Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா தீர்மானத்தில் இருந்து இந்தியா ஒதுங்கியது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
ஜெனிவா தீர்மானத்தில் இருந்து இந்தியா ஒதுங்கியது ஏன்? 
[Friday, 2014-03-28 08:04:19]
dilip-sinha-280314-150.JPG

இலங்கைக்கு எதிராக ஜஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்குபற்றாமல் தவிர்த்தது ஏன் என்று, இந்தியப் பிரதிநிதி திலிப் சின்ஹா தனது உரையில் விபரித்துக் கூறியிருந்தார். அதன் முழு விபரம் வருமாறு “இலங்கையின் மூன்று தசாப்த கால பிணக்கு 2009 இல் முடிவுற்ற பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றது. பிணக்கின் முடிவு, தமிழர்கள் உட்பட அனைத்து சமூகத்தினருக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க நிலையான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கான தனித்துவமான வாய்ப்பை இலங்கைக்கு வழங்கியுள்ளது என்பதே எப்போதும் இந்தியாவின் கருத்தாக இருந்து வருகிறது.

  

மனித உரிமைகளைப் பேணி மேம்படுத்தும் விடயத்தில் இந்தக் கவுன்ஸிலின் முயற்சிகள், அந்த நாட்டின் சொந்த முயற்சிகளுக்கு பங்களிப்பனவாக இருக்க வேண்டும் என்று இந்தியா கருதுகின்றது.ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் இலங்கை தொடர்ந்து காட்டி வரும் ஈடுபாட்டுக்கு நாங்கள் வலுவான ஆதரவாக இருந்து வருகிறோம்.மனித உரிமைகள் கவுன்ஸிலின் உரிய தீர்மானங்களுக்கு அமைவாக, தொழில்நுட்ப உதவிகளை ஆணையாளர் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதை நாங்கள் ஊக்குவிக்கின்றோம். ஐ.நா.வின் விசேட நடைமுறைத் தரப்புகள் இலங்கை அரசுடன் நெருக்கமாக ஈடுபாடு கொண்டிருப்பதற்கும் நாங்கள் ஆதரவாக உள்ளோம்.

இந்த உணர்வோடுதான், அத்தகைய கூட்டுறவு மேம்படுவதை கோரி நின்ற கவுன்ஸிலின் தீர்மானங்களை 2012 இலும் 2013 இலும் நாம் ஆதரித்தோம்.கடந்த வருடத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ளன. வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று சர்வதேச சமூகத்துக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை இலங்கை அரசு நிறைவேற்றியது.மேலும் மும்மொழிக் கொள்கை, உத்தியோகபூர்வ மொழியாக தமிழை மேம்படுத்தல், வடக்கு, கிழக்கில் உள்ள பாடசாலைகளைத் தரமுயர்த்துதல் போன்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கிய பரிந்துரைகள் சிலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது.

கவுன்ஸிலின் 2013 தீர்மானம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஆணையாளரின் அறிக்கை மீள் கட்டமைப்பு, மீள்குடியமர்வு போன்றவற்றிலும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை சரிவர ஒப்புக்கொண்டுள்ளது.அதேசமயம், கடந்த காலத்தில் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் தொடர்பில் சுயாதீனமான, நம்பகரமான விசாரணைகளை உறுதிப்படுத்துவதில் இலங்கை அரசு தவறிவிட்டது என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளே இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறலின் மையத்தைப் பற்றி நிற்கின்றன.கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும், அதன் அவதானிப்புகளும், பரிந்துரைகளும் நிலையான அரசியல் தீர்வு ஒன்றை இணக்கமான முறையில் எட்டுவதற்கான சந்தர்ப்ப வாய்ப்பை வழங்கியிருக்கின்றன என்பதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்திக் காட்டுகிறது.

காணாமல் போனோர், தடுப்பில் உள்ளோர் ஆகியோர் தொடர்பிலும், உயர் பாதுகாப்பு வலயங்களைச் சுருக்குதல், தனியாரின் நிலங்களை இராணுவம் திரும்பி வழங்குதல், வடக்கு மாகாணத்தில் சிவில் கட்டமைப்புகளில் இருந்து பாதுகாப்புப் படைகளை விலக்குதல் போன்றவை உட்பட கற்றுக்கொண்ட பாடஙகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகள் பயனுள்ள வகையிலும் உரிய வேளையிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என நாங்கள் கோருகின்றோம்.

முன்னர் குறிப்பிட்டபடி, வடக்கு மாகாண சபைக்காக 2013 செப்டெம்பரில் நடத்தப்பட்ட தேர்தல் குறிப்பிடத்தக்க முன்னேற்ற நடவடிக்கையாகும். என்றாலும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை நோக்கி இலங்கை அரசினால் இன்னும் அதிகம் செய்யப்பட வேண்டியிருக்கின்றது.சிறுபான்மையினரான தமிழர்களுடன் பரந்தளவிலான, உள்ளடக்கம் கொண்ட, அர்த்தம் பொதிந்த, உண்மையான நல்லிணக்கத்தை நோக்கி திட்டவட்டமான நடவடிக்கைகளை அது எடுக்க வேண்டும்.இலங்கை அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்தி, அதற்கு மேல் கட்டியெழுப்பப்படும் அரசியல் அதிகாரப் பரவலாக்கல் உட்பட தனது வாக்குறுதிகளை நிறைவு செய்வதற்கு இலங்கை அரசு இலக்குடன் கூடிய முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று நாம் கோருகிறோம்.

மிக நெருங்கிய அயலவர்களாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இலங்கையுடன் உறவுகொண்டுள்ள நாங்கள் அந்த நாட்டில் இடம்பெறுபவை தொடர்பில் தீண்டப்படாதவர்களாக இருக்கமுடியாது. யுத்தம் முடிந்த காலத்திலிருந்து இலங்கையில் நிவராணம், மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் ஈடுபட்டே வந்திருக்கிறது.நாட்டுக்குள் இடம்பெயர்ந்தோரை மீளக்குடியமர்த்தல், கண்ணிவெடியகற்றல், இணைத்தல், வாழ்வாதாரங்களை மீள ஏற்படுத்துதல், பொருளாதார மீட்சி போன்றவற்றில் இலங்கை அரசின் முயற்சிகளுக்கு நாங்கள் கணிசமான உதவிகளை வழங்கி வந்திருக்கிறோம். வடக்கு,கிழக்கு மாகாணங்களில் வழமையான பண்பு நிலையை மீள ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் பங்களிப்பு செய்யப்பட்டது.

இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தை விசாரணை செய்து, மதிப்பிட்டு, கண்காணிக்கும்படி இந்தப் பிரேரணை கோரும் அதேசமயத்தில் அது, இந்தத் துறைகளில் ஏற்கனவே நாடு கண்டுள்ள முன்னேற்றங்களை உதாசீனம் செய்து, இலங்கை அரசுக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மற்றும் கவுன்ஸிலின் விசேட நடைமுறைத் தரப்புகள் ஆகியவற்றுக்கும் இடையில் தற்போது இடம்பெற்றுவரும் கூட்டு செயற்பாடுகளுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது.

