Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொசுங்குக போலிகள்!

Featured Replies

பிராங்பேர்ட் விமானநிலையம்.

 

விமானங்களின் போக்குவரத்து விபரங்களை விளம்பும் அறிவிப்புப் பலகையை நோட்டமிட்டவாறு அமர்ந்திருந்தாள் சுதா.

 

பல்வேறு நாட்டவர்கள் புரியாத மொழிகளில் உரையாடியவாறு, சக்கரங்கள் பூட்டிய 'சூட்கேஸ்'களை இழுத்தவாறு அவளைக் கடந்து சென்றுகொண்டிருந்தார்கள்.

 

தோளில் ஒரேயொரு 'வாய்க்'. இலங்கையில் இருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இதே பிராங்பேர்ட் விமானநிலையத்தை மிதித்தபோது கொண்டு வந்திருந்த அதே 'வாய்க்'.

 

அப்போது கனத்திருந்தது. பெறுமதியான பொருட்களுடன் இருந்தது. ஆனால் இப்போது இரண்டொரு உடுபிடவைகளுடன் பாரமில்லாமல் இலேசாக அவள் தோளே தஞ்சமெனத் தொங்கியது.

 

சுதாவின் மனம் இந்த மண்ணை மிதித்தபோது எவ்வளவோ இன்ப மதர்ப்புடன் காற்றாடியாகக் கற்பனையென்ற வானத்தில் பறந்துகொண்டிருந்தது. ஆனால் தற்போது பலவித உணர்வுகளின் கொந்தளிப்புக் கலவைகளின் குழையல் கணத்துக்குக் கணம் கனங்களாய் இதயத்தை இடித்து மனதை அழுத்திக்கொண்டிருந்தது

 

'இருப்பதைவிட்டுப் பறப்பதற்கு ஆசைப்பட்டதற்குத் தகுந்த தண்டனை கிடைத்துவிட்டது. சுட்டால்தானே தெரிகிறது, தொட்டால் சுடுவது நெருப்பென்று...!'

 

இழந்துபோன எதிர்பார்ப்புகளுக்கு விடையாக தனக்குத்தானே பதில்களைக் கண்டவளாய் சமாதானம் கூறிக்கொண்டாள்.

 

எல்லாமே முடிந்துபோய்விட்டது. முடிச்சுக்களுக்காக முழுவியளம் பார்த்து உற்றம்சுற்றம் வாழ்த்த, பெற்றவள் பாசமழையெனக் கண்ணீர் சிந்தி விழி சிறுத்து உச்சிமோர்ந்து வழியனுப்ப வந்தவள், முடிச்சுகளுக்குப் பதில் சுருக்குகள் தந்த அதிர்ச்சிகளுடன் எல்லாமே முடிந்து விட்டதாக.... அந்த முடிவில் புதிய வழி திறந்துவிட்டதான தீர்மானத்துடன் மூன்று மாதங்களில் மீண்டும் 'பிராங்பேர்ட்' விமானநிலையத்தில் சுதா!

 

எதற்காகவோ புறப்பட்டு, எதற்காகவோ பாடுபட்டு, ஈற்றில் திசைமாறிய பாதையில் தடம் பதித்ததால் - இருக்கைகளுக்காகப் பொதுநலச் சாயம்பூசும் வேசதாரிகளின் முன்னால் சேற்றை வாரிப் பூசவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட வேதனையை ஜீரணிக்க இந்தப் பயணம் ஆதாரமாகிவிட்டது.

 

மீண்டும் தாயகத்தை நோக்கி.... மீண்டும் குண்டும் குழியுமாய் சிவப்பேறிப்போயிருக்கும் மண்ணை நோக்கி.... இனவெறி அரக்கர்களின் கோரத்தாண்டவத்தின் குறியீடாக கற்குவியல்களாய்.... மண்மேடுகளாய் உருக்குலைந்த கட்டிடங்களுடன் அலங்கோலமாயிருந்தாலும்.... கொண்ட கொள்கைக்காக.... இலக்கான இலட்சியத்துக்காக எவ்வளவு இழப்புகள் ஏற்பட்டாலும் இறுதியில் விடியல் ஒளிரும் என்ற நம்பிக்கைகளே வாழ்க்கையாய் இறுமாந்திருக்கும் மக்களைத் தாங்கி, விடுதலை வேள்வித் தீயில் புடம்போட்ட தங்கமாய் ஜொலிக்கும் மண்ணை நோக்கிய பயணத்துக்காக.... இன்னும் சில நிமிட நேரத்தில் புறப்படத் தயாராகப் 'பிராங்பேர்ட்' விமானநிலையத்தில் சுதா....!

