ஈழத்தின் ஓவிய, சிற்ப ஆளுகை ரமணி மறைவு !
29 டிசம்பர் 2025
யாழ்ப்பாணத்து ஓவியர்களில் நாம் மிகவும் இரசித்த ஓரு ஓவியர் ரமணி. வழமையான கோட்டோவியப் பாணிகளில் இருந்து, மாற்றாக நீளக் கோடுகளால் இவர் உருவாக்கிய ஓவியங்கள் எம்மை அதிகம் கவர்ந்தவை. அதுவெ அவருக்கான ஓவியத் தனித்துவமாகவும் அறியப்பட்டிருந்தது. தமிழகத்தில் ம.செ.எனும் மணியன் செல்வனின் ஓவியங்கள் எவ்வாறு அவரை தனித்து அடையாளப்படுத்துமோ, அதுபோலவே ரமணியின் ஓவியப்பாணி வழக்கமான ஓவியங்களில் இருந்து அவரைத் தனித்து அடையாளங்காட்டும்.
அவரது தமிழ் எழுத்து வடிவங்களும் கூட தனித்துவமான தன்மையில் இருக்கும். கணினியிலான தமிழ் எழுத்து வடிவங்களுக்கு முன்னைய காலத்தில், இலங்கையில் வெளிவந்த பல வெளியீடுகளிலும், பத்திரிகைகளிலும், தலைப்புக்களுக்காக அவரது நளினமான எழுத்து வடிவங்கள் ரமணியை அடையாளப்படுத்தின.
ரமணியின் ஓவியங்களை மேலும் ரசிக்கச் செய்தவர், எம்முடைய ஓவிய ஆசிரியர் கிருஷ்ணதாசன். ஒவியர் ரமணிக்கு நெருக்கமான அவர் வரையும் ஓவியங்களிலும், எழுத்துக்களிலும், ரமணியின் ஓவியப்பாணி வெளிப்படும். அவரது அதீதமான அவரது சிலாகிப்புக்களும், ரமணியின் ஓவியங்கள் மீதான எமது ரசணை அதிகமாவதற்கு ஒரு காரணமெனலாம்.
ரமணி வெறும் ஓவியர் மட்டுமல்ல தேர்ந்த ஒரு சிற்பியும் கூட என்பது பின்னால் நாம் தெரிந்து கொண்ட விடயம். யாழ் இந்துக்கல்லூரி ஆறுமுக நாவலர் பெருமானின் உருவச்சிலை , தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் அமைந்துள்ள சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் உருவச்சிலை, எனப் பல பெரியார்களின் உருவச்சிலைகளை உருவாக்கிய பெருமைக்குரிய கலைஞர்.
அன்னாருக்கு எமது அஞ்சலிகள் !
https://4tamilmedia.com/menu-essay/culture/ramani
https://www.facebook.com/share/p/1FqsnUuJCN/?mibextid=wwXIfr
முகநூலில் இருந்து..
ஈழத்து ஓவியக் கலையின் முகவரி, தன்னிகரற்ற சிற்பி, எம்மையெல்லாம் கலைப் பாதையில் வழிநடத்திய மாபெரும் ஆசான் திருவாளர் வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம் (ஓவியர் ரமணி) அவர்கள் இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டு ஆழ்ந்த துயரில் மூழ்கியுள்ளேன்.
ஓர் ஆசானாக...
ஆறாம் வகுப்பிலிருந்தே எனக்கு ஓவியத்தின் அரிச்சுவடியைக் கற்றுத் தந்தவர். வண்ணங்களோடும் கோடுகளோடும் நான் உறவாடக் காரணமானவர். ஒரு மாணவனாக அவரிடம் நான் கற்ற கலைப்பயிற்சிகள் என் வாழ்நாள் சொத்தாகும்.
அவரது கைவண்ணத்தில் உருவான சிலைகள் வெறும் கற்சிலைகள் அல்ல அவை எமது மண்ணின் வீரத்தையும் வரலாற்றையும் பேசும் சாட்சிகள்.
நெல்லியடி மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட மில்லர் சிலை மற்றும் தீருவிலில் அமைக்கப்பட்ட போராளிகளின் சிலைகளை அவர் வடித்திருந்தார், குறிப்பாக எமது பாடசாலையில் உருவாக்கப்பட்ட மில்லர் சிலைவடிப்பின் போது அவருக்கு ஒத்தாசையாக இருந்த மாணவர்களில் ஒருவனாக நானும் இருந்தேன் என்பது என் வாழ்வின் பெரும் பாக்கியம்.
யாழ் இந்துக்கல்லூரியில் உள்ள ஆறுமுக நாவலர் பெருமான், தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோவிலில் உள்ள தங்கம்மா அப்பாக்குட்டி, சேர் பொன் இராமநாதன் மற்றும் எத்தனையோ மாமனிதர்களின் உருவங்களைச் சிலைகளாகச் செதுக்கி அழியாத புகழை ஈழ மண்ணில் நிலைநாட்டியவர் அவர்.
ஈழத்து இலக்கிய உலகில் சிறந்த அட்டைப்படங்களை வரைவதில் அவர் ஒரு சகாப்தம். அவரது விளக்கப்படங்களும், அட்டைப்படங்களும் பல நூல்களுக்கு உயிரூட்டின. முன்னாள் அழகியல் உதவி கல்விப் பணிப்பாளராகவும், இராமநாதன் நுண்கலைப் பீட வருகை விரிவுரையாளராகவும் அவர் ஆற்றிய பணிகள் ஈழத்துக் கலைப்பரப்பில் என்றும் நிலைத்து நிற்கும்.
எனது பெருவிருப்பிற்குரிய குருநாதர் “ரமணி சேர்” அவர்களின் இழப்பால் துயருறும் கலையுலகத்தினருக்கும், எனது அருமை பள்ளித்தோழர்களான அவரது புதல்வர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்தக் கலை மேதையின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
ஓம் சாந்தி!
By
கிருபன் ·