டிமன்றம்முடிய என்று வெட்கத்தில் நாடியில் கைவைத்திருக்கும் எதிரணியினரே...எல்லோருக்கும் வணக்கம்..
 
 
முன்னாடி உரையாற்றும்போது வாத்தியார் அவர்கள் சொன்னார் "புலம்பெயர் வாழ்க்கை எல்லாம் ஒரு வாழ்க்கையா..?வெறும் இயந்திர வாழ்க்கை என்று"..நடுவர் அவர்களே..நீங்கள் ஒன்றைப்புரிந்துகொள்ளவேண்டும்..இயந்திரமில்லாமல் மனிதன் இந்தப்பூமி பந்தில் இவளவுதூரம் முன்னேறி இருக்க முடியுமா என்பதை சற்று சிந்தித்து பார்க்கவேண்டும்..ஏன் கனக்க வேண்டாம்..இங்கிருக்கும் நடுவர்களில் பெண் நடுவர் புட்டவிப்பதற்கு கூட ஒரு மெசின் வாங்கி தரும்படி தனது கணவனிடம் கேட்டிருப்பதாக அறிகிறோம்..இப்படி இயந்திரம் மனிதனின் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொன்றிலும் பின்னிப்பிணைந்துள்ளது..அப்படிப்பட்ட வாழ்க்கையில் மனிதன் இயந்திரம் போல் வேகமாக தனது வாழ்க்கை முறையை மாற்றிகொண்டிருக்கிறான்..அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறான்..வேலைக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் இடையில் சமப்படுத்தி வாழத்தெரியாதவர்கள்தான் இப்படிப்புலம்புவவர்கள் நடுவரே..இந்த வாழ்க்கை ஏன் ஊரில் மட்டும் இல்லையா..? 
 
வாத்தியார் அவர்கள் சொல்கிறார் "புலம்பெயர் நாடுகளில் காலையில் கணவன் ஒருபுறமும் மனைவி
இன்னொரு புறமும் வேலைக்குச் சென்றால் இரவு வீடு திரும்பும் வரை
கைத்தொலைபேசியில் தான்  அவர்கள் குடும்பம் நடாத்துகின்றார்கள்" என்று...ஊரில் எனது ஒன்றுவிட்ட அண்ணண் வீட்டில்,மச்சான் வீட்டில்,நல்லூரில் இருக்கும் பெரியப்பா வீட்டில்,வெள்ளவத்தையில் இருக்கும் சித்தப்பாவீட்டில்,வவுனியாவில் இருக்கும் ஒன்றுவிட்ட சகோதரிவீட்டில் என்று எங்கள் குடும்பத்தை சுற்றி இருக்கும் முக்கால்வாசிப்பேர் வீட்டிலும் உதவி அரசாங்க அதிபர் பணிமனையில்,பள்ளிக்கூடத்தில்,இன்சுரன்ஸ் கம்பனியில்,தனியார் வங்கியில்,சிங்கர் காட்சி அறையில்,மென்பொருள் நிறுவனம் ஒன்றில் என்று வீட்டில் இருவருமே வேலைக்கு செல்பவர்களாகவே இருக்கிறார்கள்...அவர்களிடமும் தொலைபேசிதான் இருக்கிறது..வேலை நேரங்களில் தொலைபேசியில்தான் பேசிக்கொள்கிறார்கள்..காலையில் வேலைக்கு போவவர்கள் மாலையில்தான் வீடு திரும்புகிறார்கள்..
 
இப்படித்தான் எல்லாரை சுற்றியும் மாற்றங்கள் அங்கு...வாழ்க்கை முறை அங்கும் மாறிவிட்டது..பிள்ளைகள் தாங்களே பள்ளிக்கு போகிறார்கள்..சிலர் வீட்டு வேலைக்கும் பிள்ளை பராமரிப்புக்கும் கூட ஆக்களை வைத்திருக்கிறார்கள்..உலகம் மாறிக்கொண்டிருக்கிறது..இதில் ஊர் மட்டும் அப்படியே இருக்கிறது என்று வெளியபோக குளிருக்கு பயந்து இங்கு கீற்றருக்கு பக்கத்தில் உடகாந்துகொண்டு வெட்டியாக பொழுதுபோக பேசுபவர்கள் பேசலாம்..ஆனால் உண்மை அதுவல்ல...அவர்கள் வேகமாக பாய்ச்சலை நிகழ்த்துகிறார்கள்...நாங்கள் புலம்பெயர் நாடுகளில் மாறிக்கொள்ள எடுத்த கால அளவை விட மிகக்குறிய காலத்துக்குள்ளாகவே அவர்கள் உலகமயமாகலுடன் வாழப்பழகிவிட்டார்கள்..
 
நடுவர் அவர்களே...என் முன்னால் நண்பண் ஒருவன் அண்மையில் ஊர்போய் வந்தான்..போகாதே போகாதே என்று அவனை தடுத்தும் போனான்...நீ ஊருக்கு போனால் எம்மக்களின் போராட்ட நியாயங்களை சத்தமில்லாமல் உடைப்பவர்களில் நீயும் ஒருவன் ஆகிவிடுவாய் என்றபோதும் போனான்...சரி இப்படி போபவன் எல்லாம் இனிமேல் என் நண்பண் என்று சொல்லிக்கொள்ளமாட்டேன் என்று காட்டமாக சொல்லி அவன் உறவையும் முறித்து விட்டிருந்தேன்..
 
எனக்கு தெரியும் அவன் எதுக்கு போனான் என்று..அங்கிருக்கும் சனத்துக்கும்,சொந்தக்காரருக்கும்,பெட்டையளுக்கும் விலாசம்காட்டவே அவன் போயிருந்தான்..போனவன் ஊரில் இருந்து அவன் திரும்பி வந்தபின் ஒரு நாள் இங்கு வீதியில் கண்டேன்..கண்டவன் வலிய வந்து கதைத்தான்..கதைத்தவனிடம் கதைக்காமல் போக முடியவில்லை..சும்மா ஒப்புக்கு எப்படி ஊர் இருக்கிறது என்று கேட்டேன்...பெடியின் முகம் ஒரே நொடியில் மாறிவிட்டது..முன்னர் இவர் போனபோது வெளி நாட்டுக்காரன் என்று காலைச் சுத்திய பொடியள் யாரும் இவரை கண்டுக்கவே இல்லயாம்..எல்லாரும் தனியார் கமபனிகளில் வேலையாம்..எப்படா வந்தனி என்று கேட்டுவிட்டு சரி இரு வேலைக்கு போகணும் பின்னர் நேரம் இருந்தால் சந்திப்பம் என்று விட்டு எல்லோரும் அவரவர் வேலைக்கு என்று பிஸியாகிவிட்டார்களாம்...காலையில் பிசியாகும் வீதிகள் பின்னர் மீண்டும் மாலையில்தானாம் பிஸியாகிறது...வாழ்க்கை அங்கு இயந்திரத்தைவிட வேகமாக ஓடுகிறதாம்..வயாதனவர்களை தவிர வேறு யாருக்கும் நின்று பேசக்கூட நேரம் இல்லையாம்..சம்பளம்தான் பலருக்கு பிரச்சினையே அன்றி ஆணோ பெண்ணோ எல்லோரும் ஏதோ ஒரு வேலையில் பிசியாம்..பெடியின் பந்தா இந்தமுறை அங்கு யாரிடமும் எடுபடவே இல்லையாம் என்று மிகவும் நொந்துபோய் இருந்தார்..இனிமேல் ஊருக்கு போற ஜடியா இல்லையாம் என்று புறுபுறுப்பு வேறு...
 
நிலமை இப்படி இருக்கும் போது வாத்தியார் அவர்கள் இன்னமும் தன் பள்ளிக்கூடக் கால நினைப்பில் ஊர் இருக்கும் என்று பேசிக்கொண்டிருப்பதை பார்க்க அவருக்காக பரிதாபப்படுவதை தவிர வேறு என்ன செய்யமுடியும் நடுவர்களே..என்ன நடுவர் சுமோ அவர்கள் வாத்தியாருக்காக சில துளி கண்ணீர் விடுவதுபோல் தெரிகிறது..ரொம்ப அழாதீர்கள்..உங்கள் உடம்புக்கு ஆகாது நடுவரே..இரவைக்கு புட்டவைக்கும்போது எப்படியாவது அந்த புட்டு மெசினை மறக்காமல் கணவனிடம் நினைப்பூட்டி வாங்கி விடுங்கள் நடுவரே..
 
"புலம்பெயர் நாடுகளில் நாம் சுவாசிக்கும் காற்றில் விசமாம்,உணவில் நஞ்சாம்,அத்தியாவசியப்பொருட்கள் மாசுபடுகின்றனவாம்" என்று வாத்தியார் அண்ணா அவர்கள் ஊரிலை இவை ஒன்றும் இல்லை என்பதுபோல் புலம்புகிறார்..உண்மையாகவே வாத்தியார் அண்ணா இன்னமும் தனது ஊர்ப்பள்ளிக்கூட காலத்தில்தான் இப்பவும் ஊர் இருக்கிறது என்ற கற்பனையில் வாழ்கிறார் என்பதை அடுத்தடுத்து நிரூபிக்கிறார்..இதற்கு எனது கட்சி நண்பன் ஜீவா அருமையாக தனது விளக்கத்தை எடுத்துவைத்திருந்தார்..அதனுடன் அவிண்ட வாத்தியாரின் வேட்டியை வாத்தியார் அண்ணா இன்னமும் கட்டவில்லையாம் என்று மேடைக்கு பின்புறம் பேசிக்கொள்கிறார்கள்...
 
இங்காவது இது ஓர்கானிக் உணவு இது இன்னோர்கானிக் உணவு என்று வெளிப்படையாக சொல்லி விற்கிறார்கள்..அதனால் நல்ல இயற்கை உணவை விரும்புபவர்கள் காசு கொஞ்சம் கூட என்றாலும் இயற்கையான உணவை வாங்கி சாப்பிட்டு பல்லாண்டு நோய் நொடி இன்றி வாழக்கூடியவாறு இருக்கிறது..எமது யாழ்கள உறவு விவசாயி விக் கூட கனடாவில் இயறகை உணவுப்பண்ணை வைத்திருக்கிறார்..இயற்கை உணவு இல்லை என்று புறுபுறுக்கும் வாத்தியார் தனது முகவரியை தந்தார் என்றால் விவசாயி விக் மூலம் வீட்டுக்கு இயற்கை உணவுமூட்டைகளை டிலிவரி பண்ண நாம் தயாரக இருக்கிறோம் என்பதை நடுவர் அவர்களுக்கு ஒரு சவாலாகவே விடுக்கிறோம்..
 
ஊரில் எதுவும் சொல்லாமல் பொல்லாத கிருமி நாசினிகளையும் பயங்கர செயற்கை உரங்களையும் விளைச்சல் அதிகம் பெறவேண்டும் என்ற பேராசையில் விவசாயிகள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமா பாவித்து பல்லாயிரம் விவசாய நிலங்கள் இன்று தரிசுக்காடுகளாய் கிடக்கின்றன..நிலங்களுக்கே இந்த நிலை என்றால் அவற்றை உண்ட மனிதர்க்கு என்ன நிலமை..? இந்த நிலமையை வெளி நாடுகளில் நாம் இயற்கை உணவு என்று தெளிவாக விற்கப்படும் உணவுப்பொருட்களை வாங்கி உண்பதன் மூலம் தீர்த்துக்கொள்ளலாம்..ஆனால் ஊரில்..?
 
சொந்த ஊரில் வீசும் தென்றல்தான் தென்றல் என்று ஒப்பாரிவைக்கும் வாத்தியார் அவர்களே....எந்த ஊரில் வீசினாலும் வீசும் காற்று ஒன்றுதான் நடுவர் அவர்களே...அது தென்றல் என்றால் என்ன புயல் என்றால் என்ன..தென்றலை அனுபவிக்க இங்கும் கிராமங்களும் அழகான பூங்காக்களும் ஆற்றங்கரைகளும் கடற்கரைகளும் அழகாக அமைந்திருக்கின்றன..மக்டொனால்சையும்,கே.எப் சியையும் சுற்றிவிட்டு வாழ்வதற்காக நகரங்களுக்கு வந்து இருந்து கொண்டு தென்றல் இல்லை,திங்கள் இல்லை என்றால் தப்பு உங்களது வாத்தியார் அவர்களே...
 
நீங்கள் வசதியாகவும் வாழவேண்டும் தமிழ்சனம் இருக்கும் ஏரியாவிலும் இருக்கவேணும் என்று தலைநகர்களை அண்டி வீட்டை வாங்கி இருந்துகொண்டு புலம்பினால் அந்த தலைவிதிக்கு முதல் சுழி போட்டவர்கள் நீங்களே வாத்தியார்..புலம்பெயர் நாடுகளில் பல்லாயிரம் அழகான பசுமையான கிராமங்கள் இருக்கின்றன...தலைநகரங்களில் இருந்து தள்ளி தொலைவில் மனிதர்களால் மாசுபடாத நிலவைப்போல பளிச்சென்று சுத்தமாய் இருக்கும் கிராமங்களை புலம்பெயர் நாடுகளில் நீங்கள் தரிசிக்கவே இல்லையா..? ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அமைதி நிலவும் அந்தக்கிராமங்களில் வாழ்ந்து செத்துவிடனும் போல இருக்கும் அவற்றின் எழில்..சும்மா தீக்கோழிபோல் தலையை சுடுமணலில் புதைத்துக்கொண்டு தென்றலுக்கும் அமைதிக்கும் ஏங்கினால் அங்கு அது கிடைக்காது..சுடுமணலில் வெம்மைதான் கிடைக்கும்..
 
நடுவர் அவர்களே..வாத்தியாருக்காக உங்கள் கண்மை கரைவதை பார்க்க எனக்கு நெஞ்சுவெடித்துவிடும்போல் இருக்கிறது..பாவம் வாத்தியார்..அவருக்கு வெளிநாட்டை காட்டிய கபோதி அங்கிருக்கும் அழகிய கிராமங்களை பற்றி சொல்லவே இல்லைபோல..அந்த கயவனை எங்கு கண்டாலும் கல்லால் அடித்து கடும்தண்டணை கொடுக்கும்படி அல்லாவின் கூட்டத்தை கேட்டுக்கொள்கிறேன்...
 
வாத்தியார் அவர்களே..அங்கு ஆலமரம்,ஆற்றங்கரை,கேணிக்கட்டு அவற்றில் அரட்டை என்று புலம்புகிறீர்களே....அங்கு ஆலமரம் என்றால் இங்கு பைன் மரம்..அங்கு ஆற்றங்கரை என்றால் இங்கும் ஆற்றங்கரைதான்...அங்கு ஆற்றுக்கு கரையே எங்கிருக்கென்று தேடணும்..இங்கு ஆற்றங்கரைகளையே ஒரு கவிதைபோல் அழகாக்கிவைத்திருப்பார்கள்...அங்கு கேணிக்கட்டு என்றால் இங்கு கடற்கரை மற்றும் ஆற்றங்கரை பெஞ்சுகள்..மாலைநேர மெல்லியவெயிலில் இங்கிருக்கும் ஆற்றஙகரை பெஞ்சுகளில் இருந்து நினைவுகளை அசைபோடுவதே அழகுதான்...நான்கு சுவர்களுக்குள்ளே முடங்கி இருக்காமல் நன்றாக வெளியே எட்டிப்பாருங்கள் எதிரணியினரே..உங்கள் முன்னால் அற்புதமான் அழகான வசதி வாய்ப்புக்களால் நிரம்பிய உலகம் இருக்கிறது..அந்த உலகத்தில் பசி இல்லை,பட்டிணி இல்லை,பஞ்சம் இல்லை..இல்லை என்று எதுவுமில்லா எல்லையில்லா ஆனந்த வாழ்வு எமக்கிங்கு..அதைவிடுத்து அக்கரைக்கு இக்கரை பசை என்பதுபோல் அங்கலாய்க்கும் எதிரணியின் சலனப்புத்தியை என் சொல்ல...
 
பணம் மட்டுமே குறியாக பாழாய்ப்போகிறதாம் புலம்பெயர்ந்த வாழ்க்கை என்று புலம்புகிறார் வாத்தியார்...பணம் இல்லாமல் ஊரில் மட்டும் வாழ்ந்துவிடமுடியுமா என்ன வாத்தியார் அவர்களே..? அந்தபணத்தை கட்டிதானே இங்கு உங்கள் சொந்தங்களை உயிர்வாழ எடுத்துவிட்டிருக்கிறியள்..?பணம சேர்க்க சாதாரணமாக உழைப்பவர்கள்தான் அதிகம்..அது ஊரில் என்றால் என்ன இங்கு என்றால் என்ன..உழைத்தால்தான் மனிதன் உயிர்வாழமுடியும்..உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழக்கூடாது..எனவே பிறந்த ஒவ்வொரு மனிதனும் உரிய வயது வரும்போது உழைக்க ஆரம்பிக்கிறான்..இதுதான் இந்த உலக ஒழுங்கு..அது புலம்பெயர்ந்தால் என்ன ஊரில் இருந்தால் என்ன..ஆனால் அதற்குள்ளும் சில பணப்பேய்கள் காசு சேர்க்கும் வெறியில் நாயாய் அலைகிறார்கள்..இந்தப்பேய்களை மட்டும் உதாரணமாய் எடுத்து வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த புலம்பெயர் மனிதர்களையும் எடைபோடுவது தப்பு நடுவர் அவர்களே..இப்படிப்பேய்கள் ஊரிலும் இருக்கிறார்கள்..இவர்கள் எங்கிருந்தால் என்ன..அவர்கள் அடிப்படைக்குணம் மாறாது...
 
ஆனால் பல்லாயிரம் புலம்பெயர் மனிதர்கள் வரவுக்கு ஏற்ப செலவு செய்துகொண்டு அமைதியான வாழ்க்கையை நிம்மதியாக புலம்பெயர் நாடுகளில் வாழ்கிறார்கள்..அவை உங்கள் கண்ணுக்கு தெரிவதில்லை என்பது வேதனையே..எப்பொழுதும் கஞ்சலை வடிகட்டும் பண்ணாடைகளாய் இருக்காதீர்கள் எதிரணியினரே...பண்ணாடையூடு கீழே வடிந்துபோய்விட்ட பெருமளவு சுத்தமான நீரை மறந்துவிடாதீர்கள்...
 
அடுத்து பேரில் பகலவன் என்று வைத்துக்கொண்டு இருளுக்குள்ளையே வாழ்பவர்போல் நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே புலம்பெயர்ந்தவர்களுக்கு இருப்பதாக நியாயப்படுத்தி பேசிப்போயிருக்கும் பகலவனின் விவாதத்துக்கு வருகிறேன்...
 
 
புலம்பெயர்ந்த நாட்டில் கல்வி வியாபாரம் என்பவர் ஊரில் இலவசக்கல்வியால் எத்தனைபேர் ஒவ்வொருவரிடமும் பல்கலைக்கழகம் போக பின்னால் எத்தனை லட்சம் மாணவர்கள் செய்வதறியாது வீதியில் விடப்படுகிறார்கள் என்பதை மறந்து போய்விடுகிறார்..இங்கு கல்வி காசென்றால்கூட அதையும் அரசாங்கம் பல இலகு கடன்கள் மூலம் முழுப்பணச்செலவையும் தானே ஏற்றுக்கொண்டு மாணவர்களை படிக்க சொல்கிறது..அந்தக்கடனுக்கு வட்டிகூட இல்லை..அதைக்கூட மாணவர்கள் பல்கலைக்கழகம் படித்து முடிந்து ஒரு வேலையில் சேரும்போது கொஞ்சம் கொஞ்சமாக செலுத்தினால் போதும்...பல்கலைக்கலகங்களில் மாணவர்களுக்கு மிகத்தரமான கல்வி கிடைக்கிறது...ஊரில் இருந்துகூட பல்லாயிரம் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு படை எடுக்கிறார்கள் கல்விக்காக...
 
ஊரில் படிக்க வசதி இருந்தால் ஏன் இத்தனை ஆயிரம் மாணவர்கள் படை எடுக்கவேண்டும் வெளிநாடுகளுக்கு..?ஊரில் உயர்தரம் முடிய பல்கலைக்கு தெரிவாகாத மாணவர்கள் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் வீதியில் நிற்கிறார்கள்..இங்கு எமக்கு அப்படி ஒரு நிலை இருக்கா..? அந்தப்பயம் இன்றி நின்மதியாக கல்வி கற்க முடிகிறது அல்லவா..? கல்வி என்பதே ஒரு மாணவண் ரசித்து மனம் விரும்பி படிக்க வேண்டியது..அதையே சோதனையில் பெயிலானால் அடுத்து வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் என்று பயந்து பயந்து சோதனைக்காக நிம்மதியின்றி படித்தால் அதற்கு பெயர் படிப்பா..? 
 