 

 

எவ்வளவோ நம்பிக்கையுடன் வந்தாள்.... வித்தியாசமான சூழலிலிருந்து புறப்பட்டு, சாதாரண மானிட வாழ்வில் ஒரு தாரமாக, ஒரு தாயாக.... ஒரு சராசரி தமிழ்ப்பெண்ணாக.... அன்பு பாசம்.... கண்ணுக்குத் தெரியாத நேசக் கயிறுகளுள் சிக்கிப்பிணைந்து, குடும்பமென்ற வீணையில் பந்தமென்ற நாதத்தை மீட்கலாமென்று எவ்வளவு ஆசையாக இந்த அந்நிய மண்ணை அன்று மிதித்தாள்?!

 

சுதா!

 

பால்மணம் மாறாத மழலைப் பருவத்தில் தந்தையை இழந்தவள்.

 

"அப்பா எங்கையம்மா?"

 

"அப்பாவோடா...?! அப்பா சாமியிட்டைப் போவிட்டாரம்மா...." என்று கலங்கியவாறு கூறும் அம்மா கமலாம்பிகையின் விடைகளைச் சின்ன வயதில் நம்பியவாறு, கறுப்பு வெள்ளையாக, சந்தணப்பொட்டும் காகிதப்பூ மாலையுமாக மரச்சட்டங்களுள் அடக்கமாகி மண்சுவரைத் தாங்கிய கப்பிலுள்ள ஆணியில் தொங்கிய தந்தையின் படத்தைப் பார்த்தே வளர்ந்தவள்.

 

சிறுவயதில் சின்னன் சின்னனாய் முளைக்கும் ஆசைகளை எல்லாம் தாயின் கையாலாகாத்தன்மையில் கைவிட்டு, வளர்ந்து பருவ வயதை எட்டியவளின் பின்னே மோப்பம் பிடித்தவர்களையும் மோகவலை விரித்தவர்களையும் உசாதீனப்படுத்தியவளால் ஒன்றைமட்டும் கைகழுவிவிட முடியவில்லை.

 

''பிள்ளை! பத்திரம்.... தேப்பனில்லாத பிள்ளையெண்டு கண்டவங்கள் வாலாட்டுவாங்கள்...."

 

''உனக்கென்னணை விசரே.... எனக்குத் தெரியாதே எங்கடை நிலமை.... நீ ஒண்டுக்கும் கவலைப்படாதையணை.... நான் தப்பான வழியளுக்கெல்லாம் போகமாட்டன்...."

 

சேய் தாய்க்கு வார்த்தைகளால் பாலூட்டியது.

 

"குடும்ப நிலவரம் தெரிஞ்ச பொறுப்பான பிள்ளை..."

 

கமலத்தின் நெஞ்சம் பெருமையுடன் கணவனின் படத்தை நாடிக் கலங்கியது.

 

"ஐயா! நீங்கள் என்னைவிட்டு இடைநடுவில் மறைந்தாலும் உங்கள் மகள் என்னை வாழவைப்பாள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது...."

 

''பிள்ளை! காலம் கலியுகமாய்க் கிடக்கு.... எந்தநேரத்திலை என்ன நடக்குமோ எண்டு தெரியாமை வயித்திலை நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்க வேண்டிக்கிடக்கு...."

 

''கண்டதை நிண்டதை நினைச்சு ஏனணை கவலைப்படுறாய்.... நான் என்ன சின்னப்பிள்ளையே.... உங்கடை காலத்திலைதான் நீங்கள் பொழுதுபட்டால் தனிய வெளிக்கிடேலாமை வீட்டுக்குள்ளை அடைஞ்சு கிடந்தியளெண்டால்.... இப்பவும் அப்பிடியே.... இந்தக் காலம் புலியளின் காலம்.... ஆரும் தன்னந்தனிய நடுச்சாமத்திலையும் திரியலாம்...." என்று பெருமையுடன் கூறினாள் சுதா.

 

''அதுதானடி பிள்ளை என்ரை பயமெல்லாம்.... இப்ப பொடி பெட்டையளெல்லாம் போராட்டம் விடுதலை எண்டு வெளிக்கிடுறமாதிரி நீயும் என்னைத் தனிய விட்டிட்டு வெளிக்கிட்டுடாதை...."

 

''அம்மா.... நான் அதைப்பற்றி இன்னும் யோசிக்கேலை.... அப்பிடி நான் போனாலும் பெத்த தாயை மறந்தவளாயே இருக்கப்போறன்.... ஒரு குண்டோ ஷெல்லோ பட்டு அநியாயமாய்ச் சாகிறதைவிட எங்கடை இனத்துக்காக.... எங்கடை மண்ணுக்காக.... எங்கடை உரிமையளுக்காக உயிரை இழக்கிறது எவ்வளவு மேலான செயல்.... எங்கடை வருங்கால சந்ததிகளின் உரிமைக்காக உயிரை விதைக்கிறது எண்டது எவ்வளவு தியாகமான நிகழ்வு.... ஆனால் இந்தத் தியாகமும் துணிவும் எல்லாருக்கும் வராது.... வந்தால் இவளவு அழிவுகளும் துயரங்களும் ஏற்படாது...." என்று கூறியவளைப் பதைப்புடன் பார்த்தாள் கமலம்.

