Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடுப்பைக் கழட்டிப் போட்டுத்தானே ஓட வேணும், மாத்தையா………..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“டேய்  ஓடுறான் அவன் , விடாதீங்கோடா , அவனை..  சுடுங்கோடா   சுடுங்கோடா  …….”

எனக்கு எல்லாமே ஒரு முடிவிற்கு வரப் போகின்றது என தோன்றிற்று. இதிலிருந்து மீள சான்ஸே இல்லை.  ஒடுபவன்( நானில்லை) ஒரு தனி ஆள்,  துரத்திக்கொண்டு போகின்றவர்கள் ஒரு 10  பேராவது இருக்கும் , அதுவும் வகை வகையான சுடுகலங்களுடன். எப்படியும் அவன் தப்பப் போவதில்லை.

 எங்களுக்கு ( எனக்கு) இரு ‘கேட்ச் 22’  தெரிவுகளே இருந்தன , ஒன்று எப்படியாவது டிவிஷன் ஆஃபீஸுக்கு திரும்பிப் போய் கருணாரத்னவை அவர்கள் கொன்றது எங்களை மீறிய ஓர் சம்பவம் என்று சொல்லி விளங்கப்படுத்தி , தப்பினால் வீடு போய் சேர்வது.  (அநேகம் எங்களை அதிலேயே வைத்து வெட்டிப்  போடுவாங்கள் , கூட்டிக்கொண்டு போய் குடுத்திட்டோம் என்று)

இரண்டாவது கருணாரத்னே தப்பிவிட்டான் என்றால்  ( இதற்கு சான்ஸே இல்லை) , இவர்கள் எங்களை விட மாட்டார்கள்.   கூட்டிக்கொண்டு வந்து இடம் காட்டிக் கொடுத்து விட்டோம் என்று. பங்கர்  வெட்டுதல்,  பச்சை மட்டையடி என பல சீன்ஸும் மனதில் வந்து போயின. என்னை பெரிதாக நம்பிக் கொண்டிருக்கும் தங்கை மார் இருவரின் எதிர்காலம் என்னவாகும்,  உடல் நலம் குன்றிப் போய் மனைவியையும் இழந்த நிலையில் எங்களுடன் இருக்கும் தந்தை இதனை என்ன மாதிரி எடுத்துக் கொள்வார் என பல எண்ணவோட்டங்கள்.  

சூட்டுச் சத்தம் கேட்டகத் தொடங்கி ஒரு வெகு சில வினாடிகளுக்கு என் மனம் இந்த சாத்தியப்பாடுகளை எல்லாம் அலசி நின்றது.

தம்பிமார் அவனை சுட்டுப்போடாதையுங்கோ”   அலுவலகப் பெரியவரின் வார்த்தைகள் ஒரு 33, 34 வருடம் கழிந்தும் கூட அப்படியே அதே தொனியில் இப்பவும் கேட்கிறது. அந்த காட்சி அடிமனதில் அப்படியே உறைந்து விட்டதொன்று . புலன்கள் மீண்டும் அந்த நொடிக்கு திரும்பின.

இதில்  சம்பந்தப்பட்டவர்களில் அநேகர் இப்போது உயிரோட இல்லை. இருக்கிற யாராவது இதனைப் பதிவிடத் தானே வேண்டும்.

அன்றைக்கு நித்திரை விட்டு எழும்பும்  போது  எல்லாமே சாதாரணமாகத் தான் இருந்தது ஞாபகம் இருக்கிறது. துறைமுகத்திலிருந்து வந்த மெல்லிய குளிருடன் கூடிய காற்றில் அதே மெல்லிய  உப்புக்கரிப்பு. பின்பக்கத்து மரக்கூட்டுத்தாபனத்தில் குற்றிகள் பறித்துக் கொண்டிருக்கும் அதே ஓசை முன்வீட்டு சிவத்தின் இளைய பையன் படுக்க விடாமல் எழுப்பி,  படிக்க அலுப்புக் குடுத்துக் கொண்டிருக்கினம் என்ற அழுகையுடன் கூடிய முறைப்பாடு என எல்லாமே சாதாரணமாக நடந்து கொண்டிருந்த விடயங்கள் தான் .நானும் என் பாட்டுக்கு எழும்பிக் குளித்து , காம்பௌண்ட் வைரவரை தாண்டும் வரை சைக்கிளை உருட்டிக் கொண்டு போய் , நாள் நல்லபடியாக போக வேண்டும் என்ற வழமையான அப்பீலையும் வைரவருக்கு வைத்து விட்டு , சாமியார் கடைக்கு போய் பாணும்  வாங்கி வந்து காலை  சாப்பாடு முடித்து , பின்னர் மோட்டார் பைக்கை எடுத்துக் கொண்டு மார்க்கெட்டுக்கு போய் நல்ல உடன் விளமீனும் மரக்கறி வகைகளும் வாங்கி வந்து ராணியிடம் சமைக்கக் குடுத்து விட்டு அலுவலகம் போக  வெளிக்கிடும் வரையும் எல்லாமே சாதாரணமாகத்  தான் இருந்தது.

