Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அந்தமான் விவசாயம்

Featured Replies

அந்தமான் விவசாயம் 01: வேளாண்மையே முதன்மை

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிகோபார் தீவுகள் சென்னைக்குக் கிழக்கே சுமார் 1,800 கி.மீ. தொலைவில் வடக்கு தெற்காக வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளன. இங்கு பழங்குடியினரும் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து குடிபெயர்ந்தோரும் வெவ்வேறு தீவுகளில் வாழ்கிறார்கள்.

மொத்த நிலப்பரப்பில் 85 விழுக்காடு பல்வேறு வகைக் காடுகள் பரவியுள்ளபோதும், வேளாண்மையே இந்தத் தீவுக் கூட்டத்தின் முதன்மைத் தொழில். தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழையால் இத்தீவுகளில் ஆண்டுக்குச் சராசரியாக 3,100 மி.மீ. வரை மழை பொழிகிறது. தமிழகத்தின் மழை அளவோடு ஒப்பிட்டால், இது மூன்று மடங்கு அதிகம்.

நாடு விடுதலை பெற்ற பிறகு வேளாண்மைத் தொழில் நவீன மயமாக வளர்ந்தது என்றாலும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அந்தமானில் வாழும் பழங்குடிகள் தங்கள் உணவுத் தேவையை இயற்கை வேளாண்மையின் மூலமே பூர்த்தி செய்துவந்துள்ளனர்.

இத்தீவுகளில் நிலவும் தட்பவெப்பம், கிடைக்கும் மழையளவு, மண்ணின் தன்மை போன்றவை தென்னை, பாக்கு, நெல், கிழங்கு வகைகள், நறுமணப் பயிர்கள் பயிரிட உகந்ததாக இருக்கின்றன. புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் இந்தத் தீவுகளில் குறைந்த அளவே பயன்பாட்டில் இருக்கின்றன என்பதால், இத்தீவுகளின் வேளாண் தொழில் பெருமளவு இயற்கை வழியிலேயே அமைந்துள்ளது. இவற்றில் சில சுவாரசியமான அம்சங்களை இந்தத் தொடரில் தொடர்ந்து பார்ப்போம்.

(அடுத்த வாரம்: மானாவாரி நெல்)

 

தொடர்புக்கு: velu2171@gmail.com

velmurugan_3013761a.jpg

அ. வேல்முருகன், அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் உள்ள மத்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர். அந்தமான் பழங்குடிகளின் வேளாண் முறைகள் குறித்து ஆராய்ந்துவருகிறார். அந்தமான் துணை நிலை ஆளுநரின் விருதும் பெற்றுள்ளார்

 

அந்தமான் விவசாயம் 02: மானாவாரி நெல்!

arisi_2_3021347g.jpg

arisi_3021346g.jpg

தமிழகத்தைப் போன்று அந்தமானிலும் உணவுப் பயிர்களில் நெல் முக்கியமானது, பல்வேறு வகையான நெல் ரகங்கள் பயன்பாட்டில் இருந்தபோதும், ஜப்பானியர்களால் அறிமுகம் செய்யப்பட்ட சி-14-8 (C-14-8) என்ற புராதன ரகமே பெருவாரியாகப் பயிரிடப்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இது ஒரு பரந்த மரபியல் தன்மை (Broad genetic base) கொண்ட ரகம். அதாவது பயிரின் உயரம், நெற்கதிர்களின் நீளம், அரிசியின் வண்ணம் இதில் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனால் பூச்சி, நோய்களால் முற்றிலும் பாதிக்கப்படுவதில்லை.

இந்த வகை நெற்பயிர் 1-1.5 மீட்டர் உயரம்வரை வளரக்கூடிய ஒளிச்சார்பு (photosensitive) ரகமாகும். இது பெரும்பாலும் தாழ்ந்த கடற்கரைச் சமவெளியிலும், தண்ணீர் அதிகம் தேங்கும் இடங்களிலும் குறைந்த அளவு இடுபொருளை (ஐந்து முதல் 10 டன் மக்கிய தொழுவுரம்) கொண்டு பயிரிடப்படுகிறது. இது ஜூன் ஜூலை மாதங்களில் பயிரிடப்பட்டு ஜனவரி மாதத்தில் அறுவடை செய்யப்படும் ஒரு நீண்டகால ரகம்.

இதற்கு அதிகப்படியான டில்லரிங் தன்மையும், வெட்டவெட்டத் துளிரும் இயல்பும் இருப்பதால் இதன் தழைகள் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது - தீவனத்துக்காக மழைக்காலத்திலும் தீவனத் தட்டுப்பாடு உள்ளபோதும் - அறுவடை செய்யப்படுகின்றன. மேலும் அவ்வாறு செய்வதால் அதிக மழை, புயலால் பயிர்கள் சாய்ந்துவிடுவது தவிர்க்கப்படுகிறது. இந்த ரகம் மானாவாரியாக ரசாயன உரங்கள் இன்றி அங்கக வேளாண்மை முறையில் பயிரிட ஏற்றது.

ஒருவேளை பருவமழை முன்னதாக ஆரம்பித்துவிட்டால், ஆகஸ்ட் மாதத்தில் பயிரிட்டு ஜனவரியில் அறுவடை செய்ய இயலும் என்பது இதன் சிறப்பம்சம். அவ்வாறு அறுவடை செய்யும்போது தரையில் இருந்து ஒன்று முதல் ஒன்றரை அடி உயரத்திலேயே கதிர்கள் அறுவடை செய்யப்படுகின்றன. பின்னர், பிப்ரவரி மாதத்தில் எஞ்சிய தழைகள் நிலத்தில் அழுத்தி உழப்படுகின்றன. அவ்வாறு செய்வதால் நிலத்தின் அங்ககத்தன்மை (கரிம அளவு) அதிகரித்து, வளம் கூடுகிறது.

மண்ணின் ஈரத்தன்மை நீண்ட நாட்களுக்கு நிலைத்து நின்று நெற்பயிர்கள் மானாவாரியாக வளர உதவுகிறது. இந்த நெல் ரகம் பயிர் மேலாண்மை, வளரும் சூழலுக்குத் தகுந்ததுபோல் ஒரு ஹெக்டேருக்கு 2.5 முதல் 5.0 டன்வரை மகசூல் தரவல்லது. மேலும் வடக்கு அந்தமானில் முதல் பயிர் டிசம்பரில் அறுவடை செய்யப்பட்டு மறுதாள் பயிரில் இருந்து 1.0 முதல் 1.5 டன்வரை மகசூல் பெறப்படுகிறது.

ஒட்டும்தன்மையுள்ள கரன்

இந்த ரகம் தவிரப் பர்மாவில் இருந்து இடம்பெயர்ந்த ‘கரன்’ என்ற பெயர் கொண்ட பழுப்பு மற்றும் வெள்ளை வண்ணம் கொண்ட ஒட்டும் தன்மையுள்ள (sticky) ஜப்பானிகா வகையைச் சேர்ந்த நெற்பயிரைப் பழங்குடியினர் பல்லாண்டுகளாகப் பயிரிட்டுவருகின்றனர். இது குறைந்த அளவு இடுபொருளில் மானாவாரியாக வளரும் தன்மையுள்ளது. விளைச்சல் குறைவாக இருக்கும்போதும் அதிகளவு இரும்பு, புரதச்சத்து இருப்பதால் நீரழிவு நோயாளிகளுக்கு உகந்தது.

இந்த நெல் ரகங்கள் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகம், கேரளத்தில் இன்றும் பழுப்பு வண்ண நெல் ரகங்கள் பயன்பாட்டில் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. இந்த நெல் ரகங்கள் குறைந்த இடுபொருளுடன், பருவநிலை மாற்றங்களைத் தாங்கி, அங்கக வேளாண்மை முறையிலும் பயன்தரக் கூடியவை என்பதால், விவசாயிகள் இன்றும் இந்த ரகங்களைப் பயிரிட்டுப் பயனடைந்துவருகின்றனர்.

தற்போது இந்தப் பாரம்பரிய நெல் ரகங்களின் ஒரே மாதிரியான தோற்றத் தன்மையை ஏற்படுத்தவும் சந்தை மதிப்பை அதிகரிக்கும் உத்திகளிலும், ஆராய்ச்சியாளர்களும் வேளாண் துறையினரும் ஈடுபட்டுள்ளனர். இந்த வகை நெற்பயிர்களுக்கான சந்தை மதிப்பு குறைவாக இருக்கும்போதும், உடல் ஆரோக்கியத்தையும் மண்வளத்தையும் பேணுவதால் எதிர்காலத்தில் இவற்றுக்கான தேவை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

(அடுத்த வாரம்: வாழ்வாதாரம் தரும் நில மேலாண்மை) 
கட்டுரையாளர், அரசு வேளாண் அலுவலர் 
தொடர்புக்கு: velu2171@gmail.com

 

http://tamil.thehindu.com/general/environment/அந்தமான்-விவசாயம்-02-மானாவாரி-நெல்/article9142283.ece

அந்தமான் விவசாயம் 03: சுனாமியிலிருந்து மீண்ட நிலங்கள்

 

andaman_3030080f.jpg
 

அந்தமான் நிகோபார் தீவுகளின் மொத்த நிலப்பரப்பில் (8,250 சதுர கி.மீ.) சுமார் 85 சதவீதத்துக்கும் மேல் அடர்ந்த காடு. குறுக்குவெட்டாகப் பார்க்கும்போது தீவுகளின் மையப் பகுதியில் மலைத்தொடர்களும், அடுத்து ஏற்றஇறக்கத்துடன் கூடிய மேட்டுப்பாங்கான மலைச்சரிவுகளும், அதையடுத்துத் தாழ்ந்த கடற்கரைச் சமவெளியும் அமைந்துள்ளன. அந்தமானின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 15 முதல் 20 சதவீதம் தாழ்ந்த கடற்கரைச் சமவெளி. பெரும்பாலும் மேட்டுப்பாங்கான மலைச்சரிவுகள், கடற்கரைச் சமவெளிகளில் மட்டுமே வேளாண்மை நடக்கிறது.

ஆனால், 2004 டிசம்பர் ஆழிப்பேரலைக்குச் (சுனாமி) பின்னர் பல இடங்களில் கடல்நீர் தேங்க ஆரம்பித்துவிட்டது. கடல் அலைகள் உயரமாக எழும் காலத்தில் வேளாண் நிலங்கள் பாதிக்கப்பட்டன. நீர் தேங்குவதாலும் உவர்ப்புத்தன்மையாலும் கடற்கரைச் சமவெளியில் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகிவிடும் நிலை ஏற்பட்டது.