 

''அம்மா.... இண்டைக்கு எத்தனையோ தாய் தேப்பனில்லாத பிள்ளையள்.... பிள்ளையளைக் கண்முன்னாலை துண்டுதுண்டாய் சிதறக் கொடுத்துவிட்டும் விடியலுக்காகக் காத்துக்கிடக்கிற தாய் தேப்பன்கள்.... இண்டைக்கு என்ன நடக்குமோ.... நாளைக்கு என்ன கிடைக்குமோ.... நாங்கள் இந்த இடத்திலை இன்னும் எத்தனை நாளைக்கு இருப்பமோ எண்டதே கேள்வியாய் இருக்கேக்கை.... எண்டைக்குமே நாங்கள் நிம்மதியாய் நிரந்தரமாய் ஒரே இடத்திலை வாழவேணும் எண்டால்.... இப்ப வாற துயரங்களையும் பிரிவுகளையும் தாங்கிக்கொள்ளத்தான் வேணும்...."

 

மனதிலிருந்து அனுபவபூர்வமாக வந்துவிழுந்த வார்த்தைகள் அவை.

 

கண்முன்னே நிகழும் கொடுமைகளைக் கண்டு, எதிர்காலத்தில் எதிர்நோக்கவுள்ள தீர்மானத்தக்கு முன்னோடியாக வந்த வார்த்தைகள் அவை என்பதை, சுதா அன்றொருநாள் வீடு திரும்பாதபோதுதான் கமலத்தால் உணரமுடிந்தது.

 

தகப்பனுக்குத் தகப்பனாகவும், தாய்க்குத் தாயாகவும் தோளிலும் மடியிலும்போட்டு ஊட்டி வளர்த்த பஞ்சவர்ணக் கிளி உரிமைகீதம் பாடவெனப் புறப்பட்ட பிரிவைத் தாங்கமுடியாதவளாய், துயிலாத இரவொன்றில் கண்கள் தாரையாகிப் பாயை நனைக்க, ஆதவன் தனது அலகுகளைக் கீழ்வானத்தில் அகல நீட்டினான்.

 

அந்த அதிகாலைப்பொழுதில், உக்கி உதிர்ந்து கறையானுக்கும் உணவாகிக்கொண்டு, வெறும் ஈர்க்குகளால் படலையென்ற பெயரில் ஒழுங்கையருகே சோர்ந்திருந்த தென்னோலைத் தட்டி அருகே சைக்கிளின் மணிஒலிச் சத்தம்கேட்டு, 'என்னவோ, ஏதோ' என்ற பதைப்புடன் அழைத்த சத்தத்தை நாடி ஓடினாள் கமலாம்பிகை.

 

ஒரு காலைத் தரைதாங்க சைக்கிளில் அமர்ந்திருந்தான் இருபது வயது மதிக்கத்தக்க வாலிபன் ஒருவன்

 

முன்பின் பார்த்தறியாதவன்.

 

''உங்கடை மகள்தானே சுதா..."

 

''ஓம் தம்பி... அவள் எங்கை தம்பி... அவளைக் கண்டனியேணை..."

 

தாய்மை தவிப்புடன் கேட்டது.

 

''அவவுக்கு ஒண்டுமில்லையணை.... இந்தக் கடிதத்தை உங்களிட்டைக் குடுக்கச் சொல்லித் தந்துவிட்டவ..." என்றவாறு கடிதத்தை நீட்டினான்.

 

''கடிதமோ... சுதா எங்கை தம்பி..." என்ற பதைப்புடன் உரத்துக் கேட்ட கமலாம்பிகையின் சத்தத்தால் பக்கத்து வீட்டில் வசிக்கும் கனகலிங்கம் அங்கே வந்தார்.

 

கனகலிங்கம் வயதானவர். கமலாம்பிகை குடும்பத்துக்குப் பக்கபலமே அவர்தானென்றாலும் மிகையில்லை. ஆபத்து அந்தரமென்றால் ஓடோடி உதவிக்கு வருவார்.

 

அவரைக் கண்டவுடன் கமலாம்பிகையின் பதைப்பு ஓலமானது. ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.

 

''அண்ணை... நான் பொத்திப்பொத்தி வளர்த்த என்ரை குஞ்சு என்னைவிட்டுப் போவிட்டாளண்ணை... இந்தத் தம்பியிட்டை கடிதம் குடுத்துவிட்டிருக்கிறாள்... நான் இப்ப என்ன செய்வன்... ஐயோ கடவுளே... ஏன் இப்பிடி என்னை வருத்துறாய்..."