இங்கு எமக்கு அந்தப்பயம் இருக்கா..? இல்லைதானே..அதனால் நிம்மதியாக நமக்கு பிடித்த பாடத்தை ஆறுதலாக பயமின்றி படிக்கலாம்..ஒருமுறை தவறி விட்டால்கூட அடுத்த முறைகளில் விட்ட இடத்தை பிடித்துவிடலாம்..மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு உத்தரவாதம் இருக்கிறது இங்கு..அந்த உத்தரவாதம் அங்கிருக்கிறதா..? நடுவர்களே சிந்தியுங்கள்...ஊரில் இருந்திருந்தால் இந்த நிலையை உங்கள் பிள்ளைகள்கூட எதிர்கொண்டிருப்பார்கள்..இன்று அந்த மனப்பயம் இன்றி நீங்கள் நின்மதியாக இருக்கிறீர்கள் என்றால் அது இந்த புலம்பெயர் வாழ்வு உங்களுக்கு கொடுத்த நின்மதிதானே..இப்ப சொல்லுங்க உங்களுக்கு ஊரில் இருந்திருந்தால் நியமாகவே சந்தோசமாய் இருந்திருப்பியளா இப்படியான மனக்கவலை இன்றி..?
 
அடுத்து புலம்பெயர் நாடுகளில் நிற ஏற்றத்தாழ்வு என்று புலம்புகிறார்...இங்கு நிற ஏற்றத்தாழ்வுகள் எங்காவது ஒன்றிரண்டு இலைமறை காயகத்தான் உள்ளது..அவைகூட உரிய இடங்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டால் மிகக்கடுமையான தண்டணைகள் அவற்றுக்கு கிடைக்கின்றன..சட்டத்தால் நிறவேற்றுமைகாட்டப்பட்டால் மிகக்கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது..ஆனால் ஊரில் இதைவிட பெரிய கொடுமை..சொந்த சகோதரனாலேயே நிகழ்த்தப்படுகிறது சாதி என்ற பெயரில்..
 
அதற்கு சட்டத்தில்கூட எந்த தண்டணையும் இல்லை..சாதியால் புறக்கணிக்கப்படுகிறவர்களுக்கு அங்கு எந்த நீதியுமே கிடைப்பதில்லை..நிம்மதியும்தான் கிடைப்பதில்லை..ஆனால் புலம்பெயர்ந்து வந்ததால் அந்த தொல்லை இன்றி எல்லையற்ற சம உரிமையை அவர்கள் இங்கு அனுபவிக்கிறார்கள்..சாதியின் நிழல்கூட அவர்களை தீண்டமுடியாது..இந்த நின்மதியை அவர்களுக்கு கொடுத்தது எது..? ஊரா..? இல்லையே..புலம்பெயர் வாழ்வுதானே..
 
இப்ப சொல்லுங்கள் நடுவர் அவர்களே..இப்படி நிலமையில் யாராவது ஊரில் போய் இருக்கணும் என்று  அந்த வாழ்க்கையை வாழணும் என்றும் கவலைப்படுவார்களா? வெறும் பிரிவால் வாடுவார்கள்..அவ்வளவே..
 
அடுத்து சில ஏரியாக்களில் வீட்டுவாங்க முடியாதம்..பொருளாதார ஏற்றத்தாழ்வாம் என்று புலம்புகிறார்...
 
வாழ்வதற்கே வீடு இல்லை என்பதற்கும் அத்தியாவசிய வசதிகளான மின்சாரம்,குடிநீர் என்பவற்றுடன் ஒரு சாதாரண வீடு சகலருக்கும் கிடைக்கும் என்பதற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ளுங்கள் எதிரணியினரே..உங்களையார் விலைஉயர்ந்த ஏரியாக்களில் வீடுவாங்க சொன்னது..அளவுக்கு மீரிய ஆசை என்பது உங்கள் பிரச்சினை..அதற்கெல்லாம் நாம் கவலைப்பட முடியாது..
 
ஊரில் காணிகள் வீடுகள் இராணுவத்தால் சூறையாடப்பட,கண்ணிவெடிகளால் நிரப்பபட, வாழ்வதற்கே வீடின்றி இரவல் வீடுகளில் கறண்டின்றி மண்ணெண்ணெய் விளக்கில் ஒவ்வொரு நாளையும் வறுமையுடன் அனுப்பும் வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு புலம்பெயர் நாட்டில் எல்லா அடிப்படை வசதிகளுடனும் வாழக்கிடைத்தது பொருளாதார ஏற்றம்தானே...நடுவர் அவர்களே சொல்லுங்கள் ஊருக்கு போய் திரும்பவும் அப்படி ஒரு வாழ்க்கை வாழ எவனாவது விரும்புவார்களா இங்கிருக்கும் வசதிகளை துறந்து..?
 
அடுத்து உழைப்பு சுரண்டல் என்று கூச்சலிடுகிறார் எதிரணிக்காறர்..வேடிக்கை..விநோதம்..வெட்ககேடு..ஊரில் தொழிலாளார்களுக்கு என்ன பாதுகாப்பு சட்டம் அமுலில் இருக்கு..? யாரு,எந்த கொம்பனி அரசாங்கம் சொன்ன சட்டங்களை பின்பற்றுகிறார்கள் அங்கு..? இங்கு மூன்று மாதமோ ஆறுமாதமோ வேலை செய்தால் மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு ஏற்ப அவனை எந்த ஒரு காரணமுமின்றி நிற்பாட்ட முடியாது..காரணத்துடன் நிற்பாட்டினால் கூட அவன் அடுத்த வேலை பெறும் வரை உரிய காப்புறுதி பணம் வழங்கப்படும்...வேலையில் ஒரு விபத்து நிகழ்ந்தால் கம்பனியே முழு செலவையும் ஏற்கவேண்டும்..
 
மகப்பேறு விடுமுறை என்று விடுமுறை மற்றும் வருடத்தில் இவ்வளவு நாள் தொழிழாலர்களுக்கு கட்டாய விடுமுறை என்று கொடுக்கப்படுகிறது..இப்படி எத்தனை எத்தனை சலுகைகளை அள்ளிக்கொடுத்திருக்கிறது புலம்பெயர் நாடுகள் தொழிலாளர்களுக்கு..இப்ப சொல்லுங்க நடுவர் அவர்களே இத்தனை வசதிகளையும் துறந்து ஊரில் போய் அடிமைபோல் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பு சட்டமும் இல்லாத இடத்தில் நாளைக்கே உங்களை எந்த ஒரு அறிவித்தலும் இன்றி வேலையை விட்டு தூக்கலாம் என்ற இடத்தில் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை நினைத்து நிம்மதியற்று கலங்காமல் வாழமுடியுமா..?
 
அடுத்து இங்கு பெற்றோர் பிள்ளைகளை சரியாகக் கவனிப்பதில்லையாம்..அதற்கு நோர்வேயில் கையால் உணவூட்டினார்கள்(http://www.thinakkathir.com/?p=31525)என்ற ஒரு சப்பை பிரச்சினைக்காக பிள்ளைகளை பிடித்துகொண்டுபோன கவுன்சில் கதையை இழுக்கிறார்...அப்படி பார்த்தால் ஊரில் ஒரு பிள்ளையும் வீட்டில் இருக்கமுடியாது எல்லாருமே கவுன்சிலில்தான் இருப்பார்கள்..இப்படி எத்தனை பேரின் பிள்ளைகளை புலம்பெயர் நாடுகளில் கவுன்சில் தூக்கி சென்றிருக்கிறது..எத்தனை ஆயிரம் பேர் இருக்கும் புலம்பெயர் நாடுகளில் எங்கையோ ஒரு சில கேஸ்களில்தான் பிள்ளைகளை கவுன்சில் தூக்கிபோயிருக்கு...நெல்லுமூட்டைக்குள் எங்காவது ஒன்ரிரண்டு பதர் இருக்கும்..அது இயற்கை...அதற்கு எதுவும் செய்ய முடியாது..நாங்கள்தான் பதரை விலத்த வேண்டும்...
 
அடுத்து தான் ஊரிலே சுதந்திரமாக உரிமையுடன் வாழக்கூடிய அரசிய சூழல் ஏற்பட்டால் அங்கே போய் வாழுவேன் என்று சபதம் இட்டதன்மூலம் எதிரணிக்காறர் ஊரில் நாம் நிம்மதியாக வாழமுடியாதென்பதை மறைமுகமாக ஒத்துக்கொள்கிறார்...எந்த உரிமைகளும் இல்லாத இடத்தில் யாராவது போய் வாழ்ந்தால் இன்னும் நன்றாக வாழலாம் என்று கவலைப்படுவார்களா நடுவர் அவர்களே..?
 
அதனால்தான் நாம் சொல்கிறோம் புலம்பெயர்ந்தவர்களின் கவலை வெறும் பிரிவுகளின் கவலையே அன்றி ஊரில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக வாழ்ந்திருப்போம் என்பதெல்லாம் வெறும் நடிப்பே..அது உள்ளத்தில் இருந்து வரவில்லை என்பதே உண்மை..உள்ளத்துக்குள் யாருக்கும் அந்த நரகத்துக்குள் மீண்டும் போக விருப்பம் இல்லையே என்பதே உண்மை..அதனால்தான் அரசியல் தீர்வு வரட்டும்,சம உரிமை வரட்டும் போகிறோம் என்றெல்லாம் பம்மாத்துக்கதை சொல்லி காலத்தைகடத்துகிறார்கள்..போகவேணும் அங்கு வாழவேணும் என்று நினைப்பவர்கள் பேசமாட்டார்கள்..எப்பவோ போய் செயலில் காட்டி இருப்பார்கள் நடுவர் அவர்களே..இவர்கள் வார்த்தை எல்லாம் வெறும் நாவில் இருந்து வரும் பொய்களே அன்றி உள்ளத்துக்குள் இருந்து வருபவை இல்லை என்பதே உண்மை நடுவர் அவர்களே..
 
இவ்வளவையும் தப்புதப்பாக பேசியதால் சப்பா கண்ணைக்கட்டுதே என்று இடையில் ஆலபனை வேறு தனது பொய் ராகத்துக்கு சேர்த்திருந்தார் எதிர்க்கட்சிகாறர்...அவரை உண்மையிலையே கண்ணைக்கட்டிதான் வெளிநாட்டில் விட்டிருக்கிறார்கள் போலும்..அதனால்தான் அவருக்கு புலம்பெயர் நாட்டின் அருமைகள் புரியாமல் இருக்கிறாரோ தெரியவில்லை...
 
அடுத்து  எதிரணிக்காறர் ஜீவாவுக்காக எழுதிய மறுப்பில் தானே தனக்குள் பல இடங்களில் முரண்படுகிறார்..அவர் இல்லையா இல்லையா என்று கேட்பதெல்லாம் தன்விவாதத்தில் தானே நம்பிக்கை இல்லாமல் கேட்பதுபோல் உள்ளது...முதல் பந்தியில் ஜீவாவின் விவாதத்தை முறியடிக்கவேணும் என்பதற்காகவே எல்லோரும் உயிர்ப்பயத்தில் வந்திருப்பதாக சொல்லும் எதிரணிக்காறர் உடனடியாகவே அடுத்த பந்தியில் சீதனம் உழைக்க வெளிநாட்டுக்கு வந்ததாக தனது வாதத்தை வெல்ல வைப்பதாற்காக பொருளாதார அகதிகள்தான் என்று ஒரே வசனத்திலேயே பல்டி அடித்துவிட்டார.... என்னே ஒரு அந்தர் பல்டி எதிர்க்கட்சிகாறர் அடித்தது...கனம் நடுவர் அவர்கள் இதை குறிப்பெடுத்து வைக்கும்படி கேட்டுகொள்கிறேன்...
 
அடுத்த பந்தியில் ஊரில் இருக்கும் தங்கச்சி மாரை வாழவைப்பதற்கா இங்கு மூன்று சிப்ற் உழைக்கிறார்களாம்..அப்படியானால் அந்த தங்கச்சிகளை ஊரில் இருந்தபடி உழைத்து வாழவைக்க முடியாது என்பதுதானே யதார்த்தம்..இப்படி ஒரு ஊருக்கு எவன் ஒருவன் போய் இருக்க விரும்புவான்..நாளை அவனுக்கு மகள் பிறக்கும் போதும் இப்படித்தானே உழைக்கவேண்டும்...அப்படியானால் ஊரில் இருந்தால் எப்படி அது சாத்தியமாகும்..அப்புறம் மகளின் பிள்ளைகளுக்கு மகள் எப்படி உழைப்பது..? இப்படி சங்கிலிதொடராக கேள்விக்குறிகள் வருகிறதே ஊரில் போய் வாழ்வதென்றால்..?
 
இப்படி ஒரு எதிர்காலமே தெரியாத கேள்விக்குறியாய் வளைந்துபோய் கிடக்கும் ஊர் வாழ்க்கையை எவன் ஒருவன் தன் பிள்ளைகளுக்கு முழுமனதோடு கொடுக்க விரும்புவான்..? எவனும் தன் பிள்ளை அப்படி ஒரு எதிர்காலம் நிச்சயமில்லா சூழலில் வாழவைக்க விரும்பமாட்டான்..எனவே ஊருக்கு போனால் சிறப்பாக வாழலாம் என்று இவர்கள் கவலைப்படுகிறோம் என்று சொல்வதெல்லாம் வெறும் உதட்டுப் பொய்களே நடுவர் அவர்களே..உண்மை இவர்கள் ஊரைப்பிரிந்த பிரிவால் கவலைப்படுகிறார்கள் என்பதே..
 
அடுத்து தனது விவாதம் என்று சொல்லி கொஞ்சம் எழுதியிருந்தார் பகலவன் அவர்கள்..அவரது முதல் இரண்டு பந்திக்கும் விவாதத்தின் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை நடுவர் அவர்களே..சம்பந்தத்தை நீங்களே கண்டு பிடித்துக்கொள்ளுங்கள்..
 
அடுத்த பந்தியில் சுயமரியாதையைப்பற்றி கதைப்பவரிடம்...ஊரில் உள்ளதுபோல் இங்கு தொழில்ரீதியாக யாரையாவது பிரித்து சாதி என்று சொல்லி வேறுபடுத்தி பார்க்கிறார்களா என்று கேட்கிறேன்..?பொறியியல் படித்தவன் டாய்லட் கழுவக்கூடாதென்று எந்த விதியில் இருக்கிறது..?இதுவே ஒருவித ஆதிக்க மனதின் வெளிப்பாடுதான்...இப்படியான மெண்டாலிட்டி உள்ளவர்கள்தான் ஊரில் அதிகம்..இப்படி ஏற்ற இறக்கம் பார்ப்பவர்களின் ஊரில் இப்படி ஒரு சம உரிமை கொடுக்கும் நாட்டில் வாழ்ந்துவிட்டு எவன் போய் வாழவிரும்புவான் நடுவர் அவர்களே..?
 
அடுத்த பந்தியில் முதியவர்கள் ஊரில் போய் சாகவேணும் என்று சொல்கிறார்கள் என்கிறார்..நாமும் இல்லை என்று சொல்லவில்லை..ஆனால் எந்த முதியவர் அப்படி செய்கிறார்கள்? யாரும் போவதில்லை மிக சிலரை தவிர..இங்கு கிடைக்கும் மிக உயர்ந்த மருத்துவ வசதிகள்..போன் அடித்தால் வீட்டுக்கு வரும் வைத்திய வசதிகள்,உயர்ந்த சத்தான உணவு வகைகள் என்று இவற்றில் ஏதாவது அங்கு கிடைக்குமா..? அதனால்தான் யாரும் போவதே இல்லை..எல்லோரும் ஊரை பிரிந்து வந்த கவலையில் சும்மா புலம்புவார்களே ஒழிய யாரும் மனமுவந்து அங்கு போய் இருக்கமாட்டார்கள் நடுவர் அவர்களே..
 
அடுத்து மணமுறிவை பற்றி சொல்கிறார்..இங்காவது மணமுறிவு என்று நேர்மையாக டைவேர்ஸ் எடுத்துவிட்டு போய் விடுவார்கள்..ஆனால் அங்கு..? எல்லாரும் அசமடக்கு கள்ளர்கள்..ஊர் முழுக்க கள்ளதொடர்பு கேசுகளும் பிரச்சினைகளும்..சீரழிவான வாழ்க்கை..பெண்களுக்கு ஒரு பாதுகாப்பில்லை...
 
அடுததடுத்த பந்திகளில் ஊர் , யூதன், வெள்ளைக்காரன் என்று கூக்குரலிடும் எதிர்க்கட்சிகாறர் எதற்காக ஊரை விட்டு இங்கு ஓடி வந்து பேசணும்..? அதை ஊரிலே நின்றுகொண்டு பேசி இருக்கணும்..எதிர்க்கட்சி காரரிடம் ஒரு நேர்மை இல்லை..எங்களிடம் நேர்மை இருக்கிறது..நாம் ஒத்துக்கிறோம் ஊரைவிட வளமான வாழ்க்கை இங்கு என்று..சும்மா பிரிந்து வந்துவிட்டோம் என்ற கவலைதான் எங்களுக்கு என்று..
 
ஆனால் எதிர்ணிக்காறர் பொய்யாக தங்களுக்கு ஊரில் போனால் சிறப்பாக வாழலாம் என்ற கவலை இருப்பதாக வளமான நாட்டில் வளமாக வாழ்ந்துகொண்டு நன்றிகெட்டதனமாக பேசுகிறார்கள் நடுவர் அவர்களே..இவர்களின் இந்த நன்றிகெட்டதனத்தை நினைத்து நீங்கள் கவலைப்பட்டு உடம்பை மெலிக்காதீர்கள் நடுவர்களே..இபடி இருந்தால்தான் நீங்கள் பயங்கரமாக அழகாக இருப்பீர்கள் நடுவர்களே..
 
அடுத்த பந்தியில் சைக்கில் பெடலும்,எண்ணெய் தோசையும்,பிள்ளையார் கோயிலும்,ஓட்டை பஸ்ஸும் தரும் சுகம் பென்சும்,பிசாவும்,5ஸ்டார் கோட்டலும்,விரைவுப் புகையிரதமும் தரவில்லை என்று புலம்புகிறார்...நடுவர் அவர்களே இதெல்லாம் அக்கரைக்கு இக்கரை பச்சை என்ற மனநிலையே அன்றி ஊரில் போனால் வழமாக வாழலாம் என்ற மனநிலை அல்ல..இவர்களே கொஞ்சகாலம் ஊரில் போய் இருந்தால் பின்னர் பிசாவுக்கும்,பென்சுக்கும்,விரைவுப்புகையிரதத்துக்குமாக புலம்புவார்கள்..
 
மனிதமனமே இப்படி விசித்திரமான ஒன்றுதான்...இல்லாத ஒன்றுக்காக ஏங்குவது..அதையும் ஊரில் போய் வாழ்ந்தால் சிறப்பாக வாழலாம் என்ற விவாதத்துக்கும் முடிச்சுபோடுவது காளைமாட்டை கட்டிவச்சு கட்டையால் அடித்து பால்கறக்க முயல்வது போன்றதே...நடுவர் அவர்களே..இந்த கெட்டபயல்களின் சகவாசம் உங்களுக்கு இனியும் வேண்டாம்..ஏனென்றால் இவர்கள் தங்கள் உள்ளமறிய பொய் சொல்கிறார்கள்..இவர்கள் ஆபத்தானவர்கள்..எனவே எப்பபவும் நடுவர்கள் இவர்களிடம் இருந்து இரண்டடி தள்ளி இருக்குமபடி நயமாக வேண்டிக்கொள்கிறேன்..
 
அடுத்து இந்த பட்டிமன்றத்தில் வெல்லமுடியாது என்பதை உணர்ந்துகொண்ட எதிரணியினர் கடைசி ஆயுதமாக தமது கதைகள் என்று கதைகளை சொல்லி நடுவர்களின் அனுதாப ஓட்டை பெற நயமாக முயற்சித்து இருக்கிறார்கள்..இதற்கு கனம் நடுவர்கள் பலியாக வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுகொள்கிறேன்..ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கைக்குள்ளும் இதைவிட ஓராயிரம் சோகம்கள் புதைந்துகிடக்கின்றன..ஏன் என் வாழ்க்கைக்குள்ளும் இதைவிட ரத்தக்கண்ணீரை வரவைக்கும் கதைகள் இருக்கின்றன..அதை அறிந்த ஒரு சில யழ் உறவுகளே அதற்கு சாட்சி..அப்படி இருந்தும் நான் யாரிடமும் எனது கதையை சொல்லி மற்றவர்களின் அனுதாபத்தை பெறணும் என்று நினைத்ததில்லை..என்னைப்பார்த்து இன்னொருவர் அனுதாபப்படுவதை நான் ஒரு போதும் விரும்பியதில்லை...அதனால் இங்கு சொல்வதற்கு கதை இருந்தும் அதை சொல்லாது கடந்துபோய் அடுத்த பந்தியில் என் வாதத்தை வைக்கிறேன்...
 
