Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட்டியும் முதலும் - ராஜுமுருகன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட்டியும் முதலும் - ராஜுமுருகன்.

 

ராஜுமுருகனின்,  "வட்டியும் முதலும்" என்னும்... கட்டுரை சிலமாதங்களுக்கு முன்பு ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது எழுத்துக்கள் ஒவ்வொரு கிழமையும்... வித்தியான சமூகப் பிரச்சினைகளை, முக்கிய கருவாக எடுத்துக் கொண்டு எழுதுவதில் மிகவும் சிறந்த எழுத்தாளர். பல லட்சக்கணக்கான வாசகர்களால் வாசிக்கப் பட்ட அவரது எழுத்துக்களை... நீங்களும் வாசித்துப் பாருங்களேன். 

 

--------------

ம்பிக்கைக்கும் நம்பிக்கை இன்மைக்கும் நடுவில் கிழிகின்றன நாட்கள்!
புதிய கீர்த்தனா ஒருத்தி, நம்பிக்கையின் இசையால் என் இரவுகளை நிறைக்கிறாள் இப்போது. இவள் என் வாழ்க்கைக்குள் வருவாள் என நான் நம்பியதே இல்லை. 10 வருடங்கள் பழகிய பிறகு எங்கோ தூர தேசம் போய்விட்டவள் இப்போது திரும்பக் கிடைத்திருக்கிறாள். நான் பரிசாகக் கொடுத்த பறவையை ''வேணாம்... எடுத்துட்டுப் போயிருங்க...'' எனத் திருப்பிக் கொடுத்தவள். ''போன் எல்லாம் பண்ணாதீங்க... டார்ச்சரா இருக்கு...'' எனக் கொந்தளித்தவள். முன்பு ஃபேஸ்புக்கில்கூட என்னை நிராகரித்தவள். இத்தனை வருடங்களுக்குப் பிறகு வந்திருக்கிறாள், நம்பிக்கையின் சிறு வெளிச்சத்தைக் கண்களாக்கிக்கொண்டு. ''எப்பவுமே உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுக்காக ஈஈஈன்னு இளிப்பாங்களா? பொண்ணுங்களுக்கு செக்யூரிட்டி ரொம்ப முக்கியம்ப்பா...'' என அவள் சொன்னபோது, காலத்தின் மீதான என் நம்பிக்கை கூடியது.
 
அன்பின் மீது நாம் வைத்திருக்கும் ஆழ்மன நம்பிக்கைகள் பொய்ப்பதே இல்லை. பேசாதிருப்பினும், பிரிந்திருப்பினும் அந்த நம்பிக்கை அரூபமாக நம்மைப் பின்தொடர்கின்றன. கடலேறிப்போன மீனவக் கணவன் திரும்பக் காத்திருக்கும் அக்காக்களின் விழிகள்... சாம்பலாகிவிட்ட காதல் கிழவனின் மோட்சத்துக்காக அஸ்தியைக் கரைக்க காசிக்குப் போய்க்கொண்டிருக்கும் முதுகிழவியின் பிரியம்... கடைசி வரை அப்பாவின் சத்தியங்களை நம்பிய அம்மாவின் இதயம்... கேள்விப்பட்ட ஒரு சொல்லை 'நீ சொன்னியா..?’ என நண்பனிடம் சாகும் வரை கேட்காத ஒரு நட்பு... சவுதி பாலைவனத்தில் அவனும் ஒரத்தநாடு வயக்காட்டில் அவளுமாக உழன்று, மாசத்துக்கு ஒரு போன் பண்ணிக்கொண்டு குடும்பத்துக்காக வாழும் நேசம்... 'அவன் பண்ணிருவாம்பா...’ என்கிற குருவின் வார்த்தைகள்... அன்பின் நம்பிக்கைக்கு உதடுகளோ, கண் களோ தேவை இல்லை என்பதை அறிக. காலமும் கோலமும் தடையில்லை என்பதை உணர்க!
 