நில மேம்பாடு

கடற்கரையோரம் பராமரிக்கப்பட்டுவந்த நன்னீர் மீன் குட்டைகளும் பாதிக்கப்பட்டன. வறண்ட காலத்தில் நன்னீர்ப் பற்றாக்குறை அதிகரித்தது. ஆழிப் பேரலைக்குப் பின்பு இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பல்வேறு நாடுகளின் கடற்கரைச் சமவெளிகள், தீவுகளில் இந்த நிலை நிரந்தரமாகி, அப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

அந்தமானில் உள்ள இப்படிப்பட்ட நிலப்பகுதிகளைப் புதிய நிலமேம்பாட்டு மற்றும் வடிவமைப்பு முறைகள் மூலம் மீண்டும் விளைநிலங்களாகவும் நன்னீர் சேமிக்கும் குளங்களாகவும் மாற்றுவதற்கு வேளாண் துறையும் மத்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையமும் இணைந்து பணியாற்றிவருகின்றன. இத்திட்டத்தின் முக்கியக் குறிக்கோள் மழைநீர் சேகரிப்பு, சீர்கெட்ட நிலத்தை விளைநிலமாக மாற்றுவது, காய்கறி மற்றும் நன்னீர் மீன் உற்பத்தி மூலமாக உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கி, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது.

பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் மூன்று வகையான நில மேம்பாடு மற்றும் வடிவமைப்பு முறைகள் ஆழிப் பேரலைக்குப் பிந்தைய காலத்தில் அந்தமான் தீவுகளில் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. அவை: அகலப் பாத்தி - வாய்க்கால் (நாழி), அகலப் பாத்தி நன்னீர் குளங்கள், நெல்லும் மீனும் ஒருங்கிணைந்த முறை.

(அடுத்த வாரம்: நிலத்திலிருந்து உப்பை அகற்றும் நுட்பம்)
கட்டுரையாளர், அரசு வேளாண் அலுவலர் 
தொடர்புக்கு: velu2171@gmail.com

 

http://tamil.thehindu.com/general/environment/அந்தமான்-விவசாயம்-03-சுனாமியிலிருந்து-மீண்ட-நிலங்கள்/article9172183.ece

  • தொடங்கியவர்

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அந்தமான் விவசாயம் 05: அகலப் பாத்தி நன்னீர் குளங்கள்

vayal_3048084f.jpg
 

சமீபகாலமாக விவசாயிகளிடம் சராசரி நிலக் கையிருப்பு குறைந்துவருவதால், அவர்களுடைய வாழ்வாதாரமும் சரிந்துவருகிறது. அதே நேரத்தில் அந்தமான் தீவுகளில் நன்னீர் மீன்களுக்கான சந்தை மதிப்பு அதிகரித்துவருகிறது. விவசாயிகளின் மேற்கண்ட இடரை நீக்கி, பலன் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டதுதான் அகலப் பாத்தி நன்னீர் குளங்கள். இது கடலோரச் சீர்கெட்ட நிலங்களுக்கும் நல்ல வடிகால் உள்ள இடங்களுக்கும் பொருந்தும்.

நிலத்தில் 2-3 மீட்டர் ஆழத்துக்கு மணல் வெட்டப்பட்டு, வெட்டப்பட்ட அதே வரிசையில் 1-1.5 மீட்டர் உயரமும் நான்கு மீட்டர் அகலமும் உள்ள அகலப் பாத்திகள், குளத்தைச் சுற்றிலும் அமைக்கப்படுகின்றன. அவ்வாறு அமைக்கும்போது குளத்தின் விளிம்பிலிருந்து ஒரு மீட்டர் தூரத்திலும், சரிவு 1:1 என்ற விகிதத்திலும் இருக்க வேண்டும். இம்முறையில் அகண்ட கரைகள் (பாத்திகள்) குளத்தைச் சுற்றிலும் அமைக்கப்படுவதால் மழைநீரை நிலமட்டத்துக்கு மேலாகவும் சேகரிக்க முடியும். மழைக்காலத்தில் அகலப் பாத்தியில் உள்ள உப்பு மற்றும் நச்சுப் பொருட்கள் மழைநீரால் அடித்துச் செல்லப்படுகின்றன. மேலும், வெள்ளநீராலும் கடல்அலை ஏற்றத்தாலும் இக்குளங்கள் பாதிக்கப்படுவதில்லை.

இக்குளங்களில் ஒரு கன மீட்டருக்கு 2-3 நன்னீர் மீன் குஞ்சுகளை விட்டால், ஒரு ஹெக்டேருக்கு 1.5 முதல் 2 டன்வரை மகசூல் கிடைக்கும். குளத்தின் கரை அகலப் பாத்திகளாக மாற்றப்படுவதால் 4 - 5 வரிசை காய்கறிகள் பயிரிடவும் ஏதுவாகிறது. மேலும், சேகரிக்கப்பட்ட மழைநீரைக் கொண்டு தென்னை, தென்னையில் ஊடுபயிராகக் காய்கறிகளுக்கும் நீர்ப்பாசனம் தர முடியும்.

கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் தொடர்புக்கு: velu2171@gmail.com

 

http://tamil.thehindu.com/general/environment/அந்தமான்-விவசாயம்-05-அகலப்-பாத்தி-நன்னீர்-குளங்கள்/article9230615.ece?ref=relatedNews

அந்தமான் விவசாயம் 06: நெல்லும் மீனும் இரட்டை லாபம்

andaman_3054294f.jpg
 

நெல்லும் மீனும் ஒருங்கிணைந்த முறை: மூன்றாவதாகச் செயல்படுத்தப்படும் இந்த முறை, முந்தைய இரண்டு முறைகளிலிருந்து பெரிதும் வேறுபட்டது முக்கியமானது. இதில் நெல்லும் மீனும் ஒருங்கிணைந்து வளர்க்கப்படுவதுடன், நெல்லின் முக்கியத்துவமும் நிலைநிறுத்தப்படுகிறது. இம்முறையில் செவ்வக வடிவிலான நெல் வயல்களைச் சுற்றிலும் 1.5 - 2 மீட்டர் ஆழமும், 5 - 6 மீட்டர் அகலமும் கொண்ட கால்வாய் 1:1 என்ற சரிவு விகிதத்தில் வெட்டப்படுகிறது.

பின்னர், வெட்டிய மண்ணைக் கொண்டு கால்வாயிலிருந்து 1 முதல் 1.5 மீட்டர் தூரத்தில் உயரமான நான்கு மீட்டர் அகலமுள்ள பாத்திகள் அமைக்கப்படுகின்றன. அகலப் பாத்தி நன்னீர்க் குளங்களோடு ஒப்பிட்டால், இதில் நிலத்தின் மையப்பகுதி அப்படியே விட்டுவிடப்படுகிறது. ஆனால், அகலப் பாத்தி நன்னீர்க் குளங்களில் மையப்பகுதி வெட்டி எடுக்கப்படுகிறது.

மழைக்காலத்தில் மொத்தப் பரப்பில், அதாவது கால்வாய் மற்றும் மையப்பகுதியில் நீர் சேகரிக்கப்படுகிறது. அதேநேரம், கோடைக்காலத்தில் மழை நீரானது கால்வாய்களில் மட்டுமே இருக்கும். மழைக்காலத்தில் மையப் பகுதியில் நெல்லும், கால்வாய்களில் மீனும், உயர்ந்த பாத்தியில் காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன. கோடைக் காலத்தில் இந்த அமைப்பின் மையப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மழைநீரைக் கொண்டு காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இந்த அமைப்பில், சுற்றுக் கால்வாய்கள் அமைக்கப்பட்டபோதும் மீன்கள் சுற்றித் திரியும் பரப்பளவு அதிகம் என்பதால், மீன் மற்றும் நெல்லின் விளைச்சல் அதிகரிக்கும். இந்த அமைப்பு அமில - கார நிலங்களுக்கும், கடல்நீர் தேங்கும் இடங்களுக்கும் உகந்தது.

பருவநிலை மாற்றம் தாங்கும்

அந்தமான் தீவுகளில் சீர்கெட்ட, ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட நிலங்கள் மேற்கூறிய மூன்று முறைகள் மூலம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது. எளிதாக மழைநீர் சேகரிக்கப்பட்டு நெல், காய்கறிகள் பயிரிடப்படுவதுடன் நன்னீர் மீன்களும் வளர்க்கப்படுகின்றன. இம்முறைகள் சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு ஆண்டுக்கு ரூ. 1.5 முதல் 3 லட்சம்வரை வருவாய் தர வல்லவை.

இவற்றை வடிவமைக்க நிலத்தின் தன்மை மற்றும் அமைவிடத்துக்கு ஏற்றதுபோல் ஒரு ஹெக்டேருக்கு ரூ. 1.5 முதல் 3 லட்சம் ரூபாய்வரை செலவாகும். மேலும், இம்முறைகள் பருவநிலை மாற்றத்தையும் தாங்கும் தன்மையைக் கொண்டிருப்பதால், கடலோரத் தாழ்நிலங்களைச் சீரமைக்கவும் விவசாய உற்பத்தியைப் பெருக்கவும் மிகவும் ஏற்றவை.

(அடுத்த வாரம்: பழங்குடியினரின் பாரம்பரிய அறிவியல்) 
கட்டுரையாளர், அரசு வேளாண் அலுவலர் 
velu2171@gmail.com

 

http://tamil.thehindu.com/general/environment/அந்தமான்-விவசாயம்-06-நெல்லும்-மீனும்-இரட்டை-லாபம்/article9255396.ece?ref=relatedNews

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஆதவன்.....!

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஆதவன்.....!

எனது ஊருக்கு போகணும்  என்ற ஆசையை மேலும் மேலும் விதைக்கிறது இப்பதிவு..

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில இப்ப ஆக்கள் விவசாயம் என்றால் முகம் சுழிக்கினமாம். அதுவும் எமது நிலங்கள் நிரந்தரமாக விழுங்குப்பட உதவுது. 

எல்லாம் வெளிநாட்டுக் காசு.. உடம்பில தூசு படாமல்.. கைக்கு வந்து சேருவதன்.. காரணத்தாலாம். 

அந்த நிலையில் இருக்கிற எம்மவருக்கு.. இதின் தார்ப்பரியம் விளங்க காலம் எடுக்கும்.