அடுத்து எனது கருத்துக்களுக்கு வருகிறேன்...நான் சொல்வதற்கு எதுவுமில்லாமல் எனக்கு முன் வந்த எனது கட்சிக்காரர்கள் எம்பக்கம் உள்ள நியாயங்களை அற்புதமாக எடுத்து சொல்லி இருந்ததால் நான் அதிகம் முறியடிப்பு தாக்குதல் பக்கமே கவனம் செலுத்துகிறேன்..இருந்தும் என் கருத்துக்கள் சில கீழே..
 
என்னதான் சுத்தமான காற்றும் பச்சையான நிலமும் அங்கிருக்கு என்று புலம்பினாலும் எம்மவர்கள் எல்லோரும் இங்கு எப்படி விரைவாக குடிஉரிமைக்கு அப்ளை பண்ணலாம் என்றே சிந்திக்கிறார்கள்..இங்கு விசா பெற்றவர்களில் முக்கால்வாசிக்கும்மேல் நாசனாலிற்றி ஒற்றைக்காலில் நின்றாவது பெற்றுவிட்டார்கள்..உண்மையில் ஊரில் அரசியல்பிரச்சினை தீர போய் அங்கு செற்றிலாகணும் என்ற ஜடியா இருக்கும் எவனும் இந்த நாட்டின் குடியுரிமை பெறணும் என்று சிந்திக்கமாட்டன்... இருக்கும் நிரந்தரவிசாவுடன் இருக்கும் வரை இருந்துவிட்டு ஊருக்கு ஓடிடணும் என்றே சிந்திப்பான்..
 
மெல்ல மெல்ல கட்டி எழுப்பிய இந்த புலம்பெயர் வாழ்வை,மிக தரமான போக்குவரத்து வசதியை,விரல் நுனியில் உலகை கொண்டுவரும் தொழில்நுட்பங்களை தன் பிள்ளையும் அனுபவிக்கவேண்டும் என்றுதான் எந்த ஒரு இளைஞனும் யுவதியும் சிந்திப்பான்/ள்..இனி ஊருக்குபோய் அந்த காய்ந்த வாழ்வை,பிண் தங்கிய மூன்றாம் உலகில் தன் குழந்தை வளருவதை இந்த நவீன உலகில் வாழ்ந்த எந்த இளைஞன் அல்லது யுவதி விரும்புவாள்..?
 
தமிழச்சி அக்கா சொன்னதுபோல் ஊரில் சிறப்பாக இருப்பவர்கள் உண்மையில் பரம்பரை பணக்காரர்களே..அங்கு சிறந்த சலுகைகளை பெறுபவர்களும் பொருளாதாரத்தால் மேம்பட்டவர்களே..ஏழைகள் அங்கு இன்னும் இன்னும் ஏழைகளாகப் போய்கொண்டிருக்கிறார்கள்..கண்மண் தெரியாமல் ஏறும் விலைவாசியும் அதற்கு ஏற்ப உயர்த்தப்படாமல் இருக்கும் சம்பளமும் ஏழைகள் இனி அடுத்து எப்படி வாழ்வது என்று தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்..இதனால் அங்கு களவு விபச்சாரம் என்று சமூக சீர்கேடுகள் தலைவிரித்தாடுகிறது..ஒரு நாகரீகமன சமூகத்தின் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றுவது பொருளாதாரமே..அந்த பொருளாதாரம் அதல பாதாளத்தில் இருக்கும் ஒரு சமூகத்தில் இப்படியான சீர்கேடுகள் தலைவிரித்தாடுவது சர்வ சாதாரணமே..இப்படி ஒரு உயர்ந்த நாகரீமான பொருளாதார வசதிகளால் தன்னிறைவுகண்ட சூழலில் வாழ்ந்துவிட்டு அப்படி ஒரு இருண்ட உலகத்தில் தாமும் தம் பிள்ளைகளும் வளர்வதை எவர்தான் விரும்புவார்கள் நடுவர் அவர்களே..? 
 
இப்பொழுது யாழிலேயே பாருங்கள் நேசக்கரத்துக்கு உதவி கோரி வரும் அழைப்புகளை..எத்தனை ஆயிரம் மக்கள் அங்கு ஒருவேளை சோற்றுக்கே துடிக்கிறார்கள் என்பதற்கு நேசக்கரமே சாட்சி..அப்படி ஒரு அதல பாதாளத்தில் இருக்கிறது ஊர் நிலமை..எதிரணியினர் புலம்பெயர் வாழ்வு தந்த வசதிவாய்ப்புகளை அனுபவித்துக்கொண்டு ஊரில் போய் வாழ்ந்தால் இன்னும் சிறப்பாக வாழலாம் என்று புளிச்சல் கதை பேசுகிறார்கள் நடுவர்களே..இதைதான் பணம் மெத்தினால் பொழுதுபோக பேசும் திண்ணைக்கதைகள் என்பது...வசதியாக வாழ்ந்துகொண்டு வம்பழக்கிறார்கள் நடுவர் அவர்களே..ஆனால் இவர்கள் யாரும் ஊருக்கு போகப்போவது இல்லை என்பதே யதார்த்தம்..
 
எல்லோருக்கும் ஊரைப்பிரிந்த வலி..அந்த நினைவுகள் உள்ளே இருக்கும்தான்...ஆனால் அதற்காக எவனும் இவ்வளவு வளமான வாழ்வை உதறி எறிந்துவிட்டு மீண்டும் சைபரில் இருந்து தொடங்கும் ஊர் வாழ்க்கையை நினைத்தே பார்க்கமாட்டான் என்பதுதான் யதார்த்தம்..
 
எனவே  
" புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே 
அதுதான் யதார்த்தமும் உண்மையும்..அங்குபோய் வாழ்ந்தால் சிறப்பாக வாழலாம் என்று சொல்வதெல்லாம் ரைம்பாஸ் கதைகளே என்று சொல்லி என் சிற்றுரையை முடிக்கிறேன்..எதிரணி வெட்டிப்பசங்கள் தங்கள் வெறும் வாயை மெல்ல இனியும் இந்த பட்டிமன்றத்தை ஒரு இடமாக்கி விடாதீர்கள் என்று முடிக்கிறேன்..
 
நன்றி வணக்கம்..

 

Edited by சுபேஸ்

  • Replies 62
  • Views 10k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நடுவர் அவர்களே!


நமது அணி சார்பில் அடுத்து வடமராட்சி தந்தமகன் செந்தமிழ் எழினி தும்பளையான் அவர்கள் பேசுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரதம விருந்தினர்களாக வந்து அவையை அலங்கரித்துக்கொண்டிருக்கும் திரு & திருமதி மோகன் அவர்களே, மட்டுறுத்தினர்கள் நிழலி, நுனாவிலான், இணையவன் நியானி அவர்களே, நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரர் பரம்பரை வந்த நடுவர்கள் கோமகன் மற்றும் சுமேரியர் அவர்களே, ஊரிலே இருந்திருந்தால் எப்படி எல்லாம் இருந்திருப்போம் என்ற கவலையுடன் வீற்றிருக்கும் எனதணி நண்பர்களே, பிழையான அணிக்கு பெயரைக் குடுத்து விட்டோமா என்ற சிந்தனையில் மூழ்கியிருக்கும் எதிரணி நண்பர்களே, யாழின் அச்சாணியாய், வளர்ச்சியில் கரம் கோர்த்த அன்பு இணையவழி வாசகர்களே, விளம்பரதாரர்களே அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கம்.

"புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ??? "

 

"புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம்
என்ற கவலையே ????"


என்ற இரு தலைப்புக்களில் எமது வாதப் பிரதி வாதங்களைக் கூற கூடியிருக்கிறோம். இதில் இரண்டாவது தலைப்பான

 

"புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம்
என்ற கவலையே ???"
 

 

பற்றிய எனது கருத்துக்களைக் கூற வந்திருக்கிறேன்.  தலைப்பினுள் செல்ல முன்னர் எதிரணியினரின் வாதங்களுக்கு எனது பிரதி வாதங்களை முதலில் தெரிவிக்கிறேன்.

முதலாவதாக கருத்துக் கூறிய எதிரணியின் தைரியப் புயல் தமிழச்சி எடுத்த எடுப்பிலேயே "நாம் ஊரில் இருந்திருந்தால் எம்மில் பலர் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் வளமான வாழ்க்கையை வாழ்ந்திருக்க மாட்டோம்" என்று ஒரு பச்சைப் பொய்யைக் கூறியுள்ளார். நடுவர்கள் அவர்களே, வளமான வாழ்கைக்கு எதிரணியினர் கொஞ்சம்  வரைவிலக்கணம் கூற முடியுமா?   அவர்களது பாணியில் பிள்ளைகளின் கல்வி, நவீன தொலைகாட்சி முதலிய இலத்திரனியல் உபகரணங்கள், சுகாதார நிலைமைகள் இருந்தால் அது வளமான வாழ்வு எனக் கூறுவார்கள். "அனைத்துப் பொருட்களையும் நுகர்ந்து எமது வாழ்வை மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்ற அவரின் கூற்று பொருட்கள் இருந்தால் தான் மகிழ்ச்சி என்பதை கூறி நிற்கிறது. அப்போ, பொருட்கள் போனால் உங்கள் மகிழ்ச்சியும் போய்விடுமா?

அது மட்டுமல்ல புலம்பெயர் தேசத்திலே ஏற்றத்தாழ்வுகள் இல்லை எனவும், குறைந்த சம்பளத்துடன் நிறைவாக வாழலாம் எனவும் கூறியிருந்தார். அன்பானவர்களே, இந்த இரு கூற்றுகளும் எவ்வளவு தூரம் பொய்யானவை என்பது நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டும் என்று இல்லை. குறைந்த சம்பளத்தில் நிறைவாக வாழ்பவர்கள் தமது அரசாங்கத்தை ஏமாற்றுகிறார்கள் இல்லை கள்ள மட்டை அடிக்கிறார்கள். சட்டரீதியாக வரி கட்டி வருமானம் ஈட்டுபவர்கள் குறைந்த சம்பளத்துடன் நிறைவாக இருக்கிறார்கள் என்பது நம்ப முடியாத விடயம்.

"நாம் ஊரில் இருக்கும்போது பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே இருந்த நெருக்கத்தைவிட, இங்கு வாழும் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையேயான நெருக்கம் அதிகம் மட்டுமின்றி நெருக்கமாக இருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கையும் அதிகம்" நெருக்கமாக ஒரே வீட்டில் பத்துப்பேர் நெருக்கிக்கொண்டு இருக்கிறார்கள், காரணம் வாழ்க்கைச் செலவு, வாடகையைக்  குறைக்க. இதனால் குடும்பங்களில் நெருக்கம் என்பதைவிட பலவித குடும்ப அரசியல்களுக்கும் குடும்பப் பிரச்சனைகளுக்கும் இது ஆரம்பபப் புள்ளியாகிறது. ஊரிலே தனித்தனி வீடுகள் என்றாலும் ஒருத்தர் வீட்டிற்கு மற்றவர் போய்வருவது போன்ற சூழல் இங்கு இல்லை. இங்கு பிள்ளைகள் தங்கள் தங்கள் அறைகளில் கணணி, கைத்தொலைபேசியுடன் தஞ்சம். அத்துடன் ஊரைப்போல மனம்விட்டுக் கதைப்பது கூட குறைவு எனலாம். எமது புலம்பெறந்த எத்தனையோ இளையவர்களின் வாழ்வு பெற்றோர் - பிள்ளைகள் உறவில் விழுந்த விரிசலால் குழு மோதல்களிலும், சட்டப் பிரச்சனைகளிலும் அவர்களை கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறது.

இவர்கள் வாழ்கையை அனுபவிக்க கற்றுக்கொண்டதே புலம்பெயர்ந்த பின்புதானாம். நடுவர்களே, எமது பாட்டன் பூட்டன் வழிவந்தவர்கள் அனுபவிக்காத எதை இவர்கள் புலம்பெயர்ந்து அனுபவித்து விட்டார்கள் எனக் கூற முடியுமா? எமது மூதாதையர்கள், கனக்க ஏன் எமது தாத்தா பாட்டி அனுபவித்த அளவு வாழ்கையை நாம் யாருமே அனுபவித்தது இல்லை என ஆணித்தரமாகக் கூறுவேன். ஊரிலே சிறப்பாக இருப்பவர்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குபவர்கள் மட்டுமே என்பது அடிப்படைகள் எதுவும் அற்ற கூற்று. எமது பூமி சுய பொருளாதாரப் பூமி. மாங்காய், தேங்காய், நெல்லு என்று எதுவும் பயன்தரும் பூமி. இதனால் கூழோ கஞ்சியோ ஊரில் இருப்பவர்கள் சிறப்பாகத்தான் இருக்கிறார்கள். வெளிநாடும் வெளிநாட்டுக் காசும் கடந்த இருபது முப்பது வருடங்களாக தமிழனுக்கு ஏற்றபட்ட ஒரு மாயை. அதன் முன்னர் எமது குடும்பங்கள் சிறப்பாக இருக்கவில்லையா? இலங்கையினுள் விடுமுறை போகவில்லையா, ஒரு நன்மை தீமைகளில் பங்குபற்றவில்லையா?

இறுதியில் எம்மைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டிருந்தார் "இத்தனை வசதிகளை அனுபவித்த பின்பு, உங்களால் இப்போது ஊரில் போய் வாழ முடியுமா?  இல்லை ஊரிலிருந்திருந்தால் இவ்வாறான சிறப்புகளைப் பற்றியாவது நாம் இவ்வளவு தூரம் அறிந்திருப்போமா?" நாளையே ஊர் போவதாயினும் ஊர் போக நான் ஆயத்தமாகவே இருக்கிறேன். யாழிலே இதனை பல தடவைகள் கூறியும் இருக்கிறேன். நான் ஊர் போவதற்கோ , அங்கு வேலை செய்வதற்கோ, குடியேறுவதட்கோ என்றுமே பின்னிற்கப் போவதில்லை அத்துடன் ஊரிலே இங்கிருப்பதை விட சிறப்பாக இருக்கவும் என்னால் முடியும்.

இரண்டாவதாக வந்த நண்பன் ஜீவா  "ஊரில இருந்திருந்தால் இதைவிடத் திறமாக இருந்திருப்பன் எண்டு சொல்லுறியள் அப்ப ஏன் புலம்பெயர்ந்து வந்தீர்கள்?" என்று ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். உண்மைதான். சிலவிடயங்கள் முடிந்த பின்னர்தான் அதன் தார்ப்பரியங்கள் புரிகின்றது. நான் ஊரை விட்டு மாணவர் விசாவில் வெளிக்கிட்ட 2006 இறுதிப் பகுதியில் நாட்டு சூழ்நிலைகளை விட எனது
உயர்கல்வியைக் கருத்தித்தான் வெளியேறினேன். அந்த உயர்கல்வி முடிந்துவிட்ட நிலையில் நாட்டுக்கு எந்த நேரமும் போகத் தயாராகவே இருக்கிறேன்.

அடுத்ததாக "அங்கு இல்லாத ஏதோ ஒன்று இங்கு இருப்பதனால் தானே அனேக வீடுகளில் வீட்டிற்கு ஒருவராவது வெளிநாட்டில் வசிக்கிறார்கள்?" என்று கூறியிருந்தார்கள். உண்மையில் அங்கு இல்லாதது இங்க இருக்குது என்று கூறுவது ஒருவகை மாயை. இங்கு ஆரம்பத்திலே வந்தவர்களால் கூறப்படும் ஒரு வகைப் பொய் என்றும் கூறலாம். எனக்குத் தெரிந்த அண்மைய உதாரணம். யாழிலே ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல பதவியில் இருந்த ஒரு நண்பன் கனடாவிற்கு அவனின் அக்காவின் ஸ்பொன்சர் மூலம் ஊரிலிருந்த நல்ல வேலை எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்தான்.  வந்து இரண்டு மாதத்திலேயே திரும்பிப் போககப்போறன் எண்டு தொடங்கிவிட்டான். இங்கிருக்கும் உண்மை நிலை ஊரிலே காட்டப்பட்டால் ஒருத்தர் கூட வெளிநாடு என்று வரமாட்டார்கள்.

அடுத்ததாக விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கு புலம்பெயர்ந்தவர்கள் ஆற்றிய பங்கு அதிகம் எனக்கூறி இருந்தார். இல்லை எனக்கூறவில்லை ஆனால் அதே போராட்டம் அழி
வடைவதட்குக் காரணமாக இருந்ததும் புலம்பெயர் சார்ந்த அரசியல், வெளிநாட்டுக்கொள்கைகள் என்பது வெளிப்படை. கப்பல் கப்பலாக ஆயுதத்தை இறக்கினோம் ஆனால் அதனை எடுத்து பாவிப்பதற்கு ஆட்கள் இல்லாமல் முடக்கி வைத்தோம். புலம்பெறந்த நாம் அனைவரும் ஊரிலே இருந்திருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்குமா?

அத்துடன் ஊரிலே கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார பிரச்சனைகள் பற்றி கூறியிருந்தார். தற்போது, முக்கியமாக இலங்கையிலே தனியார் பல்கலைக் கழகங்களின் மூலம் உயர்கல்வி வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்காக குறைந்த வட்டிக் கடன்களை பல வங்கிகள் வழங்குகின்றன என்பது மேலதிக தகவல்.

இறுதியாக வந்த நண்பன் சுபேஸ் இயந்திரத்தனமான வாழ்கையை வரவேற்று கருத்து கூறியிருந்தார். இதனால் தான் பல நோய்கள் புலம்பெயர் சமூகத்தை அச்சுறுத்துகின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஊரிலே உரலில் தான் அரிசிமா இடிப்போம், கிணத்திலே அள்ளிக் குளிப்போம், ஊர்முழுக்க சைக்கிள் ஓடித் திரிவோம். இங்கு புலம் பெயர்ந்து எல்லாத்துக்கும் இயந்திரங்களை வைத்துக்கொண்டு எமது உடல் சுகாதாரத்தை நாமே கெடுக்கிறோம். விளைவு, வயது ஏற ஏற எடுக்கும் குளுசைகளின் அளவும் கூடுகிறது. கொலஸ்ட்ரோல், சுகர், BP, என்று வாயினுள் புகாத வருத்தங்கள் எல்லாம் வந்து ஒட்டிக் கொள்ளுகின்றன. ஊரிலே இருக்கும் எண்பது வயது முதியவர் எங்கே, புலம்பெயர்ந்து இருக்கும் அறுபது வயது முதியவர் எங்கே.

ஊரிலும் கைத்தொலை பேசியில் தான் வாழ்க்கை நகர்வதாகவும் எல்லோருமே செம பிசி என்றும் தனது நண்பனின் கசப்பான அனுபவத்தினைப் பாடமாகக் கூறி இருந்தார். நடுவர்களே, நான் புலம் பெயர்ந்த பின்னர் மூன்று தடவை இலங்கைக்கு சென்றிருக்கிறேன். அங்கிருப்பவர்கள் வேலை வெட்டி இல்லாமல் சும்மா இருக்கவில்லை. ஆனால் அவர்களின் அந்த பிசியிலும் எமக்காக நேரம் ஒதுக்கி செலவழித்தார்கள். அத்துடன் அங்கிருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என நாம் கூற நீங்களே "எல்லாரும் தனியார் கமபனிகளில் வேலையாம்..எப்படா வந்தனி என்று கேட்டுவிட்டு சரி இரு வேலைக்கு போகணும் பின்னர் நேரம் இருந்தால் சந்திப்பம் என்று விட்டு எல்லோரும் அவரவர் வேலைக்கு என்று பிஸியாகிவிட்டார்களாம்" என ஒரு கருத்து தந்திருக்கிறீர்கள் (அடி செம் சைட் கோல் போட்டிடான்). உங்கள் அணியினர்தான் அங்கு வேலையில்லை, வேலை வாய்ப்பு இல்லை எனக் கூறி இருந்தார்கள். அவர்கள் நீங்கள் கூறியதை ஒருமுறை படிப்பது நல்லது. மனிதர்கள் ஊரிலும் இங்கும் பிசி தான் ஆனால் எவளவு பிசி என்பது பற்றித்தான் நாம் கதைக்கிறோம். தற்போது வெளிநாட்டிலிருந்து போபவர்கள் காட்டுவதற்கு என்று எதுவுமே இல்லை. அவர்களிடமும் கார்கள் இருக்கு, சகல இலத்திரனியல் உபகரணங்களும் புதிது புதிதாக வாங்குகிறார்கள். எங்கள் கைத்தொலை பேசிகளை விடத் திறமான தொலைபேசிகள் அங்கு இருக்கு.

