Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர் சிவகுமாரும் அவரது ஓவியங்களும்

Featured Replies

நடிகர் சிவகுமார் ஒரு சிறந்த நடிகர் மட்டுமில்லை சிறந்த ஓவியரும் கூட. இங்கை அவரது சில ஓவியங்களும் அவை வரையப்பட்ட சந்தர்பங்களும் தரபட்டுள்ளன. பார்த்து மகிழுங்கள்.

 

சிறு வயதில் எங்கள் ஊரிலிருந்து 20 கி.மீ.தூரத்திலுள்ள கோயமுத்தூர் செல்லும் போதெல்லாம், ராயல், ராஜா, கர்னாடிக் தியேட்டர்கள் முன்னால் 40 அடி உயரத்தில் வரைந்து வைக்கப்பட்டிருந்த சிவாஜி,எம்.ஜி.ஆர் கட்-அவுட் ஓவியங்களைப் பார்த்து பிரம்மித்து, இந்தப் படத்தை வரைந்த ஓவியன்தான் உலகின் மிகச்சிறந்த ஓவியனாக இருப்பான் என்று நினைத்துருந்தேன்.
சென்னை, மோகன் ஆர்ட்ஸ்! தியேட்டர்களுக்கு பேனர், கட்- அவுட் வரையும் கம்பெனி. இங்கு வந்து பார்த்த போது ஒரு சதுர அடிக்கு 15 பைசா வீதம் 60 அடி உயர சிவாஜி படம் வரைந்து கொடுத்தவருக்கு 150ரூ கொடுத்தால் அதிகம் என்று தெரிந்து அதிர்ந்து போனேன்.
கொதிக்கும் ஆஸ்பெஸ்டாஸ் ஷெட்டுக்குள், முண்டா பனியன்,அழுக்கு லுங்கியுமாக 'கோடா' மீது ஏறி நின்று தோள்பட்டை வலிக்கும் அளவுக்கு 10 நெ. பிரஷ்ஷை வைத்து, அவர்கள் ஓவியம் தீட்டும் அவலத்தைப் பார்த்த போது - 40 அடி ஆழக் கிணற்றில் குழி அடித்து வேட்டு வைப்பவருக்கும், இந்த ஓவியரின் வலிக்கும் பேதமில்லை என்று தெரிந்தது. 
மிகப்பெரிய ஓவியம் வரைபவருக்கு, மிக குறைந்த சம்பளம் என்றறிந்த போது என் கற்பனைக் கோட்டை சிதறியது.
இங்கிருந்து பெரிய ஓவியனாக வர முடியாது - எங்கள் செல்வது என்று தவித்து, தடுமாறிய போது தன்னம்பிக்கை ஊட்டியவர் ஓவியர் சுந்தரம். ஓவியக்கல்லூரியில் சேர வழி வகை செய்தவர் ஓவியர் நடராஜன்.

16 வயதில் மோகன் ஆர்ட்ஸில்
வரைந்த Ten Commandments 
ஓவியம்.

வழி காட்டிய ஓவியர்கள் 
சுந்தர மூர்த்தி - நடராஜன்

10400849_828928663786460_873938178921184

 

நன்றி: சிவகுமார் அவர்களின் FB 

 

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் சிவகுமார்.... ஓவியர் மட்டுமல்ல, எழுத்தாளர், கவிஞர், சமூக சேவையாளர் என்று... பன்முக ஆற்றல் கொண்டவர்.
 

நடிகர் சிவகுமார்.... ஓவியர் மட்டுமல்ல, எழுத்தாளர், கவிஞர், சமூக சேவையாளர் என்று... பன்முக ஆற்றல் கொண்டவர்.

 

அது மட்டுமல்ல நல்ல உள்ளம் கொண்ட ஒரு பண்பான மனிதரும் கூட. 
ஒரு நேர்காணலில் உங்களது பிள்ளைகள் ஒழுக்கமாக வளர்ந்ததன் இரகசியம் 
என்ன என்று கேட்டதற்கு " நீங்கள் ஒழுக்கமாக இருந்தால் உங்கள் பிள்ளை ஒழுக்கமாக 
வளரும்" என்று சொன்னார்.  :icon_idea:
  • தொடங்கியவர்

வருகைக்கு மற்றும் தகவலுக்கு நன்றி.

 


ஓவியக்கல்லூரியில் சேரும் முன்
வரைந்த 'கேம்ரிட்ஜ் கிங்ஸ் காலேஜ்'. லண்டன்..நேரு படித்த கல்லூரி10521941_832583700087623_922224713573082

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி சேவையர்
நடிகர் சிவகுமார் சிறு வயதில் நடிக்க வந்து தனது பெயரை எந்தச் சிக்கலிலும் சிக்க வைக்காமல் வாழ்ந்தவர்.
அவருடைய ஒவியங்கள் மிக அழகாக உள்ளன.
அவருடைய ஒழுக்கமான வாழ்க்கையை அவருடைய வாரிசுகளிலும்  காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் சிவகுமாரின் தற்போதைய பரிணாமம்,  நல்ல பேச்சாளராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்...!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட ஒரு சிறந்த கலைஞருக்கு இதுவரை பத்மவிருது எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆனால் நடிப்புன்னா என்னவென்றே தெரியாதவனுகளுக்கெல்லாம் குடுக்குறாங்க!