மோட்டார் சைக்கிள்  சிவன் கோயிலைக் கடந்து சிவபுரி பள்ள வீதியால் இறங்கி உள் துறைமுக வீதியில் ஏறுவதற்கு வளைவு எடுக்க ,வழமை  போல்   அவர்கள் இருவரும்  -  முகிலனும் கயலும் - கதைத்துக் கொண்டு நிற்பது தெரிகிறது வழமை போலவே.  கயல் சற்றே நிறம் மட்டு என்றாலும் நல்ல செந்தளிப்பான பெண். அவளின் கண்கள் தான் -  என்ன ஆழமும் துறுதுறுப்பும் - சில நேரங்களில் உலகத்து கனவுகள் எல்லாவற்றின் இருப்பிடமாக இருக்கும் அது. எனக்கும் அவளுக்கும் வயது பெரிய வித்தியாசமில்லை ஆயினும் அலுவலகத்தில் அவளுக்கு நான் மேலதிகாரி. என்னை வளைவில் கண்டவுடனும் அவளுக்கு இல்லாத பதற்றம் எல்லாம் வந்து விடும் , நானும் ஒரு புன்சிரிப்புடன் அவைர்களைக் கடந்து சென்று விடுவேன். முகிலனும் நல்ல வாட்ட சாட்டமான பையன் சோடிப்பொருத்தம் என்றால்  அப்படி இருக்கும் அவர்கள் இருவருக்கும். அவர்களின் காதல் அந்த சிவபுரி பள்ள வீதியில் மலர்ந்தது  தொடக்கம் முகிலனின் அந்த கோரமான முடிவு வரை முழுவதற்கும் நான் சற்றே தள்ளி நின்ற சாட்சியாக  இருந்தேன்.    ( வேறு ஒரு நேரம் அதை பற்றி) . இன்றும் சாதாரணமாகவே அவர்களை கடந்து சென்றேன்,  முகிலனைப் பார்த்து மெதுவே  தலையாட்டி விட்டு  ( பெண்களை பார்த்தது தலையாட்டுவது நடைமுறையில் இல்லாத காலம் )

ஆபீஸ் இல் பஜேரோ ஆயத்தமாக நின்றது.

 இந்த நேரத்திலிருந்து தான் அன்றைய நாள் மற்றைய நாட்களில் இருந்து மாறுபடத் தொடங்கியிருக்க வேண்டும். துறைமுகத்தில் இருந்து வழமையாக வேகமாக வரும் காற்றும் அப்போது அமைதியாகி விட்டிருந்தது என இப்போது யோசித்துப் பார்த்தால் ஞாபகம் வருகிறது. இலங்கைத் தமிழரின் அவலங்களின் ஒரு ஆரம்பப்  புள்ளியாக பின்னர் மாறி விட்டிருந்த ஒரு இடத்துக்கு விதி எங்களை அழைத்துச் செல்லப் போகிறது என யார் தான் ஊகித்திருந்திருக்க  முடியும்.

வழமைக்கு  மாறாக அலுவலகப் பெரியவர் , பிரதம பொறியாளர் , நிறைவேற்று பொறியாளர் என அலுவலகத்தின் முழு பட்டாளமும் அல்லை அணைக்கட்டுக்கு சைட் இன்ஸ்பெக்ஷன் போவதற்கு எல்லாமும் ஆயத்தமாக இருந்தது. அல்லை- கந்தளாய் வீதியால் பயணித்து அல்லை ஆறு அணைக்கட்டுக்கு போக  வேண்டும். அல்லை- கந்தளாய் வீதி என்பது தமிழருக்கு ஒரு மரண பொறிக்கிடங்காக இருந்தது , அன்றைய அரசியல் சமன் செய்தல் நிலவரத்தினால் தாற்காலிகமாகவேனும் பயணம் செய்யக் கூடியதாக மாறியிருந்தது.