மேலும், இந்தப் பிரேரணை, இலங்கை அரசு மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் ஆகிய இரண்டு தரப்புகளையுமே ஒரே சமயத்தில் விசாரணை நடத்தும்படி ஒவ்வாத - சாத்தியமற்ற - வகையில் கோருகின்றது. ஒவ்வொரு நாடும் மனித உரிமை மீறல்களைக் கவனிப்பதற்கு பலமான தேசியப் பொறிமுறை ஒன்றுக்கான வசதிகளைக் கொண்டிருப்பது கண்டிப்பானது என இந்தியா நம்புகின்றது.

ஆகவே, மனித உரிமை மீறல்கள் தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் பரந்தளவிலான, சுயாதீன, நம்பகத் தன்மைமிக்க விசாரணைப் பொறிமுறை மூலம் விசாரித்து, குற்றம் இழைத்தவர்களாகக் காணப்படுவோரை நீதியின் முன் கொண்டுவரச் செய்வதற்கான வாய்ப்பை இலங்கைக்கு வழங்கும் திசையை நோக்கி கவுன்ஸிலின் முயற்சிகள் அமைய வேண்டும். இலங்கை விரும்பும் விதத்தில் அதற்கு கூட்டுறவு மற்றும் ஒத்துழைப்பு ரீதியில் எல்லா உதவிகளும் வழங்கப்படவேண்டும்.

தேசிய இறையாண்மையையும் நிறுவன அமைப்பையும் கீழ்மைப்படுத்தும் விதத்திலான ஊடுருவும் போக்கு அணுகுமுறை எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதே இந்தியாவின் உறுதியான நம்பிக்கை.ஆக்கபூர்வமான சர்வதேச உரையாடல் மற்றும் ஒத்துழைப்புத் தொடர்பான அடிப்படைக் கோட்பாடுகளில் இருந்து எந்த வகையிலும் குறிப்பிடத்தக்களவில் விலகுவது மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் ஆகியவற்றைப் பேணுவது சம்பந்தமான பொதுவான மதிப்பை மேம்படுத்தும் கவுன்ஸிலின் எத்தனங்களைப் பங்கப்படுத்தும்.

ஒரு நாட்டில் மனித உரிமைகள் பேணப்படுவது தொடர்பான தேசிய செயற்பாட்டை கண்காணிப்பதற்கு முடிவில்லா திறந்த ஆணையுடன் வெளித்தரப்பு விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த முயல்வது ஆக்கபூர்வமான அணுகுமுறை, பேச்சு, ஒத்துழைப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் ஐ.நா.பொதுச்சபையின் 60/251 தீர்மானத்தைப் பிரதிபலிக்கவில்லை. அத்தீர்மானமே 2006 இல் மனித உரிமைகள் ஆணைக்குழுவை உருவாக்கியது.

ஆகவே, இந்தப் பிரேரணை நாட்டின் முயற்சிகளுக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பைத் தராமல் அதற்குச் சாத்தியமான இடையூறாக இருக்கும் என்பதோடு, நிலைமையை இன்னும் குழப்பகரமானதாக்கும்.இந்தக் காரணங்களினால், எங்கள் பிரதிநிதிகள் இந்தப் பிரேரணையோடு செல்லமுடியாது. வாக்கெடுப்பில் பங்குபற்றாமல் இருப்போம் - என்று தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=106603&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இது தேர்தல் காலம் என்பதால்.. நிகழ்வுகளும் விளக்கங்களும் உடனுக்குடன் வருகின்றன. இல்ல.. ஏன் என்றும் திரும்பிப் பார்த்திருக்கமாட்டார்கள். தாம் செய்ததே சரி என்ற திமிர் மட்டுமே இருந்திருக்கும்.

 

இந்த விளக்கத்திற்கு பதிலும்.. இந்தியாவில் இருந்தே வருகிறது... :lol:

 

இந்தியாவின் நடவடிக்கை மனிதநேயமற்றச் செயல்: கலைஞர் கண்டனம்

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணைய மாநாட்டில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தற்கு திமுக தலைவர் கலைஞர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித நேயமற்ற முடிவை இந்தியா மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.

அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

மனித உரிமை மீறல்கள் – போர்க் குற்றங்கள் பற்றி சர்வ தேச விசாரணை நடத்தக் கோரி, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியிருக்கிறது.

தீர்மானம் நிறைவேறியதால் ஈழத் தமிழர் பிரச்சினையில் சர்வ தேச சமூகம் கொண்டுள்ள அக்கறையின் காரணமாக அடுத்த நகர்வு ஏற்பட்டுள்ளது என்பதில் நமக்கு ஓரளவு மன நிறைவு என்ற போதிலும், அந்தத் தீர்மானத்தின் போது இந்தியா கடைப்பிடித்த அணுகுமுறை, தமிழகத்திலே உள்ள தமிழர்களை மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமுதாயத்தையும் மீண்டும் ஏமாற்றத்திலும், வருத்தத்திலும் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, அதாவது 23-3-2014 அன்று நான் விடுத்த வேண்டுகோள் அறிக்கையில், “ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், சுதந்திரமான, நம்பகத் தன்மையுடன் கூடிய, சர்வ தேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென்று “டெசோ” அமைப்பின் சார்பிலும், தி.மு. கழகத்தின் சார்பிலும் பலமுறை வலியுறுத்திக் கேட்டு வருகிறோம். அமெரிக்கா ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ள போதிலும், அது உலகத் தமிழர்களின் விருப்பத்தை முழுவதுமாக நிறைவேற்றுகின்ற அளவிற்கு இல்லை என்ற குறைபாடு உள்ளது. இந்த விவாதத்தில் இந்திய அரசு பங்கேற்று, சுதந்திரமான, நம்பகத் தன்மை வாய்ந்த, சர்வ தேச விசாரணை வேண்டுமென்பதை வலியுறுத்த வேண்டும் என்பது அனைத்துத் தமிழர்களின் வேண்டுகோளாகும்.

ஏற்கனவே இரண்டு முறை தீர்மானம் தாக்கல் செய்யப்பட்ட போது, அதனை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில் தான் இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டது. இப்போதும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் உள்ள இந்தியப் பொறுப்பாளர்கள், இலங்கை அரசுக்கு ஆதரவு திரட்டுவதாகச் சொல்லப்படுகிறது. இலங்கையில் தமிழ் இன அழிப்பை முற்றிலும் நிறுத்திடவும், ஈழத்தில் வாழும் தமிழர்கள் நிம்மதியாக இருக்கவும், சுதந்திரமான சர்வ தேச நீதி விசாரணை நிச்சயம் நடத்தப்பட வேண்டும். இந்திய அரசு ஐ. நா. மனித உரிமை ஆணையத்தில் நடைபெறவுள்ள விவாதத்தின் போது, ஈழத் தமிழர்களின் பால் அக்கறையோடு, சுதந்திரமான சர்வ தேச விசாரணையை வலியுறுத்தி, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டு மென்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்”என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