  • தொடங்கியவர்

இப்படிப்பட்ட ஒரு சிறந்த கலைஞருக்கு இதுவரை பத்மவிருது எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆனால் நடிப்புன்னா என்னவென்றே தெரியாதவனுகளுக்கெல்லாம் குடுக்குறாங்க!

அண்ணை, இப்ப பத்மஸ்ரீ எல்லாம் ஒரு வியாபார பொருளாகிவிடாது. யார் யாருக்கு குடுப்பது எண்ட விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. இப்ப இந்திய அரசாங்கம் செம்பு தூக்கிகளுக்குதான்  கூட பத்மஸ்ரீ, அது இது எண்டு கனக்க விருது குடுக்கிறார்கள்.

  • தொடங்கியவர்

1960 அக்டோபர் தசரா விடுமுறையில், சென்னையிலிருந்து மகாபலிபுரத்துக்கு 56 கி.மீ. சைக்கிளில் சென்று, தெருவில் படுத்து, கைப்பம்பில் குளித்து, 2 நாள் ஓவியம்தீட்டி முடித்து, அங்கிருந்து 30 கி.மீ.தூரத்திலுள்ள திருக்கழுக்குன்றம் சென்று, கோயில் பின்னால் கழுகு பிரசாதம் சாப்பிடுவதைப் பார்த்து விட்டு

கோயில்களை ஸ்கெச் செய்த பின் அங்கிருந்து செங்கல்பட்டு 28 கி.மீ., அங்கிருந்து சென்னை 46 கி.மீ., வழியில் லேலண்ட் கம்பெனி ஆயுத பூஜை. பொரி கடலை வாங்கி கொரித்துக் கொண்டே சென்னை வந்தோம்.

மோகன் ஆர்ட்ஸில் ஓராண்டு, 

ஓவியக் கல்லூரி காலத்தில் 6 ஆண்டு என இந்தியாமுழுக்கச் சுற்றி ஓவியம் வரைய ஆன செலவு 7596 ரூ.

இன்று 5 நட்சத்திர ஓட்டலில் ஒரு

குடும்பம் ஒரு வேளை உணவுக்கு 

ஆகும் செலவு 10,000/- ரூ.

என்ன வித்தியாசமான அனுபவம் !!

குறைந்த தேவைகளும் உயர்ந்த லட்சியமுமாய் வாழ்ந்த நாட்கள் இனி கிடைக்குமா ?

அப்பொழுது வரைந்த ஓவியம் இங்கே!

 

 

10407947_836163749729618_147642289922685

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

29808-a.jpg

 

நடிகர் சிவகுமார் வரைந்த பத்மினி ஓவியம்.

 

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, தூக்கு தூக்கி, எதிர்பாராதது, புதையல், அமரதீபம், உத்தமபுத்திரன் – பள்ளி நாட்களில் நான் பார்த்தது.
காதலன், காதலியாக நடித்த அந்த நாளிலேயே – ‘மங்கையர் திலகம்’ படத்தில் சிவாஜிக்கு அண்ணியாக நடித்தார் பத்மினி.
அந்நாளில் எம்.ஜி.ஆர்- பானுமதி, சிவாஜி -பத்மினி, ஜெமினி – சாவித்ரி, நிரந்தர திரையுலக ஜோடிகள். சிவாஜி – பத்மினியை என் இதயக்கூட்டில் பதித்துக்கொண்டேன்.
 
‘மதுரை வீரன்’ படத்தில் எம்.ஜி.ஆர் உடன் நடிக்கப் போய்விட்டார் என்று ஒரு வருடம் அவர் நடித்த படங்களைப் பார்க்காமல் என் கோபத்தை வெளிப்படுத்தினேன்.
வஞ்சிக்கோட்டை வாலிபன் உச்ச கட்ட நடனக் காட்சி, தில்லான மோகனாம்பாள் திருவருட்செல்வர் படங்களில் தேர்ந்த நாட்டியத் தாரகையாக என்று நிரூபித்தவர்.
நடிப்பில் மட்டுமல்ல குணத்திலும் அவர் நிறைகுடம். எம்.ஜி.ஆர், சிவாஜி , ஜெமினி என மும்மூர்த்திகளோடு நடித்த போதும் ஒருவரைப்பற்றி அடுத்தவரிடம் மறந்தும்கூட புறம் பேசாத பத்தரை மாற்றுத் தங்கம்.
ஓவியனாக வாழ்கையை தொடர நினைத்த நான் நடிகனாக பின் ஏ.பி.என். படங்களில் – புராண வேடங்களில் நடித்த பொழுது பத்மினியுடன் பழகும் வாய்ப்பு கிட்டவில்லை.
ஜெமினியின் ‘விளையாட்டுப் பிள்ளை’, சஷ்டி பிலிம்ஸ் தேரோட்டம் படங்களில் அவருக்கு மகனாக நடிக்கும் வாய்ப்பு பெற்றேன்.
 