நம்பியதை நிகழ்த்துவதில்தான் இந்த வாழ்க்கைக்கான அர்த்தமே இருக்கிறது. கண் முன்னே ஈழத்தில் லட்சம் சகோதர உயிர்களைப் பலிகொடுத்தோம். தாங்க முடியாத இன அழிப்புக் கொலைகளைக் கண்டோம். பிரபாகரனின் சேறு பூசிய உடலை டி.வி-யில் பார்த்தோம். உலகம் காணாத பேரதிர்ச்சிக் காட்சிகள், நமது தமிழ்ச் சகோதர சகோதரிகளுக்கு நடந்ததை
வேடிக்கை பார்த்தோம். எஞ்சியிருக்கும் கொஞ்சநஞ்ச மானுட அறத்துக்காக இப்போதும் மாணவர்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்களே... அதுதான் நம்பிக்கை!
p89.jpg
 (ஓவியம்: ஹாசிப்கான்)
தனிமனித அவநம்பிக்கை களைக் கண்டு இந்த நம்பிக்கைகள் நகைக்கின்றன. விடிவோம் என்ற நம்பிக்கை யில்தான் இருள்கிறது ஆகாயம். பாதி அழுகிவிட்ட கை கால்களில் புதுத் துணி யைச் சுற்றிக்கொண்டு அடி வாரத்துக்கு அதிகாலையில் வந்து உட்கார்ந்துவிட்டார் அந்தக் கிழவர்... சுனாமி குடியிருப்பின் மையத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஆலயம்மன் கோயிலுக்குப் போன வாரம்தான் கும்பாபிஷேகம் நடந்தது... கழுத்துக்குக் கீழே எதுவும் செயல்படாத சேலம் சகோதரிகள் கண்டுபிடித்த தமிழ் மென்பொருள் இப்போது நமது கணினிகளில் கண் சிமிட்டுகின்றன... யாரோ ஒரு பொறுக்கியால் ஆசிட் அடிக்கப்பட்ட பெண் சிதைந்த முகத்தோடு செங்கல் பட்டு மொட்டை மாடியில் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்திக்கொண்டுஇருக்கிறாள். ''புதுசா ஒரு லைன் பிடிச்சேன்... ட்ரெண்டியா சிக்கிருச்சு. எஃப்.பில ஆரம்பிக்கிற ஒரு லவ்... என்னெல்லாம் பண்ணுதுனு ஒரு த்ரில்லர் சொல்றேன்...'' என அறுபது வயதில் இன்னும் முதல் பட முயற்சியில் அலையும் இணை இயக்குநர் அண்ணன், ''இல்ல தம்பி... எங்காலம் வரைக்கும் இந்த நெலத்துல நான் வெதைச்சு அறுத்துக்கறேன். நா போன பொறவு வித்துக்க... வூடு கட்டிக்க... நா இருக்கற வரைக்கும் வெவசாயத்த விட முடியாது...'' என இப்போதும் நிலத்தோடு மல்லுக் கட்டும் பெரியப்பா, ''இப்போதான் தங்கச்சி கல்யாணத்த முடிச்சேன்... இனிமேதான் எனக்குப் பாக்கணும்...'' என சொட்டை தடவும் சகோ, 10 ஆண்டுகளுக்குப் பிறகும் சோர்வடையா இரோம் ஷர்மியின் இமைகள், சதா ராணுவம் திரியும் செர்பிய எல்லையின் கோதுமை வயலில் குருவிகள் விரட்டும் ஒரு சிறுமி... நம்பிக்கைகளை அடைவதில் அல்ல, நிகழ்த்துவதில்தான் இருக்கிறது இந்த வாழ்க்கை!
 
எதையேனும் யாரையேனும் நம்பிப் பற்றிக்கொள்வதில்தானே பிழைத்திருக்கிறது பலரின் உலகம். கோயில்களும், மசூதிகளும், தேவாலயங் களும் நம்பிக்கையின் பிரார்த்தனைகளால் நிறைந்துகிடக்கின்றன. அதிமுக்கியமான வேலை களுக்குப் போகும்போதெல்லாம் மஞ்சள் கோடுபோட்ட சட்டையைப் போட்டுப்போவார் சித்தப்பா. ரெண்டாவது பிள்ளை பிறந்த பிறகு தான் வீட்டுக்குள் செல்வம் வந்ததாக இப்போதும் நம்புகிறார் வராகன். வீட்டை விட்டு வெளியே போகும்போதெல்லாம் வாசலில் நாலணா சுண்டி விட்டுப் போவார் சௌந்தரபாண்டி மாமா. பேரன், பேத்திகளுக்குத் திருஷ்டி சுற்றிய பட்ட மிளகாயைச் சந்திக்கரையில் கொட்டிவிட்டுப் போகிறது அம்சத்தா. செத்துப்போன பிரியப்பட்டவர்கள் காக்கைகளாகி வருவதாகக் காத்திருக்கின்றன அமாவாசை மதியங்கள். அக்காக் குருவிகள் அழுதால் வசந்தம் வரப் போவதாக நம்புகிறது ஊர். ஒரே வெட்டில் ஆட்டின் தலை உருள வேண்டுகிறது ஜனம். தாய்ப் பிள்ளைக்காரி வந்து பொட்டிடக் காத்திருக்கிறது புதுவீட்டு வாசலில் கன்றுக்குட்டி. முதல் கொத்து நாத்துவிட, கலியன்தான் எடுத்துத்தர வேண்டும் அப்பாவுக்கு. முதல் அறுப்பு அறுக்க, அம்மா வர வேண்டும். முதல்முறை வாங்கிய பழைய பிளைமவுத்தை இப்போதும் வாசலில் போட்டு வைத்திருக்கிறார் துரைசிங்கம் தாத்தா... அவரவர்க் கான நம்பிக்கைகளில் லாஜிக் எல்லாம் இல்லை. அது மனதின் தேவைகள். தீ மிதித்துக் கொப் புளித்த கால்கள், கசையடித்து எரியும் தசைகள், ஆணியில் ரத்தம் பெருகும் பிரார்த்தனை என மனித நம்பிக்கைகளின் முட்டாள்தனமும் இயலாமையும் கடவுளின் குரூரமெனக் கொள்க!
 
