Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனந்தசயனபுரி

Featured Replies

அனந்தசயனபுரி

சிறுகதை: சாம்ராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

 

வன் திருவனந்தபுரம் போய் இறங்கும்போது நல்ல மழை. இந்தக் கற்கிடக மழை, தொடங்கினால் நிற்காது பெய்துகொண்டே இருக்கும். ரயில் குழித்துறையைத் தாண்டும்போதே, மழை தொடங்கிவிட்டது. முன்பு இதுபோல் மழை பெய்தால், ரயில் கதவின் அருகில் நிற்பான். மழைக் கேரளத்தைப் பார்ப்பது ஆன்மிகம். அதிகாலையில் பச்சை வெளிக்குள் சிறிய அம்பலமும் (கோயில்), அதில் ஏற்றப்பட்டிருக்கும் விளக்குகளின் மினுமினுப்பும், கசிந்துவரும் மலையாளப் பாடல்களும் மனதைக் கனியச்செய்யும். ஆனால், இன்று அப்படி நிற்க முடியவில்லை. அவன் ஜன்னலைப் பார்ப்பதையே தவிர்த்தான். ஒருகட்டத்தில் முடியாமல், மேலே ஏறிப் படுத்தான். 

திருவனந்தபுரம், பரபரப்பு இல்லாமல் இருந்தது. சிவப்புப் பேருந்துகள், அலட்சிய ஆட்டோக்கள், இந்தியன் காபி ஹவுஸ், பிரமாண்ட மோகன்லால்.

இவன் அவசரம் இல்லாமல் நடந்தான். இறங்கிய எல்லோருக்கும் போவதற்கு வீடோ, விடுதியோ இருந்தது. ஆனால், இவனுக்கு அப்படி ஒன்று இல்லை. கொஞ்ச நாட்கள் முன்பு வரை இருந்தது; இப்போது இல்லை. நடந்தான். 'இன்னத்த லாட்டரி... இன்னத்த லாட்டரி...’ எனக் கரகரத்த குரல் ஒலித்தது. காந்தாரி அம்மன் கோயில் தெருவில் திரும்பினான். மழை, விடாது தூறிக்கொண்டிருந்தது. சுவர்களில் பச்சை படர்ந்திருந்தன. மணி பார்த்தான். பகல்

12 மணிக்கே இருட்டிவிட்டது. விடுதியில் அறையெடுக்கலாம் என்றால், கையில் பணம் குறைவாக இருந்தது. முடிந்த வரை அறையெடுப்பதைத் தவிர்த்தால் நல்லது என நினைத்துக்கொண்டான். அதை 'அந்த’ச் சந்திப்பே தீர்மானிக்கும்.

தெரு முழுக்க விடுதிகளாக இருந்தன.  கைவிடப்பட்ட ஒரு வீட்டில் இருந்து, பூனை ஒன்று மழையைப் பார்த்துக்கொண்டிருந்தது. ஏறக்குறைய தெருவில் யாருமே இல்லை. ஒரு நீள் மௌனம்போல தெரு கிடந்தது. காந்தாரி அம்மன் கோயில் பூட்டி இருந்தது. அங்கே நிரந்தரமாகப் பிச்சை எடுப்பவள், போத்திச் சுருண்டிருந்தாள். விடுதி ஒன்றில் தண்ணீர்த் தொட்டி நிரம்பி, மழைக்குப் போட்டியாக வழிந்துகொண்டிருந்தது. மாடியில் இருக்கும் தகரங்கள் காற்றில் ஆடி, வினோதமான சத்தங்களை எழுப்பின. யூனியன் ஆபீஸில் ஒருவரையும் காணவில்லை. பூட்டிய கிரில் கதவுக்குப் பின், நிறைய சிவப்புக் கொடிகள் தெரிந்தன.

இப்போது போனால், சாப்பாட்டு வேளை. தன் வருகை, அவர்களின் சாப்பாட்டைக் குலைக்கக்கூடும். இரண்டு மணிக்கு மேல் போனால், சாப்பிட்டு முடித்திருப்பார்கள். மறுபடியும் மணி பார்த்தான்... ஒரு மணி. பாங்கொலி கேட்டது. ஒரு டீ குடித்தால், நேரத்தை கொஞ்சம் கடத்தலாம். நடந்தான். டீக்கடைகள் ஒன்றும் கண்ணில் படவில்லை. கால் போன போக்கில் சென்று ஒரு தெருவில் திரும்பினான். முழுக்க வீடுகளாக இருந்த தெருவின் மத்தியில், போலீஸ் வேன் ஒன்று நின்றது. அதில் இருந்து டிரைவர் தன்னையே பார்ப்பதுபோல் இருந்தது. திரும்பி நடந்தால், கூப்பிட்டு விசாரிக்கக்கூடும். மெதுவாக நடந்தான். வேன் அணைக்காமல் லேசான அனத்தலோடு நின்றிருந்தது. கேட்டால், என்ன பதில் சொல்வது? இந்தத் தெரு முட்டுச்சந்தாக இருந்தால், இன்னும் மோசம். என்னதான் மலையாளம் பேசினாலும், தமிழன் எனக் கண்டுபிடித்துவிடுவார்கள். உடனடியாக 'பாண்டி’ என்ற இளக்காரம் கண்களில் தெரியும்.