1958-இல் மோகன் ஆர்ட்ஸ்-ல் 16வது வயதில் பயிற்சி ஓவியனாக இருந்த பொழுது நான் வரைந்த பத்மினியின் ஓவியத்தை ஒரு நாள் அவருக்கு பரிசளித்தேன்.
அந்த நாட்டியப் பேரொளி அணைந்த செய்தி கேட்டு ஷோபனா வீட்டுக்கு சென்றேன். கண்ணாடிப் பேழைக்குள் சிரித்தவாறு துயில் கொண்டிருந்தார்.
தலைமாட்டில் நான் வரைந்த பத்மினி ஓவியம் அருகே குத்துவிளக்கு, அணையாத ஜோதியாக ஒழி உமிழ்ந்தது. கண்கள் குளமாகிவிட்டன. 
 
  • கருத்துக்கள உறவுகள்

சிவகுமார் நன்றாக யோகாசனம் பயின்றுள்ளார்.

 

பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்துள்ளார்.

  • தொடங்கியவர்

961-அக்டோபர் -தசரா விடுமுறையில் பாண்டிச்சேரி சென்றேன்.

என் ஓவியக்கலை கல்லூரி நண்பர் ஆர்.டி.தயாளன்- 107,கொசக் கடைத் தெருவில் குடியிருந்தார். அவர் வீட்டிலிருந்து, ஒரு பக்கம் பெடல் கட்டை இல்லாத சைக்கிளை எடுத்துக்கொண்டு அதிகாலை 5.30 மணிக்குப் புறப்பட்டு சென்று லைட் ஹவுஸ் ஒட்டிய காம்பவுண்ட் அருகே அமர்ந்து, தெற்கு நோக்கி ஓடிய ட்யூப்ளே தெருவையும், அதன் நடுவே கம்பீரமாய் நிற்கும் ட்யூப்ளே சிலையையும் -அதைத் தாங்கி நிற்கும்அழகிய சிற்ப வேலைப்பாடு மிக்க மேடையையும் -உதய சூரியனின் தங்கக் கரங்கள் படும்போது 2மணி, 30 நிமிடங்களில் வரைந்து முடித்தேன்.

 

 

 

10577122_839739939371999_346160707249326

  • தொடங்கியவர்

ஆயிரம் தண்டால் ஆஞ்சநேயர் முன் பள்ளி நாட்களில் எடுத்தவர். 400 அடி நீள தெப்பக்குளத்தில் ஒரு முனையில் மூழ்கி மறுமுனையில் ஒரு நிமிடத்தில் தொட்டவர். கல்லூரியில் படிக்கையில் பெரியம்மை தாக்கியதில் முகம் கோரமாக உள்ளதென்று தற்கொலை செய்ய முயன்றவர். கல்யாணம் , காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும், நீலப்படுதா கட்டி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். சினிமா வாய்ப்புக்காக எந்த தயாரிப்பாளரைப் போய்ப் பார்த்தாலும் 'ஏம்பா உன் வீட்டுல கண்ணாடியே இல்லையா' என்று அவமானப்படுத்தப் பட்டவர். அறுபதுகளில் அவர் ஏறாத நாடக மேடைகளே இல்லை. நகைச்சுவையில் உச்சம் தொட்டவர். ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் தவிர்க்க இயலாத நகைச்சுவை நடிகர். பெட்டி நிறைய பணம் சேர்த்து, அம்மாவை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கலாம் என்று செல்லும்முன்னே, அம்மா மயானம் அடைந்த செய்தி அறிந்து மூர்ச்சையானார். சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நேரம், சொந்தங்கள் அனைத்தும் சிறை சென்ற போதும், கலங்காமல் தொழிலில் கவனம் செலுத்தினார். பாலசந்தரால் நவரசங்களையும் நடிப்பில் வெளிப்படுத்திய கலைஞன் - நாகேஷ் அவர்கள்!
நான் வரைந்த திரு.நாகேஷ் ஓவியம் இங்கே..

 

10455693_872524076093585_788912545462315

  • கருத்துக்கள உறவுகள்

கி.பி.1004 முதல் 1010 வரையிலான காலகட்டத்தில் ராஜராஜ சோழனால்கட்டப்பட்டது இந்த தஞ்சை பெரிய கோயில்.
கலசத்தைத் தாங்கி நிற்கும் கல் 36 அடி சுற்றளவு கொண்டது. அதனால் காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை கலசத்தின் நிழல் அந்தக் கல் மீதே விழுந்து விடும். அதற்கு முன்னும் பின்பும் நிழல் காம்பவுண்டுக்கு வெளியே போய்விடும்.
1962 -ஜூன் 1 -ந்தேதி எனது 19 -ஆவது வயதில் வரைந்த ஓவியம். அப்போது ஓவியக்கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன்.
நான் சென்ற போது நாள் முழுதும் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. ஆகவே கலச நிழல் எங்காவது தரையில் விழுகிறதா என்று பார்க்க வாய்ப்பு கிடைக்க வில்லை.
மங்களாம்பிகா ஓட்டலில் நாள் ஒன்றுக்கு 4 ரூபாய் வாடகையில் அறை எடுத்து குளித்து தயாராகி காலை 6.30 மணிக்கு துவங்கி பிற்பகல் 2.30 மணி வரை ஒரே மூச்சாக வரைந்து முடித்த ஓவியம்.