''அடேய் முட்டகோஸு... நம்பிக்கைத் துரோகம்கற வார்த்தையே தப்பு. நம்பிக்கைல துரோகம் எப்பிடிறா வரும்..? நம்பிக்கை தனி... துரோகம் தனி... ரெண்டையும் சேக்காதீங்கடா...'' எனச் சிரித்த திருநாவுக்கரசு அண்ணனின் முகம் இப்போதும் அச்சடிக்கிறது மனதில். ஒரு மதியம் திருநாவுக்கரசு அண்ணனின் மனைவி இன்னொருவருடன் ஓடிப்போனார். மறுநாள்தான் அண்ணனுக்குத் தெரிந்தது. நாங்கள் போனபோது ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்தார். சாதி சனம் வந்து போலீஸ் புகாருக்குக் கூப்பிட்டது. சிலர் காரெடுத்து வந்து நின்றார்கள். ''அவனைப் பொலி போட்ருவோம்...'' எனக் கதறினார்கள். அண்ணன் எதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை. ''போங்கப்பா... எம் பொண் டாட்டிதான ஓடிப்போனா... நா பாத்துக்கறேன். யாரும் ஒண்ணும் புடுங்க வேணாம்... கௌம்புங்க...'' என்றார். அந்தக்கா ஓடிப்போனது பக்கத்து ஊர் கார் டிரைவருடன். அடுத்த ரெண்டாவது நாள் அந்த கார் டிரைவருடன் கல்யாணமாகி வந்து நின்றது அக்கா. ''இனிமே ஒண்ணும் சம்பந்தம்இல்லனு எழுதிக் குடுத்துருங்க. நாங்க போயிர்றோம்...'' என்றார் அந்த டிரைவர். அவர்களை அடித்துப் பிரிக்கத் திரண்டது கும்பல். எல்லோரையும் அடக்கிவிட்டுக் கிடுகிடுவென எழுதித் தந்தார் அண்ணன். கொடுக்கும்போது அந்த அக்காவிடம், ''என்ட்ட சொல்லிருக்கலாம்ல... மொரப்படி டைவர்ஸ் குடுத்துருப்பேன். எதுக்கு இந்த அசிங்கம்லாம் கேக்கணும். போ... நம்புனவனோட நல்லாரு'' என்றார் சலனம் இல்லாத கண்களோடு. அன்றைக்கு இரவு குடிக்கும்போது தான் மேலே சொன்ன டயலாக்கைச் சிரித்தபடி சொன்னார். அந்தச் சிரிப்பு அவ்வளவு உண்மையாக இருந்தது. ஆமாம்... நம்பிக்கையில் ஏது துரோகம்?
 