 

கனகலிங்கத்தாருக்கு நடந்தது புரிந்தது.

 

தினந்தினம் எவ்வளவோ தியாக உள்ளங்கள் விடுதலைக்கான வீரியத்துடன் எழுகையிலே, பக்கத்து வீட்டிலும் ஒரு உன்னத எழுகை நிகழ்ந்ததை அவரால் உணரமுடிந்தது. ஒரு கணம் நெஞ்சு கனத்துக் கலங்கினாலும், மறுகணம் அப்படியொரு பிள்ளையைப் பெற்றெடுத்த அந்தத் தாயை, வயதில் சிறியவளானாலும் விழுந்து கும்பிடத் தோன்றியது.

 

''எல்லா விபரமும் உந்தக் காயிதத்திலை இருக்கணை... நான் போட்டுவாறன்..."

 

அந்த இளைஞன் விடைபெற அவசரப்பட்டான்.

 

''பொறு தம்பி... என்னையும் சுதாவிட்டைக் கூட்டிக்கொண்டு போ தம்பி... உன்னைக் கையெடுத்துக் கும்பிடுறன்... என்னை ஒருக்கா அவளிட்டைக் கூட்டிக்கொண்டு போ தம்பி..." என்று கெஞ்சிக் கதறினாள் கமலாம்பிகை.

 

இளைஞன் சங்கடப்பட்டான்.

 

''இஞ்சை... பிள்ளை கமலம்... அந்தத் தம்பி போகவேணும்... சுதா எங்கை போய்விடப் போறாள்... ஆறுதலாய்ப் போய்ச் சந்திக்கலாம்..." என்ற கனகலிங்கத்தார்,

''தம்பி... நீர் போவிட்டு வாரும்..." என அவனுக்குக் கூறினார்.

 

''இதோ பாரணை.... அவவை நீங்கள் எப்பவும் சந்திக்கலாம்... ஆனா இப்ப அவ எங்கை இருக்கிறா எண்டு எனக்குத் தெரியாது... நீங்கள் அவவைச் சந்திக்கிறதெண்டால், அதைப்பற்றியும் உங்கடை கடிதத்திலை இருக்குமெண்டு நினைக்கிறன்... நான் வாறன்..."

 

அந்த இளைஞன் போய்விட்டான்.

 

கூந்தல் சரிந்து விழத் தலையில் அடித்தவாறு மண்ணில் புரண்டு ஒப்பாரிவைக்கும் கமலாம்பிகையைத் தேற்றத் திராணியற்றவராய், பரிதாபப் பார்வையுடன் நின்றிருந்தார் கனகலிங்கம்.

 

''பிள்ளை கமலம்... அழாதை... அழூறதாலை என்ன வரப்போகுது... அழூறதாலை உன்ரை மனசு ஆறுமெண்டால்... நல்லாய் அழு... நான் தடுக்கேலை... இப்ப உன்ரை மேள் எங்கை போவிட்டாள்... உனக்காக... எனக்காக... இந்த ஊருக்காக... எங்கடை மண்ணுக்காக.... எங்கடை இனத்துக்காகவெண்டு போவிட்டாள்.... காலங்காலமாக அடங்கி அடங்கி முடங்கிக் கொண்டிருக்கிற எங்கடை தமிழ்ச்சனங்கள் உரிமையோடை... இது எங்கடை சொந்தமண்... எங்கடை சொந்த நாடு எண்டு வாழவேணும் எண்ட விருப்பத்தோடை போயிருக்கிறாள்.... அதுக்காக ஏன் அழவேணும்... இப்பிடி ஒரு பிள்ளையைப் பெத்ததுக்காகச் சந்தோசப்படு..."

 

''அண்ணை.... நான் ஒருக்கா அவளைப் பாக்கவேணும்... என்ரை பிள்ளையைப் பாக்கவேணும்..."

 

''பாக்கலாம்.... அவள் எங்கை போவிடப்போறாள்.... இந்த மக்களையும் மண்ணையும் நேசிக்கிறவள் பெத்த தாயை மறப்பாளே.... நிச்சயம் ஒருநாளைக்கு உன்னைத் தேடி வருவாள்.... கொஞ்ச நாளைக்கு மனதைத் தேற்றிக்கொண்டிரு... நிச்சயமா வருவாள்..."

 

இப்படி எத்தனை ஆயிரமாயிரம் பிள்ளைகள் அழிவுகளைக் கண்டு ஆக்ரோசத்துடன் இலட்சியத்தை வரித்தவர்களாக அடிமை விலங்கொடிக்கவென...?! இவர்களின் தியாகங்கள், அர்ப்பணிப்புகள் யாவும் என்றோ ஒருநாள் அடிமை விலங்கொடித்து உரிமையை உரத்து மீட்கும்.... 