 

10842022_926673617345297_757104143973733

  • தொடங்கியவர்

கே.பி.சார் விடைபெற்றுக்கொண்டார்.
நடிப்புலக வாழ்க்கையில் சிவாஜி, எம்.ஜி.ஆர் தொட்ட எல்லையை இயக்குநராகத் தொட்ட மேதை...60 ஆண்டுகளுக்கும் மேலாக நாடகம் - திரை உலகம் - சின்னத்திரையில் ஆட்சி செய்தவர்..இவர் வாங்காத விருதுகள் - பட்டங்கள் எதுவும் இல்லை. 
திருவாரூர் அருகில் நல்லமாங்குடியில் கர்ணம் கைலாசத்தின் செல்லப் பிள்ளையாகப் பிறந்தார்.. வெள்ளைக்காரக் கலைக்டரிடமே ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டுவார் தந்தையார்.
4 பெண்கள், 2 பிள்ளைகள்.ஒரே ஜமுக்காள விரிப்பில் மொத்தக் குடும்பம் தூங்க வேண்டும். எனக்கு என்று பாய் , தலையணை, போர்வை எப்போது கிடைக்கும் ?என்று ஏங்கிய சிறுவன்..
12 வயதிலேயே 'நாட்டர்டேம் கூனன்' வேடமேற்று பரிசு தட்டிச் சென்றார். பி.எஸ்.ஸி-யில் முதல் வகுப்பில் தேர்ச்சி...1949 -50 முத்துப்பேட்டையில் ஆசிரியர்.
1951 -64 ஏஜிஎஸ் அலுவலகத்தில் பணி. அங்கேயே 'மேஜர் சந்திரகாந்த்' நாடகம் ஆங்கிலத்தில் எழுதி ஹீரோவாக நடித்தார். 
ராகினி ரிக்ரியேஷன்ஸ் குழு துவக்கி - நீர்க்குமிழி - மெழுகுவர்த்தி- சர்வர் சுந்தரம் -'மேஜர் சந்த்ரகாந்த்' -எதிர்நீச்சல்- நவக்கிரகம் - நாடகங்கள் நடத்தி சென்னையைத் கலக்கினார். 
நீர்க்குமிழி - யில் துவங்கி 100-க்குள் மேற்பட்ட படங்களில் இயக்குநராக எழுத்தாளராக - பங்களிப்பு.
கமல்,ரஜினி, சுஜாதா, படாபட் ஜெயலட்சுமி, ப்ரியா, சரிதா, பிரகாஷ்ராஜ், விவேக்,சுஹாசினி- என பெரிய பட்டாளத்துடன் நாகேஷ், மேஜர், சௌகார் - என எண்ணற்ற கலைஞர்கள் இவரால் பட்டை தீட்டப்பட்டனர். அடியேனும் அதில் ஒருவன்.
1970-ல் அதிக பட்ச டென்சனில் மாரடைப்பு ஏற்பட்டு 6 மாதம் படுக்கை. அப்போது சத்தியம் செய்தார். இனி சிகரெட் தொடுவதில்லை- பிஸி நடிகர்கள் எனக்குத்தேவையில்லை -புது முகங்கள் போதும்- படத்தில் ஏதாவது ஒரு செய்தி சொல்ல வேண்டும் - ஆணாதிக்கம் மேலோங்கியுள்ள உலகில் என் படங்கள் இனி பெண்மையைப் போற்றும் விதமாக இருக்க வேண்டும்.. 
கடைசி வரை இவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்த
இந்த முடிவை கடைசி வரை காப்பாற்றினார்.
சொல்லத்தான் நினைக்கிறேன் - அக்னிசாட்சி - சிந்துபைரவி - என் வாழ்க்கையில் மறக்க முடியாத அவரது படைப்புக்கள் !!!!

1979739_906772609335398_7388054631473922

  • தொடங்கியவர்

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். ஓவியக்கல்லூரி படிப்பு முடித்து நடிக்கத்தொடங்கி 7 ஆண்டுகள் ஓடிவிட்டன.
மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் நாடகக்குழுவுடன் மும்பைக்குச் சென்று 4 நாடகங்கள் ஷண்முகானந்தா ஹாலில் போட்டோம்.
பகல் பொழுதில் குடும்ப நண்பர் டி.எஸ். மகாதேவன் அவர்கள் - துறைமுகத்தில் கப்பல் வடிவமைக்கும் பணியில் இருந்த பாலக்காட்டுக்காரர் - மகன் சுவாமி வழிகாட்ட, கொலாபா பகுதியில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டிடத்தின் 13-வது மாடியிலிருந்து மும்பை நகரத்தின், பரந்து விரிந்த காட்சியை, ஸ்கேல் பயன்படுத்தாமல் 3 மணி நேரத்தில் வரைந்த, பென்சில் ஸ்கெச் இது. வரைந்த ஆண்டு 1972.

