Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஞ்சு! என் உயிர் நீதானடி!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
( இப்பதிவு வாலிபவயதுக் குறும்பு பாகம் 6 ன் தொடர்ச்சியாகும். 
 
அவன் அம்மாவும், மஞ்சுவின் அம்மாவும் அடைப்பில்லாத அந்த வேலிநடுவில் இருந்த வேப்பமரத்தடி வேரில் அமர்ந்து ஊர்க்கதை, உறவுக்கதை பேசிக்கொண்டிருக்கும் போது, அவனும் மஞ்சுவும் மணலில் வரம்புகட்டிக் கீச்சு மாச்சுத் தம்பளம் விளையாடிய காலத்திலிருந்து, இனிப்புக்கும், பலகாரத்திற்கும் அடிபடுவதும், கோள்சொல்லி அவள் அவனை அடிவாங்க வைத்து ரசிப்பதும், பாசத்தோடு காக்காக் கடி கடித்து அவள் அவனுக்கு மிட்டாய் ஊட்டிவிடுவதும், பூப்பறித்து அவன் அவள் தலையில்சூட்டி அழகுபார்ப்பதும்,, அந்த இரு தாய்மார்களையும், பூரிப்படைய வைக்கத்தான் செய்தது. அவர்கள் உள்ளங்களில் இனிமையான கற்பனைகள் வளர்ந்ததைக் காட்டிய முகத்தில் ஆனந்தமும், அதன்போது அவர்கள் கொண்ட  நாணமும் நினைவில் வந்தது. வளர்ந்தபின் அவனும் மஞ்சுவும் அதுபற்றிக் கதைத்து மகிழ்ந்ததும் நினைவில் வந்தது. அவள் பூப்படைந்தபின் அவள் அப்பா வேலியை அறிக்கைப் படுத்திய போதுதான் தனக்கும் மீசை அரும்பிநின்றது அவனுக்கும் ஞாபகம் வந்தது. பெண்களைப் பாதுகாப்பதில் பெண்களைவிடவும் ஆண்களுக்கே அக்கறை அதிகம். உண்மை தெரிந்தது. வேப்பமரத்தடி வேரில் இருந்து அம்மாக்களால் இனிக் கதைக்க முடியாது. வேலிக்கு மேலால், அல்லது முன்வாசல், பின்தோட்ட லேலிப்படலைமூலம் சென்றுதான் கதைக்க முடியும். அப்பா அடிக்கடி மஞ்சுவின் வீட்டுக்குப் போய் சிறு வேலைகள் செய்து கொடுப்பதுண்டு. ஆனால் அவள் அப்பா அவன் வீட்டுப் படலைக்கும் வருவதில்லை. அவர் அரசாங்க உத்தியோகத்தர். அத்துடன் பெரும் பணக்காரர். அப்பா மருந்துக்கடையில் சாதாரண வேலையாள். ஐந்துக்கும், பத்துக்கும் தள்ளாடுபவர்.அந்தத் தராதரம்... தூரத்தை அதிகப்படுத்தி வைத்திருந்தது.
 
