Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மா ...!!!

Featured Replies

அம்மா ...!!!

பெண்களை கொண்டாட ஆயிரம் காரணம் தேவையில்லை இந்த ஒரு வார்த்தை போதும் " அம்மா "

இது அண்மையில் நான் படித்ததில் பிடித்த வசனம்.

எனக்கும் நான் பிறக்கும் போது கிடைத்த வரங்களில் இந்த உருவத்துடன் என் அம்மாவும் ஒன்று. இன்று நான் அம்மாவை பற்றி ஒரு கட்டுரையை எழுதுகிறேன் என்றால், அதற்கு பின்னும் அந்த மனுசி தான் இருக்கிறா.

நான் நடை பழகி, ஆரம்ப கல்வி கற்கும் நாட்களில், ஒருமுறை எனது சைக்கிளின் திறப்பை தொலைத்துவிட்டு, வீட்டுக்கு வர பயத்தில் அம்மாவின் நண்பி ஒருவரின் வீட்டிலேயே அழுது கொண்டிருந்த வேளை, வந்து கட்டி அணைத்து, இதுக்கெல்லாம் பயபிடுவதா என்று கூட்டி சென்றா ..அன்று அவ தந்த அந்த தன்னம்பிக்கை , என்னை பின்னர் ஒரு நாளில் பயம் என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு, எறிகணைகளின் நடுவே நெஞ்சை நிமிர்த்தி நிற்க வைத்தன.

புலமைப்பரிசில் பரீட்சையாகட்டும், பாடசாலைகளுக்கான தேர்வு பரீட்சைகளாகட்டும், கோயில்களிலே இடம்பெறும் சைவ சமய பரீட்சைகளாகட்டும் என்னை கூட்டி சென்று முன்னிறுத்தி, அந்த பரீட்சைகள் முடியும்வரை காத்திருந்து எனது ஆரம்ப கல்வியை,எனது வாழ்விற்கான அத்திவாரத்தை திடமாக நிலை நிறுத்திய பெருமை இந்த உலகத்தில் ஒருவருக்கே சேரும் என்றால் அது எனது அம்மாவுக்கு மட்டும் தான்.

இது ஏதோ புலமைப்பரிசில் பரீட்சைக்கு என் அம்மா என்ற தலைப்பில் எழுதும் கட்டுரையாக எண்ணிவிடாதீர்கள்.இது என் எண்ணம், இது என் உணர்வு, இந்த நிமிடத்தில் நான் எதை எண்ணுகிறேனோ அதை வார்த்தைகளால் வடிக்கிறேன். எழுதப்பட்டு திருத்தங்கள் செயப்பட்ட கட்டுரை அல்ல. இது அம்மாவை மனசிலே நிறுத்தி தோணுவதை எல்லாம் எழுதும் ஒரு கலை. இதை உங்களாலும் செய்யமுடியும். அதற்கு உங்கள் அம்மா உங்கள் உள்ளே இருக்க வேண்டும்.

எனது அம்மாவுக்கு ஏன் எல்லா அம்மாகளுக்குமே தனது மகன் தான் இந்த உலகத்திலேயே முதலாவதாக வரவேண்டும் என்ற எண்ணம், ஆசை, ஏன் ஒரு வெறி இருக்கும். அது என் அம்மாவுக்கும் இருப்பதில் தவறு இல்லைத்தானே. எப்பவுமே இலங்கையில் முதலாவதாக வரவேண்டும் என்பது தான் அவவின் ஒரே கனவு. அதில் புலமைப்பரிசில் பரீட்சையில் இலங்கையில் மூன்றவாதகவும், சாதாரண தர பரீட்சையில் இலங்கையில் பதினானன்காவதாகவும், உயர்தர பரீட்சையில் இலங்கையில் 82 ஆவதாகவுமே என்னால் வரமுடிந்தது. இருந்தாலும் என்னால் முடிந்ததை செய்து கொடுத்த திருப்தி என்னிடம் இருக்கிறது. அவவிடம் இருக்கிறதா என்று அவ என்னை பற்றி ஒரு கட்டுரை எழுதினால் தான் தெரியும்.

எங்கள் பரம்பரையில் ஒரு மருத்துவர் இல்லாத குறையை போக்க, என்னை மருத்துவ துறையில் படிப்பிக்க தான் என் அம்மாவுக்கு ஆசை, ஆனாலும் ஒரு வாய்ப்பு பார்த்தலில் நான் வெற்றி பெற்று, நான் விரும்பிய கணித துறையிலேயே கல்வி கற்று அவ விரும்பிய பொறியியலாளனாக என்னை மாற்றி கொண்டேன்.