புறப்பட்டாயிற்று.  மடத்தடி சந்தி தாண்டி வாகனம் வேகம் எடுத்து அன்புவழிபுரச் சந்தியும்தாண்டிஹத்ராஸ்க்கானுவஎன மெல்லிய நடுக்கத்துடன் எம்மவர்கள் உச்சரிக்கும் நாலாம் கட்டைச் சந்தியை நெருங்கினோம். நகரில் இருந்து 4 km  தான் ஆனால் அது முழுமையாக சிங்களமயப்படுத்தப்பட்ட ஒரு பகுதி. முன்பொரு முறை நடந்த  அந்த சம்பவத்திற்குப் பின்பு அந்த சந்தியால் எப்ப கடந்து போக நேர்ந்தாலும் எனக்கு மயிர்க்கூச்செறிவதை  தவிர்க்கவே முடிவதில்லை. முந்தைய அந்த தினத்தில் அச்சந்தியினால் பயணித்துக் கொண்டிருந்த பெருந்தொகையான தமிழர்கள் வெளியே இழுத்தெடுக்கப்பட்டு வெட்டியும் சுட்டும் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த அதே நேரத்திலேயே நாங்கள் ஒரு 4,5  பேர் அலுவலக வாகனத்தில் அச்சந்தியைத் தாண்டும் போது கொலை வெறி கொண்ட நூறு பேருக்கு மேல் இருக்கக் கூடிய கும்பலொன்றினால் ஒரு அரை மணித்தியாலமாக மறித்து வைக்கப்பட்டு,  உயிருக்கு சேதம் இல்லாமல் அந்த சந்தியை தாண்டியதை இன்றும் என்னால் நம்ப முடிவதில்லை. ( அது பற்றியும் பின்னொரு சமயம்..)

 

இப்போது அல்லை- கந்தளாய் வீதியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

( அவ்வீதியில் பயணிக்கும் போதெல்லாம் மனதில் மேலெழும் உணர்வுகளுக்கும்  50 களில் ஹிரோஷிமா நாகசாகி என்பனவற்றினூடாக பயணித்திருக்கக் கூடிய ஒரு ஜப்பானியனுக்கு இருந்திருக்கக் கூடிய உணர்வுகளுக்கும் பெரிய வித்தியாசம் இருந்திராது.  வீதியின் இருமருங்கிலும் துர் அதிர்ஷ்டவசமாக மாட்டுப்பட்டு  உயிர் எடுக்கப்பட்ட சீவன்கள்,  அழிவுகளின் சாட்சியாக இப்பவும் அவ்வீதியின் இருமருங்கிலும் அலைந்து திரிந்து  கொண்டிருக்கும் என எப்போதுமே எனக்கு ஒரு மனப் பிரமை உண்டு.  எவ்வளவு முக்கியமான விடயமாக இருந்தாலும் அந்த வீதியை பொழுது படுவதற்கு முன்னர் கடந்து விடவேண்டும் என்பதில் நான் எப்போதுமே தீர்மானமாக இருப்பதுண்டு)

ஆமாம்,  ஏன்  இந்த பயணம் என்று சொல்லவேயில்லை அல்லவா , வேறொன்றுமில்லை அல்லைக் குளம் ஆதி காலம் தொட்டு இலங்கை தமிழரின் வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு சங்கதி.  ஆற்றிற்கு குறுக்கே ஆணை கட்டி , தேங்கும் தண்ணீரை வாய்க்கால் மூலம் கொண்டுவந்து , ஆதி காலத்தில் இருந்தே விவசாயம் செய்து வந்தவர்கள் எம்மவர்.

பின்னாளில் தமிழர் விவசாயம் செய்து கொண்டிருந்த பகுதிக்கு பின்னால் பெரும்பான்மையினரை கொண்டுவந்து படிப்படியாக குடியேற்றி அவர்களுக்கும் விவசாயம் செய்யவென்று  தனி வாய்க்கால் வெட்டிக் கொடுத்து அவர்களும் விவசாயம் செய்து வந்தனர்.

சிலகாலம் செல்ல இனக்கலவரம் அது இது என்று தமிழர் இடம்பெயர்ந்து ,  பலகாலம் அலைந்து களைத்து திரும்பிய நேரம், அவர்களுக்கு நீர்ப்பாசனம் செய்துகொண்டிருந்த வாய்க்கால்கள் காணாமல் போயிருந்தன.  அவர்கள் இப்போது விவசாயம் செய்யவேண்டுமானால் , அவர்களுக்கு கீழே இருக்கும் பெரும்பான்மையினருக்கு பாசனம் செய்தபின் எஞ்சிய நீரை உயர்த்தி மீண்டும் முன்னுக்கு கொண்டுவந்து விவசாயம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார்கள்.  கஷ்டமான அலுவல் என தெரிகிறதல்லவா.  