சொந்தம், பந்தம், பக்கத்து வீடு. சிலவற்றை மஞ்சுவின் தந்தையாலும் தவிர்க்க முடியவில்லை. தராதரத்துக்கு உட்பட்ட சில வேலைகளையும் அவரால் வெளிப்படையாகச் செய்ய முடியவில்லை. அதனால், அவனுடைய அப்பாவின் சின்னச் சின்ன உதவிகளும் அவருக்கு அவ்வப்போது வேண்டியிருந்தது. மாமி அவருக்கு நேர்மாறு. அன்பே உருவானவர். தான் ஊட்டிவளர்த்த ஆனந்தன் இன்று வளர்ந்து அழகனாக ஆண்சிங்கமாக நிற்கிறான். அவன் செல்வியைத் சீண்டி அன்பு பொழிவதை அந்தத் தாய் புரிந்துகொண்டிருந்தாள். அந்தச் சீண்டுதலால் செல்வி அடையும் ஆனந்தம் அவளுக்கும் மகிழ்ச்சி தந்தது. தன் சினேகிதி ஆனந்தனின் அம்மாவின் உள்ளத்தை லேசாக வருடிப்பாரத்தாள் அதில் பூவின் வாசம் லேசாகக் கமழ்ந்ததும் அவள் கனவுலகில் மிதந்தாள். ஆனால் மஞ்சுவின் அப்பா..?? ஆனந்தன் வீட்டில் ஏதாவது விரதம், திவசம்  என்று விசேட நாட்களில் செய்த பலகாரங்களையே கையால் தொடத் தயங்குபவர். தங்களைப்போல் படிப்பறிவற்ற, நாகரீகமற்ற அழுக்குகள். மஞ்சுவை அவர்கள்வீட்டு மருமகளாக்க விடுவாரா?.... அவரை நினைத்து அந்தத் தாயின் உள்ளம் கலங்கியதையும் அவன் உணர்ந்தேயிருந்தான்.  
    
மஞ்சு பூப்படைந்தபின் முன்போல் அவனால் அவளுக்கு மற்றவர் எதிரில் பூச்சூட்டி மகிழ முடியவில்லை. பூச்சூட்டிவிட இருளை வேண்டி, மறைவிடமும் தேடினான். அதற்குப் பரிசாக!... அவள் தான்செய்த இனிப்பான பண்டங்களை மறைவாக எடுத்துவந்து  அவனுக்கு ஊட்டி, அவன் உண்ணும் அழகை அந்த இருளிலும் கண்டு ரசித்து மயங்கினாள். எல்லைமீறும் உணர்வுகள் ஏற்பட்டபோது ஒன்றில் அவன், அல்லது அவள், பண்படுத்தப்பட்ட தங்கள் அறிவால் அதனை அடக்கி வெற்றியும் கண்டுவந்தார்கள். ஆனாலும் இடையிடையே பள்ளி விடுமுறைகளின் போது அவள் மாமா மாமியுடன் அனுராதபுரம் சென்றுவிடும் வேளைகளில்தான் வாழ்க்கையே பறிபோனதுபோல் கலங்கிவிடுவான். அவள் மாமா  அனுராதபுரத்தில் அரச நிறுவனம் ஒன்றின் அதிபராகப் பணியாற்றிவந்தார். அவர்களுக்குக் குழந்தைப்பாக்கியம் கிட்டவில்லை. தன் தங்கைக்கு முதல் குழந்தையாக மஞ்சு பிறந்தபோது மாமாவுக்கும் ஊரோடு வேலை. பால்குடிக்க மட்டுமே மஞ்சு  தாயுடன் இருப்பாள் மீதிநேரமெல்லாமே மாமா மாமியின் அன்பும் பாசமும் நிறைந்த அரவணைப்பிலேயே வளர்ந்தவள் மஞ்சு. அவளுடைய  இன்னொரு அப்பா அம்மாவாக மாமாவும் மாமியும் விளங்கினார்கள். அவர்களின் அன்பான வேண்டுதலை எப்படி மறுக்க முடியும்...? அத்துடன் சிங்களவர்களும், மாமா மாமிக்குக் கொடுக்கும் மரியாதை, மஞ்சுவின் அப்பா அம்மாவிற்கும் அங்கு செல்லும் வேளையில் கிடைக்கும். அப்போது  அவர்கள் பூரித்துப்போவார்கள். விடுமுறையில் மஞ்சுவை அங்கு அனுப்பிவைப்பதிலும் அவர்களுக்கு அப்படியொரு பெருமை. 
 
