Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேஸ்புக்கை விட்டு ஏன் விலக நினைக்கிறோம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்புக்கை விட்டு ஏன் விலக நினைக்கிறோம்?

ஆர்.அபிலாஷ்

Abilash%201.jpg

ஒரு குடும்பச் சண்டை எப்படி இரண்டு நாட்களில் சமூக வலைத்தளம் மூலம் வெடித்துக் கட்டுப்பாட்டை கடந்து வளர்ந்து சுனந்தா புஷ்கரைத் தற்கொலைக்கு தூண்டியது என்பதை சமீபத்தில் பார்த்தோம். சமூக வலைத்தளங்கள் நம்மைத் தேவைக்கு அதிகமாக உணர்ச்சிவசப்பட வைப்பதுடன், யாரையும் பழிவாங்கும் அபார அதிகாரமும் நமக்கு உள்ளதாக ஒரு போலி தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது. இது தன் கணவனின் காதலியாகத் தான் நம்பின பாகிஸ்தானியப் பத்திரிகையாளரைப் பழிக்கும்படி, ஒற்றர் என அவமானிக்கும்படி சுனந்தாவை வெறியேற்றுகிறது. பிறகு இந்தப் பிரச்சினை அவர் கைமீறிப் போகிறது. டிவிட்டரில் குற்றச்சாட்டை சுனந்தா எழுதவில்லை, யாரோ அதை ஹேக் செய்து விட்டார்கள் என சசி தரூர் கூற, சுனந்தா அதைப் பொதுப்படையாக மறுக்கிறார். இந்த சொற்போரில் தோற்று விட, சமூக வலைத்தளம் தரும் போலி கௌரவம் அவரை அனுமதிக்கவில்லை. அவர் தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் துணையுடன் பாகிஸ்தானியப் பெண்ணையும் தரூரையும் எதிர்கொண்டிருந்தார் என்றால் முதலில் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் இருந்திருக்கும். விவாதிக்கப்பட்டு, சமரசங்கள் பேசப்பட்டு கோபம் மெல்ல மெல்ல வெளிப்பட்டிருக்கும். ஆனால் டிவிட்டர் சூழல் பிரச்னைகளை சட்டெனப் பெரிதாக்கி அதை உருவாக்கியவரை முழுங்கிக் கொள்கிறது. பிறகு ஒரு அர்த்தத்தில் சண்டைகள் டிவிட்டரின் மூளை சொல்கிறாற் போல் நடக்கின்றன. சம்பந்தமில்லாத பார்வையாளர்களும், ஊடகங்களும் உள்ளே வந்து Òஅடிச்ச கைப்புள்ளக்கே இவ்வளவு காயமுன்னா” என பேசத் துவங்கி யாரையும் அப்பிரச்சினையில் இருந்து வெளியேற முடியாதவாறு செய்கிறார்கள். இலங்கையை எரிக்க அனுமார் வாலில் தீயை வைத்துக் கொண்ட கதைதான் இதுவும். ஒரே வித்தியாசம், ஊரை எரித்த பின்னும் நம்மால் தீயை எளிதில் அணைக்க முடியாது.

பேஸ்புக்கில் இருந்து விடைபெறுவதாய் அடிக்கடி ஏதோ “இனி தண்ணி அடிக்க மாட்டேன்” எனும் கணக்கில் சத்தியம் பண்ணுகிறவர் களைப் பார்க்கிறேன். பேஸ்புக் போதை பற்றி நிறைய படித்திருக்கிறோம். தொடர்ந்து மீண்டும் மீண்டும் பேஸ்புக்கில் போய் விழுகிறவர்களை விடுங்கள். ”மூணு நாளா பேஸ்புக் பக்கம் போகல, நிம்மதியா இருக்கு” என பேசுகிற நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் வியக்க வைக்கிறார்கள். உண்மையில் அது அவ்வளவு சித்தரவதை தருகிறதா?

பேஸ்புக்கின் notification எனும் செயல்பாடு இணையத்தின் சுதந்திரத்துக்கு விரோதமானது. இணையம் முழுக்க நம் மனம் போன போக்கில் தேடிப் படிக்கிற சுதந்திரம் தருகிறது. என்னதான் notification செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் வசதி இருந்தாலும் நாம் எப்படியும் ஒரு சில பேரின் சுவற்றையாவது மீண்டும் மீண்டும் போய் படித்தபடி தான் இருக்கிறோம். பேஸ்புக் ஒருவிதத்தில் டி.வி.யைப் போல் நாம் எதைப் பார்க்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்கிறது. நம்மாலும் நம் எண்ணங்களை அடுத்தவரை இதுபோல் கட்டாயப்படுத்தி படிக்க வைக்க முடியும் என்பதால் இந்தக் குறுக்கீட்டை நாம் பொருட்படுத்துவதில்லை. சில நேரம் இது ஒரு வேதனையாகவும் இருக்கிறது. வெளியே இருக்கும் இரைச்சல் மனதுக்குள்ளும் நிறைகிறது.

பேஸ்புக் சில செயற்கையான தகராறுகளை, சர்ச்சை களைத் தோற்றுவிக்கும் தன்மை கொண்டது. அதுவும் நீங்கள் என்ன ஏதென்று யோசிக்க நேரம் தராமல் தகராறுகள் தோன்றி உங்களை உள்ளிழுத்து கருத்து சொல்ல வைத்து அது பாட்டுக்கு அடுத்த தகராறுக்கு நகர்ந்து விடும். பொதுவாக ஒரு தகராறு என்பது நம் நிஜ வாழ்வில் தோன்ற, அதற்கான பௌதிக காரணங்களும் அவகாசமும் அவசியம். அதாவது பொருண்மையான இடமும் மெதுவாக நகர்கிற காலமும்.

