Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர்காணல் – சாத்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sathiri.png

சாத்திரி என்றால் சோதிடர் என்று சொல்வார்கள். இந்தச் சாத்திரி சோதிடர் அல்ல. படைப்பாளி. கலகக்காரன். 1983 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்ட அந்த அமைப்பின் உறுப்பினர் அல்லது ஈழப்போராளி. இன்னொரு வகையில் சொன்னால், புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் – பிரான்ஸில் வாழ்கின்ற அகதி. ஒரு காலம் தான் பிரதிநிதித்துவம் செய்த அமைப்புக்காகவே எதையும் செய்த, எல்லாவற்றையும் செய்ய முனைந்த சாத்திரி இப்பொழுது அவற்றையெல்லாம் மீளாய்வு செய்து கொண்டிருக்கிறார்.

போராட்டம் வெற்றியடைந்திருந்தால் என்னுடைய இந்தப் பார்வை கூட வேறுபட்டிருக்கும். ஆனால் இன்று போராட்டம் தோல்வியடைந்து, புலிகள் அமைப்பும் வீழ்ந்து விட்டது. எனவே இப்பொழுது நாம்

எல்லாவற்றையும் மீளாய்வு செய்தே ஆகவேண்டும். வீழ்ந்தாலும் எழவேண்டும்.. அதுவேளை வெறும் கற்பனைகளிலும் குருட்டுத்தனமான நம்பிக்கைகளிலும் தொடர்ந்தும் இருந்து விட முடியாது என்று சொல்லும் சாத்திரிக்கு தமிழ்ச் சூழலில் எதிர்ப்பும் விமர்சனங்களும் உண்டு.

saathiri-1-162x300.jpg

இதனால் சாத்திரியின் எழுத்துகள் கடும் சர்ச்சைகளை உண்டு பண்ணி வருகின்றன. ஆனாலும் அவர் பின்வாங்கவேயில்லை. அண்மையில் (2015 ஜனவரியில்) தான் எழுதிய “ஆயுத எழுத்து“ என்ற புதிய நாவல் ஒன்றைச் சாத்திரி சென்னையில் வெளியிட்டார். அந்த வெளியீட்டு நிகழ்வே பல எதிர்ப்புகளின் மத்தியில்தான் நடந்தது. இந்த வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்த சாத்திரியிடம் பேசினேன்.

- கருணாகரன்

——————————————————————————————————————————————————————————————————————-

1-உங்களுடைய நாவல் ஆயுத எழுத்தை சென்னையில் வெளியீடு செய்வதற்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒரு அமைப்பினர் ஈடுபட்டிருந்தார்கள். இறுதியில் சேப்பாக்கத்தில் காவல்துறையினரின் பாதுகாப்போடு நிகழ்வு நடந்ததை பார்த்தேன் .இந்த நாவலை எதிர்க்கும் அளவுக்கு என்ன முக்கியமான விடயங்கள் என்ன இதில் உண்டு ? யார் எதிர்க்கிறார்கள்?

இந்த நாவலை நான் எழுதி வெளியிட தீர்மானித்த போதே அதுக்கான எதிர்ப்புகள் கிளம்பும் என எதிர்பார்த்ததுதான். பொதுவாகவே விமர்சனம் என்கிற ஒன்றை ஏற்றுக்கொள்ளாத அல்லது விரும்பாதபெரும்பாலானவர்களை கொண்ட ஒரு சமூகமாகத்தான் தமிழ் சமூகம் உள்ளது.தவறுகளை தட்டிக் கேட்காமலும் அதை மழுப்பி மறைத்து விட பழக்கப் பட்டவர்களாகவே நாம் வளர்த்தெடுக்கப் பட்டுள்ளோம்.இந்த மன உணர்வு தான் எனது நாவலையும் எதிர்க்கத் தூண்டி யிருக்கலாம்.

saaththiri-cover-212x300.jpgகாரணம் முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டத்தில் நடந்த சில தவறான சம்பவங்களை – தவறான விடயங்களை – எனது நாவலில் பதிவு செய்துள்ளேன் . அந்தச் சம்பவங்கள் – அந்த விடயங்கள் – வெளியே வந்துவிடக் கூடாது அவைகளை மீள் விமர்சனத்துக்கு உட்படுத்தப்படக் கூடாது என்பதில் தமிழகத்தை சேர்ந்த தீவிர தமிழ் தேசிய வாதிகளாக காட்டிக் கொள்ளும் சிலர் முனைப்புடன் செயற்படுகின்றனர் .அவர்களே எனது நாவல் வெளியீட்டையும் தடுக்க முயன்றனர்.ஆனால் நான் வெளியீட்டு மண்டபத்துக்கு செல்லுமுன்னரே தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு எந்த அசம்பாவிதங்களும் நடந்து விடாமல் தடுப்பதற்காக பாதுகாப்பை பலப்படுத்தியதோடு நிகழ்வு எந்தவித இடையூ றும் இன்றி நடக்க உதவினார்கள் .

2 – வெளியீட்டில் கலந்து கொள்வதாகத் தெரிவித்திருந்த பேச்சாளர்கள், திரைப்பட இயக்குனர் வீ.சேகரும் திராவிடர் கழகத்தை சேர்ந்த அருள்மொழியும் பங்கெடுக்காது விட்டதன் காரணம் என்ன?