அவன் கண்கள் இருண்டது. எல்லாமே காரிருள்.... அந்த இருளிலும் அவனை உயிருடன் போட்டு எரிப்பதுபோன்ற வலி. உடலுக்குள் இருந்த எலும்பு, தசை இரத்தம் எல்லாவற்றையுமே தோண்டி எடுத்துவிட்டு, நெருப்பை மட்டுமே அதில் அடைத்து எரிப்பதுபோன்று எரிவு. எத்தனை யுகங்கள் அக்கொடூர எரிவின் வலியை அனுபவித்தானோ? அவன் அறிந்தோ! அறியாமலோ! செய்த பாவங்களுக்கு இயமலோகத்தில் தரப்படும் தண்டனையா?... இருள் சற்றுக் குறைந்தது பனிமூட்டத்தில் படரும் ஒளிபோல் மெள்ள மெள்ள ஒரு விடியல். அது துலங்குமுன், கோழி ஒன்று கூவும் சத்தம்! தொடர்ந்து காகங்கள் கரையும் சத்தம்...! குயிலொன்று கூவும் சத்தமும் கேட்டது..!! யமலோகத்தில் கோழி, காகம்,குயில் எல்லாம் வளர்க்கிறார்களோ.? எங்கே.? மஞ்சுவைக் காணவில்லை.! நான் வந்தது அவளுக்குத் தெரியாதோ..? வெளியே லெளிச்சமும் இரைச்சலும் அதிகமாகியது. "தம்பி! தம்பி!" அம்மா கதவைத் தட்டும் சத்தம். "ஆனந்து! ஆனந்து! கதவைத்திறவடா." முதலில் அன்பாக எழுந்த அப்பாவின் குரல் பின்பு அதட்டியது, அவலப்பட்டது. தொடர்ந்து பலருடைய குரல் சத்தங்கள். பாலனுடைய குரலும் கேட்டது போலிந்தது. இவர்களெல்லாம் இங்கு எப்படி வந்தார்கள்? அவன் எழமுயன்றான் முடியவில்லை! "அப்பா!" என்று அழைத்தான். வாயிலிருந்து காற்றும் வரவில்லை. "கதவை உடை"  யாரோ கத்துவது கேட்டது. யன்னலைத் திறக்க முயன்றதும் தெரிந்தது. எழ முயன்றவன் திரும்ப வீழ்ந்தான். அதன்பின் அவனுக்கு எதுவும் நினைவில்லை. 
 
பல யுகங்களாக இருளில் கிடந்தவன் ஒளியைக் காண்பதற்கு கண்விழிகளைத் திறக்க முயன்றான். முடியவில்லை. ஆனால் மூடிய விழிகளுக்குள் கரும் சிகப்பாக மங்கிய வெளிச்சம் தெரிந்தது. "கண்துடிக்கிறது கண்துடிக்கிறது" யாரோ மகிழ்ச்சியாகக் கத்துவது கிணற்றிலிருந்து கேட்பதுபோல் கேட்கிறது. "இங்கெல்லாம் சத்தம் போடக்கூடாது." மென்மையான ஒரு அதட்டல் ஒலியும் கேட்கிறது. "டாக்டரைக் கூப்பிடுங்கள்" கரகரத்த தடித்த ஒரு குரல்.... யாரோவந்து அவன் கண் இமைகளை விரல்களால் திறக்க முயன்றார்கள். கையை அழுத்திப் பிடித்துப் பார்ப்பதையும் உணர்ந்தான். உடம்பெல்லாம் புண்ணாக ஒரு வேதனை. "இனிப்பயமில்லை, கவலையில்லை. இன்னும் இரண்டு நாள் கழிய வீட்டுக்குப் போகலாம்." தொடர்ந்தும் சில பேச்சுக்கள் அவன் காதில் விழுந்தது. "குடித்தது கடும் விசம். ஆனால் அதனைவிடக் கடுமையான விசமொன்றையும் சேர்த்துக் குடித்திருக்கிறான் அது ஒன்றை ஒன்று முறித்துவிட்டது". அது டாக்டரின் குரலாக இருக்கவேண்டும். "கடவுளே" அது அவன் அம்மாவின் குரல். தான் இறக்கவில்லை என்பது அவனுக்கு உறைத்தது. ஆனால் அது மஞ்சுவின் அப்பாவை உள்ளம் காலிலிருந்து உச்சம்தலைவரை எரித்தது... என்பதை அவன் இன்னமும் அறியவில்லை. 
 
