Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உபச்சாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உபச்சாரம்

பொ.கருணாகரமூர்த்தி

அதொன்றும் வழக்கமான விஷயமல்ல. ராகுலனை செஃப்பே(முதலாளி) வலியக்கூப்பிட்டு

“உனக்கின்னும் ஒரு கிழமை ஊர்லாப்(விடுமுறை) இருக்கு……… மேலதிமாய் இன்னும் ஒரு கிழமை தாறன்……. இந்த மாதம் நீ வெளியில எங்காவது போக விரும்பினால் போய்வரலாம்………… ”என்றான்

“ஓ……..ஜா…..!”

மனதுள் சந்தோஷப்பனி தூவ அதைத்தாங்கமுடியாத தவிப்புடன் ராகுலன் விசிலும் வாயுமாய் வீடுவந்து சேர்ந்தான். இரவுமுழுதும் மனைவி லதாவுடன் ஃப்ரான்ஸுக்குப் போவதா, இல்லை சுவிஸுக்குப் போவதா என விவாதித்தும் ஒரு தீர்மானத்திற்கும் வரமுடியவில்லை. சுவிஸில் லதாவின் அண்ணன் குடும்பமிருக்கிறது. ஃப்ரான்ஸிலோ ராகுலனுக்கு உறவுகள் ஏராளம்.

கடைசியில் என்றும் போல் லதாவே வென்றுவிட எண்ணிறந்த பலகாரவகைகளாலும் அண்ணனின் குழந்தை மயூரனுக்கு வாங்கிய ஏராளம் பரிசுப்பொருட்களாலும் டிறங் நிரம்பி வழிய வழிய அவர்களது மகிழுந்து அஷ்டமி,நவமி, மரணயோகம், கரிநாள் தவிர்த்த ஓர் நல்லோரையில் ஷூரிச் நோக்கிக் கோலாகலமாய் புறப்பட்டது.

எட்டு மணிநேரச்சவாரிக்களைப்போடு ஷூரிச்சில் அண்ணன் வீட்டுவாசலை அடைந்தும் உள்ளே அடிஎடுத்து வைக்க மேலும் நாலு மணிநேரம் நற்றவமியற்ற வேண்டியிருக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அண்ணனும் அண்ணியும் வேலைக்குப்போனதாக ஏப்றன் கட்டிக்கொண்டு கண்ணாடி ஜன்னல்கதவுகளைத் துடைத்துக்கொண்டு நின்ற அயல்வீட்டுக்காரி செப்பினாள்.

“அப்போ அவர்கள் பேபி….? ”

“எங்காவது ஹோர்ட்டில் (குழந்தைகள் பராமரிப்பகம்) விட்டிருக்கலாம்!.”

இவர்கள் நிலமையை அறிந்தும் சுவிஸ்க்காரி அந்நியரை அதுவும் தோல்கறுத்த வெளிநாட்டுக்காரரை தன் வீட்டுக்குள் அழைத்து ‘உட்காருங்கோ’ என்று உபசரித்துவிடுவாளா என்ன…….

தன்பாட்டுக்குக் கதவைச்சாத்திக்கொண்டு உள்ளே போனாள்.

‘அண்ணியும் வேலைக்குப்போய்விடுவாள்…… பகலில் யாருமிருக்கமாட்டோம்’

என்பதை முதலிலேயே சொல்லித்தொலைத்திருந்தால்……. இரவு வந்து சேரும்படியாகப் புறப்பட்டிருக்கலாம். இப்படிக் கைக்குழந்தையுடன் தெருத்தூங்கவேண்டியிருந்திராது. “சுவிஸுக்குவருகிறோம்.” என்று ரெலிபோன் பண்ணியபோதே அண்ணன் உள்ளுக்கிழுத்தது ஏனென்று இப்போதுதான் லதாவுக்கு மெல்ல ஓடி வெளித்தது, எனினும் ராகுலனை மேலும் குழப்பவேண்டாமேயென்று சமர்த்தாயிருந்தாள்.

ராகுலன் லதாவைக் கல்யாணம் கட்டுவதற்கு முன் அவனை ஷூரிச் ரெயில்நிலையத்துக்கே வந்து காத்துக்கிடந்து வார்த்தைக்கு வார்த்தை “அத்தான்………அத்தான்………” என்று அன்பொழுக அழைத்து செங்கம்பளம் விரியாத குறையாக அழைத்துப்போனதும் இதே மைத்துனன்தான்.