 

ஆதவன் மெல்லமெல்ல மேல் வானத்துக்கு நகர்ந்து கொண்டிருந்தான். வெளிச்சம் சற்று உஷ்ணமாக வந்தது.

 

கனகலிங்கத்தார் போய்விட்டார்.

 

தாழ்வார மண் குந்தில் அமர்ந்து தூணொன்றில் சாய்ந்தவாறு திக்பிரமை பிடித்த நிலையில் இருந்தாள் கமலாம்பிகை.

 

எதிர்காலம் என்னவென்று புரியாத புதிராகவிருந்தது.

 

வீடே வெறிச்சோடிப்போய், தனிமை கொடூரமாகத் தாக்கியது.

 

'இந்த முதிய வயதில் தனிமையை எவ்வாறு சமாளிக்கப் போகிறேன்...?!'

 

அப்போதுதான் சுதா கொடுத்துவிட்ட கடிதத்தின் நினைவு வந்தது.

 

விரித்தாள். அந்தக் குண்டு குண்டான எழுத்துக்களைக் கலங்கிய கண்கள் மேய ஆரம்பித்தன.

 

'ஐயிரு திங்கள் சுமந்து, உதிரத்தைப் பாலாக ஊட்டி, தன்னந்தனியனாய் என்னைக் கண் கலங்கவிடாமல், கண்ணுக்குள் மணியாக வைத்துக் காப்பாற்றிய அம்மா!

பிறந்ததிலிருந்து முதல்முறையாக உங்களுக்குக் கூறாமல், உங்களின் அனுமதி பெறாமல் உங்களைவிட்டுப் பிரிகிறேன்.

சொல்லியிருந்தால் நீங்கள் அனுமதித்திருக்க மாட்டீங்கள். அழுது அடம்பிடித்திருப்பீர்கள். உங்களின் கண்ணீர் எனது உறுதியைக் கலைத்துக் கரைத்திருக்கும்

எனவேதான் இந்தக் கடிதம் மூலமாக, உங்களின் பிள்ளை நான் உங்களுடன் மனந்திறந்து பேசுகிறேன்.

'பெற்றமனம் பித்து, பிள்ளைமனம் கல்லு" என்பதுபோல, நான் உங்களைவிட்டுப் போகவில்லை. உங்களைச் சுற்றியே வளையவரும் எனது எண்ணங்கள், அன்புப் பிரவாகங்கள், பாச ஊற்றுக்கள், விருப்பு வெறுப்புக்கள் யாவற்றையுமே என் தாய்மண்ணின்மீது வலிந்து திசைதிருப்பியவாறு செல்கிறேன் என்பதை... என் ஒவ்வொரு வளர்ச்சியையுமே அவதானித்துச் சீராட்டிய எனது அம்மாவல்லவா.... நீங்கள் நிச்சயமாகப் புரிந்துகொள்ளுவீங்கள்

இந்த மண் எங்களின் சொந்த மண். எங்களது மூதாதையரின் ஒவ்வொரு பாதச்சுவடுகளையும் தாங்கித்தாங்கியே புடம்போட்ட தங்கமாக.... கலைவளமும், பொருள்வளமும், அறிவுவளமும் கொழிக்க அடித்தளமாகி, அதனால் தானும் வளர்ந்து பெருமையுடன் ஜொலித்த மண்.

மலைகளோ அல்லது நதிகளோ இல்லாத வறண்ட மண்ணானாலும், தமது உழைப்பின்மூலம் துலா மிதித்துப் பசுமையாக்கிய விடாமுயற்சியாளர்கள் எமது மண்ணின் மக்கள்.

இவற்றையெல்லாம் பொறுக்கமுடியாத ஏகாதிபத்திய இனவெறியாளர்கள் கல்வித்தடை என்றும், நில அபகரிப்பென்றும், பொருளாதார மருத்துவத் தடையென்றும் பல சுவர்களை எமது மண்ணைச் சுற்றி எழுப்பி, எறிகணைகளாலும் ஷெல் வீச்சுக்களாலும் எம் மக்களையும் எமது மண்ணையும் படிப்படியாக உருக்குலைத்துச் சீரழித்து எம்மை எல்லாம் ஏதிலிகளாக்கி நலிப்பதை.... வெறும் சுயநலத்துடன் கூடிய பாச பந்தங்களுக்காக எவ்வளவு காலத்துக்குத்தான் பொறுப்பது?