நல்ல பகிர்வு. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஊரிலை இருக்கேக்கையே தோட்டம் துரவு எண்டு  கதைச்சால் பட்டிக்காட்டான் எண்டு எட்டத்திலையே வைச்சிருக்கிற சமூகம். இப்ப என்ன பெரிசாய் செய்யப்போகுதுகள்.

தோட்டக்காரங்களை பகிடி பண்ணின ஒவ்வொரு உத்தியோகஸ்தனும் சோறு தண்ணியில்லாமல் சாக வேணும். இதுதான் நான் என்னை படைத்தவனிடம் வேண்டுவது.

  • தொடங்கியவர்

அந்தமான் விவசாயம் 07: நிகோபார் பழங்குடியினரின் பாரம்பரிய அறிவியல்

andaman_3061980f.jpg
 

நிகோபார் தீவுக் கூட்டமானது ஒரு நட்சத்திர மாலைபோல் அந்தமான் தீவுகளுக்குத் தெற்கே வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது. இவற்றை ‘நக்காவரத் தீவுகள்’ என முதலாம் ராஜேந்திர சோழன் காலத்து வரலாற்றுச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. இங்கே பல நூற்றாண்டுகளாக `நிகோபார் பழங்குடி இனத்தவர்’ பெரும்பாலும் வசித்துவருகின்றனர். தென் கோடியில் அமைந்துள்ள பெரிய நிகோபாரைத் தவிர, மற்ற தீவுகள் அளவில் சிறியவை, கனிம வளம் குறைவு. ஆனால், மழைவளமும் கடல்வளமும் நிறைவாக அமைந்துள்ளன.

தனிமையில், தொலைதூரத்தில் வாழும் இவர்களைப் புதிய தொழில்நுட்பங்கள் இன்னும் எட்டவில்லை என்றாலும், இவர்கள் தாங்கள் வசிக்கும் தீவுகளின் நிலவளத்தை இயற்கை வழியில் மேலாண்மை செய்தும் அவற்றைத் தங்களுக்குள் ஆக்கபூர்வமாகப் பங்கிட்டும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கின்றனர். நிகோபார் தீவுகளின் நில மேலாண்மை இவற்றைச் சார்ந்தே அமைந்துள்ளது. தென்னை இங்கு முக்கியப் பயிராகும்.

நிலப் பாகுபாடு

பொதுவாக நிகோபார் தீவுகளின் மையப்பகுதி சிறிய மலைக்குன்றாகவோ உயர்ந்த மேட்டுப்பாங்கான நிலமாகவோ இருக்கும். இவற்றைச் சுற்றியுள்ள நிலங்களின் உயரம் படிப்படியாகக் குறைய ஆரம்பித்துத் தீவுகளின் விளிம்பில் உள்ள கடற்கரைச் சமவெளிகள் கடல் மட்டத்திலிருந்து 1-5 மீட்டர் மட்டுமே உயர்ந்து காணப்படும். அலையேற்றத்தாலும் கடல் சீற்றங்களாலும் இப்பகுதிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

நிகோபார் பழங்குடியினர் தீவுகளை மையப்பகுதியில் இருந்து கடற்கரைச் சமவெளிவரை நான்காகப் பிரித்துப் பயன்படுத்துகிறார்கள். இது சங்கத் தமிழ் நூல்கள் தெரிவிக்கும் நிலப்பிரிவான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலையைப் போன்றதே. ஒவ்வொரு தீவிலும் பல கிராமங்களோ அல்லது குடியிருப்புத் தொகுதிகளோ (டுஹேட் எனப்படும் கூட்டுக் குடும்பம்) அமைந்துள்ளன.

அமைப்பு முறை

நிகோபார் தீவுகளின் மையப் பகுதி `ரின்வல்’ எனப்படும் காடுகள் அமைந்துள்ள மேட்டுப்பாங்கான நிலமாகும். இதைச் சுற்றி வளையங்களாக மற்ற நிலப் பயன்பாடுகள்/ பாகுபாடுகள் அமைந்துள்ளன. ரின்வல்லைச் சுற்றியுள்ள பகுதி `டவேட்’ அல்லது `டுலாங்’ எனப்படும் சிறுகாடுகளும் தென்னந்தோப்புகளும் நிறைந்துள்ள சிறிய மேடுபள்ளங்கள் உள்ள பகுதி மண்வளம் மிக்கது. பயன்தரும் பல்வகை மரங்களும் சிறிய தாவரங்களும் இங்கே இயற்கையாகப் பராமரிக்கப்படுகின்றன. இப்பகுதி பெரும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது.

இதை அடுத்து இருப்பது `டுஹேட்’ (Tuhet) எனப்படும் தென்னை மரங்கள் சூழ்ந்த குடியிருப்புப் பகுதி. இவை தவிரக் கூட்டுக் குடும்பத்துக்கும், பழங்குடியினர் கிராமத்துக்கும் பொதுவான இடங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் இவ்விடங்களைப் பாதுகாக்கவும் சமூக விழாக்களுக்கும் செலவிடப்படுகின்றன. இறுதியாகக் கடற்கரையை ஒட்டி `எல்-பாலம்’ எனப்படும் கடற்கரைச் சமவெளி அமைந்துள்ளது. இது மணல் நிறைந்த பகுதி. இது கிராமத்தின் சமுதாயக் கூட்டங்களும், விளையாட்டுகளும், பன்றித் திருவிழாவும் நடைபெறும் பொது இடமாக உள்ளது.

(அடுத்த வாரம்: இயற்கை வேளாண்மையின் முன்னோடி)
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் 
தொடர்புக்கு: velu2171@gmail.com

 

http://tamil.thehindu.com/general/environment/அந்தமான்-விவசாயம்-07-நிகோபார்-பழங்குடியினரின்-பாரம்பரிய-அறிவியல்/article9281891.ece

  • தொடங்கியவர்

அந்தமான் விவசாயம் 08: இயற்கை வேளாண்மையின் முன்னோடிகள்

andaman_3069970f.jpg
 

தென்னை மரங்கள், நிகோபார் பழங்குடியினரது பொருளாதாரத்தின் உயிர்நாடி. எனவே, இம்மரங்களை இவர்கள் தொன்றுதொட்டுப் பேணிவருகின்றனர். அவர்களுடைய பேணும் முறையைப் பாரம்பரிய அறிவு என்று சொல்வதைவிடவும் அறிவியல் என்றே சொல்ல வேண்டும். இத்தீவுகளில் இந்தோ-மலாய் மற்றும் பிலிப்பைன்ஸ் வகையைச் சேர்ந்த மரபணு வேறுபாடுகளைக் கொண்ட தென்னை மரங்கள் உள்ளன. இம்மரங்கள் போர்ட் பிளேயரில் அமைந்துள்ள உலகத் தென்னை மரபணு சேகரிப்பு மையத்திலும் நாட்டின் பல்வேறு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையங்களிலும் பராமரிக்கப்பட்டுவருகின்றன.

இவை இத்தீவுகளின் மையப்பகுதியில் காடுகளைப் போன்று இயற்கையாக வளர்கின்றன. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மரங்கள் தென்னந்தோப்புகளில் பராமரிக்கப் படுகின்றன. அடர்த்தியாகவும் உயரமாகவும் வளர்ந்த தென்னை மரங்கள் `டவேட்’ அல்லது `டுலாங்’ எனப்படும் தோட்டப் பகுதியில் பராமரிக்கப்படுகின்றன.

இயற்கையான மூடாக்கு

மற்றொரு சுவாரசியமான தகவல் என்னவெனில் நிலங்களை வரப்புகள் அல்லது கால்வாய்கள் வெட்டி நிகோபாரி பழங்குடிகள் பிரிப்பதில்லை. பயிர்கள் தொடர்ச்சியாக அமைந்துள்ளன. ஆனால் ஒவ்வொரு பழங்குடி குடும்பத்துக்கும், துகேத் எனப்படும் கூட்டுக்குடும்பத்துக்கும், பழங்குடி கிராமத்துக்கும் எத்தனை தென்னை மரங்கள், அவை எங்கு அமைந்துள்ளன என்பது அனைவருக்கும் தெரியும்.

தவிர்க்க முடியாத நேரங்களைத் தவிர, பொதுவாக முற்றிக் கீழே விழும் தேங்காய்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டு நிலத்திலேயே உரிக்கப்படுகின்றன. உரிக்கப்பட்ட பின் எஞ்சிய நார்ப்பகுதிகள் மற்றும் கீழே விழும் இலைதழைகள் நிலத்தின் மேற்பரப்பில் மூடாக்குபோல் அப்படியே விடப்படுகின்றன. இதனால் மண்ணரிப்பும் நீர் ஆவியாவதும் குறைவதோடு மண்ணின் ஈரத்தன்மையும் பாதுகாக்கப்படுகிறது. நிலத்தடி நீர் அதிகரிக்கிறது.

வேளாண் உயிரினப் பன்மை

இதைத் தவிர, `டவேட்’ பகுதியில் சேனைக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சிறு கிழங்கு, நிகோபாரி கிழங்கு, சிறு மிளகாய், தாழம்பூ, வாழை மற்றும் பல்வேறு கீரை வகைகள் உழவின்றி இயற்கை முறையில் பயிரிடப்படுகின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், இப்பகுதியில் வேளாண் உயிரினப் பன்மை பராமரிக்கப்படுகிறது. இதை இத்தீவுகளின் வலிமையென்றும் இன்றைய இயற்கை வேளாண்மையின் முன்னோடி என்றும் கூறலாம்.

மூன்றாவதாக நிகோபாரிகள் தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகில் தேர்ந்தெடுக்கப்பட்ட, அதிகமான இளநீர் தரும் தென்னை மரங்களை வளர்க்கிறார்கள். வருடத்துக்கு ஒருமுறையாவது வீட்டைச் சுற்றி வளரும் இலைதழைகளை (பெரும்பாலும் பருப்பு வகைத் தாவரங்கள்) வெட்டி மரத்தைச் சுற்றிப் புதைத்துவிடுகின்றனர். நிலம் ஒருபோதும் முற்றிலுமாக உழவு செய்யப்படுவதில்லை.