போலீஸ்காரன் பார்த்துக்கொண்டே இருந்தான். கட்டை மீசையோடு ஒரு சாயலுக்கு பிஜூ மேனன் போல் இருந்தான். ஒன்றும் கேட்கவில்லை. இவன் தாண்டி நடந்தான். தெரு முடிந்து சின்ன இடுக்கு ஒன்று தொடங்கியது. அதற்குள் இறங்கி நடந்தான். பெரிய வீடுகளில் பின்புறம்போல இறங்கிய பின்தான் தெரிந்தது. ஒரே கசடாக, துணிமொந்தைகளாக, கழிவுநீர் வழிந்தோடியபடி இருந்தது. கவனமாக நடந்தான்.

p74a.jpg

இடுக்குச் சந்து, ஒரு நடுவாந்திரத் தெருவில் கொண்டுபோய் சேர்த்தது. கொஞ்சம் நடமாட்டம் தெரிந்தது. டீக்கடை தென்பட்டது. வயசாளி ஒருவர் டீ அடித்துக்கொண்டிருந்தார். கடையில் வேறு எவரும் இல்லை. ரேடியோவில் 'நகரம் நகரம் மகா சாகரம்...’ என்ற தேவராஜன் மாஷேவின் பழைய பாடல் ஒலித்தது.

கட்டஞ்சாயா வந்தது. கண்ணாடி தம்ளரின் வழியே தெரு வேறு ஒரு நிறத்தில் தெரிந்தது.

''தமிழ்நாட்டுல எவிட?' என்றார் மலையாளக் கொச்சையுடன்.

'சென்னை.'

'இவிட எந்தா ஜோலி?'

'ஒரு ஆளைக் காணா வேண்டி!'

டீக்கடைக்காரர் அதன் பின் ஒன்றும் கேட்கவில்லை.

பெரிய வீடுகளால் நிரம்பியிருந்தது அந்தத் தெரு. தேநீர்க் கடை மாத்திரமே வேறு ஓர் உலகத்தின் பிரதிநிதி. கடை அடைப்புக்கான ஆவேசப் பிரகடனச் சுவரொட்டி, மழையில் ஊறி... பாதி சுவரிலும் பாதி வெளியிலும் காற்றில் ஆடியது. சாக்கடையில் நீர் அவ்வளவு கறுப்பாக இல்லை. எலி ஒன்று சிலிர்த்த முடியோடு பாதி உடல் வெளியே தெரிய நீந்திப் போனது. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவரின் குரல் சட்டென உரத்துக் கேட்டது. இப்போது நடக்க ஆரம்பித்தால்,  சரியாக இருக்கும்.

சாலை மேடேறியது. அரசு அச்சகத்துக்குள், இரண்டு மணி ஷிஃப்ட்டுக்கு வேகமாக நுழைந்துகொண்டிருந்தனர் ஆட்கள். ஒய்.எம்.சி.ஏ கிரவுண்டில், மழையில் நனைந்தவாறே சேறு படிந்த கேன்வாஸ்களோடு குட்டைப் பாவாடை அணிந்த சிறுபெண்கள் போய்க்கொண்டிருந்தனர். கலைப்பொருள் விற்பனையகத்தில் வெளியே வைக்கப்பட்டிருக்கும் யானைச் சிற்பத்தின் ஒரு பாதி, மழையில் நனைந்து கூடுதல் கறுப்பாகி இருந்தது. திருவிதாங்கூர் கிளப்பில் ஒன்றிரண்டு கார்கள் மாத்திரமே நின்றிருந்தன. மைதானத்தின் முடிவில் பாலித்தீன் கவரில் பொதிக்கப்பட்ட குப்பைகள் சிறிய குன்று என உயர்ந்திருக்க, குன்று சலசலத்தது. ஒரு பூனையின் தலை தெரிந்தது. ஒரு கணம் இவன் கண்களைச் சந்தித்த பூனை, மறுபடியும் குவியலுக்குள் மறைந்தது. சாலை, கீழ் இறங்கத் தொடங்கியது.

வீடு இருக்கும் தெருவுக்கு வந்து சேர்ந்தான். என்ன மாதிரி எதிர்கொள்வார்கள் எனத் தெரியவில்லை. உரத்துச் சத்தம் போட்டால் பக்கத்து வீட்டுக்குக் கேட்கும். நான்கு வீடு கொண்ட காம்பவுண்டு அது. தரையில் இருந்து 10 அடி கீழே இருந்தது அவர்களது காம்பவுண்டு. அண்டை வீட்டுக்காரர் யாராவது பார்த்தால் சிக்கல். 'ரொம்பக் காலம் ஆச்சே பார்த்து..?’ எனக் கேட்கலாம். என்ன பதில் சொல்வது? அவர்களுக்கு என்ன தெரியும்; எந்த அளவுக்குத் தெரியும் என இவனுக்குத் தெரியாது.