வீ . சேகர் நிகழ்வு நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் என்னோடு சில விடயங்கள் தனியாக பேசவேண்டும் என வீட்டிற்கு அழைத்திருந்தார்.அவரது வீடிற்கு சென்றிருந்தேன். எனது நாவல் வெளியீட்டில் கலந்துகொள்ளவேண்டாம் என பழ .நெடுமாறனும் இயக்குனர் கௌதமனும் அழுத்தம் தருவதாகவும் தான் நாவலை முழுமையாக படித்துவிட்டேன் அதில் தனக்கு சங்கடமான விடயங்கள் எதுவும் இல்லை ஆனால் நாவலை படிக்காமலேயே இவர்கள் ஏன் அப்படியொரு அழுத்தத்தினை தன்மீது பிரயோகிக்கின்றார்கள் என்று புரியவில்லை என்று கூறியவர், தான் இப்போ இயக்குனர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாலும் திரைத்துறையில் அடிவாங்கி நீண்ட காலமாக எழுந்திருக்க முடியாமல் சிரமப்பட்டு இப்போதான் தனது மகனை வைத்து ஒரு படம் பண்ணிக்கொண்டிருப்பதால் தமிழ்நாட்டில் யாரையும் பகைத்துக்கொள்ள விருப்பம் இல்லை. தனது நிலையை புரிந்துகொள்ளுமாறு என் கைகளை பிடித்து கேட்டுக் கொண்டார்.சுமார் இரண்டு மணிநேரம் அவரோடு பேசிய பின்னர் அவரது நிலை புரிந்தது. நிகழ்வுக்கு அவர் வராது விடுவதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்து விட்டு வந்துவிட்டேன்.அதன்பின்னர் எனது நிகழ்வை வீ.சேகர் புறக்கணித்தார் என்றொரு அறிக்கையை இயக்குனர் கௌதமன் வெளியிட்டதாக புலம்பெயர் தேசத்து இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது .

அடுத்ததாக அருள்மொழி அவர்கள் தான் கலந்து கொள்ளாத காரணத்தை தனது முகப்புத்தகத்திலேயே குறிப்பிட்டுள்ளார். அவர் சொன்ன காரணம் என்னவெனில் எனது நிகழ்வில் பங்கெடுக்க சம்மதம் தெரிவித்திருந்தாலும் அதில் பங்கெடுக்கும் மற்றவர்கள் பெயர்களை அழைப்பிதழில் சரியாக கவனிக்கவில்லை என்றும் நிகழ்வுக்கு கேர்னல் ஹரிகரன் வருவதால் ஒரு இந்திய இராணுவ அதிகாரியோடு ஒரே மேடையில் அமர்ந்து நிகழ்வில் கலந்துகொள்வது தனது கட்சி சார்ந்து பல சர்ச்சைகளை கிளப்பும்.அவற்றை தவிர்க்கவே நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.இது தவிர தனக்கு வேறு அழுத்தங்களோ பிரச்சனைகளோ இல்லை என்று தெரிவித்திருந்தார் .இதுதான் நடந்தவை.

3 -புத்தக கண்காட்சியில் ஆயுத எழுத்தை விற்பனை செய்யக் கூடாது என்று சிலர் புத்தக கடைகளில் வந்து விற்பனையாளர்களை அச்சுறுத்தியிருந்தார்கள் .இது பெருமாள் முருகனுக்கு ஏற்பட்டதைப்போல கருத்து சுதந்திரத்தை மீறும் செயல் என்று நீங்கள் எதிர்ப்புக்காட்டமல் விட்டது ஏன்?

சென்னை புத்தக கண்காட்சியில் எனது நாவலை சுமார் பதின்மூன்று கடைகளில் விற்பனைக்காக கொடுத்திருந்தேன்.அதில் நான்கு கடைகளில் மட்டுமே சிலர் வந்து மிரட்டிவிட்டுப் போயிருந்தனர் .மிரட்டப்பட்டவர்கள் புத்தகங்களை மறைத்து வைத்து விற்பனை செய்தார்கள்.ஆனால் பெருமாள்முருகனுக்கு நடந்த அளவுக்கு எனக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்திருக்கவில்லை என்பது மட்டுமல்லாது இது போன்ற பல பூசாண்டி விளையாட்டுக்கள் எனக்கு பழகிப்போன ஒன்று என்பதால் நான் சிறு பிள்ளைத்தனமான இந்த செயல்களை கண்டுகொள்ளவில்லை .

4 -ஆயுத எழுத்து நாவலை புலம்பெயர் தமிழர்கள் சிலரும் எதிர்க்கிறார்கள்.இந்த எதிர்ப்பின் அடிப்படை என்ன ? இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள் ?

இங்கு எனது நாவலை எதிர்க்கும் புலம் பெயர் தமிழர் பற்றி இங்கு சொல்லியே ஆகவேண்டும்.391 பக்கங்களை கொண்ட ஒரு நாவலின் அட்டைப் படத்தினை மட்டும் இணையத்தில் பார்த்துவிட்டு அதன் உள்ளே என்ன எழுதப்பட்டிருகின்றது என்பதை தீர்மானிக்கும் தீர்க்கதரிசிகளாக அவர்கள் இருக்கிறார்கள்.இவர்களின் தூரநோக்கு சிந்தனைகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை .இவர்களின் எதிர்ப்பினை சமாளிக்க ஐ.நா சபைக்கு நடந்துபோய் ஒரு மனு கொடுக்கலாமா என யோசிக்கவ முடியும்?