அடுத்ததாக எனது வாதங்களை முன்வைக்க விரும்புகிறேன்.

நாம் அனைவரும் புலம் பெயர்ந்ததால் ஒருவகையில் பாதிக்கப்பட்டிருக்கிறோம். குறிப்பாக சமூக உளவியல் ரீதியில். யுனெஸ்கோவின் வாழ்க்கைத்தரச் சுட்டியைப் பார்த்தால் அது வாழ்க்கைத்தரத்திலே பொருளாதாரத்துடன் சமூகக் காரணிகளையும் உள்ளடக்குகிறது. ஆகவே நாம் புலம் பெயர்ந்ததால் தான் சமூக பொருளாதார முன்னேற்றம் அடைந்தோம், இல்லாவிட்டால் எதுவுமே நடந்திராது எனக் கூற முடியாது. ஊரில் இருந்திருந்தால் இதைவிட நாம் சிறப்பாக இருந்திருக்க முடியும் என்பதே எனது ஆணித்தரமான கருத்து. புலம் பெயர்ந்து நாம் ஒன்றை இழந்தே இன்னொன்றை பெற்றிருக்கிறோம். எமது நேரத்தை, குடும்ப வாழ்க்கையை, உடல் சுகத்தை, பிள்ளைகளின் கலாச்சாரத்தை, எல்லாவற்றிற்கும் மேலதிகமாக மொழியை இழந்திருக்கிறோம். புலம்பெயர் தேசத்தின் பணமும் சுகங்களும் ஒரு விலையுடன் வருபவை. ஊரின் பல நன்மைகளும் சுகங்களும் இலவசமாக வருபவை. முக்கியமாக விலைமதிப்பற்ற எமது மண் எனும் உணர்வு விலைமதிப்பற்றது. வாழ்க்கையை அணு அணுவாக இரசித்து வாழ்வது ஊரில் மட்டும்தான் சாத்தியம். நாம் பலவருடங்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், நாம் அந்நியராகத்தான் அந்தந்த நாட்டு மக்களால் பார்க்கப்படுவோம். அத்துடன் நிறவெறி இல்லை எனக் கூறுபவர்கள் தம்மைத்தாமே ஏமாற்றுகிறார்கள் என்பதையும் கூறி வைக்க விரும்புகிறேன். ஊரிலே போய்  இறங்கும் போது, அந்த வெயில் படும் போது இருக்கும் சுகம் இங்கு இருக்கும் எதிலுமே இல்லை.   டொலர்களும், ஐபோனும்,புதுக் கார்களும், மாட மாளிகைகளும், சனி ஞாயிறு தண்ணிப்பாட்டிகளும் மட்டும் வாழ்க்கை அல்ல. அதற்கு மேலும் ரசிப்பதற்கு, ருசிப்பதட்கு என்றால்ஊருக்குத்தான் போகவேண்டும். முன்பு ஊரில் மின்சாரம் இல்லை, மருந்து இல்லை,கணணி இல்லை, தொலை பேசி இல்லை ஆனால் நிம்மதி இருந்தது ஆகவே ஒருவர் சிறப்பாக வாழ்தலுக்கு இவை அவசியமே இல்லை.

எனக்கு இந்த அருமையான சந்தர்ப்பத்தை ஏற்ற்படுத்தித் தந்த யாழ்களம், மற்றும் அனைவருக்கும் குறிப்பாக இதனை ஒழுங்கமைத்த அன்பு நண்பன் சுண்டலுக்கும் நன்றி கூறி,

 

புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம்
என்ற கவலையே ???

 

என ஆணித்தரமாக் கூறி நடுவர்கள் நல்லதொரு முடிவை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் விடை பெறுகிறேன், நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சுபேஸ் என்னையே தன் வாதத்தால் ஆட்டங் காண வைத்துவிட்டார். நான் உங்களுக்கு ஒன்றும் செய்யவில்லையே. ஏனைய்யா அப்பப்ப என்னை இழுக்கிறீர்கள். :D

சுபேஸ் அவர்கள் புலம்பெயர் வாழ்வால் நாம் பெற்றிருக்கும் நன்மைகளை அக்குவேறு ஆணிவேறாக அடுக்கிக் கொண்டே போகிறார். அவர் கூறுவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இத்தனை வசதி வாய்ப்புக்களை புலம்பெயர்ந்ததனாலேயே நாம் திகட்டத் திகட்ட அனுபவிக்கின்றோம் என்னும் அவர் வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

அங்கிருந்திருந்தால் ஒவ்வொரு விடயத்துக்கும் எத்தனை துன்பங்களைத் தாண்டியும் சுமந்துமே நாம் வாழவேண்டி இருந்திருக்கும். எந்த இனமாக இருப்பினும் பொருளாதாரத்தில் நிறைவு கண்டாலொழிய அந்த இனம் வாழ்வில் முன்னேற்றம் காண முடியாது. உலக மயமாக்கலில் எல்லோருமே ஆட்படவேண்டியே இருக்கின்றது. அது எம் தேசம் என்றாலென்ன புலம்பெயர் தேசம் என்றாலென்ன என்கிறது அவர் வாதம்.
ஏற்றத்தாழ்வுகள் இங்கு இருப்பதிலும் அங்கெ தான் அதிகமாக இருக்கின்றது. எமக்கான வாழ்வை நாம் இங்கிருக்கின்ற படியால் தான்  இத்தனை மேம்படுத்திக் கொள்ள முடிகிறது. இயற்கை கூட எங்கும் ஒன்றுதான் நாம் தான் அதை அனுபவிக்கத் தெரியாது வாழ்கின்றோம் என்கிறார்.

எதிரணியினருக்கு வேலை கொஞ்சம் அதிகமாகும் என்று அவர் வாதத்திலிருந்து தெரிகிறது. அவரது வாதங்களைத் தகர்க்க எதிரணியால் முடியுமா பார்ப்போம்.




 

  • கருத்துக்கள உறவுகள்

நடுவர் மெ..சொ.ப்..ப..தே..மி..யா.. சு..மே..ரி..ய..ர் அவர்களே.. :D எங்கள் அணியின் சுபேஸ் உறையாற்றி முடிந்து அதன் பின்னர் எதிரணியின் தும்பளையானும் தனது உரையை முடித்துவிட்டார்..! :unsure: நீங்கள் இப்பதான் காந்தி உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கிவிட்டாரா என்று கேட்கிறீர்களே..! :D

 

சரி.. அடுத்ததாக எங்கள் அணியின் யாழ்வாணன் தனது உரைய ஆற்றத் தயாராக இருக்கிறார்..! அவரை அழைக்க நீங்கள் இருவரும் தயாரா, நடுவர்களே??! :D

  • தொடங்கியவர்

வால்ட்டேயரினுடையதும்  , விக்ரர் கியூகோவினுடையதும் கலந்த சிந்தனைகளை சுபேஸ் எடுத்து விட்டார் என்று சொல்வேன் .

 

"மனிதமனமே இப்படி விசித்திரமான ஒன்றுதான்...இல்லாத ஒன்றுக்காக ஏங்குவது..அதையும் ஊரில் போய் வாழ்ந்தால் சிறப்பாக வாழலாம் என்ற விவாதத்துக்கும் முடிச்சுபோடுவது காளைமாட்டை கட்டிவச்சு கட்டையால் அடித்து பால்கறக்க முயல்வது போன்றதே.. "

 

மனிதமனத்தின் பிறள்வுகளை இந்தவயதில் சொல்வதற்கு ஓர் தனித்திறமைவேண்டும் . அதிலும் கிராமியச் சூழல் புலம்பெயர் தேசத்திலும் உண்டு தெரிவு செய்யாதது உங்கள் பிழையே என்று எதிரணியை ஆட்டம் காண வைத்து , தான் கலுவாஸ் பரம்பரையிலே வந்தவன் என்று எதிரணியைத் துவட்டி எடுத்தார் சுபேஸ் . எதிரணி என்ன செய்யப் போகின்று??? கேள்விக்குறியே ....... ஆனாலும் ,

 

"எல்லோருக்கும் ஊரைப்பிரிந்த வலி..அந்த நினைவுகள் உள்ளே இருக்கும்தான்... "

 

என்று எதிரணிக்குப் பிடியைக் கொடுத்துவிட்டீர்களே சுபேஸ்???

 

அடுத்துவந்த கங்காரு தேசத்துக் கட்டிளங்காளை , கங்காரு போல ஒரே பாய்ச்சல் அப்பிடியொரு பாய்ச்சல்.  கட்டிளம் காளையல்லவா முட்டிமோதி பெடல் எடுத்துவிட்டது . தும்பளையானின் பேச்சில் சேற்று மணம் என் மூக்கை அடைத்தது . தும்பளையான் பந்தி பந்தியாக வாதம் செய்த அணியை  ,

 

"கப்பல் கப்பலாக ஆயுதத்தை இறக்கினோம் ஆனால் அதனை எடுத்து பாவிப்பதற்கு ஆட்கள் இல்லாமல் முடக்கி வைத்தோம். புலம்பெறந்த நாம் அனைவரும் ஊரிலே இருந்திருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்குமா? "

 

என்று ஓரே கேள்வியினால் தலைகுப்பற விழுத்தியிருக்கின்றார் . அத்துடன் விட்டாரா  துல்லியமான புள்ளி விபரங்களுடன் ,

 

"யுனெஸ்கோவின் வாழ்க்கைத்தரச் சுட்டியைப் பார்த்தால் அது வாழ்க்கைத்தரத்திலே பொருளாதாரத்துடன் சமூகக் காரணிகளையும் உள்ளடக்குகிறது."

 

என்பதன் மூலம் தனது அணிக்கான தராசை உயர்த்தி விட்டிருக்கின்றார் . உம்...........  தம்பி இஞைக்கலைஞன் .......உங்கள் நிலையை பார்க்க என்னசொல்வதென்றே தெரியவில்லை  . ஆனால் நேரம் கடக்கவில்லை . எங்கே அழையுங்கள் உங்கள் சக்கராயுதத்தை.............

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பிட்ட களைப்புத் தீரக் கொஞ்சம் கண்ணயர்ந்தால், கூப்பிடக் கூப்பிட வாராதவை இப்ப பஞ்ச காலத்தில பாணுக்கு வரிசையில நிண்டமாதிரி வந்து நிக்கிறியள்.  பொறுங்கோ எண்டால் நிக்கவே போறியள்???

 

சரி சரி வாங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்ணின் மீட்பிற்கும்
மக்களின் சுபீட்சத்திற்கும்
மகத்தான தியாகம் செய்த
மாவீரர் தெய்வங்களையும்
அவர்களோடு தோளோடு
தோழாய் நின்று மரணித்த
உறவுகளையும் மண்டியிட்டு
வணங்கியபடி


அகவை பதினைந்தை ஆரத்தழுவிய
அழகி எங்கள் யாழ் களத்தினில்,

பண்பொன்று எமக்குண்டு
பட்டி மன்றம் அதிலுண்டு
பார்வையாளர் பலருண்டு
பேசிடுவோர் எம்மிலுண்டு
நடுத்தீர்க்க நாமுண்டு
நடக்கட்டும் போட்டியின்று

என்றவாறு கம்பீரமாக அமர்ந்திருக்கும் நடுவர் பெருமக்களே !

பார்ப்போம், விசிலடிப்போம், கரகோசமிடுவோம்,புளங்காகிதமடைவோம் என்று பதட்டமில்லாமல் அமர்ந்திருக்கும் பார்வையாளர் பெருந்தகைகளே !

புலம்பெயர்ந்த தமிழ் மக்களாகிய எமது ஊர் பற்றிய கவலையானது நாம் ஊரைவிட்டுப் பிரிந்திருப்பதே தவிர, சிறந்த வாழ்வியலை இழந்த கவலையல்ல. என்று என்னோடு இணைந்து வாதிட வந்திருக்கும் என் சகோதரச் சிங்கங்களே !

தோல்விக்குத் தாலி கட்டி
நடத்திடுவோம் தாம்பத்தியம்

என்று கங்கணம் கட்டியபடி அமர்ந்திருக்கும் என் எதிரணித் தோழர்களே

உங்கள் அனைவருக்கும்
என் நாவில் தவழ்ந்திடும் கலைவாணியின் ஆசியுடன்
என் அன்னை பொதிகைச் செல்வி தமிழ் மாதா புகழ்பாடும்
செந்தமிழால் வணக்கங்கள்



எங்கள் அணியிலிருந்து,
தைரிய லக்ஷ்மி தமிழச்சி புயலாய் வீசிட
தம்பி ஜீவா தன்மையாய் இயம்பிட
சுந்தரத் தமிழால் சுபேசும் சொல்லிட

நீங்கள் எல்லாம் எவ்வளவு சொன்னாலும்
எங்கள் செவிகளில் சங்குதான் முழங்கினாலும்
விரியாத செவிப்பறையுடைய
செவிடர்கள் நாங்களென்று அமர்ந்திருக்கும் எதிரணியினருக்கு,

புலம்பெயர்ந்த தமிழ் மக்களாகிய எமது ஊர் பற்றிய கவலையானது நாம் ஊரைவிட்டுப் பிரிந்திருப்பதே தவிர, சிறந்த வாழ்வியலை இழந்த கவலையல்ல !
என்பது மறுக்கவோ, மறைக்கவோ, மறக்கவோ முடியாத உண்மை என்று கூறியபடி ஆரம்பிக்கிறேன் நடுவர்களே என் வாதத்தை.


வாத்தியார் - வைத்தார் அவர் பெயருக்கு ஏற்றதொரு வாதம் நடுவர்களே !
அன்று தொட்டு இன்று வரை வாத்திமார் செய்வது ஊருக்கு உபதேசம் மட்டுமே என்பதை நிரூபித்து விட்டார் எமது யாழ் கள வாத்தியார்.

இவர் கேட்கிறார்,
புலம் பெயர்ந்த வாழ்க்கை எல்லாம் ஒரு வாழ்க்கையா? என்று
அப்படிக் கேட்பவர் இந்த நிமிடம் வரை ஏன் இந்தப் புலம் பெயர் மண்ணில் வாழ்கின்றார்? சத்தியமாக எனக்கென்றால் விளங்கவில்லை நடுவர்களே ! இப்படிக் கேட்பவர் பேசாமல் ஊருக்குப் போக வேண்டியது தானே ! ஏன் போகவில்லை??? அவருக்கே தெரிகிறது புலம்பெயர் தேச வாழ்வு சிறப்பு மிக்கதென்று.

என்ன செய்ய, விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதற்கமைய,

- இயந்திர வாழ்க்கை
- காலையில் கணவன் ஒருபுறமும் மனைவி இன்னொரு புறமும் வேலைக்குச் சென்றால் இரவு வீடு திரும்பும் வரை
கைத்தொலைபேசியில் தான் அவர்கள் குடும்பம் நடாத்துகின்றார்கள்
- தலைமறைவு வாழ்க்கை என்றெல்லாம் தன் கையாலாகாத் தனத்தை மறைப்பதற்காகப் பிதற்றுவது மட்டுமல்லாமல்

“சீரும் சிறப்புமாக சொந்த நாட்டில் வாழ்ந்த ஈழத் தமிழர்கள் இன்று புலம்பெயர்ந்த பின்னர் சீரழிந்து வாழ்கின்றனர். நாங்கள் புலம்பெயராமல் இருந்திருந்தால் எங்களுக்கு இந்த நிலை வந்திருக்குமா?”
என்றும் புலம்புகிறார்.

அவையோரே ! நடுவர்களே ! அவரிடம் நான் கேட்கிறேன் - சொந்த நாட்டில் வாழ்ந்த ஈழத் தமிழர்கள் வாழ்க்கை சீரழிந்து கொண்டு இருந்ததால் தானே நாங்கள் புலம் பெயர்ந்தோம். இந்த வாத்தியார் கூறுவது போல் புலம் பெயர்ந்தவர்கள் வாழ்வு சீரழிந்து கொண்டிருக்கிறது என்றால் அவர்கள் திரும்பிப் போயிருப்பார்கள் தானே? அதற்கான சுதந்திரமும் வசதிகளும் அவர்களுக்கு உண்டு தானே அவர்கள் ஏன் இன்னும் போகவில்லை?

உணவில் கிருமி நாசினியாம் இரசாயனப் பொருட்களாம் என்றெல்லாம் புலம்பினார் - அதற்குத்தான் என் அருமைத் தம்பி சீறும் சிங்கம் சுபேஸ் பதில் கொடுத்து விட்டார் அதனால் அவற்றைப் பற்றிப் பேசி உங்கள் அனைவரது நேரத்தையும் வீணடிக்க நான் விரும்பவில்லை.

ஆனாலும் நடுவர்களே வாத்தியார் இன்னும் சில விடயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்

கேணி என்றார், கட்டு என்றார், தென்றல் என்றார், திங்கள் என்றார் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அந்தக்கேணிக் கட்டில் சற்றுக் கவனயீனமாக நடந்தால் அப்படியே விடவேண்டியது தான். ஏனெனில் அங்கு எவ்விதப்பாதுகாப்பும் கிடையாது. தவறிவிழாமல் இருப்பதற்குக் கட்டில் வளரும் பாசிகூட துப்பரவு செய்யப்பட்டிருப்பதில்லை.
புலம்பெயர்ந்த நாடுகளில் இந்தக்கேணிகளை மிஞ்சும் அளவிற்கு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தடாகங்களும் நீர்த்தேங்கங்களும் ஏன் தானாகப் பாய்ந்தோடும் வாய்க்கால்களும் கூடச் சுத்தமாகவே பேணப்பட்டுவருகின்றன. இவற்றை இவர் பார்த்ததில்லையா?
அடுத்துத் தென்றல்என்றார். ஊரில் வீசுவதுதென்றல் என்றால் இங்கு வீசுவது மட்டும் புயலா? இன்னுமொரு இடத்தில்கூறுகிறார், சொந்த மொழியில் பேச வழியில்லாமல் சோகமாகப் போகின்றதாம் புலம் பெயர்ந்தவனின் வாழ்க்கை. நடுவர்களே, உங்களிடமும் இங்கு குழுமியிருப்பவர்களிடமும், எல்லோரிடமும் தான் நான் கேட்கின்றேன், புலம்பெயர்ந்த மண்ணிலிருந்து கொண்டுதானே வாத்தியார் இந்தப்பட்டிமன்றத்தில் பேசினார். அவர் சொந்த மொழியான தமிழில் பேசினாரா அல்லது வேற்று மொழியில் பேசினாரா? வாதம் செய்கின்றேன் என்ற பெயரில் இந்த வாத்தியார் விட்ட டூப்புக்களை அடுக்கிக் கொண்டு போனால். இவருக்குப்பின் வந்தவர்களின் விதண்டாவாதங்களை வெளிக் கொணர்வதற்கு எனக்கு நேரம் போதாது போய்விடும். ஆகவே, அடுத்து வருகிறேன், இருள் நீக்கி ஒளி வீசவந்த பகலவன் என்று கூறப்பட்ட அந்தப் பெருந்தகையின் வாதத்திற்கு.

இருள் நீக்க வந்த பகலவரே! ஐயாபெரியவரே! மற்றையவர்கள்இருள் நீக்க முயலு முன் உங்களைச் சூழந்துள்ள இருளை நீக்க முயலுங்கள். எங்கள்தைரியச்செல்வி. தமிழச்சியிடம் என்ன கேட்டீர்கள்?அவன் சோமாலி, இவன் இந்தியன் என்று எத்தனையோ வேலைவாய்ப்புகள் மறைமுகமாகத்தடுக்கப்படுவது தெரிவதில்லையா என்று கேட்டீர்களா? யாரிடம் சொல்லியழ உங்கள் கேள்வியை. இன்றைய அமெரிக்க ஜனாதிபதி என்ன வெள்ளைக்காரனா? நடுவர்களே தெரியாமல்தான் கேட்கிறேன், நீங்களாவது சொல்லுங்கள். 2003ஆம்ஆண்டில் நாசா விண்வெளி விபத்தில் இறந்த கல்பனா சாவ்லா என்ன வெள்ளைக்காரியா? அதைவிட, நீங்கள்வாழும் நோர்வேயில், தமிழ்ப் பெண்மணியைக் கவுன்சிலராக நேர்வோஜிய மக்கள்தெரிவு செய்யவில்லையா? 2007ஆம்ஆண்டு, நீங்கள் வாழும் அதே நோர்வே நாட்டில் ஊடகத்துறைக்கான நோர்வேஜிய நாட்டு விருதொன்றை ஈழத்தமிழர் ஒருவர் பெற்றதை நீங்கள்அறிந்திருக்கவில்லையா?அப்படியானால், நீங்கள் இன்னும் இருட்டில் தானா வாழ்கிறீர்கள்? அல்லது நீங்கள் குறிப்பிட்ட பூனை வகையைச் சார்ந்தவரா நீங்கள்?
புலம்பெயர்ந்த சிறிது காலத்திலேயே புலம்பெயர் தமிழர்கள் பல்வகையான சாதனைகளைச் சாதித்திருக்கிறார்கள். இவ்வகைச்சாதனைகள் அங்கு வாழ்ந்திருந்தால் நிகழ்ந்திருக்குமா?அண்மைக்காலங்களில் அங்கு நிகழ்த்தப்பட்ட பாரியசாதனைகள் கூடபுலம்பெயர் தமிழ்மக்களின் உதவிகளோடுதான் நிகழ்ந்தன என்பதை மறுக்கமுடியாது என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
புலம்பெயர் தேசத்தில் உழைப்பின் சுரண்டல்கள் தான் அதிகம் என்றீர்கள். ஐயா நீங்கள் ஊரில் இருந்ததே இல்லையா? சுரண்டல் என்பதற்கு வரைவிலக்கணமே ஊரில்தானே இருக்கிறது? அங்கே ஏழைக் குடும்பங்களைச்சேர்ந்தவர்கள் வயல், காணிகளில் வேலை செய்த போது அவர்களுக்குத் தகுந்த ஊதியமா கொடுத்துவந்தார்கள்?அல்லதுஏற்றத்தாழ்வுகள் இன்றி நடத்தினார்களா?இலவசமாகக் கற்றுக் கொடுக்க வேண்டிய கல்வியைக்கூட பாடசாலைகளில் ஒழுங்காகக் கற்றுக் கொடுக்காது தனியார் நிறுவனங்களில் கற்றுக் கொடுப்பதை இவர்கள் அறிந்ததே இல்லையா?