பயணத்திற்கான ஏற்பாடுகளைப் பண்ணியதில் முதலிரண்டுநாட்களும் இருவருக்குமே சரியான தூக்கமில்லை. பயணத்தின்போது உட்கார்ந்தது போதாதென்று மேலும் தொடர்ந்து காரில் அமர்ந்திருக்க இருக்க முதுகுத்தண்டுவடம் ஜிவ்ஜிவ்வென்றுவலித்தது.

கொஞ்சம் நடந்து திரிந்தால் நல்லாயிருக்கும் போலிருந்தது. ஆனாலும் களைப்பும் அசதியும் அனுமதிப்பதாயில்லை.

குளிர்வேறு. மகிழுந்தைச்சூடுபண்ண அடிக்கடி அதை இயங்க வைக்க வேண்டியிருந்தது.

ஓயும் உடம்பை எப்போதான் கொண்டுபோய் கட்டிலில் எறிவோம் என்றிருந்தது.

 

அவர்கள் எப்போதுதான் வருவார்கள்………. இது எப்போசாத்தியமாகும் என்று தெரியாமல் வெட்டிக்கு வீதியில் காத்திருப்பது இரத்தஅழுத்தத்தை உச்சத்திற்குக்கொண்டுபோக குழந்தை வேறு பசியெடுத்து அலறத்தொடங்கினாள். அவளுக்குப் பால் கரைக்க வேண்டிய வெந்நீரும் தீர்ந்துவிட்டிருந்தது.

ஒரு உணவகத்தைத் தேடிப்போய் கேட்டபோது அவன் உள்ளே பைப்பில் பிடித்திருக்கவேணும் “ வெந்நீர் ” என்று சொல்லிக்கொண்டு வந்து கொடுத்தான். அச்சூட்டில் மா கட்டிபட்டுக் கரைய மறுத்தது.

“ வேறேதாவது கடையில கேட்டுப்பார்ப்பமே….. ” என்று காரைக்கிளம்பவும் ஒருவாறாக விருந்தோம்புவார் வண்டியும் வந்து லான்ட் பண்ணியது. ”

இவ்வளவு நேரம் தெருவில் காக்கவைத்ததிற்காக ஒரு ‘சொறி’யாவது சொல்லவேணுமே…… ஊஹூம்! “ இத்தனை மணிக்கு வந்துசேர்வோம் என்று உறுதியாக முன்பே சொல்லாதது உங்களது தப்புத்தான் ” என்றார்கள்.

அதையிட்டு ஒருவிவாதம் நடத்த அவர்களிடம் மேலும் சக்தியில்லை. மௌனம் காத்தனர்.

வழியில் சாப்பிடுவதற்காகப் பண்ணிக் கொண்டுவந்த சான்ட்விச்சுகள் நிறைய எஞ்சிக்கிடந்தன. அவை எல்லோருக்கும் இரவுச்சாப்பாட்டிற்குப் போதுமானதாக இருந்தன.

லதா எடுத்துச்சென்ற விளையாட்டுச்சாமான்கள், உடுப்புகள், பட்சணங்கள் அண்ணாவின் குழந்தை மயூரனை கவர்ந்துவிட அவளுடன் ஏதோ பலகாலம் பழகியவன் ‘அத்தே அத்தே’ என்று இழைந்தான்.

மறுநாள் காலை அண்ணன் வேலைக்கப்புறப்பட தானும் உடுத்து வெளிக்கிட்டுக்கொண்டு வந்த அண்ணியார் சுகுணா லதாவிடம் சொன்னாள்:

“ நானும் ஓரிடத்தை போகவேணும்…… வரக்கொஞ்சம் செல்லும். ”

ஓரிடத்துக்கு என்றால்…… ‘அதைப்பற்றி மேலே கேளாதே’ என்பதுதான் அதற்குரிய உளவியல். இது லதா அறியாததா?

