Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிசய நகரம் பெற்றா முதல் எம்மாவுஸ் வரை.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிசய நகரம் பெற்றா முதல் எம்மாவுஸ் வரை.......


எமது ஆன்மீகத்தின் வேர்களைத் தேடி புனித பூமிக்கான திருப்பயணம் -2017
(ஜோர்தான்-- இஸ்ரவேல் -- பலஸ்தீனம்)

 

என் தெய்வம் வாழ்ந்த தெய்வீக பூமி இது.  இயற்கை அழகும் செயற்கை நிர்மாணிப்பும் கலந்த அற்புதமான உலகம். மலைப்பாங்கான பிரதேசம். ஜோர்தான் நதிப்பள்ளத்தாக்கு வரட்சியில் வாட அதைத்தாண்டி வனாந்தரம் கண்ணுக்கெட்டிய தூரம் புல் பூண்டுகளற்று பசுமைகளற்று பரந்து விரிந்து பாலைவனமாகக் காட்சியளித்தது.

                 என் நீண்டநாள் கனவு நிறைவேறிய மகிழ்வு மனதுக்குள் மத்தாப்பூவாய் மலர்ந்தது. கார்த்திகை மாதம் 23ம் திகதி. இந்த நாளுக்காய் எத்தனை காலம் ஏங்கித் தவித்திருந்தோம். மாலை 9.40க்கு பியசன் விமானநிலையத்தில் இருந்து எயார்கனடா விமானம் எம்மைச் சுமந்தபடி மேலெழும்பியது. எம் பிரயாணத்தை வழிநடத்தும் பொறுப்பாளர் திரு. அன்ரன் பிலிப் அவர்கள் வழி நடத்துதலுடன் 48 யாத்திரிகர்கள் பயணமானோம். நாம் சென்ற விமானம் பிராங்பேட் விமான நிலையத்தில் 2 மணிநேரம் தரித்து லூத்தான்சா விமானமூலம் மாலை 7 மணியளவில் அம்மான் விமான நிலையத்தை வந்தடைந்தோம்.
                          

479459ee3dab676e4aca989dd639ab4b?AccessK

   புனித பூமியில் கால் பதிக்கும் பொழுதே எமக்குள் கிளர்ந்த சிலிர்ப்பை வார்த்தைகளில் வடிக்க முடியாது. எமக்கென ஆயத்த நிலையிலிருந்த வாகனம் மூலம் அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டு தயார் நிலையிலிருந்த உணவை உண்டு ஏற்கெனவே எமக்கென பதிவு செய்யப்பட்டிருந்த அறைகளில் இருவர் இருவராக உறங்கி ஓய்வெடுத்தோம்.

 


          மறுநாள் 25ம் திகதி காலை 5 மணிக்கே தொலைபேசி அலாரம் எம்மை துயிலெழுப்பியது. 6 மணிக்கு காலை உணவை முடித்துக்கொண்டு சரியாக 7.30க்கு அனைவரும் வாகனத்துள் இருந்தோம். ஒவ்வொரு முறையும் வாகனத்துள் ஏறும்பொழுதும் இறங்கும் பொழுதும் எமைக் கணக்கெடுத்து எமக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் இருந்து மதிய உணவு, திருப்பலிகள், செபமாலை, மன்றாட்டு என்று அனைத்தையும் தன் 11 வருட அனபவத்தின் மூலம் எவ்வித குறையுமின்றி திரு. அன்ரன் பிலிப் அவர்கள் பார்த்துப் பார்த்து செய்திருந்தார். எம்முடன் பயணித்த ஒவ்வொரு சகோதரர்களும் அன்புடனும் புரிந்துணர்வுடனும் நடந்து கொண்டனர்.