நம் கணிசமான சண்டைகளுக்கு ஒரு வரலாறு உண்டு. ஒருவரை ரொம்ப காலமாய் பிடிக்காமல் இருக்கும். அவருடன் ரொம்ப காலமாய் ஒரு வெறுப்பு புகைந்தவாறு இருக்கும். ஒருநாள் பற்றிக் கொள்ளும். சண்டை உருவாவதற்கான இடமும் நேரமும் முக்கியம் தான். நள்ளிரவில் படுக்கையறையில் வைத்து எதிரியுடன் சண்டை வராது. அலுவலகத்தில் அல்லது டீக்கடையில் அல்லது சாலையில் எங்கோ வழக்கமான ஓரிடத்தில் உங்களைக் கொந்தளிக்க வைக்கிற ஒரு சூழலில் அநேகமாய் வெப்பம் மிக்க வேளையில் தான் தகராறுகள் எளிதில் பற்றிக் கொள்ளும் அல்லது நமக்குப் பிடிக்காத இடத்தில் பிடிக்காத ஆட்கள் முன்னிலையில் பிரச்சினை கள் வெடிக்க தகராறாக மாற வாய்ப்புகள் அதிகம். இவை இயற்கையானவை. பேஸ்புக் இந்த இயற்கையான காலம் மற்றும் இடத்தைக் கலைத்துப் போடுகிறது. படுக்கையறையில் இரவில் மனைவியிடம் இனிமையாகப் பேசியபடி இருக்கையில் மனம் இளைப்பாறும் நிலையில் இருக்கையில் பேஸ்புக்கில் வரும் முகமற்ற ஒருவர் உங்களை வம்புக்கு இழுக்கலாம் அல்லது நீங்கள் உணர்ச்சிகர விவாதங்களில் கலந்து கொண்டு வசைகளைப் பரிமாறலாம். சண்டைகள் முடியும் போது நீங்கள் அதற்கு சம்பந்தமற்ற ஒரு இனிய சூழலில் வீட்டில் இருப்பீர்கள். பேஸ்புக் சண்டையை முடிவுக்குக் கொண்டு வர நீங்கள் மீண்டும் கணினிக்குள் புக வேண்டும். உங்கள் நிஜவாழ்வும் இன்னொரு வாழ்வும் துண்டுபடுவதை நீங்கள் இத்தகைய பேஸ்புக் சண்டைகளின்போது தான் துல்லியமாக உணர்கிறீர்கள். கால, இடக் குழப்பமும் உங்களுக்குள் ஒரு எரிச்சலை, உள்ளார்ந்த ஒரு சமக்குலைவை ஏற்படுத்துகிறது. பேஸ்புக் சர்ச்சைகள் முழுக்க முழுக்க உண்மையானவை, ஆனால் அவை நம் வாழ்வின் இயல்பு விதிகளுக்கு முழுக்க எதிரானவை.

அடுத்து, உலகில் உள்ள பிரச்சினைகள், கருத்துக்கள் அத்தனைக்கும் எதிர்வினையாற்ற நாம் விரும்பலாம். ஆனால் நம் மனம் மிக்ஸி ஜாரைப் போன்றது. முக்கால்வாசிக்கு மேல் நிரப்பினால் பாரம் தாங்காமல் நின்று போகும். சொல்லப் போனால் மனம் பெரும்பாலும் காலியாக இருப்பதே அதன் ஆரோக்கியத்துக்கு நல்லது. மூளைக்கும் மனதுக்குமான வேறுபாடு இது.

நாம் நம் மூளையைப் பொதுவாக மிக மிக குறை வாகவே வேலை வாங்குகிறோம். போக்குவரத்தைக் கணிப்பது, அலுவலக விதிகளுக்கு ஏற்றபடியான முடிவு களை எடுப்பது போன்று மிக அடிப்படையான சில பணிகளைத்தான் மூளை மீண்டும் மீண்டும் செய்கிறது. தர்க்க சிந்தனை, செஸ் விளையாட்டு, கணிதம், சிக்கலை விடுவிக்கும் விளையாட்டு, அறிவியல், தத்துவம் படிப்பது போன்று மூளையை நீங்கள் இன்னும் அதிகமாய் செயலாற்ற வைத்தால் அதிக உற்சாகமாய் உணர்வீர்கள். குறிப்பாய் உணர்ச்சிகளை ஈடுபடுத்தாத மூளை விளையாட்டுகள் முடிந்ததும் புணர்ச்சியின் இறுதியில் கிடைக்கும் கிளர்ச்சியான இனிமையான ஒரு களைப்பு ஏற்படும். சிறந்த புணர்ச்சியிலும் ஒருவிதத்தில் மனமற்ற நிலை இருப்பதை அறிவோம். உணர்ச்சிவசப்பட வைக்கும் விவாதங்கள், விளையாட்டுகள், சிந்தனைகள், கவலைகள் மனதை அலுப்படையவும் களைப்படையவும் வைக்கின்றன. ஒரு கதையைப் படிக்கையில் ஒரு பிரச்சினையை உணர்ச்சி நிலையில் இருந்து தான் அணுகி ஆராய்கிறோம். பிரச்சினையை மையத்துக்குள் நம்மை வைத்துக் கண்ணீர் விடவும், சிரிக்கவும் செய்கிறோம். பேஸ்புக்கில் ஒரு பிரச்சினையைப் பற்றி படிப்பதற்கும் கதையில் வாசிப்பதற்கும் உள்ள வித்தியாசம் பேஸ்புக்கில் அணு உலைப் பிரச்சினை கூட நம் வீட்டு பிரச்சினையாகி விடுகிறது.

