Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பந்தல் ஏறிய கொள்ளுக்கொடி!

Featured Replies

பந்தல் ஏறிய கொள்ளுக்கொடி! - சிறுகதை

பி.ச.குப்புசாமி, ஓவியங்கள்: ம.செ.,

 

 

ரங்களின் மீதும் காடுகளின் மீதும் தனிக் காதல்கொண்டவர் என் நண்பர். அவரை முதலில் அறிமுகப்படுத்திவிடுகிறேன்.

என் நண்பருடைய தந்தை ஃபாரஸ்ட்டராகப் பணிபுரிந்தவர். தாயை இழந்த என் நண்பரும் அவர் சகோதரியும், இளம் வயதில் அடிக்கடி காட்டிலே இருந்த தந்தையிடம் போய்த் தங்குவது உண்டு. தாவரங்களின் மீதான அவரது காதல், அப்போது இருந்து மூண்டிருக்கும் என்று நினைக்கிறேன். அதோடுகூட, அவர் கொஞ்ச காலம் ஒய்.எம்.சி.ஏ-வில் தங்கிப் பயின்றவர். எதிலும் அறிவியல்பூர்வமான மனோபாவம் செலுத்துபவர். எல்லாம் சேர்ந்து அவரை வார்த்தன என்றும் சொல்லலாம்.

தாவரங்களை அவர் ஏதோ சத்தியங்கள் போல் பேணினார்.

''நீங்க ரெண்டு தொட்டி எடுத்துக்கங்க. மண்ணும் விதையும் ஒரே தரமா இருக்கட்டும். அப்படிப் பார்த்து மொளைக்கப் போடுங்க. ரெண்டு தொட்டிக்கும் ஒழுங்காத் தண்ணி ஊத்துங்க. செடியா அதுங்க வந்ததும், ஒரு செடிக்கு, கடன் கழிக்கிற மாதிரி தண்ணி ஊத்துங்க. இன்னொரு செடிகிட்ட உட்கார்ந்து பேசி, அதைத் தொட்டுத் தடவி நீவிக் கொஞ்சி அப்புறம் தண்ணி ஊத்துங்க. ரெண்டு செடியில எது நல்லா வளரும்னு நெனைக்கிறீங்க?'' என்று ஒரு டெமான்ஸ்ட்ரேஷன் சொல்வார். கேட்டுக்கொண்டிருப்பவர்கள், 'உட்கார்ந்து தொட்டுப் பேசற செடிதான் நல்லா வளரும்’ எனத் தாங்களாகவே சொல்லிவிடுவார்கள்.

அடிக்கடி என்னை அழைத்துக்கொண்டு காட்டுக்குப் போவார். அப்படிப் போகும்போது வடிவில் அழகியதான சில மரங்களைக் காணும்போது, '''தயவுசெய்து என்னை வெட்டாதீர்கள்’னு ஒரு கார்டுபோர்டில் எழுதி இங்கே மாட்டிருவோமா?'' என்பார்.

அப்புறம் அவரே, ''வேணாம்... வேணாம். ஏதோ விசேஷமான மரம் போலனு நினைச்சு, அதுக்காகவே வெட்டிடுவானுங்க!'' என்று முடிப்பார்.

''மண்ணுக்குள்ளே போடுற எல்லாமே மக்கிப்போவுது, வெதை மட்டும் முளைச்சி வெளியே வந்துடுது. மண்ணுக்கும் வெதைக்கும் என்ன மர்மமான ஒப்பந்தம் பார்த்தீங்களா?!'' என்று வியப்பார். தன் வீட்டின் சிறு தொட்டிகளில் எப்போதும் ஏதாவது ஒரு விதையை முளைக்கப் போட்டுக்கொண்டிருப்பார். அது அவருக்கு வாரக்கணக்கில் நீளும் ஒரு விளையாட்டு!