 

26114294_1744232325647364_76664879886131


         வாகனம் ஓடிக்கொண்டிருந்தது. பார்க்குமிடமெங்கும் மலைக் குன்றுகளும் பள்ளத்தாக்குகளுமாக உயிரினங்களற்ற பாறைத் தொடர்களே காட்சியளித்தன. உலகத்தின் அதிசயங்களுள் ஒன்றான அதிசய நகரம் பெற்றா. இதைச் சிவப்பு நகரம் என்றும் அழைப்பர். பல நூற்றாண்டுகளுக்கு முன் உருவான இந் நகரம் காலத்துக்குக் காலம் பல அரசுகளால் சுவீகரிக்கப்பட்டு வரலாற்றின் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் அரசுகளின் வீழ்ச்சியினாலும் இயற்கையின் சீற்றத்தாலும் கைவிடப்பட்டு இன்று உலகின் அதிசயங்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இரு புறமும் பிரமாண்டமான பாறைப் பிளவுகளுக்கூடாக ஊடறுத்துச் செல்லும் பாதையில் நீண்டதூரம் நடந்து செல்ல வேண்டும். அந்த பாதையின் இருமருங்கும் பல சிற்பங்கள், கல்லறைகள், சிதைந்த மண்டபங்கள் என பல அடையாளச் சின்னங்கள் பற்றியும் புராதன கல்வெட்டுக்கள் பற்றியும் எம்முடன் வந்த ஜோர்தான் நாட்டைச் சேர்ந்த வழிகாட்டி விளக்கமாக எமக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து தமிழில் திரு. அன்ரன் பிலிப் அவர்களும் அதற்கான விவிலிய குறிப்புப்களையும் விளக்கங்களையும் கூறியது எமக்கு அவ்வப்போது ஆன்மிகத்தின் பக்கங்களையும் விளங்க வைத்தது. ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் பார்க்க வேண்டிய 28 முக்கிய இடங்களில் ஒன்றான இந்த அதிசய நகரை நாம் பார்க்கக் கிடைத்தது பெரும்பேறு.

26195557_1744232505647346_55209319844628

 

Petra-Treasury-Entrance2-1024x683.jpg

                    அங்கிருந்து யோவான் அருளப்பரின் தலையை ஏரோது மன்னனிடம் நடனமாடி பரிசாகக் கேட்டுப் பெற்ற அந்த புனித இடம். மன்னனின் அரண்மனை தூர்ந்து போனாலும் சிதிலமான மண்குன்றான அந்த புனித இடத்தில் இறைவார்த்தை தியானித்து செபித்தோம். ஜோர்தான் பள்ளத்தாக்கின் அழகை அங்கிருந்து பார்த்து ரசிக்கக்கூடியதாக கண்முன்னே மலைச்சரிவுகள் பரந்து கிடந்தன.  மதிய உணவை பயண ஒழுங்கு செய்தவர்களே ஒழுங்கு படுத்தி இருந்ததால் எமது நேரத்தை சரியான முறையில் மேற்கொள்ளவும் திட்டமிட்டபடி இடங்களைச் சென்றடையவும் மிக உதவியாக இருந்தது. இரவு தங்குமிடம் திரும்பியதும் சுவையான போசாக்கான உணவு, வசதியான படுக்கை, உடல் அலுப்புத் தீர குளித்து சுகமான நித்திரை. அதிகாலை தொலைபேசி அழைப்புமணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததால் பதட்டமின்றி நித்திரை செய்தோம்.
                  

    26ம் திகதி காலை புறப்பட்டு நெபோ மலை என அழைக்கப்படும் மலைக்குச் சென்றோம்.  இறைவனால் வாக்களிக்கப்பட்ட கானான்; தேசத்துக்குள் நுழைய முடியாமல் இம் மலையிலுருந்தே மோயீசன் இஸ்ரவேல்  நாட்டைப் பார்த்ததாக விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்குதான் மோசே அடக்கம் பண்ணப்பட்டதாக நம்பப்படுகிறது. அம் மலையில் வெண்கலப் பாம்பு என அழைக்கப்படும் ஓர் இரும்பினால் ஆன கோலில் பாம்பு சுற்றி இருப்பதுபோல் செய்யப்பட்ட அடையாளச் சின்னம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுத்து செபித்தோம். ஒவ்வொரு இடத்திலும் அந்த இடம் தொடர்பான நற்செய்தி வாசகங்களும் வாசித்து தியானித்தோம்.

mtnebo2.jpg

 