எனது கணித அறிவையும், மனனம் செய்யும் திறமையையும் சின்ன வயசிலேயே தெரிந்து கொண்ட என் அம்மா என்னை ஊக்கபடுத்தி அந்த துறையில் இன்றும் யாவரும் போற்றும் ஒரு பொறியியலாளனாக மாறியதில் அவவின் பங்கு நிறையவே உண்டு.

எனக்கு சின்ன வயசில் அம்மாவில் நிறைய பிரியம். படுக்கும்போது அவவின் தலை மயிரை சுருட்டி கொண்டு படுப்பதில் இருந்து, வரிசைப்படி எழுதி வைத்த தேவராங்களை பாடி முடித்த பின்னர் கடவுளிடம் கேட்கும் வரங்களில் முதலாவதாக அம்மா நல்லா இருக்க வேண்டும் என்பதில் இருந்து, இந்திய ராணுவ காவலரணை கடக்கும்போது இந்து மகளிர் சந்தியில் சாலி மோட்டர் சைக்கிளில் அடிபட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் காணும் வரை எனக்குள் இருந்த வேதனையின் போதும் நான் அவவின் மேல் வைத்த பாசத்தை நானே தெரிந்து கொண்டேன்.

ஏனோ தெரியவில்லை எனது பின்னைய நாட்களில் அவவை பிரிந்தே இருக்கவேண்டிய காலத்தின் கட்டாயமாக எனது வாழ்க்கை மாற்றப்பட்டுவிட்டது. அந்த பிரிவு காலங்களில் நான் அவவை நிறையவே நினைத்ததுண்டு. சின்ன வயசிலே பிடிக்காத மரக்கறிகளை தூக்கி எறிந்த போது தெரியாத வலி, அம்மாவின் சாப்பாடு கிடைக்காத போது தெரிந்திருக்கிறது. எங்கள் வீட்டு முற்றத்திலே அம்மாவின் கையால் பழம்சோறு நிலவை பார்த்து கொண்டு சாப்பிட்டது, இப்போதும் நிலவை காணும் போது தோனுகிறது. மறுபடியும் சிறுபிள்ளை ஆக மாட்டோமா..???

கண்டதை திண்டால் வண்டியன் ஆவான், கண்டதை படித்தால் பண்டிதன் ஆவான். என் அம்மா சொல்லும் வசனங்களில் ஒன்று. அது எனக்கு நல்லாவே பொருந்தும். ஒரு கதை புத்தகம் படிக்க ஒரு ரூபாய் தந்து எனக்கு படிக்க வைத்தா. அதுவே பழக்கமாகி, அம்மாவின் வடிக்காத சோற்றையும், சோற்றுக்குள் வேகவைத்த முட்டையையும், அவியாத பருப்பையும் கூட எத்தனயோ நாட்கள் நான் சாப்பிட அந்த புத்தக வாசிப்பு தான் உதவியது என்றால் நீங்கள் நம்பவா போறீங்கள்.

இன்று நான் இப்படி எழுத கூட அந்த வாசிப்பு தான் எனக்கு உதவுகிறது.

சின்ன வயசிலே ஒரு நாள் தம்பிக்கு காய்ச்சல் என்று நாங்கள் வளர்த்த மாட்டை எங்கள் பனை வளவுக்குள் கட்டும் பொறுப்பு எனக்கு வந்தது. நான் அதை கொண்டு போய் கட்ட இடம் இல்லாமல், மூன்று வாழை மரத்தை சேர்த்து கட்ட, அது வாழையை புடுங்கி சென்று எங்கள் தோட்டத்தை எல்லாம் மேய்ந்து முடித்தது. அன்று முதல் என்னை புத்தக பூச்சியாக, உலக அனுபவம் இல்லாதவனாக எல்லோரும் பார்க்க தொடங்கிய போதும் என் அம்மா என்னை விட்டு கொடுக்கவில்லை.

இன்று இந்த கட்டுரை வாயிலாக அவவுக்கு ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன், இன்று நான் வேலைசெய்யும் ஒரு சர்வதேச நிறுவனம், மூன்று நாடுகளை, அதில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை வழிநடத்தும் ஒரு முகாமைத்துவ பொறுப்பில் என்னை நியமித்து இருக்கிறது. ஒரு மாட்டை வாழை மரத்தில் கட்டியவன், என்று நாடுகளை நிர்வகிக்கும் பொறுப்புக்கு உயர்ந்தமைக்கு என் அம்மா தான் காரணம்.