5-புலிகள் அமைப்பில் செயல்பட்ட நீங்கள் அந்த அமைப்பின் வீழ்ச்சிக்கு பின்னர் இப்படியான விமர்சனங்களை முன் வைப்பது நல்லதல்ல என்பது சிலரின் கருத்தாக உள்ளது.இது தொடர்பாக உங்கள் பதில் என்ன?

ஆம் , இது போன்ற கருத்தினை முன் வைப்பவர்கள் யார் என்று பார்த்தால் தமிழகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் வாழ்ந்துகொண்டு தலைவர் வருவார் தமிழீழம் வாங்கி வருவார் அல்லது இணையத்தில் ஈழம் பிடிக்கலாம் என்கிற கற்பனையில் வாழும் சிலரே புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் இயக்கம் மீது விமர்சனம் வைக்க வேண்டாம் என்கின்றனர் .2009 ம் ஆண்டுக்கு பின்னர் புலிகள் அமைப்பின் இறுதிக்கால செயற்பாடுகளை விமர்சிக்கும் படைப்புகள் அல்லது கட்டுரைகளை எழுதிய .நிலாந்தன் , கருணாகரன், தமிழ்க்கவி ,யோ.கர்ணன் போன்றவர்கள் மீதும் இதே கருத்து வைக்கப் பட்டது மட்டுமல்லாது அவர்களை துரோகிகள் பட்டியலில் இணைத்து அவதூறுகளும் அள்ளி வீசப்பட்டது.அதேதான் எனக்கும் நடக்கின்றது.

ஆனால் புலிகள் இல்லாத காலத்தில் தான் நான் அவர்கள்மீது விமர்சனம் வைக்கிறேன் என்பது தவறு.புலிகள் இருந்தபோதும் அமைப்பில் இருந்தபடியே உள்ளே நான் விமர்சனங்களை வைத்திருக்கிறேன் .எனது விமர்சனம் என்பது பிரபாகரன் திருமணத்தில் இருந்து தொடங்குகிறது மேலும் பல விடயங்களை நாவலில் பதிவு செய்துள்ளேன். அப்போது ஒரு கட்டமைப்பு இருந்தது. நிருவாக பிரிவுகள் அதற்கான பொறுப்பாளர்கள் இருந்தார்கள். ஆகவே எனது விமர்சனங்கள் கருத்துக்களை நேரடியாக பிரபகரனிடமோ அல்லது நிருவாக பொறுப்பாளரிடமோ தெரிவித்து அதற்கான தீர்வுகளும் கண்டிருக்கிறேன் .ஆனால் இன்று புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் இல்லாது போய் விட்டபின்னர் விமர்சனங்களை பொதுவெளியில் மட்டுமே வைக்க முடியும்.ஏனெனில் இப்போ புலிகளின் பிரதிநிதி என்று யாரும் இல்லை.

6. நீங்களும் பிறரைக் கடுமையான முறையில்தானே விமர்சிக்கிறீர்கள். விமர்சனத்துக்கு அப்பாலான முறையில் தனிநபர் மீதான தாக்குதல்களில் எல்லாம் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்று ஒரு குற்றச்சாட்டும் உண்டு. அதைப்போல ஒரு காலத்தில் நீங்களும் மாற்றுக்கருத்தாளர்களை மதிக்காமல் நடந்தவர் என்ற அபிப்பிராயமும் உள்ளதே?

விமர்சனம் என்றால் அது கடுமையாகத்தான் இருக்கும்.அப்படி இருந்தால்தான் அது விமர்சனம் ஆகும்.கடுமை இல்லையேல் தடவிக்கொடுதல் ஆகிவிடும்.அடுத்தது தனி நபர் தாக்குதலில் ஈடுபடிருந்தேன் என்பது உண்மைதான்.அதனை நான் மறுக்கவில்லை.அதற்கு பின்னாலான காரண காரியங்களும் இருந்திருக்கின்றது. அவற்றையெல்லாம் சொல்லி என்னை நான் நியாயப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.காரணம் அன்று பாடப் புத்தகங்களை தூக்கி வீசி விட்டு ஒரு நோக்கத்துக்காக துப்பாக்கிகளை சுமந்தபடி இடையில் எதிரே வரும் எதையும் பற்றிக் கவலைப்படாமல் தட்டித் தள்ளி விட்டபடி விவேகமற்ற வேகத்தோடு இலட்சியத்தை மட்டும் இலக்காக வைத்து நடந்து கொண்டிருந்தோம்.

ss.jpgஅதிலிருந்து அப்படியே எழுத்துக்கு வந்த நானும் கையில் துப்பாக்கியோடு நடக்கின்றதைப்போலவே எதைப்பற்றியும் கவலைப்படாதவனாய் பத்திரிகை ,சஞ்சிகை எனப் பொது வெளியில் எழுதிக்கொண்டிருந்தேன்.இலக்கை நோக்கி நடக்கும்போது இடையில் தடக்குப்படுபவை எல்லாம் ஒரு பொருட்டு அல்ல என்பதே எனது நினைப்பாக இருந்தது.இலக்கு சூனியமாகிவிட்ட பின்னர் அந்த சூனிய வெளியில் நின்று திரும்பிப் பார்க்கும்போது வலிக்கத்தான் செய்கிறது.எமது தோல்விக்கு இவைகளும் ஒரு காரணமோ என எண்ணி எல்லாவற்றையும் மறு பரிசீலனை செய்யத் தோன்றுகிறது.ஒரு வேளை இலக்கை அடைந்திருந்தால் இந்த வலி இல்லாது போயிருந்திருக்கும்.