25995074_1744232422314021_71914321393002


             அங்கிருந்து யேறாஸ் நகரம் சென்றோம். கிரேக்க ரோம சாம்ராச்சியங்கள் அங்கு அமைக்கப் பட்டிருந்ததன் அடையாளமாக கிரேக்க ரோம மன்னர்கள் நிர்மாணித்த விசாலமான மண்டபங்கள், மாபெரும் தூண்கள், கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்ற அரங்குகள், அங்காடிகள், வீதி வளைவுகள் என்று இன்னும் பல சிதைந்த சீரழிந்த சின்னங்கள் உச்ச நிலையிலிருந்த சாம்ராச்சியங்களின் எச்சங்களாகக் காட்சியளித்தன.
 அன்றிரவே இஸ்ரவேல் நாட்டுக்குள் ஜோர்தான் எல்லையைக் கடந்து செல்ல வேண்டி இருந்ததால் அங்கிருந்து புறப்பட்டு இஸ்ரவேல் எல்லையை அடைந்தோம். அங்கு நாம் எம் பயணப் பொதிகளுடன் நாம் பயணித்து வந்த வாகனத்தையும் சாரதியையும் வழிகாட்டியையும் பிரிந்து எல்லைக் கடவை ஊடாக பலவித பரிசோதனைகளையும் முடித்துக்கொண்டு இஸ்ரவேல் நாட்டுக்குச் சொந்தமான வாகனம், சாரதி, வழிகாட்டியுடன் எமக்கென ஆயத்தம் செய்யப்பட்டிருந்த தங்குமிடம் சென்றடைந்தோம். வழியெங்கும் மலைச்சரிவுகளில் தீப்பெட்டிகளை அடுக்கியதுபோல அமைக்கப்பட்ட கட்டிடங்கள் மின்ஒளியில் பளபளத்தன. இஸ்ரவேல் என்னும் இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்ட அழகிய நாடு செழிப்புடனும் வளமுடனும் காட்சியளித்தது. எங்கும் வளமையும் செழுமையும் மிக்க ஆற்றுப் பள்ளத் தாக்குகளும் ஒவிவத் தோட்டங்களும் கூடாரங்களில் மூடி அமைக்கப்பட் வாழைத்தோட்டங்களும் தோடை முந்திரி என பலவகை பழத்தோட்டங்களும் வீதியின் இருமருங்கும் அழகூட்டின.

                  

26166108_1744233342313929_54647762256020
                      

    உலகின் பல பாகங்களிலுமிருந்தும் அலை அலையாக இன மத மொழி வேறுபாடின்றி இறைமகன் இயேசு பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, புதுமைகள் பல புரிந்து, மரித்து, உயிர்த்த அந்த புனித பூமியை தரிசித்து இறை உணர்வில் பெலனடைய வந்துகொண்டிருந்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கட்டிடங்களையும் ஆலயங்களையும் சரித்திரப் புகழ்வாய்ந்த இடங்களையும் வீடுகளையும் காணும்போது எம் மண்ணின் ஞாபகம் அடிக்கடி மனதில் நிழலாடியது. இன்னும் சில நூற்றாண்டுகளின் பின் எமது எதிர்காலச் சந்ததியினரும் எமது வாழ்விடங்களையும் இப்படித்தான் வழ்காட்டிகளின் உதவியுடன் வந்து பார்த்து எமது வரலாற்றை அறிந்து கொள்வார்கள் என மனத்திரையில் வந்து போனது. என்றோ ஒருநாள் எம் வேர்களைத் தேடி எம் விதைகள் புறப்படும்போது அவர்களின் தேடல் இன்றைய நிகழ்வுகளாக இருக்கலாம். இன்றைய திருப்பலி ஒப்புக்கொடுத்த குருவானவரின் அருளுரையும் இத் தேடல் பற்றிய சிந்தனையாகவே இருந்தது.

 

ffee2447b152494b43d9816faaea83c8_L.jpg

 