(அடுத்த வாரம்: தென்னை விருத்தியும் கூட்டுத் தோட்டங்களும்) 
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் 
தொடர்புக்கு: velu2171@gmail.com

 

http://tamil.thehindu.com/general/environment/அந்தமான்-விவசாயம்-08-இயற்கை-வேளாண்மையின்-முன்னோடிகள்/article9309248.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

அந்தமான் விவசாயம் 09: தென்னை விருத்தியும் கூட்டுத் தோட்டங்களும்

andaman_3078223f.jpg
 

நிகோபார் தீவுகளில் தென்னை பராமரிப்பின் மற்றொரு சிறப்பு, தேவைக்கு ஏற்றாற்போல் தென்னை வளரும் பரப்பளவை அதிகரித்துக் கொள்வது. `டுலாங்’ பகுதியில் உள்ள காடுகள், சீர்கெட்ட நிலங்கள், பயனற்ற தென்னந்தோப்புகள் பழங்குடி நிபுணர்களால் கண்டறியப்பட்டு, மழைக்காலம் தொடங்கும் முன் கிராம மக்களால் கூட்டாகச் சுத்தம் செய்யப்படுகின்றன. தீவின் மையப் பகுதி மற்றும் பிற தென்னந்தோப்புகளிலிருந்து இயற்கையாக வளரும் தென்னை நாற்றுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இப்பகுதியில் போதிய இடைவெளி விட்டு நடப்படுகின்றன.

பின்னர் நாற்புறமும் மரக்குச்சிகளால் வேலி அமைத்து, நடவுசெய்யும் இடத்தில் மட்டும் கைக்கொத்தால் நிலத்தை உழவு செய்து பாரம்பரியக் கிழங்கு, காய்கறி, பழங்களைப் பயிரிடுகிறார்கள். சில இடங்களில் சரிவுக்குக் குறுக்காகச் சிறிய நாழிகளை அமைக்கிறார்கள். நட்ட பின் மண்ணை அனைத்து இலைதழைகளால் மூடாக்கு செய்துவிடுகிறார்கள். இது இன்றைய உழவற்ற வேளாண்மைக்கு ஒப்பானது. மூன்று முதல் ஆறு ஆண்டுகளுக்குப் பின் அல்லது தென்னை மரங்கள் வளர்ந்த பின் வேறு இடங்களுக்குச் சென்றுவிடுவார்கள்.

மழைநீர் சேகரிப்பு

இந்தத் தென்னந்தோப்புகள் கிராமத்தின் சொத்தாகிவிடும். இவ்வாறு புதிய தென்னந்தோப்புகள் அமைப்பதுடன், கூட்டுக் குடும்பத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களையும் விளைவிக்கிறார்கள்.

நாடு விடுதலை பெற்ற பிறகு அரசுத் துறையினரின் உதவியுடன் பல கூட்டுக்குடும்பங்கள் தங்கள் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் தென்னை மரங்களுக்கிடையே வேலியமைத்து பாரம்பரியக் காய்கறி, கிழங்கு வகைகளை மானாவாரியாகப் பயிரிட்டுப் பயனடைகின்றனர். கூட்டுக்குடும்பங்கள் வசிக்கும் அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிக்கப்படுவது இந்தத் தீவின் சிறப்பம்சம்.

கூட்டுப் பண்ணையம்

நிகோபார் பழங்குடியினர் நிகோபாரி கோழி, பன்றிகளை விரும்பி வளர்த்து வருகின்றனர். இவை அதிக நோய் எதிர்ப்பு, வெப்பம், மழையைத் தாங்கி வளரும் திறனுடையவை. தென்னந்தோப்புகளிலும் காடுகளிலும் நிகோபாரி பன்றிகள் மேய்கின்றன. ஆனால், மாலை நேரங்களில் நிகோபாரிகள் மூங்கிலால் குறிப்பிட்ட ஒலி எழுப்பி அடையாளம் இடப்பட்ட தங்களுடைய பன்றிகளை அழைத்து, கீழே விழுந்து முளைத்த மற்றும் எண்ணெய் எடுக்கப் பயனற்ற தேங்காய்களை உடைத்து உணவாகத் தருகின்றனர். உணவு உண்ட பின் பன்றிகள் மீண்டும் தென்னந்தோப்புகளுக்குள் சென்றுவிடுகின்றன.

நிகோபாரி இனக் கோழிகளை வீட்டின் சுற்றுப்புறங்களில் இறைச்சி, முட்டைக்காக வளர்க்கிறார்கள். இது ஒருவகையான இயற்கை முறை கூட்டுப் பண்ணையம். பொருளாதாரப் பயனைவிட, உணவுத் தேவைக்காகவே இந்த முறை பின்பற்றப்படுகிறது.

நில மேலாண்மையின் முக்கியத்துவம்

இப்படி நிலத்தின் தன்மை, சுற்றுச்சூழல், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு ஏற்ப நிகோபார் தீவு நிலப்பகுதியைப் பிரித்து மேலாண்மை செய்வதில் உள்ள சிறப்பம்சங்கள் என்னவென்றால், இது பல்லாண்டுகளாக இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், தென்னை, மற்றப் பயிர்கள் மூலமாக மக்கள் பயனைப் பெறவும் உதவுகிறது. பல்லுயிர்ப் பாதுகாப்பு, தாவரங்களின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் நிகோபாரிகள், இவற்றைப் பரம்பரைச் சொத்தாகவே நினைத்துப் பராமரித்துவருகின்றனர். இங்குள்ள பல அரிய வகைத் தாவரங்கள், தென்னையின் பன்முகத்தன்மை காரணமாக, அறிவியல் ஆராய்ச்சிக்கும் வீரிய ரகங்களை உருவாக்கவும் இவை பெரிதும் பயன்படுகின்றன.

 

http://tamil.thehindu.com/general/environment/அந்தமான்-விவசாயம்-09-தென்னை-விருத்தியும்-கூட்டுத்-தோட்டங்களும்/article9338050.ece?widget-art=four-rel

  • கருத்துக்கள உறவுகள்

andaman_3030080f.jpg  

andaman_3061980f.jpg

andaman_3069970f.jpg

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் உள்ள வீடுகள் எல்லாம்.....
நிலத்திலிருந்து உயரமாக கட்டப் பட்டுள்ளன. என்ன காரணமாக இருக்கும் என்று.. யாருக்காவது தெரியுமா?

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

அந்தமான் விவசாயம் 10: ஆற்றல்மிகு அதிசயத் தாவரம்

andaman_3092644f.jpg
 
 
 

இந்திய மல்பெரி பழம் என அறியப்படும் நோனி, தமிழில் நுணா, வெண்நுணா, மஞ்சநாத்தி என அழைக்கப்படுகிறது. தமிழகப் பாரம்பரிய மருத்துவத்தில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டுவரும் அந்த அதிசயத் தாவரம் நோனி. இதன் அனைத்துப் பாகங்களும் பல்வேறு காரணங்களுக்காக மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

பசுமை மாறாத் தாவரமான இது வெப்ப மண்டலப் பகுதியில் பரவிக் காணப்படும்போதும், அந்தமான் நிகோபார், இந்தோனேசியத் தீவுகளில் தோன்றியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இத்தீவுகளில் வாழும் பழங்குடியினர் இதன் பழங்களை உணவாகவும், பிற பாகங்களோடு சேர்த்து மருந்துப் பொருளாகவும் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்திவருகின்றனர். இதுவரை குறைந்தது 200 வகையான பயன்தரும் உயிர்வேதிப் பொருட்களும், ஆற்றல்மிகு உயிர்கூட்டுப் பொருட்களும் இத்தாவரத்தில் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக இத்தாவர வேர்களில் உள்ள டாம்னகேந்தால், மொரின்டோன் புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மையுடையது.

பன்முகத்தன்மை

நோனி தாவரத்தின் பயிர் பன்முகத்தன்மை மிகவும் சிறப்பானதெனப் போர்ட்பிளேரில் உள்ள மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. நோனி தாவரத்தின் புறத்தோற்றம், உயிர் வேதிப்பொருட்களின் தன்மை வளரும் சூழ்நிலைக்கேற்றதுபோல் வேறுபடுகிறது. இதுபோன்ற சிறு வேறுபாடுகள் மரபணு மாற்றத்தாலும் பன்முகத்தன்மையாலும் உருவாகின்றன. இப்படி ஏற்பட்ட வேறுபாடுகளால்தான் நோனியானது நுணா, வெண்நுணா, மஞ்சநாத்தி எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

தாவர வகைப்பாட்டியலில் ரூபியேசியே குடும்பத்தைச் சேர்ந்த இத்தாவரத் தொகுப்பில் பல்வேறு வகைகள் (Species) இருந்தபோதும் மொரின்டா சிட்ரிபோலியா (Morinda citrifolia) என்ற நோனி வகையே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. தமிழகம், கேரள மாநிலங்களில் நல்ல மழைப்பொழிவு, மண் வளம் உள்ள இடங்களில் நோனி நன்கு வளரும். நோனி எந்தப் பகுதியில் விளைந்தாலும் வருடம் முழுவதும் புதிய இலைகள், பழங்களை உற்பத்தி செய்வது இதன் சிறப்பம்சம்.

மருத்துவப் பயன்கள்

அந்தமான் நிகோபார் தீவுகளில் நோனி தாவரம் இயற்கையாகவே வளர்ந்து பன்முகத்தன்மையுடன் காணப்படுகிறது. பழங்குடியினரால் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்த நோனி, சமீபகாலமாக மருத்துவப் பயிராக உருமாற்றம் அடைந்து பயிரிடப்பட்டுவருகிறது.

ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

நோனி பழமானது பசியைத் தூண்டுவதுடன், புத்துணர்ச்சியும் தரவல்லது. மனிதன் மட்டுமின்றி விலங்குகளும் இவற்றை உண்டு பயனடைகின்றன. மனித உடலில் உள்ள இணைப்புகள், அதன் திசுக்களில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து மூட்டு இணைப்புகள் நன்கு வேலை செய்ய நோனி உதவுகிறது. மேலும் நரம்பு மண்டலப் பாதிப்பைக் குறைப்பதால் தசைப்பிடிப்பு, ருமாட்டிசம் நோய்களிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.

நிகோபார் தீவுகளில் வாழும் பழங்குடியினர் நோனி தேநீர் (அ) பிழிந்தெடுக்கப்பட்ட சாற்றை மலேரியா காய்ச்சலுக்கு மருந்தாகத் தொன்றுதொட்டுப் பயன்படுத்திவருகின்றனர்.

நோனி பழச்சாற்றைத் தொடர்ந்து அருந்துவதால் மனிதர்களின் உயிர் சுழற்சி மண்டலம் ஆரோக்கியமடைகிறது. இது கணையம் நன்கு இயங்கவும், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது. நோனி பழச்சாறு கணையத்திலுள்ள சரியாகச் செயல்படாத பீட்டா செல்களைச் சீராக்குவது (அ) அவற்றுக்கு உதவுவதன் மூலமாக ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக இதய செல்களுக்கு அதிக மக்னீசியத்தை அளித்து, அதன் செயலை ஒழுங்குபடுத்துகிறது.