ஒருநாள் நம்பிக்கையோடும் மறுநாளே அவநம்பிக்கையோடும் ஊஞ்சலாடும் மனசு. இது ஒரு மாயம். எப்போதும் சமநிலையில் இருக்கும் மனதை எவ்வளவு காலமாக யாசிக்கிறேன். ராஜாவின் ஓர் இசைத் துணுக்கில், ரமணரின் ஒரு புன்னகையில், பிரபாகரனின் ஒரு புகைப்படத்தில், குரோசோவாவின் ஒரு ஃப்ரேமில், அழகிய பெரியவனின் ஒரு கவிதையில், இமையத்தின் ஒரு கதையில், யாரோ எழுதிய ஒரு ட்விட்டர் வரியில், பயண வழிக் காட்சியில், போய் நின்ற ஒரு போராட்டத்தில், தோழர், தோழிகளின் ஒரு வார்த்தையில், யாரோ ஒருவரின் வாழ்த்தில், யாருக்கோ செய்துவிட்ட ஒரு செயலில், ஒவ்வொரு முறையும் தழைக்கிறது நம்பிக்கை. ஒவ்வொரு மனதையும் மீட்டெடுக்க ஆயிரமாயிரம் இதயங்கள் இருக்கின்றன இவ்வுலகில் என்பதுதான் ஆகப்பெரிய நம்பிக்கை.
 
நான் தளர்வுறும் பல தருணங்களில் ஜெயகாந்தனின் 'அம்மா நான் இருக்கிறேன்’ கதையை மறுபடி மறுபடி படிப்பேன். ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்துவருவான். கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான். ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும். அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் 'ஸாரி’ கேட்பாள். அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும். ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் விழுந்துவிடுவான். ரயில் வருகிற நேரம் ஒரு குஷ்டரோகி பிச்சைக்காரன், அந்த இளைஞனைக் காப்பாற்றிவிடுவான். பக்கத்தில் இருக்கும் ஒரு கல்மண்ட பத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞ னிடம் சொல்வான், 'நான் எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா... அன்னிக்கு ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன். அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க... அவ்வளவு அருவருப்பா இருக்கு என்னையப் பாக்க. நானே உயிரோட இங்க வாழ்ந்துட்டு இருக்கேன்... உனக்கெல்லாம் என்ன தங்கம்...’ எனப் பேசி அந்த இளைஞனின் நம்பிக்கையைத் தூண்டி விடுவான். தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு அவன் தூங்குவான். காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப் பார்கள். அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் எனப் பயந்து ஓடிவருவாள் அவன் அம்மா. 'அம்மா... நான் இருக்கிறேன் அம்மா...’ என அந்த இளைஞன் கத்திக்கொண்டே வருவான். அங்கே அந்த பிச்சைக்காரன் செத்துக்கிடப்பான். இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் 'இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக் கிறான்... நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே...’ என யோசித்து தண்டவாளத்தில் குதித்திருப்பான். செத்துப்போன அவனைப் பார்த்தபடி அந்த இளைஞன் சொல்வான், 'அம்மா... அவன் எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான்... நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்!’
 
நாம் நம் சக மனிதர்களுக்கு எதைக் கற்றுத்தரப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் வாழ்க்கை யின் அர்த்தம்!
 
நன்றி : ராஜுமுருகன், ஆனந்த விகடன்

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
பதிவுக்கு நன்றி தமிழ்சிறி
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிவுக்கு நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பகிர்வு சிறி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்திட்ட ரதி, லியோ, சுமேரியர், அபராஜிதன், காளானுக்கு நன்றி.
ராஜு முருகனின்... "வட்டியும் முதலும்" கதைகள் விகடன் பிரசுரமாக புத்தகமாக வந்துள்ளது.
உங்கள் நாடுகளிலுள்ள, புத்தகக் கடைகளில் கண்டால்... நிச்சயம் வாங்கி வாசியுங்கள்.
அவ்வ‌ள‌வு... அருமையான‌ எழுத்துக்க‌ள் அவை.
 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு அருமையான பகிர்வு !

 

நன்றிகள், தமிழ்சிறி!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதைகள் சிறி !  ஜெயகாந்தனின் கதைகள் எல்லாம் முன்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தன . பின்னாளில் அவர் சொதப்பத் தொடங்கீட்டார் ! என்ன செய்வது  சில நேரங்களில் சில மனிதர்கள் சில சமயங்களில் நிர்ப்பந்த்துக்கோ ,சமரசத்துக்கோ உட்பட்டுத்தான் தீர வேண்டியுள்ளது . நன்றி !!

முன்னர் இது பற்றி எழுதிய ஞாபகம் .

அனைத்தும் அந்த மாதிரி .இதற்காக பரிசு வேறு ராஜு முருகனுக்கு கிடைத்தது .

 பகிர்வுக்கு நன்றி அண்ணா
வாங்கணும் இந்த புத்தகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.