என்னை தனது அண்ணனை போல ஒரு பேராசிரியனாக பார்க்கும் எண்ணமே அவவுக்கு அதிகம் இருந்தது, நான் ஒரு விரிவுரையாளனாக இருந்த பொது அவவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் அன்றைக்கு நான் என் அம்மாவை போல, இனத்தில் இருந்த அவ்வளவு அம்மாவையும் நேசித்த காரணத்தால் அந்த வேலையை விட வேண்டிய தேவை ஏற்பட்டது. இதை என்னால் எந்த கட்டுரை எழுதியுமே என் அம்மாவுக்கு விளங்கபடுத்த முடியாது என்றும் எனக்கு தெரியும்.

எனது தம்பியின் இழப்புக்கு பின்னரும் தலை நிமிர்ந்து நிற்கும் என் அம்மாவுக்கு தலை வணங்குகிறேன். என் வாழ்க்கையில் எத்தனையோ முடிவுகளை என் அம்மாவின் பேச்சினை கேட்காது நானே எடுத்திருக்கிறேன். ஏறத்தாள பதினைந்து வருடங்களின் பின்னர் என் அம்மாவை நான் சந்தித்தேன். எனக்கு நான் சின்ன வயசிலே கண்ட அம்மாவாக தான் தெரிந்தார். என்னை காணாத நாட்களில்,என்னை காண துடித்த நாட்களில், என்னை காணுவதற்காக விரதம் இருந்து நேர்த்தி வைத்து, காலிலே கல்லடித்து விரலை இழந்த நாட்களில் பட்ட வேதனையை எனக்கு சொன்னார்.

மீண்டும் தெரியாத காலத்துக்காக பிரியும் போதும் என்னிடம் ஒரு சத்தியம் வாங்கி கொண்டார், அவவிற்கான இறுதி கிரிகைகளை நான் தான் செய்ய வேண்டும் என்று. அது எனக்கு சத்திய வாக்காக இப்போதும் ஒலித்து கொண்டிருக்கிறது. எனக்கு என்ன நடந்தாலும் நான் வருவேன் என்பதை இத்தால் உறுதி கூறுகிறேன்.

ஒரு மகனாக என் அம்மாவின் அருகிலே நான் இருக்காவிட்டாலும், என் உணர்வுகளால் அம்மா எப்பொழுதுமே என்னுடன் இருப்பா . எனது வளர்ச்சியில் அவவின் பங்களிப்பு எப்பவுமே இருக்கும்.

என் அம்மா நீடுழி காலம் வாழ வேண்டும்.

என் அம்மா என்னிடம் தொலைபேசி வாயிலாக அடிக்கடி கேட்கும் வாக்கியம் என்னை அம்மா என்று கூப்பிடு என்று தான்.

இப்போது கூப்பிடுகிறேன்.

அம்மா ...!!!

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவை பொறுத்தவரை  வஞ்சகமில்லாது    எண்ணியதை  எண்ணிய படியே

 

எழுத வைத்த அந்த தாய்க்கு என் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றுக் காலையில்  எனது அம்மாவைப் பார்த்தபோது கொஞ்சம் உடல்நலக் குறைவாய் இருந்தா. அவ மருந்தே சாப்பிடமாட்டா , ஊரில் எப்பவாவது தமிழ் பரியாரியிடம்தான் போவா. மனைவி doliprane ஒன்று நீரில் கரைத்து குடுத்திருந்தாள் .நேற்று முழுதும் மனம் சரியில்லை . இன்று அம்மா பற்றி  தோனுறது ஏதாவது எழுதுவம் என்று சாமம் போல் ஒரு தலைப்பை எழுதி வைத்து விட்டு படுத்து விட்டேன்.

 

இப்ப நீங்கள் எழுதியதப் படித்த பொழுது நான் நினைத்த பல விடயங்கள் காண்கின்றேன். பார்க்க சுகமாய் இருந்தது. இதைவிட நான் எதை எழுத....!

  • தொடங்கியவர்

கருத்துக்களை பதிந்த விருப்புகளை அளித்த உறவுகளுக்கு நன்றி.