நோனி உடல் ஹார்மோன்களைச் சமன் செய்து, பல்வேறு உடற்செயலியல் தொடர்பான உபாதைகளிலிருந்து நிவாரணம் தருகிறது. இம்மருத்துவப் பயன்கள் சித்த மருத்துவத்திலும் நன்கு அறியப்பட்டவையாகும்.

பல வகை மருந்து

நோனி தாவரப் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் வடிநீர் மஞ்சள்காமாலைக்கு மருந்தாகவும், இதன் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் தலையில் ஏற்படும் தொற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. நிகோபாரி பழங்குடியினர் இவற்றைத் தொன்றுதொட்டு உணவாகவும், மருந்தாகவும் வீட்டு விலங்குகளுக்கு உணவாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

நோனியிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட களிம்பு பற்றிய ஆராய்ச்சியின் முடிவுகள், கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளன. எனவேதான், நோனி எனப்படும் நுணா ‘ஆற்றல்மிகு அதிசயத் தாவரம்’ என்றழைக்கப்படுகிறது.

(அடுத்த வாரம்: நோனி பயிரிடுவது எப்படி?)
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் 
தொடர்புக்கு: velu2171@gmail.com

 

http://tamil.thehindu.com/general/environment/அந்தமான்-விவசாயம்-10-ஆற்றல்மிகு-அதிசயத்-தாவரம்/article9386706.ece

அந்தமான் விவசாயம் 11: நோனி பயிரிடுவது எப்படி?

andaman_3098391f.jpg
 
 
 

பொதுவாக நோனி தாவரம் தனியாகவும் தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராகவும் பயிரிட உகந்தது. நோனிப் பழங்கள் குளிர்காலத்தைவிட வெயில் காலத்தில் அதிகமாக விளையும் தன்மை கொண்டவை. இவை எல்லா மண் வகைகளிலும் குறிப்பாக அதிக அளவு கார்பன், ஈரப்பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக்கூடியவை.

அந்தமான் தீவுகளில் இத்தாவரமானது (நோனி) விதைகள், தண்டுகள், வேர்த்துண்டுகள் அல்லது காற்றுப் பதியன் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. பொதுவாக விதை, தண்டுத் துண்டுகள் மூலம் இனப்பெருக்கம் செய்வது சிறந்தது. தரமான, வீரியம்மிக்க பழங்களைக் கோடைக்காலத்தில் இயற்கையாகக் காடுகளில் வளரும் தாவரத்திலிருந்து பறித்தும் விதைக்காகப் பயன்படுத்தலாம்.

விதை நேர்த்தி

இயற்கையான வனப்பகுதி மண்ணுடன் மணல், மக்கிய அங்ககப் பொருட்களைக் கலந்து நாற்று உற்பத்தி செய்யும் ஊடகமாகப் பயன்படுத்தலாம். விதைப்பதற்கு முன் விதைநேர்த்தி செய்வது, விதை முளைப்புத்திறனை அதிகரிக்கும். போர்ட்பிளேரில் உள்ள மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் நோனி விதையில் கடினமாக உள்ள மேல் தோலை நீக்கி, விதையின் முளைப்பு விகிதத்தை அதிகரிக்கவும், முளைப்பு காலத்தைக் குறைக்கும் முறைகளும் கண்டறியப்பட்டுள்ளன.

சிறந்த பலன் பெற

தோல் நீக்கப்பட்ட நோனி விதைகள் முளைப்பதற்கு வெப்பநிலை, சுற்றுச்சூழல், ரகம், மரபுவழி அமைப்பைப் பொறுத்து 20 முதல் 100 நாட்கள் தேவைப்படும். விதைகள் முளை விட்டவுடன் பாதியளவு நிழலில் (20-30%) கொள்கலனில் நாற்றுகளைத் தனித்தனியாக வளர்க்க வேண்டும். மாற்றாக 20-40 செ.மீ. அளவு கொண்ட தண்டுத் துண்டுகள் மூன்று வாரங்களில் வேர் பிடிக்கும். பின்னர் 9-12 மாதங்களான நாற்றுகள் நடவு செய்யப்படுகின்றன.

குட்டை ரகங்கள் 2.5×2.5 மீ. இடைவெளியிலும், நெட்டை ரகங்கள் 4.0×4.0மீ. இடைவெளியிலும் ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் 0.75×0.75×0.75 மீ. குழிகளில் நடவு செய்ய வேண்டும். ஐந்து முக்கியக் கிளைகளை விட்டுவிட்டு மற்றவற்றை வெட்டிவிடுவது நல்ல மகசூல் கிடைக்க வழிவகுக்கும்.

நோய்த் தடுப்பு

காற்றின் ஈரப்பதம் அதிகமாக உள்ள நேரத்தில், அதிக மழை அல்லது வெள்ளப் பகுதிகளில், நோனி பயிரைப் பூச்சி, பூஞ்சான நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது. சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மீன் எண்ணெய், வேம்பு, சோப்பு ஆகியவற்றைக் கலந்து பயன்படுத்தலாம். நாற்று அழுகல், வேர் அழுகல் நோய்களைக் கட்டுப்படுத்த டிரைகோடெர்மா விரிடி (2 கி.கி./ஹெக்டேர்) மற்றும் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் (2 கி.கி./ஹெக்டேர்) அளிக்க வேண்டும்.

(அடுத்த வாரம்: நோனி அறுவடையும் மதிப்பூட்டலும்) 
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் 
தொடர்புக்கு: velu2171@gmail.com

 

http://tamil.thehindu.com/general/environment/அந்தமான்-விவசாயம்-11-நோனி-பயிரிடுவது-எப்படி/article9408730.ece

  • தொடங்கியவர்

 

அந்தமான் விவசாயம் 12: நோனி அறுவடையும் மதிப்பூட்டலும்

noni_3101887f.jpg
 
 
 

நோனி பழங்கள் வெள்ளை நிறமாக மாறும்போதோ அல்லது நன்கு பழுத்த பின்னரோ சிறிய பழக்காம்புகளோடு அறுவடை செய்ய வேண்டும். மூன்றாம் ஆண்டு முதல் மகசூல் கொடுக்க ஆரம்பிக்கும் நோனி தாவரம், ஐந்து வருடங்களிலிருந்து தொடர்ச்சியாக மகசூல் தரும். நோனி வகை, மரபுவழி, சுற்றுச்சூழல் (மண்), சாகுபடி முறை அடிப்படையில் ஆண்டு மகசூலானது மாறுபடும். மண்வளம், சுற்றுப்புறச் சூழல், மரபுவழி, தாவர அடர்த்தி ஆகியவற்றின் மூலம் மகசூல் தீர்மானிக்கப்படுகிறது.

அந்தமான் நிகோபார் தீவுகளில் பழங்குடியினரால் இயற்கையாகப் பராமரிக்கப்படும் நோனியானது உற்பத்தி குறைவாக உள்ள போதும், மருத்துவக் குணங்களில் சிறந்து காணப்படுகிறது.

சேகரிப்பு

அறுவடை செய்யப்பட்ட பழங்கள், சுத்தமான கூடைகளில் சேகரிக்கப்பட்டுக் கழிவு நீக்கப்பட வேண்டும். பின்னர் 1.5% சோடியம் ஹைபோ குளோரைடு கரைசலில் கழுவி நன்கு உலர்த்தப்பட வேண்டும். இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட பழங்கள் கூடைகளில் அடைக்கப்பட்டுத் தொழிற்சாலைகளுக்கு முடிந்தவரை விரைந்து அனுப்பப்படவேண்டும். இவ்வாறு செய்வதால் இப்பழங்கள் குறைந்தபட்சம் 10 முதல் 15 நாட்கள்வரை கெடாமல் இருக்கும்.

சுவையூட்டல்

பல மருத்துவக் குணங்களைக் கொண்டிருக்கும்போதும், பழத்திலிருந்து வரும் விரும்பத் தகாத மணத்தால் நோனி பழத்தின் பயன்பாடு குறைவாகவே உள்ளது. பழங்குடியினரைத் தவிர்த்த மற்றவர்கள் இப்பழத்தை நேரடியாக உண்பதையோ சாற்றைப் பருகுவதையோ விரும்புவதில்லை. எனவே, இதன் விருப்பத் தன்மையையும் சந்தை மதிப்பையும் அதிகரிக்க நோனி பழச்சாற்றை, மற்றப் பழச்சாறுகளுடன் போதிய விகிதத்தில் கலக்க வேண்டும்.

மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, அன்னாசிப் பழம், இலந்தை, மாம்பழம், பெல் எனப்படும் வில்வப் பழச்சாற்றுடன் நோனி பழச்சாற்றைக் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து செறிவூட்டம் செய்து, குறிப்பிட்ட வெப்பநிலையில் பாட்டில்களில் அடைப்பதன் மூலம், இதன் ஆயுட்காலத்தையும் சுவையையும் அதிகரிக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் முதன்முறையாக நான்கு புதிய நோனி ரகங்களையும் போர்ட்பிளேரில் உள்ள மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மதிப்புக்கூட்டல்

உலர் பிஸ்கட்டுகள் / ரொட்டிகள், செறிவூட்டம் செய்யப்பட்ட நோனி குளிர்பானக் கலவை, நோனி பழச்சாறு சேர்க்கப்பட்ட ஊட்டச்சத்து பானங்கள் போன்றவற்றைத் தயாரிப்பதன் மூலம் நோனியின் பயன்பாட்டையும் ஏற்புத்திறனையும் அதிகரிக்க முடியும்.

தமிழகத்திலும் பல்வேறு நிறுவனங்கள் நோனி பழச்சாறு கலக்கப்பட்ட பொருட்களைச் சந்தைப்படுத்தும் முனைப்பில் இயங்கிவருகின்றன. நோனி மூலம் விவசாயிகள், தொழில்முனைவோர் பயனடைய முடியும்.

கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் 
தொடர்புக்கு: velu2171@gmail.com

 

http://tamil.thehindu.com/general/environment/அந்தமான்-விவசாயம்-12-நோனி-அறுவடையும்-மதிப்பூட்டலும்/article9421286.ece

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

அந்தமான் விவசாயம் 13: பயன்தரும் பன்முகத் தோட்டங்கள்

andaman_3108056f.jpg

இயந்திரங்களின் உதவியுடன் கண்ணுக்கெட்டிய தொலைவுவரை ஒரே பயிரைப் பயிரிட்டு, அதிக மகசூல் ஒன்றே குறிக்கோளாய் மாறிவிட்ட நவீன வேளாண்மை முறைகள் நிலையற்றவை. இயற்கைக்கு முரணானவை என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவரும் கருத்தாக மாறி வருகிறது. இத்தகைய முறைகள் வேளாண்மையின் பன்முகத்தன்மையை குலைப்பதோடு பருவநிலை மாறுபாட்டால் பெரிதும் பாதிக்கப்படக்கூடியவை என்பது முதன்மைக் காரணங்கள்.

அதேநேரத்தில் வேளாண்மைக்குப் பயன்படும் நிலத்தின் மொத்தப் பரப்பளவு குறைந்துவருகிறது. மக்களின் வாழ்க்கை முறை விரைவாக மாறிவரும் இக்காலக் கட்டத்தில் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், மருத்துவக் குணமுள்ள மற்றத் தாவரங்களை உணவில் சேர்த்துக்கொள்வதும் பண்பு குறைந்து வருகிறது. மேலும் பல இடங்களில் நிலங்கள் சரியாகப் பயன்படுத்தப்படுவதும் இல்லை.

வீட்டுத் தோட்டங்களின் அவசியம்

இப்படிப்பட்ட சூழலில் அந்தமான் நிகோபார் தீவுகளில் வாழும் பழங்குடியினரும், பல்லாண்டுகளுக்கு முன் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து குடிபெயர்ந்தோரும் பயன்தரும் தோட்டங்களைத் தங்கள் வீடுகளைச் சுற்றி உருவாக்கிப் பலன் பெற்று வருகிறார்கள். அதேநேரம், வேளாண்மையின் பன்முகத் தன்மையையும் இவர்கள் பேணிவருகின்றனர். இத்தகைய தோட்டங்களை மற்ற வெப்பமண்டலத் தீவுகளான இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவிலும் காண முடிகிறது. லட்சத்தீவிலும் இத்தகைய தோட்டங்கள் காணப்பட்டாலும், அவற்றின் அளவு சிறியது. இத்தகைய வீட்டுத் தோட்டங்கள் இத்தீவுகளின் பாரம்பரியம் என்றே கூறலாம்.

அந்தமான் நிகோபார் தீவுகளின் விவசாய நிலங்களின் மொத்தப் பரப்பளவில் 63 விழுக்காடு இத்தகைய வீட்டுத் தோட்ட வேளாண்காடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வகையான தோட்டங்களில் பயன்தரும் மரங்களோடு காய்கறிகள், பழ வகைகள், கீரை வகைகள், கிழங்கு வகைகள், மருத்துவத் தாவரங்களும் வளர்க்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான கிழங்கு வகைகள், காய்கறிகள் உள்நாட்டு ரகங்கள்.

இவற்றின் மரபணு வேறுபாடுகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை, இந்த மரபணுக்கள் நோய், பூச்சி தாக்குதலில் இருந்து பயிரைக் காக்கும் திறனைத் தரவல்லவை. இவையனைத்தும் இன்றைய ‘வேளாண்காடு வளர்ப்புமுறை’ தத்துவத்தைப் பின்பற்றியே அமைந்துள்ளதுபோல் காணப்படுகிறது. இந்த வீட்டுத் தோட்டங்கள் இந்த முறைக்கு முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய தோட்டங்கள் அறிவியல்பூர்வமாகப் பருவநிலை மாற்றங்களால் மிகக் குறைந்த அளவே பாதிக்கப்படுவதால் நிரந்தரத்தன்மை கொண்டது.

 

http://tamil.thehindu.com/general/environment/அந்தமான்-விவசாயம்-13-பயன்தரும்-பன்முகத்-தோட்டங்கள்/article9441400.ece

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரின் வாழ்வில் இன்றியமையாத ஒன்று விவசாயம் அதற்க்கு இப்போதெல்லாம் பெரிதாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை தாயகத்தில். புலம்பெயர் தேசங்களில் நவீன முறையில் பயிர் இடுவதை பார்க்கும்போது எமக்கும் விவசாயம் செய்வதற்கு ஆவலாக இருக்கின்றது ஆனால் அங்கு சென்று அதனை செய்வதற்கு எமது ஏனைய காரணங்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை ஆசைகள் எல்லாம் ஆசையாக உள்ளது.

பயன் உள்ள பதிவுகள். 
பகிர்வுக்கு நன்றி ஆதவன் CH .....!

  • தொடங்கியவர்

அந்தமான் விவசாயம் 14: வீட்டுத் தோட்ட வேளாண் காடு

andaman_3111238f.jpg

பன்முகத்தன்மை கொண்ட வீட்டுத் தோட்டங்கள் பெரும்பாலும் இயற்கையாக வளர்ந்த காடுகளை முற்றிலும் அழிக்காமல் சிறிது மாற்றங்கள் செய்தோ அல்லது ஒரு பகுதியில் நன்கு வளரும் பயன் தரும் மரங்களைத் தோட்டங்களில் நட்டோ உருவாக்கப்பட்டவை.

தற்போது இத்தகைய தோட்டங்கள் குறைந்தபட்சம் 400 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடங்களிலும்கூட உருவாக்கப்படுகின்றன. முன்பே நாம் கண்டதுபோல் தென்னை மரங்கள் நிகோபார் பழங்குடியினருடைய பொருளாதாரத்தின் உயிர்நாடி. இருந்தாலும் பன்முகத்தன்மை கொண்ட வீட்டுத் தோட்டங்கள், ஒவ்வொரு பழங்குடியினக் குடியிருப்புப் பகுதியிலும் காணப்படும் இன்றியமையாத ஒரு நிலப் பயன்பாட்டு முறை.

இதைத் தவிர, அந்தமான் தீவுகளில் மேட்டுப்பாங்கான மற்றும் மலைச்சரிவுகளில் பின்பற்றப்படும் விவசாய முறைகள் பெரும்பாலும் வீட்டுத் தோட்ட வேளாண் காடுகளைச் சார்ந்தே அமைந்துள்ளன.

பாக்கும் வாழையும்

அந்தமானில் பின்பற்றப்படும் இம்முறையில் நிலஅமைப்பு, சமூகப் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் தன்மையைப் பொறுத்து மரங்கள், காய்கறிகள் வேறுபடுகின்றன. இத்தோட்டங்களில் பெரும்பாலும் பாக்கு மரங்கள் அதிகப் பரப்பளவில் வளர்க்கப்படுகின்றன. மேலும், தென்னைக்கு அடுத்தபடியாகப் பாக்கு மரங்களே முதன்மையானவை. சில இடங்களில் தென்னையிடையே பாக்கு ஊடுபயிராகவும் பயிரிடப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக அதிகமாகப் பயிரிடப்படுவது சீனாகேழா எனப்படும் கற்பூரவல்லி வகையைச் சேர்ந்த வாழை. கிழங்கு வகைகளான கருணை, சர்க்கரைவள்ளி, சிறுகொடி, சேம்பு மற்றும் நிகோபார் கொடி வகைகள் பயிரிடப்படுகின்றன. இதைத் தவிர உள்நாட்டு, புதிய ரகக் காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன.

வேலி மரங்கள்

தோட்டத்தைச் சுற்றி கிளைரிசிடியா, காட்டு அகத்தி, வில்வம் போன்றவை வேலியாகப் பேணப்படுகின்றன. தோட்டத்தின் ஒருபுறம் மூன்றுக்கும் மேற்பட்ட பசுமைமாறாக் காட்டு மரங்களான கர்ஜன், படாக், பாதாம் போன்றவற்றைக் காண முடியும். இத்தகைய மரங்கள் அந்தமானில் குடியிருப்புகள் அமைவதற்கு முன்பே பரவியிருந்த காடுகளின் எஞ்சிய பகுதிகள்.

இவற்றைத் தவிரத் தென்னிந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தோரின் வீட்டுத் தோட்டங்களில் புளி, இலவம் பஞ்சு மரங்களையும் காண முடியும். நிகோபார் பழங்குடியினரின் வீட்டுத் தோட்டங்களில் உணவுக்காகப் பயன்படும் தாழம்பூ மற்றும் பலவகை மூலிகைகளும் காணப்படுகின்றன.

(அடுத்த வாரம்: உணவுத் தன்னிறைவின் முதுகெலும்பு) 
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் 
தொடர்புக்கு: velu2171@gmail.com

http://tamil.thehindu.com/general/environment/அந்தமான்-விவசாயம்-14-வீட்டுத்-தோட்ட-வேளாண்-காடு/article9452805.ece?widget-art=four-all

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை

 
 