நீங்கள் ஒரு தரப்பை எடுத்துப் பேச, அந்த தரப்புக்கான நியாயங்களை உருவாக்க, அதற்குப் பொறுப்பாக உணர உங்களை பேஸ்புக் தூண்டுகிறது. அலுவலகம் அல்லது டீக்கடையில் ஒரு பொதுப்பிரச்சினை பேசப்படும் போது அங்கு ஓரிருவர் தவிர பிறர் மௌனப் பங்கேற்பாளர்தாம். நம் தரப்பைத் தெரிவிக்க ஒரு லைக் போட அங்கு அவகாசமில்லை அல்லது அவசியமில்லை. கருத்து சொல்லும் போது கூட மணிக்கணக்கில் விவாதிக்க அவகாசம் இருப்பதில்லை. இது ஒருவிதத்தில் நல்லது. பிரச்சினைகளையும், அவற்றில் மக்களின் தரப்புகளையும் தெரிந்து கொள்ளும் அதே வேளையும் சுலபமாய் அவற்றைக் கடந்து போகவும் உதவுகிறது. ஆனால் பேஸ்புக்கில் வீம்புக்கு ஏதோ ஒரு கருத்து சொல்லப் போய் அதை நிரூபிக்க அல்லது நியாயப்படுத்த சகாக்களை சேர்த்துக் கொண்டு பக்கம் பக்கமாய் எழுதுகிறவர்களைப் பார்க்கிறோம். இது மனதுக்குள் தேவையற்ற பீதியை, கலவரத்தை உருவாக்குகிறது.

நமது உணர்ச்சிகளுக்கு என்று பிரத்யேக தேவைகள் உள்ளன. உடலின் ஒட்டுமொத்த ஆற்றலையும் ஒன்று திரட்ட தேவைப்படும் வேளைகளில் உணர்ச்சிவசப்படுவது பயன்படுகிறது. நீங்கள் ஒரு ஆபத்தில் இருந்து தப்பிக்க ஓடும் போது, ஒரு மிக முக்கியமான தேர்வைச் சந்திக்கும் போது மொத்த கவனத்தை செயல் மீது குவிக்க உணர்ச்சிகள் உதவுகின்றன. இதயம் அதிகமாய் வேலை செய்து கைகால்களுக்கும் மூளைக்கும் அதிக ரத்தம் பாய்கிறது. அது போல் முதன்முதலாய் ஒன்றைச் செய்யும் போதும் உணர்ச்சிகள் அதிகமாய் தூண்டப்படு கின்றன. உதாரணமாய் ஒரு பதின்வயதுப் பையன் முதன் முதலில் பெண்ணின் நிர்வாணத்தைப் பார்க்கையில் அல்லது முதன்முறையாய் நமக்கு வேலை நீக்க உத்தரவு நீட்டப்படும் போது. ஆனால் நாம் அதிகம் உணர்ச்சிவசப் பட அவசியம் என நினைக்கிற தாம்பத்ய உறவாடல், குடும்பச் சடங்குகள், மத சடங்குகளின்போது சற்று விலகலுடன்தான் இருக்கிறோம்.

Abilash%202.jpg

குறிப்பாய் தாம்பத்யத்தில் ஒரு நாடகத்தின் காட்சிகள் போல் பல்வேறு உணர்ச்சி நிலைகளை நடிக்கப் பழகிப் பழகி நம்மையே அறியாமல் ஈடுபட்டு செயலாற்றுகிறோம். மனைவியிடம் சிங்காரிப்பதில் இருந்து, குழந்தைக்கு இரவில் கதை சொல்வது வரை நமக்கு சடங்குகள்தாம். குழந்தைப் பருவத்தில் வாழ்வைப் பிரதிபலிக்கும் பல விளையாட்டுகளைக் கற்கிறோம். அவற்றை மெல்ல மெல்ல சடங்குகளாக்கி வாழ ஆரம்பிக்கிறோம். ”ஒரு குடம் தண்ணியெடுத்து ஒரு பூ பூத்தாச்சு” என்கிற விளை யாட்டு நினைவிருக்கும். சலிக்காமல் ஒவ்வொரு குடமாய் நூறு குடம் வரை எடுக்கப் பழகுகிறோம். சுவாரஸ்யமான மகிழ்ச்சி அளிக்கும் எந்த செயலும் இது போல் நாம் மீண்டும் மீண்டும் செய்யப் பழகுகிற ஒன்றுதான். திரும்பத் திரும்ப அலுவலகம் போவது, அதே வண்டியை ஓட்டுவது, அதே வீட்டுக்கு ஒரே நேரத்தில் போவது என இந்த விளையாட்டின் நீட்சிதான் வாழ்க்கை. செயலுக்கும் செயலின்மைக்கும் நடுவே ஒரு கோடு உள்ளது.மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது அக்கோட்டில் பயணிப்பது. உள்ளேயும் இல்லாமல் வெளியேயும் இல்லாமல் இருப்பது. ஒரு சடங்காக வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் போது அது எளிதாகவும் உற்சாகமாக வும் மாறுகிறது. ஈமச்சடங்குகள் நல்ல உதாரணம். ஒரு மரணத்தை ஒரு நாடகமாக மாற்றி அரங்கை தயாரித்து அதற்கான கால அளவைத் தீர்மானித்து கொஞ்ச கொஞ்சமாக ஒரு பெரும் இழப்பை ஏற்கும்படி மனம் தயாராக இச்சடங்கு உதவுகிறது.

இந்த வகையான சடங்கு சார்ந்த வாழ்வில் உங்களுக்குப் பொறுப்பின் பாரமும் இல்லை. எல்லா மகன்களைப் போல், அப்பாக்களையும் போல், ஊழியர்கள், மனிதர்களையும் போல் நீங்களும் இருக்கிறீர்கள். உங்கள் செயலின் விளைவுக்கு நீங்கள் என்றும் முழுப்பொறுப்பு அல்ல. காலகாலமாய் பேசப்படுகிற பேச்சை, சிந்திக்கப்படுகிற சிந்தனையை, செய்யப்படுகிற பணிகளை நீங்களும் செய்வதில் ஒரு விடுதலை உள்ளது. படைப்பூக்கம் மிக்க ஆட்கள் மட்டுமே புதுப் பாதைகளை வகுக்கிறார்கள். அவர்களும் தமக்கான சில சடங்குகளை ஏற்படுத்தி படைப்புப் பணியை ஒரு விளையாட்டாய் மாற்றுகிறார்கள்.