மழை, சுத்தமாக நின்றிருந்தது. வீட்டின் ஓட்டுக்கூரை தென்பட்டது. பதற்றமாக இருந்தது. ஏறக்குறைய 10 மாதங்கள் கழித்து வருகிறான். சந்தின் இடதுபக்க வீட்டின் சமையலறை கழிவுநீர்க் குழாய் அருகே, நாயுருவிச் செடி செழித்து இருந்தது. வீட்டின் மரச்சட்டங்களும் திரைச்சீலையில் தெரிய ஆரம்பிக்க, கதவு அருகே செருப்பு எதுவும் இல்லை. பிறகே கவனித்தான்... வீடு பூட்டியிருந்ததை.

அவனுக்கும் அவன் மனைவிக்குமான உரையாடல் அற்றுப்போய், மணவிலக்கு பெறுவதற்காக குடும்ப நீதிமன்றத்தை அணுகியிருந்தார்கள். இவன் வீட்டுக்கு வருவது, அறவே நின்றுபோய் இருந்தது. கடைசியாக ஒருமுறை பேசிப் பார்க்கலாம் என வந்திருக்கிறான். இன்னும் மூன்று மாதங்களில் குடும்ப நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும்.

திரும்பி நடந்தான். என்ன செய்வது எனத் தெரியவில்லை. எங்கு போயிருப்பார்கள்... வெளியூருக்கு எங்கேயாவது? சென்னையில் இருந்து புறப்பட்டு வந்தாயிற்று. ஒரு நாளோ இரண்டு நாளோ காத்திருப்பதைத் தவிர, வேறு வழி இல்லை. மறுபடியும் போய் வந்தால் செலவு. திருவனந்தபுரம் எனும்போது மனம் திடுக்கிடுகிறது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஞாபகங்கள் உண்டு. மழை வந்தால், இன்னும் மோசம்.

வீட்டுக்குக் கிளை பிரியும் தெரு அருகே நின்றான். இங்கு இருந்து பார்த்தால், சந்துக்குள் ஆட்கள் நுழைவது தெரியும். சுற்றும்முற்றும் பார்த்தான். நேந்திரம் பழம் சிப்ஸ் போடும் கடை அடைத்திருந்தது. அடுப்பு வைப்பதற்காக தகரத்தை வளைத்து கடையின் முன் நிறுத்திவைத்திருந்தார்கள். அந்தப் படிக்கட்டில் அமர்ந்தால், ஆள் இருப்பது தெரியாது. சந்தில் நுழைபவர்களைப் தகரத்தின் இடுக்கின் வழியாகப் பார்க்க முடியும். கால்களை நீட்டி அமர்ந்தான். பசித்தது. இப்படியே நடந்தால், தலைமைச் செயலகம் தாண்டி உணவகங்கள் உண்டு. அப்படிப் போனால் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பிந்து, அம்மா, ஸ்ரீகுட்டி எதிரே வர சாத்தியம் உண்டு. அப்படி ஒரு கணத்தை எதிர்கொள்ள அவனுக்குத் துணிச்சல் இல்லை.

p74b.jpgமரம், மழையை ஞாபகம் வைத்து சொட்டிக்கொண்டிருந்தது. இரண்டு கைகளிலும் பெரிய பைகளைத் தூக்கிக்கொண்டு மலையாள டப்பாக்கட்டு வேஷ்டி கட்டியவாறு ஒருவர் தெருமுனையில் தோன்றினார். அவர் நெருங்கிவரும்போது, இவனுக்கு அடையாளம் தெரிந்துவிட்டது. இவருடைய வீட்டில் இருந்து நான்கு வீடுகள் தள்ளி இருப்பவர்; எப்போதும் இவருடைய காம்பவுண்டு அருகே தண்ணீர் தேங்கி நிற்பதற்காக, குடியிருப்பவர்களையும் வீட்டு உரிமையாளரையும் திட்டுபவர். இவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி நடந்தார். முகத்தில் எங்கோ பார்த்த குழப்பம். சந்துக்குள் திரும்பும்போது, மறுபடியும் ஒருமுறை திரும்பிப் பார்த்து மறைந்தார். தகரத்தில் படிந்திருந்த புகையின் மீது நீர் ஒற்றையடிப் பாதையாக ஓடியது. கடைக்காரரின் பிள்ளையோ, பேத்தியோ, தகரத்தில் மலையாள அட்சரங்களை எழுதியிருந்தனர். அந்த இடத்தில் மாத்திரம் கறுப்பு கொஞ்சம் மங்கி இருந்தது. ஸ்ரீகுட்டி பள்ளிக்குப் போகிறாளா? ஒன்றும் அறியான்.

மணி பார்த்தான்... ஐந்து. எம்.ஜி சாலையில் இரண்டு பக்கங்களும் பிரமாண்ட கடைகள். எதிரே பறக்கும் செங்கொடியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தார் கே.எஃப்.சி போர்டில் இருக்கும் கிழவர். எல்லா கடைகளில் இருந்தும் இரண்டு கைகளிலும் பெரிய பைகளோடு ஆட்கள் வெளிவந்து காரில் ஏறிக்கொண்டிருந்தனர். போத்தீஸ் கடையைத் தாண்டும்போது, லேசாகக் குளிரெடுத்தது.