அதற்கு முன்பே, திருச்சியில் 2014, பெப்ரவரி 15, 16 ஆகிய நாட்களில் நடைபெற்ற தி.மு.கழகத்தின் 10வது மாநில மாநாட்டில் இலட்சோப இலட்சம் தமிழர்களிடையே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலை, மற்றும் இன அழிப்புக் கொடுமைகளைக் கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் மீண்டும் அமெரிக்கா வருகின்ற மார்ச் மாதம் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இப்பிரச்சினையில் இலங்கை அரசு மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்று கடந்த 2009 முதல் உலகத் தமிழ்ச் சமுதாயமும், சர்வ தேச சமூகத்தின் பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் வருகின்ற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசின் நோக்கத்திற்கு எவ்விதத்திலும் துணை போகாமல், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்க அரசு முன்மொழிய உள்ள தீர்மானத்தை ஆதரிப்பதோடு; சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்றும், ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு ஏதுவாக ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்றும்; இந்திய அரசே தனியாகவும் ஒரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் முன்மொழிந்து நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் இம்மாநில மாநாடு இந்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது” என்று தி.மு. கழகத்தின் நிலைப்பாட்டையும் இந்திய அரசுக்கு நாம் வைத்துள்ள கோரிக்கையையும் தெளிவுபடுத்தியிருக்கிறோம்.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா ஏற்கனவே 2012ஆம் ஆண்டு ஈழத் தமிழர் பிரச்சினையில் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்த போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து கொடுத்த தீவிரமான அழுத்தத்தின் காரணமாகவே இந்திய அரசு கடைசிக் கட்டத்தில் அந்தத் தீர்மானத்தை ஆதரிக்க நேரிட்டது. ஆனால் 2013ஆம் ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கை அரசோடு இணைந்து, அந்தத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப் போகச் செய்யும், தமிழ் இன விரோத நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்ட காரணத்தினால், திராவிட முன்னேற்றக் கழகம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டது.

நேற்றையதினம் (27-3-2014) ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில், அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானம் 23 நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றப் பட்டிருக்கிறது. 12 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து இருக்கின்றன. 11 நாடுகள் தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பைப் புறக்கணித்திருக்கின்றன. அப்படி புறக்கணித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது உலக சமுதாயத்தின் முன் நாம் தலைகுனிந்து நிற்க வேண்டிய பரிதாபமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நேரடியாக சம்பந்தமோ, பந்தபாசமோ இல்லாத அமெரிக்கா போன்ற ஒரு நாடு, சர்வ தேச சமூகத்தின் நலன், மனித நேயம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானத்தை மூன்றாவது முறையாக முன்மொழிந்து, அந்தத் தீர்மானத்தை தமிழினத்தின் வேர்களைக் கொண்டிராத 23 நாடுகள் ஆதரிக்கும் நிலையில், தமிழர்களின் தாயகமான இந்தியா அந்தத் தீர்மானத்தைப் புறக்கணித்திருப்பது தான் பெற்ற தாயே தன் குழந்தையின் கழுத்தை நெரித்து கொல்வதற்குச் சமமாகும் என்பதால் நம்முடைய கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைக்கின்றது.

மேலும் சொல்ல வேண்டுமேயானால், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்து, “இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலே நேரடி விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஒப்புக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று மனிதாபிமான உணர்வோடு தெரிவித்திருக்கும் நிலையில், ஐ.நா.வுக்கான நம்முடைய இந்தியப் பிரதிநிதி திலீப் சின்ஹா என்பவர் “ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் இலங்கை போன்ற பிற
நாட்டின் விவகாரங்களில் தலையிடுவதாகவும், அதன் இறையாண்மையைக் குலைப்பதாகவும் அமைந்துள்ளது. இது போன்ற அணுகுமுறைகளை இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது” என்று கருத்து தெரிவித் திருப்பது கடும்

கண்டனத்திற்குரியதாகும். இன்னும் சொல்லப் போனால், மத்திய அரசின் இந்த நடைமுறையை தமிழ்நாட்டிலே உள்ள காங்கிரசாரே ஏற்றுக் கொள்ள பிற நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்ற வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்திருந்தால், பண்டித நேரு அவர்கள் தென் ஆப்பிரிக்காவின் நிற வெறிப் பிரச்சினையில் தலையிட்டிருக்க முடியுமா?

வங்காள தேசத்தில் விடுதலை வீரர் முஜிபுர் ரகுமானுக்கு இந்திரா காந்தி அம்மையார் உதவிக்கரம் நீட்டி விடுதலைக்கு உறுதுணை புரிந்திருக்க முடியுமா? என்ற வரலாற்றுச் சான்றுகள் அடிப்படையிலான கேள்விகளை உலகத் தமிழர்கள் எழுப்ப மாட்டார்களா என்பதை மத்திய காங்கிரஸ் அரசு எண்ணிப் பார்க்க வேண்டாமா?

26ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நான் உரையாற்றும் நேரத்தில், காங்கிரஸ் அரசு நன்றி மறந்த போதிலும் – கடந்த காலத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கைகளை யெல்லாம் கூடப் பொறுத்துக் கொண்டு – மதச் சார்பற்ற ஒரு அரசு இந்தியாவில் அமைக்கப்பட வேண்டுமென்ற எண்ணத்தோடு, வருங்காலத்தில் பொது மன்னிப்பு அளிக்க வேண்டிய நிலைக்குக் கூட வரலாம் என்ற ரீதியில் நான் குறிப்பிட்ட பிறகும்கூட, இந்திய காங்கிரஸ் அரசு தமிழ் இனத்திற்கு முற்றிலும் எதிரான இந்த முடிவினை எடுத்திருப்பது நிரந்தரமாக தமிழர்களுக்கான வாயிலையே அடைத்துக் கொண்டதாகவே கருத திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி இந்திய அரசு தன்னிச்சையாக ஒரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வராததோடு, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தையும் ஆதரிக்காமல் புறக்கணித்திருப்பது; குதிரை குப்புறத் தள்ளிய தோடு, குழி பறித்த கதையாகவும் ஆகி விட்டது. சர்வ தேச சமூகத்தின் உணர்வோடு ஒன்றிப் போகாமல், முக்கியமான இந்தப் பிரச்சினையில் மனித நேயமற்ற முடிவினை மேற்கொண்டதற்காக இந்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

(கலைஞரும் தேர்தல் என்று வந்திட்டா.. இப்படி நீண்ட கதைவசனம் எழுதுவார். அதைக் கண்டு யாரும் பிரமிக்க வேண்டாம்.) :lol:

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=118899

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மீண்டும் தமிழர் முதுகில் குத்திய இந்தியா!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் அவுக எதச் சொல்லுறாக?  தாங்கதான் முன்னுக்குச் செய்தோம் பின்னுக்கும் செய்வோம்ணு சால்ஜாப்பு விடுறாக. இதில  கீர ஐடியா எப்பிடியாச்சும் தேர்தல்ல ஜமாச்சுக்கிறதுக்கு தமிழங்கள தாஜா பண்றதுதான் வேறொண்ணுமில்ல.

Edited by karu

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் வாசித்து

கருத்து எழுதி..............