இங்கே சிறுவர்கள் காப்பகத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதைப்பற்றிப் புலம்புகிறார்இவர். இங்கே, குறைந்தபட்சம்அந்தப்பிள்ளைகள் காப்பகத்திலாவது உயிரோடும் நிம்மதியாகவும் சிறப்பாகவும் வாழக்கூடியதாக இருக்கிறது. ஆனால் அங்கோ வறுமையின் நிமித்தமும் பராமரிக்க முடியாமையின் நிமித்தமும் எத்தனை பிள்ளைகளின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. எத்தனை பிள்ளைகள் தெருவோரங்களில் அநாதரவாகக் கிடக்கிறார்கள். அந்தப்பிள்ளைகள் புலம்பெயர் தேசங்களில் இருந்திருந்தால் அவர்கள் காப்பகத்திலாவது உயிருடனும் கௌரவத்துடனும்சிறப்பாக இருந்திருப்பார்கள். நடுவர்களே, நீங்களாவது இருளில் மூழ்கியிருக்கும் எங்கள் பகலவனுக்கு, பகலவனாக இருப்பீர்களா?

இவர் ஜீவாவிடம் புலம்பெயர் தேசங்களில் வாழும் எமது போராளிகளின் நிலைகளைப்பற்றிக் கேட்டிருந்தார். அவர்கூற்றுப்படி அவர்கள் இரவுகளைத் தூக்கமின்றிக் கழிக்கிறார்களாம். அவரிடம் நான் கேட்கிறேன், புலம்பெயர் தேசங்களில் தஞ்சம் புகுந்திருக்கும் எம்போராளிகள் எதுவித அச்சுறுத்தல்களுமின்றி, இந்நாடுகளில் வசிப்பது இவரது கண்களுக்குத் தெரியவில்லையா?

இவர் கூறும் அதே போராளிகள் புலம்பெயராது தாயகத்தில் தொடர்ந்து இருந்திருந்தால் அச்சுறுத்தலோ உயிராபத்தோ இன்றி இருந்திருக்க முடியுமா? அங்கு தொடர்ந்தும் இருக்கும் பெண் போராளிகளும் ஆண் போராளிகளும் அவர்கள் போராடினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தமது சொந்தக்குடும்பங்களாலும் உறவினர்களாலும் இராணுவத்தினராலும் விரட்டி அடிக்கப்படுவதை இவர் அறியவில்லையா?
அதனிலும் மேலாக, ஏற்றிப் போற்றப்பட வேண்டிய போராளிகள் குறிப்பாகப் பெண் போராளிகள் இப்படி ஒதுக்கப்படுவதால் தமது குடும்பங்களைப் பராமரிப்பதற்காக விபச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதை இவர் அறியவில்லையா? - தாயகத்தை நேசிப்பதாகக் காட்டிக்கொள்ளும் இவர் தாயகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வாறான அவலங்களை அறியாதிருப்பது வேதனைக்குரிய விடயம். எங்களணியின் வாதங்களை முடியடிக்கிறேன் என்ற பெயரில் இவர் ஏதேதோ எல்லாம் புலம்பியிருந்தார். இவரது புலம்பல்கள் இவருக்கே விளங்கியிருந்ததா என்பதைச் சற்றுக் கேட்டுச் !சொல்லுங்கள் நடுவர்களே!

அடுத்து, தும்பளையானின் தும்பாயப் போய் விட்ட வாதங்களை சற்று ஆராய்வோம் நடுவர்களே. அவருக்கு எமது தைரியப்புயல் கூறியது விளங்கவில்லை போலும். அதனால் தானோ என்னவோ எடுத்த எடுப்பிலேயே குறைந்த சம்பளத்தில் நிறைவாக வாழ்பவர்கள் அரசாங்கத்தை ஏமாற்றுகிறார்கள் அல்லது கள்ளமட்டை அடிக்கிறார்கள் எனக்கூறுகிறார். ஏன் நடுவர்களே எதிரணியினருக்கு புலம் பெயர்நாடுகளில் நடக்கும் இவ்வாறான ஈனச்செயல்களே அதிகம் தெரிந்திருக்கிறது. இதிலிருந்தே தெரிகிறது இவர்கள் கண்களுக்கு நல்லவை புலப்படுவதில்லை என்று.

எமதுதைரியப்புயல் பெற்றோர் பிள்ளைகள் நெருக்கம்பற்றிக் கூறியதற்கு இவர் கூறுகிறார் புலம்பெயர்தேசங்களில் அவ்வாறான நெருக்கம் இல்லை என்று - புலம்பெயர்ந்த பின்புதான் எம்மவர்கள் ஊரிலிருந்ததை விட பிள்ளைகளுடன் அன்பாகவும் மரியாதையாகவும் பழகுகிறார்கள், இரண்டு வருடத்திற்கு ஒரு தடவையேனும் வெளிநாட்டுப்பயணம், சுற்றுலா என்றெல்லாம் அழைத்துச் செல்கிறார்கள் நண்பர் தும்புவினதும் அவரது அணியினரதும் கண்களுக்கு இவை தெரியவில்லையா?


நடுவர்களே பெரியோர்களே இவரது வாதத்தின் பெரும்பகுதியை இவர் எமது தைரிய லக்ஷ்மியைத் தாக்குவதில் தான் செலவிட்டிருக்கிறார். அதிலிருந்து என்ன புலப்படுகிறது என்றால் புலம்பெயர்ந்து வந்தும் இவர் திருந்தவில்லை என்பதுதான், அதாவது இவரது ஆணாதிக்க வெறி அடங்கவில்லை என்பதுதான்

ஒரு ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்திலிருந்து தோற்றம் பெற்ற ஒரு தமிழ் மகள் ஆணித்தரமாகத் தனது கருத்துக்களை வைக்கிறார் என்றால் அது போற்றற்குரிய விடயம் என்பது நிச்சயமாக நடுவர்களான உங்களுக்குப் புரிந்திருந்தாலும் பாவம் எங்கள் தும்பளையானுக்குப் புரியவில்லை என்பது வருத்தத்திற்குரிய விடயமே.

புலம்பெயர்ந்த இவராலேயே ஆணாதிக்கத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் இருக்கும்போது, ஊரில் இருக்கும் ஆண்களைப் பற்றிச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். இவரும் இவரது அணியினரும் கூறுவது போல் ஊரில் நாம் தொடர்ந்தும் இருந்திருந்தால் இவர்கள் போன்ற ஆண்களின் ஆதிக்கத்தின் கீழ் அங்கிருக்கும் பெண்களின் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதையும் சற்றுக் கற்பனை செய்து பாருங்கள் அவையோரே!

நாம் ஊரிலேயே இருந்திருந்தால் இன்று பல சாதனைகளைப் புரிந்திருக்கும் எமது தமிழ்ப் பெண்களால் இச்சாதனைகளைச் செய்திருக்க முடியுமா? தாயகத்தில் பெண்கள் தனியாக வாழக்கூடிய சூழ்நிலை இருக்கிறதா நடுவர்களே! அவ்வாறு தனியாக வாழும் பெண்கள் முகங்கொடுக்கும் பிரச்சனைகளைப் பற்றி இவர்கள் அறிந்திருக்கவில்லையா நடுவர்களே! ஏன் இன்னும் இவர்கள் கிணற்றுத் தவளைகளாக இருக்கிறார்கள்.?

தம்பி ஜீவாவின் வாதத்ததைப் பற்றிக் கூறும்போது,
சில விடயங்கள் முடிந்த பின்னர்தான் அவற்றின் தார்ப்பரியங்கள் புரிகின்றது என்றும், தான் புலம் பெயர்ந்த காரணமான உயர் கல்வி முடிவடைந்து விட்டது என்றும் இவர் கூறினார். அப்படியானால் இவர் தாயகம் திரும்பிப்போக வேண்டியதுதானே? அதை விடுத்து நாட்டுக்கு எந்த நேரமும் திரும்பிப் போகத் தயாராய் இருக்கிறேன் என்று என்ன பித்தலாட்டம்?
யாருக்குக் கண்ணா காதில் பூச் சுத்துகிறீர்?

அவருடைய பித்தலாட்டத்திற்கு வக்காலத்து வாங்குமாய்ப் போல கனடா வந்த ஒருவரின் கதைவேறு.

நடுவர்களே! எதிரணியினர் வாதிடுவது போல அங்கு சிறப்பான வாழ்வு இருந்திருக்குமானால், இவர்கள் ஏன் நாட்டை விட்டு வந்து புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களால் அங்கிருந்து கொண்டு போதியளவு பொருளீட்டி சிறப்பான வாழ்வை வாழமுடியாத காரணத்தினாலேயே புலம்பெயர் நாடுகளுக்குக் குடியேறியிருக்கிறார்கள். பட்டப்படிப்பு முடித்த இவர்களாலேயே அங்கு சிறப்பான வாழ்க்கை வாழ முடியாதிருக்கும்போது, வறுமைக் கோட்டில் இருப்பவர்களைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். கஞ்சியும் கூழும்தான் இவர்களுக்கு சிறப்பான வாழ்வெனில் இவர்கள் ஏன் படிக்கவேண்டும்? மேற்படிப்பிற்கெனவோ, பொருளீட்டவோ ஏன் புலம்பெயர்ந்திருக்க வேண்டும் நடுவர்களே!

எதிரணியினர் வாதிடுவது போல், ஊரில் சிறப்பான வாழ்வு இருக்குமாக இருந்திருந்தால் புலம்பெயர்ந்த தமிழர்களில் பலர் ஊருக்குத் திரும்பியிருப்பார்களே? ஏன் திரும்பவில்லை?அதிகபட்சம், முதியவர்களாவது அங்கு சென்று வாழ்வார்களே. நடுவர்களே, இதிலிருந்தே புலம்பெயர் நாடுகளில் நாம் மிகவும் சிறப்பாகவே வாழுகிறோம். இது அந்நிய நாடாக இருந்தாலும், எமக்கு இங்கு எவ்விதக் குறைகளும் இல்லை. எமக்கிருக்கும் ஒரேயொரு கவலை, நாம் எம் மண்ணை விட்டு, உறவினர்களை விட்டுப் பிரிந்திருப்பதே தவிர, அங்குள்ள சிறப்பான வாழ்வை இழந்த கவலையில்லை.

தம்பி சுபேசின் வாதங்களை முறியடிக்க இவருக்கு வலு இல்லை போலும் அதனால் சேம் சைட் கோல் என்று கூறி ஒரு மழுப்பு மழுப்பப் பார்த்தார்.

நடுவர்களே உங்களிடமும் இவரிடமும் நான்கேட்பது என்னவென்றால்

இவரர்களுக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு என்ன,

"புலம்பெயர் தமிழரின் ஊர்பற்றிய கவலையானது நாம்புலம் பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம்
என்ற கவலையே ????"

இவரது தலைப்பில் ஊரிலியே இருந்திருந்தால் என்பது இறந்த காலத்தைக் குறிக்கிறது. அதனால் தான் எமது அணியினர் அந்தத் தலைப்புக் குறிப்பது போல் நாம் எல்லா வகைகளிலும் இவ்வளவு முன்னேறி இருக்க மாட்டோம் என்ற கருத்துப்பட எமது வாதங்களை முன் வைக்கின்றோம். தமிழ் பேசினால் மட்டும் போதாது நடுவர்களே அதன நன்கு கற்றுணர்ந்து பேச வேண்டும். இவர் போன்றவர்கள் பிறப்பார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்ததாலோ என்னவோ அன்றே அந்த வள்ளுவப் பெருந்தகை
கற்கக் கசடற கற்பவை கற்றபின்
நிற்கஅதற்குத் தக
என்று எழுதிவைத்தார்.

அவையோரே! நடுவர்களே!

“புலம்பெயர் தமிழரின் ஊர்பற்றிய கவலையானது வெறும்பிரிவுகளின் கவலையே ??? ”
என்பது தான் எனது ஆணித்தரமான வாதம். நடுவர்களே உங்களிருவரிடமும் ஏன் இங்கு பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் எல்லோரிடமும் கூறுகிறேன். ஊரில் சுமுகநிலை தோன்றினால் கூட எம்மால் ஊருக்குச் சென்று வாழமுடியாது என்பதே யதார்த்தம்.

நீங்கள் எல்லோரும் புலம்பெயர் வாழ்வைத் துறந்து ஊருக்குப் போவீர்களா? முடியாது என்பதை உங்கள் உள்மனம் நிச்சயமாக ஒத்துக் கொள்ளும். ஏனென்றால் நீங்கள் எல்லோரும் புலம்பெயர் தேசங்களில் உங்களை கால்களை நன்கு நிறுவி விட்டீர்கள். இந்த நிம்மதியான வாழ்வை விட்டு உங்களால் இனிப் போக முடியாது. ஆகவே இனிமேலும் ஊருக்குத் திரும்பி பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்க உங்களால் முடியாது நீங்களும் புலம்பெயர் வாழ்வில் நீங்கள்அனுபவித்த சுகஙகளைத் துறந்து,

பரம்பரைக் காணி
வாத்தியார் ஏங்கிய கேணி
பகலவன் முத்தமிடத் துடித்திட்ட மண்
தும்பளையான் தேடிய வெய்யில்

என்பவற்றுடன் உங்களால் நிச்சயமாக இருக்க முடியாது என்பதுதான் உண்மை
இன்று அங்கு சிறப்பாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் பலர் புலம்பெயர் நாடுகளில் உள்ள உறவினர்களின் உதவியினாலேயே சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி ஊரில் இருப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் நாமும் அங்கு திரும்பிவிட்டால் அவர்களின் வாழ்வாதாரமே இல்லாமல் போய்விடும். அங்கு சிறப்பான வாழ்க்கை இருக்குமாக இருந்திருந்தால் புலம்பெயர்ந்த தமிழர்களில் பலர் நிச்சயமாகத் திரும்பியிருப்பார்கள் என்பதே உண்மை.

புலம் பெயர் மண்ணில் தற்காலிகமாகவேனும் பெரும் பதவிகளை வகித்துக் கொண்டு - மெசின் வாங்கித் தாங்கோ அத்தான், புட்டவிச்சுத் தாறன், இடியப்பம் அவிச்சுத் தாறன் என்று கூறும் எம் நடுவர் போன்ற பெண்கள் தாயகம் திரும்பி அரிசி ஊறவைத்து, உரலில் இட்டு மா இடித்து, இடியப்ப உரலாலும், புட்டுக்குழலாலும் அத்தானுக்கு அவித்துப் போட மாட்டர்கள் என்பதே இந்த நூற்றாண்டின் மறைக்கப்பட முடியாத உண்மை. யதார்த்தம் இப்படி இருக்கும் போது,

புலம்பெயர் தமிழரின் ஊர்பற்றிய கவலையானது நாம் புலம் பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம்
என்றகவலையே ????" என்பதெல்லாம், புலம் பெயர் மண்ணில் நன்றாக உண்டு கொழுத்து வாழும் எம் எதிரணியினர், தமது உடலில் இருக்கும் கொழுப்புக் கரைவதற்காக வைக்கும் விதண்டா வாதமே அல்லாமல் வேறொன்றுமில்லை. என்று உறுதியாகக் கூறிக்கொண்டு,

புலம்பெயர்ந்த தமிழ் மக்களாகிய எமது ஊர் பற்றிய கவலையானது எமது மண்ணையும் மக்களையும் பிரிந்திருப்பதே தவிர, அங்குள்ள சிறப்பான வாழ்வை இழந்த கவலையல்ல என்று மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொண்டு இதுவரை நேரமும் என் வாதத்தை செவிமடுத்த நடுவர்களுக்கும் என் கருத்துக்களை உள்வாங்கிய அவையோருக்கும், இனியும் தொடர்ந்து பேச வேண்டுமா இல்லையா என்று விழிகள் பிதுங்க வீற்றிருந்த என் எதிரணியினருக்கும் இப்பட்டி மன்றத்தில் என் வாதத்தை முன் வைக்க வாய்ப்புத் தந்த யாழ் நிர்வாகத்தினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு

வாழ்க தமிழ்
வளர்க யாழ் களம்
என்று வாழ்த்தியபடி அமர்கிறேன்

நன்றி
வணக்கம்.

  • தொடங்கியவர்

அப்பன் முருகனில் இருந்து புறப்பட்ட வேலாயுதம் நன்றாகவே தனது வேலையை செய்துள்ளது . வேலாயுதம் எதிரணியை சிறிது எகடியம் செய்வதில் நேரத்தை சிறிதளவு செலவிட்டாலும் இறுதியில் ,

 

"நீங்கள் எல்லோரும் புலம்பெயர் தேசங்களில் உங்களை கால்களை நன்கு நிறுவி விட்டீர்கள். இந்த நிம்மதியான வாழ்வை விட்டு உங்களால் இனிப் போக முடியாது. ஆகவே இனிமேலும் ஊருக்குத் திரும்பி பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்க உங்களால் முடியாது நீங்களும் புலம்பெயர் வாழ்வில் நீங்கள்அனுபவித்த சுகஙகளைத் துறந்து,

பரம்பரைக் காணி
வாத்தியார் ஏங்கிய கேணி
பகலவன் முத்தமிடத் துடித்திட்ட மண்
தும்பளையான் தேடிய வெய்யில்

என்பவற்றுடன் உங்களால் நிச்சயமாக இருக்க முடியாது என்பதுதான் உண்மை
,"


என்று எதிரணியின் நெஞ்சைப் பிளந்துதள்ளி விட்டது வேலாயுதம் . அத்துடன் விட்டதா ,

 

"அங்கு சிறப்பான வாழ்வு இருந்திருக்குமானால், இவர்கள் ஏன் நாட்டை விட்டு வந்து புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களால் அங்கிருந்து கொண்டு போதியளவு பொருளீட்டி சிறப்பான வாழ்வை வாழமுடியாத காரணத்தினாலேயே புலம்பெயர் நாடுகளுக்குக் குடியேறியிருக்கிறார்கள். "

 

என்று ஒரு சர்ச்சைக்கு உரிய கேள்வியை தொட்டுச் சென்றது . இந்த இடத்தில் எனது அனுபவம் ஒன்றை சொல்ல விழைகின்றேன் .

 

எனது மச்சான்கள் மூவர் தாயகத்தில் இருக்கின்றார்கள் .ஒருவர் பிரபல மிருகவைத்தியர் .இறுதியில் வடபிராந்திய மிருகவைத்திய துறைக்கு பணிப்பாளராக இருந்தவர் . பல மகாநாடுகளுக்கு ஐரோப்பா எங்கும் செல்பவர் . இரண்டாமவர் வடபகுதியில் பிரபலகண் வைத்திய நிபுணர் . இறுதியில் மந்திகை வைத்தியசாலையின் பிரதமவைத்தியராக இருந்தார் . மூன்றாமவரோ வடக்கு கிழக்கு விவசாயத்துறைக்கு இயக்குனராக இருக்கின்றார் . இவர்கள் மூவருமே ஒரு சாதாரண தமிழ் வாத்தியார் குடும்பத்தில் இருந்து வந்து , தாயகத்தின் அவலங்களில் இறுதிவரை மக்களுடன் மக்களாக நின்று தமது சேவைகளை தங்களது மண்ணுக்கே கொடுத்தார்கள் . இவர்கள் நினைத்திருந்தால் புலம்பெயர்ந்து கோடிகோடியாக பொருள் ஈட்டமுடியும் . இப்பொழுது சொல்லுங்கள் புலம்பெயரந்த தமிழன் சுதந்திரமானவனா ??? அல்லது இவர்களைப்போல் தாயகத்திற்கு ஒளியேற்றுபவர்கள் சுதந்திரமானவர்களா ???