ங்கள் பக்கம் கிராமப்புறங்களில், 'கொள்ளுக்கொடி, பந்தல் ஏறப்போவுதா?’ என்று ஒரு பழமொழி உண்டு. கொள்ளுக்கொடிகள், தாவவும் பற்றவும் முயன்று தோற்றவைபோல் சோர்ந்து தரையிலேயே சஞ்சரித்து, தங்கள் பசுமையை மட்டும் கொஞ்சிக்கொண்டிருக்கும். ஆனால், என் நண்பரின் வீட்டில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

p60c.jpg

அவர் வீட்டின் காரை போட்ட திறந்த வாசலின் ஓரம், ஒட்டியிருந்த ஒரு சுவரின் இடுக்கில், எப்படியோ தப்பி நுழைந்த ஒரு கொள்ளுத்தானியம், வாழ்ந்து வளர்ந்தோங்கு வதற்கான உத்தரவாதமே சுத்தமாக இல்லாத அதன் வாழ்வியல் விதிக்கு எதிராக முளைத்து எழுந்தது. விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதுபோல அது வெகுவாக ஊட்டம் கொண்டிருந்தது. அதற்கு என் நண்பர் அக்கறையாகத் தண்ணீர் ஊற்றி வந்தார். அந்தச் செடிக்குக் கொடிகள் பிறக்க ஆரம்பித்தவுடன், ஓட்டுக் கூரை வரை நூல் கயிறு கட்டி ஏற்றினார். 'பந்தல் ஏற முடியாது’ என்று பழமொழி பெற்றுவிட்ட அந்தக் கொள்ளுக்கொடி, குயவர்  ஓடுகள் பதித்த அவரது வீட்டுக் கூரையில் ஏறி, அதையும் கடந்து மாடிச் சுவரைத் தொட்டது. மாடிக்குப் போன பின்பு மேலே வழி? டி.வி-க்கள் புதிதாக வந்த காலம் அது. வீட்டு மாடியில் உயரமாக நின்ற டி.வி. ஆன்டெனாவில் அந்தக் கொடியை ஏற்றிக் கட்டினார்.

ஆயுளின் நெடும் பயணத்துக்கு ஓர் அந்தம் உண்டுதானே? அவ்வாறு அது மெள்ள வாடி உலர்ந்த பின்பு, அதை லாகவமாகப் பெரிய ஒரு  வளையமாகச் சுருட்டிச் சுருட்டி எடுத்துப் பத்திரமாக வைத்திருந்தார். அறிமுகமாகிற நண்பர்களுக்கு எல்லாம் அதைக் காட்டுவார். எனக்கு அது ஓர் பெரிய அதிசயம்தான்.

நாங்கள் காடுகளை நோக்கிப் போகிறபோது, வழியிலே கரும்பாறைகளின் மேலே ஒரு மர வரிசையைக் கண்டோம். அந்த மரங்கள், பிப்ரவரி மாதத்தில், இலைகளையெல்லாம் இழந்து, உள்ளங்கை விரித்தாற்போல பெரிய பெரிய மஞ்சள் நிறப் புஷ்பங்களைத் தாங்கி நிற்கும். என் நண்பர் தன் தந்தையாரிடத்து விசாரித்ததில், அவற்றுக்கு 'காட்டுப் பருத்தி’ என்ற பெயரைக் கேட்டு வந்து சூட்டினார். ஆனால், ஜவ்வாது மலையிலே வாழும் முதுபெருங்கிழவர் ஒருவரிடம், நாங்கள் அந்த மரங்களைப் பற்றிக் குறிப்பிட்டுக் கேட்டபோது அவர், ''அட... அது கோங்கு!'' என்று கூறினார்.

கோங்கு என்றதும் எனக்கு மிகவும் குதூகலமாகிவிட்டது. அது சங்க இலக்கியங்களில் உள்ளது. கோங்கின் அரும்பை பெண்களின் மார்பகத்துக்கு உவமையாக வைத்திருப்பார்கள். அந்த அரும்பைப் பார்க்க வேண்டும் என்று எங்களுக்கு விருப்பம் ஏற்பட்டது. பிப்ரவரி மாதத்தில் அது பெரிதாக மலர்கிறது என்றால், டிசம்பர் ஜனவரி மாதங்களில் அதன் அரும்புகள் தோன்றுமல்லவா?

p60b.jpg

எனது நண்பர், அடுத்த டிசம்பர் வரை காத்திருந்து, கவனமாகக் காட்டுக்குச் சென்று, காவியப் புகழ்பெற்ற அந்தக் கோங்கின் அரும்பைக் கொண்டுவந்து காட்டினார். எவ்வளவு பெரிய இனிய ஏமாற்றம்!?