1374193_930252503654075_7201155599061371

  • தொடங்கியவர்

1962- மே மாதம் 27-ந்தேதி - ஓவியம் : அக்னிவீரபத்ரர் - அகோரவீரபத்ரர் -சிலைகள்.....

ஓவியக்கலை கல்லூரி 3-ம் ஆண்டு கோடை விடுமுறையில் உடன் பயின்ற நண்பர் மதுரை சந்திரசேகர் வீட்டில், 4 நாட்கள் தங்கி, அவரும் நானும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் - 1000 கால் மண்டபத்திலுள்ள சிலைகள் -திருமலை நாயக்கர் மகால் - திருப்பரங்குன்றம் - தெப்பக்குளம் என்று மணிக்கணக்கில், வண்ண ஓவியங்கள்- ஸ்கெச்கள் செய்தோம்.

சொக்கநாதர் சந்நதி எதிரில், அக்னிவீரபத்ரர் - அகோரவீரபத்ரர் -

அடுத்த மண்டபத்தில், ருத்ர தாண்டவம் - பத்ரகாளி சிலைகள்...

காலை 8 மணிக்கு, சிற்றுண்டி முடித்து வந்து உட்கார்ந்து மாலை 6 மணி வரை, சுமார் 10 மணி நேரம் வரைந்த ஓவியம் இது.

12 மணிக்கு, விளக்குகளை அணைத்து விட்டு கோயில் கதவுகள் எல்லாவற்றையும் இழுத்துப் பூட்டிவிட்டுப் போய் விடுவார்கள். மாலை 4 மணிக்கு கதவுகள் திறக்கப்படும். கும்மிருட்டில், நானும் சந்திரனும் பகல் உணவைத் தவிர்த்து, தொடர்ந்து வரைந்து கொண்டிருந்தோம்.

சந்திரனின் பெரியம்மா - தன் ஒரே மகனுடன் - 5,6 குழந்தைகள் உள்ள தங்கை வீட்டுக்கு வந்து , அத்தனை குழந்தைகளையும் பாசம் காட்டி வளர்த்த

புண்ணியவதி .....

கோயிலுக்குள், பசியில் பிள்ளைகள் இருக்கும் என்று யோசித்து ரெண்டு பொட்டலம் சாம்பார் சாதம், தயிர் சாதம் தயார் செய்து எடுத்து வந்து, உள்ளே அனுமதிக்க மறுத்த கோவில் காவலருடன் சண்டையிட்டு - பிள்ளைகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும் என்று மிரட்டி - 'விக்கட் கேட்'- வழியே உள்ளே நுழைந்து, இருட்டில், ஒவ்வொரு மண்டபமாக எங்களைத் தேடி, கண்டுபிடித்து

பசியாற்றிய தாய் அன்பை, இப்போதும் நினைத்து கண்கலங்குகிறேன்....

10929148_930936120252380_405148362900039

  • தொடங்கியவர்

1964 -ஜூன் 12 -ந்தேதி - வெள்ளிக்கிழமை ..
காந்தி மண்டபத்தையும் கடல் அலைகளையும் ஓவியமாகத் தீட்ட கன்யாகுமரிக்கு நண்பர் சந்திரசேகருடன் சென்றேன்.
வழியில் நாகர்கோயிலிலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள கோட்டாறு-பரக்கைரோடு சந்திப்பில், சலூன் கலைஞர் உதவியுடன் ரூ.1.50 வாடகையில் ஒரு அறை பிடித்து தங்கி இயற்கைக் காட்சிகளை வரைந்தோம். சென்னையில் போக்குவரத்துத்துறையில் காவலராக இருந்தவர், நாகர்கோயிலைச் சேர்ந்த நண்பர் அண்ணாமலை.எதிர்பாராமல் அவரை அங்கு சந்திக்க, ஓவியம் தீட்ட, ஏற்ற இடங்களை அவர் காட்டியதுடன் அன்று மாலை, கீத்துக்கொட்டகை டீ கடை ஒன்றுக்கு, எங்களை அழைத்துச் சென்று, 15 பைசா செலவில் எள்ளுருண்டை, கைமுறுக்கு, தண்ணீர் கலக்காத பசும்பால் வாங்கிக் கொடுத்து உபச்சரித்தார்.
அடுத்த நாள், குமரி முனை சென்று,
கடல் நீரில், குளிக்க வசதி செய்துள்ள
இடத்தில்(Bathing Ghat) அமர்ந்து
காந்தி மண்டபத்தின் தோற்றத்தை வரைந்துவிட்டு, அலைகளின் ஆக்ரோஷ
மோதல்களையும் வரைந்தேன்.
ஒரு வேடிக்கை என்னவென்றால், குமரி
முனையில், தர்மச்சத்திரத்தில் தங்கி, எந்த இடத்தில் அமர்ந்து காந்தி மண்டபத்தை வரைந்தேனோ, அதே இடத்தில் 1970 -மே மாதம் 2- ந்தேதி 'திருமலை தென்குமரி'- படத்தில் நானும் குமாரி பத்மினியும் நடித்த காதல் காட்சியைப் படமாக்கினார் அருட் செல்வர் ஏ.பி.நாகராஜன் அவர்கள்.
தாயின் பரிவு காட்டிய காலத்துக்கு ஒரு கும்பிடு போட்டேன்.