சைவப் பிரகாசச் சபையில் கண்ணாடி அணிந்த வயதானவர், குறைந்த வெளிச்சத்தில் தடித்த புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார். பாலம் கடந்தான். புத்தரிக்கண்டம் மைதானத்தில் ஏதோ கண்காட்சி. கிழக்கே கோட்டை பேருந்து நிலையம் பரபரப்பாக இருந்தது. கோயிலுக்குப் போகலாம் என நினைத்தான். கோட்டை மதிலைத் தாண்டி திரும்பி, கோயிலை நோக்கி நடந்தான். பொருள் வைக்கும் அறையில் பையையும் செல்போனையும் வைத்துக்கொள்ள, வேட்டியின் வாடகைக்கும் சேர்த்து 80 ரூபாய் கேட்டார்கள். இவன் பதில் எதுவும் சொல்லாமல் திரும்பினான்.

இ.எம்.எஸ் பூங்காவில் யாரோ பிரசங்கித்துக்கொண்டிருந்தார். சங்கு முகம் கடற்கரைக்குப் போகும் பேருந்தைக் கண்டுபிடித்து ஏறினான். நகர இரைச்சலில் இருந்து விலகி, தென்னைமரங்கள், வெள்ளை மண், சி.எஃப்.சி விளக்கின் கீழ் பரப்பப்பட்டிருக்கும் மீன்கள், ஆங்காங்கே அமர்ந்திருக்கும் நாராயண குரு, பொக்கைவாய் சிரிப்புடன் இ.எம்.எஸ்... எனப் பேருந்து கடந்தது. பீமாப்பள்ளி மசூதியைத் தாண்டும்போது, கடல் தெரிய ஆரம்பித்தது. முன்பு இங்கு இருவரும் அடிக்கடி வருவார்கள். அவளுக்கு இந்த இடம் மிகவும் பிடிக்கும்.

சங்கு முகம் கடற்கரையில் இறங்கும்போது இருட்டியிருந்தது. அந்த இருட்டிலும் சிலர் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். பெரிய குடும்பம் ஒன்று கடல் அலையில் சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் ஒருவர் திடுதிடுவெனக் கரைக்கு ஓடிவந்து, குழந்தை ஒன்றைத் தூக்கிக்கொண்டு மறுபடியும் அலைக்கு ஓடினார். ஸ்ரீகுட்டிக்கு என் முகம் ஞாபகம் இருக்குமா? தமிழும் மலையாளமும் கலந்து பேசுவாள். ஒரு சமயம் இவன் அச்சா; மற்றொரு சமயம் அப்பா. பையில் அவளுக்கான அச்சுமுறுக்கு இருந்தது.

இவன் மல்லாந்து படுத்தான். ஒரு பறவை தாழப் பறந்துபோக, அதன் ஒலி கேட்டு எழுந்தான். கடற்கரையில் ஆட்கள் வெகுவாகக் குறைந்திருந்தார்கள்.

கன்னிமாரா மார்க்கெட் வழியே போனது பேருந்து. இங்கே இறங்கினால், வீட்டுக்கு பக்கம். சடக்கென எழுந்து ''இறங்கணும்'' என்றான். வண்டி நிறுத்தத்தில் இருந்து புறப்பட்டிருந்தது. நடத்துனர் அலுத்துக்கொண்டார். அதைவிட கூடுதலாக, வண்டி அலுத்துக்கொண்டது. இவன் இறங்கிய மாத்திரத்தில் வண்டி படாரெனப் புறப்பட்டுச் சென்றது.

குறுக்கு வழியில் நடந்தான். இந்த வழியேதான் மார்க்கெட்டுக்கு வருவார்கள். முன்னிரவில் நல்ல மீன் வாங்கி, சொதியோ குழம்போ வைத்து, ஏஷியா நெட் ப்ளஸில் மோகன்லால் படத்துடன் சிரிப்பும் சோகமும் கலந்த கலவையாக அந்த இரவுகள் முடியும்.

மார்க்கெட்டுக்குப் போகும் எல்லா முன்னிரவுகளிலும் நபார்டு வங்கியின் தலைமையகத்தின் முகப்பில் தொங்கும் பெரிய தேன்கூட்டைப் பார்ப்பார்கள்.

நிமிர்ந்து பார்த்தான்... தேன்கூடு இருந்தது. எல்லா வீடுகளில் இருந்தும் சீரியல் சத்தம் கேட்டது. இவன், அவன் வீட்டுக்கான சந்தில் திரும்ப, இருவர் அவசர அவசரமாகக் குடித்துவிட்டு குப்பியைக் கீழே போட்டுவிட்டுப் போனார்கள். இவன் வீட்டை நெருங்கும்போதே தெரிந்தது. வெளிச்சம் இல்லை. கண்களை இடுக்கிப் பார்த்தான். பூட்டியிருந்தது.

