கிரீன்லாந்தைக் 'கைப்பற்ற' டிரம்ப் முன்பு உள்ள வாய்ப்புகள் என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கிரீன்லாந்து மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தாலும், அங்கு மக்கள்தொகை மிகக் குறைவு. இதன் காரணமாக, இது சாத்தியமில்லை என நிபுணர்கள் நம்பினாலும் ஒரு ராணுவ நடவடிக்கையை மிக விரைவாக மேற்கொள்ள முடியும். கட்டுரை தகவல் பெர்ன்ட் டெபுஸ்மேன் ஜூனியர், நிக் பீக் & கெய்லா எப்ஸ்டீன் 11 ஜனவரி 2026 டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தைக் கைப்பற்ற விரும்புகிறார். மேலும் ராணுவ பலத்தைப் பயன்படுத்துவது உட்பட அனைத்து வழிகளும் பரிசீலனையில் உள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான பல்வேறு வழிகளில் ராணுவ நடவடிக்கையும் ஒன்று என்றாலும், ஒரு நேட்டோ உறுப்பு நாடு மற்றொரு நாட்டின் மீது நடத்தும் தாக்குதலாக இது அமையும் என்பதால், இது நேட்டோ கூட்டமைப்புக்கு ஒரு மிக மோசமான கனவாகவும், ஒருவேளை அந்த அமைப்பின் இருப்புக்கே ஆபத்தாகவும் முடியலாம். கிரீன்லாந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு மிக முக்கியமானது என்று டிரம்ப் பலமுறை கூறியுள்ளார். எவ்வித ஆதாரமும் இன்றி, "அங்கு எல்லா இடங்களிலும் ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்கள் நிறைந்துள்ளன" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க, பிரித்தானிய மற்றும் டென்மார்க் நிபுணர்களின் கருத்துக்களுடன், அதிபர் பரிசீலிக்கும் பல்வேறு வழிகளையும், அவற்றுக்கான சாத்தியமான காரணங்களையும் இங்கே தொகுத்துள்ளோம். ராணுவ நடவடிக்கை கிரீன்லாந்தைக் கைப்பற்ற வெகு விரைவான ஒரு தாக்குதலை ஒப்பீட்டளவில் எளிதாகச் செய்ய முடியும், ஆனால் அதன் விளைவுகள் மிகப்பெரியதாக இருக்கும் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிலவியல் ரீதியாகப் மிகப்பெரியதாக இருந்தாலும், கிரீன்லாந்தின் மக்கள்தொகை சுமார் 58,000 மட்டுமே. இதில் மூன்றில் ஒரு பங்கினர் தலைநகரான நூக்கில் வசிக்கின்றனர். மற்றவர்கள் பெரும்பாலும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் வாழ்கின்றனர். இந்தத் தன்னாட்சிப் பகுதிக்கு எனத் தனி ராணுவம் கிடையாது, அதன் பாதுகாப்புக்கு டென்மார்க் தான் பொறுப்பு. ஆனால், இவ்வளவு பெரிய பரப்பளவைப் பாதுகாக்க டென்மார்க்கிடம் அங்கு குறைவான விமான மற்றும் கடற்படை வசதிகளே உள்ளன. கிரீன்லாந்தின் பெரும்பகுதி, நாய் ஸ்லெட்ஜ்களை (பனிச்சறுக்கில் நாய்களால் இழுத்துச் செல்லப்படும் ஊர்தி) முதன்மையாகப் பயன்படுத்தும் 'சிரியஸ் பேட்ரோல்' (Sirius) என்ற டென்மார்க் சிறப்புப் படைப் பிரிவினரால் மட்டுமே கண்காணிக்கப்படுகிறது. இருப்பினும், கடந்த ஆண்டில் கிரீன்லாந்து உட்பட ஆர்க்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பிராந்தியங்களில் டென்மார்க் தனது பாதுகாப்புச் செலவுகளைக் கணிசமாக அதிகரித்துள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டொனால்ட் டிரம்ப் அதன் பரந்த அளவு, சிறிய மக்கள்தொகை மற்றும் ராணுவப் பற்றாக்குறை ஆகியவை அமெரிக்காவுக்கு அதை ஒரு சுலபமான இலக்காக மாற்றக்கூடும். ஏற்கெனவே கிரீன்லாந்தின் வடமேற்கு முனையில் உள்ள பிடுஃபிக் தளத்தில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் நிரந்தரமாகப் பணியில் உள்ளனர். தத்துவார்த்த ரீதியாக, இந்தத் தளம் எதிர்கால நடவடிக்கைகளுக்கான தளவாட மையமாகச் செயல்படக்கூடும். இரண்டாம் உலகப் போரின் போது, நாஜிக்கள் டென்மார்க்கைக் கைப்பற்றிய பிறகு, ராணுவ மற்றும் வானொலி