 

ஏன் இந்தியாவிடம் வேற  ஏதாவதை  எதிர்பார்த்தீர்களா??? :(

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னும் அம்பிலி மாமா கதை கேட்க தமிழர்கள் தயார் இல்லை, வேறைஎதாவது இருந்தால் சொல்லுங்கள் ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Cartoon-2(56).jpg


இதில மயங்கினது மகிந்தரின் மகுடிக்குத்தான் படத்தை மாற்றி கீறி உள்ளான் சிங்களவன்  

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் மகுடி ஒன்றும் வாசிக்கவில்லை. பாம்பை கழுத்தில் பிடித்து வைத்திருக்கிறான். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னும் எங்களில் சிலர் சொல்லுவினம் இந்தியாதான் எல்லாம் பெற்றுத்தரும் இந்தியா இல்லாமல் ஈழத்தில தமிழர் வாழ முடியாது என்று....., இந்தியாவின் இந்த நிலைப்பாட்டிற்கு காரணம் புலிகள்தான் என்றும் சொல்லுவினம்.

  • கருத்துக்கள உறவுகள்

(கலைஞரும் தேர்தல் என்று வந்திட்டா.. இப்படி நீண்ட கதைவசனம் எழுதுவார். அதைக் கண்டு யாரும் பிரமிக்க வேண்டாம்.) :lol:

அதுதான் 2009 தேர்தலில் கதை வசனம் எழுதி நடித்தும் விட்டாரே.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே அரசியல்!

அமெரிக்காவின் தலைமையில் இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 41 நாடுகள் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை மன்றத்தில் இலங்கையில் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து, கொண்டு வந்த தீர்மானம் பெருவாரியான வாக்குகள் பெற்று நிறைவேறியிருக்கிறது. இந்த மன்றத்தில் உள்ள உறுப்பு நாடுகள் மொத்தம் 47. அவைகளில் 23 நாடுகள் ஆதரவாகவும் 12 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அந்த 12 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதாவது, இந்தியா இந்த முறை வாக்களிக்கவில்லை.

இலங்கையில் போர் முடிந்த பிறகு, இதுவரை மூன்று முறை 2008, 2012, 2013 ஆண்டுகளில் மனித உரிமை மன்றத்தில் தீர்மானங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் இரண்டு முறை இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், கடந்த ஆண்டு தீர்மானத்தின் வரைவில் திருத்தங்கள் செய்து கடுமையான வார்த்தைகளைச் சேர்த்தது.

அப்படியிருக்க, இந்த முறை இந்தியா ஏன் வாக்களிக்கவில்லை?

இன்னின்ன விஷயங்கள் குறித்து வரையறுக்காமல் பொத்தாம் பொதுவான சர்வதேச விசாரணை என்பது ஆக்கபூர்வமானதல்ல. அது ஒரு நாட்டின் இறையாண்மையில் குறுக்கிடுவதாகும் என நாங்கள் கருதுகிறோம். இது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்" என அரசு விளக்கமளித்திருக்கிறது. அப்படியானால், இந்தியா தீர்மானத்திற்கு எதிராக அல்லவா வாக்களித்திருக்க வேண்டும்? ஆதரவாகவும் இல்லாமல், எதிராகவும் இல்லாமல் ‘நடுநிலை’ வகித்தது ஏன்?

தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் இலங்கையைப் பகைத்துக்கொள்ள நேரிடும். இலங்கையைப் பகைத்துக் கொண்டால், அது சீனாவின் பக்கம் சாயும். எதிராக வாக்களித்தால், அமெரிக்காவின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். சொல்ல முடியாது, நாளையே அமெரிக்கா, காஷ்மீரைக் காரணம் காட்டி இந்தியா மீதே இது போன்ற விசாரணையைக் கொண்டுவரலாம். கடந்த காலத் தவறுகள். எதிர்காலம் குறித்த அச்சங்கள் காரணமாக இந்தியா விளக்கெண்ணையில் வெண்டைக்காயைப் பிசைந்த மாதிரி இப்படி வழவழா கொழகொழா என முடிவெடுத்திருக்கிறது.

ஆனால், தமிழகத் தேர்தலில் இது ஏற்படுத்தப் போகும் விளைவுகளை எண்ணிப் பயப்படும் காங்கிரஸ் இதைப் பூசி மெழுகப் பார்க்கிறது. 23 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்த நிலையில், இந்தியா இந்தத் தீர்மானத்தை ஆதரித்திருக்க வேண்டும் எனச் சொன்ன ப.சிதம்பரம், ‘இது அமைச்சரவை எடுத்த முடிவல்ல, அதிகாரிகள் எடுத்த முடிவு’ என்கிறார். இது போன்ற முக்கியமான விஷயங்களில் அமைச்சரவை ஏன் முடிவெடுக்கவில்லை? அதிகாரிகளே முடிவெடுத்துக் கொள்ளட்டும் என ஒதுங்கியது ஏன்?

இந்தியா ஏன் வாக்களிக்கவில்லை என்கிற கேள்வியைப் போலவே முக்கியமான ஒரு கேள்வி, சென்ற முறை, அதாவது கடந்த ஆண்டு, இது போன்ற தீர்மானம் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் வந்த நேரத்தில், தமிழகத்தில் இருந்த அரசியல் கட்சிகள் இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என அரசை வற்புறுத்தும் போராட்டங்களை நடத்தின. தூதரகங்களின் முன் மறியல், மனிதச் சங்கிலி எனப் பல வகையான போராட்டங்கள் நடந்தன, ஆனால் இந்த முறை அது போன்ற போராட்டங்கள் ஏதும் இல்லை. தீர்மானம் நிறைவேறிய பிறகு தீர்மானத்தில் வாக்களிக்காத இந்தியா குறித்த அறிக்கைகளே வந்தன.

இந்த முறை ஏன் போராட்டங்கள் இல்லை என்பதை விளங்கிக் கொள்வது கடினமல்ல. தமிழக அரசியல் கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையை காங்கிரசிற்கு நெருக்கடி கொடுக்க அல்லது தனிமைப்படுத்த ஓர் ஆயுதமாகவே பயன்படுத்தி வந்திருக்கின்றன. காங்கிரசின் கூட்டணியில் இருந்தால், அதை நிர்பந்திப்பதற்கும் அதற்கு எதிரான அணியில் இருந்தால், அதைக் கண்டிப்பதற்கான ஒரு காரணமாகவும்தான் அவை இலங்கைப் பிரச்சினையைப் பயன்படுத்தியிருக்கின்றன. இலங்கைத் தமிழர்கள் மீதான உண்மையான அக்கறையினால் அல்ல.

இந்த முறை காங்கிரஸ் எந்தக் கூட்டணியிலும் இல்லாமல், தனிமைப்பட்டு நிற்கும் நிலையில் அதை நிர்பந்திக்கவோ, நெருக்கவோ அவற்றிற்கு அவசியமில்லாமல் போய்விட்டது. அதனால், தீர்மானம் வாக்கெடுப்பிறகு வந்த நேரத்தில் அவை அக்கறை காட்டாமல், அடக்கி வாசித்து விட்டன.

இதைத் தவிர காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது என மனதளவில் அவை கருதியிருக்கலாம். உண்மையிலேயே இலங்கைத் தமிழர் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்றால், அடுத்து அமையப் போகும் ஆட்சியின் நிலை என்ன என்பதைத் தெளிவுபடுத்தக் கோரியிருப்பார்கள். அந்தக் கேள்வியும் எழுப்பப் படவில்லை. பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமண்யம் சுவாமி இந்தியா வாக்குப் போடாமல் ஒதுங்கி நின்றதை வரவேற்றுப் பாராட்டியிருக்கிறார். போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும் எனக் கோரிவரும் பாமகவும், மதிமுகவும் அரசைக் கண்டித்தார்களே தவிர, அவரைக் கண்டிக்கவில்லை. கண்டுகொள்ளக் கூட இல்லை.