பேஸ்புக்கில் இத்தகைய சடங்குகளுக்கு இடமில்லை. நீங்கள் அங்கு நேரடியாக உணர்ச்சிகரமாக ஈடுபடுகிறீர்கள். அதனாலே அங்கு நீங்கள் எளிதில் காயப்படுகிறீர்கள், நெருக்கடிக்கு உள்ளாகிறீர்கள், பதற்றமாகிறீர்கள். சமீபமாய் ஒரு நண்பர் தன் மனைவியின் முன்னாள் காதலைப் பற்றி மனைவியின் புகைப்படம் சகிதம் பேஸ்புக்கில் பதிவு எழுதியிருந்தார். மனைவியின் காதலன் ஒரு முன்னாள் விடுதலைப்புலி என்றும், போரில் இறந்து விட்டதாகவும், தற்போது மனைவி தனக்கு மனப்பூர்வமாய் இணங்கி வாழ்வதாகவும், அவரது பழைய காதலின் ஆழத்தை தான் மதிப்பதாகவும் கூறியிருந்தார். இதை அவர் பலரின் சுவரிலும் பகிர, பேஸ்புக் பயனர்கள் அவர் தன் மனைவியின் அந்தரங்கத்தை பொதுவில் வெளிப்படுத்தியதற்காக அவரைக் கடுமையாக விமர்சித்தனர். அவர் நேரில் கூட நம்மிடம் இவ்வளவு வெளிப்படையாகத் தன் அந்தரங்கத்தை சொல்லி இருக்க மாட்டார். அதற்கு நாம் அவரிடம் பழகி நெருக்கமாகி ஒரு சரியான வேளையில் தோதான சூழலில் இடத்தில் அவரிடம் உரையாட வேண்டும். அப்போது அவர் தயக்கமின்றி தன் அந்தரங்கத்தை சொல்லி இருப்பார். ஆனால் பேஸ்புக் தன் இயல்பிலேயே நம்மை அந்தரங்கங்களைப் பொதுவில் கொட்டத் தூண்டுகிறது. பொதுவெளிக்கும் அந்தரங்க வெளிக்குமான இடையிலான ஒரு மயக்கத்தை அது தோற்றுவிக்கிறது. இது டி.வி. போன்ற ஊடகங்களுக்கும் பொருந்தும். ‘நீயா நானா’ போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தயக்கமின்றி தன் கணவனைத் தனக்கு எப்படியெல்லாம் பிடிக்காது என கோடிக்கணக்கான அந்நியப் பார்வையாளர்கள் முன் கூறும் மனைவிகளைப் பார்க்கிறோம். பிரிய நினைக்கும் கணவன் மனைவிக்கு இடையே பஞ்சாயத்து பண்ணும் ஒரு மலையாள டி.வி நிகழ்ச்சியில் அதுவரை மறைக்கப்பட்டிருந்த ஒரு கொலை சேதி எதிர்பாராமல் வெளிப்பட்ட தகவலைக் கூட கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த மனநிலை விநோதமானது தான். அதேவேளை பேஸ்புக் அல்லது ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஏன் இப்படி விநோதமாய் அந்தரங்கத்தை அம்பலப்படுத்த முற்படுகிறோம் என யோசிக்க வேண்டும்.

இதைப் புரிந்து கொள்ள டாஸ்மாக் பார்களில் எதேச்சையாய் பக்கத்தில் வந்து உட்காருபவர்களிடம் உண்மை பேசும் வழக்கத்தை இதனோடு ஒப்பிடலாம். சாராயக் கடைகளில் அரட்டையின் போது அந்நியர்களி டம் நம் மனைவி, காதலி, குடும்பம் பற்றியெல்லாம் வெளிப்படையாகப் பேசுவோம். கல்லூரியில் படிக்கிற காலத்தில் என்னிடம் ஒருவர் பாரில் வைத்து தன் ஊனமுற்ற பருவ வயதுப் பெண் குழந்தை பற்றி உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டே இருந்தார். அவளை மணம் புரிய யார் தயாராவார்கள் என திரும்பத் திரும்பக் கேட்டார். பரிச்சயமற்ற இரு இளைஞர்களிடம் ஒரு ஒழுக்கங்கெட்டதாய் கருதப்படுகிற இடத்தில் ஒரு தகப்பன் ஏன் தன் வயதுக்கு வந்த பெண்ணைப் பற்றிப் பேசுகிறான்? ஆனால் அவர் தன் பெண்ணின் பெயரையோ புகைப்படத்தையோ வெளிப்படுத்தவில்லை. அவர் இதே போல் எத்தனையோ பேரிடம் இதே பிரச்சினையை சொல்லிப் புலம்பி இருப்பார். புலம்பிப் புலம்பி அதை ஒரு சடங்காய் மாற்றி இருப்பார். பெண்ணை ஒரு பாத்திரமாகவும், அந்த பாரை நாடக அரங்காகவும் மாற்றி இருப்பார். ஆனால் பேஸ்புக்கில் ஒரு உண்மையை ஒரு முறை தான் வெளிப்படுத்துவோம். அதைத் திரும்பத் திரும்பக் கூறி உணர்ச்சியுறச் செய்து விலகல் மனநிலையுடன் பேச அங்கு அவகாசம் தரப்படுவதில்லை. பார் வெளிப்படுத்தலின் போது நீங்கள் பேசிப் பேசி பல பொய்களைக் கலந்து அதை ஒரு கதையாகவே மாற்றி விடுவீர்கள். ஆனால் பேஸ்புக் உண்மைத்தன்மைக்கு அளிக்கும் மதிப்பு மற்றும் அவசரம் காரணமாக, உலகை உங்கள் படுக்கையறையாக உணர வைக்கும் மாயம் காரணமாக நீங்கள் உண்மையை அப்படியே, கூடுமானவரையில் உங்கள் தரப்பை வலியுறுத்தி சொல்ல தலைப்படுவீர்கள்.