தமிழ் விவசாயிகளின் வாழ்க்கை ஏனைய வெட்டு குத்துகள் மத்தியில் இந்த நீர்ப்பிரச்சினையுடன் மிக கேவலமாக போய் கொண்டிருந்தது.

வந்தது சமாதானப் பேச்சுவார்த்தை. தேன்நிலவு காலம்.   இந்திய படையை வேறு நாட்டை விட்டு கலைக்க வேண்டும் .பங்காளி என்ன கேட்டாலும் செய்து கொடுத்து விடவேண்டும் என்று சகல அரச அலுவலகங்களுக்கும் எழுத்தில் இல்லாத கட்டளை.

எங்கள் அலுவலகத்துக்கும் அவர்களின் மேலிடத்தில் இருந்து ஒரு பணிப்புரை. அல்லைக் குளத்தின் முகப்பில் முன்னர் இருந்த நீர்ப்பாசன வாய்க்காலை தேடி கண்டு பிடித்து மீண்டும் நீர்பாசனத்திற்கு திறந்து விட வேண்டும் என்பதே அது. அன்றைய கால கட்டத்தில் இலங்கையில் இருந்திருக்கக் கூடிய மாற்றுப் பேச்சு பேச முடியாத அதிகாரமிக்க பணிப்புரைகளில் அதுவும் ஒன்று. தொலைந்து போன அல்லது பெரும்பான்மையினரால் காணாமல் ஆக்கப்பட்ட நீர்ப்பாசன வாய்க்காலை கண்டு பிடித்து மீளமைக்கும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக அலுவலகத்தின் மூத்த சிரேஷ்ட அதிகாரிகள் அனைவரும் அல்லைக் குளப் பகுதியை முகாமைத்துவம் செய்யும் கிளை அலுவலகத்துக்கு சென்று கொண்டிருக்கிறோம்.  

உண்மையில் எங்கள் அனைவரின் மனநிலையும் மிகுந்த பரபரப்பில் இருந்தது.  எங்கள் அனைவருக்கும் அது முற்றிலும் புதியதோர் அனுபவம். இனிமேல் எங்களவர்களின் பணிப்புரைகளைத்தான் எங்கள் பகுதிகளில் நாங்கள் மேற்கொள்ளுவோம் என்பதற்கு கட்டியம் கூறி நிற்கும் ஒரு நிகழ்வாகவே அதனை நாங்கள் உணரத்  தலைப்பட்டோம். அதற்கு முதல் சாட்சிகளாக நாங்கள் இருக்கிறோம் எனப் பூரித்திருந்தோம்.

 

********************************** (தொடரும்) *********************

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள்....👍

  • கருத்துக்கள உறவுகள்
Quote

(தொடரும்)

பின் தொடர்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ சாமானியன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டு  நிலவரங்கள் காரணமாக இந்த பகுதி 2 சற்றுத் தாமதாகி விட்டது -மன்னிக்க  வேண்டும்

……  இனி பகுதி 2  ……

அலுவலகத்திற்கு வந்தாயிற்று. வழமையான குசல விசாரிப்புகள் , தேநீர் உபசாரங்கள் , மதிய சாப்பாட்டுத் தெரிவுகள் பற்றிய விசாரணை etc etc. இவ்வகையான சைட் இன்ஸ்பெக்ஷன் என்றால் எனக்கு எப்பவுமே விருப்பம்.  காட்டு வேட்டை மாமிசங்கள்,  Circuit  பங்களா கிளாஸ் 1  சமையல்,  ட்ரிங்க்ஸ் etc என்று அமர்க்களப்படுத்தி விடுவார்கள்.  

குசல விசாரிப்புகள் எல்லாம் முடிய , கருணாரத்ன வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டான் வழி காட்டுவதற்கு. அவனுக்கு அந்த இடங்கள் எல்லாம் அத்துப்படி. அவனுக்கு இஷ்டமான வேட்டையாடும் காட்டுப்பகுதியும் அதுவே.

குளத்து அணைக்கட்டில் பஜேரோவையும் சாரதியையும் விட்டு விட்டு நாங்கள் ஐவரும் கருணாரத்னாவும் நடையில் புறப்பட்டோம் வாய்க்காலைத் தேடி. மேலும் கீழுமாக இரண்டு தடவை நடந்து பார்த்தோம் எதாவது அறிகுறிகள் தென்படுகின்றதா என.

வருடக்கணக்கான  நாட்டின் குழப்பநிலை குளத்து அணைக்கட்டைச்  சூழ இருந்த பகுதிகளிலும் எதிரொலித்துக்கொண்டிருந்தது.  எல்லா இடமும் கடுமையாக காடு பத்திப் போயிருந்தது. இடம் வலமே  தெரியவில்லை. அணைக்கட்டின் வலதுகரைப்பக்கம் ஒரு பழைய வாய்க்கால் இருந்தததாக தனது தகப்பன் முன்பொரு சமயம் சொல்லியிருந்தார் என்று கருணாரட்ண சொன்னான்.