 

யாழ்வாணன் புதியவனரானாலும் அவரது சொல்லாட்சியில் மயங்கியே விட்டேன் . யாழ் வாலியை பார்க்க பாவமாக இருக்கின்றது . என்னசெய்வது இது சதுரங்கம் காய்களை நகர்த்தியே ஆகவேண்டும் . எங்கே அழையுங்கள் உங்கள் சக்கரவியூகத்தை!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்வாணன் இரண்டு நாளின் பின் வந்தாலும் அவரின் வாதங்கள் என்னை வியக்க வைக்கின்றன. எம்மை ஓங்கி அறைகின்றன. எம் தலைகள் நிலம் நோக்குவதையும்தவிர்க்க முடியவில்லை. நல்ல காலம் இரண்டு நாளிலேயே வந்துவிட்டார்.இன்னும் சில நாட்கள் எடுத்திருந்தால் சுனாமியும் சேர்ந்து வந்திருக்கும்.

எதிரணியினர் ஆடிப்போயிருப்பார்கள். ஆறுதலாக அவசரப்படாது  கால்களை வடிவாக ஊன்றி நடந்து வாருங்கள். தைரிய லச்சுமியின் வாதத்தை இனியும் முறியடிக்க நினைத்தீர்கள்! எதிரணியினரே தொலைந்தீர்கள்
:D .

எனது அன்பு தந்தையின் நினைவுகளில் தோய்ந்து அவரது பாதார விந்தங்களை மானசீகமாக கண்களில் ஒற்றி தொழுதபடி,


அன்புக்கும், மதிப்புக்குமுரிய யாழ் உறவுகள், வாசகர்கள், நிர்வாகத்தினர், யாழ் சிறப்பு பட்டிமன்ற குழுவினர், நடுவர்கள், ஒழுங்கமைப்பாளர்கள் அனைவருக்கும் எனது இனிய வந்தனங்களையும் கூறியபடி,


அகவை பதினைந்தில் காலடிவைக்கும் யாழ் இணையத்திற்கு எனது வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்து மகிழ்கின்றேன்.

 

+++

 

"புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ??? இல்லை நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ????" எனும் தலைப்பிலான யாழ் சிறப்பு பட்டிமன்ற வாதத்தில் இசைக்கலைஞன் தலைமையிலான அணியினரும், யாழ்வாலி தலைமையிலான எமது அணியினரும் தமது கருத்துக்களை பல்வேறு கோணங்களில் அழகாகவும், சுவையாகவும் பகிர்ந்துள்ளார்கள். ஒவ்வோர் பேச்சாளர்களின் வாதத்தின்பின்னர் அவர்களிற்கு மணிமகுடம் சூட்டும்வகையில் நடுவர்கள் கோமகனும், மொசப்பத்தேமியா சுமேரியரும் பாராட்டுரைகளையும் வழங்கியுள்ளார்கள். அனைவருக்கும் எனது பாராட்டுக்களும் உரித்தாகட்டும்!

 

நண்பர் இசைக்கலைஞனின் அணி, அதற்கு கொடுக்கப்பட்ட வாதத்தின் பொருளின் அடிப்படையில் ஆரம்பத்திலேயே இங்கு தோற்றுவிட்டது.

 

காரணம்?

 

"வெறும் பிரிவுகளின்" எனும் பதம் வாதத்தில் அவர்களின் அத்தனை அலசல்களையும் இலக்கு நோக்கி வெற்றிக்கனியை பறிக்கமுடியாதபடி சல்லடை போட்டு பொடியாக்கிவிட்டது.

 

  • பிரிவுகள் புலம்பெயர்ந்தால் மட்டும்தானா வருகின்றன?
     
  • ஊரில் உள்ளவர்களிற்கு பிரிவுகள் இல்லையா?
     
  • தாயகத்திலேயே வெவ்வேறு ஊர்களிற்கு மாற்றலாகி செல்பவர்களிற்கு பிரிவுகள் இல்லையா?
     
  • ஓர் இடத்திலேயே நிலையாக நகராது வாழ்பவர்களிற்கு பிரிவுகள் இல்லையா?

 

அதேசமயம்...

 

நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் எனும் வாதப்பொருளின்பால், எமது அணியினர் ஆரம்பத்திலேயே வென்றுவிட்டார்கள்.

 

காரணம்?

 

  • சிறப்பு என்பது யாது?
     
  • சிறப்பு என்பதற்கு தனிநபர்களின் விளக்கம் யாது?
     
  • வெவ்வேறு தனிநபர்களிடையே சிறப்பு என்பதற்கான உளப்பொழிப்பு ஒரேமாதிரியானதா?
     
  • இங்கு சிறப்பாக இருந்திருப்போம் எனும்போது எதைவிட சிறப்பாக இருந்திருப்போம் என்று அளவுகோல், ஒப்புவமை கூறப்பட்டுள்ளதா?

 

அப்படியானால்...?


இங்கு எனக்கு என்ன வேலை என்று நீங்கள் கேட்கின்றீர்களா?

 

யாழ் இணையத்தின் அகவை பதினைந்தை பட்டிமன்றத்தில் கொண்டாடுவதற்கு என்ன செய்யலாமென்று சிந்தித்த கனம் நடுவர்கள் கோமகனும், மொசப்பத்தேமியா சுமேரியர் அவர்களும் சுவையான பலாப் பழமொன்றை தருவித்து அதன் கோதான சக்கையை இசைக்கலைஞனிடமும், சுளையுள்ள சுவைப் பகுதியை யாழ்வாலியிடமும் பங்கிட்டு கொடுத்துள்ளார்கள்.

 

"அடேயப்பா, வெறும் சக்கையை சப்புவதற்கு நாங்கள் என்ன ஆடு, மாடா?" என்று அங்கலாய்த்து ஆவேசமுற்ற இசைக்கலைஞனின் தலைமையிலான அணியினர் பலாச் சக்கையினுள்ளேதானே அதன் சுளைகளும் உள்ளன. எனவே, சுளைகளிற்கு உரித்துடையவர்கள் நாங்களே என்று திட்டமிட்டு செயற்பட...

 

பலாச் சுளைகள் எங்களுக்குத்தானே! எனவே சுளைகளை சுற்றியுள்ள சக்கையை தாராளமாக புறக்கணிக்கலாமே என்று யாழ்வாலியின் தலமையிலான எமது அணியினர் திட்டமிட்டு செயற்பட...

 

இரண்டு அணியினரும் பலாப்பழத்தினுள் புகுந்துவிளையாடி, நடுவர்கள் தருவித்த பலாப்பழம் தற்போது பட்டிமன்றத்தில் உக்கிர சங்காரம் செய்யப்பட்டபின்னர் வாதத்தின் கோரத்தில் ஒருபுறமாக சக்கை கோதுகளும், மறுபுறமாக பலாச்சுளைகளும் பிரிக்கப்பட்டு உங்களுக்காக காத்து இருக்கின்றன.

 

அதாவது?

 

உங்கள் கைகளிற்கு எண்ணை தடவி, பலாச்சுளையை நீங்கள் உண்பதற்கு உதவுவதே இங்கு எனது நோக்கமாகும். சுளைப்பகுதிக்கு உரித்துடையவர்தானே கைகளில் தடவுவதற்கு எண்ணையை வழங்கவேண்டும்? எனவே யாழ்வாலி தலைமையிலான அணியிலிருந்து இந்தப்பணியை செய்வதற்கு நான் சமூகம் தந்துள்ளேன்.

 

ஆம், பால்... அந்தப்பலாப்பால்!


இந்தப்பலாப்பால் எப்படி உங்கள் கைகளில் ஒட்டி, தலைமயிரில் ஒட்டி, மீசை, தாடியில் ஒட்டி, கை, கால்களில் ஒட்டி சுவையான பலாச்சுளைகளை உண்ணமுடியாதபடி உங்களிற்கு ரோதனை தரக்கூடியதோ, அவ்வாறானதே இந்தப்பட்டிமன்றத்தில் உங்களுக்கு ஏற்படக்கூடிய பொருள் மயக்கமும் ஆகும்.

 

அன்பு உறவுகளே,

 

  • நாம் என்பது யார்? நமது ஊர் என்பது எது?
     
  • நாம் என்பது ஒருசிலரை குறிக்கின்றதா அல்லது அனைவரும் சம்மந்தப்பட்ட ஒட்டுமொத்த ஈழத்தமிழர் சமூகத்தை குறிக்கின்றதா?
     
  • ஊர் என்பது ஓர் குறிப்பிட்ட புவியியல் நிலப்பரப்பை குறிக்கின்றதா அல்லது பெருநிலப்பரப்பான தாயகத்தை குறிக்கின்றதா?

 

மீண்டும் சிந்தித்து பாருங்கள்...

 

  • நாம் என்பது யார்? நமது ஊர் என்பது எது?
     
  • நாம் என்பது ஒருசிலரை குறிக்கின்றதா அல்லது அனைவரும் சம்மந்தப்பட்ட ஒட்டுமொத்த ஈழத்தமிழர் சமூகத்தை குறிக்கின்றதா?
     
  • ஊர் என்பது ஓர் குறிப்பிட்ட புவியியல் நிலப்பரப்பை குறிக்கின்றதா அல்லது பெருநிலப்பரப்பான தாயகத்தை குறிக்கின்றதா?

 

இவ்வினாக்களிற்கான பதில்களின் தேடல்கள் உங்கள் வாழ்வில் தொடரும்போது, அந்தப்பதில்களிற்கான புனிதப்பயணத்தில் நீங்கள் தெளிவு பெறும்போது, இவை சம்மந்தப்பட்ட உங்கள் கவலைகள் அத்தனையும் நிச்சயம் ஆயிரங்கோடி அர்த்தங்கள் பொதிந்தனவாகவே காணப்படும். அவை உங்கள் ஆத்மா நிதம், நிதம் சுற்றிச்சுற்றி வருகின்ற அந்த "ஊரில்" "நீங்கள்" சிறப்பாக வாழும் வாழ்க்கையாகவே அமையும்!

 

+++

 

அனைவருக்கும் வாழ்த்துகள், நன்றி, வணக்கம்.

Edited by கரும்பு

  • தொடங்கியவர்

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தினால் எதிரணியின் வாயினால் குருதி கொப்பளிக்கப் பண்ணியுள்ளார் கனடாவின் சிந்தனைச்செம்மல் கரும்பு . நுனிக்கரும்பும் அடிக்கரும்பும் இனிப்பானவை . ஆனால்  , இடைக்கரும்பால் இங்கு ஆழம் பொதிந்த பல கேள்விகளால் எதிரணியை திணறடித்துவிட்டார் . என்ன செய்யப்போகின்றார்கள் எதிரணியினர் ??? மண்ணின் அடியில் ஆழ ஊடுருவியிருக்கும் ஒரு மரத்தின் ஆணிவேரை விடுத்து , வெளியே தென்றலுக்கும் நிலவுக்கும் இன்னபிற காரணங்களுக்காகவும்  சலசலக்கும் அதன் இலைகளை தனக்கே உரிய எள்ளல்களால் கரும்பு கருக்கி விட்டார் . அதிலும் ,

 

" பதில்களின் தேடல்கள் உங்கள் வாழ்வில் தொடரும்போது, அந்தப்பதில்களிற்கான புனிதப்பயணத்தில் நீங்கள் தெளிவு பெறும்போது, இவை சம்மந்தப்பட்ட உங்கள் கவலைகள் அத்தனையும் நிச்சயம் ஆயிரங்கோடி அர்த்தங்கள் பொதிந்தனவாகவே காணப்படும். அவை உங்கள் ஆத்மா நிதம், நிதம் சுற்றிச்சுற்றி வருகின்ற அந்த "ஊரில்" "நீங்கள்" சிறப்பாக வாழும் வாழ்க்கையாகவே அமையும்! "

 

என்று எங்களையே தீர்ப்பு சொல்ல நிரம்பவே யோசிக்கவைத்துள்ளது கரும்பின் வாதம் . என்னப்பா இசைக்கலைஞன் இதற்கெல்லாம் கலங்குவீர்களா நீங்கள் ??? அதுதான் உங்கள் அகராதியில்  இல்லையே ???  அனுப்புங்கள் அடுத்த ஏவுகணையை....... இசையா கொக்கா.......

 

  • கருத்துக்கள உறவுகள்

நறுக்கென்று மூன்று வினாக்கள் தொடுத்து  அனைவரையும் திக்குமுக்காட வைத்துவிட்டு தன்பாட்டில் போய்விட்டார் கரும்பு. அவரின் முதலாவது வினாவிலேயே அத்தனையும் ஆட்டங்காண  வைத்துவிட்டார்.

 

பலாப்பழத்தை நாம் இரண்டாகப் பிளந்துதான்  கொடுத்தோம். ஆனால் எம்மிடம் பலாச்சுளைகள் தான்
வந்தன என்று கரும்பு கூறுவதை, எதிரணியினரின் அடுத்த அம்பு வந்து வீழ்ந்த பின்னர்தான் நிரூபிக்க முடியும்.  எதிரணியினரும் லேசுப்பட்டவர்கள் இல்லைஎன்பதால் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நடுவர் அவர்களே..! :D

 

அன்று சதாம் அனுப்பிய ஸ்கட் ஏவுகணையை அமெரிக்கன் கொடுத்த பேட்ரியட் ஏவுகணை தடுத்தாடியது..!  :D  ஆனால் இன்று அதற்குத் தேவை கிடையாது..!  :unsure:  கலைஞனின் ஈக்குவாணத்தை தடுத்து ஆட :D வில்வித்தை வீரர் எங்கள் அர்ஜுன் அண்ணா :icon_mrgreen: தனது எதிர் அம்புகளை விடத் தயாராக உள்ளார்..!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து எதிரணியினர் வில்வித்தை வீரர் அர்ஜுன் அவர்களைக் களமிறக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர். அம்பாரியை மட்டும் மாட்டிவிட்டு அம்பை வைக்க மறந்துவிடாதீர்கள். அம்புடன் வில்லையும் எடுத்துவந்து எப்படித் தொடுக்கிறீர்கள் அம்பை என்று பார்க்க அனைவரும் ஆவாலாய்க்
காத்திருக்கின்றனர். எங்கே அர்ஜுன் விரைந்து வாருங்கள். வித்தையைக் காட்டுங்கள்.


 

சபையில் உள்ள அனைவருக்கும் எனது அன்பு
வணக்கங்கள்.



எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டுமல்லாது



வேறொன்றும் நான் அறியேன் என் பராபரமே .



இணையில்லா இணையத்தை எத்திக்கும் எவ்விடர்
நேரினும் மாசுபடா மானுட பாங்குடன் நாடாத்தும் யாழ் மையமே .



பட்டிமன்றம் என்ற ஒன்றை யாழ் அகவை  பதினைந்தில் சுவை நிறைய படைக்க நினைத்த சுண்டலே
அவர்தம் வால் அவல்களே.



இரு பக்க இடி கேட்டும் தலைமை நிலை மாறாமல் மின்தாங்கியாய்
ஆடும் கோமகனே, மின்னலாய் இடை அசைக்கும் சுமோவே வணக்கம் .



எமது பக்கத்தில் இருப்பவர்களை பார்க்கின்றேன்
இசை ,தமிழச்சி ,ஜீவா புங்கை ,சுபேஸ் யாழ்வாணன் இப்படை தோற்கின் எப்படி வெல்லும்
எனும் அக புற ஆழுமையின் மிடுக்கில் நிமிர்ந்திருக்ன்றார்கள்.



எதிரணி யாழ்வாலி,வாத்தியார் ,பகலவன் ,சாத்திரி
,தும்பளையான் ,கரும்பு, குமாரசாமி. ஏதோ சாத்திரம், குறி, கைரேகை, கிளி ஜோசியம்,காண்டம்
பார்க்க வந்தவர்கள் போல, தாறதை தாங்கோ போறம் என்று  தருமி கணக்கு, சாமிக்கு நேர்ந்தவர்களை  போல இருக்கின்றார்கள்.



பார்வைக்கு எதிரணியினர்  அப்படி இருந்தாலும் சில அரிய பெரிய கருத்துக்களை
அவர்களும் அவ்வப்போது அள்ளி எறிந்தார்கள் என்பதையும்  மறுப்பதற்கு இல்லை . மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும்
மணம் உண்டு என்பதில் மாற்று கருதில்லாதவவர்கள் எமது அணியினர் .



புலம் பெயராமல் இருந்திருந்தால்?



நினைக்கவே பயமாக இருக்கின்றது. வெறுமன புலம்
பெயர் வாழ்வில் கிடைக்கும் சடப்பொருள் மோகத்தில் திளைத்து அது கிடைக்காமல் போயிருக்குமோ
என்ற  பயம் இல்லை எனது  பயம். வாழ்வின் அதிஉன்னத அர்த்தத்தையே உணராமல்
போயிருப்பேனோ என்ற உணர்வால் உண்டாகும் பயம் இது.



பாரதி கண்ட காணியும் வீடும் வேப்பமரமும்
குயிலும் ஒரு கவிஞனின் கற்பனை உலகில் கட்டிய அழகிய வீடே ஒழிய நிஜமல்ல.பாரதிக்கு
இருந்த வசதிக்கு அதைவிட அழகான வீட்டில் வாழ்ந்திருக்கலாம் அதைவிட்டு சுதந்திரம்
,பெண்விடுதலை,மானுடம் என்ற நிஜ தேடல்தான் அவனை மகாகவி ஆக்கியது.



தேடல் இல்லாத மனிதன் வெறும் ஜடம்.அந்த தேடல்
இல்லாவிடில் கற்கால மனிதனாக இன்றும் மனிதர்கள் அவர் அவர் ஊர்களில் குகைகளில் இதுதான்
சந்தோசம் என்று இருந்திருப்பார்கள் .அந்த தேடல் நாம் நாட்டில் இருந்திருந்தால் எவ்வளவு
வீதம் சாத்தியம். அரசியல் ,பொருளாதாரம் ,தொழில்நுட்பம் எல்லாமே மிக பின் தங்கிய ஊழலால்
நிரம்பிய நாடு அது. அதுவும் ஒரு போர்சூழலில் எதுவும் சாத்திய மற்ற ஒரு பிடிப்பிலாத
வாழ்வைத்தான் நாம் வாழ்ந்திருக்க முடியும் .



இங்கு நாம் வாழும் நாடுகளும் அங்கு நாம்
வாழும் வாழ்வும்  உலகின் அதிஉச்ச சுதந்திரம்,விஞ்ஞானம்,பொருளாதாரம்
ஒருங்கே கொண்டவை.இப்படியான மிக நேர்த்தியான திட்டமிட்ட வசதியான  வாழ்வை நாம் எமது நாட்டில் ஒரு காலமும்
வாழ்திருக்க முடியாது. எங்கு திரும்பினும் பாடாசாலைகள்,ஆசுப்பத்திரிகள் ,நூலகங்கள்
என்று அனைத்து வசதிகளும் நிரம்பியிருக்கு .ஒரு தொலைபேசியில் சாப்பாடு வீடு தேடி
வரும்.(.நாட்டில் ஈர விறகை அம்மா ஊதி ஊதி சமைத்ததை நினைக்க இன்றும் கண்ணீர்
வருகின்றது.).  இதை விட நினைத்த
மாத்திரத்தில் உலகெங்கும் பறக்க வசதியான கடவுசீட்டு.வேலை சற்று பழு என்றால்
விடுமுறை என்று ஜமேக்கா,கியூபா என்று பெயர் தெரியா நாடுகளில் சுற்றுலா.என்னுடன்
படித்து கொழும்பில் மிக வசதியாக இருக்கும் நண்பன் சொன்னான் எப்படி வசதியாக நான்
இங்கு இருந்தாலும் ஒருநாளைக்கு தங்க இருநூறு டொலர்கள் எடுக்கும் ஒரு கொட்டேலை
நான் கண்ணால் மட்டும் தான் பார்க்கமுடியும் என்று .அதே கொட்டலில் வெளிநாட்டில்
இருந்து வந்து கோஷ்டியாக பாட்டி போடுகின்றார்கள் .இவர்களெல்லாம் வெளிநாட்டில் சுமாரான
வாழ்கை வாழ்பவர்கள் தான்.ஆனால் அவர்களால் அது சாத்தியமாகின்றது .



இதுதான் ஊருக்கும் புலம் பெயர் நாட்டிற்கும் இருக்கும் வாழ்க்கை முறை
வித்தியாசம்,உண்மைநிலை.யதார்த்தம் .