இல்லறத்தைப் போற்றி வாழ்வது..விருந்தினரை வரவேற்று அவர்க்கு வேண்டிய உதவிகளை செய்வதற்காகவே. அதுபோல இயற்கையும்.. மனிதன் வாழ செய்யும் உதவியே இயற்கை வேளாண்மை.
ஆம்! மனிதன் வாழ இயற்கை தன் செல்வத்தை அள்ளிக் கொடுத்துள்ளது. இயற்கையில் உள்ள வளங்களை ஒருங்கிணைத்து..மண் வளத்தையும், சுற்றுச் சூழலையும் பாதுகாத்து மகசூலை அதிகப் படுத்தும் முறை இயற்கை வேளாண்மை எனலாம். சுருங்கச் சொன்னால்..நிலம், நீர், மரம், பூச்சி இவைகளை அப்படியே விட்டு விட்டு விளைச்சல் பெருகுவதே இயற்கை வேளாண்மை எனலாம்.
இது வெற்றி பெற வேண்டுமாயின் மண், நீர் வளம் சிறப்பாக அமையவேண்டும். மண்ணை வளப்படுத்தி, கால்நடை சாணத்திலிருந்து பெறப்படும் உரங்களை பயன்படுத்தியும்..வீடுகளிலிருந்து பெறப்படும் காய்கறி கழிவுகள். அழுகிய காய்கறிகள் கொண்டு கம்போஸ்டு உரம் தயாரித்தும், மண் புழுவை உபயோகித்தும் இயற்கை உரங்களைப் பெற வேண்டும்.
பாரம்பரிய முறை விவசாயம் செய்ய ஆட்கள் தேவை. இயந்திரங்களுக்குப் பதிலாக கால் நடைகளை உபயோகிக்கும் போது மற்ற விவசாய வேலைகளுக்கும் ஆட்கள் தேவை. இதனால் வேலையில்லா பிரச்னை..வறுமை காரணமாக கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடியேற மாட்டான் விவசாயி.
இயற்கை விவசாயம் செய்கையில் விவசாயிக்கு தன் நிலத்துடன் ஆன உறவு நெருக்கமாகிறது. தன் நிலத்தில் எந்த இடத்தில் உயிர் சத்துகள் உள்ளன. எந்த நில அமைப்பு மோசமாக உள்ளது என அவன் அறிந்திருப்பான். சாணம், எரு போன்றவை, தொழு உரம்,இவற்றை மக்கச் செய்து பயிருக்குப் போடுவதால் மகசூல் கூடுவதுடன், மண் வளம் காக்கப் படுகிறது. இலைகள், அழுகிய காய்கறிகள், சோளத் தட்டு,கடலைஓடு இவற்றை மக்கச் செய்வதால் மண்ணின் நீர் பிடிப்புத் தன்மை அதிகரிக்கிறது.
ஒரே பயிரை திரும்பத் திரும்ப பயிரிடாமல் மாற்று பயிர்களை பயிரிடுவதன் மூலம் நிலத்திற்கு பயிர் சுழற்சி கொடுப்பதுடன் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. பூச்சி நோய் தாக்கம் குறைகிறது.இப்படிச் செய்வதால் ஆண்டுக்கு ஒரு முறை உளுந்து,பாசிப்பயிறு,காராமணி ஆகியவற்றை பயிரிடலாம்.
நிலத்தின் மண் பரிசோதனை மிகவும் அவசியம்.மண்ணில் உள்ள சத்துகள் பற்றி அறிந்து அம் மண்ணிற்கு ஏற்ற உரம் இடுவதால் மகசூலை அதிகரிக்கலாம். சிக்கிம் மாநிலத்தில் 2015க்குள் முற்றிலும் இயற்கை விவசாயத்திற்கு மாற அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் ரசாயன விவசாயமான தற்போதைய விவசாயத்திற்கு விடை கொடுக்கப்படும்.இம் மாநிலத்தில் 1997 முதல் பிளாஸ்டிக் மற்றும் ரசாயன கழிவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேதியியல் விவசாயத்தை ஒழித்துக் கட்ட வேதியியல் ரசாயன மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இயற்கை விவசாயத்திற்கு மாறினாலும் இவர்களுக்கு இயற்கை விவசாயத்தின் பலன் உடனடியாகக் கிடைக்கவில்லை.ஆனால் தொடர் முயற்சியால் தற்போது மலடாயிருந்த மண்வளம் மீட்கப்பட்டு நற்பலன்கள் இப்போது கிடைக்க ஆரம்பித்துள்ளனவாம். சிக்கிமின் இந்த வெற்றி மெதுவாக இமாச்சல பிரதேசம்,அந்தமான் நிகோபார் தீவுகளிலும் பரவத் தொடங்கிவிட்டது.
வாழும் சூழலும்..உழவும்..இரண்டுமே மனித வாழ்வில் பின்னிப்பிணைந்தவை. பூச்சிக் கொல்லி ரசாயனம்..உப்பு உரங்கள் இவற்றால் லாபமும் கிடையாது, விவசாயிக்கும் கடன் அதிகரிக்கும், விளை நிலமும் தரிசு நிலமாகும்.
ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறுகையில் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பகுதி காடாக இருந்தது.ஆனால் 1986 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப் பட்ட ராக்கெட் 11 விழுக்காடு மட்டுமே காடு இருப்பதாகக் காட்டியுள்ளது.அதிலும் மூன்று விழுக்காடு முற்புதர்கள்.(உலகளவில் ஐந்தில் நான்கு பங்கு காடுகள் அழிக்கப்பட்டு விட்டன.)
இயற்கை வழி மேலாண்மை என்பது யூரியாவிற்கு பதில் சாணி போடுவதில்லை. உயிர் இல்லா இயற்கை, உயிர் உள்ள இயற்கை இவற்றிற்கிடையே உள்ள உறவுகளை அறிந்து பயிர் செய்வது.எடுத்துக் காட்டாக பயிர்ச் செடிகளை உண்ணும் பூச்சிகள் மிகவும் சொற்பம். அவற்றை உண்ணும் பூச்சிகளும், குருவிகளுமே உலகில் அதிகம். பூச்சிகளைக் கொல்ல நஞ்சு தெளிக்கையிலே நன்மை செய்யும் பூச்சிகளும் இறந்தன.
ரசாயன உரங்கள் விளைச்சலை உயர்த்த உற்பத்தி செய்யப்பட்டது அல்ல. உலகப்போரின் போது போர்க்களத்தில் வெடி உப்பு தயாரித்த கம்பெனிகளுக்கு..போரில்லாக் காலத்திலும் லாபம் உண்டாக்கவே ரசாயன உரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதுபோல பூச்சிக் கொல்லி மருந்துகள் பூச்சிகளைக் கொல்ல கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல. இரண்டாவது உலகப் போரில் ரஷ்ய படை வீரர்களைக் கொல்ல கிணற்றிலும், ஆற்றிலும் கொட்ட ஹிட்லர் படையைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு அவை. போர் முடிந்த பின்னும் இக் கம்பெனிகள் லாபம் ஈட்ட பூச்சி மருந்து என விவசாயிகளின் தலையில் இவை கட்டப்பட்டன.
இதன் விளைவாக தானியம், பருப்பு, காய்கறி, இறைச்சி, பால் அவ்வளவு ஏன் ..தாய்ப்பாலும் நஞ்சானது. இதனை 1984ஆம் ஆண்டு கோவை வேளாண் பல்கலைக் கழகம் கண்டுபிடித்தது. ஆனால் 26 ஆண்டுகள் கடந்தும்..இதுவரை இயற்கை வழிப்பயிர் பாதுகாப்பு பற்றி அரசு புதிதாக எதுவும் முயற்சி எடுக்காதது வருத்தத்தையே ஏற்படுத்துகிறது.
இன்று..
நிறைய விளைச்சல் எடுத்த நிலம் வளமிழந்து தரிசாகி விட்டது. விளைநிலங்களில் பயிர் சாகுபடி செய்து லாபம் ஈட்ட முடியாத விவசாயிகள் வேலை தேடி தங்கள் நிலங்களை விற்று விட்டு நகரங்களுக்கு குடி பெயர்கின்றனர். பல விளைச்சல் நிலங்களில் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு விட்டன. பல விளைச்சல் நிலங்களில் பொறியியல் கல்லூரிகள் கட்டப்பட்டுவிட்டன. பல விளைச்சல் நிலங்களில் குடியிருப்பிற்கான கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்டன.
இதையெல்லாம் அறிந்தும் இன்று விஞ்ஞானிகள் மண்ணுக்கும், உழவிற்கும்,மனித குலத்திற்கும் கேடு விளைவிக்கும் ரசாயன உரங்களையும், மரபணு மாற்ற விதைகளையும் பரப்ப முயற்சி எடுத்து வருகின்றனர். வணிகத்திற்காக ரசாயன உரங்கள், எந்திர வேளாண்மை ஆகியவை புகுந்ததால் தான்வேலையில்லாத் திண்டாட்டமும் உருவாகிறது, விவசாயிகளும் அழிகின்றனர் காடுகள் அழிந்ததால் மழை அழிந்தது. சாகுபடி இழப்பு,வடிகால்கள், ஏரிகள், கண்மாய்கள் தூர் வாராததால் வெள்ளப் பெருக்கும்..சாகுபடி இழப்புமேற்படுகிறது.
65000 ஏரி ,கண்மாய், குளம்,குட்டைகள் இருந்தன தமிழகத்தில் மட்டும். ஆனால் இன்று பெரும்பான்மையானவை வரப்புகள் வெட்டப்பட்டு பேருந்து நிலை யங்களாகவும், அரசு குடியிருப்புகளாகவும் மாறி விட்டன. பூமியை ஆழமாக ஆழ்துளை கிணறு வெட்டி தண்ணீரை எடுத்து, தென்னை,கரும்பு பயிர் சாகுபடியாகின்றன.
மரபணு கத்திரிக்காயில் பூச்சி இருக்காதாம். எப்படி இருக்கும்? அதில் நச்சுத்தன்மை உள்ளதே! அதனுள் பூச்சி எவ்வாறு வளரும். ஆனால் இயற்கை வளத்தில் பிறந்த கத்திரிக்காயில் பூச்சியைக் கொல்லும் விஷம் இல்லை. அதில் உள்ள புழுவை நாம் காயை நறுக்குகையில் அப்புறப்படுத்தலாம். ஆனால் அதேபோல நஞ்சை அப்புறப் படுத்த முடியாதே!
மரபணு மாற்று..
உணவை நஞ்சு உள்ளதாக இருக்க வைக்கும் மனித உடலில் ஒவ்வாமையை உண்டு பண்ணும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஒழிக்கும் ஆண்மை அற்றவனாக ஒருவனை ஆக்கும் பீ.டி.மரபணு கத்திரிக்காய் மட்டுமல்ல வெண்டை, நிலக்கடலை, தக்காளி, சோளம், கடுகு, நெல், உருளைக் கிழங்கு, வாழை என அனைத்துப் பொருள்களிலும் மாசை ஏற்படுத்தும். மரபணு புகுந்து விட்டால் எதையும் இயற்கையில் விளைந்தது என சொல்ல முடியாது. சர்க்கரை நோய், புற்று நோய்,ஆண் மலடு,நரம்புக் கோளாறு, சளித்தொல்லை ஆகியவற்றை இவை ஏற்படுத்தும்.
சரி.. இயற்கை வேளாண்மைக்கு உடனடியாக மாற முடியுமா?
முடியும்.. இயற்கை வேளாண்மைக்குத் திரும்பினால், முதலில் இருந்த உற்பத்தி அளவினை எட்ட மூன்று முதல் ஐந்து வருடங்கள் ஆகும்.வளம் இழந்த மண் மீண்டும் வளம் பெறவும், இயற்கையாகவே பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் திறன் பெறவும் இக்கால அவகாசம் தேவைப்படும்.
வேதியல் உரங்களுக்குப் பதிலாக உயிரியல் உரங்களும் வேதியல் பூச்சிக் கொல்லிகளுக்குப் பதிலாக, உயிரியல் பூச்சிக்கொல்லிகளும் பயன் படுத்தப் பட வேண்டும்.டிராக்டர்களுக்குப் பதிலாக கால்நடைகளைக் கொண்டு உழ ஆரம்பிக்கலாம். நீர்ப்பாசனத்தை நம்பினால் பருவகாலங்களில் மழையின் அளவைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ப பயிரை பயிரிடலாம்.
விவசாயத்தில் இதனால் அதிக உள்ளூர் மக்கள் ஈடுபட வேண்டியிருக்கும்.இதனால் விவசாயிகள் நகரங்களுக்கு வெளியேறுவது குறையும். மூன்று வருஷங்களிலிருந்து..ஐந்து வருஷங்களுக்குப் பிறகு உணவு உற்பத்தி அதிகரிக்கும்.மேலும் இயற்கை வேளாண்மை மூலம் விளையும் பயிருக்குக் கூடுதல் விலை கிடைக்கும். ஆனால் மண்வளம் எப்போதும் பாதுகாக்கப் பட வேண்டும்.
இதற்கு ஒரு உதாரணம்..கியூபா.. கியூபாவில் நாடு முழுதும் இயற்கை வேளாண்மைக்கு மாறியது.மொத்தம் 218 வேளாண் கூட்டுறவு மையங்களும் அரசு பண்ணைகளும் பயிர் பாதுகாப்பிற்காக பூச்சிகளைக் கட்டுப்படுத்த உயிரியல் பூச்சிக் கொல்லிகளை உற்பத்தி செய்தன. மண்ணில் உருவாகும் தாவர நோய்களை கட்டுப் படுத்த நுண்ணுயிரிகள் பெருமளவில் பயன்படுத்தப் பட்டன.களைகளைக் கட்டுப் படுத்த பயிர் சுழற்சி கடைபிடிக்கப் பட்டது.
மண்ணை வளப்படுத்தி..கால் நடைகளிலிருந்து பெறப்படும் உரங்களை உபயோகித்தும்,தாவர உரங்களை பயன்படுத்தியும், வீட்டுக் கழிவுகளிலிருந்து கம்போஸ்ட் உரம் தயாரித்தும்..மண்புழுக்களைக் உபயோகித்து தொழிற்சாலை கழிவுகளை உரமாக தயாரித்து பயன்படுத்தினர்.உலகிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு இயற்கை உரங்கள் பயன்படுத்தப் பட்டன.
இவ்வாறு மிகப் பெரிய அளவிற்கு இயற்கை வேளாண்மைக்கு கியூபா மாறாமல் இருந்திருந்தால்..சோமாலியாவில் ஏற்பட்ட உணவு பற்றாக்குறை இங்கும் ஏற்பட்டிருக்கும். இந்தியாவில் இயற்கை வேளாண்மை நிலையை உருவாக்க.. மரம்,செடி வளர்ப்பதில் உள்ள சந்தேகங்களை வேளாண்துறை இலவசமாக தீர்த்து வைத்து..உதவவும் செய்கிறது.
விவசாயத்தில் ஈடுபட இளஞர்களுக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டும்.அப்போதுதான் இளைஞர்கள் அத்துறையில் நிறைய சாதிக்க முடியும். ஓய்வு பெற்றவர்கள் கிராமப்புறங்களுக்கு வந்து விவசாயத்தைக் கவனிக்க வேண்டும்.அவர்களை அரசும் ஊக்குவிக்க வேண்டும். .மலைக்காடுகள் அழியாமல் ..பசுமைக் காடுகளை உருவாக்கி..இயற்கை வளத்தை மீட்க வேண்டும்.
இப்போது தமிழகத்தில் நம்மாழ்வார் போன்றவர்கலும்..கர்நாடகாவில் பாலேக்கர் ஆகியவர்களும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கின்றனர். நாடு முழுதும் இயற்கை விவசாயம் மீண்டும் உருவாகி..விவசாயிகள் வாழ்வு தழைத்து..தற்கொலைக்கு அவர்களை விரட்டாத நாள் உருவாக வேண்டும் என்பதே நம் அனைவரின் பிரார்த்தனையாக இருக்கட்டும்..
கடைசியாக ..பல அரசுகளை தன் குடையின் கீழ் கொண்டுவரும் வலிமை பெற்றவன்
விவசாயி..அவனையும்..அவனால் பயிடப்படும் ..நம் வயிற்றை நிரப்பும் கடமை நமக்கு உண்டு என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (உழவு 1031)
(பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியுள்ளது.ஆகவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது)
நன்றி: மணற்கேணி
  • தொடங்கியவர்