10486219_964637463548912_165475321842299

 

  • தொடங்கியவர்

கடவுளை மற, மனிதனை நினை என முழங்கியவர். தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பை தன் இரண்டு கண்களாக கருதியவர். பெண் அடிமைத்தனம் ஒழிந்து, அவர்கள் கல்வி கற்று முன்னேற போராடியவர்.
95 வயதிலும் குழாய்வழி பக்கெட்டில் சிறுநீர் கழித்தவாறு பட்டிதொட்டியெல்லாம் சென்று தமிழர்களை பகுத்தறிவூட்ட பாடுபட்டவர். 

நான் வரைந்த அவரது ஓவியம் இங்கே!

 

10801853_894259813920011_574822164454886

  • 2 months later...
  • தொடங்கியவர்

15-2-1964 -அன்று ஓவியக்கல்லூரி மாணவர்கள், கலாச்சார சுற்றுப் பயணமாக அஜந்தா, எல்லோரா குகைகள் சென்று , கி.மு.2 - ம் நூற்றாண்டில் துவங்கி கி.பி. 7-ம் நூற்றாண்டில் முடிவடைந்த ஓவியங்கள், சிற்பங்களைப் பார்த்து பிரம்மித்தோம்.
இங்கு உள்ள குகை ஓவியங்களும் சிற்பங்களும், பெரும்பாலும் புத்தர்
பிறந்ததிலிருந்து ஞானோதயம் பெற்றது
வரையிலான சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளன.
அஜந்தா குகைகளில் எண் -1,2,17 - ஆகியவற்றில், நிறைய சுவர் ஓவியங்கள்
பாதிக்கு மேல் அழிந்து விட்டன. இயற்கை மூலிகைகள், இலைகள்,பூக்களின் சாறுகளைக்கொண்டு - பதப்படுத்தப்பட்ட சுவரில் தீட்டப்பட்ட இவை, 2000 ஆண்டுகள் தாக்குப் பிடிப்பது சாதாரண விஷயமல்ல.
எல்லோராவில் 34 குகைகள். 13 குகைச்சிற்பங்கள், புத்த மதத்தைச்
சொல்கின்றன. மீதியள்ளவை இந்து மதக் கடவுள் கதைகளை விளக்குபவை.
இவற்றில் கைலாச நாதர் குகைக்கு ஈடாக உலகில் எங்கும் இருக்க முடியாது.
கோபுரம் 90 அடி உயரம். உள்ளே அலங்காரத்தூண்கள் ,மேல்கூரையில் தொங்கும் - காலைத்தூக்கி ஆடும் நடராஜர் சிலை - நினைத்தே பார்க்க முடியாத உலக அதிசயம்... கி.பி.6-ம் நூற்றாண்டுச் சிற்பங்கள் இவை.
இந்த கைலாச நாதர் கோயில் கோபுர வடிவமும், மாமல்லபுரம் கடற்கரை கோயில் வடிவமும் ஒன்று போல்உள்ளன.
பல்லவர் காலத்தில் கலாச்சார பரிவர்த்தனை இருந்ததை இவை உறுதி
செய்கின்றன.
மலையில், சில மைல் நீள அகலத்தில்
வெடிப்பு இல்லாத பாறைப்பகுதியைத்
தேர்வு செய்து, ஒரே கல்லில் பல குகைகள், அவற்றின் பிரகாரங்கள் - உள்ளே மண்டபம் - அதையடுத்து
மூலஸ்தானம் , அங்கும் சிலைகள் !!....
அரசு இலவச ரயில் பயணத்துக்கு
வழி செய்தது. மாணவர்களிடம் சுற்றுலாவுக்கு தலா ரூ. 20/- கட்டணம்
வசூலிக்கப்பட்டது. போகின்ற ஊர்களில்
சுகாதார வசதியற்ற சத்திரங்களில் தங்கி
சில சமயம் ரயில்வே பிளாட்பாரங்களில்
தூங்கி - 20 நாட்கள், பம்பாய்- அகமதாபாத்- அஜந்தா - எல்லோரா -ஹைதராபாத் சுற்றுலாவை வெற்றிகரமாக முடித்தோம். குழுவுக்கு நான்தான் தலைவர். சிக்கனமாகச் செலவு செய்து, மாணவர்களிடம் வசூலித்த 20 ரூபாயில் ஆளுக்கு 4 ரூ திருப்பித் தந்தபோது, என்போன்ற ஏழை மாணவர்களுக்கு அன்று இன்ப அதிர்ச்சி !!.