புதுமைப்பித்தனின் பால்வண்ணம் பிள்ளை, அலுவலகத்தில் எலியாகவும் வீட்டில் புலியாகவும் மாறுவார். ஆனால் பேஸ்புக் யுகத்தில் இந்த இருவேறு பாத்திரங்களுக்குள் புக அவருக்கு அவகாசமிராது. அவர் எலி ரூபத்திலே நிலைத்தகவல்கள் எழுதுவார். அதற்காகத் தன்னையே நொந்து கொள்வார். பேஸ்புக்கில் நீங்கள் போலி ஆவேசங்கள் கொள்ளலாம். ஆனால் நிஜவாழ்வில் போல் புனைவுகளை அதிகம் உருவாக்க முடியாது. அதனால் தான் நீங்கள் ஓடுகிற ரயில் மீது ஒற்றைக்காலில் நிற்பவரைப் போன்ற நிலையற்ற உணர்வை எப்போதும் அடைகிறீர்கள்.

Abilash%203.jpg

சமகாலத்தில் வேலையில் இருந்து விளம்பரங்கள், டி.வி. நிகழ்ச்சிகள், கேள்விப்படுகிற செய்திகள் வரை போலியாக உங்களை உணர்ச்சிவசப்பட வைக்கின்றன. இன்னொருவரின் தலையை உங்கள் கழுத்தில் பொருத்தி வாழ்வது போன்றது இது. நம் நவீனக் கலாச்சாரத்தின் அடிப்படை தொனியே இன்னொருவரின் பிரச்சினையை உங்களுடையதாக உணர்வது, கவலைப்படுவது, மகிழ்ச்சியடைவது தான். நாம் இன்று பெரும் பிரச்சினை யாகக் கருதும் பதற்றம், அழுத்தம் ஆகியவை வேலை அல்லது குடும்பக் கவலைகளில் இருந்து வருவன அல்ல; அவை போலியாக வெளியில் இருந்து உருவாக்கப்பட்டு நம் மீது திணிக்கப்படுகின்றன. நேரடியாக எதிர்கொள்ளும் உணர்ச்சிகள் நம் உடலை டாப் கியரில் வேலை செய்ய வைத்து நம் பேட்டரியைக் காலியாக்கி விடுகின்றன. சீக்கிரம் வயதாகி பழுதாகிப் போகிறோம். பேஸ்புக்கில் இந்நெருக்கடி இன்னும் தீவிரமாவதற்குக் காரணம், நாம் நேரடியாகச் செயலாற்ற தூண்டப்படுகிறோம் என்பது. யாரோ ஒருவர் உருவாக்குகிற நெருக்கடியில் நாமும் பங்காற்றி அதை வளர்த்து இன்னொருவரிடம் கைமாற்றுகிறோம். பற்றி எரிகிற ஒரு குடிசை மொத்த சேரியையும் சாம்பலாக்குவது போன்றது இது. பிற ஊடகங்கள் உருவாக்குகிற உணர்ச்சிகர அழுத்தத்தைக் கூட தாங்கிக் கொள்கிறவர்கள் பேஸ்புக்கில் அதிகமாக அடிவாங்குவதும், அங்கிருந்து தப்பிக்க நினைப்பதும் அது நம்மைச் செயலாற்ற வைத்து சம்பந்தமில்லாத பிரச்சினையை நம்முடையதாக நம்ப வைப்பதனால் தான். என் நண்பர் ஒருவர் விலங்கு உரிமை ஆர்வலர். அவர் தன் முகநூல் சுவரில் வதைபடும், சாகும் விலங்குக ளின் படங்கள், கதைகளைப் பகிர்ந்தபடியே இருப்பார். என்னுடைய இன்னொரு நண்பர் அதனால் ஆட்கொள்ளப்பட்டு மனம் பேதலித்தவர் போல் அத்தகைய படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தார். அங்கு சென்று தன் கருத்தைப் பதிவு செய்து தன் பக்கத்தில் பகிர்வார். பத்து நிமிடத்துக்கு ஒரு தரம் அந்த முகநூல் பக்கத்தை திறந்து மனதை வருத்தும் செய்திகளை மீள மீள படிப்பார். அதைக் குறித்து யாருடனாவது பேஸ்புக்கில் அரட்டை அடிப்பார். விளைவாக, அவர் உலக விலங்குகளின் அத்தனைக் கொடுமைகளுக்கும் தானே பொறுப்பு என மறைமுகமாய் நம்பத் துவங்கினார். கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளானார். அவரை அப்பக்கத்தை unfollow செய்ய சொன்னேன். அதுவும் முடியாமல் போக இப்போது கொஞ்ச நாளாய் பேஸ்புக் பக்கமே போவ தில்லை அவர். ஒரு டிவி. அலைவரிசையை மாற்றுவது போல் பேஸ்புக்கில் ஒரு பிரச்னையை நம்மால் கடந்து போக முடிவதில்லை. நம் வீட்டுப்பிரச்சினை போல் அதை நம்பி சுவரில் தலையை மோதத் துவங்குகிறோம். டி.வி.யில் ஒரு சம்பவம் தொலைவில் நடக்கிறது. பேஸ்புக்கில் அது நம் வாழ்வின் ஒரு பகுதி போல் நடக்கி றது. பொதுவாக நம்பப்படுவது போல் பேஸ்புக்கில் கசப்புக்கும் நெருக்கடிக்கும் காரணம், அங்குள்ள அடி தடியோ சர்ச்சைகளோ அல்ல. அங்கு நம் மூளை உறங்க மனம் முழுவிழிப்பில் ஈடுபடுவதுதான் உண்மையான காரணம்.