அவர்கள் குழந்தை மயூரனையும் இழுத்து வைத்துச் சட்டையை அணிவிக்கையில் மட்டும் லதா சொன்னாள்:

“மயூரன் நிற்கட்டும் அண்ணி நான் பார்த்துக் கொள்ளமாட்டனே…… ”

“ வேண்டாம் லதா அவன் பயங்கரக்குழப்படிவிடுவன், நீங்கள் பார்க்கமாட்டியள், ஒருவருக்கும் அடங்கான்……… ”

அதற்கு முன்னபின்ன ஒருநாளும் முகம் பார்த்திராமலேயே லதாவைக் கண்டதிலிருந்து அவன் ‘அத்தே அத்தே’ என்று குழைஞ்சு அவளுடன் சேர்ந்த மாதிரியைப் பார்க்க அப்படி அது அடம்பிடிக்கிற குழந்தைமாதிரியே தெரியவில்லை. இயல்பில் குழந்தைகளில் அதீதபிரியமுள்ள லதாவுக்கு மொழுமொழுவென்றிருந்த அவனுடன் விளையாடவேணும்போலவும் ஆசையாயிருந்தது. இருந்தும் அவனையும் அவர்கள் வெளியே இழுத்துக்கொண்டு போவதன் சூத்திரம் முழுவதும் அறியாமல் வற்புறுத்திக்கேட்கவும் தயங்கினாள்.

அவர்கள் புறப்பட்டுப் போனபின்பு குசினியுள் போய்ப்பார்த்தார்கள். நார்முடையொன்றுள் கொஞ்சம் முளைவிட்ட உருளைக்கிழங்கு, புருவமெனக் குனித்தும் வாடியும்போன ஒரு கூர்க்கன் (கெக்கரிக்காய்), அரிஸோனாவுக்கு எழுதி எடுப்பித்தார்களோ ஒரு நெகிழிப்பைக்குள் கோழிகூடக் கொறிக்கத் தயங்கும் ஒரு சுண்டு குறுணல் அரிசி தவிர , வெளியாய் வேறொரு சமைக்கக்கூடிய பண்டமும் இருப்பதற்கான தடயங்கள் புலப்படவில்லை.

குளிர்ப்பெட்டியைத் திறந்து பார்த்தார்கள். யார்சாபமோ ஐஸுடன் ஐஸாய் கல்லாய்ச் சமைந்துபோய் மல்லாக்கக் கிடந்தது ஒரு கோழி , அதுவும் கிறில் பண்ணுவதற்கான மலிவுப்பதிப்பு . அதையங்கிருந்து பெயர்த்தெடுக்கக்கூடிய ஈட்டியோ, கடப்பாரையோ, வேலன்ன ஒருபோர்க்கருவியோ தென்படுகிறதா என்று தேடினார்கள்.

திடீரென கி.செ.துரையின் கதையொன்றில் காலகதியடைந்த தேதி தெரியாத கோழியைச்சாப்பிட்ட ஒருவரின் வயிற்றுள் கடுஞ்சமர்மூண்டு கலக்கி அவரை அவதிப்படுத்திய சம்பவம் ஞாபகம் வரவும்………

அந்த எண்ணத்தை அதிலேயே போட்டுவிட்டு ’மிக்றோஸ் மார்கெட் ’ தேடிப்போய் ஆட்டிறைச்சி மற்றும் இதர மளிகைச்சாமான்கள் வாங்கிவந்து சமைத்துச் சாப்பிட்டார்கள்.

மாலையானதும் அண்ணன்குடும்பம் வந்து சேர்ந்தது. சாப்பாடானதும் அண்ணன் மென்னிருக்கைக்குள் சாய்கோணத்தில் இருந்துகொண்டு ராகுலனிடம் ஜெர்மனியில் தனிநபர் வருமானம், சேமிப்பு சாத்திய அசாத்தியங்கள், நடப்பு வட்டிவீதங்கள், மற்றும் அத்யாவசிய நுகர்ச்சிப்பண்டங்களின் விலைதலைகள் பற்றி உசாவலானார். பின்னொரு கோழித்தூக்கம் போட்டார். அலாம் வைத்ததுபோல் ஏழு மணிக்கு எழும்பிக் குளியலறை போனார். பின் ஜாக்கெட்டை மாட்டினார்.

“எனக்கு ஒரு அலுவலிருக்கு வெளியில.” என்று வெளியேறியவர்தான் எல்லாரும் படுக்கைக்குப்போனதன் மேல் பதினொருமணிக்கு வந்து பூனைமாதிரி ஓசைப்படாமல் மாடியேறிப் போனார்.

மறுநாளும் இதே செயன்முறைகள் நேரசூசிகை போட்டதுபோல் நடந்தேறின. ஆனால் அண்ணியார் சுகுணாமட்டும் கொஞ்சம் மாற்றி தான் தையல்கிளாஸ் ஒன்றுக்குப் போவதாகச் சொன்னாள்.