1200px-Bethlehem_skyline,_West_Bank.jpg


            நசரேத்தூரில் மரியாளுக்கு மங்களம் சொன்ன இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலயம், இயேசு மறுரூபமான தபோர் மலை, மரியாளின் கிணறு, இவற்றை தரிசித்து விட்டு கானாவூரில் இறைமகன் இயேசு முதல் புதுமை செய்த இடத்தில் அமைந்துள்ள ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றினோம். அங்கு எம்முடன் தம்பதிகளாக வந்தவர்கள்திருமண வாக்குத்தத்தம் புதுப்பித்தார்கள். விவிலியத்தின் முக்கிய இடங்களில் வழிகாட்டி மிகத் தெளிவாக விளக்கங்களை அளித்தார். இறைவழிகாட்டலுடன் எமது பயணத்தைத் தொடர திரு.அன்ரன் பிலிப் அவர்கள் உதவியாக இருந்தார். திருக்குடும்பம் வாழ்ந்த வீடு, செசாரியா பிலிப் எனப்படும் ஜோர்தான் ஆறு ஆரம்பமாகும் இடம்.(இது சிரிய எல்லையில் அமைந்துள்ளது). பல நூற்றாண்டுகள் கடந்தும் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இன்றிரவு நாம் தங்கிஇருந்த கொட்டலில் ஒரு ஒன்றுகூடல் வைத்தோம். அந்த ஒன்றுகூடலில் திருப்பலி ஒப்புக்கொடுத்த இரு குருவானவர்களும் பங்குபற்றினர். அன்று எம் மாவீரர் தினமென்பதால் அவர்களுக்கு மௌன அஞ்சலி செய்ய மறக்கவில்லை. அதன்பின் அனைவரும் தத்தமது பயண அனுபவங்களைப் பரிமாறி மகிழ்ந்தனர். திராட்சை ரசமும் பரிமாறப்பட்டது.
           Mont_Thabor_en_Galil%C3%A9e-Cassas-ski-1

 

   மறுநாள் இயேசு மலைப்பொழிவு செய்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுத்தோம். அப்பம் பலுகியஆலயம், கர்ப்பநாகூம் செபக்கூடம், பேதுருவின் வீடு, முதலான புராதன இடங்களைப் பார்த்து செபித்து நற்சிந்தனையுடன் கலிலேயாக் கடலில் படகுப் பிரயாணம் மேற்கொண்டோம். படகுப் பிரயாண ஆரம்பத்தில் படகு ஒட்டுனர்கள் கனடிய கொடி ஏற்ற நாம் அனைவரும் இசையுடன் கனடிய கீதமிசைத்து கை தட்டி எமது மகிழ்வைத் தெரிவித்தோம். தொடர்ந்து இறைமகன் இயேசு பயணம் செய்து புதுமைகள் செய்த அக் கடலில் பயணம் செய்வது மிகவும் ஆசீர்வாதமாக எண்ணி இறைவனைத் துதித்து பாடல்கள் பாடி இறை வார்த்தைகளை வாசித்து இறை உணர்வுடன் பயணம் செய்தோம்.
 படகுப் பிரயாணம் முடிந்ததும் கடலோரமாக உள்ள உணவு விடுதியில் பேதுருவின் மீன் உணவு பரிமாறப்பட்டது. அனைவரும் சுவையான அந்த உணவை உண்டு மகிழ்ந்தோம். தொடர்ந்து கலிலேயாக் கடலில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன ஓடம் வைக்கப்பட்டுள்ள காட்சிச் சாலைக்கு சென்று படகைப் பார்வையிட்டோம். அங்கிருந்து இராயப்பர் திருச்சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆலயம் சென்றோம். அனைத்து இடங்களையும் கைத்தொலை பேசிகளிலும் ஒளிப்படப் பெட்டிகளிலும் பதிவுசெய்தபடி எம் பயணம் தொடர்ந்தது.
                 

7ம் நாள் எமது திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பிப்பதற்காக ஜோர்தான் நதிக்கரைக்கு செல்ல ஆயத்தமாக அனைவரும் வெண்ணிற ஆறை அணிந்து புறப்பட்Nhம். அங்கு பல இன மக்களும் வெண்ணிற ஆடைகளுடன் கூட்டம்கூட்டமாக பரிசுத்த ஆவியின் பாடல்களைப் பாடி துதித்தபடி தம் திருமுழுக்கினைப் புதுப்பித்தபடி இருந்தனர். நாம் அங்கு திருப்பலி நிறைவேற்றி எம் திருமுழுக்கை புதுப்பித்தோம். எமக்கு திருப்பலி நிறைவேற்ற குருக்களை ஆயத்தம் செய்திருந்தார்கள். அதிலும் தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது மிகவும் சிறப்பான அம்சம்.