இரவு தங்கித்தான் ஆகவேண்டும். அரிஸ்டோ ஜங்ஷனில் அறை எதுவும் கிடைக்கவில்லை. நான்கு, ஐந்து விடுதிகள் ஏறி இறங்கினான். ஒன்று, அறை இல்லை என்றார்கள் அல்லது 'தொள்ளாயிரம்’, 'ஆயிரம்’ என வாடகை சொன்னார்கள். தனியே வருபவர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள் என்பதும் தன் தோற்றமும்தான் நிராகரிப்புக்குக் காரணம் எனத் தோன்றியது. கடைசியாக விசாரித்த விடுதியில் இருந்து வெளியே வரும்போது, விடுதிப்பையன் கூட வந்தான். திருநெல்வேலி பக்கமாக இருக்க வேண்டும்.

''ஸ்டேஷனுக்கு அந்தப் பக்கம் போங்க சார்... சீப்பா கிடைக்கும்'' என்றான்.

இரும்புப் பாலத்தின் கீழ் நிறைய ரயில்கள் தெரிந்தன. கந்தலாடை அணிந்த பெண் ஒருத்தி, படிக்கட்டுத் திருப்பத்தில் சுருண்டிருந்தாள். அவளை தூரத்தில் இருந்து ஒரு நாய் பார்த்தவண்ணம் இருந்தது. வெளியில் இருந்து பார்க்க, அந்த விடுதி சுமாராக இருந்தது.

''400 ரூபாய்'' என்றான் ரிசப்ஷனில் இருந்தவன்.

'ஒரு ஆள் அல்லே?'

'ஆமாம்’ என்பதுபோல் தலையாட்டினான்.

''ரூமைப் பார்க்க முடியுமா?''

அலட்சியமாக ''காணாம்... காணாம்...'' என்றான். ஒரிஜினல் டிரைவிங் லைசன்ஸை வாங்கிக்கொண்டான்.

இவன் அறைக்குள் நுழைந்தான். அறை, மிகவும் அழுக்காக இருந்தது. சுவர்களில் மனிதர்களின் வியர்வை பிசுக்கு, தொலைபேசி எண்கள், ஸ்டிக்கர் பொட்டுக்கள். எங்கும் ஆணியோ கொக்கியோ இல்லை. தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்கும் ஏற்பாடு எனத் தோன்றியது. கொசுவத்தி வைத்து எடுத்த தடம் மேசையில் தெரிந்தது. தலையணை உறையை மீறி தெரிந்த நிறம் அழுக்கின் நிறமாக இருந்தது. குளியலறையைத் திறக்க தயக்கமாக இருந்தது. மூத்திரம் முட்டியது. திறந்தான். குபீரென வீச்சம் முகத்தில் அடித்தது. நிழல் உருவங்கள் மாத்திரமே தெரியும் கண்ணாடி. கோப்பைக்கு அருகே ரத்தக்கறை படிந்திருந்தது. கரப்பான் பூச்சிகள் திரிந்தன. வாளியைக் கவிழ்த்துவைத்திருந்தார்கள். அதை நிமிர்த்த பயமாக இருந்தது. அதன் கீழும் கரப்பான் பூச்சிகள் இருக்கக்கூடும். மெதுவாக நிமிர்த்தினான். பூரான் ஒன்று அவசரமாக ஓடியது. படக்கென தண்ணீர் ஊற்றிவிட்டு வெளியே வந்தான்.

மெத்தையில் அமர்ந்தான். அதில் இருந்து ஒருவித அழுகிய நாற்றம் கிளம்பியது. இங்கே தூங்க முடியாது. சவம்போல் களைத்து வந்தால் மாத்திரமே, இந்த அறையில் தூங்க முடியும். கதவைப் பூட்டிக்கொண்டு கீழே இறங்கினான். மொத்த விடுதியிலும் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

ரிசப்ஷனில் இருந்தவன் பார்வையாலே 'எங்கே?’ என்றான்.

இவன் முணுமுணுப்பாக ''சினிமா'' என்றான்.

''சூச்சிச்சு... போலீஸு பிடிக்கும்!'' என்றான் அவன். சட்டென ஏதோ யோசனை வந்தவனாக இவனுடைய டிரைவிங் லைசன்ஸையும் ஹோட்டல் பில்லையும் கொடுத்து, ''போலீஸு பிடிச்சா காட்டு!'' என்றான்.