பேஸ்புக்கால் நிறைய நேரம் விரயமாவதாக அடிக்கடி புகார் கூறுகிறவர்களைப் பார்க்கிறேன். இவர்கள் பேஸ்புக் இல்லாவிட்டால் இந்த நேரத்தை எப்படி செலவழிப்பார்கள்? செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்ப ஆராய்ச்சி செய்வார்களா? இல்லை, சும்மா உட்கார்ந்து மோட்டுவளை பார்த்து யோசித்து அல்லது வீட்டு வேலைகள் செய்து அல்லது முச்சந்தியில் நின்று வேடிக்கை பார்த்து வீணடிப்பார்கள். அப்போதெல்லாம் நமக்கு நேரம் வீணாவதாகத் தோன்றுவதில்லை. எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். 24 மணிநேர வெட்டி ஆபீசர். அவர் “நான் 18 மணிநேரமும் பேஸ்புக்கில் இருக்கிறேன். ஒரு பைத்தியம் போல் அங்கேயே கிடக்கிறேன்” என வருந்தினார். பேஸ்புக் இல்லாவிட்டால் அவர் 18 மணிநேரத்தை ஒன்றும் செய்யாமல்தான் கழிக்கப் போகிறார்; பிறகென்ன பிரச்சினை? வேறுபாடு?

நம்முடைய அசலான வருத்தம் பேஸ்புக் சும்மா இருக்கும் நம் பொழுதை களவாடி ஆக்கிரமிக்கிறது என்பதுதான். பேஸ்புக்கில் படிப்பது, பொதுப்பிரச்சினைகளை விவாதிப்பது, நண்பர்களை உருவாக்குவது எல்லாம் முக்கியம்தான் என்றாலும் சும்மா இருப்பது நம் மன ஆரோக்கியத்துக்கும், படைப்பூக்கத்துக்கும் அதை விட முக்கியமானது. சும்மா இருக்கையில் மனம் காலியாக இருக்கிறது. அப்போது நீங்கள் வீட்டில் ஒரு பொருளைத் துடைத்தோ, காய்கறி நறுக்கியோ, ஆற்றில் நீராடியபடியோ, வெட்டியாய் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டோ, சாலையில் போகிறவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டோ இருக்கலாம். அப்போது உங்கள் மனம் எதிலும் ஈடுபடாமல் ஓய்வாக ஒரு முக்கிய வேலையை செய்கிறது. உங்கள் பிரக்ஞையின்றி அது சிந்திக்கிறது. வாழ்க்கையைப் புரிந்து கொள்கிறது. அதற்கேற்றபடி புது கருத்துக்களை உருவாக்குகிறது. கொஞ்ச நேரம் தினமும் சும்மா இருப்பது நம் மனதைப் புத்துணர்ச்சியோடு படைப்பூக்கத்தோடு இருக்க வைக்கிறது. எப்போதும் எதையாவது செய்து கொண்டும் சொல்லிக் கொண்டும் இருக்கும்படி நம்மை வலியுறுத்துகிற இன்றைய கலாச்சாரம் சும்மா இருக்க வேண்டிய அந்தப் பொன்னான பொழுதுகளைப் பறிக்கிறது. இன்று எல்லோரிடம் சொல்ல ஆயிரம் கருத்துக்கள் உள்ளன; ஆனால் புதுமையான புதுக் கருத்து என்று ஒன்று யாரிடமும் இல்லை. கடல் நடுவே தாகத்தோடு தவிப்பது போன்றது இது. பேஸ்புக்தான் இந்தப் பண்பாட்டின் உச்சநிலை. சும்மா இருப்பது பற்றி குற்றவுணர்வு கொள்ள வைக்கிறது அது. ஒன்றும் கருத்து இல்லாவிட்டால் ஒரு லைக்காவது போட்டு விட்டுப் போ என்கிறது.

கராத்தேவில் காற்றில் குத்துவது எனும் எளிய ஆரம்ப நிலை பயிற்சி உண்டு. கையை முறுக்கிக் கொண்டு குத்தினால் என் கராத்தே ஆசான் கண்டிப்பார். கையை லகுவாக தளர்வாக வைத்திருக்கச் சொல்வார். குத்துப் படுகிற அந்த இறுதி நொடி வரை முறுக்கேறவே கூடாது. ஒருவரைத் தள்ளி விடுவது போன்று தான் நல்ல குத்து என்பது இருக்க வேண்டும் என்பார். ஒருவரை அடிக்கும் போது அடி விழுகிற அந்த நொடி வரை அடிப்பதாக நினைக்கக் கூடாது. இல்லாவிட்டால் உங்கள் கை தான் வலிக்கும். செங்கல் உடைக்கும் பயிற்சியும் இதன் நீட்சி தான். செங்கல்லை உடைப்பதாக நினைத்து வெட்டினால் கைதான் உடையும். இதில் வாழ்க்கையின் அடிப்படை பாடம் ஒன்று உள்ளது. உணர்ச்சிவசப்பட வேண்டிய அந்த இறுதி நொடி வரை உணர்ச்சிவசப்படவே கூடாது. உங்கள் குழந்தையைக் கண்டிப்பதாகட்டும், மனைவியைத் திட்டுவதாகட்டும், ஒரு கண்டனத்துக்குப் பதில் சொல்லுவதாகட்டும் அந்த தருணம் வரை மனம் காலியாக இருக்க வேண்டும். தேநீர் ஊற்றுவதன் முன்பான இறுதி நொடி வரை கோப்பை காலியாக இருக்க வேண்டும். ஆனால் பேஸ்புக்கில் நம் கோப்பை நிறைந்து வழிந்தபடி இருக்கிறது.

http://uyirmmai.com/contentdetails.aspx?cid=6465

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்புக்கில் இருந்து விடைபெறுவதாய் அடிக்கடி ஏதோ “இனி தண்ணி அடிக்க மாட்டேன்” எனும் கணக்கில் சத்தியம் பண்ணுகிறவர் களைப் பார்க்கிறேன். பேஸ்புக் போதை பற்றி நிறைய படித்திருக்கிறோம். தொடர்ந்து மீண்டும் மீண்டும் பேஸ்புக்கில் போய் விழுகிறவர்களை விடுங்கள். ”மூணு நாளா பேஸ்புக் பக்கம் போகல, நிம்மதியா இருக்கு” என பேசுகிற நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் வியக்க வைக்கிறார்கள். உண்மையில் அது அவ்வளவு சித்தரவதை தருகிறதா?

--------

தேநீர் ஊற்றுவதன் முன்பான இறுதி நொடி வரை கோப்பை காலியாக இருக்க வேண்டும். ஆனால் பேஸ்புக்கில் நம் கோப்பை நிறைந்து வழிந்தபடி இருக்கிறது.