நிலையங்களை அமைக்க அமெரிக்கப் படைகள் இந்தத் தீவில் நிலைநிறுத்தப்பட்டதில் இருந்து இந்தத் தளம் பயன்பாட்டில் உள்ளது. ரிஸ்க் இன்டெலிஜென்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும், டென்மார்க் பாதுகாப்பு நிபுணருமான ஹான்ஸ் டிட்டோ ஹான்சன், கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையை அமெரிக்கா எப்படி மேற்கொள்ளக்கூடும் என்பதை விளக்கினார். அலாஸ்காவைத் தளமாகக் கொண்ட 11-வது வான்வழிப் பிரிவு இதில் முக்கியப் பங்கு வகிக்கும். பாராசூட் அல்லது ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட இரண்டு ஆர்க்டிக் படைப்பிரிவுகள் இதில் ஈடுபடும். எந்தத் தாக்குதலிலும் அது "முக்கியத் திறனாக" இருக்கும். மேலும், இதற்கு அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படை ஆதரவு அளிக்கும் என்று ஹான்சன் குறிப்பிட்டார். இந்தக் கருத்தை சிபிலைன் நிறுவனத்தின் தலைவரும், பிரிட்டிஷ் ராணுவ ரிசர்வ் அதிகாரியுமான ஜஸ்டின் கிரம்ப் உறுதிப்படுத்தினார். "அமெரிக்காவிடம் அளவிட முடியாத அளவிலான கடற்படை பலம் உள்ளது. மேலும், பெருமளவு படையினரை ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யும் திறனும் அதற்கு உள்ளது. ஒரே முறையில், மக்கள்தொகையில் சிலருக்கு ஒருவர் என்ற அளவுக்கு போதுமான படையினரை எளிதாகக் கொண்டு செல்ல முடியும்," என்றும் அவர் கூறினார். மேலும், இந்த நடவடிக்கை மிகவும் கொடூரமானதாகத் தோன்றினாலும், பெரிய எதிர்ப்பு ஏதும் இருக்காது என்பதால் பெரியளவு பாதிப்பு இல்லாத ஒரு நடவடிக்கையாகவே இது முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், அமெரிக்காவில் உள்ள பல முன்னாள் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள், அமெரிக்க-ஐரோப்பிய கூட்டணிகளில் இது ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக ராணுவ நடவடிக்கை என்பது சாத்தியமற்றது என்று கூறுகின்றனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டிரம்பின் முந்தைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக கடந்தாண்டு மார்ச் மாதம் கிரீன்லாந்தில் நடைபெற்ற போராட்டம் முன்னாள் கடற்படை வீரரும், சிஐஏ அதிகாரியும், துணை பாதுகாப்பு செயலாளருமான மிக் முல்ராய் கூறுகையில், "இது சர்வதேச சட்டங்களுக்கு முற்றிலும் எதிரானது. அவர்கள் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் கிடையாது, மாறாக அவர்கள் ஒப்பந்த ரீதியான நமது கூட்டாளிகள்," என்றார். ஒருவேளை அமெரிக்க அரசு ராணுவ வழியைப் பின்பற்றுவதை நோக்கி நகரத் தொடங்கினால், நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து (காங்கிரஸ்) கடும் எதிர்ப்பு கிளம்பும் என்று முல்ராய் கருதுகிறார். காரணம், நாடாளுமனற்ற உறுப்பினர்களின் ஒப்புதல் இன்றி அதிபர் போர் தொடுப்பதைக் கட்டுப்படுத்தும் 'போர் அதிகாரச் சட்டத்தின்' (War powers act) மூலம் இதைத் தடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், "நேட்டோ கூட்டணியை அழிப்பதற்கு காங்கிரஸில் எந்த ஆதரவும் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை," என்றும் அவர் தெரிவித்தார். கிரீன்லாந்தை வாங்குதல் அமெரிக்காவிடம் பெரும் செல்வம் இருக்கலாம், ஆனால் கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்பதில் கிரின்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய இரு தரப்பும் உறுதியாக உள்ளன. பிபிசியின் அமெரிக்கச் செய்தி கூட்டாளியான சிபிஎஸ், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்த விவகாரத்தை அறிந்த ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, வெள்ளை மாளிகையின் நிலைப்பாட்டிலிருந்து சற்று மாறுபட்டு, கிரீன்லாந்தை விலைக்கு வாங்குவதே இந்த நிர்வாகத்தின் விருப்பமான தேர்வு என்று வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால், ஒருவேளை கிரீன்லாந்து தன்னை விற்க விரும்பினாலும், அத்தகைய பரிவர்த்தனை மிகவும் சிக்கலானது. இதற்கான எந்தவொரு நிதியும் அமெரிக்க நாடாளுமன்றத்தால் ஒதுக்கப்பட வேண்டும். ஒரு ஒப்பந்தத்தின் மூலம் கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கு செனட் சபையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படும். இதைத் திரட்டுவது மிகவும் கடினம் என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புதல் அளிக்க வேண்டியிருக்கும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கிரீன்லாந்தை சேர்ந்த பலரும் டென்மார்க்கிலிருந்து சுதந்திரம் பெறுவதை விரும்புகிறார்கள் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன, ஆனால் அவர்களில் சிலர் மட்டுமே அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற விரும்புகிறார்கள் கிரீன்லாந்து அல்லது காங்கிரஸை ஈடுபடுத்தாமல் டிரம்ப் ஒருதலைப்பட்சமாக ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள முயலலாம் என்றாலும், அது நடக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச சட்ட நிபுணர் பேராசிரியர் மோனிகா ஹகிமி கூறுகையில், டென்மார்க், அமெரிக்கா மற்றும் கிரீன்லாந்து ஆகியவை இணைந்து, அந்தப் பிரதேசத்தை மாற்றுவதற்கான விதிமுறைகளில் ஒப்பந்தம் செய்வதற்கான "ஒரு சூழ்நிலை உருவாகலாம் என்று கற்பனை செய்ய முடியும்" என்று தெரிவித்தார். "ஆனால் சர்வதேச சட்டத்திற்கு முழுமையாக இணங்க வேண்டுமானால், அத்தகைய ஒப்பந்தத்தில் கிரீன்லாந்து மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக அவர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார். இந்தத் தீவை வாங்குவதற்கு எவ்வளவு செலவாகும் என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை. இது அமெரிக்காவுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமான "அமெரிக்கா ஃபர்ஸ்ட்" என்ற கொள்கையை முன்னிறுத்தி பிரசாரம் செய்த டிரம்புக்குச் சிக்கலை ஏற்படுத்தலாம். பனி மூடிய ஒரு தீவுக்காக பில்லியன் கணக்கான அல்லது டிரில்லியன் கணக்கான அமெரிக்க வரி செலுத்துவோரின் பணம் செலவழிக்கப்படுவதை டிரம்பின் ஆதரவாளர்கள் விரும்பாமல் போகலாம். இருப்பினும், தீவை விலைக்கு வாங்குவதில் தோல்வி அடைந்தால், அது டிரம்புக்கு ராணுவ வழியை ஈர்க்கக்கூடியதாக மாற்றக்கூடும் என்று ஜஸ்டின் கிரம்ப் கருதுகிறார். குறிப்பாக வெனிசுவேலாவில் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்ய சமீபத்தில் நடத்தப்பட்ட வெற்றிகரமான ராணுவ நடவடிக்கையால் டிரம்ப் நிர்வாகம் உற்சாகமடைந்துள்ளது. "'அப்படியென்றால், நாங்கள் இதை நேரடியாகக் கைப்பற்றிவிடுவோம்' என்று அவர் சொல்வார்," என்று டிரம்பைப் பற்றி கிரம்ப் கூறினார். வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறுகையில், "கிரீன்லாந்தை எப்படிக் கையகப்படுத்தலாம் என்று ஆராய்ந்த முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் அல்ல" என்று குறிப்பிட்டுள்ளார். 