மூன்றாம்நாள் காலை புறப்படமுதல் அண்ணியார் லதாவிடம் சொன்னாள் : “ மயூரனை கின்டர் ஹோர்ட் ஒன்றில கொஞ்சநாளாய் விடுகிறனாங்கள்…….. புதுசில தனிய நிக்கிறானில்ல அழுகிறான்……. அதுதான் நானும் போய்க்கூட நிக்கிறனான்……..தனிய நிற்கப்பழகிட்டனென்றால் நானுமெங்கையென்டாலும் பார்ட் டைம் ஜொப்புக்குப் போகலாமென்றார் இவர்……… அவரும் தனியாளாய் அடிச்சு என்னத்தைத்தான் மிச்சம் பிடிக்கிறது இந்த நாட்டில இருக்கிற விலைவாசியில…… ”

அன்று மாலை அவர்கள் வந்திறங்கக்கூடிய நேரந்தான்……. ரெலிபோன் அடிக்கிறது. எடுப்பதா விடுவதா என்று லதா குழம்பவும்….. மீண்டும் மீண்டும் மீண்டும் அடிக்கிறது.

ராகுலன் சொன்னான் “போய் எடும் சிலவேளை கொண்ணனாய்கூட இருக்கலாம் ”

போய் எடுத்தால் மறுமுனையில்………

“குறுய்ஸ் கொட்….. நான் சூசாரா…. மன்னிக்கவேணும் அப்போது உன்னிடம் உறுதிப்படுத்திக்கொள்ள மறந்துவிட்டேன்……….துகுணா…….. நீ முன்னர் ஒத்துக்கொண்டபடி அடுத்த வார இறுதிநாட்கள் இரண்டும் என்னுடைய ஷிப்ட் வேலையையும் சேர்த்துச்செய்வாய்தானே….?”

(வியட்னாமோ தாய்லாந்துக்காரி……. வார்த்தைகளை நசித்தும் சப்பியும் மழலை பேசினாள்.)

“மன்னிக்கவேணும் நான் சுகுணாவல்ல….. அவர் வீட்டுவிருந்தாளி. இது சுகுணா வாறநேரந்தான் நீங்கள் அவர் வந்த பிறகு பேசுவது நல்லது. குறுய்ஸ் கொட்…..! ”

சுகுணா அண்ணனைத் திருமணம் செய்தாலோ செய்யாமலிருந்தாலோ நெருங்கிய உறவுக்காரியாதலால் தங்களை ஏகமாய் வரவேற்பாள், உபசரிப்பாள், வாஞ்சையாய் பாந்தமாய் இருப்பாள், கதைப்பாளென்று எண்ணி எதிர்பார்த்து வந்த லதாவுக்கு அவள் ஏதோ கடன்காசைக் கேட்கப் போயிருக்கிறவர்களிடம் பேசுவதுமாதிரி முகங்கொடுக்காமல் கதைக்கிறதும் திருப்பிறதும் பெரும் ஏமாற்றமாயும் அவமதிப்பாயுமிருந்தது, ஆனாலும் ராகுலனிடம் வெளியாகச் சொல்லமுடியவில்லை.

வெளியில் போயிருந்த அவர்கள் வீடு திரும்பவும் லதா அண்ணியாரிடம் சொன்னாள்:

“சூ….சாரா என்று யாரோ போன் எடுத்தார்கள் அண்ணி ”

திடீரென்று அவள் முகம் கலவரமாகியது. மறைத்துக்கொண்டு ஆனால் குரலில் சற்றுப்பதட்டத்துடன் கேட்டாள்:

“எ…எ..எ..என்னவாம்……….? ”

எனக்கு அவள் பேசிய சுவிஸ்ஜெர்மன் ஒண்டும் விளங்கேல்லை…… எதுக்கும் “நீங்கள் வந்தாப்போல எடுங்கோ என்றன்…வைச்சிட்டாள்”என்ற பிறகுதான் அவளுக்கு மூச்சு வந்தது.

உதட்டை வலிந்து மலர்த்தி எமது தலைவி சந்திரிகாவைப் போலொரு சிரிப்பை உதிர்த்துவிட்டு“ என்னோட தையல்கிளாஸுக்கு வாற ஒரு தாய்லாந்துப்பிள்ளை.” என்றாள்.