கோங்கின் அரும்பை இதற்குள் நீங்கள் கற்பனை செய்திருக்கக்கூடும். ஆனால், உண்மையான கோங்கின் அரும்பு உங்களையும் எங்களையும் ஏமாற்றுகிற மாதிரி, ஒரு சுண்டு விரலின் முதல் கணுவில் பாதி அளவே இருந்தது. ஆனால், அதன் வடிவம் மட்டும் அற்புதமாக, பெண்களின் மார்பகத்தை அப்படியே பிரதிபலித்தது.

அழிந்துகொண்டிருக்கிற கூந்தல் பனையைக் கண்டால், வண்டியில் இருந்து இறங்கி நின்று அதைக் கும்பிடுகிற அளவுக்கு, தாவரங்களின் மீதான அவரது வழிபாடு வளர்ந்து வந்தது.

த்தகைய, இயற்கையின் மீதான எங்கள் நாட்டம் அதிகரித்த காலையில், நான் எப்படியோ ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் மூன்று ஏக்கர் நிலம் வாங்கினேன். எனக்குத் தெரிந்து எங்கள் பரம்பரையில் ஏழு தலைமுறைகளாக யாரும் நிலம் வாங்கியது கிடையாது. இவ்வாறு இந்த நிலம் வாங்குவதற்கு என்னை ஊக்கப்படுத்தியவர் என் நண்பர்தான். நான் நிலம் வாங்கிய பிறகு, என் நண்பருக்கு அவர் விரும்பியபோதெல்லாம் வந்து தங்கி அவர் பொழுதைக் கழிப்பதற்கு வசதியாகிவிட்டது.

எனது நிலத்தில் அதிகாலை வேளைகளில் சேவல்களின் கூவலைவிடவும் மயில்களின் அகவல்தான் அதிகம். ஆடு, மாடுகள் வந்து பயிரை மேய்வதைக் காட்டிலும் மான்களும் காட்டுப்பன்றிகளும் வந்துதான் அதிகம் மேயும். அத்தகைய நிலம் அது. என் நிலத்தில் ஒரு காலை வைத்து, ஜவ்வாது மலையின் மீது அடுத்த காலை வைக்கலாம்.

என் நண்பர் இன்னொரு காரியம் செய்தாரே!

அவர் வீட்டில் எங்கிருந்தோ வந்த ஒரு பலாப்பழத்தை அறுத்தார்கள். அதன் சுளைகள் மிகவும் இனிப்பாக இருந்தன. அதிலிருந்து பலாக்கொட்டைகளை எடுத்து முளைக்கப் போட்டார். அது முளைத்து ஒரு சாண் உயரம் வந்ததும், அதிலே ஒரு செடியைக் கொண்டுவந்து எனக்குக் கொடுத்தார். அதை நான் தகுந்த இடமாகப் பார்த்து என் நிலத்தில் நட்டேன். அது நன்கு வேரூன்றிப் பதிந்து மெள்ள வளர ஆரம்பித்து. கடந்த 10 வருடங்களில் பெரிய ஒரு மரமாயிற்று. ஒரு செடி மரமாவதை எவ்வளவு சுலபமாக எழுதிவிட முடிகிறது. மிகமிக மெதுவாக நெடுங்காலம் நடைபெறும் மாபெரும் ஒரு வேள்வி அல்லவோ அது!

அந்தப் பலாச்செடியின் துளிர்கள் எத்தனை அதிகாலைகளைக் கண்டிருக்கும்! அவற்றின் மீது நிகழ்ந்த உச்சிச் சூரியனின் வருகைகள்தான் எத்தனை! காத்திருந்து காத்திருந்து கல்பாந்தக் காலத்துத் தவம் போன்றது அல்லவா, அது இவ்வளவு பெரிய மரமானது!

அப்போதெல்லாம் என் நண்பர் அங்கே வந்துகொண்டிருந்தார். தான் கொண்டுவந்து கொடுத்த செடிக்குக் கொழுந்துகள் தோன்றுவதையெல்லாம் ரசித்துக்கொண்டுதான் இருந்தார்.

ந்தப் பலாமரம் வளர வளர எனக்கு ஏனோ, 'குறும்பலவின் ஈசர்’ என்று தமிழ் இலக்கியத்தில் எங்கேயோ வந்த வரி ஒன்று கவனம் வந்துகொண்டே இருந்தது.