ரவுண்டானாவைத் தாண்டி நடந்தான். கைரளி தியேட்டரில் படம் தொடங்கி இருந்தது. டிக்கெட் வாங்கிக்கொண்டு படியேறினான். கேன்டீன் பையன்கள் மொபைலை வைத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். என்ன படம் என்றுகூட பார்க்கவில்லை. கதவைத் திறந்தவுடன் முகத்தில் வெளிச்சம் மோதியது. மெள்ள மெள்ள கண்கள் அந்தப் பொய் இருட்டுக்குப் பழக, பாதி தியேட்டர் சும்மா கிடந்தது. நடுவரிசையில் உட்கார்ந்தான். மோகன்லால், அரை ஜிப்பாவை மேலேற்றிக்கொண்டு 'ஊச்சாளி ராஷ்ட்ரிய மேதாக்களே...’ என விடாது வசனம் பேசிக்கொண்டிருந்தார். இவனுக்கு மிகவும் களைப்பாக இருந்தது. இவனில் இருந்து சற்றுத் தள்ளி அமர்ந்து இருந்த ஆணும் பெண்ணும் இன்னும் தள்ளிப்போய் அமர்ந்தார்கள்.

காலையில் இருந்து அலைபவனுக்கு ஏ.சி குளிர், ஆளை அசத்தியது. சிரச்சேதம் செய்யப்பட்டவன்போல கழுத்து தொங்க உறங்கினான். கண் விழித்தபோதெல்லாம் மோகன்லால் ஸ்லோமோஷனில் நடந்துகொண்டிருந்தார். படம் முடிவதற்கான அறிகுறி தெரிந்தது. இழுத்துப் பிடித்து உட்கார்ந்தான். மொத்தக் குடும்பமும் புடைசூழ தனது பெரிய பங்களாவில் இருந்து வெளிநாட்டுக்குப் போவதுபோல ஒவ்வொருவரிடமும் இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு, போலீஸ் ஜீப்பில் ஏறினார் மோகன்லால். அவர் பேசி முடிக்கும் வரை போலீஸ்காரர்கள் அவர் வீட்டுத் தோட்டத்தின் அழகை ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

திரையரங்கக் கதவைத் திறந்தபோது கடும் மழை கொட்டிக்கொண்டிருந்தது. வெளியே வந்த எல்லோரும் ஒரு கணம் உறைந்து நின்றனர். பின் சுதாரித்துக்கொண்டு குடையை விரித்தும், பாலித்தீன் கவர்களை தலையில் போட்டவாறும் கார்களிலும் இருசக்கர வாகனங்களிலும் புறப்பட்டனர். ஐந்தே நிமிடங்களில் தியேட்டர் காலியானது. இவனைப்போல நடந்துவந்த இரண்டொருவரும், இவனிடம் இருந்து தள்ளிப்போய் அமர்ந்த ஆணும் பெண்ணும் மாத்திரமே இருந்தனர். அவர்களும் சிறிது நேரத்தில் மழையில் மறைந்தனர். வாட்ச்மேன், கதவு அடைக்க வேண்டும் என இவனை கேட்டுக்கு வெளியே நிற்கச் சொன்னார். எதிரே கிரீன்லேண்டு ஹோட்டலும் தம்பானூர் போலீஸ் ஸ்டேஷனும் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டிருந்தன.

அவனுக்கு 10 வயதாகும்போது, அவன் அப்பா ஒரு சுற்றுலா கூட்டி வந்தார். அப்போது இந்த கிரீன்லேண்டு ஹோட்டலில்தான் தங்கினார்கள். அந்த ஹோட்டல் அப்போது வேறு மாதிரி இருந்தது. திருவனந்தபுரமே வேறு மாதிரியான ஓடுகளால் நிரம்பி இருந்தது. அன்றைக்கு நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டான், 20 வருடங்கள் கழித்து அப்பாவும் தம்பியும் அகாலமாக மரித்த பின், இப்படி ஒரு மழை இரவில் இங்கே நிராதரவாக நிற்பான் என.

அறைக்குப் போக பயமாக இருந்தது. வீடு இருக்கும் திசை நோக்கி நடந்தான். சாலையில் பெருச்சாளிகள் சுதந்திரமாகத் திரிந்தன. தலைமைச் செயலகம் எப்போதும்போல தோட்டத்துக்கு நடுவே வசீகரமாக இருந்தது. வீடு இருக்கும் சந்துக்குள் திரும்பினான். காம்பவுண்டுக்கான பொது விளக்கு எரிந்துகொண்டிருந்தது. இவன் வீட்டு வாசலில் செருப்புகள் கிடந்தன. வந்துவிட்டார்கள். அங்கேயே நின்றான். உள்ளே ஸ்ரீகுட்டியின் அழுகைச் சத்தம் கேட்டது. பிந்து அவளைச் சமாதானப்படுத்தும் குரல். மனம் படபடவென அடித்துக்கொண்டது. சடக்கென விளக்கு எரிந்தது. திரைச்சீலை விலகியது. இவன் சுவருக்குப் பின் மறைந்துகொண்டான். 'சூ... சூ...’ என ஸ்ரீகுட்டிக்குப் போக்கு காட்டும் குரல் கேட்டது. இவன் குத்துக்காலிட்டு உட்கார்ந்தவாக்கில் சத்தம் இல்லாமல் அழுதான்.