 

 

 

 

 

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

வேலு நாச்சியார் பிறந்து 26 வருடம் கழித்து 1756-ல் கொங்கு மண்ணில் பிறந்தவர்- தீரன் சின்னமலை. இளம் வயதிலேயே கல்வி,கேள்வி - வில்,வாள், சிலம்பம், குதிரை ஏற்றத்தில் தேர்ச்சி....எல்லாச் சாதியினரும் கூட்டாளிகள்.....
மைசூர் திப்பு ஆட்கள் சேலம், தர்மபுரி, சங்ககிரி பகுதியில் கப்பம் வசூல்...
அவர்களைத் தடுத்து நிறுத்தி -வசூல் தொகையை வாங்கிக் கொண்டு -'சிவன்மலை- சென்னிமலைக்கிடையே - சின்னமலை நான்' என்று திப்புவிடம் சொல் என்றார்..பின் 10,000 வீரர்களுடன் மைசூர் சென்று, திப்புவுடன் கைகோர்த்து, பொது எதிரி வெள்ளையனோடு மோதினார்.
கள்ளிக்கோட்டையிலிருந்து 27,000 வீரர்களுடன் வந்து 2 மாதம் போரிட்ட ஜெனரல் ஹாரிஸ், திப்புவைக் கொன்று
மைசூரைக் கைப்பற்றினான் . ஊர் திரும்பிய தீரன், ஓடாநிலையில் கோட்டை கட்டி படைபலம் பெருக்கினார்..புதிதாய் வந்த கர்னல் மேக்ஸ்வெல் -'கொங்கு நாட்டை நீ வைத்துக்கொள் .
காவிரிக் கரையில், குதிரைப்படை நிறுத்த அனுமதி கொடு' எனக் கேட்க தீரன் மறுத்தார்...1801 -ல் காவிரி ஆற்றுக்குள் மேக்ஸ்வெல் குதிரைப் படை.. சுழலுக்குள்ளும் பாறை இடுக்குகளிலும் குதிரைகள் சிக்கித் தத்தளிக்க - தீரன் அந்தக் குதிரைகளை வெட்டிச் சாய்த்தார்...
1802 -ல் பழிவாங்க, ஓடாநிலை கோட்டையில் முற்றுகைப் போர்..தீரன் கையாள் கருப்பன் சேர்வை தலையை,
மேக்ஸ்வெல்,வாள் பதம் பார்க்க,பாய்ந்து
சென்ற தீரன், இளநி போல், கர்னல் தலையைச் சீவி, கரும்புள்ளி, செம்புள்ளி
குத்தி - கட்டை வண்டியில் தலையை
ஊர் வலமாக எடுத்துச் சென்றார்..
மைசூர், ஜென்ரல் ஹாரிஸ், இப்போது இங்கே...1804 - அரச்சலூர் அம்மன் திருவிழா..3000 வீரர்களுடன் ஹாரிஸ்...
ஷூ காலில் கோயிலுள் சென்று தேரை உடைத்தான்... செய்தி எட்டிட ஒற்றை ஆளாக, எறிகுண்டுகளுடன் குதிரையில் வந்து, அத்தனை வீரர்களையும் எறிகுண்டால் தாக்கி,விரட்டினார் தீரன்.
அவமானப்பட்ட ஹாரிஸ் -சென்னையிலிருந்து 70 பீரங்கிகள்- கள்ளிக்கோட்டையிலிருந்து, யுத்த
தளவாடங்களுடன் வந்து, அதிகாலை
4 மணிக்கே கோட்டையைத் தாக்கி
உள்ளே நுழைந்தால்.! .ஈ காக்கை அங்கு
இல்லை. அறுந்து போன செருப்புகளின்
அடிப்பகுதியில் -மைசூரில் கைதாகி அப்ரூவரான,தீரனின் வலது கரம் வேலப்பன்- உளவாளியாக இருந்து- அவ்வப்போது கள்ளிக் கோட்டையிலிருந்து தீரனுக்கு ரகசியமாகச் செய்தி அனுப்பிய கடிதங்கள்.!! அடுத்த கணம், செருப்புத் தைத்த பொல்லான், ரகசியம் சொல்ல மறுக்க, கோட்டை மீது வைத்து சுட்டுக் கொன்றனர்...அடுத்து வேலப்பன் தலை தரையில் உருண்டது....
சின்னமலை எங்கே ? பழனி கருமலைப் பகுதியில் தலை மறைவு.அங்கே தேடுதல் வேட்டை.. திண்டுக்கல் ஷேக் ஹுசைன் வீட்டு திருமணத்திலும் மாறு வேடத்தில் தப்பி விட்டார்.. வெறிநாயைப் போல் வெள்ளையர் தேடல்.. காட்டுக்குள் ஒரு குடிசை !! நல்லான் சமையல். அவனை நம்பி, ஆயுதங்களை வாசலில் வைத்துவிட்டு சாப்பிட இலையில் உட்கார, 200 வீரர்கள் சுற்றி வளைத்து கைது.. துரோகி நல்லான் காட்டிக் கொடுத்துவிட்டான். 1805 -ஜூலை
31-ந்தேதி சங்ககிரிக்கோட்டை
உச்சியில், தம்பி கிலேதருடன், தீரன் சின்னமலை நாட்டு விடுதலைக்காக தூக்குக் கயிறை முத்தமிட்டார் !!