26000956_1744235255647071_90158070257639

 

26055650_1744235152313748_33157626814609


                 

Bethany_(5).JPG

 

 

  மசாடா மலை. விசாலமான இம் மலையின் மேற்பகுதி தட்டையாகவும் பக்கங்கள் செங்குத்தாகவும் உள்ளன. இம் மலையின் மேல் கோட்டை ஒன்று அமைக்கப்பட்டதற்கான எச்சங்களாக சிதைவடைந்த நிலையில் பல அறைகள், குளியலறைகள், மண்டபங்கள், என பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பகுதிகள் உள்ளன. இங்கு செல்வதற்கு கம்பி மூலம் கேபிள் கார் அமைக்கப்பட்டுள்ளது. எமது வழிகாட்டி அதன் சரித்திரப்பின்னணியை விபரித்தார். எதிரிகள் சுற்றி வளைத்ததால் அவர்களிடம் மண்டியிடுவதைவிட மடிவதே மேல் என்று முடிவெத்த யூத இனத்து விடுதலைக்குழு போராளிகள ஆயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக தம்மையே அழித்துக் கொண்டனர். அம் மாவீரர்களின் கதை கூறியபடி இம் மலை தலை நிமிர்ந்து நிற்கிறது.
                

25994774_1744240322313231_57492468361757

26165699_1744233012313962_11625908749863

  சாக்கடலில் குளியல். இது ஒரு இனிய அனுபவம். இக்கடலின் அதிக கனவளவு உப்பு கலந்த நீர் இருப்பதால் எந்த உயிரினமும் இதில் உயிர்வாழ முடியாது. இக் கடலில் ஒருவரும் தாள முடியாது. பலர் மிதந்தபடி குளிப்பதைக' காணக்கூடியதாய் இருந்தது. தொடர்ந்து எலிசபேத் அம்மாள் ஆலயம், திருமுழுக்கு யோவான் இல்லம், கிறீஸ்து பிறப்பு ஆலயம் சென்றோம். தினமும் வரிசை வரிசையாக மக்கள் கூட்டம் இப் புனித தலத்தைத் தரிசிக்க காத்திருப்பர். நாம் அங்ு போன நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் நேரடியாக உள்ளே நுழைந்து இறைமகன் இயேசு பிறந்த புனிக இடத்தை தரிசிக்கக் கிடைத்தது இறைவனின் அரிய செயலன்றி வேறில்லை.  தொடர்ந்து தேவதூதன் இடையர்களுக்கு சேதி சொன்ன மலைக்குகை, மரியாளின் பால் துளியில் பரிசுத்தாகிய வெள்ளை குறோற்றா ஆலயம், ஆகிய புனித தலங்களைத் தரிசித்து அவ்விடத்தில் திருப்பலியும் நிறைவேற்றி இறை உணர்வுடன் எம் இருப்பிடம் திரும்பினோம். தினமும் காரம் மசாலா தவிர்ந்த அனைத்து உணவு வகைகளும் தரமான முறையில் பரிமாறப்பட்டன. சுவையான கலப்படற்ற பேரீச்சம் பழங்கள், திராட்சைரசம் என்பன குறைந்தவிலையில் பெறக்கூடியதாய் இருந்தது.
            

       மறுநாள் மார்கழி 1ம் திகதி இயேசு விண்ணம் சென்ற இடம், பரலோக மந்திர ஆலயம், மரியாள் அடக்க ஆலயம், முதலியவற்றுடன் ஒலிவத் தோப்பு என அழைக்கப்படும் ஜெத்சமெனிப் பூங்காவையும் தரிசித்தோம். பழமைவாய்ந்த அந்த ஒலிவ மரங்கள் இன்றும் பரிசுத்தமாய் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இறைமகன் தனது சீடருடன் இரவுணவு உண்ட ஆலயம், தாவீதின் கல்லறை, இராயப்பர் இயேசுவை மறுதலித்த இடம், மரியாள் உறங்கும் ஆலயம் என பல பரிசுத்த இடங்களையும் தரிசித்தோம். ஆங்காங்கு அந்த இடத்தின் சிறப்புக்களை அறிந்து கொண்டதுடன் அந்த இடத்திற்குரிய இறைவார்த்தைகளையும் செபமாலையையும் தியானிக்கத் தவறவில்லை. சில இடங்கள் ஓத்தடைஸ் எனப்படும் யூதஇன மதக்குழுவினராலும் இன்னும் சில கத்தோலிக்க பிரிவினராலும் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதைக் காணக்கூடியாய் இருந்தது.