நாலாம்நாள் மாலை அண்ணன் சாப்பிட்டபின்னால் பான்பராக் போட்டுக்கொண்டு கோழித்தூக்கம் போடமுதல் திருவாய்மலர்ந்தார். “ஜெர்மனியைப்போல இல்லை….. இஞ்சை…….. கண்டகண்டபாட்டுக்கு ஆக்களைப் பிடிச்சு அனுப்பிறாங்கள்……. நீங்களும் அறிஞ்சிருப்பியள்தானே…………. எந்த நேரமும் விசாக்காட்டைப் பிடுங்கிக்கொண்டு ஊருக்கேத்திற நிலமை எங்களுக்கும் வரலாம்…….. முந்தி உளைச்சதுகளை அப்பிடியே வீட்டுக்குக்குடுத்தன்…….. அடுத்தவளுக்குச் சீதனங்கொடுத்தன்…….. லதாவைக்கூப்பிட்டன் கையிருப்பு காலி. இனிமேற்கொண்டு பார்ட் டைம் ஜொப் ஏதாவது பண்ணினால்த்தான் நாலு காசைப்பார்க்கலாம், அதுதான் இப்ப கொஞ்சநாளா பின்னேரத்தில பார்ட் டைம் ஜொப்பொன்றுக்குப் போறனான்…………. ”

ராகுலனுக்கு அவர் கையிருப்பை அறிவதில் ஓரு சுவாரஸ்யமுமில்லை. அவன் பேச்சில் அசிரத்தையாய் முகட்டைப் பார்த்துக்கொண்டிருந்தான். அண்ணாச்சி தொடர்ந்தார்……….

“அங்கை சமையலெண்ணை லீற்றர் ஒண்டரை மார்க்கென்றியள்………இஞ்ச லீட்டர் அஞ்சு பிராங்கெல்லே……….வரேக்க மட்டும் உந்தப்பெரிய கொம்பியில பத்து லீற்றர் கேசில ஒரு பத்து அடிச்சந்திருந்தா……. சும்மா ஐநூறு மார்க் வெளிச்சிருக்கும்………. ”

(ராகுலன் மனதுள் -யாருக்கு…..?-)

 

அவர் பெருங்கதை மீண்டும் பொருண்மியத்திக்கிலே செல்ல அறுவை தாங்காமல் ராகுலன் கேட்டான்:

“உங்கடை ஷூரிச்சில என்னதான் விஷேசம்…….. அதைச்சொல்லுங்கோ……… ”

“ விஷேசமெண்டு…… ”

“இங்க யாரும் ரூரிஸ்ட்டுக்கள் வந்தால் என்னத்தைப் போய்ப்பார்க்கிறவை….? ”

“ நானூறு கிலோ மீட்டர் தள்ளி……….ஜெனீவா என்றால் யூ.என்.ஓ கட்டிடத்தைச்சொல்லலாம்……… இஞ்சை ஒரு நூற்றைம்பது இருநூறு கிலோமீட்டரில ஒரு சேர்ச் இருக்காம் ……..எங்கட சனமும் சிலது போறது……… வடக்கை ஷெளகவுசனில ஒரு நீர்வீழ்ச்சியிருக்காம்………. நானென்றால் இதொண்டுக்குமின்னும் போகேல்ல………இருக்கிற வேலைக் கரைச்சலுகளுக்கை எங்களுக்கெங்கால நேரம்………? ”

லதா ஆற்றாமல் கேட்டாள்:

“அப்ப ஒரு ஆபத்து அந்தரத்துக்குத்தன்னும் உங்களுக்கு லீவு எடுக்கேலாதோ அண்ணை? ”

“இப்ப மற்ற வேலைக்குத்தான் லீவெடுத்தாலும்…….

பார்ட் டைம் வேலைக்கு எடுத்தேனென்டால் எங்கையெண்டிருக்கிற நம்ம சனமே ஓடிப்போய் புகுந்திடும்………. பிறகு கோவிந்தாதான்………..கிறிஸ்மஸ் லீவுக்கை வந்திருந்தியளெண்டால் சோக்காய் எல்லாம் சுத்திப் பார்த்திருக்கலாம்…….. ”

(ராகுலன் மனதுக்குள் “ இதுதான் ஸ்னோ மலையாய் கொட்டிக்கிடக்கு பார்……. ”

என்றிருப்பான்.)

இவர்கள் ஒரு நாளாவது லீவு போட்டுவிட்டு தம்மோடு சந்தோஷமாக நிற்பார்கள் அல்லது ஏதாவது ஒரு இடத்திற்குக் கூட்டிப்போவார்கள் என்ற நம்பிக்கை அறவே பொய்த்து இவர்களது -பொருள் முதல் உலகம்- வேறென்பதும் புரிந்து போயிற்று.