இந்தியாவே தீர்மானம் கொண்டு வரும் எனத் தேர்தல் மேடைகளில் முழங்கி வரும் ஜெயலலிதா, வாக்கெடுப்பில் இந்தியா நடந்துகொண்ட விதம் பற்றி கருத்தேதும் கூறவில்லை. கருணாநிதி ஏமாற்றம், வருத்தம் என விரக்தி வார்த்தைகளில் அறிக்கை விட்டிருக்கிறார்.

இதற்கெல்லாம் காரணம், தேர்தல் அரசியல். இலங்கைத் தமிழர் பிரச்சினை, தேர்தலில் வாக்குகள் வாங்கித் தர உதவியதில்லை. 2009 தேர்தலின்போது இலங்கையில் போர் உக்கிரமடைந்திருந்தது. மூர்க்கத்தனமாகத் தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மீதும் அதன் கூட்டணிக் கட்சியான, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக மீதும் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அமிலச் சொற்களால் அவர்கள் அர்ச்சிக்கப்பட்டார்கள். ஆனால், அந்தத் தேர்தலில் அவர்கள் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 இடங்களில் 28 இடங்களில் வென்றார்கள் . தமிழ் ஈழம் அமைப்போம் என மேடைதோறும் முழங்கிய ஜெயலலிதா, இரண்டாவது இடத்தைத்தான் அடைந்தார்.

இதுவும் கூட இந்த முறை தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என வற்புறுத்தி, இந்தத் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் போராடாமல் இருந்ததற்குக் காரணமாக இருக்கலாம்.

தேர்தல் அரசியலில் ஈடுபடாத, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சில இயக்கங்கள் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் எனவும் இந்தியாவே ஒரு தீர்மானத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் பரப்புரை செய்து வந்தன, அதற்கு அமெரிக்கத் தீர்மானம் இருதரப்பிலும், அதாவது விடுதலைப்புலிகள் நிகழ்த்திய மனித உரிமை மீறல்கள் குறித்தும் சர்வதேச விசாரணை நடத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தீர்மானம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழ், ‘ஐ.நா. தீர்மானத்திற்கு பெரும் வரவேற்பு வடக்கில்’ என முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது.

விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற அமைப்பு என ஒரு காலத்தில் கருதப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, ‘சுய விமர்சனத்துடன்’ ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளது. ‘தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக இந்தச் சந்தர்ப்பத்தை மனிதாபிமானத்துடனும், சுய விமர்சனத்தோடும் ஏற்றுக் கொள்கிறோம்’ என அறிக்கை ஒன்றில் அது தெரிவித்து உள்ளது.

அரசு ஆதரவாளர்களிடம் கடும் விமர்சனங்களும் எதிர்ப்பும் எழுந்துள்ளன. ஒருகாலத்தில் விடுதலைப் புலிகளின் தளபதியாக இருந்தவரும், இப்போது ஆளும் கட்சியின் ஆதரவாளராகவும் உள்ள கருணா, ‘இந்தியப் படையின் படுகொலைகளுக்குத் துணைபோன தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதே சர்வதேச விசாரணை தேவை; இலங்கை மீது தேவையில்லை’ எனச் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

ஆனால், இரண்டு தரப்பும் இந்தியாவைக் கடுமையாக விமர்சிக்கின்றன. ‘தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காத இந்தியாவை, நடுக்கடலில் கைவிட்டு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது. இனி வரும் காலங்களில் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவை நம்பக் கூடாது’ என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஒருவர் கூறுகிறார். தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்காததற்காக, ‘அபாயகரமான முன்னுதாரணம்’ என்று தலைப்பிட்டு தலையங்கம் எழுதியுள்ள, ‘தி ஐலண்ட்’ நாளிதழ் இந்தியாவைக் கடுமையாகக் குறை கூறியுள்ளது.

எல்லாமே அரசியல். அதுதான் பாகிஸ்தானின் நிலைப்பாடு. இந்தத் தீர்மானத்திற்குப் பின் மனித உரிமைகள் மட்டுமல்ல, அரசியலும் இருக்கிறது எனச் சொல்லிய பாகிஸ்தான் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது. அது ஓரளவிற்கு உண்மைதான். மெக்சிகோ தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும் என இலங்கை நம்பியிருந்தது. அந்த நம்பிகைக்குக் காரணம், சென்ற ஆண்டு ஐ.நா. மனித உரிமை மன்றத்திற்கு நடந்த தேர்தலில் மெக்சிக்கோ வெற்றி பெற இலங்கை உதவியது. அப்போது இந்தப் பிரச்சினையில் தனக்கு ஆதரவாக நடந்துகொள்ள வேண்டும் என வாக்குறுதி வாங்கியிருந்தது. ஆனால், மெக்சிகோ வார்த்தை தவறிவிட்டது. அது தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருப்பதற்கு அமெரிக்க நிர்பந்தம் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

அதே போல குவைத், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அதற்கும் அமெரிக்காதான் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

இந்தத் தீர்மானம் இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவுமா? பன்னாட்டு விசாரணையின் மூலம் நீதி கிடைக்கும் என்கிற ஆறுதலும், அதன் பின் நல்லிணக்கம் ஏற்படும் எனத் தமிழர்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. ஆனால், பன்னாட்டு விசாரணை ஆறி வரும் காயங்களைக் கீறிப் பார்க்கும், அதனால் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்குமிடையே மனக்கசப்புதான் அதிகரிக்கும், அது நல்லிணக்கம் ஏற்பட உதவாது என்றும் ஒரு கருத்து இருக்கிறது. பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்க, உயிரைக் கொடுத்தவர்களைத் தண்டிப்பதா என இப்போதே 

சிங்களத் தரப்பில் குரல்கள் எழத் துவங்கிவிட்டன. விசாரணை நேர்மையாக நடந்தால், ராஜபக்சே சகோதரர்களில் ஒருவர் அநேகமாக, கோத்தபய தண்டிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். அதற்கு ராஜபக்சே இணங்க மாட்டார். தீர்மானம் நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் பன்னாட்டு விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுக்க முடியாது எனத் தீர்மானம் நிறைவேறும் முன்னரே ராஜபக்சே அறிவித்து விட்டார்.

 

இந்தத் தீர்மானத்தின் விளைவாக, குறைந்தபட்சம் தமிழர் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது குறைகளைக் களைய ராஜபக்சே முன் வந்தால் அதுவே ஒரு முன்னேற்றம்தான். இலங்கையின் தமிழ் தினசரிகளில் ஒன்றான, ‘தமிழ் குரல்’ கூறுவது போல, ‘யுத்தம் முடிவுக்கு வந்து 5 வருடங்கள் கடந்த நிலையில் வட , கிழக்கு தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசியல் பிரதிநிதிகளுடன் அரசாங்கம் துரிதமாகப் பேச்சுவார்த்தை நடத்தி நியாயப்பூர்வமான தீர்வைக் காண்பதே இப்போது அவசரத் தேவையாகும். ஆனால் அதற்குரிய அறிகுறிகளோ, சாதகமான சமிக்ஞைகளோ தென்படவில்லை.’