       96871_0dc5d89e.jpg

      25659840_1744234395647157_44253881719818

 

  யூத மக்களால் புனிதமாக மதிக்கப்படும் புலம்பல் மதில் முன் ஆண்கள் ஒரு பகுதியிலும் பெண்கள் ஒருபகுதியிலுமாக மதிலில் தலையை முட்டி செபித்துக்கொண்டிருந்தனர். மதிலுக்கு அப்பாலுள்ள தம் வணக்கத்தலம் முஸ்லிம் பிரிவினரின் பகுதிக்குள் இருப்பதால் இவர்களால் அங்கு சென்று வணக்கம் செய்ய முடியாது. நாமும் அம் மதிலுக்கு முன் சென்று அதற்கு மரியாதை செலுத்தி வி;ட்டு வந்தோம், அவ் இடத்தை மிகவும் புனிதமாகப் பேணி வருவதால் அங்கு செல்வதற்கு மிகவும் பாதுகாப்பு செய்துள்ளனர். மறுநாள் மரியாள் பிறந்த வீடு,  அதைத் தொடர்ந்து பெத்சாயிதாக் குளம் சென்றோம். அக் குளம் நீரின்றி சிதைவடைந்த நிலையில் இருந்தாலும் இறைமகன் புதுமைகள் செய்த புனித நினைவுடன் இறைவார்த்தை வாசித்து செபித்து தியானித்தோம். அதைத் தொடர்ந்து போஞ்சு பிலாத்துவின் அரண்மனை, இயேசுவுக்கு மரணத் தீர்ப்பிட்ட  இடம், சித்திரவதைக் கூடம், அங்குதான் அவரது சிலுவைப் பாதை ஆரம்பித்த அந்த துக்க நிகழ்வுகளின் ஆரம்பமாக இருந்தது. சித்திரவதைக் கூடங்கள் நிலக்கீழ் அறைகளாக மிக ஒடுங்கிய வாயில்களுடன் அமைந்திருந்தன. அவற்றைப் பார்த்தபொழுது அனைவரும் துக்கம் தாங்க முடியாமல் விழிகளில் நீர்வழிய விம்மி அழுதோம். எம் கண்முன் இறைகனின் பாடுகளுடன் எம் இன இளைஞர்களின் பாடுகளும் மனக்கண்ணில் நிழலாடி மனப்பாரத்துடன் அவ்விடத்தில் இறைவார்த்தை வாசித்து செபித்து இறைவனை மகிமைப்படுத்தினோம்.
 

26047222_1744234778980452_16160141730640

 

 

      சிலுவைப் பாதையின் ஒவ்வொரு நிலையிலும் சிறுசிறு ஆலயங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவ் ஒவ்வொரு நிலையிலும் முழங்கால் படியிட்டு தியானித்து செபித்து பாடல்கள் பாடி ஒருங்கிணைந்து இறை உணர்வுடன் ஒன்றித்தோம். பதினான்கு நிலைகளையும் தாண்டி இயேசுவின் சிலுவை நிறுத்திய இடமான கல்வாரி மலையின் குன்றை அடைந்தோம். அப் பரிசுத்த தலத்தில் உட்புகுவதற்கு மிகுந்த நீளமான வரிசையில் நின்று போகவேண்டி இருந்தது. உலகின் பல நாட்டு மக்களும் குழுக்களாக அங்கு வந்திருப்பதைக் காணக்கூடியதாய் இருந்தது. இயேசுவின் சிலுவை நிறுத்திய அந்த பரிசுத்த இடம் ஒருவர் ஒருவராக வணக்கம் செலுத்தக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இயேசுவின் உடல் அடக்கம் பண்ணப்பட்ட கல்லறையையும் தரிசித்தோம். எம் பாவம் போக்க மனுவுருவாகி மரணத்தை ஏற்று உயிர்த்த கிறீஸ்துவின் அருள் பெற்றவர்களாய் திருப்பலி ஒப்புக்கொடுத்தோம். கல்வாரித் திருப்பலிக்கு ஆயத்தமாக முதல்நாள் இரவு குருவானவரை எம் தங்குமிடத்திற்கு அழைத்து நாம் பாவமன்னிப்புப் பெற ஒழுங்கு செய்த எம் ஒழுங்கமைப்பாளர் திரு.அன்ரன் பிலிப் அவர்களுக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
          