கொஞ்ச நேரத்தில் சத்தம் இல்லை. விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. இவன் மெதுவாக படிக்கட்டுகளில் கீழே இறங்கி பிந்துவின் செருப்பையும், மகளின் செருப்பையும் எடுத்துக்கொண்டு சத்தம் இல்லாமல் மேலேறினான். சந்து திருப்பத்தில் குவிக்கப்பட்டிருக்கும் குப்பைகளில் இருந்து ஒரு கவரை எடுத்து குப்பையைக் கிழே கொட்டி அதற்குள் செருப்பைப் போட்டான்.

போலீஸ் வேன் எப்போது வேண்டுமானாலும் தன்னைப் பிடித்து விசாரிக்கப்போகிறது என நினைத்தான். நடந்து நடந்து கிழக்கே கோட்டைத் தாண்டி கோயிலின் பின்புறத் தெருக்களுக்கு வந்துவிட்டான். அக்ரஹாரம். தாழ்வாரம் கொண்ட கம்பிக் கதவுகள் போட்ட வீடுகள். பழைய வீடுகள். அந்த ராத்திரியில் அதைப் பார்ப்பது மிக ஆறுதலாக இருந்தது.

திடீரென தெப்பக்குளத்துக்குப் போக வேண்டும் எனத் தோன்றியது. இடது கை பக்கம் திரும்பினால் தெப்பக்குளம். தூரத்தே தெப்பக்குளம் தெரிய, பைக் ஒன்று அவனை மறித்தவாறு நின்றது.

இரண்டு போலீஸ்காரர்கள் வண்டியை அணைக்காமல், ''எந்தாடா ஜோலி இவிட... ஆ பேக்ல எந்தா?'' என விசாரிக்க, இவன் செருப்பை எடுத்துக் காட்டினான். முகத்தில் கோபம் தெரிய, பின்னால் இருப்பவன் இறங்கி பளார் என அறைந்தான். இவன் முகத்தை, கைகளால் மறைத்துக்கொண்டான். 'என்னோட பாரியா, குட்டியோட செருப்பானு!' போலீஸ்காரன் உற்றுப்பார்த்தான்.

'பாண்டியா?' என்றான்.

இவன் தலையை அசைத்தவாறே லாட்ஜ் ரசீதையும் டிரைவிங் லைசன்ஸையும் எடுத்து நீட்டினான். அதை வாங்கிப் பார்த்தவன், 'இவிட இருந்து இப்ப ஓடணும். வேகம். இல்லெங்கில் நின்ன நான் தள்ளும். ஓடிக்கோ!' என்றான்.

இவன் வேகமாக நடக்க, வண்டி மறுபடியும் இவனை மறித்தது. இவனை அடித்த போலீஸ்காரன் மாத்திரம் வண்டியில் இருந்தான்.

'கேறு வண்டில.'

இவன் வண்டியின் பின் அமர்ந்தான்.

p74c.jpgவண்டி, பல தெருக்கள் திரும்பி எங்கெங்கோ போனது. இடையில் ஒரு பெரிய அப்பார்ட்மென்ட் முன் வண்டியை நிறுத்தி அங்கு இருக்கும் நோட்டை எடுத்து ஏதோ எழுதினான் போலீஸ்காரன். மறுபடியும் வண்டி எங்கெங்கோ சுற்றியது. திடீரென இவன் லாட்ஜ் முன்னால் வந்து நின்றது.

'ராத்திரியில இங்ஙன அலவலாதிபோல திரியாம்பாடில்லா. இது கள்ளமார் திரியுற சமயமானு. போய்க்கோ' என வண்டியை வட்டமடித்துத் திருப்பிக்கொண்டு போனான்.

கிரில் கேட் வெறுமனே சாத்தி இருந்தது. இவன் இருண்ட படிக்கட்டுகளில் மொபைல் வெளிச்சத்தில் மேலே ஏறினான். ரிசப்ஷனில் யாரையும் காணவில்லை. மெதுவாகத் தட்டினான். நான்கு, ஐந்து தட்டலுக்குப் பிறகு ஒரு கையில் சாவியையும் ஒரு கையில் வேட்டியையும் பிடித்தவாறு கொட்டாவி விட்டவாறு வந்தான் ரிசப்ஷனில் இருந்தவன்.

'மணி நாலரை ஆயியோ. எவிட போயி இத்தனை நேரம்?'

இவன் பதில் ஏதும் சொல்லவில்லை.

'பாக்கியம். இனி ஈ காலையில யாரும் மரிக்கினிலா. பத்து நாளுக்கு முன்ன இவிட ஒரு ஆளு தொங்கிச் செத்து!'

அறைக்கதவைத் திறந்து மெத்தை மீது இருந்த பெட்ஷீட்டை மாத்திரம் உருவி கீழே விரித்து விளக்கை அணைக்காமல் படுத்தான். மெத்தையில் இருந்து மேலும் வீச்சம் வந்தது. வெறுமனே விட்டத்தைப் பார்த்துப் படுத்திருந்தான். கட்டில் பக்கமாகத் திரும்பியவனுக்கு, கட்டிலின் மூலையில் உபயோகப்படுத்தப்பட்ட ஆணுறை ஒன்று கண்ணில் பட்டது.