அடுத்ததாக மாற்றுக் கருத்தாளர்களை நான் மதிக்கவில்லை என்கிற கேள்விக்கு பதில் சொல்ல முன்பு ஒரு விடயம் என்னைப்பொறுத்தவரை மாற்றுக் கருத்தாளர் என்று யாரும் கிடையாது. எல்லோருமே கருத்தாளர்கள் தான்.பலரின் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அவர்களோடு உரையாடுவதிலும் நட்பு பாராட்டுவதிலும் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. ஆனால் ஐரோப்பவில் ஒரு சிலர் தங்களை தாங்களே மாற்றுக் கருத்தாளர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டு தங்களுக்கென எந்தவித அரசியலோ நோக்கமோ இலக்கோ எதுவுமின்றி எல்லாக்காலத்திலும் எல்லா இடத்திலும் தங்களை முன்னிலைப் படுத்துவதே நோக்கமாக இயங்கிக் கொண்டிருகிறார்கள்.எதுக்கும் யாருக்குமே பிரயோசனமற்று வெறும் கருத்துக் கந்தசாமிகளாக வாழும் சிலரை நான் மதிக்கவேண்டிய தேவை எதுவும் இல்லை என்றே கருதுகிறேன் .

7-இந்த நாவலில் சொல்லப்படும் விடயங்களும் அதில் வரும் பெயர்களும் உண்மையானவைகளாக இருக்கின்றது.இப்படி நீங்கள் உண்மை சம்பவங்களை பதிவுசெய்து விட்டு அதனை ஒரு புனைவு என்று எப்படி சொல்லமுடியும்?

உங்கள் கேள்வி நியாயமானதுதான் ஈழத்தின் போரியல் நாவல்கள் எல்லாமே அனேகமாக உண்மைச்சம்பவங்களின் பதிவுகளாகத்தான் வெளிவந்துள்ளது.அண்மையில் வெளியான தமிழ்க்கவியின் ஊழிக்காலம் .யோ கர்ணனின் கொலம்பஸின் வரைபடங்கள்,குணா கவியழகனின் நண்சுண்டகாடு என்பனவும் உண்மைச்சம்பவங்களின் தொகுப்பை சிறிது புனைவு கலந்து நாவல் வடிவில் கொடுத்துள்ளனர் .எனது ஆயுத எழுத்தும் அதேபோன்று சிறிது புனைவுகள் ஊடாக பல உண்மைச்சம்பவங்களை பதிவுசெய்துள்ளது.முழுக்க முழுக்க உண்மைச்சம்பவங்களின் தொகுப்பாக வெளிவந்தால் அது ஒரு ஆவணமாக மாறிவிடுவதோடு நாம் சொல்லவந்த விடயம் பலரையும் சென்றடையாது போய்விடும்.அடுத்ததாக அது சட்டச் சிக்கல்களையும் ஏற்படுத்தும் என்பதால் உண்மைச்சம்பவங்கள் நாவல் வடிவில் எழுதப்படுவது தேவையாக இருக்கின்றது.

8-ஆயுத எழுத்தில் விடுதலைப்புலிகளுக்கும் ஏனைய இயக்கங்களுக்கும் இடையிலான மோதல்கள் பற்றிய விபரங்களை பதிவாக்கியிருக்கியிருக்கிறீர்கள் இதனை உங்கள் சாட்சியமாக கொள்ளமுடியுமா ?அல்லது உங்கள் தரப்பில் இருந்து சொல்லப் படும் நியாயமாக கொள்ளமுடியுமா ?

எனது சாட்சியமாகவும் எனது தரப்பு நியாயமாகவும் இரண்டு வகையிலும் எடுத்துக் கொள்ளலாம் .

9 -அடுத்ததாக எதாவது நாவல் எழுதும் திட்டம் ஏதும் உள்ளதா?

நிச்சயமாக.. .என்னுடைய அனுபவங்களில் ஏறக்குறைய நாற்பது சதவிகிதம் மட்டுமே இந் நூலில் பதிவு பெற்றுள்ளது. .ஆயுத எழுத்து நாவலில் விடுபட்டுப்போன பல விடயங்கள் உள்ளது அவற்றை வைத்து அடுத்த நாவலை விரைவில் எழுதுவேன். எதிர்ப்புகள் தீவிரமாக செயற்பட வைக்கின்றன..

10 -சென்னை புத்தக கண்காட்சியில் ஈழத்துப் படைப்புகள், புலம்பெயர் தமிழர் படைப்புகள் பற்றி உங்கள் பார்வை என்ன?