இயற்கையின் மகத்துவத்தில் மாற்றம் என்றும் மாறாதது. ஆனந்தன் மனமும் மாற்றம் அடைவதிலிருந்து தப்பிக்க முடியவில்லை. மஞ்சுவின் மறைவு தந்த வேதனையும் மெள்ள  மெளனிக்கத் தொடங்கியது. ஆனால் மஞ்சுவின் தந்தையைக்காண நேரும்போது மட்டும்.... அவரின் பார்வை அவனைச் சுட்டெரித்து வருத்தியது. என் மகளைக் கொன்ற பாவி, கொலைகாரன். அவர் சொல்லாமல் சொல்லி அவனை துடி துடிக்க வைத்தார். நானில்லை... உண்மையை அவருக்கு அவன் எப்படி உணர்த்த முடியும்!.. உணர்த்தினாலும்!! அவர் அதனை  நம்புவாரா..? மஞ்சு இல்லை.... இறந்துவிட்டாள்.... இனி அவனுக்கு மானம் இருந்தால் என்ன? அவமானம் இருந்தால் என்ன? அவள் மறைவு..! வெளியே அவளை அசிங்கப்படுத்த வில்லை!!... அது போதும்!!!. 
காலமாற்றம், கடமைஉணர்வு, பெற்றோரின் வற்புறுத்தல், நண்பர்களின் வேண்டுதல் அவனைப் புதியதொரு வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள வைத்தது. அவன் நண்பன் பாலனின் தங்கையே அவனை மணந்துகொள்ள இசைந்தாள். அவளாக இசைந்தாளா! அல்லது உண்மை தெரிந்த அவன் ஆருயிர் நண்பன் பாலனின் தூண்டுதலா..!
 
எதுவாக இருந்தாலும் ஆனந்தன் தான் சம்மதித்துவிட்டது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது!! அழகிலும் அறிவிலும் மஞ்சுவிற்கு ஈடானவள்தான். சற்று அதிகம் என்றும் கூறலாம். ஆடம்பரமற்றுக் கையெழுத்துடன் மட்டும், கல்யாணத்தை நடத்தினால் போதும். வேண்டா வெறுப்பாகச் சொன்னான். தந்தையும் அவன் நிலை அறிந்ததால் மறுப்புச் சொல்லவில்லை. ஆனாலும் சிறு பொறி என்றாலும், அதன் ஒளி வெளியே தெரியத்தானே செய்யும். ஒளிகண்ட மஞ்சுவின் அப்பா மயில்வாகனத்தின் ஆவேசம், சுனாமியின் அலைபோல் பனை உயரமும் தாண்டி எழுந்தது. ஆனந்தன் குடும்பத்தையே அழித்துவிடும் ஆவேசம்.... அவருடைய ஆவேசத்தையும் திட்டங்களையும் கண்டு அவருடைய குடும்பமே நடுங்கியது. நோயாளியாகி இன்றோ! நாளையோ! என்று படுக்கையில் கிடந்த மஞ்சுவின் மாமியின் கண்களில் கண்ணிர் வழிந்தோடியது. "மஞ்சுவும் போய்விட்டாள். நானும் இன்றோ! நாளையோ!. இனி யாருக்கு மறைக்கவேண்டும்!!. மறைப்பதனால் என்ன இலாபம்!. இன்னமும் மறைத்தால்..! மயில், குடும்பங்களை அழித்துத் தன்னையும் அழித்துவிடுவாரே!!." 
 