அணைக்கட்டின்  வலதுகரைப்பக்கம் சென்று எல்லா இடமும் தேடித் பார்க்க ஒரு பழைய பாதையின் சுவடு தென்பட்டது.  பெரிய வாய்க்கால்களுக்குப் பக்கத்தால் ஒரு கிரவல் பாதை அமைவது நீர்ப்பாசன கட்டமைப்பில் ஒரு இயல்பான விடயம்.

எனினும் அன்றைய பொழுதின் நிகழ்வுகளை மாற்றியமைத்ததும் அந்த பாதையின் தோற்றம் தான்.

1985-1994  காலப்பகுதிகளில் அல்லைக் குள அணைக்கட்டிற்கு அலுவலக ரீதியாக பலதடவை சென்றிருக்கிறேன்.  எந்த நேரம் போனாலும் அணைக்கட்டில் ஏறியதும் ஒரு அமானுஷ்யம் சூழந்து கொள்ளும்.  எந்தெந்த வகைகளில் எந்தெந்த சீவன்களின் அவலங்களை இந்த அணைக்கட்டு கண்டிருக்கக் கூடும்;  அவலத்தில் பிரிந்த சீவன்கள் இன்னமும் சுற்றிக் கொண்டிருக்கின்றனவோ என எண்ணிக் கொள்வேன். ஒரு தனிமை , அந்தகாரம் என அசச்சுறுத்தும் உணர்வுகளே சூழும் அங்கே.

பின்னொரு  கனத்த நாளில் பூட்டப்பட்டிருந்த  அணைக்கதவை,  நிலத்தில் எடுத்து வைத்த கால்கள் எல்லாம் கண்ணி வெடியில் சிதறச் சிதற எவ்வாறு பாதுகாப்புப் படையினரும் அவர்களுடன் கூட போனவர்களும்  திறந்து வைத்தனர் என அவர்களுடன்  அந்த நேரம் கூடப் போன   அதிகாரி ஒருவர் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லியும் இருக்கிறார் (  அது பின்னொரு சமயம் ) .  இன்றைக்கும்  அணைக்கட்டுப் பக்கம் போனால்,  அதி அவலமாக போய் சேர்ந்த அவர்களின் சீவன்கள்,   அவர்களாலேயே  போக்கப்பட்ட மற்ற சீவன்களுடன் ஒன்றாக கூடி அங்கே அலைந்து திரிந்து கொண்டிருக்கக் கூடும்.

பாதைச்  சுவடு ஒன்று தெரிந்தது என்று சொன்னேன் அல்லவா. கருணாரத்ன எங்களுக்கு முன்னாள் வழி காட்டிக்கொண்டு போய்க் கொண்டிருக்கிறான். ஒரு 100, 150  மீற்றர் தூரம் நடந்திருப்போம் , எங்களுக்கு முன்னால் எழுந்து நின்றது ஆளுயரத்திற்கும் மேலான உயரத்தில் நீளப்பாட்டிற்கு ஒரு தகர-வேலி . இது சில பல ஆங்கில படங்களில் வருவது போல கதையின் போக்கினை திருப்பும் சம்பவங்களிற்கு ஒத்ததான ஒரு நிகழ்வு என என் உள்ளுணர்ச்சி சொல்லிற்று. கருணாரத்னாவும் திரும்பிப் பார்த்துமாத்தயா , போன கிழமை நான் இங்கே வந்தது தானே இது ஒன்னும் அப்ப இங்க இருக்க இல்லை தானே”  என்று சற்றே குழப்பத்துடன் தனது சிங்களத் தமிழில் சொன்னான்.

அதன் பின்னர் நடந்தவை எல்லாம் எவரினதும் கட்டுப்பாடுகளையும் மீறி எவ்வளவோ காலங்களின் முன்னர் யாராலேயோ விதித்து எழுதப்பட்டிருந்தது போல வெகு வேகமாக நடந்தேறத் தொடங்கின.