இந்தத் தடவையும் சென்னை புத்தக கண்காட்சியில் ஈழத்து மற்றும் புலம்பெயர் படைப்பாளிகளின் படைப்புக்கள் நிறையவே வந்திருந்தது மகிழ்ச்சி.ஆனால் தங்கள் படைப்புக்களை சந்தைப்படுத்தும் விடயத்தில் சிலரே வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒரு நாவல் சந்தைப்படுத்தலில் வெற்றி பெற்று பலரது கைகளையும் அது சென்றடையும் போது தான் அந்த படைப்பே வெற்றி பெறுகிறது.இல்லாவிட்டால் நானும் ஒரு நாவல் எழுதினேன் என்கிற நின்மதியோடு அந்தப் படைப்பாளி காணமல் போய் விடுவான் .எனது நாவல் எல்லோரிடமும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்பதில் நான் கண்ணாக இருக்கிறேன். இது எனக்கு ஒரு புதிய அனுபவம்தான்.

11-நாவல் தவிர்ந்த எழுத்துகளிலும் நீங்கள் ஈடுபட்டு வருகிறீர்கள். ஆயுத எழுத்தைப்போல அந்தக் கதைகளிலும் உண்மைச் சம்பவங்களை ஆதாரமாகக் கொண்ட விடயங்கள் பேசப்படுகின்றன. இவையெல்லாவற்றுக்கும் மறுப்பாக – எதிர்க்குரல்கள் எழுந்திருக்கின்றன. இதில் எது உண்மை என்று எப்படி வாசகர்கள் தீர்மானிப்பது ?

இங்கு ஒரு விடயத்தினை சொல்ல விரும்புகிறேன் நான் எனது எழுத்துக்களால் இந்த உலகத்தையோ சமூகத்தையோ திருத்தவந்த மகான் அல்ல.எனக்கு தெரிந்த பார்த்த பல சம்பவங்களை புனைவுகளோடு பதிவாக்குகிறேன்.எனது படைப்புகள் பொது வெளிக்கு வந்தபின்னர் அது எனக்கு சொந்தமானது அல்ல.அதைப் படிப்பவர்கள் எதிக்கலாம் .மறுக்கலாம்.பாராட்டலாம் அது அவரவர் விருப்பம்.ஒரு வாசகன் எனது படைப்பை எப்படி தீர்மானிக்கவேண்டும் என்பதை நான் தீர்மானிக்க முடியாது .

12-தமிழ்ச்சூழலில் விமர்சன மரபை எப்படி உருவாக்கமுடியும் ? விமர்சனம் என்ற பெயரில் நடக்கின்ற அவதூறுகளை நாம் அனுமதிக்க முடியாது என்று ஒரு தரப்பினர் சொல்வதில் நியாயம் இல்லை என்கிறீர்களா ? அவர்களுடைய நியாயத்தை எப்படி மறுக்கிறீர்கள் ?

தமிழ்ச்சூழலில் விமர்சன மரபை உருவாக்கத் தேவையில்லை.அளவில் குறைவானதாக இருந்தாலும் ஒரு நாகரிகமான விமர்சன சூழல் கடந்த தலைமுறைவரை நல்லதொரு நிலையிலேயேs.jpgஇருந்திருக்கின்றது.ஆனாலும் விமர்சனமே தேவையில்லை அல்லது விமர்சனம் வைக்கவே கூடாது என்கிறவர்களையும்.விமர்சனம் என்கிற பெயரில் விசமங்களை வைக்கும் பெரும்பான்மையை கொண்ட சமூகமாகத்தான் எமது சமூகம் இருக்கின்றது.இதற்கு வளர்ந்துவிட்ட தகவல்தொழில்நுட்பமும் சமூகவலைத்தளங்களும் பெரிதும் துணையாக இருக்கின்றது.அவதூறுகளை அனுமதிக்க முடியாதுதான். ஆனால் முகமூடிகள் அதிகரித்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் அவதூறுகளுக்கெல்லாம் நின்று நிதானித்து பதில் சொல்லிக் கொண்டிருப்பது நேரவிரயமாகவே நான் கருதுகிறேன்.இவைகளுக்கெல்லாம் பேசாமல் கடந்துபோவதே புத்திசாலித்தனம் என நினைக்கிறன் .

13-உங்கள் எழுத்துகளை புலிகள் அமைப்பில் செயற்பட்ட ஒரு போராளியின் சாட்சியங்கள் என்று கொள்ளப்படுவதா ? அல்லது புலிகளை எதிர்க்கும் ஒருவருடைய விமர்சனங்கள் என்று பார்க்கப்பட வேண்டுமா ? அல்லது ஒரு வரலாற்றை காய்தல் உவத்தல் இன்றிப் பார்க்க முனையும் படைப்பாளியின் மனவெளிப்பாடுகள் என்று கவனிக்க வேண்டுமா ? அல்லது ஈழவிடுதலைப்போராட்டத்தின் வீழ்ச்சிக்கும் தோல்விக்கும் காரணமான விடயங்களை மீள்பார்வைக்குட்படுத்தும் ஒருவனின் செயல்கள் என்று கொள்ள வேண்டுமா ?

இந்தக்கேள்விக்கான பதில் ஏற்கனவே சொன்னதுதான். என்னை புலி என்பார்கள்.. நான் புலியில்லை என்பார்கள் . என்னை எழுத்தாளன் என்பார்கள் , இன்னும் சிலர் விமர்சன எழுத்து என்பார்கள். எனக்குத் தெரிந்தது நான் எழுதுகிறேன் படிப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

14-உங்கள் நாவலில் மற்ற இயக்கங்களை நீங்கள் சித்தரிக்கும் பார்வையில் அந்த இயக்கங்களை சார்ந்தவர்களுக்கு உங்கள் கருத்துக்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுவது தவிர்க்க முடியாததல்லவா?