நான் என் நண்பரிடம் சொன்னேன். ''இது இன்னும் கொஞ்சம் வளரட்டும். இதன் அடியிலே ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, அதற்குத் 'தட்சிணாமூர்த்தி’ என்று பெயர் வைத்துவிட வேண்டும்!''

p60a.jpgநான் ஒன்றும் பழுத்த பக்திமான் இல்லை. ஆத்திகர்கள் மத்தியில் இருக்கும்போது எனக்கு நாத்திக மனோபாவம் உண்டாகிறது. நாத்திகர்கள் மத்தியில் இருக்கும்போது ஆத்திக மனோபாவம் ஏற்பட்டுவிடுகிறது. கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா, இல்லையா என்ற குழப்ப நிலைதான் எனக்கு. ஆனால், எனக்கு வழிபாடுகள் பிடிக்கின்றன. நல்ல கவிதைகளில் மட்டும் கடவுள் இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. இல்லாத கடவுளை இருப்பதாக வைத்துக்கொண்டால், அதன் பின்பு நமது பாவனைகள்தான் எவ்வளவு அழகாகி விடுகின்றன. மனிதக் கற்பனையின் உச்சம் அல்லவா கடவுள். எனது கற்பனைகள் எல்லாம், என் நண்பருக்கு ஏதோ நிதர்சனங்கள் போல் இன்பம் அளித்துக்கொண்டிருந்தன.

ந்த இடைக்காலத்தில் என் நண்பர் கொஞ்சம் நோய்வாய்ப்பட்டார்.

பலா மரம், முதல் முறையாகப் பூ பூத்துப் பிஞ்சுகள்விட்டது. பிஞ்சுகள் எல்லாம் உதிர்ந்தன. அவை பொய்ப் பிஞ்சுகளாம். முதல் வருஷம் அப்படித்தான் உதிருமாம்.

அடுத்த வருஷம் ஏழெட்டுப் பிஞ்சுகளுக்கு மேல் உறுதியாக நிலைத்து நின்று தொங்கின. நண்பரை அழைத்து வந்து காட்டினேன். அவர் கண்கள் கலங்கக் கரங்கள் கூப்பி நின்று அதைக் கண்டார். மரத்தின் முதல் பழத்தை அவர் வீட்டுக்குக் கொண்டுபோய்க் கொடுத்தேன்.

தற்குச் சில மாதங்கள் பிறகு என் நண்பர், தனது நோயின் காரணமாக - மூளையின் ஒரு பகுதியில் ரத்தம் உறைந்துவிட்டதாகக் கூறினார்கள். உள்ளூர் டாக்டர், வெளியூர் ஆஸ்பத்திரி என்கிற கண்டங்களுக்கு உள்ளாகி, மெள்ள மெள்ளக் காலமாகிப்போனார். என் மனைவியின் இறப்புக்குப் பிறகு எனக்கு ஏற்பட்ட இன்னொரு மாபெரும் இழப்பாக நண்பரின் மரணத்தைக் கருதினேன். அவர் தலைப்பிள்ளை, ஆகையால் அவரைத் தகனம் செய்தார்கள்.

றுநாள் அவரது அஸ்தி திரட்டப்பட்டது. நான் என் நிலத்துக்குப் போனேன். பலாமரம் ஒரு மாபெரும் குடை போன்று கவிழ்ந்து நின்றிருந்தது.

அந்தப் பலாக்கொட்டையை முளைக்கப் போட்டவர், மரத்தில் மறைந்தது மாமத யானை என்பதுபோல், மறைந்துவிட்டார். காதுகளில் கேட்கும் ஒலிக்கருவியைப் பொதிந்தவாறும், கைகளில் ஒரு கேமராவைப் பிடித்தவாறும் காட்டின் பாதைகளில் திரிந்த ஓர் ஆத்மாவின் சரீரம் மறைந்துவிட்டது. சிறு புதர்களில் இடப்பட்டிருக்கும் காடைகளின் முட்டைகளை எல்லாம் அலாதி அக்கறையுடன் காவல் காத்தவர் மறைந்துவிட்டார். ஒவ்வோர் இலை துளிர்க்கும்போதும், அதிலே ஒரு பிறவி கண்டவர் இல்லாமலாகிவிட்டார். மலைச் சாரலில் ஒரு மான் மேயக் கண்டு, யாரோ ஒருவர் துப்பாக்கியை எடுத்து வர ஓட, அதற்குள் அதிவேகத்தில் வேலிகளையும் செடிகளையும் தாண்டி ஓடி, 'ச்சூ... ச்சூ!’ என்று அந்த மானை விரட்டி அதன் உயிர் காத்த மகானுபவர் மறைந்துவிட்டார். இயற்கையின் ரகசியங்களை அறிந்து ஆனந்திக்கும் கலையை எனக்குக் கற்பித்த ஆசானை தற்போது காண்பதற்கு இல்லை.