 

https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/posts/309465429210372?stream_ref=10

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. தீர்மானம்: சிங்கள இனவெறி நாயைப் பாதுகாத்த இந்தியா நரி!  

இந்தியா அல்லது அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் முதுகில் ஏறி ஈழத் தமிழர்க்கு நீதியும் உரிமையும் பெற்று விட இயலுமெனக் கருதுவது ஈழ விடுதலைக்கே எதிரான துரோகத்தனமாகும்

%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் 22ஆம் தேதியன்று  இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம், இந்தியாவின் சதித்தனமான திருத்தத்துடன் கூடிய ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளது. சீனா,ரஷ்யா, கியூபா முதலான நாடுகள் இத்தீர்மானத்தை எதிர்த்துள்ளன.

இத்தீர்மானம், இலங்கையின் சிங்கள இனவெறி அரசுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் என்றும்,  ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் தீர்மானம் என்றும் திரும்பத் திரும்ப தமிழக ஓட்டுக்கட்சிகளும் தமிழினப் பிழைப்புவாதிகளும் ஊடகங்களும் பரபரப்பூட்டுகின்றனர். இத்தீர்மானம் இலங்கையைக் கண்டிப்பது போலவும், ராஜபக்சே கும்பலின் போர்க்குற்றங்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்று கோருவது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். ஆனால், இந்தத் தீர்மானத்தில் சிங்கள இனவெறி பாசிசபயங்கரவாத அரசின் போர்க்குற்றங்களையோ, இனப்படுகொலையையோ கண்டிப்பதாக எதுவுமில்லை. ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கவிக்கவுமில்லை.

%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஜெனிவா நகரில் இந்தியா, இலங்கை உள்ளிட்டு 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைக் கவுன்சில், எவ்வித அதிகாரமும் இல்லாத ஓர் அலங்கார அமைப்பாகும். ஒரு குறிப்பிட்ட நாடு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பதாக இந்த கவுன்சிலில் பெரும்பான்மை நாடுகள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினாலும், அதனை ஐ.நா. பொதுச்சபை விவாதித்து, அதனடிப்படையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அங்கீகரித்தால்தான் குற்றம் சாட்டப்பட்ட அந்நாட்டில் தலையிட முடியும். அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்தியங்கள் தங்களது மேலாதிக்க ஆக்கிரமிப்பு  நோக்கங்களுக்கு ஏற்ப  மனித உரிமைக் கவுன்சிலின் தீர்மானத்தைப் பயன்படுத்திக் கொள்வதுதான் இவ்வமைப்பின் நடைமுறைப் பயன்பாடாக  உள்ளது.

ஈழத்தில் நடந்த இன அழிப்புப் படுகொலைகளுக்குப் பிறகு, கடந்த 2009ஆம் ஆண்டில் மனித உரிமைக் கவுன்சிலில் சுவிட்சர்லாந்து அரசு ஈழப்போர் தொடர்பாக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதுவும் சிங்கள இனவெறி அரசின்  இன அழிப்புப் படுகொலைக்கு எதிரான தீர்மானம் அல்ல. மக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு, இறுதிப் போரின் போது சிவிலியன்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும், அதையும் இதர மனித உரிமை மீறல்களையும் இலங்கை அரசே விசாரிக்க வேண்டுமென்றும் அத்தீர்மானம் குறிப்பிட்டது. சிங்கள இராணுவத்தின் போர்க்குற்றங்களைப் பற்றி மவுனம் சாதித்த அத்தீர்மானத்தை,  இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிரான தீர்மானம் என்றும், போர்க்குற்றவாளி ராஜபக்சேவைத் தண்டிக்கக் கோரும் தீர்மானம் என்றும் ஈழ ஆதரவாளர்களும் ஊடகங்களும் அன்று ஊதிப் பெருக்கினர். இத்தீர்மானத்தை எதிர்த்து இந்தியா, இலங்கை, சீனா, ரஷ்யா, கியூபா முதலான பெரும்பான்மை நாடுகள் வாக்களித்ததால் இத்தீர்மானம் தோல்வியடைந்தது.

இதேநேரத்தில் இலங்கை அரசு மற்றொரு தீர்மானத்தை முன்மொழிந்தது. பயங்கரவாதத்தை வீழ்த்தி வெற்றியைச் சாதித்துள்ள இலங்கை அரசையும் இராணுவத்தையும் பாராட்டிய அத்தீர்மானம், போரினால் அகதிகளாகியுள்ள மக்களுக்கும்,  பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு செய்யவும் உலக நாடுகள் உதவ வேண்டுமென்று கோரியது. இப்படி ஆடுகளுக்காக அழுத ஓநாயின் தீர்மானத்தைப் பெரும்பான்மை நாடுகள் வாக்களித்து நிறைவேற்றின.

ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த இன அழிப்புப் படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும்  இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றி அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் கண்டனங்களைத் தொடர்ந்து, சிங்கள இனவெறி பாசிச ராஜபக்சே கும்பல் 2010 மே மாதம் “கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (எல்.எல்.ஆர்.சி.)”  என்ற ஆணையத்தை நிறுவி விசாரணை நடத்துவதாக அறிவித்தது.  இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அரங்குக்கு இழுக்கப்படுவதைத் தவிர்த்து, நீதியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இலங்கையில் வளமாக உள்ளதாகக் காட்டிக் கொள்ளவும், இதன் மூலம் சர்வதேசத் தலையீட்டை முறியடிப்பதும்தான் இந்த ஆணையத்தை ராஜபக்சே கும்பல் அமைத்ததற்கான காரணம்.

%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%இந்த ஆணையம் புலிகளின் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. போரில் புலிகள் வீழ்த்தப்பட்டிருந்தாலும், அவர்களுடன் தொடர்புடைய புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி வதைக்கும் நோக்கத்துடன் விசாரணையை நடத்தியது. இறுதிக் கட்டப் போரின்போது நடந்த அத்துமீறல்கள், தனிநபர்களின் பாதிப்புகள் பற்றியும் விசாரிப்பதாகத் தெரிவித்தது. இதன் மூலம் அரசு மற்றும் இராணுவ அதிகாரிகளில் ராஜபக்சே கும்பலுக்கு விசுவாசமாக இல்லாதவர்களை இனம் கண்டு களையெடுக்கவும், பழிவாங்கவும் இதனைப் பயன்படுத்திக் கொண்டது.

மனித உரிமை மீறல்கள் பிரச்சினையில் சிங்கள அரசாங்கத்தைப் பாதுகாத்ததில் இழிபுகழ் பெற்ற முன்னாள் அரசுத் தலைமை வழக்குரைஞர் சி.ஆர். டிசில்வா இந்த ஆணைக்குழுவுக்குத் தலைமை தாங்கினார். அரசாங்கத்தின் ரப்பர் ஸ்டாம்பாகச் செயல்பட்ட இந்த ஆணைக் குழு எந்த வகையிலும் சுயேட்சையானதோ, நடுநிலையானதோ அல்ல என்பது யாவரும் அறிந்த உண்மை.