1946-ஆம் ஆண்டு டென்மார்க்குக்கு 100 மில்லியன் டாலர் தங்கத்தை வழங்க முன்வந்து கிரீன்லாந்தை வாங்க முயன்ற அதிபர் ஹாரி ட்ரூமனை அவர் உதாரணமாகக் காட்டினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கிரீன்லாந்து மக்களை வெல்வதற்கான பிரசாரம் கிரீன்லாந்தில் பெரும்பான்மையான மக்கள் டென்மார்க்கிலிருந்து சுதந்திரம் பெற விரும்புகிறார்கள் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், அவர்கள் அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற விரும்பவில்லை என்பதையும் கருத்துக் கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆயினும், குறுகிய கால நிதிச் சலுகைகள் அல்லது வருங்கால பொருளாதார நன்மைகளை முன்வைத்து, கிரீன்லாந்து மக்களின் ஆதரவைப் பெற அமெரிக்கா தனது முயற்சிகளைத் தீவிரப்படுத்தக்கூடும். ஏற்கெனவே, அமெரிக்க உளவு அமைப்புகள் கிரீன்லாந்தின் சுதந்திர இயக்கத்தைக் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், அமெரிக்க நிர்வாகத்தின் இலக்குகளுக்கு ஆதரவாகச் செயல்படக்கூடிய நபர்களைக் கண்டறிய முயற்சிப்பதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வாஷிங்டன் டிசியில் உள்ள அட்லாண்டிக் கவுன்சிலின் நிலவியல் உத்தி சார் நிபுணரும், பாதுகாப்புத் துறையின் முன்னாள் கொள்கை ஆலோசகருமான இம்ரான் பயோனி, பிபிசியிடம் பேசுகையில், ராணுவ நடவடிக்கையை விட ஒரு "செல்வாக்கு செலுத்தும் பிரசாரம்" நடைபெறவே அதிக வாய்ப்புள்ளது என்றார். இந்தப் பிரசாரம் கிரீன்லாந்தை சுதந்திரத்தை நோக்கி நகர்த்த உதவும். இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், "அதன் பிறகு, கிரீன்லாந்து சுதந்திரத்தை அறிவித்தவுடன், அமெரிக்க அரசு ஒரு கூட்டாளியாக மாற முடியும்" என்றும் "ராணுவ நடவடிக்கைக்கான செலவு மிக அதிகம்" என்றும் விளக்கினார். இத்தகைய கூட்ணி ஒப்பந்தங்களுக்கு முன்னுதாரணங்கள் இல்லாமலும் இல்லை. உதாரணமாக, பசிபிக் நாடுகளான பலாவ் , மைக்ரோனேஷியா மற்றும் மார்ஷல் தீவுகள் ஆகியவற்றுடன் அமெரிக்கா இதேபோன்ற ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இவை சுதந்திர நாடுகள் என்றாலும், அமெரிக்காவுக்கு அங்கு பாதுகாப்பு உரிமைகளை வழங்குகின்றன. இதற்குப் பதிலாக, இந்த மூன்று நாடுகளின் குடிமக்களும் அமெரிக்காவில் வசிக்கவும் பணிபுரியவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால், இது டிரம்புக்குத் திருப்தி அளிக்காமல் போகலாம். ஏனெனில், தற்போதைய ஒப்பந்தங்களின் கீழ் எத்தனை வீரர்களை வேண்டுமானாலும் கிரீன்லாந்துக்கு அனுப்பும் அதிகாரம் அவருக்கு ஏற்கெனவே உள்ளது. மேலும், இத்தகைய ஒப்பந்தங்கள் ஆர்க்டிக் பனிப்பாறைகளுக்கு அடியில் புதைந்துள்ள கிரீன்லாந்தின் பரந்த கனிம வளங்கள் மீதான உரிமையை அமெரிக்காவுக்கு வழங்காது. டென்மார்க் ஆய்வாளர் ஹான்சன் கூறுகையில், ராணுவ நடவடிக்கையைத் தவிர்த்து கிரீன்லாந்தை "கைப்பற்றும்" எந்த முயற்சியும், அந்த யோசனைக்கு கிரீன்லாந்து மக்களே எதிராக இருக்கும் வரையில், வெற்றியடையாது என்று கூறுகிறார். தற்போது, அந்தத் தீவில் உள்ள எந்தவொரு அரசியல் கட்சியும் அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறுவதற்குப் பிரசாரம் செய்யவில்லை. இதுகுறித்துப் பேசிய ஹான்சன், "கிரீன்லாந்து மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்றார். "மேலும், தற்போதைய அமெரிக்க நிர்வாகத்திற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் மட்டுமே உள்ளன, ஆனால் கிரீன்லாந்து மக்களின் எதிர்காலத் திட்டம் 1,000 ஆண்டுகளைக் கொண்டிருக்கலாம்," என்று சுட்டிக்காட்டினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c17ze7npwqko
By
ஏராளன் · 4 minutes ago 4 min
Archived
This topic is now archived and is closed to further replies.