26047023_1744233035647293_71939765944921

 

26168113_1744240078979922_22288303605420

   இறுதி நாளான 3ம் திகதி காலை எமது பயணப் பொதிகளுடன் ஆயத்தமாக நின்ற வாகனத்தில் ஏறி எம்மாவுஸ் நகருக்குச் சென்றோம். அன்று ஞாயிற்றுக்கிழமை. எம்மாவுசில் உள்ள குருமத்தில் உள்ள ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டபின் இயேசு மரணத்தை வென்ற பின் எம்மாவுஸ் சீடருடன் உணவருந்திய அந்த இடத்தை தரிசித்தோம்.
       

அனைத்து நிகழ்ச்சிகளையும் சிறந்த நேரக் கட்டுப்பாட்டுடனும் ஒழுங்கமைப்புடனும் செப உணர்வுடனும் எம்மை வழி நடத்திய திரு.அன்ரன் பிலிப் அவர்களுக்கும் அவருடன் கூட இருந்து உதவி புரிந்த நெறிப்படுத்திய திருமதி.அன்ரன் பிலிப் அவர்களுக்கும் அனைவரும் மனம் நிறைந்த நன்றி சொன்னோம். இறைவனால் கூடாதது ஒன்றுமில்லை என்ற கூற்றுக்கிணங்க இவர்களைபப் பயன்படுத்தி எம்மை காத்து வழிநடத்திய இறைவனுக்கு நன்றி கூறி இஸ்ரவேலின் தெல்அவி விமான நிலையத்தில் புனித பூமிக்கு விடை கொடுத்து ரொறன்ரோவுக்கு புறப்பட்டோம்.
       எம் வாழ்நாளில் மறக்க முடியாத மகத்துவமான இப் புனித பயணத்திற்கு வழிவகுத்த இறைவனுக்கும் எம் பயண ஒழுங்கமைப்பினருக்கம் எம் இதயம் நிறைந்த நன்றிகள். அத்துடன் இத் திரு யாத்திரையில் பங்குபற்றிய அனைவரும் அன்புடனும் நட்புடனும் சகோதரத்துடனும் ஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்து கொண்டனர். எமது குழுவில் சில வாலிபப் பிள்ளைகளும் கலந்து கொண்டது சிறப்பம்சம். எம்மோடு பயணித்து நட்புடன் பிரிந்து சென்ற அத்தனை உறவுகளுக்கும் நன்றிகள். இறை வழியில் தொடர்ந்தும் பயணிப்போம்.

 

26055644_1744259815644615_86647744231472

 

காவலூர் கண்மணி

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக தெளிவான .. நேர் முக வர்ணனை போல என்னையும்   அழைத்து சென்றது தங்களின் பகிர்வு பாராட்டுக்கள்   நன்றி .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் நிலாமதி புனித வியாழனான இன்று இப் பகிர்வின் மூலம் இறைமகன் பிறப்பு முதல் இறுதிவரை இத் திருப்பயணத்தை தியானிப்பது மனதுக்கு அமைதி தருகிறது. பாராட்டுக்கு நன்றிகள்

பயணக் கட்டுரையைப் படித்து விருப்பிட்ட யாயினி நவீன் ஆகியோருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பில் பெற்ரா என்று இருந்ததும் ஏதோ புறக்கோட்டையில் இருந்து புறப்படப் போவதாக எண்ணி உள்ளே போனால் என்னை நேரா பெத்தலகேம் கொண்டு போய்விட்டீர்கள்.இலவசமாக சுற்றிக் காட்டிய கண்மணிக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் ஈழப்பிரியன். அடுத்ததாக புறக்கோட்டைக்குக்தான் யாத்திரை செல்வதாக உத்தேசம். நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kavallur Kanmani said:

அன்று எம் மாவீரர் தினமென்பதால் அவர்களுக்கு மௌன அஞ்சலி செய்ய மறக்கவில்லை

 

11 hours ago, Kavallur Kanmani said:

யூத இனத்து விடுதலைக்குழு போராளிகள ஆயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக தம்மையே அழித்துக் கொண்டனர். அம் மாவீரர்களின் கதை

 

12 hours ago, Kavallur Kanmani said:

எம் இன இளைஞர்களின் பாடுகளும் மனக்கண்ணில் நிழலாடி மனப்பாரத்துடன் அவ்விடத்தில் இறைவார்த்தை வாசித்து செபித்து இறைவனை மகிமைப்படுத்தினோம்.
 