இவ்வாறான வினாக்களுக்கு விடைகாணும் தீர்க்கமான செயற்பாடுகளில் எவ்வளவோ ஆயிரமாயிரம் இளைஞர்களும் யுவதிகளும் கிளர்ந்தெழுந்து களமாடி சாதனைகளையும் நினைத்துப் பார்க்கமுடியாத தியாகக் கொடைகளையும் புரிந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் எமது கண்முன்னே விரியும்போது.... இவை எல்லாம் யாருடைய சுபீட்சத்துக்காக, எவருடைய இருப்பை உறுதிப்படுத்துவதற்காக, எத்தகைய விலங்குகளை உடைத்தெறிவதற்காக என்ற சிந்தனைகள் சிறிதுமின்றி, நான்... எனது வீடு... என்னுடைய வாழ்வு என்ற சுயநலத்துடன் வாழ என்னால் முடியவில்லை அம்மா.

அதனால் தங்களைவிட்டுச் செல்கிறேன்.

என்றோ ஒருநாள் உங்களைச் சந்திப்பேன். அதற்கிடையில் என்னுயிர் இந்த மண்ணுக்கு வித்தானால் தயவுசெய்து அழாதீர்கள். எனது உடலைக் காண நேரிட்டால், 'வீர களமாடி என்ரை நெஞ்சில் பால் வார்த்தாயடி' என்று என் நெற்றியில் ஒரு அன்பு முத்தமிட்டாலே... அது போதும் அம்மா...!

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.

அன்பு முத்தங்களுடன்,

உங்கள் அன்பு மகள்,

சுதா.'

 

கடிதம் முடிந்து கண்ணீரில் கரைய ஆரம்பித்தது.

 

'ஐயோ... என் செல்வமே... என்ன கஸ்டப்படப் போகிறாயோ... என்ரை குஞ்சே... உன்னை நான் சந்திப்பேனா... தெய்வமே... என் கண்மணிக்கு எந்தக் கஸ்டத்தையும்விடாதே...'

 

தாயின் மனம் பலவாறாகச் சிந்தித்துப் பதறியது.

 

'அவளைப் பார்ப்பேனா... கனகலிங்கம் அண்ணைகூடச் சொன்னாரே... என்னைத் தேடி வாருவாளெண்டு... வருவாளா... அவள் வருவாளா...'

 

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் வேறேது?!

 

அவள் வந்தாள். அந்தத் தாயின் எதிர்பார்ப்பு, கனகலிங்கத்தாரின் ஆறதல்மொழி எல்லாமே ஆறேழு மாதங்களுக்குள்ளாகவே நிறைவேறியது.

 

சுதா வந்தாள்.

 

அவளது நோக்கத்திற்கு எதிரியாக மலேரியா நோய் அவளைத் தாக்க, அதனால் அவளது உடல்நிலை பாதிப்படைய, அவளால் களத்தில் நின்றுபிடிக்க முடியாது எனத் தீர்மானிக்கப்பட்ட நிலையில்.... எதிர்பார்ப்பு ஈடேறாத விரக்தியில்... மேலும் சமூகப்பணி என்ற பெயரில் அங்கிருப்பதிலும் பார்க்க தாயுடன் இருக்கலாம் என்ற முடிவில் அவள் வந்தாள்.

 

தாயுள்ளம் மலர்ந்தது.

 

இனியும் சுதாவை அவளது போக்கில்விட்டால், மறுபடியும் ஏதாவது செய்துவிடுவாள் என்ற நிலையில் சுதாவுக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித்தாள்.

 

வெளிநாட்டு மாப்பிள்ளை.

 

பெயர் வரதன்.

 

தனது நோக்கங்கள் யாவும் தடைப்பட்ட நிலையில், தாயின் விருப்பமாவது நிறைவேறட்டும் என்ற எண்ணத்தில் சம்மதித்தாள் சுதா.

 

கூடிய விரைவில் சுதா ஜேர்மனியை அடைந்தாள்.

 

சுவர்களில் ஆங்காங்கே விடுதலைவீரர்களின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன.

 

வானொலியில் எழுச்சிப் பாடல்கள் இசைபாடிக்கொண்டிருந்தன. அலுமாரி நிறைய வீரமறவர்களின் நிகழ்வுகளை ஆதாரத்துடன் பறைசாற்றும் வீடியோக் கசற்றுகள்.

 

அது வரதனின் வாசஸ்தலம்.

 

புகலிட நாட்டில் விடுதலை வீரர்களில் அளவற்ற பாசம்வைத்து, அவர்களின் புகழ்பாடும் வரதன் தனக்குத் துணையாகக் கிடைத்ததை எண்ணி அகமகிழ்ந்தாள் சுதா.

 

'போராட்டத்தில் கலந்துகொள்ளாது போனால் என்ன?! அவனுடன் இணைந்து விடுதலைக்காகப் பாடுபடலாமே' என்ற எண்ணம் மனதுக்கு நிம்மதியைத் தந்தது.