யார் வேண்டுமானாலும் எந்த இயக்கத்தை சேர்ந்தவரானாலும் தாரளமாகத் தங்கள் விமர்சனங்களை வைக்கலாம். இனிமேலும் விமர்சனங்களை வைக்கக்கூடாது என்றோ அல்லது வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிற சமூகமாகவோ நாம் தொடர்ந்து பயணிக்க முடியாது.விமர்சனங்களை வைக்காமல் எனக்கேன் வம்பு என்று பலர் ஒதுங்கிப் போனதும் வைக்கப்பட்ட விமர்சனங்களும் அடக்கி ஒடுக்கப்பட்டதும் எமது தோல்விகளுக்கு ஒரு காரணம் என்று கருதுகிறேன் .

ஆனால் இந்த நாவலை படித்த இரண்டு பேர் எனக்கு வேறுவிதமான அனுபவங்களைக் கொடுத்தார்கள்.ஒருவர் ரெலோ அமைப்பு போராளி.சுவிஸ் நாட்டில் வசிக்கும் அவர் தொடர்புகொண்டு என்னிடம் சொன்னது என்னவெனில் சிறிசபாரத்தினத்தின் இறுதிக்கண ங்களை தங்கள் அமைப்பைச் சேர்ந்த எவருமே இதுவரை பதிவு செய்திருக்கவில்லை. அதனைப் பதிவாக்கியதுக்கு நன்றி என்றார். இன்னொருவர் தமிழகத்தில் வசிக்கும் ஈ .பி .ஆர் .எல் .எப் . நண்பர். எனது நாவலில் ஈ .பி .ஆர். எல் .எப் பற்றிய பகுதி வரும்போது ஒரு புலிப்போராளி பொறுப்பாளரிடம் போய் ஈ .பி அமைப்பை எப்போ தடை செய்யப்போகிறோம் எனக் கேட்பார். அதற்குப் பொறுப்பாளர் சும்மா இருக்கிற பல்லியை அடித்து பாவத்தை தேடக் கூடாது. கொஞ்சநாள் பொறுப்போம் என்று சொல்வார் . அந்த வசனத்தைச் சுட்டிக் காட்டிய நண்பர் சிரித்தபடியே உங்களுக்கெல்லாம் அந்த நேரம் எங்களைப் பார்த்தால் பல்லி போலவா இருந்தது? என்று கேட்டார் .

முழுக்க முழுக்க ஆயுத பாணிகளாக இருந்த புலிகள் அமைப்பு பெரும் பலத்தோடு இருந்த ரெலோ அமைப்பை அழித்து முடித்த இறுமாப்பில் இருந்த நேரம் பெருமளவு ஆயுதங்கள் இல்லாதிருந்த மற்றைய இயக்கங்கள் எல்லாமே அவர்களுக்கு பல்லிதான். இது புலிகள் அமைப்பில் இருந்த ஒவ்வொருவரினதும் மனநிலையாக இருந்தது. அது தவிர்க்க முடியததாகவும் இருந்தது என்பதே எனது பதில். இதுவரை இப்படியான கருத்துக்கள்தான் வந்திருக்கிறது. இனிவரும் காலத்தில் கடுமையான விமர்சனங்கள் வரலாம் .வரவேண்டும்.

15-நீங்கள் எழுதுகின்ற போது, பெண்களை உடல்சார்ந்து அதிகமாக எழுதுகிறீர்களே. இதுவொரு கண்டனத்திற்குரிய பார்வை இல்லையா?

இங்கு ஒரு விடயத்தினை குறிப்பிட விரும்புகிறேன். நான் முற்றும் துறந்த முனிவனோ உணர்வுகள் அற்றுப்போன சடமோ அல்ல. அதே நேரம் ஊருக்காக ரொம்ப நல்லவன் வேடம் போடவேண்டிய தேவையும் எனக்கில்லை. நான் இயற்கையாகவே இருக்க விரும்புகிறேன். என்னைப்பொறுத்தவரை . ஒவ்வொரு பெண்ணிடமும் ஒவ்வொரு அழகு உள்ளது. அதை நான் ரசிக்கிறேன். அதை அப்படியே எழுதுகிறேன். அவ்வளவுதான். அப்படி ரசிக்காவிட்டால், எழுதாவிட்டால் நான் நல்லவன் என்று அர்த்தம் கிடையாது. என்னில் எதோ குறைபாடு உள்ளது என்றுதான் அர்த்தம் .

பாலியல் வன்முறை, சிறுவர் துஸ்பிரயோகம், பிள்ளைவரம் வேண்டி கோவிலுக்கும் சாமியர்களிடமும் போகும் அறிவியல் அற்ற, நேர்மையற்ற, ஒழுக்கமற்ற பெரும்பான்மையினரை கொண்ட சமூகமாகத்தான் நாம் இருக்கிறோம் .. அதேநேரம் பழைய இலக்கியங்களில் எழுதிவிடாத எதையும் நான் புதிதாக எழுதவில்லை. அவைகளோடு ஒப்பிடும்போது நான் எழுதுபவைகள் ஒன்றுமே அதிகப்படியானவை இல்லை.