30 வருடங்களின் பின்னர் இப்போது யோசித்துப் பார்த்தாலும் , அந்த நேரத்தில் அங்கு இருந்த அனைவருமே , கருணாரத்த , நான் , அலுவலக மேலாளர்  , ஏனைய பொறியியலாள ர்கள் அத்துடன் சம்பவத்தில் இனிமேல் பிரவேசிக்கப் போகும் பாத்திரங்கள் என எல்லோருமே முன்னர் விதிக்கப் பட்டிருந்ததின் படியே தங்கள் தங்களின் பாத்திரங்களை இனி வர இருக்கின்ற அந்த சில நிமிட மணித்துளிகளில் அனாயாசமாக செய்து முடித்தார்கள். ஒரு மிகவும் மெல்லிய ஒரு கோடும்  அன்று அவ்விடத்தில் கீறப்பட்டிருந்திருக்க வேண்டும் -  கோட்டின்  மற்றப்பக்கம் போய் 30 வருடங்களின் முன்னமே மண்ணுக்குள் மண்ணாகப்  போயிருக்க  வேண்டிய ஒருவன் இன்று அதனை பற்றி தட்டச்சுப் பண்ணிக்க கொண்டிருக்கிறேன்.

 

நீண்ட தகர வேலியின் நடுவே தகரக் கதவொன்று தெரிகின்றது. கள்ள மரம் வெட்டுபவர்களாக இருக்கக் கூடுமோ என மனதில் எண்ணக்  கீற்றொன்று தோன்றி மறைந்தது.  அனைவரின் கால்களும் தன்னிச்சையாக அந்த கதவை நெருங்க , நான் முன்னே சென்று கதவைத் தட்டத் தொடங்கினேன் .சில நொடிகளில் கதவு திறந்தது.  நடுத்தர,  அல்லது வயதில் முதிர்ந்த,  கள்ள மரம் வெட்டும் நபர்கள் என்று நான் உருவகப் படுத்தியிருந்த தோற்றப்பாட்டிற்கு முற்றிலும் பொருந்தாத வகையில் இரண்டு இளைஞர்கள் படலைக்குப் பின்னால் அங்கே நின்றார்கள்.  அவர்களின் முகத்தில் என்ன வகையான உணர்ச்சிகள் அந்நேரம்  தென்பட்டது என இப்பவும் சரியாக சொல்ல முடியவில்லை. மெல்லிய அதிர்ச்சி,  கேள்விக்கு குறி, பொறுமை இல்லாத தன்மை ஆத்திரத்தின்  ஒரு சாயல் என்பவை எல்லாம் இறுகிப் போயிருந்த அவர்களின் முகத்தில் வந்து வந்து போயின என்றே நினைக்கிறேன்.

அதிலொருவன்  என்ன வேண்டும் ´என்ற தொனியில் வார்த்தைகள் ஏதுமின்றி என்னை நோக்க மற்றவன் இவனிடம் எதோ முணுமுணுத்தான், தமிழில். என்ன சொன்னான் என்று சரியாக விளங்கவில்லை.

ஓஹோ  தமிழ்ப் பொடியங்கள் தான் என மனதில் நினைத்துக் கொண்டுஇல்லைத் தம்பி மார் , இங்கே இவடத்தில் ஒரு பழைய நீர்ப்பாசன வாய்க்கால் ஒன்று இருந்திருக்கிறது , அதனைத் தான் தேடி வந்தோம் , உங்களுக்கு அதனைப் பற்றி எதாவது தெரியுமோ”  என்று கேட்டேன் நான்.

அவன்  முகத்தில் இருந்திருக்க கூடிய கொஞ்ச நஞ்ச நட்புணர்வும் போய்த் தொலைந்து  விட்டது என உணரக் கூடியதாக இருந்தது. அவனுடன் நின்றவன் ஒரு சலனமுமின்றி விரைவாகத் திரும்பி எதிர்ப்பக்கமாக உள்ளே சென்று மறைந்தான்,

உங்களை யார் இங்கேயே வரச்  சொன்னது , இங்கேயெல்லாம் வரக்கூடாது என உங்களுக்கு தெரியாதாமிகவும் கடுமையான தொனியில் இருண்டு  போயிருந்த அவன் முகத்தில் பளீரெனத்  தெரிந்த அந்த மிகவும் பிரகாசமானான வெண்  பற்களினூடாக  காய்ச்சிய ஈயம் போல  இந்த வார்த்தைகள் வந்து எங்களின் காதுகளில் வீழ்ந்தது.

எனது நா சற்றே உலர்ந்தது. உள்ளங்கை வேர்க்க உடம்பில் தானாக ஒரு நடுக்கம் தொற்றிக் கொண்டது.