அந்தமான் விவசாயம் 15: உணவுத் தன்னிறைவின் முதுகெலும்பு

andaman_3114215f.jpg
 
 
 

பொதுவாக அந்தமானில் பின்பற்றப்படும் வீட்டுத் தோட்டங்கள் ஐந்து அடுக்குத் தாவர வகைகளைக் கொண்டுள்ளன:

வீட்டுத் தோட்டங்களின் அமைப்பு

முதல் அடுக்கு (1 முதல் 2 மீட்டர் உயரம்) - ஒரு வருடப் பயிர்களான இஞ்சி, மஞ்சள், மரவள்ளி, சிறுகிழங்கு, சேனைக் கிழங்கு, அன்னாசிப்பழம்.

இரண்டாம் அடுக்கு (2 முதல் 5 மீட்டர் உயரம்) – சாதிக்காய், பட்டை, இலவங்கம், மற்ற உள்நாட்டு நறுமணப் பொருட்கள்.

மூன்றாம் அடுக்கு (5 முதல் 10 மீட்டர் உயரம்) – மா, புளி, தீவன மரங்கள் மற்றும் பல வகையான முந்திரி மரங்கள்.

நான்காம் அடுக்கு (10 முதல் 15 மீட்டர் உயரம்) – பாக்கு, பலா, இலவம் பஞ்சு, நாவல், பல வகையான வெப்பமண்டல மரங்கள்.

ஐந்தாம் அடுக்கு – தென்னை (பொதுவாக அந்தமான் மற்றும் கச்சால் உயரம் கொண்ட வகை), பல வகையான வெப்ப மண்டல மரங்கள்.

வேளாண் தன்னிறைவு

இத்தகைய அடுக்குமுறை தோட்ட அமைப்பு அதிகச் சூரிய ஒளி, மண்ணின் சத்து, நீர் ஆகியவற்றை நன்கு பயன்படுத்திக்கொண்டு அதிக இடைவெளியின்றி நன்கு வளரக்கூடியது. இவ்வகையான தோட்டங்களின் பன்முகத்தன்மை உயிரினப் பன்மைத்தன்மையைக் காப்பதுடன், பல்வேறு வகை விளைப்பொருட்களைத் தருவதால் மக்களின் தேவைகள் பூர்த்தியாகின்றன. இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட வீட்டுத் தோட்டங்கள், அந்தமான் நிகோபார் தீவுகளின் இயற்கையின் பிரதிபலிப்பு எனலாம்.

இவ்வகையான வேளாண் காடுகள் சார்ந்த வீட்டுத்தோட்டங்கள் கோழி, வாத்துகள் வளர்ப்பதற்கு உதவியாக இருப்பதால் வீட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல், விவசாய நிலைத்தன்மையையும் தன்னிறைவையும் தருகின்றன. இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட வீட்டுத்தோட்டங்கள் அந்தமான் தீவுகளின் உணவுத் தன்னிறைவுக்கான முதுகெலும்பென்றால் அது மிகையல்ல.

சிலப்பதிகாரச் சிறப்பு

இதற்கான மாதிரிகளைக் கேரளா, தமிழக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காண முடிகிறது. இதன் சிறப்புகளை ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் காணமுடிகிறது. மழை அளவு, நீரின் கையிருப்பு, மண்ணின் தன்மைக்கேற்ப வேளாண் பன்முகத்தன்மை கொண்ட வீட்டுத் தோட்டங்களை அமைத்துக்கொண்டால், அவை சுற்றுச்சூழலையும் உடலையும் பேண உதவும் என்பதில் ஐயமில்லை.

 

அந்தமான் விவசாயம் 16: அங்கக வேளாண்மையும் ஆரோக்கியமும்

 

அங்கக வேளாண்மை என்பது நம் மண்ணுக்குப் புதிதல்ல. பண்டைத் தமிழ் நூல்களான பெரும்பாணாற்றுப்படையும் திருக்குறளும் அந்தக் கால வேளாண் முறைகளை விரிவாக எடுத்துரைக்கின்றன. எனவே, அது நம் பண்டைய கலாசாரத்தின் ஒரு பகுதி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

வேளாண்மை: நேற்றும் இன்றும்

அங்கக வேளாண்மை என்பது அங்ககக் கழிவு, நன்மை தரும் உயிரினங்களை வேளாண் பண்ணையில் பெருகச் செய்தோ அல்லது நேரடியாகப் பயன்படுத்தியோ மண்ணின் வளத்தைப் பாதுகாத்துச் சுற்றுச்சூழல் மாசுபடாமல் உணவு உற்பத்தி செய்வது. ஆனால் மக்கள்தொகைப் பெருக்கம், அந்நியர்களின் தவறான வேளாண் கொள்கைகள், இயற்கைக்குப் புறம்பான வேளாண் வளர்ச்சி மற்றும் பிற காரணங்களால் மண்ணின் வளம் சீர்கெட்டுச் சுற்றுச்சூழல் சீரழிந்துவிட்டது. இதன் மற்றொரு விளைவாகச் சமமற்ற அல்லது பற்றாக்குறை உணவை மக்கள் உட்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது.

இதை நாம் சரிசெய்ய இயலாதா? ஏன் இந்த இடத்தில் அங்கக வேளாண்மை பற்றி பேசவேண்டும்?

ஏனெனில், விளைச்சல் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட, தற்கால உணவு உற்பத்தி முறைகளில் மறைந்திருக்கும் மற்றொரு விரும்பத்தகாத விளைவு இருக்கிறது. அது உயிர்வேதிப்பொருட்கள், சத்துகள், தாது உப்புகளின் குறைபாடாகும். ஆனால், அங்கக வேளாண்மையில் விளைச்சல் அதிகரிப்பது மட்டுமல்லாமல் உடலுக்கு நன்மை பயக்கும் உயிர்வேதிப்பொருட்களைத் தருவதுடன், இயற்கை வளத்தைப் பேணுவதிலும் கவனம் செலுத்துகிறது என்பது அதன் சிறப்பம்சம். அப்படியென்றால் இது அறிவியல்பூர்வமாக எந்த அளவுக்கு உண்மை? பொருளாதார ரீதியில் சாத்தியம்தானா என்னும் கேள்விகள் எழும்.

 

http://tamil.thehindu.com/general/environment/அந்தமான்-விவசாயம்-16-அங்கக-வேளாண்மையும்-ஆரோக்கியமும்/article9479056.ece?ref=relatedNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.