இறுதியாக இந்த ஆணைக்குழு  தனது அறிக்கையை 2011 டிசம்பர் 16 அன்று வெளியிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின் போது சிங்கள இராணுவம் எவ்விதப் போர்க்குற்றமும் இழைக்கவில்லை; மக்களைப் பாதுகாக்க அக்கறையோடும் பொறுப்போடும் செயல்பட்டது என்றுதான் இந்த அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கையையும்  ஐ.நா. வுக்குச் சமர்பிக்கப் போவதில்லை என்று சிங்கள அமைச்சரவை அறிவித்துவிட்டது.

இந்த நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துவதுதான், அமெரிக்காவால் முன்மொழியப்பட்டு, தற்போது ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் சாரம். இத்தீர்மானம், போரின் இறுதிக் கட்டத்தில் ராஜபக்சே கும்பலால் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்கு எதிரானதல்ல. அந்த விவகாரத்துக்கும் இந்த தீர்மானத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

போர்க்குற்றவாளியான ராஜபக்சே அரசு தம்மைத் தாமே விசாரணை செய்து கொண்டுள்ளதாகக் கூறும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஆதரித்து, அதன் பரிந்துரைகளை விரைவாகச் செயல்படுத்தக் கோருகிறது, இத்தீர்மானம். நல்லிணக்க ஆணைக்குழு கவனத்தில் கொள்ளாத மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமான விசாரணை தொடங்கப்படவேண்டும் என்றும், சர்வதேசச் சட்டவிதிகள் மீறப்பட்டது குறித்த குற்றச்சாட்டுகள் பற்றி கவனம் செலுத்துமாறும் இலங்கை அரசை இத்தீர்மானம் கோருகிறது. இந் தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தனது வலுவான ஆதிக்கத்தை நிறுவும் போர்த்தந்திரத் திட்டத்தின் ஓர் அங்கமாகவே, சீனாவுடனான அரசு தந்திர மற்றும் பொருளாதார உறவுகளிலிருந்து விலகி நிற்குமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே அமெரிக்கா இத்தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. மற்றபடி, ராஜபக்சே கும்பலின் போர்க்குற்றங்கள் பற்றியோ, இனப்படுகொலை பற்றியோ இத்தீர்மானத்தில் ஒரு வார்த்தைகூட இல்லை.

%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%

டப்ளின் தீர்ப்பாயத்தில் முன்னின்று உழைத்த, ஈழத் தமிழர்களால் நன்கறியப்பட்டவரான பால் நியூமென், ஐ.நா. மனித உரிமைகள் கமிசனின் தற்போதைய கூட்டத்தொடரில் இலங்கையில் நடந்துள்ள இனப்படுகொலை, போர்க்குற்றம் பற்றி எதுவுமே விவாதிக்கப்படவில்லை என்று பேட்டியளித்துள்ளார். இத்தீர்மானம் இலங்கையைக் கண்டிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்று ஜெனிவாவுக்கான அமெரிக்கத் தூதர் எலின் சாம்பர்லெய்ன் டோனஹே தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள மனித உரிமை அமைப்புகள்கூட இந்தத் தீர்மானத்தில் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஒன்றுமேயில்லை என்கின்றனர். ஆனால், தமிழக ஓட்டுக்கட்சிகளும், சில பிழைப்புவாத ஈழ ஆதரவாளர்களும்  ஒன்றுமில்லாத இந்த வெற்றுத் தீர்மானத்தைத்தான் ஏதோ கேழ்வரகில் நெய் வடிந்த கதையாக ஏற்றிப்போற்றி, அமெரிக்காவானது, இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விடுவதைப் போல சித்தரிக்கின்றனர்.

“போர் முடிந்து மூன்றாண்டுகளே ஆகியுள்ள நிலையில், மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்” என்று கூறி அமெரிக்கா முன்வைத்த  இந்தத் தீர்மானத்தை ரஷ்யா, சீனா, கியூபா முதலான நாடுகள் எதிர்த்தன.  “இலங்கை போன்ற ஒரு ஜனநாயக நாட்டுக்கு அமைதி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள போதிய அவகாசம் வழங்க வேண்டும்” என்று கூறி தீர்மானத்தை எதிர்த்த இந்தியா, ஒரு திருத்தத்தை முன்வைத்து ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் இத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. “ஐ.நா. மனித உரிமைத் தூதர் அலுவலகம்  அளிக்கும் உதவியை இலங்கை ஏற்க வேண்டும்” என்ற வாசகங்களை நீக்கிவிட்டு, “ஐ.நா. மனித உரிமை தூதர் அலுவலகம் அளிக்கும் எத்தகைய உதவியையும் இலங்கை அரசுடன் கலந்தோலனை நடத்தி அதன் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும்” என்று முக்கியமான  இத்திருத்தத்தின் மூலம் இந்தியா இத்தீர்மானத்தை மேலும் செல்லாக்காசாக்கியுள்ளது. தொழில்நுட்ப உதவி என்ற விதியின் கீழுள்ள இந்த முக்கியமான அம்சத்தை திருத்தியமைத்து, இலங்கையின் மனித உரிமை மீறல் விசாரணைகளில் ஐ.நா. தலையிடுவதற்கன வாய்ப்பையும் அடைத்து, இலங்கை அரசு இத்தகைய சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் காப்பாற்றியிருக்கிறது இந்திய அரசு. இந்தியா செய்துள்ள இந்த ‘சிறிய’ திருத்தம் மனித உரிமை கமிசனிடமிருந்து இலங்கையைக் காப்பாற்றும் கவசமாகப் பயன்படும்.

அமெரிக்காவின் விசுவாச அடியாளாக உள்ள இந்தியா, தனது வட்டார மேலாதிக்க நலன்களுக்காக சிங்கள இனவெறி பாசிச பயங்கரவாதத்தை ஆதரித்து நிற்கும் நோக்கத்துடன்தான் முந்தைய மனித உரிமை பாதுகாப்பு கவுன்சிலில் சுவிஸ் தீர்மானத்தை எதிர்த்தது. பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல், இப்போதைய தீர்மானத்தை நரித்தனமான திருத்தத்துடன் ஆதரித்துள்ளது. இந்தியா இத்தீர்மானத்தை எதிர்த்ததை விட, ஆதரித்ததன் மூலம் இலங்கை அரசுக்கு மேலும் உதவியுள்ளது. ஆனால், இந்தியாவின் முடிவு இலங்கைக்கு எதிரானதாகவும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானதாகவும் உள்ளதாக கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் பிற ஓட்டுக் கட்சிகளும் பிழைப்புவாதிகளும் போட்டி போட்டுக் கொண்டு உரிமை பாராட்டுகின்றனர்.

%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%ஐ.நா. தீர்மானத்தில் சிங்கள இனவெறி ராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஒன்றுமில்லை என்ற போதிலும், ‘இது எங்களுக்கும் தெரியும். இருந்தாலும், இதுவாவது நடக்கிறதே என்று பார்க்கவேண்டும். எவ்வித நடவடிக்கையுமின்றி தறிகெட்டுத் திரியும் சிங்கள இனவெறி பாசிஸ்டுகளுக்கு கடிவாளம் போடும் முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டும். இது முதல் அடிதானே தவிர, முழுமையானதல்ல என்பது எங்களுக்குத் தெரியும்’ என்றெல்லாம் தமிழினப் பிழைப்புவாதிகள் நியாயவாதம் பேசுகின்றனர். இரண்டாம் பட்ச எதிரிகளுடன் தற்காலிகமாகக் கூட்டணி அமைத்து, முதன்மை எதிரியான இனவெறி பாசிச ராஜபக்சே கும்பலை வீழ்த்துவது என்ற அரசியல் உத்தியுடன் தாங்கள் அணுகுவதாக இதற்கு நியாயம் கற்பிக்கின்றனர். இப்படிச் செய்ததன் மூலம் இந்தியா போர்க்குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதே, அது நியாயமா?