அவனைத் தாண்டி அசைவுகள் சில  இப்போது தென்படத்  தொடங்கின. முதலில் தெரிந்தது எங்களை நோக்கி நீண்ட சில மெல்லிய குழல்கள்,  (மீண்டும் ஒரு தடவை -  ஒரேயொரு வித்தியாசம் முன்பொரு முறை  இரவாக இருந்தது இன்றோ நல்ல பகல் நேரம், அன்று ஒரேயொரு குழல் இன்று பார்த்துக்கொண்டிருக்கும் போதே  குழல்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்க,  மனம் எண்ணுவதைக் கை  விட்டது.  என்ன ஒரு 10  அல்லது 20 இருக்கக் கூடுமோ ). ஒரு 20, 30  பேர்  வகை வகையான நவீன சுடுகலங்களுடன் எங்களை சூழ்ந்து கொண்டார்கள்.

மனைவியை இழந்து எங்களுடன் இருக்கும் எனது தந்தையார்  மனக்கண்ணில் வந்து போனார். அவருக்கும் எனக்கும் அப்பிடி ஒரு நெருக்கம் இருந்தது.  திருமண வயதில் இருக்கும் இரு சகோதரிகளும் வந்து போனார்கள்; “  எப்படியாவது இதுக்குள்ளலால் தப்பி வந்து விடு அண்ணா “  என்கிறார்கள் அவர்கள். மறைந்து போன  என் தாயாரின் புன்னகை சிந்தும் செந்தளிப்பான அந்த முகமும் மனதில் மின்னிச் சென்றது.

யார் உங்களை இந்த இடத்துக்கு வர சொன்னதுமிக கடும் தொனியில் உள்ளிருந்து வந்த ஒருவன் -  அவர்களின் தலைவன் போலும்  -  கேட்கிறான்.

அந்த  கேவலமானான நிலையிலும் உள்ளுக்குள்ளே எனக்கு சிரிப்புத் தான் வந்தது. ‘என்ன மடத்தனமான கேள்வி இது , நாங்கள் இவ்விடத்துக்கு வரக்கூடாது என்றால் அவர்கள் அல்லவா அதற்குரிய தடைகளை இட்டிருக்க வேண்டும்,  எவ்வித தடங்கல்களுமின்றி உல்லாசப் பயணம் போவது போலல்லவா நாங்கள் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்திருந்தோம். இதை பற்றிக் குறிப்பிடலாம் என வாய் உன்னியதும் சகோதரிமார் இருவரும் சட்டென்று அவ்விடத்தில் பிரசன்னம் ஆனார்கள். ‘ அண்ணா உங்களுக்கு இப்பத்தானே  சொன்னனாங்கள்  இதுக்குள்ளலால் எப்படியாவது தப்பி வந்து  விடச் சொல்லி’ என்று  சொல்லி விட்டு அவர்கள் வந்த மாதிரி விரைவாக போயும் விட்டார்கள்.

சம்பவங்கள் ,  எண்ணங்கள் எல்லாமே நினைக்க முடியாத வேகத்தில் நடந்தேறிக்  கொண்டிருந்தன.

இல்லை , பழைய வாய்க்கால் ஒன்று இந்தப் பக்கம் இருக்குது , அதனை மீள புனரமைத்துத் தரச்   சொல்லி   எங்களுக்கு பணிப்புரை வந்தது , அது விடயமாகத் தான் , அதனை தேடி இங்கே வந்தோம்”  அலுவலக மேலதிகாரி சொல்கிறார்.

என்ன விளையாடுறீங்களா , இந்த இடத்துக்கு ஒருத்தரும் வரக்  கூடாது ,  வந்திட்டிங்கள் இப்ப விட மாட்டம் , விசாரிச்சுப் போட்டுப் பார்ப்பம்”  என்று அவன் மேலும் சொன்னான்.

சரி சரி , உம்மட பெயர்  என்ன நீர் எவ்விடம்”  என மேலதிகாரியை அவன் வினவினான். தொனியிலும் வார்த்தைகளிலும் மரியாதை குறைந்திருந்ததது என் மனதில் உறைத்தது.

மீண்டும் மனக்கண்ணில் வேறு  ஒரு காட்சி சடுதியாக வந்து போனது. அந்த பையனுக்கு வயது 15க்கு மேல்  இராது , சாரம் அணிந்திருந்த அவன் எனது அலுவலக அறையில் என் முன்னே கோபம் கலந்த அதிகாரத்  தொனியில் சரத்தினுள் அணிந்திருந்த காற்சட்டைப் பையில் இருந்து எடுத்த கைத் துப்பாக்கியை என் மேசை மீது  வைத்துக் கொண்டு கேட்கிறான்அந்த மெஷின்  இப்ப உடனேயும்  வருமா வராதா”  என்று. (  இது பற்றியும் பின்பொரு சமயம் .)

அதிகாரி தனது பெயரையும் ஊரையும் சொல்கிறார்.