16-விடுதலைப் புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்படாது இருந்தால் இந் நேரம் நீங்கள் என்ன நிலைப்பாட்டில் இருப்பீர்கள்? இப்படியான எழுத்துக்களை எழுதி இருப்பது சாத்தியமா?

விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாது போன பின்னர் நான் எழுதவரவில்லை. அதற்கு முன்பிருந்தே எழுதிக்கொண்டிருக்கிறேன். விடுதலைப் புலிகள் இருந்தாலும் தமிழீழம் கிடைத்திருந்தலும் எழுதிக்கொண்டுதான் இருந்திருப்பேன். நான் முன்னரே சொன்னதுபோல புலிகள் அமைப்பின் குறைகளையும் விமர்சனங்களையும் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களிடம் வைத்துவிட்டு எனக்கு சரியென்று பட்டதை எழுதிக்கொண்டிருப்பேன் .

17-பிரான்ஸில் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான ஆளுமைகள் நிறையப்பேர் உள்ளனர். அதற்கேற்ற மாதிரி பல நிலைப்பாடுகளும் அணிகளும் உள்ளன. கி.பி. அரவிந்தன், ஷோபாசக்தி தொடக்கம் இன்றைய ஆக்காட்டி அணியினர் வரையில். இலக்கியத்தில் இவர்களின் முக்கியத்தும், ஐக்கியம், செயற்பாடுகள் பற்றிச் சொல்லுங்கள்.

வாசிப்புத் தன்மையை அதிகமாக கொண்ட நாடக பிரான்ஸ் இன்னமும் இருக்கின்றது. நவீன தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் பெரும்பாலானவர்கள் கணணிக்குள்ளும் கைத்தொலைபேசிக்குள்ளும் தொலைந்து போய்க்கொண்டிருக்கும் காலகட்டத்திலும் பயணங்களின்போதும் பூங்காக்களிலும் இன்னமும் கையில் சஞ்சிகையோ புத்தகமோ படிப்பவர்களைப் பெரும்பாலாக இங்கு காணமுடியும். அதே பழக்கம் தமிழர்களிடமும் இங்கு இருப்பது மகிழ்ச்சியான விடயம் .ஆனால் தமிழ்ப்படைப்பாளிகள் பெரும்பாலும் தனித் தனித் தீவுகளாகவே பிரிந்து கிடக்கிறார்கள் ஒரு பொதுநிகழ்வில் கூட பலரை ஒன்றாக பார்க்கமுடியாது என்பது மட்டுமல்ல மறைந்துவிட்ட ஒரு படைப்பாளியின் அஞ்சலி நிகழ்வு கூட பல பிரிவுகளாக நடாத்தப்படும் நிலைதான் இங்குள்ளது.

அடுத்ததாக இரண்டு பெயர்களை நீங்கள் நேரடியாக குறிப்பிட்டு கேட்டதால் அவர்கள் பற்றியும் சொல்லி விடுகிறேன் .கி .பி . அரவிந்தன் அவரது தனிப்பட்ட சில காரணங்களால் எழுத்துலகில் இருந்தும் பொதுவெளியில் இருந்தும் ஒதுங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. அடுத்தது ஷோபாசக்தி. இவர் நல்லதொரு கதைசொல்லி. அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் ஒரு குழப்பவாதி. தன்னுடையது மட்டுமே எழுத்துக்கள் , மற்றயவை எல்லாம் கழிவறைச் சுவரில் இருக்கும் கிறுக்கல்கள் என்பதுபோலவே மற்றைய படைப்பாளிகளின் படைப்புகள் மீதான இவரது விமர்சனம் இருக்கும். மற்றைய படைப்பாளிகளின் படைப்புகளை விமர்சிக்காது படைப்பாளிகளை விமர்சிப்பவராக இருக்கிறார்.அதனாலேயே இலங்கை இந்தியப் படைப்பாளிகள் என்கிற பேதமின்றி பெரும்பாலானவர்களை அவர் பகைத்துக்கொண்டுள்ளார். இது அவருக்கு ஆரோக்கியமானதல்ல. இதே நிலை தொடருமானால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு காணாமல் போய் விடக் கூடும். ஆனால் வயதும் அனுபவங்களும் மாற்றத்தைக் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கிறேன் .

இறுதியாக… பிரான்ஸ் நாட்டில் இதுவரை பல சஞ்சிகைகள் பத்திரிகைகள் தோன்றி காணாமல் போய்விட்டன. சில தொடர்ந்தும் வெளிவருகின்றன. அதேபோலத்தான் அண்மையில் ஆட்காட்டி சஞ்சிகை மட்டுமல்ல முகடு என்றொரு சஞ்சிகையும் சில இளையோரால் வெளியிடப்படுகின்றது. இது வரவேற்கப் படவேண்டிய விடயம். ஆனால் குறிப்பிட்ட சிலரே அதில் தொடர்ந்து எழுதி ஒரு குழுவாத சஞ்சிகையாக மாறிவிடாது பரந்துபட்ட எழுத்தாளர்களை ஊக்குவித்து தொடர்ச்சியாக வெளிவருவதே சஞ்சிகையின் வெற்றியாகும். பொறுத்திருந்து பார்க்கலாம் .

http://eathuvarai.net/?p=4535

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார்... நான்கைந்து வருடங்களுக்கு முன்பு  யாழ்கள உறவாக இருந்த போது... வேறு முகம்.
முள்ளி வாய்க்காலின் பின்... சாத்திரிக்கு, வேறு முகம்.
எனக்கு... இரு முகம் காட்டுபவர்களை,  அறவே.... பிடிக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார், ஈழத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாகப் புறப்பட்டு, பின்பு புறநானூற்றுவீரனாக விழுப்புண் ஏற்று, வரலாற்றில் பொறிக்கப்பட்ட புரட்சித்தேசமாகிய பிரான்ஸ்சில் நிலையெடுத்து புலிகளுக்கு எல்லாவற்றையும் செய்து எதையும் செய்யத் தயாராயிருந்து இப்போ அதிலிருந்து விலகி.................