மயில்வாகனத்தை அவர் மயில் என்றுதான் அழைப்பது வழக்கம். "பிள்ளை"  தன் பலமெல்லாம் சேர்த்துவைத்து மாமி அழைத்தார். மஞ்சுவின் அம்மா, என்னவோ ஏதோ என்று பதறி ஓடி வந்து "என்ன  அண்ணி" என்றார். "பிள்ளை மயிலைக்கூப்பிடு." மாமியின் கண்களில் கண்ணீரைக் குளமாகக் கண்டவள் ஓடிச்சென்று கணவனை அழைத்துவந்தாள். "பிள்ளைகள் எங்கே?" மாமி கேட்டார். "ஒருவரும் இல்லை. எல்லோரும் கல்லூரிக்குப் போய்விட்டார்கள்."  "நல்லது நீங்கள் இப்படி இருங்கோ." அவர் கட்டில் சட்டத்தின் ஓரத்தில் அமர்ந்தார். அவர் மனைவி மாமியின் கண்ணீரை தன் சேலைத்தலைப்பால் ஒத்தித் துடைத்துவிட்டார். "மயில்! நீங்கள் எல்லாம் நினைப்பதுபோல் ஆனந்தன் கெட்டபிள்ளை இல்லையப்பா..! அருமையான பிள்ளை!!." மயிலின் முகம் வெறுப்பைக் காட்டியது. "மஞ்சுவும் தன்னை இழக்கும் அளவிற்கு அறிவற்றவள் அல்ல. அவள் நான் வளர்த்த பிள்ளை!!. என்னையும் அந்தப் பிஞ்சு மஞ்சுவையும் வெறி நாய்கள் அநுராதபுரத்தில் புடுங்கித் தின்றுவிட்டன." யோசனை எங்கோ செல்ல அண்ணியின் கண்கள் ஒருகணம் நிலைகுத்தி நின்றன. கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தது. "மானம் கருதி யாரிடமும் சொல்லவேண்டாம் என்று மஞ்சுவிடமும் சொல்லியிருந்தேன். ஆனால் அவள் தன் அன்பு ஆனந்தனிடம் மறைக்கமுடியாமல் சொல்லிவிட்டாள். மஞ்சு எனக்கு நீதான் வேண்டும். உன் அன்புதான் வேண்டும். உன் உடம்பல்ல. மஞ்சுவை தன் வாழ்நாள் முழுவதும் கண்போல் பாதுகாப்பேன் என்று மஞ்சுமுன்னால் என் தலையில் அடித்துச் சத்தியம்பண்ணியது அந்தப்பிள்ளை." மாமி விக்கி விக்கி அழுதார். மஞ்சுவின் அம்மா தன் தலையில் அடித்து ஓவென்று கதறி அழுதார். மயில்வாகனம் அசையாது நிலைகுத்தி இருந்தார். அவர் கண்களிலிருந்து அப்படி ஒரு அருவி. அவர் அழுது இதுவரை யாருமே பார்த்ததில்லை. மஞ்சு இறந்தபோதுகூட அழுததில்லை. இப்போது.... அங்கு நடந்த வக்கிக் கொள்ளையில் ஆனந்தனை மாட்டிவிட முனைந்த பாவத்தை எண்ணி அழுதாரோ..!! 
 
ஆனந்தனின் கல்யாணம் அந்த மண்டபமே இதுவரை கண்டிராத அளவிற்கு அமோகமாக நடந்தது. அவனுக்கு அவன் கண்களையே நம்பமுடியவில்லை. மஞ்சுவின் அப்பா விருந்தினரை பந்திக்கு அழைத்தது மட்டுமன்றித் தானே பரிமாறவும் செய்தார். வியப்பினால் தன்னை மறந்துநின்ற அவன் அப்பாவைக்கூட அவர் கட்டளைகள் விரட்டிக் காரியமாற்றச் செய்தது. அவன் அம்மாவோடு மஞ்சுவின் அம்மா.... இப்படி ஒரு சினேகிதிகள் இவ்வுலகில் உண்டா? என ஐயம் எழ வைத்தது. வாழ்த்தி அறுகரிசி போடும்போது, மஞ்சுவின் அப்பாவின் கண்களிலிருந்து பனித்த கண்ணீர்துளிகளும் அரிசியோடு விழுந்து வாழ்த்தியது. அவரது கண்ணீரைக் கண்டு மனைவியோடு எழுந்த ஆனந்தன், அவர் கால்தொட்டு ஆசீர்வாதம் பெறக் குனிந்தான். அவன் தோள்பற்றி அணைத்துத் தூக்கி வாழ்த்தியவர், அவன் மனைவியை அணைத்து வாழ்த்தியபோது "என் மஞ்சு" என்று அவரை அறியாமலே அவர் வாய் அழைத்ததா?. ஆம்! மறைந்துபோன அவர் மகள் மஞ்சுளா அவருக்கு மீண்டும் கிடைத்துவிட்டாள்!!.
 