அவன் அவரது பெயரையும் ஊரையும் மிகுந்த ஏளனமானதொரு தொனியில் மீளவும்  சொல்லி விட்டு “ உமக்கெல்லாம் மூளை ஒன்றும் கிடையாதா இங்காலப்  பக்கம் வாறதுக்குஎன்று சொன்னான்.

எனக்குள் மீண்டும் அதே கேள்வி அப்பிடியெண்டால் இவங்கள் எல்லா அதை தடுத்திருப்பதற்கான பொறிமுறைகளை செய்திருக்க வேண்டும்’   ஆனால் நான் இந்தத் தடவை  வாய் திறக்க யோசிக்கவில்லை .

நாங்கள் அனைவரும் சற்றே வளைவாக ஒருவருக்கு அடுத்ததாக ஒருவர் சிறிய இடைவெளி விட்டு நின்றிருந்தோம். அலுவலக மேலதிகாரி முதலாவதாக நின்றிருந்தார். கருணாரத்ன அடுத்தது ,, மற்றைய அதிகாரிகள் அடுத்தடுத்து , நான் கடைசியாக நின்றிருந்தேன். எல்லோரின் கவனமும் சூழ இருந்த துப்பாக்கிக்கு குழல்களின் மீதும் விசாரணை செய்து கொண்டிருந்த அந்த பொறுப்பாளர் என்று சொல்லக் கூடிய ஆளிடமுமே இருந்தது.

அடுத்தது கருணாரத்னவின்   முறை.

பொறுப்பாளர் முறைத்துக்  கொண்டே   கேட்டான் , “ என்ன பெயர் ?”

கருணாரத்ன எனக்கு வலது பக்கமாக கடைசியில் நின்றிருந்தான். அவனுடைய அசைவுகள் எல்லாம் எனது கடைக்கண்ணில் பதிவாகிக் கொண்டிருந்தது.

“கருணாரத்ன” என்ற ஒலிப் பிறழ்வு அவனிடம் இருந்து வெளிப் பட்டது.  

ஊசி போட்டிருந்தாலும் கேட்டிருக்கக் கூடிய ஒரு அமைதி அங்கே நிலவியது. அந்தக் கணம் அப்படியே மனதில் உறைது போயிற்று. எல்லம் சில வினாடிகள் தான்.

“ டேய் , சிங்களவனைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறாங்களடா “.

 அன்றைய உச்ச கட்ட கிளைமக்ஸ்  பொறுப்பாளனின்  அலறலுடன் கூடிய பலத்த குரலுடன் அந்த நடுக்காட்டில் எதிரொலித்தது.

அத்துடன் சம்பவங்கள் எல்லாமே தன் பாட்டில் ஒன்றன் பின் ஒன்றாக வெகு வேகமாக நடைபெறத் தொடங்கின.  

விசாரித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்துக் கொண்டிருந்த எனது வலது கண்ணின் கடைக் கோடியில் ஒரு சடுதியான அசைவு தெரிந்தது. என்ன்வென்று திரும்பிப் பார்க்கத் தொடங்கிய அதே நொடியிலேயே அவன் அங்கு இல்லை -  ஓடத் தொடங்கியிருந்தான். ஆம், சுடுவதற்கு  ஆயத்தமாக இருந்த பத்திற்கும் மேற்பட்ட நவீன ரக துப்பாக்கிகள் சில மீற்றர் தூரத்திலேயே சூழ்ந்திருந்த நிலைமையிலும்  ஓடித் தப்பி விடலாம் என்று கருணாரத்ன ஓடத் தொடங்கியிருந்தான்.

“ டேய் ஓடுறான் , சுடுங்கோடா  சுடுங்கோடா…”

‘ ட்டட் டட்டட் டட்டட் …’

“ தம்பி மார் அவனைச் சுட்டுப் போடாதையுங்கோ “

 ‘ ட்டட் டட்டட் டட்டட்  ‘ ட்டட் டட்டட் டட்டட் …….

“ விடாதையுங்கோடா “

‘ ட்டட் டட்டட் டட்டட்  ‘ ட்டட் டட்டட் டட்டட் …….

எல்லாமே ஒரு கனவில் நடப்பது போல் .. இயந்திரத் துப்பாக்கிகளின் சத்தம் மட்டுமே எல்லாவற்றையும் மேவி அந்த அத்துவானக் காட்டில் எதிரொலிதுக் கொண்டிருந்தது ..

********************************( தொடரும் ) ***************************************

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, சாமானியன் said:

நாட்டு  நிலவரங்கள் காரணமாக இந்த பகுதி 2 சற்றுத் தாமதாகி விட்டது -மன்னிக்க  வேண்டும்

பரவாயில்லை தொடருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.