சடுதியான காலநிலை மாற்றம் ஒத்துக்கொள்ளவில்லையோ என்னவோ அவர்களின் குழந்தைக்கு பகல் முழுவதும் லேசாக உடம்பு காய்ந்தது. பின்னேரமும் கொஞ்சம் சிணுங்கிக்கொண்டிருந்தாள். மயூரனுக்கும் காய்ச்சல் தொற்றிக்கொண்டுவிடும் என்ற பயத்தில்போலும் அண்ணனும், அண்ணியும் மாலை முழுவதும் மாடியில் இருந்த தம்படுக்கையறையே கதியென்று கிடந்தார்கள். கீழிறங்கவேயில்லை.

அண்ணன் பார்ட் டைம் வேலைக்குப்போய்வந்து மீண்டும் கடுவன் பூனைமாதிரி மாடிக்கு ஏறிப்போனான்.

அண்ணி குசினிக்குள்ளிருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு போய் அவனுக்குக் கொடுத்தாள். ஒரு சம்பிரதாயத்திற்குக்கூட அவர்களை “என்ன….. குழந்தைக்கு இப்ப எப்பிடியிருக்கு….?”என்று விசாரிக்கவில்லை. லதாவும் தன்னுள் உதிர்ந்து போயிருந்தாள். ராகுல் தன் குடும்பத்தைப்பற்றி அவர்கள் விருந்தோம்பும் பாங்குபற்றி மிகமட்டமாக எடைபோடப்போகிறான் என்ற பயத்தில் மௌனம் காத்தாள். ராகுலுக்கும் அவர்கள் போக்கால் அங்கே மேற்கொண்டு தங்க அதைரியமாகவும், கூச்சமாகவும் இருந்தது.

இரவுமுழுவதும் குழந்தை அடிக்கடி சற்றே கண்ணயர்வதும் பின் எழும்பி அழுவதுமாயிருந்தது. இருவரும் மாறிமாறி தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு சிறிய கூடத்திலும் ஆளோடியிலும் உலாத்தினார்கள்.

குழந்தையின் அழுகையில் அண்ணன்காரனுக்கு வந்த உறக்கம் கலைந்து கலைந்து போனது, சினமுண்டானது. அடுத்த தடவை தூக்கம் கலைந்தபோது எரிச்சலுடன் எழும்பி வெளியேவந்து மாடிப்படியில நின்று அதட்டினான்.

“ ஏய்…….. லதா உந்தப்பிள்ளையைக் கொஞ்சம் அழாமல்தான் பாரன்……. மனுஷர் விடியவேலைக்குப் போகவேணுமல்லே…….”

“ பாப்பாவுக்குச்சாடையாய் மேல் காயுது அண்ணை…… அதுதான் அழுகிறாள்…. ”

“ சுகமில்லையெண்டால் நேரத்தோட டொக்டரிட்டை காட்டியிருந்திருக்கலாமில்லை! ”

அற்பப்பயலே அவர்கள் உனது விருந்தினர்கள். நீயல்லவா டாக்டரிடம் கூட்டிப்போயிருக்க வேணும்.

“ பராசெற்றோமோல் ஒன்று குடுத்திருக்கிறன்…… தணியுதோ பார்ப்பம்….”

“ என்ன குடுத்தியோ……. இனியும் கத்தினால் மயூரனும் எழும்பி

வாசிக்கத்தொடங்கிடுவான்…….. பிறகெனக்கு வெளியில குதிக்கிறதைத்தவிர வேறை வழியிருக்காது………..”

பிள்ளையே பெற்றுக்கொள்ளாதவன் மாதிரி அவன் பொழிந்துவிட்டு உள்ள போகவும் ராகுலன் லதாவின் காதில் மெல்ல ஆனால் உறுதியான குரலில் சொன்னான்:

“….. நாங்கள் உறவென்று நம்பி பிழையான இடத்துக்கு வந்திட்டம்………… இப்ப பிள்ளைக்குச் சட்டையைப் போட்டிட்டு…… நீரும் உடன வெளிக்கிடுறீர். இதுக்கு மேலயுமிங்கை ஒரு நிமிஷந்தன்னும் என்னால தங்கேலாது……… ”

லதா ஒரு மறுப்பும் சொல்லவில்லை. அவனோடு ஓசைப்படாது வெளிக்கிட்டாள். குழந்தையின் சாமான்கள் எல்லாம் சரிதானாவென்று இன்னொருதரம் சரிபார்த்துவிட்டுத் தம் பயணவுறைகளைத் தூக்கிக் கொண்டு மெதுவாய் வெளியேறிக் கதவைச்சாத்தினார்கள்.