 

அனைவரும் வாசிக்க வேண்டிய..... பதிவு இது.

இணைப்பிற்கு.... நன்றி கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது முகநூல் பாவனை விவசாயத்தின் பின் பெருமளவில் நின்றுபோய்விட்டது.. :D

எனது முகநூல் பாவனை விவசாயத்தின் பின் பெருமளவில் நின்றுபோய்விட்டது.. :D

நீங்களும் விவசாயமா? தெரியாமல் போச்சு!

நாங்கள் விவசாய விளம்பரத்திற்கு முகநூல் பாவிக்கிறோம் ஆனால் ஒருத்தரின் முகமும் இல்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் இதிலிருந்து நான் வெளியேறினேன்.இதற்கான காரணங்களை பின்னர் எழுதுகிறேன்.இணைப்பிற்கு நன்றி கிருபன் (பச்சை கையிருப்பில் இல்லை)

அண்மையில் இதிலிருந்து நான் வெளியேறினேன்.இதற்கான காரணங்களை பின்னர் எழுதுகிறேன்.இணைப்பிற்கு நன்றி கிருபன் (பச்சை கையிருப்பில் இல்லை)

 

வாசிக்க ஆவலாக உள்ளேன் நந்தன்     :icon_mrgreen:  :o:lol:

 

நன்றி கிருபன் இணைப்புக்கு

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் எல்லையை நாங்கள் தீர்மானித்தால்.. இவை எதுவும் எம்மைக் கட்டுப்படுத்தா..! இது ஓர் பொழுதுபோக்கு. அதற்கு எல்லையும் நேர அளவும் வைத்துக் கொண்டால்.. அதுவும் எம் காலடியில். இன்றி.. அதன் பாதையில் இழுபட்டுப் போனால்.. அடிமை தான்.

 

குடும்பமும் இப்படித்தான்.. எவன் ஒருவன் தன்னை மனைவியின் முன் கட்டுப்படுத்திறானோ அவனிடம் குடும்பம் கட்டுப்படும். எவன் ஒருவன் மனைவிக்கு பின்னால் ஓடுறானோ.. அங்கே அவன் மனைவிக்கு கட்டுப்படுவான். இது பெண்களுக்கு கணவன் சார்ந்தும் பொருந்தும். :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மெதுவாக நானும் இதன் பிடியிலிருந்து விலகிக் கொண்டு வருகிறேன்.

இணைப்பிற்கு நன்றி கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் விவசாயமா? தெரியாமல் போச்சு!

நாங்கள் விவசாய விளம்பரத்திற்கு முகநூல் பாவிக்கிறோம் ஆனால் ஒருத்தரின் முகமும் இல்லை. :)

நான் சொன்ன விவசாயம் farmville.. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.  :)

  • கருத்துக்கள உறவுகள்
நெருக்கமான நண்பர்கள் .... உறவினர்கள் வட்டத்திற்குள் மட்டும் நிற்பதால்.
எந்த பிரச்சனையும் இல்லை.
மிகவும் பயன்பாடாக இருக்கிறது என்றுதான் சொல்வேன்.

நான் சொன்ன விவசாயம் farmville.. :lol:

ஏன் தலை இந்த கொலைவெறி? :)

ஐஞ்சு ஏக்கர் அடுத்த திங்களுக்குள் நடோணும் என்று நான் நொந்து போயிருக்கிறன்.

அட இன்னொரு விவசாயியை உதவிக்கு மடக்கலாம் என்ற கனவில் மண் போட்டுவிட்டீர்கள். :(

  • கருத்துக்கள உறவுகள்

 

நெருக்கமான நண்பர்கள் .... உறவினர்கள் வட்டத்திற்குள் மட்டும் நிற்பதால்.
எந்த பிரச்சனையும் இல்லை.
மிகவும் பயன்பாடாக இருக்கிறது என்றுதான் சொல்வேன்.

 

 

அப்படித்தான் நானும் வைத்துள்ளேன்

 

யாழில்  கூட திறந்துவிடவில்லை

இது கவலையாக இருந்தாலும்

அதை  முதலில் இருந்தே துப்பரவாக வைத்திருக்கவேண்டும் என்று

பிடிவாதமாகவே  இருந்துவிட்டேன்

சிக்கல்கள் இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் யாருக்கு எவற்றை அனுமதிக்கலாம் என்று நானே விதிகள் போட்டு வைக்கக்கூடிய வசதிகள் இருப்பதால் இதுவரை பிரச்சினை இல்லை. நண்பர்கள், குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ள முகநூலைப் பயன்படுத்துவதால் கவனமாகத்தான் இருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி வேண்டாத பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் போது எல்லாம்.முகநூலில் ஏற்படும் சாதக,பாதகங்கள்  பற்றி சற்று மன ஆறுதலுக்காவது யாழுக்குள் எழுதவேண்டும் என்று வருவேன்..மனம் மாறி சீ எங்கு பிரச்சனைகள் எழுகிறதோ அங்கயே அந்தப் பிரச்சனைகள் முடித்து வைக்கப்பட வேண்டும்..கொண்டு திரிதல் தவறு என்று எண்ணிக் கொள்வதவனால் எழுத மனம் வருவதில்லை..இந்த தலைப்பை இங்கே கண்டதனால் எனது கருத்தையும் முன் வைக்கிறேன்.

 

முகநூல் பாவனையால் ஏற்படும் நல்லவை,கெட்டவை எல்லாம் முதல் பக்கத்திலயே சொல்லப்பட்டு இருக்கிறது.நானும் இதற்குள் இருந்து விடுபடவே முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்..கண்டிப்பாக விலத்திக் கொள்வேன்.