எனவே, நான் ஒரு காரியம் செய்தேன். அந்தப் பலாமரத்தின் அடியிலே இடுப்பனை உயரத்துக்கு ஒரு பீடம் எழுப்பினேன்.

திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில், ஏழைச் சிற்பத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் ஒரு சிவலிங்கம் செய்து தருமாறு கேட்டுக் கொண்டேன். ஆவுடையாரோடு அவர் செய்து தந்தார். நந்திதான் அவரால் செய்ய முடியவில்லை. சர்வோதயாக் கடையில் ஒரு பொம்மை நந்தியை வாங்கிக்கொண்டேன்.

p60.jpg

ஆகம விதிகள், ஐயர்-கிய்யர், சாஸ்திரம்- கீஸ்திரம் என்று ஏகப்பட்ட விஷயங்கள் என் வேகத்தின் குறுக்கே வந்தன. அதைப் பற்றி அணுவளவும் கவலைப்படாமல் செயல்பட்டேன் எனக்குத் தெரிந்த ஒரு பள்ளித் தலைமையாசிரியர், ஒரு மராத்தியர். சிவாஜி மகாராஜாவின் காலத்தில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மானியங்களான நிலங்களில் வாழ்ந்துவருகிறவர் அவர். அவரை அழைத்து, ''நீங்கள்தான் எங்கள் பிரஹஸ்பதி என்று கூறி, அந்த சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ய வைத்தேன். அவர் ஒரு சம்ஸ்கிருத மந்திரத்தையும் உச்சரிக்கவில்லை. நான்தான், 'பொன்னார் மேனியனே...’ என்று பாடி அந்தப் பொழுதுக்கு மந்திரம்போல் ஒரு மயக்கத்தைக் கூட்டினேன்.

எனது பழைய கனவான, 'ஸ்ரீதட்சிணாமூர்த்தி’ என்பதை மாற்றி சிவலிங்கத்துக்கு 'ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர்’ என்று நாமகரணம் சூட்டினேன். கறுப்புப் பளிங்குக் கல் ஒன்றில் மஞ்சள் வர்ணத்தில் அதை எழுதிவைத்தேன்.

என் நிலம் அமைந்திருக்கிற குக்கிராமத்தில் வேடியப்பன் கோயில், மாரியம்மன் கோயில், பெருமாள் கோயில், பிள்ளையார் கோயில் எல்லாம் உண்டு. ஆனால், ஒரு சிவன் கோயில் இல்லை. 'ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர்’ அந்தக் குறையைத் தீர்ப்பவராக ஆனார்.

பள்ளிக்குப் போகிற பிள்ளைகள் எல்லாம் அங்கே வந்து திருநீறு இட்டுச் செல்லத் தொடங்கினர். கோயிலின் எதிரே ஒரு குச்சிவள்ளிக் கிழங்குத் தோட்டம் இருக்கிறது. அந்தத் தோட்டத்தில் களை கொத்தக் கூலிக்கு வருகிற பெண்மணிகள் எல்லாம், தங்கள் பின்புறத்தைச் சாமிக்குக் காட்டாத வண்ணம், அவருக்குத் தங்கள் முகத்தைக் காட்டிக்கொண்டுதான் தோட்டம் கொத்துகிறார்கள்.

என் நண்பரை நான் சரியான இடத்தில் சாய்த்து உட்காரவைத்த மாதிரி அந்தப் பலாமரமும், அதனடியில் ஒரு கோயிலும் இருந்துகொண்டிருக்கின்றன.

நான் முதலிலேயே கூறியிருக்க வேண்டும். என் நண்பரின் பெயர் அருணாச்சலம்!

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

பாயாசத்தில் எதிர்பாராமல் முந்திரிபருப்பு கடிபடுவது போல் சிலநேரங்களில் இப்படி நல்ல கதைகளையும் பார்க்க முடிகிறது. இப்ப எனக்கு அந்த கோங்கு மலர் சிவலிங்கமாய் தெரிகிறது......! tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.