11174818_1003539979658660_78821466753512

  • 1 month later...
  • தொடங்கியவர்

1972 -ம் ஆண்டு.
விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை இடையில் ஒரு பெண் கார் ஓட்டிச்
செல்கிறார். பக்கத்தில் கணவன்.
பொறியியல் படித்தவர். மதுரை கோயில்கள் - திருமலை நாயக்கர் மகால் - ஊரைச்சுற்றியுள்ள தடாகம் -அல்லி - தாமரை -அன்னப்பட்சிகள் -வாத்துக்கள் - ஆடு மாடுகள் - வயல் வெளி தோப்புக்கள்- தூரத்து மலைகள் - என மதுரைக்கு - தன் பேனாவிலும் மையிலும் உயிர் கொடுத்தவர். மனைவி ஓவியம், இலக்கியத்தில் எம்.ஏ.தங்க மெடல் வாங்கியவர். வாரத்தில் 2 நாள் காரில் சென்னையிலிருந்து மதுரை சென்று பெற்றோருடன் இருந்துவிட்டு திங்கள் அதிகாலை புறப்பட்டு சென்னை வந்து விடுவார்கள்.....
நெடுஞ்சாலையில் கார், மிதந்தவாறு
பறந்து கொண்டிருந்தது. திடீரென பக்கவாட்டில் ஊளை யிடும் சத்தம்.. மோட்டார் பைக்கில் 4 இளைஞர்கள் !! பக்கவாட்டில் -காருக்குப் பின்னால் - மாறி மாறி, கார் ஓட்டும் பெண்ணைப்பார்த்து, ஏளனக் காட்டுக் கூச்சல் !!!
பொறுமையிழந்த பெண்மணி கார்
ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்த
120 கி.மீ. வேகத்தில் கார்...எதிரே பாலத்தில் 'எல்' வளைவு ! கட்டுப்பாடிழந்த
கார் 40 அடி பள்ளத்தில் !!
கணவர் ரத்த விளாறியாகக் கிடக்கிறார்.
மனைவிக்குச் சிறு சிறாய்ப்பு கூட இல்லை..மருத்துவ மனை.. சிகிச்சை... கணவர் காயங்களுக்கு மருந்து .. மயங்கிக் கிடந்த மனைவி கண் விழித்தார்.கை கால்களை அசைத்தார் !எதுவும் அசையவில்லை.... 'க்வாட்ரிப்ளீஜியா'!- கழுத்துக்கு கீழே
இனி என்றும் செயல்பாடு இராது..
35 ஆண்டுகள் ?! மனைவிக்கு டாய்லட், குளியல் - உடை - தலை வாரி ஜடை-
உணவு - உறக்கம் அனைத்துக்கும்
கணவர் உதவினார் .
இவருக்கு - கண்'ரெட்டினா' பிரச்சனையில்- கண் பார்வை மங்கிக் கொண்டே வர -மனைவி, அசையாத
உடம்புடன், கணவருக்கு புத்தகங்கள்
படித்து உதவினார்... கடைசி பார்வை வரை, பூத கண்ணாடி உதவியுடன் கணவர் ஓவியம் தீட்டினார்....
2008 -ல் பெண் பறவை பறந்து போய் விட்டது....இவருக்கு பார்வையும் போய்விட்டது...2 ஆண்டுகளுக்கு முன் ஓவியர் மணியம் செல்வனும் நானும் அவரைச் சந்திக்க வீடு தேடிப்போனோம்.
வாசலில் நின்று வரவேற்றார்... மனைவிக்கு, மதுரை குண்டு மல்லி பிடிக்கும் என்று, எனக்காக வாங்கி வைத்திருந்து, மனைவி படத்திற்கு
சூட்டச்சொன்னார்... மிளகாய் பஜ்ஜி - வாழைக்காய் பஜ்ஜி பறிமாறினார். விடை
பெறும்போது, நீங்கள் அமருங்கள் .. சிரமம் வேண்டாம் என்றோம்.
'விருந்தாளிகளை வாசல் வரை சென்று
அனுப்ப வேண்டும்' என்று மனைவி சொல்லியிருக்கிறார் என்று, தடுமாறி
வாசல் வரை வந்து வழியனுப்பினார்... டிரைவர் பேரைக்கேட்டு,, 'தமிழ் ! சாரை
இங்க கூட்டிட்டு வந்ததுக்கு நன்றிப்பா'-
என்று கூறி கையசைத்தார்...
அந்த மாமனிதன் : ஓவியர் மனோகர் தேவதாஸ்.
அந்த தேவதை : மகிமா ...
அவரது ஓவியங்களில் ஒன்றை இணைத்துள்ளேன்.

11703056_1010324048980253_58765889505382

Thanks: FB

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.