 

புலம்பெயர்தேசத்தில் வேலைக்களைப்பில் சோர்ந்துபோய் வெந்ததுபாதி வேகாதது பாதியாகத் திண்டுபோட்டு உறங்கும்வேளையில் எப்போதாவது துர்சொப்பனம் வந்து கைகளில் புலிக்கொடியையெடுத்து ஐநா நோக்கி நடப்பவர்மத்தியில் சமூகப் பார்வையுடன் இலங்க்கியங்களை இப்போது படைக்கின்றார்.

 

எழுத்துலகில் வெற்றிகண்டோ"ரெல்லாம்" ஏதாவது முகாம்களிலிருந்து வந்ததாகத் தம்மைப் பறைசாற்றிக்கொள்வதில்லை இவர் தனது புத்தகங்களை விலைபோகவைப்பதற்கான கருவியாக புலிகள் இயக்கத்தியே இப்போதும் முன்வைக்கிறார். இவர்கள் இப்போதே இப்படியானவர்களாக இருப்பார்களானால் புலிகள் இயக்கத்தில் பலநூறுகோடிகளை ஐரோப்பிய தேசங்களில் கையாளும்போது எவ்வளவு விளையாட்டுகளைச் செய்திருப்பார்கள்!

 

பரிதியைப் போட்டுத்தள்ளியவுடன் இவர் இட்ட கருத்து ஒன்று இப்போதும் எனக்கு ஞாபகமிருக்கின்றது.

 

"தேவையில்லாமல் சண்டைபிடிக்காதையுங்கோ, எல்லாம் பங்குபிரிப்புப் பிரச்சனைதானே சுமூகமாகப் பேசிப்பறைஞ்சு விசையத்தை முடியுங்கோ என நான் இவர்களுக்குக் கனக்கத்தடவை சொன்னேன்"

 

எனக்கூறியிருந்தார்

 

இவரால் பிரச்சனை இல்லாமல் பங்குபிறிச்சு இப்போ எழுத்துலகில் சங்கமிக்க முடிஞ்சுது, அப்படியிருந்தும் புலிகளது றப்பர் ஸ்டாம்பை விட்டெறிந்துவிட்டு வாழமுடியவில்லை.

 

 

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களைப் பேட்டி எடுக்கிறது.. BBC.. CNN.. ABC.. AP.. கிடையாது. ஒன்றில் தமிழகத்தில் காய்ஞ்சு கொண்டிருக்கும்.. சில வராந்த சஞ்சிகைகளும்.. அப்புறம் இவர்களுக்கு.. இவர்களை வேண்டியவை நடத்தும் இணையங்களும் தான்.

 

பாவம்.. யாழ் இதனை எல்லாம்.. வெட்டி ஒட்ட தாங்க வேண்டிய கட்டாயத்தில் .

 

இது இவர்களா தங்களுக்கு ஒரு உருப்பெருத்த.. மாய விம்பத்தை தோற்றுவிக்கிற நாடகத்தின் ஒரு அங்கம். இப்படித்தான்.. சோபாசுத்தி என்பவரும். அவரின் பாதையே இவர். நாளை இவரும் ஒரு நடிகர் ஆகலாம். பொறுத்திருந்து பாருங்கள்.  :D  :icon_idea:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என் கட்டுரையை இணைத்தவரின்  நோக்கம் எதுவாக இருந்தாலும்  இணைத்தமைக்கு நன்றி .

விமர்சனம் என்றால் அது கடுமையாகத்தான் இருக்கும்.அப்படி இருந்தால்தான் அது விமர்சனம் ஆகும்.கடுமை இல்லையேல் தடவிக்கொடுதல் ஆகிவிடும்.அடுத்தது தனி நபர் தாக்குதலில் ஈடுபடிருந்தேன் என்பது உண்மைதான்.அதனை நான் மறுக்கவில்லை.அதற்கு பின்னாலான காரண காரியங்களும் இருந்திருக்கின்றது. அவற்றையெல்லாம் சொல்லி என்னை நான் நியாயப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை  :icon_idea:  :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

புலியாக இருந்து எழுத்தாளராக மாறி  இப்போது சாத்திரியார் அரசியல்வாதியாகி விட்டார்.

வாழ்த்துக்கள்  சாத்திரியார் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் கட்டுரையை இணைத்தவரின்  நோக்கம் எதுவாக இருந்தாலும்  இணைத்தமைக்கு நன்றி .

 

 

நோக்கம்  No come.

  • கருத்துக்கள உறவுகள்

பல உலக விடயங்களை வாசிச்சு அறிவை வளர்க்க கூடியதாக இருந்தது......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.