மகிழுந்தில் போய் அமர்ந்த பின்புதான் இயல்பாக மூச்சுவிட முடிந்தது. நிம்மதி.

கார் சுவிற்சர்லாந்து- ஜெர்மனி எல்லை நகரமான பாசலை அண்மிக்கவும்

மலைகளும், அதன் சாரலில் அமைந்திருந்த அழகழகான வீடுகளும் பள்ளத்தாக்குகளும், தூரிகையால் இழுத்துவிட்டது போலிருந்த நதிகளும், பாலங்களும், சுரங்கப்பாதைகளும் மறைந்து விடை பெற்றன. சமதரையிலான விரைவுசாலையில் மணிக்கு 120 கி.மீ வேகங்கொள்ள அனுமதித்திருந்தார்கள்.

எதிர்த்திசையில் ஆபிரிக்க இறக்குமதியான வெள்ளாடுகளை நிறைத்துக்கொண்டு வேகமாக வந்த பாரவுந்தொன்று அவர்களது மகிழுந்தையும் சற்றே குலுக்கிவிட்டுச் சு விஸ் நோக்கி அம்புருவிப்பறந்தது.

சற்றே பயந்துவிட்ட லதா சொன்னாள்:

“கண் மண் தெரியாமல் அவன் பறக்கிற வேகத்தைப்பார்த்தியளே……..”

“ எல்லாம் கொண்ணன் கோவிச்சுக்கொள்ளப் போறாரென்கிற பயத்திலதான்……..”

“ என்ன அண்ணை கோவிக்கப்போறாரெண்டோ……. என்னப்பா சொல்லுறியள்…….? ”

“ அதெல்லாம் அவர் எங்களுக்காக ஓடர் கொடுத்த ஆடுகளல்லே……. அதுதான் விருந்துக்கு லேட்டானால் கொண்ணை கோவிச்சுக்கப் போறாரேயென்டு கிலியில பறக்கிறான்…….”

சுவிஸ் நோக்கிக் கார் திரும்பியதிலிருந்தே சிரிப்பைத் தனியாகவே கழற்றி வைத்திருந்த லதா கண்களில் நீர் முட்டும்வரை கனிந்து குலுங்கிச்குலுங்கிச் சிரித்தாள்.

“ என்னவோ தெரியாதப்பா அண்ணை முந்தி முந்தியிப்படியில்லை….. இப்ப சரியாய் மாறித்தான் விட்டார். அண்ணியோட சேர்ந்து எதுக்கெடுத்தாலும் ஒரு இடத்தை போறம், ஒரு சாமான் வேண்டவேணும், ஒரு ஆக்கள் தந்தவை, ஒரு பகுதி வரப்போகுது , ஒரு அலுவலிருக்கு……… என்று சஸ்பென்ஸ் வைத்துத்தான் கதைக்கிறார். ”

“ அது சஸ்பென்ஸ் மாத்திரமில்லை……. மற்றவர்களை நாங்கள் ஒரு இடைவெளியோடதான் வைத்திருக்கிறம் என்பதன் படிமம் அது……… ”

அண்ணாச்சி அவர்கள் வீடு தேடிவந்து “ நாங்கள் வேலைப்பழுவில உங்களைச் சரியாய் உபசரிக்காம விட்டிட்டம்……. மன்னிச்சுக்கொள்ளுங்கோ.”

என்று வந்து சாஷ்டங்கமாய் காலிலெல்லாம் வீழ்ந்துவிடப்போவதில்லை. ஆனால் ஒருவேளை சொல்லிக்கொள்ளாமல் வந்ததுக்காக ரெலிபோனில் கெம்பலாம். வீட்டுக்கு வந்ததும் முதலில் ரெலிபோன் இணைப்பைப் பிடுங்கிவிட்டார்கள்.

குழந்தையை டாக்டரிடம் கொண்டுபோய்க் காட்டியதில் அன்று மாலையே காய்ச்சல் சுகமாகித் தவழ்ந்தோடித்திரியத்தொடங்கியது.