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக அருமை.  சிறந்தசொல்லாடல் ..கிராமத்துனடைமுறை எடுத்துக் காட்டுகள்  

 

  ..பாராட்டுக்கள்  பாஞ்ச்

காத்திரமான கதை வாழத்துக்கள் தொடருங்கள் பாஞ்.

  • கருத்துக்கள உறவுகள்

பாரட்டுக்கள் பாஞ்ச் ! உள்ளத்தைக் குடையும் ஊமை வலிகள்தான்  எத்தனை எத்தனை. முள்ளை முள்ளால் எடுப்பதுபோல்  விசத்தை விசம் விழுங்கி விட்டது...! :)

  • கருத்துக்கள உறவுகள்

இது சும்மா அசத்திவிட்டது..! மெகாசீரியல்களில்தான் உண்மையை மறைப்பார்கள் என்றால் இங்குமா?? அனுபவித்துப் படித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் பனித்தன

எனக்கு பொறாமையாக இருக்கு

உங்கள் எழுத்தைப்பார்க்க

ஆனால் நீங்கள் அதிகம் எழுதாததால்

நாமும் வண்டி ஓட்ட இடம் கிடைக்கிறது :icon_idea:

 

தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நூற்றுக்குத் தொண்ணூற்றியொன்பது வீதமான மனஸ்தாபங்கள், தவறான, ஆதாரமில்லாத வெறும் ஊகங்களினாலேயே ஏற்படுகின்றன!

 

சரியான தொடர்பாடல்கள் இருக்குமிடத்து, இவை தவிர்க்கப்படலாம்! ஆனால், எமது இனத்தின் கலாசாரத்தில், 'ஈகோ' எப்போதுமே முன்னுக்கு வந்து விடுகின்றது!

 

இதனால், அனாவசியமாக அடிப்படையே இல்லாத மனஸ்தாபங்கள் தீர்க்கப்படாமலே, உயிர் வாழுகின்றன!

 

பாஞ்சின் கதை, இந்த உண்மையை விளக்கி நிற்கின்றது!

 

வாழ்த்துக்கள் பாஞ்ச்! 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல எழுத்தாளர் ஆகிவிட்டார் பாஞ்ச். ஆனால் என்ன இயல்பு அற்ற சினிமா போல் இருக்கிறது எழுத்து நடை.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பாஞ்ச்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டி வாழ்த்திய நிலாமதி, கோமகன், சுவி, இசைக்கலைஞன், விசுகு, புங்கையூரன், சுமேரியர், புத்தனுக்கும், நன்றிகள்பல!!. மற்றும் நந்தனுக்கும் நன்றி!. :rolleyes: :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல எழுத்தாளர் ஆகிவிட்டார் பாஞ்ச். ஆனால் என்ன இயல்பு அற்ற சினிமா போல் இருக்கிறது எழுத்து நடை.

இயல்புள்ளதோ! இல்லையோ! நானறியேன் பராபரனே!!. என்னையும் எழுத்தாளனாக்கிய யாழில் மீட்டிச் சொல்லுகையில் எனக்கது கொள்முதலாகிறது. :) :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.