அதைவிட்டு சும்மா வெட்டிக்கு எமது ஊர்
புழுதியில் உழுவததில் உள்ள சுகம் எங்கு கிடைக்கும் என்றும்,மாங்காய் களவெடுத்த
சந்தோசம் இனி கிடைக்குமா என்றும் வெறுமன பீத்திக்கொண்டு பால்ய பருவத்து சிறு சிறு
குறும்புகளை ஒட்டு மொத்த வாழ்க்கை என்று நினைத்துவிடகூடாது.   இங்கு
நாம் புலம் பெயர்ந்ததால் தான் அங்கிருப்பவர்களையே வாழாவைக்க முடிகின்றது .நாமும்
வாழ்ந்து நாலு பேர்களையும் வாழ வைக்கும் இந்த வாழ்க்கையில்  இருக்கும் சந்தோசம் வேறு எங்கு கிடைக்கும் .



நாட்டில் படித்து பெரும் பதவியில் இருந்தவன்
மட்டும் அல்ல  புலம் பெயர்ந்து சந்தோசமாக
இருக்கின்றான். மிக அடிமட்ட தொழிலாளியாக இருந்தவனும் புலம் பெயர்ந்து  தன் உழைப்பால் உயர்ந்து மிக வசதியாக சுய
மரியாதையுடன் இருக்கின்றார்களே இதுவெல்லாம் எமது நாட்டில் சாத்தியமா? எனது கிராமத்தில்
எட்டாம் வகுப்பும் படிக்காத குஞ்சன் பிரேக் இல்லாத சயிக்கிளில் கால்பிரேக் போட்டு
பாதத்தை தேய்த்துக்கொண்டு திரிந்தவன் புலம் பெயர்ந்து  ACURA DMX  இல் போவதை பார்க்கும் போது இதுவெல்லோ நாடு என்று
மனதில் தோன்றும். போர் ஒன்றுதானா நாமெல்லாம் புலம் பெயர்ந்ததன்
காரணம்? இல்லவே இல்லை. வெளிநாட்டு டொலர் ,பவுன்ஸ்,மார்க் ,பிராங்குகளின் பெருக்கல்
கணக்குத்தான் பலரை அனுப்பி வைத்தது.



உறவுகளே கடைசியாக ஒன்று சொல்லுகின்றேன்,



சொந்த நாட்டில் இரெயில் பயணத்தில் வவுனியா வர
வாயை மூடும் அவலத்தை அனுபவித்தவன் சொல்லுகின்றேன், தரப்படுத்தல் என்ற பெயரில்
நடந்த கபடத்தை முகம் கொடுத்தவன் சொல்லுகின்றேன்.எனக்கான உண்மையான மன கிடக்கையை
சொல்ல தடுத்த அரசியலை கண்டவன் சொல்லுகின்றேன் ,ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு
நொடியும் புலம் பெயர்ந்ததால் அந்த சுதந்திரத்தை அனுபவிக்கும் உணர்வு இருக்கே அதற்கு
இணை இவ்வுலகில் எதுவுமில்லை.



நான் மட்டும் அந்த சுதந்திரத்தை அனுபவித்து
மகிழவில்லை அனைத்து மக்களும் அதை அனுபவிப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகின்றேன்.இந்த
சுகமும் அனுபவவும் மகிழ்சியும் எமது மக்களும் விரைவில் அனுபவிக்கவேண்டும் என்ற
ஆசையுடன் உங்களிடம் இருந்து விடை பெறுகின்றேன் .



நன்றி .



 

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் ஆணித்தரமாக தன் வாதத்தை வைப்பார் என்று எண்ணியிருக்க, அவரின் வாதங்கள் அவரணிக்கே எதிராகத் திருப்புகிறதோ என்னும் தோற்றம் எழுகிறது.

வாழ்வின் அதி உன்னத அர்த்தம் என்று எதை வரையறுக்கிறார் என்பது புரியவில்லை.

அர்ஜுன்  மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் வாசம் உண்டென்பதை ஒத்துக்கொண்டதன் மூலம் எதிரணியினரின் கருத்துக்களும் சரி என்று ஒத்துக்
கொள்கின்றாரா?? என்னும் சந்தேகம் எழுகிறது.

 

பாரதிக்கு இருந்த வசதிக்கு, அவன் வசதியான வாழ்வைத்  துறந்து  மற்றவர் துன்பம் நீக்க முயன்றதே அவனை மகாகவி ஆக்கியது என்றால்,  உன்னதத்தை அடைய பொருளோ, பணமோ, வேறு வசதிகளோ தேவை இல்லை என தங்கள் பக்கமே பந்தை வீசிவிட்டார்.

அதுமட்டுமல்ல முழுச் சுதந்திரத்தோடு தான் வாழ்வது மட்டுமன்றி மற்றவரும் வாழ்வதை இட்டுமகிழ்கிறேன் என்கிறார். சுதந்திரம் என்பதற்கு என்ன அர்த்தம் என்பது எனக்கே மறந்துவிட்டது அர்ஜுனின் வாதத்தால். கூட்டிக் கழித்துப் பார்த்தால் நல்லா.... வசதியா.... எந்தத் துன்பமுமின்றி  வாழ்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. அதுக்காகக் கடன் கேட்டுப் போய்விடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நடுவர் அவர்களே,

 

அடுத்ததாக எங்கள் அணியின் நம்பிக்கை நட்சத்திரம், பிரணவத்தின் பொருளுரைத்து வேலெடுத்து விளையாடும் குமாரசாமி அண்ணர் தமது வாதத்தை முன்வைக்க ஆயத்தமாக இருக்கிறார்.

  • தொடங்கியவர்

அர்ஜுனின் நாகஸ்திரம் நன்றாகவே வேலை செய்தது . பலபாணங்கள் அவரிடமிருந்து சரமாரியாக வந்தது . அதிலும் ,

 

" தேடல் இல்லாத மனிதன் வெறும் ஜடம். அந்த தேடல்
இல்லாவிடில் கற்கால மனிதனாக இன்றும் மனிதர்கள் அவர் . அவர் ஊர்களில் குகைகளில் இதுதான்
சந்தோசம் என்று இருந்திருப்பார்கள் . அந்த தேடல் நாம் நாட்டில் இருந்திருந்தால் எவ்வளவு
வீதம் சாத்தியம். அரசியல் , பொருளாதாரம் , தொழில்நுட்பம் எல்லாமே மிக பின் தங்கிய ஊழலால்
நிரம்பிய நாடு அது. அதுவும் ஒரு போர்சூழலில் எதுவும் சாத்திய மற்ற ஒரு பிடிப்பிலாத
வாழ்வைத்தான் நாம் வாழ்ந்திருக்க முடியும் ."


என்ற வாதத்தில் நான் மயங்கினாலும் , எமது பாட்டன் முப்பாடன் தேடல் செய்யாமலா இந்த தலைமுறைகள் அவர்களது விளைச்சலை அனுபவித்தோம் ???  நீங்கள் சொல்கின்ற சாதீயங்கள் புலத்தில் வர்க்கவேறுபாடுகளாக விசுபரூபம் எடுத்தன . இங்கும் ஏழை ஏழையாகவும் பணக்காரன் பணக்காரனாகவும் இருக்கின்றான் . அடுத்தது சுதந்திரம் பற்றிய அர்ஜுனின் கருத்திற்கு வாலியின் நாய் கதையே எனக்கு  நினைவில் வந்தது . புலத்து கார்பவனிகளும் , இன்னபிற சிற்றின்பங்களும்தான் உண்மையான சுதந்திரமா ????  என்ற கேள்வியை எழுப்புகின்றது . பார்க்கலாம் எதிரணியின் காய் நகர்த்தலை . எங்கே குமாரசாமி  ஐயா வாங்கோ . மைக்கை பிடியுங்கோ 

 

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணா மாம்பழத்துக்காக உலகச் சுற்றப் போய்விட்டாரா??? வருகிறேன் என்றவரை இன்னும் காணவில்லை.

உங்கள் மயில் வாகனத்துக்குப் பெற்றோல் தீர்ந்து விட்டதா?? உங்கள் வாதத்தைக் கேட்க எல்லோரும் ஆவலாகக் காத்திருக்கின்றனர். விரைந்து வாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபையில் அமர்ந்திருக்கும் தாய்மாரே ,தங்கைமாரே ஐயாமாரே
அண்ணன்மாரே   தம்பிமாரே மதிப்புக்குரிய
நடுவர் அம்மா சுமேரி அவர்களே! மதிப்புக்குரிய நடுவர் கோமகன் அவர்களே!  மற்றும் மேடையில் காலுக்குமேல் கால் போட்டு
அமர்ந்திருக்கும் எதிரணி உறுப்பினர்களே அனைவருக்கும் என் அன்புகலந்த வணக்கங்கள்.


இங்கு நாம்

புலம்பெயராது ஊரிலையே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம்  என்றகவலையே என்ற அணியில்
வாதாடுகின்றேன்.வாதாடுகின்றேன் என்பதை விட உள்ளதை உண்மையை சொல்கின்றேன் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.நடுவர்களே  என்ரை பக்ககத்திலை இருக்கிற வாலி,வாத்தியார்,பகலவன்
தும்பளையான் கரும்பு எல்லாரும் எவ்வளவோ நல்லவிசயங்களை எடுத்து சொல்லியும்
அவர்கள்  இன்னும் கதிரையை விட்டு அகலாமல்
இருப்பது மனவருத்தத்திற்குரியது.


 

நாங்கள் அந்த பொன்னான எங்கடை 

பூமியை தெரியாத்தனமாய் விட்டுட்டு வந்ததிலை எனக்கு பெரிய மனவருத்தம்
நடுவர்களே. எங்களுக்கு எங்கடை நிலமும் வானமும் என்ன குறைவைச்சது? வானுயர்ந்த
சோலைகள் இல்லையா?ஆடிப்பாடித்திரிய வயல் வெளிகள் இல்லையா? நீச்சல் அடிக்க குளங்கள்
இல்லையா? வானுயர அலையடிக்கும் கடல் இல்லையா?

 குஞ்சுகுருமன்

தொடக்கம் காளையர்கன்னியர்  பாக்கு உரலுடன்
திரியும் வயோதிபர் வரை உருண்டு பிரளும் மணல்வெளிகளின் சுகம் யாருக்காவது தெரியுமா?

நிலவுநேரங்களிலை அந்தமணல்வீதிகளிலையும் மணல் புட்டிகளிலையும்

இருந்து அரட்டை அடிக்கிறசுகம் விடுகதைகள் கேக்கிறசுகம் யாருக்காவது தெரியுமா?

 

தங்கைச்சி தமிழச்சி சொல்கிறார்  இஞ்சை எல்லாரும்

ஏற்றத்தாழ்வில்லாமல் வாழுனமாம்.... இவ நாலுபேரோடை நல்லவடிவாய் பழகேல்லை எண்டது
அப்படியே தெரியுது....இந்த ஏற்றதாழ்வு இல்லாத வாழ்க்கைக்கு இஞ்சை இருக்கிறவன்
படுறபாடு இருக்கே சொல்லி வேலையில்லை நடுவர்களே!காலமை விடிய வெள்ளன எழும்பினால்
முதல் வேலை இரண்டு இடத்திலை கிளீனிங்......அதுக்குப்பிறகு மெயின்வேலை அது கோப்பை
கழுவுறது தொடக்கம் மரக்காலை எண்டு நீண்டுகொண்டே போகும்....பிறகு முதலாம் சாமத்திலை
வேறை எங்கையாவது ஒரு குட்டி வேலை........புலம்பெயர் நாடுகளிலை இயந்திரத்துக்கு கூட
ஓய்விருக்கு.....எங்கடை சனத்துக்கு ஓய்வெண்டால் என்னெண்டு தெரியுமோ தெரியாது.  எல்லாரிட்டையும் ரிவி இருக்காம்...கடைசியாய்
வந்த புது ரெக்னிக் அதுஇது எண்டு எல்லாத்தையும் அனுபவிக்கினமாம்.....

எல்லாம் வந்து என்னபிரயோசனம் நாளுக்குநாள் வேலையில்லாத

சனந்தான் கூடிக்கொண்டு போகுது...அங்கை அப்பிடியில்லை உனக்கு தைரியம் இருந்தால் ஒரு
மண்வெட்டியை தூக்கு ஊர்முழுக்க உனக்கு வேலையிருக்கு.....சில இடங்களிலை சாப்பாடும்
தந்து சம்பளமும் தருவினம்...ஆனால் இஞ்சை??? 
நடுவர்களே ஊரிலை இல்லாத கூட்டுக்குடும்ப சந்தோசம் இஞ்சை எங்கையிருக்கு?
ஊரிலை பின்னேரம் 6மணிக்குப்பிறகு தோட்டக்காரன் தொடக்கம் உத்தியோகக்காரன் வரைக்கும்
ஓய்வும் குடும்பசந்தோசமுந்தான் முக்கியம்......இஞ்சை ஒருசில புருசன்பொண்டாட்டி
வசுவிலையும் ரயிலையும்தான் சந்திச்சு கதைக்கினம் அவ்வளவுத்துக்கு நேரமில்லை

நடுவர்களே.

 

மருத்துவிச்சியை வைச்சு பிள்ளைப்பெறு பார்த்த

பூமி......பரியாரியார் கைநாடிபார்த்து மருந்து தந்த பூமி....கற்பிணியின்
உடல்வாகினைப்பார்த்தே ஆண்பிள்ளையா பெண்பிளையா என அடித்துக்கூறும்
நாட்டுவைத்தியர்களை கொண்ட பூமி....ஆனால் இங்கோ 
எத்தனையோ பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய 
கருவிகளை வைத்துதான்  ஒரு நோயை
குணப்படுத்தி இன்னொரு நோயை உருவாக்குகின்றார்கள்.எங்கடை ஊரிலை வேலியிலையும்
வடலியிலையும் படர்ந்திருக்கிற கொடிகளும் தாவரங்களும் ஒவ்வொரு வருத்தத்துக்கும்
உதவும் எண்டது மேலைத்தேய மோகத்தில் மயங்கிய தமிழச்சிக்கு தெரிய வாய்ப்பில்லத்தான்
நடுவர்களே? அங்கை காசுகுடுத்து வாங்காத குப்பையாய் கிடக்கிற முருங்கை இலை
முசுட்டைஇலை அகத்தி இலை என்ன விலை விக்குதெண்டு தமிழச்சியிட்டை ஒருக்கால் கேட்டு
சொல்லுங்கோ நடுவர்களே? இதெல்லாம் தேவையா?

 

 

நடுவர்களே!
 
தம்பி ஜீவா அவர்கள் எடுத்தமாம் கவுட்டமாம் எண்டுற மாதிரி ஒரு கேள்வியை கேட்டார் அதுதான் மண்ணுக்கே உரிய இயல்பான வாழ்வுதான் மகிழ்வைத்தரும்  என்றால்  ஏன் புலம்பெயர்ந்து வந்தீர்கள்? இங்கே தம்பி ஜீவாவுக்கு  இந்த பட்டிமன்றத்தின் தலைப்பை மீண்டுமொருமுறை கூர்ந்து கவனிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் நடுவர்களே!
அடுத்தது நடுவர்களே! தம்பியர் பியோ எண்டொரு சொல்லை நைசாய் எடுத்துவிட்டார்...இந்த பியோ எண்டால் எல்லாமே விலை கூடத்தான்...அதுசரி பியோ எண்டால் என்ன நடுவர்களே? எங்கடை ஊரிலை சாணகம் ஆட்டுப்புளுக்கை கஞ்சல் குப்பை உமி சாம்பல் எண்டு உதுகளை போட்டுத்தான்விவசாயம் செய்தனாங்கள்.....இப்பவும் செய்யினம்....பெரிசாய் மருந்துகளும் அடிக்கத்தேவையில்லை...இது பியோ!எங்கடை ஊரிலை மரக்கறி,கோழிமுட்டையளை சாப்பிட்டு வருத்தம்வந்ததாய் சரித்திரம் இல்லை நடுவர்களே? இப்ப கொஞ்சநாளைக்குமுதல் ஜேர்மனியிலை பீயோ முட்டையாலை பயங்கரபிரச்சனை. அதை சாப்பிட்டால் கான்சர் வாற அளவுக்கு பிரச்சனை இருக்கு......இது எங்கடை பியோ தம்பிக்கு தெரியாமல்  இருக்காது நடுவர்களே! புலம்பெயர் நாடுகளிலை பொலிடோல் மலத்தியோன் அன்ரிபியோட்டிக் இல்லாத மரக்கறி இறைச்சியளை சாப்பிட்டால் பக்கெண்டு பின் விளைவுகள் வரும்.இவங்கடை கெமிக்கல் அடிச்ச சாப்பாடுகளை சாப்பிட்டல் மூண்டு நேரமும் குளிசை எடுக்க வேண்டி வரும். பியோ எண்டு சொல்லி மூண்டு ஈறோவுக்கு ஒரு தேங்காய் விக்கிறாங்கள் இது என்ன அநியாயம் நடுவர்களே? 
 
அடுத்தது  நடுவர்களே!
அரைச்சமாவையே ஒருதம்பி மணித்தியாலக்கணக்கிலை அரைச்சார்...அவர்தான் தம்பியர்  சுபேஸ்! என்னத்தை சொல்ல.....நித்திரை கொள்ளுறவனை எழுப்பலாம்....நித்திரை கொள்ளுறமாதிரி நடிக்கிறவனை ஒண்டுமே செய்யேலாது நடுவர்களே!
தம்பியரே! அங்கை கூடின பட்சம் ஒவ்வொருவனுக்கும் சொந்தவீடு வளவு தோட்டம் துரவு எண்டு இருக்கும். சொந்தமாய் கிணறு இருக்கும் இல்லாட்டி பொது கிணறு இருக்கும். குண்டி கழுவுறதுக்கு சுடுதண்ணி தேவையில்லை.முகம்கழுவ சுடுதண்ணி தேவையில்லை.இஞ்சத்தையை மாதிரி கிழமையிலை ஒருக்கால்த்தால் குளிக்கிறேல்லை டெய்லி குளியல்.....கக்கூசுக்கு இருந்துட்டு துடைக்க பேப்பர் வாங்கத்தேவையில்லை...கிணத்திலை ஒருவாளி தண்ணி விரும்பின அளவுக்கு அலசி கழுவலாம். தண்ணி பில் கூடுமெண்டு யோசிக்கத் தேவையில்லை.வீட்டிலை சமைக்கிறதுக்கு தேவையான அளவு விறகு இருக்கு..காஸ் கரண்ட் தேவையில்லை.வீட்டுக்கு கீற்றர் தேவையில்லை.இஞ்சத்தையை மாதிரி போகத்துக்கு போகம் உடுப்புகள் மாத்த தேவையில்லை...சாறத்தோடை எப்பவும் வெளியிலை போகலாம் வரலாம்.......
 
எல்லாத்தையும் விட ஈழத்தமிழன் புலம் பெயரமுன் யாரிடமும் பிச்சையெடுக்கவில்லை....சிங்களவனால் ஏற்பட்ட எத்தனையோ அழிவுகளினின் பின்னரும் தானாக எழும்பி நின்றவன் ஈழத்தமிழன். புலம்பெயர் தமிழனைப்போல் போலி வாழ்க்கை வாழ்ந்தவனல்ல ஈழத்தமிழன். கஞ்சியை குடித்தாலும் நிம்மதியாய் குடித்தவன் ஈழத்தமிழன்
 
 
நடுவர்களே!
எதிரணியில்  இருக்கும் சகோதரம் யாழ்வாணனை பார்க்க கவலையாக்கிடக்கு...மனிசன் நல்லாய்ப்பேசுறார்....ஒரு நல்ல உண்மையான விசயத்தை சொன்னால் நாங்களும் கைதட்டலாம்...ஆனால் சும்மா விசர்கதையெல்லே கதைக்கிறார்.
எமது சிவனின் பாதியும்,சக்தியும் போன்று இருக்கும் எமது மதிப்பிற்க்குரிய  நடுவர் அம்மாவை பார்த்து என்ன கேள்வி கேட்டார்? புட்டு????? இந்த வாணனை பார்த்து ஒரு சிறிய கேள்வி கேட்கின்றேன் நடுவர்களே!
கனடாவில் அடுக்கு மாடிகளில் சந்தோசமாய் இருக்கும் தமிழ்க்குடும்பங்களால் அதாவது கனேடியன் தைரியப்புயல் அல்லது கனேடியன் தைரியலஷ்சுமி இருக்கும் இடங்களில் புட்டுக்கு பச்சையரிசி நனையப்போட்டு  உரலில் இடிக்க முடியுமா?
 ஐயா வாணரே! அமெரிக்க ஜனாதிபதிஎன்ன வெள்ளையோ எண்டுறியள்? ரொக்கற்றிலை போன கல்பனா என்ன வெள்ளையோ எண்டுறியள்? நோர்வேயிலை வேறை தமிழன் கவுன்சிலர் எண்டுறியள்? அதாவது இந்த உலகம் ஒரு சமதர்மத்தோடை நடக்குது எண்டு சொல்ல வாறிள்?
அப்ப ஏன் இன்னும் தமிழீழம் கிடைக்கேல்லை வாணரே?
 