 

"சுதா! அடுத்த கிழமை ஒரு விழாவிலை விடுதலையைப்பற்றிப் பேசப்போறன்... உமக்கேதாவது விசயம் தெரிஞ்சால் எழுதிவையும்..."

 

மேடைகளில்கூட எனது நாட்டு விடுதலைக்காகப் பேசுகிறான்

 

மனம் பெருமைப்பட்டது.

 

ஆனால்... அந்தப் பெருமை விரைவில் சிறுமையானது.

 

ஒருநாள் அவன் நிறைவெறியில் வந்தான்.

 

ஜேர்மனிக்கு வந்த மூன்று மாதங்களில் அவனை அந்தக் கோலத்தில் காண்பாள் என்று சுதா எண்ணிப் பார்த்ததே இல்லை.

 

எண்ணக் கோட்டையிலே எங்கோ ஒரு சரிவு ஏற்பட்டதாக உணர்ந்தாள்.

 

''சுதா! நீ இயக்கத்திலை இருந்தனியாம்... இதை ஏன் என்னட்டைச் சொல்லேலை..." என்று கத்தினான் வரதன்.

 

''நீங்கள் கேக்கேலை..."

 

''.... நான் என்னவோ நீ குடும்பப்பெண்ணாய் இருப்பியெண்டு நினைச்சன்..." என்று ஆத்திரத்துடன் கத்தினான் வரதன்.

 

'போராட்டத்தில் இணைந்தால் அவள் குடும்பப்பெண் இல்லையா...?!'

 

அவளது மனமேடையில் இருந்து அவன் அதள பாதாளத்தில் வீழ்ந்தான்.

 

போலி... மற்றவரின் நிழலில் அற்பபெருமை தேடும் விசயமில்லாத வெற்றுத்தாள் இவன்... விடுதலையை வேசமாக்கிப் புகழ்தேடும் புழுவாக அவன் நெளிந்தான்... வேசதாரி... தாயக மக்களின் அவலங்களையும் விடுதலை வேட்கைகளையும் தியாகங்களையும் தான் பெயர்பெறவும்... மேடை காணவும் மூலதனமாக்கும் சர்ப்பமாக அவன் தெரிந்தபோது.... சுதாவின் உள்ளத்தில் தீ பற்றிக் கொண்டது.

 

பிராங்பேர்ட் விமானநிலையம்.

 

எல்லாமே முடிந்து போய்விட்டது. முடிச்சுக்களுக்காக முழுவியளம் பார்த்து உற்றம்சுற்றம் வாழ்த்த, பெற்றவள் பாசமழையெனக் கண்ணீர் சிந்தி விழிசிறுத்து உச்சிமோர்ந்து வழியனுப்ப வந்தவள், முடிச்சுகளுக்குப் பதில் சுருக்குகள் தந்த அதிர்ச்சிகளுடன் எல்லாமே முடிந்துவிட்டதாக... அந்த முடிவில் புதிய வழி திறந்துவிட்டதான தீர்மானத்துடன் மூன்று மாதங்களில் மீண்டும் 'பிராங்பேர்ட்' விமானநிலையத்தில் சுதா!

 

(பிரசுரம்: பூவரசு 1999)

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாற வியாழன் வெள்ளி எனக்கு லீவெண்டு நினைக்கிறன்......அப்ப வாசிப்பம். :D

  • தொடங்கியவர்

வாற வியாழன் வெள்ளி எனக்கு லீவெண்டு நினைக்கிறன்......அப்ப வாசிப்பம். :D

 

இன்னும் வாசிக்கேலைத்தானே.. அப்பாடா!!  :D நன்றி!!

  • கருத்துக்கள உறவுகள்

வேறு, வேறு சூழ்நிலைகளில் வளரும் குழந்தைகளின் எதிர்பார்ப்புக்களும்,பழக்க வழக்கங்களும் வித்தியாசமாகவே அமையும்! எமது சமுதாய அமைப்பானது சில வெளித் தோற்றங்களை வைத்து ஒருவரை எடைபோடுகின்றது! பெற்றோரின் வாழ்க்கையை வைத்துக் குழந்தைகளின் குணாதிசயங்களை எடை போடுகின்றது! அனைத்துமே அடிப்படையில் தவறான கணிப்புக்களாகும்!

 

வெளிநாட்டில் வாழ்க்கைப்பட்ட ஒரு போராளிப் பெண்ணின் எதிர்பார்ப்புகள் நியாயமானவையே! எந்தப்பெண்ணுக்கும் இத்தகைய எதிர்பார்ப்புக்கள் இருக்குமென்பது உண்மை தான்!ஆயினும், புலத்து வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனையும், ஒருவர் மற்றவரினது எதிர்பார்ப்புக்கேற்ப வாழவேண்டும் என்ற அடிப்படையிலேயே அமைகின்றது! ஒருவர் தனது சுயத்தை இழந்து வாழ்வது தான்,அமைதியான வாழ்வைத் தருமெனில், அந்த வாழ்வு இருவருக்கும் ஒரு நரகமாகவே அமையப் போகின்றது!