வீட்டில் இருக்கும் நேரத்தில் முக நூலை எட்டிப் பார்ப்பதும் ஏதாச்சும் பூக்கள்,வண்டுகள்,குருவிகள் என்று ஒட்டுவது வழக்கம்.அதனையும் தாண்டி நட்பு ரீதியாக பேசும் உறவுகளை விரல் விட்டு  எண்ணலாம்..ஒரு மனிதனது வேலைப்பழுகள் நேரமின்னை போன்ற விடையங்களை நானும் புரிந்து கொள்வதனால் யாரோடும் 5,10 நிமிடங்களுக்கு மேல் பேச விருப்படுவதில்லை.நானாகவே ஏதாச்சும் சாட்டு சொல்லி பேசிக் கொண்டு இருப்பவர்களிடத்திலிருந்து விடுபட்டு விடுவேன்.
 

அதற்குள்குள்ளும் ஏற்படும் மனக்  கசப்புக்களால்,விடுபாடுகளினால்  அடிக்கடி ஏற்படும் சில வேண்டாத பிரச்சனைகளால் எனக்கு அறவே முக நூல் விருப்பின்றியே வந்து விட்டது..முகநூலுக்கு நான் ஒரு வேண்டாத விருந்தாளியாகவே இருந்து வருகிறேன்...எப்படித் தான் நன்கு பழகினாலும் ஏதோ ஒரு கட்டத்தில் மற்றவர்களிடத்தில் நாங்கள் தண்டனை பெறும் பட்சத்தில், அந்த இடத்தில் முகம் கொடுத்து நிற்பதற்கு எந்த ஒரு ரோசம் உள்ள மனிதர்களுக்கும் விருப்பம் வராது...சம்பந்தமே இல்லாதவற்றை எல்லாம் இழுத்துப் பேசுவதும் இவ்வாறனவர்களினது பழக்கமாக இருக்கிறது..

 

எதற்காக கோவப்படுகிறாள்,எதற்காக ஒன்றை சொல்கிறாள்,யாரிடம் சொல்கிறாள் என்ற ஒரு புரிந்துணர்வு சற்றும் இல்லாதவர்களிடத்தில் போய் எங்களது உணர்வுகளுக்கு ஏற்ப நடவுங்கள் என்று எதிர் பார்ப்பதும் தவறு தான்..என்ன தான் தேன் ஒழுக்க கதைத்தாலும் அவர்கள் தங்கள் மனத்தில் எங்களைப் பற்றி ஒரு தப்பான அபிப்பிராயத்தை  தான் வைத்திருந்திருக்கிறார்கள் என்பதை எங்கள் மீது காட்டி செல்லும் ஒவ்வொரு விடையங்களிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்...தாங்கள் செய்யும் ஒவ்வொரு விடையங்களையும் மறைப்பதற்காக மற்றவர்கள் மீது தப்பைக் கண்டு பிடித்து ஒரு குப்பை மாதிரி தூக்கி எறிந்துட்டு போன உறவுகளும் இருக்கிறார்கள்..

 

சற்று சிந்தித்து பார்த்தால் அங்கே நான் செய்யும் விடையங்கள் ஒரு பொருட்டாகவே எடுக்க வேண்டிய அவசிம் இல்லை.என்ன சற்று கோவம் வந்தால் பேசுவேன் அவ்வளவு தான் என் குணம்..அதையே பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தான் நம்மவர்கள்..அண்மையில் ஒருவரிடம் இருந்து புளக் விழுந்தது..அந்த புளக் விழும் சமயத்திலலேயே நானும் அய்யயோ இப்படி எல்லாம் செய்யாதீங்கள் என்று எழுதிப் போட பார்த்துட்டு  இருந்த மேலும் சில உறவினர்கள் உட்பட பலரும் என்னை விலத்தினார்கள்....ஒவ்வொரு கண்ணுக்கும் ஒவ்வொரு விதமானவளாக தெரிந்திருக்கிறேன் போலும்..

 

வீட்டில் குளப்பத்தை உண்டு பண்ணும் விதமாக  பரிசில் இருந்து ஒரு உறவுக்காரப் பிள்ளை போண் பண்ணிக் கொண்டே இருந்தார்.ஒரு காலத்திலும் என்னைத் தேடி எடுக்காதவர்கள் எல்லாம் ஏன் புதுசா போண் பண்ணத் தொடங்குகிறார்கள் என்று யோசித்துப் பார்த்தால் முகநூலில் ஏற்படும் தேவை அற்ற பிரச்சனைகள் காரணமாவே எண்ணத் தோன்றியது..அவ்வாறன குளப்ப வாதிகளை நானே நீக்கி விடுவது வழமை.

 

சம்பத்தப்பட்டவரோடு சரி நட்புத் தானே என்று எனக்கு தெரிந்த இதர வளிகளை கையாண்டு தொடர்ந்து நட்பில் இருக்க முயற்சித்தேன்..ஒரு நாள் புயலாகினார் சரி அதற்கு பின் ஒதுக்கியாச்சு,ஒதுங்கியாச்சு.. என்ன சின்ன,சின்ன விசயங்களுக்கு எல்லாம் ஏதோ பெரிய தப்பு நடந்து விட்டது போன்று யோசித்து கவலைப் பட்டுக் கொண்டே இருப்பேன்.ஆனால் அவர்களுக்கு அது எல்லாம் புரியப் போறது இல்லை..ரொம்ப சுயநலமான உலகம்..ஆகவே எவ்வளவு ஒதுங்கி வாழ முடியுமோ அவ்வளவு இவ்வாற மக்களிமிருந்து ஒதுங்கிக் கொள்ளவேணும் என்ற விருப்பத்தோடையே வாழுறன்.முகநூலுக்குள் நுளைந்தால் எப்போதும் மனசு கஸ்ரப்படும் எவ்வளவு பண்பாடக பழகினாலும் வேண்டாத காரணத்தை எல்லாம் தூக்கி மனங்களை சாகடிக்கிறார்களே என்று எண்ணிக் கொள்வேன்.சுய நலம் வெல்கிறது..

 

மனசு நோகடிக்க படும்போது தனிமை எம்மை நேசிக்க தொடங்குகிறது (படித்ததில் பிடித்தது )

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.