 

 

நடுவர்களே! இரத்தினச்சுருக்கமாக அர்ஜுன் அவர்கள் தனது கருத்தை சொன்னார்.அது உண்மையிலும் உண்மை....அங்கை கண்டகண்ட இங்கிலிஸ்படங்களை ரீகல்,சாந்தி,றியோ தியேட்டரிலை பள்ளிக்கூடத்துக்கு போகாமல் கட்டடிச்சு பார்த்து வெளிநாட்டுமோகம் தலைக்கேறியவர்கள்..அந்த மோகம்தான் கூட இருப்பவர்களையே எதிரியாக காட்டுகின்றது....பாருங்கள் நடுவர்களே? சுற்றுலாவுக்குக்கூட எங்கள் புங்குடுதீவு,நயினாதீவு, அனலைதீவு மருந்துக்கும் ஞாபகத்துக்கு வரேல்லை...ஜமேக்காவாம் கியூபாவாம்....ஏன் எங்கடை ஊரிலை சூடுதணிக்கும்   இளநீர் இல்லையோ?கடுதாசிமல்லிகைப்பூ  இல்லையோ? செவ்வரத்தம்பூ இல்லையோ? 
 
இப்பிடி எத்தினையோ இயற்கை தந்த நல்ல சீதனங்களை உதறித்தள்ளிவிட்டு வந்த எங்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்.
 
கனம் நடுவர்களே!
நான் சொன்ன இந்த கருத்துக்களை  நாலும் தெரிந்த நீங்களாவது எதிரணிக்கு நல்லவிதமாக சொல்லி அவர்களை நல்லவழிக்கு கொண்டு வரும்படி வேண்டுகின்றேன்.பொறுமையுடன் அமைதிகாத்த சபையினருக்கும் என் நன்றியைச்சொல்லி விடைபெறுகின்றேன் வணக்கம்.
  • தொடங்கியவர்

மயிலேறும் பெருமாள் என்னப்பன் குமாரசாமி ஐயாவின்ரை வாதம் ஒரே சூரசம்சாரம்தான் . மாறிமாறி அடித்தார் எதிரணியை . அதில் ஒரு விடையத்தில் ஐயாவின் வாதம்  என்மனதில் உயர்ந்து நின்றது . எப்படியென்றால்,

 

"  ஐயா வாணரே! அமெரிக்க ஜனாதிபதிஎன்ன வெள்ளையோ எண்டுறியள்? ரொக்கற்றிலை போன கல்பனா என்ன வெள்ளையோ எண்டுறியள்? நோர்வேயிலை வேறை தமிழன் கவுன்சிலர் எண்டுறியள்? அதாவது இந்த உலகம் ஒரு சமதர்மத்தோடை நடக்குது எண்டு சொல்ல வாறிள்?
அப்ப ஏன் இன்னும் தமிழீழம் கிடைக்கேல்லை வாணரே? "

 
மேலும் இன்னுமொரு வாதத்தை எடுத்துவைத்து என்னையே மலைக்க வைத்தார் ,

 

நடுவர்களே! இரத்தினச்சுருக்கமாக அர்ஜுன் அவர்கள் தனது கருத்தை சொன்னார். அது உண்மையிலும் உண்மை....அங்கை கண்டகண்ட இங்கிலிஸ் படங்களை ரீகல், சாந்தி, றியோ தியேட்டரிலை பள்ளிக்கூடத்துக்கு போகாமல் கட்டடிச்சு பார்த்து வெளிநாட்டு மோகம் தலைக்கேறியவர்கள். அந்த மோகம்தான் கூட இருப்பவர்களையே எதிரியாக காட்டுகின்றது....பாருங்கள் நடுவர்களே? சுற்றுலாவுக்குக்கூட எங்கள் புங்குடுதீவு, நயினாதீவு, அனலைதீவு மருந்துக்கும் ஞாபகத்துக்கு வரேல்லை...ஜமேக்காவாம் கியூபாவாம்....ஏன் எங்கடை ஊரிலை சூடுதணிக்கும்   இளநீர் இல்லையோ? கடுதாசிமல்லிகைப்பூ  இல்லையோ? செவ்வரத்தம்பூ இல்லையோ?"
 
நான் குமாரசாமி ஐயாவின் வாதத்தை வைத்துப் பார்த்தபொழுது குமாரசாமி ஐயாவினுடைய
" அனுபவம் " என்ற மொழி என்னை நிலைதடுமாறச் செய்தாலும் , எதிரணியில் ஒரு வீரவாகு இருக்கின்றார் , இறுதியாக களமிறங்க . எங்கே இசைக்கலைஞன் அழையுங்கள் உங்கள் தளபதியை ..........

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணாவின் அனுபவத்தில் பட்டறிந்தவை நறுக்கான வார்த்தைகளில் தெறிக்கின்றது. இதற்குத்தான் சொல்வார் கள் வயதில் மூத்தோர் எம்முடன் இருக்கவேண்டும் என்று. எதிரணியினரின் மாய வார்த்தைகளில் மயங்கிப்போயிருந்த என்னை, இவரின் வாதங்கள் தெளிய வைத்துள்ளன.

மின்சாரமோ சுடுநீரோ தேவையற்ற, இயற்கையோடு இசைந்த எம் வாழ்வின் உன்னதத்தை உயிர்ப்போடு சொல்கிறது அவரது வாதம். நாமெல்லாம் எத்தனை வசதியுடன் இங்கு வாழ்ந்தாலும் எம் வாழ்வு மாற்றானிடம் கையேந்தும் அடிமை வாழ்வுதான் என்பதை அடித்துச் சொல்கிறார்.

நல்ல காலம் அண்ணா நீங்கள் எனக்கு நினைவு படுத்தியதற்கு. யாழ்வாணனின் வாதத்தில் மயங்கி இடையில் ஒரு முக்கியமான பந்தியை வாசிக்காது விட்டுவிட்டேன். அவருக்கு கூறுவதற்கு புட்டை விட வேறு ஒன்றும் தெரியவில்லைப் போலும். அல்லது புட்டே  வாழ்கையில் உண்ணவில்லை என்று நினைக்கிறேன்.
அடுத்து தற்காலிக பெரும் பதவியா! எந்தப் பதவி என் கைவிட்டுப் போனாலும் என் குடும்பத் தலைவி என்னும் பெரும் பதவி  என்னை விட்டு எப்போதும் போகவே போகாது என்பதை யாழ் வாணனுக்குக் கூறிக்கொண்டு அடுத்து அவரணியில் மிஞ்சி இருப்பவர்
புங்கையூரன். அவர் பாவம் என்னத்தைச் சொல்லி ம் .......பாப்பம்.

 
  • கருத்துக்கள உறவுகள்

பட்டிமன்றத்தை தலைமை தாங்கும் எனதருமை நடுவர்களே..! :D

 

யாழ் களத்தை இளமையோடும், பொறுமையோடு நடத்திக்கொண்டிருக்கும் மோகன் அண்ணா அவர்களே..! பொறுப்பாளர்களே.. மட்டுறுத்துனர்களே..! :D

 

எதிர்வரிசையில் உட்கார்ந்துகொண்டு "தேமே" என்று விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் எதிரணியினரே..! :D

 

பொருள் பொதிந்த இந்தப் பட்டிமன்றத்தைக் காண வந்திருக்கும் பெற்றோர்களே..! தாய்மார்களே..! தம்பிகளே..! தங்கைகளே..! மச்சாள்மாரே..! :wub:

 

உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்..!

 

நடுவர்களே..! இந்தப் பட்டிமன்றத்தின் தலைப்பு என்ன? :huh:

 

புலம்பெயர் தமிழரின் கவலை என்பது வெறும் பிரிவுகளின் கவலையா அல்லது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக வாழ்ந்திருப்போமா என்பதுதான்..! :unsure:

 

இரு அணியினருமே புலம்பெயர்ந்தவர்கள்தான்..! இரு அணியினரும் கவலைகளைக் கொண்டுள்ளார்கள் என்பது தலைப்பிலேயே உள்ளது..! ஆனால்  எதிரணியினரோ ஏதோ எங்களுக்கெல்லாம் கவலையே இல்லாததுபோல் பேசிவிட்டுச் சென்றுவிட்டார்கள்..! :D

 

எங்களுக்கும் கவலைகள் உண்டு நடுவர்களே.. கவலைகள் உண்டு..! :(

 

தாயகத்தைப் பிரிந்த கவலை.. உறவுகளைப் பிரிந்த கவலை.. நண்பர்களைப் பிரிந்த கவலை..! இப்படிப் பல கவலைகள் உண்டு..! :(

 

ஆனாலும் நடுவர் அவர்களே..! :unsure:

 

அதற்காக முக்காடு போட்டுக்கொண்டு மூலையில் உட்கார்ந்து மூக்கைச் சிந்த நாங்கள் தயாராக இல்லை என்பதே எங்களது வாதம்..! :D

 

எந்த நாட்டிற்குப் புலம்பெயர்ந்தாலும் தாயகம் பற்றிய கவலையை நெஞ்சில் சுமந்துகொண்டு அதேசமயம் நிலைமைகளை சமாளித்து செழிப்புற வாழ்வோம் என்பதே எங்கள் கட்சி..! புலம்பெயர்ந்துவிட்டதால் தினமும் மெகாசீரியல் கணக்கில் அழுது வடியச் சொல்கிறார்களா எதிரணியினர்? :D அவ்வாறுதான் அவர்கள் பிழைப்பைக் கொண்டு செல்கிறார்களா? :D கேட்டுச் சொல்லுங்க நடுவர் அவர்களே..! :D

 

தொடக்கத்தில் பேசிய வாத்தியார் முதற்கொண்டு கு.சா அண்ணா வரை வெளிநாட்டில் இயந்திர வாழ்க்கை என்று புலம்பித் தள்ளினார்கள்..! இங்கே இயந்திர வாழ்க்கை என்றால் அங்கே பயங்கர வாழ்க்கை..!  :(  அதைக் காரணம்காட்டித்தானே புலம்பெயர்ந்தோம் நடுவர்களே..! :(

 

இத்தகைய இயந்திர வாழ்க்கையையும் சுழித்து இன்புறுவோம் என்பதே எங்கள் கட்சி..! :D

 

பிடிச்ச ஃபிகர் கிடைக்காவிட்டால் கிடைச்ச ஃபிகரைப் புடி என்பது முதுமொழி நடுவர்களே..! :D நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம்..! தாயகத்தில்தான் பிடிக்க முடியல.. :( துரத்தி விட்டிட்டான்..! :( அதுக்காக ஃபிகரே இல்லாமல் வாழ்க்கையை ஓட்ட முடியுமா நடுவர் அவர்களே..! :unsure: அதனால் வந்த இடத்தில் பிடித்துவிட்டோம் நடுவர் அவர்களே..! :lol:

 

நாளையே தாயகம் சென்றால் எங்கள் தாயக அன்னையின் மடியில் கண்ணயர்ந்து இளைப்பாறுவோம்..! :unsure: நாங்கள் எதற்கும் தயார்..! எங்கும் எதிலும் வெல்வோம்..! ஆனால் மூக்கைச் சிந்தி அழமாட்டோம்..! :lol:

 

வாத்தியாரின் பேச்சிற்குப் பிறகுதான் யோசித்துப் பார்த்தேன்..! :unsure: மூச்சே விட முடியல.. ஏனென்றால் சுத்தமான காற்று இல்லை.. :( வீட்டுக்கு வெளியே ஓடினேன்..! மரம் ஒன்றுமே ஆடவில்லை.. :( ஏனென்றால் இங்கே தென்றலே கிடையாதாம்..! :D

 

யாருக்கய்யா விடுறீங்க கதை..! :D தென்றல் மட்டுமில்லை.. புயலே வீசும்.. அதுவும் பனிப்புயல்..! :D

 

அதை விடுங்க.. ஊரில பனியைக் கண்ணால் கண்டிருக்கிறீங்களா? இல்லைதானே.. இங்கே இருக்கு.. அதை சந்தோஷமா அனுபவிக்கத்தானே சொல்லுறம்..! :D உறைபனி ஏரியில் மீன்பிடிக்கப் போங்க.. பனியில் சறுக்கப் போங்க.. அதை விட்டிட்டு உங்களை யார் நாலு வேலைக்குப் போகச் சொன்னது? :D

 

தெரியும் நடுவர் அவர்களே.. அதையும் கேட்பார்கள் எமது எதிரணியினர்.. நான்கு வேலைக்குப் போகாவிட்டால் துட்டுக்கு எங்கே போறதென்று..! :D அடிமை மாதிரி சிந்திச்சால் நாலு வேலைதான் பார்க்க வேண்டும்..! :D ஒரு நாளைக்கு எட்டு மணித்தியாலம்.. குடு சம்பளத்தை என்று கேட்கிறமாதிரி வச்சிருக்க வேண்டும் நடுவர் அவர்களே..! :D அதற்குரிய வழிமுறைகளைப் பார்க்க வேண்டும்..! :D அதை விட்டிட்டு சும்மா நாலு வேலை, அஞ்சு வேலை என்று ஒரே புலம்பல்.. :D

 

அடுத்ததா வந்த பகலவன் கல்வி ஏதோ சரியில்லை என்று சொல்லி ஒரு நாடகத்தை ஆடினார் நடுவர் அவர்களே..! :D

 

இலங்கையில் படித்துவிட்டு வெளிநாட்டுக்குப் போனால் எவன் திரும்பிப் பார்க்கிறான்? :(  திரும்பவும் படி என்றுதான் சொல்லுறான்.. :( ஏன்..!? அங்குள்ள கல்வியின் லட்சணம் அப்பிடி..  :D  ஒரே மனப்பாடம்தான்..! சப்பித் துப்ப வேண்டியதுதான்..! :D செய்முறைப் பயிற்சி இல்லை.. ஏதாவது கட்டடம் கட்டுறானா எண்டு பார்த்தால் அதுவும் இல்லை.. இருந்தாலாவது அதைப் போய் பார்த்து செய்முறை விளக்கம் தெரிஞ்சு கொள்ளலாம்..! இருக்கிறதையும் இடிக்கிறதுதான் அங்கை நடக்குது..! :blink:

 

தரமில்லாத கல்வியோடு வந்தாலும் மூக்கைச் சிந்தக்கூடாது..! :D விடா முயற்சியோடு அதை தரமுள்ளதாக மாற்ற வேணும்..! :D அதை விட்டிட்டு அவன் வேலை தரமாட்டெங்குறான்.. இனவெறி என்று ஒரே புலம்பல்.. :D

 

அடுத்து வந்த எதிரணியின் தும்பளையான் சொன்னார்.. ஏதோ ஒரு வீட்டுக்குள்ளே நிறையப் பேர் நெருக்கிக் கொண்டு வாழ்கிறார்களாம்.. :unsure: இவர் சிங்கப்பூர் தேக்கா மார்க்கட்டை சொல்லுறாரா என்று கேட்டுச் சொல்லுங்கள் நடுவர் அவர்களே..!  :D

 

எனக்குத் தெரிந்து அப்படி யாரும் நெருக்கிக்கொண்டு வாழவில்லை..! அப்படி வாழ்பவர்கள் செலவைக் குறைத்து காசை மிச்சம் பண்ணி ஊருக்கு அனுப்புவதில் மும்முரமாக இருப்பவர்கள்தான்..! :unsure: அதாவது ஊரில் உழைக்காமல் இருப்பவர்களுக்கு காசு அனுப்புபவர்கள்..!

 

எனதருமை எதிரணியினரும் யாரையாவது உழைக்க விட்டிட்டு அங்கே போய் செட்டில் ஆகலாம் என்று உள்ளார்களா? :D கேட்டுச் சொல்லுங்கள் நடுவர் அவர்களே..!! :D

 

அடுத்ததா தும்பளையான் சொல்கிறார்.. வெளிநாடுகளில் அந்நியராகத்தான் பார்க்கப்படுவோமாம்.! வாழ்கிற நாட்டுக்கு ஏற்றமாதிரி நடை, உடை பாவனையை மாற்றிக்கொண்டால் ஏன் வித்தியாசமாகப் பார்க்கப்போகிறார்கள்? :blink:

 

சுடிதாரைப் போட்டுக்கொண்டு கடலில் குளிப்பது..! :D நண்டுக்கறி வாடையுடன் குளிர் ஆடைகளைப் போட்டுக்கொண்டு திரிவது..!  :(  வரி கட்டாமல் ஏய்ப்பது.. :blink: முகத்தில் ஒரு புன்முறுவல் இல்லை.. விட்டால் மூஞ்சியைப் பிளந்துவிடுவேன் என்பதுபோல் பிற நாட்டவரைப் பார்ப்பது.. :( வெயிலுக்கு இரண்டு துண்டு உடையுடன் அவள் போனால் :D நாக்கை தரை வரையில் நீள விடுவது..  :D 

 

இப்படி இருந்தால் அவர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் நடுவர் அவர்களே..! :D

 

அடுத்து வந்த கரும்பின் வாதம் மிக இனிமையாக இருந்தது..! :D கரும்பு என்றாலே இனிமைதானே..! :D ஆனால் அவரின் பேச்சுக்குப் பின், நான் எந்த ஊரில் இருக்கிறேன் என்பதே எனக்கு மறந்துவிட்டது நடுவர் அவர்களே..! :D

 

கடைசியாக வந்த குமாரசாமி அண்ணன் அவர்கள் ஏதோ இங்கே உணவுப் பொருட்களில் கான்சர் வருது அது இது என்றார்..!  :unsure:  அப்ப வெள்ளையன் எல்லாம் செத்தா போய்ட்டான் நடுவர் அவர்களே..? :D கான்சர் வந்தாலும் சிகிச்சை பெற்றுக்கொண்டு அதிக நாட்கள் வாழ்கிறான்..! ஊரிலே கான்சர் வாறதும் தெரியாது.. ஆள் போறதும் தெரியாது..! :unsure:

 

அதுமட்டுமில்லை நடுவர்களே..! இன்னும் எனக்கு நல்ல ஞாபகம்.. ஊரில் சந்தைக்கு வரும் கத்தரிக்காயில் வெள்ளையா ஒரு படலம் இருக்கும்.. :unsure: இப்பத்தான் கேள்விப்படுறன் அது பூச்சிகொல்லி இரசாயனம் என்று.. :( அதாவது கண்ணுக்கு முன்னே தெரிந்த இரசாயனத்தையே பொரிச்ச குழம்பு வைத்து சாப்பிட்டோம்..! :wub:  இதுதான் அங்குள்ள நிலைமை நடுவர் அவர்களே..! :(

 

இறுதியாக...

 

எங்கள் எதிரணியினர் இப்போது சொல்வது அவர்கள் ஊரில் இருந்திருந்தால் சிறப்பாக வாழ்ந்திருப்பார்கள் என்று..! அதை எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறார்கள்? :unsure: நாளையே அங்கு போனால் இதைவிட அண்டார்ட்டிக்காவுக்குப் போனால்  :D  சிறப்பாக வாழலாம் :unsure: என்று சிந்திப்பார்களா மாட்டார்களா நடுவர் அவர்களே..! :D இவர்களின் சிந்தனை மாறாட்டத்துக்கு ஒரு அளவே இல்லையா? :D

 

சிந்தனை மாறாட்டம் கொண்ட அணியை விடுத்து எங்கள் கவலைகளுக்கு வெறும் பிரிவுகளே காரணம் என தீர்ப்பளிக்குமாறு அன்புடனும், அதே சமயத்தில் சிறிது கறாராகவும் :lol: கேட்டுக்கொள்கிறேன் நடுவர் அவர்களே..!

 

நல்லதொரு சந்தர்ப்பத்தை எனக்களித்து இந்தப் பட்டி மன்றத்தில் பங்குகொள்ள என்னை அழைத்தமைக்கு மீண்டும் ஒரு நன்றி நடுவர்களே..! இத்துடன் எனது உரையை முடித்துக் கொள்கிறேன்..! :D

 

வாழ்க நற்றமிழ்! வெல்க நம் தாயகம்..!

 

நன்றி..! வணக்கம்..! :D

 

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன் மேடையை விட்டு கட்டடம் கட்டுவதற்கு கொல்லைப் புறமாகச் சென்றதனால் பட்டி மன்றத்தின் சூடு தாங்க முடியாது சொல்லாமற் கொள்ளாமல் ஓடி விட்டார் என்றல்லவா நினைத்துவிட்டேன். இத்தனை விரைவில் வருவார் என்று எதிர் பார்க்கவில்லை.

ம்.... வேகத்துடன் தான் இருக்கிறார்.
 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.