 

விரும்பியோ,விரும்பாமலோ அனேகரது வாழ்க்கை, பொய்களின் சங்கமமாகவே முடிந்து விடுகின்றது! 

சுதாவும் வரதன் ஆத்திரத்தில் துப்பிய வார்த்தைகளுக்காக, வீட்டை விட்டே வெளிகிடுவதென்பது,புத்திசாலித் தனமாகப் படவில்லை! வரதனும், வார்த்தைகளை, அவசரப்பட்டுத் துப்பாமல் இருந்திருக்கலாம்! சினிமாக்களில் வருகின்ற வாழ்வு மாதிரி வாழ்க்கை, நிஜ வாழ்க்கையில் சாத்தியமாகுமென்று  நினைக்கவில்லை! வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு என்பது போன்று இல்லாமல், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வது தான் நல்ல வாழ்வை இருவருக்கும் அமைத் துக் கொடுக்குமென நினைக்கிறேன்!

 

உங்கள் கதையின் கதாபாத்திரங்கள் அனைத்துமே உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் நன்றாக உள்ளது! குறிப்பாகச் சுதாவின் தாயின் உணர்வுகள், நெஞ்சில் ஈரம் கசிய வைக்கின்றன!

 

மீண்டும் ஒரு நல்ல கதையைத் தந்தமைக்கு நன்றிகள், சோழியன்!

  • கருத்துக்கள உறவுகள்

மிகச் சுருக்கமாக தேவையானதை மட்டும் எழுதி வாசிப்போருக்கு அலுப்பு வராது நன்றாக எழுதியுள்ளீர்கள் சோழி.

  • தொடங்கியவர்

சுதாவும் வரதன் ஆத்திரத்தில் துப்பிய வார்த்தைகளுக்காக, வீட்டை விட்டே வெளிகிடுவதென்பது,புத்திசாலித் தனமாகப் படவில்லை! வரதனும், வார்த்தைகளை, அவசரப்பட்டுத் துப்பாமல் இருந்திருக்கலாம்! சினிமாக்களில் வருகின்ற வாழ்வு மாதிரி வாழ்க்கை, நிஜ வாழ்க்கையில் சாத்தியமாகுமென்று  நினைக்கவில்லை! வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு என்பது போன்று இல்லாமல், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வது தான் நல்ல வாழ்வை இருவருக்கும் அமைத் துக் கொடுக்குமென நினைக்கிறேன்!

 

நன்றி புங்கையூரன்!

மிகச் சுருக்கமாக தேவையானதை மட்டும் எழுதி வாசிப்போருக்கு அலுப்பு வராது நன்றாக எழுதியுள்ளீர்கள் சோழி.

 

மிகவும் நன்றி சகோதரி!!

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை மாதத்திற்கு ஏற்றவாறு காத்திரமாகவே கதை இருக்கு!

வாழ்த்துக்கள் சோழியன்!

  • தொடங்கியவர்

கார்த்திகை மாதத்திற்கு ஏற்றவாறு காத்திரமாகவே கதை இருக்கு!

வாழ்த்துக்கள் சோழியன்!

 

மிகவும் நன்றி!!

தமிழீழம் அமைக்க போரடியவளுக்கு தனது வாழ்க்கையை அமைத்து கொள்ள போராட தெரியவில்லை. பெரும்பாலான பெண் போராளிகளின் மனநிலை இது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

வாற வியாழன் வெள்ளி எனக்கு லீவெண்டு நினைக்கிறன்......அப்ப வாசிப்பம். :D

 

 

நானும் தான்..........

மாவீரர்  நாள் முடிய  :)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் உங்களாக்கங்கள் வரவேண்டும் பகிர்வுக்கு நன்றி . :)

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்

நானும் தான்..........

மாவீரர்  நாள் முடிய  :)

 

அட கடவுளே… விசுகருக்கு நல்ல ஞாபக சக்தியை கொடுப்பாயாக!!  :D

  • தொடங்கியவர்

தமிழீழம் அமைக்க போரடியவளுக்கு தனது வாழ்க்கையை அமைத்து கொள்ள போராட தெரியவில்லை. பெரும்பாலான பெண் போராளிகளின் மனநிலை இது தான்.

 

ஆண்களின் சுடுசொற்களால் ஏற்படும் விளைவாகவும் கொள்ளலாம். 

 

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு.

 

கருத்திற்கு நன்றி!!  :)

தொடர்ந்தும் உங்களாக்கங்கள் வரவேண்டும் பகிர்வுக்கு நன்றி . :)

 

மிகவும் நன்றி சகோதரி!  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.