பெரிதாக ரயில் கூவல் கேட்க, பதறி எழுந்தான். மணி ஆறரை. நேற்று முழுக்கச் சாப்பிடவில்லை என அப்போதுதான் ஞாபகம் வந்தது. குளிக்காமல் அவசர அவசரமாக

பையை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினான். ரிசப்ஷனில் இரவு பார்த்தவன், குளித்து சந்தனப்பொட்டிட்டு ஜேசுதாஸ் பாடல் சகிதம் வேறொருவனாக மாறியிருந்தான்.

தலைமைச் செயலகத்தில் இறங்கும்போது மணி ஏழரை. சந்துமுக்கில் மீன் கடை திறந்திருக்க, திரேசா சேச்சி உள்ளிருந்து பார்த்துச் சிரித்தாள்.

'ஆளக் கண்டு நாளாயி அல்லே?'

இவன் ஒரு வெற்றுச் சிரிப்பை உதிர்த்து நகர்ந்தான்.

இவன் காம்பவுண்டுக்குள் நுழையும்போது, அகராதி விற்கும் விற்பனைப் பிரதிநிதிகள் மேலேறி வந்துகொண்டிருந்தார்கள். பிந்துவின் அம்மாதான் ஏதோ பதில் சொல்லி அனுப்பியிருக்க வேண்டும். இவன் மெதுவாக கை நடுங்க காலிங் பெல்லை அழுத்தினான். அம்மாவின் குரல் கேட்டது.

''யாரானு?''

''நான்தன்னே ராஜ்குமார்.''

உள்ளே சட்டென எல்லாம் அமைதியானது.

ஸ்ரீகுட்டி குரல் மாத்திரம் ''யாரானு அம்மே... நான் போயி காணட்டே?'' என்றது.

திரைச்சீலை தொங்கியது. உள்ளே ஒன்றும் தெரியவில்லை. ஓடிவர எத்தனிக்கும் ஸ்ரீகுட்டியைப் பிடித்து நிறுத்துவது, கொலுசு ஒலியின் வழியே கேட்டது.

பிந்துவின் குரல் தெளிவாக, 'போய்க்கோ. நிங்களக் காண எனக்கு இஷ்டம் இல்லா. அல்லெங்கில் நான் ஒச்சையில் சம்சாரிக்கும். அயல்வாசிகளக்க கேக்கும். மானக்கேடாகும்.'

அம்மா முகம் தெரிந்தது.

''போய்க்கோ குமார். 'பிந்து காணான் இஷ்டமில்லே’ன்னு பறையினல்லே... போய்க்கோ.'

அடுத்த வீட்டில் யாரோ கதவு திறக்கும் சத்தம் கேட்டது. திரும்பி நடந்தான்.

வெயில் பிரகாசமாக அடித்தது. மனிதர்கள் குளித்து நல்ல உடை உடுத்தி, வீதிகளில் வேகமாக விரைந்துகொண்டிருக்க, இவனுக்கு அந்தச் சந்தில் இருந்து பரபரப்பான சாலைக்குள் நுழைய தயக்கமாக இருந்தது. குப்பைப் பொறுக்கும் கிழவன் ஒருவன், அன்றைய தினபாடுக்கு தன் சாக்குகளைத் தயார்படுத்திக்கொண்டிருந்தான். குட்டிக் குட்டிச் சாக்குகளை நீவி பெரிய சாக்குக்குள் வைத்தவன், நரைத்து மார்பு வரை தொங்கும் தன் தாடியை நீவிக்கொண்டு புறப்பட்டான்.

''நான்கு மணி ரயிலுக்கு, இப்போது டிக்கெட் தர முடியாது'' என்றார்கள்.

பிளாட்பாரம் டிக்கெட் மாத்திரம் வாங்கிக்கொண்டு ஆள் இல்லாத பிளாட்பாரத்துக்குள் நுழைந்தான். அருகில் எங்கோ பண்டகச் சாலை இருக்கவேண்டும். அங்கு வந்த புறாக்களில் கொஞ்சம் இந்த பிளாட்பாரத்திலும் இருந்தன. தூர யாத்திரை போய் வந்த ரயில் ஒன்று ஆயாசமாக நின்றிருந்தது. பெட்டிகளின் எல்லா கதவுகளும் ஜன்னல்களும் சாத்தப்பட்டிருந்தன.

மொபைல் லேசாக அதிர்ந்தது. பிந்துவிடம் இருந்து குறுஞ்செய்தி. 'நேற்றிரவு நீங்கள் வந்ததும் தெரியும். செருப்பை எடுத்துக்கொண்டு போனதும் தெரியும். அவ்வளவே நம் உறவு. அதுவே மிச்சம்!’

குரல்வளையில் ஏதோ அடைத்தது. விநோத சத்தம்போல் ஒரு கேவல். புறாக்கள் பதறிப் பறந்தன. பிளாட்பாரத்தில் நின்ற ரயில், நகர ஆரம்பித்தது!

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

கதையில் காரணமில்லாமல் ஒரு வெறுமை சூழ்ந்த மாதிரி. அத்தான் பிந்துவால் ரொம்ப நொந்து போயிட்டார்......!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.