பயணக்கட்டுரைக்கு மிகவும் நன்றிகள்,பயணத்தின் பொழுது எமது போராளிகளையும் நினைவு நிறுத்தியமைக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

காவலூர் கண்மணி, நீங்கள் ஒரு சிறந்த பயண வழிகாட்டி என்பது நிச்சயம்

பயணத்தின் போது ஒவ்வொரு இடத்தையும்  காட்சியாக விபரித்து அந்த இடங்களின் சரித்திர நிகழ்வுகளையும் அழகாக தந்திருக்கிறீர்கள்.

படங்களைப் போடும் போது அதனது  தரவுகளையும்  படத்துடன் இணைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

அடிக்கடி பயணம் போய்வாருங்கள். ஷோபாவில் இருந்து கொண்டே பல இடங்களுக்கும் போய்வர உங்களது கட்டுரைகள் எனக்கு உதவும்.

வாழ்த்துக்கள்!

பயணக்கட்டுரைக்கு மிகவும் நன்றிகள். மிக அழகான வர்ணனை.

போனவருடம் இதே நேரம் வீரகேசரியில் வந்த ஒரு பயண கட்டுரை  இணைத்து இருந்தேன்.

சாக்கடலில் சேற்றுக்குளியல் ஜோர்தானுக்கான சுற்றுப் பயணத்திப்போது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்து கருத்திட்டு ஊக்கப்படுத்திய புத்தன் கவி நவீனன் அனைவருக்கும் நன்றிகள். எங்கு வாழ்ந்தாலும் எம் மண்ணையும் எம் மறவரையும் மறப்பது சாத்தியமில்லை. கருத்துக்கு நன்றிகள் புத்தன். உங்கள் விருப்பப்படி அடிக்கடி சுற்றுலா சென்று பயணக்கட்டுரை எழுதலாம் என்று என்னை உற்சாகப்படுத்தியமைக்கு நன்றிகள் கவி. பத்திரிகையில் வந்த பயணக்கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றிகள் நவீனன். இன்று புனித வெள்ளி ஆனதால் வாசிக்க நேரமில்லை. நிச்சயம் படிப்பேன். உங்கள் உற்சாகமான பாராட்டுதல்களுக்கு நன்றிகள்.அத்துடன் விருப்பிட்ட புங்கையூரனுக்கும் நன்றிகள்.

விருப்பிட்ட நுணாவிலானுக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர் சகோதரி.....! ஒரு மகத்தான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கு.அதை நீங்கள் அனுபவித்ததுடன் எங்களுடனும் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.அருமையான பயணக்  கட்டுரை.....!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் சுவி. எல்லாம் அவன் செயல். பராட்டுக்கு நன்றிகள். உங்களை விடவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேர காலத்திற்கேற்ற சிறந்த பயணக்கட்டுரை.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு பயணக்கட்டுரை...!

நாமே ..பயணிப்பது போன்ற ஒரு உணர்வைத் தருகின்றது!

துன்பம் ஏற்படும் காலங்களில் ....நம்பிக்கைகள் தானே...வாழ்வில் எமக்குப் பற்றிப் பிடிக்க.....கிளை கொம்புகள் போல போல.... ...கை கொடுக்கின்றன!

ஈஸ்ரர் காலமாதலால்.....முழுவதையும்....ஆறுதலாக வாசித்து முடித்தேன்!

தொடர்ந்தும்....பயணியுங்கள்! நன்றி..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையைப் படித்து கருத்திட்ட குமாரசாமி புங்கையூரன் இருவருக்கும் நன்றிகள். உங்கள் ஊக்கமும் உற்சாகமும்தான் என் எழுத்திற்கு ஆதாரம். நன்றிகள்

விருப்பிட்ட கொலம்பனுக்கும் நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.