உண்மையில் அம்மா இருக்கும்போதே அவவுக்காக ஒரு புத்தகம் வெளியிடும் நோக்கில், அம்மாவின் சகோதரங்கள், நண்பர்கள், ஊரவர்கள், பிள்ளைகள், அவவின் மாணவர்கள் அனைவரிடமும் அம்மாவை பற்றி எழுத சொல்லியிருந்தோம். அதற்காக நான் எழுதியது தான் மேலே வந்த பதிவு.

இதை அவவுக்காக ஒரு முகநூலை திறந்து பதிவிடவும் எண்ணியுள்ளோம்.

உறவுகளே,ஒருவர் உயிருடன் இருக்கும்போதே, அவரைப்பற்றி எழுதி அந்த நூலை அவரின் கையால் வெளியிடுவது தான் சிறந்தது. அப்போது தான் வரலாறு திரிபுபடாமல் இருக்கும்.எங்களின் அன்பையும் பாசத்தையும் உரிமையோடு வெளிக்காட்டவும் முடியும்.

நீங்களும் உங்கள் அம்மாவுக்காக செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா எழுத வார்த்தைகள இல்லை......நன்றிகள் பகலவன்

  • தொடங்கியவர்

நன்றி புத்தன் உங்கள் வரவிற்கும் கருத்திற்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கட்டுரையில் உள்ள பல விடயங்கள் எனது வாழ்க்கையிலும்
நடந்துள்ளது என உணரும்போது உங்கள் அம்மாவையும் எனது அம்மாவாக நினைக்கத் தோன்றுகின்றது.
 

அம்மா !!!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
எதையும் இலகுவாய் எடுத்து வெல்லும் சக்தி தம்பியே உனக்கு மட்டுமேயான தனித்துவம். நீ அடிக்கடி சொல்வது போல எது நடந்தாலும் எருமைபோலவே இருப்பாய்.  ஆனால் உனக்குள்ளும் ஈரம் நிறைந்த பாசம் நிரம்பியிருப்பதை சிலரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். 
 
அம்மாவை குடும்பத்தை பிரிந்து உன் அம்மாபோன்ற ஆயிரக்கணக்கா அம்மாக்களின் அக்காக்களின் உரிமைகள் மீட்க போன நீ மீண்டு வந்ததே பெருமைதான். உன் கல்நெஞ்சுக்குள்ளிருந்து அம்மாவுக்காக கசிந்த மையாகவே உனது அம்மாவிற்கான பகிர்வை பகிர்ந்திருக்கிறாய். 
பாராட்டுக்கள் என்று சொல்லி தள்ளி நிற்காமல் உன்னருகில் நின்று நானும் உன் அம்மாவை வாழ்த்துகிறேன்.
  • கருத்துக்கள உறவுகள்

அம்மா மேல் மரியாதை வைத்திருக்கும் எல்லா ஆண்களும் மற்றப் பெண்களை தன்ட அம்மா மாதிரி நினைக்கா விட்டாலும் பரவாயில்லை.பெண்களை,பெண்களாகவும்/சக உயிர்களாகவும் நினைக்க வேண்டும்...இங்கு வந்து கருத்தெழுதின,பச்சை குத்தின ஆண்கள் தாங்கள் உண்மையிலே பெண்களை எப்படி நடத்தினோம்,நடத்துகிறோம் என்பதை மனச்சாட்சியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா மேல் மரியாதை வைத்திருக்கும் எல்லா ஆண்களும் மற்றப் பெண்களை தன்ட அம்மா மாதிரி நினைக்கா விட்டாலும் பரவாயில்லை.பெண்களை,பெண்களாகவும்/சக உயிர்களாகவும் நினைக்க வேண்டும்...இங்கு வந்து கருத்தெழுதின,பச்சை குத்தின ஆண்கள் தாங்கள் உண்மையிலே பெண்களை எப்படி நடத்தினோம்,நடத்துகிறோம் என்பதை மனச்சாட்சியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்

 

அட.. இப்பதான் பச்சை குத்தினேன்.. :D இதை முதலே வாசித்திருந்தால் எஸ்கேப் ஆகியிருப்பேன்..  :wub:  :lol:

  • தொடங்கியவர்

கருத்துகளை பகிர்ந்த வாத்தியார், சாந்தி அக்கா, ரதி, இசைகலைஞன் ஆகியோருக்கும் விருப்புகளை அளித்தவர்கக்கும் நன்றி.

என் அம்மாவை தங்கள் அம்மாவாக நினைத்து வாழ்த்திய உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

எழுத்தில் அடக்க முடியா காவியம் அம்மா ..அருமையான மீள் நினைவு வாழ்த்துக்கள் பகல் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.