மறுநாள் மாலை தோட்டத்தில் சாய்வுகதிரையைப் போட்டுக்கொண்டு ராகுலன் ஹேர்மன் ஹெஸ்ஸவின் சித்தார்த்தாவை வாசித்துக்கொண்டிருக்கையில் அங்கே சிற்றுண்டியும் சேமியாப்பாயாசமும் கொண்டு வந்த லதாவைக்கேட்டான்:

“ ஊர்லாப்தான் இன்னும் ஒரு கிழமை இருக்கே…….. பாரீஸுக்குப் போவமே செல்லம்? ”

அப்போ அவனை லதா மேற்கண்ணால் பார்த்த பார்வையில் உன்மத்தமாகிய ராகுலன் அவளை இழுத்தணைத்து முத்தினான் என்பதையும் நான் உங்களுக்குச் சொல்ல வேணுமா என்ன…………….?

(ஜெர்மனி -பூவரசு- இதழ் தன் ஏழாவது ஆண்டுநிறைவையொட்டி நடாத்திய சிறுகதைப்போட்டியில் 1998 முதற்பரிசை பெற்ற கதை.) 

http://www.sirukathaigal.com/சிறப்பு-கதை/உபச்சாரம்/

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு கதையை இணைத்ததுக்கு நன்றி...கிருபன்!

நீண்ட காலத்தின் பின்னர் ஒரு நல்ல கதையை வாசித்த திருப்தி ஏற்பட்டது!

  • கருத்துக்கள உறவுகள்

இரவுமுழுதும் மனைவி லதாவுடன் ஃப்ரான்ஸுக்குப் போவதா, இல்லை சுவிஸுக்குப் போவதா என விவாதித்தும் ஒரு தீர்மானத்திற்கும் வரமுடியவில்லை. சுவிஸில் லதாவின் அண்ணன் குடும்பமிருக்கிறது. ஃப்ரான்ஸிலோ ராகுலனுக்கு உறவுகள் ஏராளம்.

 

"ஈச்சம் பழத்தைப் பார்த்து இளிச்சுதாம் நாவற்பழம்".  ராகுலனின் வீட்டிலும் இதுதானே நிலமை. புருசன்ர ஏராளமான சொந்தங்கள் உள்ள பிரான்ஸை விட்டுட்டு தன்ர சொந்தமென்று கூட்டிப் போய் "பல்பு" வாங்கினதுதான் மிச்சம்.  அண்ணி சுப்பர். அண்ணனும் ராகுலனும்தான் பரிதாபம்....!

நல்ல கதை . பகிர்வுக்கு நன்றி....கிருபன்....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி கிருபன்
நன்றாக  அனுபவித்து எழுதியுள்ளார் கருணாகரமூர்த்தி.
இவர் ஜேர்மனில் வசிக்கின்றாரா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாத்தியார் said:

இணைப்பிற்கு நன்றி கிருபன்
நன்றாக  அனுபவித்து எழுதியுள்ளார் கருணாகரமூர்த்தி.
இவர் ஜேர்மனில் வசிக்கின்றாரா?

கருணாகரமூர்த்தி நன்றாக அனுபவித்து எழுதியிருந்தாலும், தமிழர்களின் விருந்தோம்பல் பண்பாட்டை இன்னமும் கைவிடவில்லை என்றுதான் எனது பயண அனுபவங்கள் உள்ளன. அதிலும் சுவிஸுக்கு எப்போது போனாலும் மூன்று, நாலு வேளை என்று சாப்பிடச் செய்து செமியாக்குணம் வரப்பண்ணுவார்கள்.

கருணாகரமூர்த்தி பேர்லினில்தான் வசிக்கின்றார் என்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கதை, பகிர்விற்கு நன்றி கிருபன்.
 

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்ட சொந்தக்காரர்கள்,நண்பர்கள் எல்லோரும் ரொம்ப நல்லவர்களாக இருக்கிறார்கள் போல இருக்குது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரதி said:

கிருபன்ட சொந்தக்காரர்கள்,நண்பர்கள் எல்லோரும் ரொம்ப நல்லவர்களாக இருக்கிறார்கள் போல இருக்குது

ஆமாம். என்னோடு சேர்ந்தாலே எல்லோரும் நல்லவர்கள் ஆகிவிடுகின்றார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கதையை இணைத்த கிருபனுக்கு நன்றி. மனிதா்கள் பலவிதம் ஒவ்வொருவரும் தனிரகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.