இட்லரும் முசோலினியும் போல, இந்தியாவும் இலங்கையும் இணைந்து இழைத்ததே தமிழின அழிப்புப் போர்க்குற்றம். புலிகளையும் ஈழத் தமிழ் மக்களையும் பூண்டோடு ஒழிக்குமாறு முள்ளிவாய்க்கால் போரை வழிநடத்தியதில் இலங்கை அரசின் கூட்டாளிதான் இந்திய அரசு. போர்க்குற்றவாளியான இந்திய அரசிடம் பிழைப்புவாத ஈழ ஆதரவு அமைப்புகளும் ஓட்டுக் கட்சிகளும் ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டுப் போடச் சொல்லிக் கூப்பாடு போட்டன. ராஜபக்சேவுடன் இந்திய அரசையும் கூண்டிலேற்றுவதற்குப் பதிலாக, இலங்கை மட்டும்தான் போர்க்குற்றவாளி என்றும், இந்தியா முன்நின்று ஈழத் தமிழர்களுக்கு நீதியும் உரிமையும் பெற்றுத்தரும் என்றும் இவர்கள் பிரமையூட்டுகின்றனர். அதன் மூலம் போர்க்குற்றவாளியான இந்தியாவை தப்பவைக்கும் திருப்பணியைச் செய்துள்ளனர். போர்க் குற்றவாளியான இந்திய அரசை நியாயவானாகக் காட்டி, தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்ததன் மூலம் போர்க்குற்றவாளியான ராஜபக்சேவையும் விடுவிக்கத் துணைபோயுள்ளனர்.

%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%கடல் வற்றி கருவாடு தின்னலாம் என்று காத்திருந்த கொக்கின் கதையாக, இந்திய உதவியுடன் ஈழ விடுதலையைச் சாதிக்க முடியும் என்று நம்ப வைத்து தமிழக இனவாதிகள் நடத்திய சந்தர்ப்பவாத அரசியலின் நீட்டிப்புதான் இது. இந்திய தேசியத்தை எதிர்ப்பதாகவும் தேசிய இன விடுதலையைச் சாதிக்கப் போவதாகவும்  சவடால் அடிக்கும் இத்தமிழினக் குழுக்களும் தலைவர்களும் அரசியல் ரீதியில் இந்திய வட்டார மேலாதிக்க அரசின் அப்பட்டமான கைக்கூலிகளாக உள்ளனர். அன்று ராஜீவ்  ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை வரவேற்று ஆதரித்த இவர்கள்தான், இன்று இந்தத் தீர்மானத்தையும் ஆதரிக்கிறார்கள். எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படி நடக்க விட்டிருக்க மாட்டார்; இந்திரா காந்தி இருந்திருந்தால் ஈழத்தை விடுதலை செய்திருப்பார்; வங்கதேச விடுதலையைப் போல தனி ஈழத்தை உருவாக்கியிருப்பார்  என்றெல்லாம் ஏற்றிப் போற்றியவர்களும் இவர்கள்தான். இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்தால், அது இந்தியாவுக்கு பேராபத்து என்று பீதியூட்டி உபதேசம் செய்தவர்களும் இவர்கள்தான். ஈழ விடுதலைக்கு எதிரான பார்ப்பன பாசிச ஜெயலலிதாவை ஈழத்தாயாகச் சித்தரித்தவர்களும் இவர்கள்தான்.

இந்தியா அல்லது அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் முதுகில் ஏறி  ஈழத் தமிழர்க்கு நீதியும் உரிமை யும் பெற்று விட இயலுமெனக் கருதுவது வீண்கனவு மட்டுமல்ல; ஈழ விடுதலைக்கே எதிரான துரோகத்தனமாகும். இந்தியாவையும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களையும் தாஜா செய்தோ, அவற்றின் தயவினாலோ,  அரசு தந்திர நடவடிக்கைகள், அழுத்தங்கள் மூலமாகவோ  இந்திய  இலங்கை அரசுகளின் போர்க்குற்றங்களுக்கு ஒருக்காலும் நீதி பெற முடியாது. இத்தகைய பிழைப்புவாத  சந்தர்ப்பவாத ஈழ ஆதரவு அமைப்புகளையும் இயக்கங்களையும் அம்பலப்படுத்தி,  சர்வதேச அரசுகளைப் பணிய வைக்கும் தனித்துவமான  உறுதியான புரட்சிகர மக்கள் இயக்கங்களைக் கட்டியமைப்பதன் மூலம்தான் இப்போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க முடியும்.

http://www.vinavu.com/2012/04/09/geneva-eelam/

 

சுயனல உலகில் தமிழர்களின் வாழ்க்கை செல்லாக்காசாக்கப்பட்டுள்ளது. நசுக்கப்படுகிறது.இது ஒரு சாபக்கேடு. இதற்கு காரணம் எமது சுயனலமும் சாணக்கியமும் அற்ற தமிழ்தலைமைகள்(இவ்வளவு மக்கள் அழிவு பின்னரும்). தமிழ் நாட்டிலும் சரி இலங்கையிலும் சரி. நேர்மையானவர்களுக்கு பதவிகள் இல்லை.சிங்களத்தை பாதுகாக்க தான் இப்போதும் போராடுகிறார்கள். இரண்டாவது சிங்களவனின் நரிசூழ்ச்சிகள் . இன்றுவரை தனக்கு தேவையான விடையங்களை கொண்டு செல்வதற்கு எவ்வழியையும்(பொய்,பூச்சாண்டி எவ்வளவு செலவானாலும் செயல்படுத்தி காரிய வெற்றி பெறுதல்.இதில் உலகம் என்ன? இந்தியா என்ன ? தமிழ்தலைமைகள் என்ன?எல்லாம் அவனுக்கு ஒன்றுதான். தமிழர்களுக்கு நேர்மை, நியாயம்,( பண்பான இனம்)குறுக்குவழிகள் பாவிப்பது மிக அருமை. ஒருவிடையத்தில் தோல்வி என்றால் அடுத்த முறை வெல்வதற்கு அதற்கான காரணங்களை அலசி ஆராய்ந்து அதே பிழையும் வேறு தவறுகளும் நிகழாமல் முன் கவனமாக இருத்தல் எதிர்கால வெற்றி நிச்சயம். குள்ளனரிகள் எப்போதும் அதன் தொழிலைத்தான் செய்யும்(இந்தியா+இலங்கை).காலம் கனியும் போது விடா முயற்சிகள் வெற்றி தரும். இஸ்ரேல் ஒரு உதாரணம் உலக அரசியலில் ஆழமாக இறங்கி தமிழ்மக்களின் கீழ் கொண்டுவருவோம். அடம்பன் கொடியும் திரண்டால் மி...

Edited by வழிகாட்டி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.