Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திலீபனின் நினைவேந்தல் நடத்த தடை- யாழ்.நீதிமன்றம் உத்தரவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் நினைவேந்தல் நடத்த தடை- யாழ்.நீதிமன்றம் உத்தரவு!

     by : Vithushagan

unnamed-1-2.jpg

நல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்ட திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) காலை நடந்த வழக்கு விசாரணையின் போதே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாளை ஆரம்பமாகவிக்கும் தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரி யாழ்ப்பாணம் பொலிஸாரினால் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக 20 பேருடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இவ்வழக்கு இன்று நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நானும், சக சட்டத்தரணி சுகாசும் மன்றில் முன்னிலையாகியிருந்தோம்.

பொலிஸாரினால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை நிராகரித்து, திலீபனின் நினைவேந்தலை நடத்த அனுமதி தர வேண்டும் என்று சமர்ப்பணத்தை நாங்கள் மன்றில் செய்திருந்தோம்.

தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளை நினைவுகூருகின்றோம், புலிகளை புத்துருவாக்கம் செய்ய முயற்சிக்கின்றோம், கொரோனா காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் நடாத்த அனுமதிக்க கூடாது என்ற சில காரணங்களை பொலிஸர் சமர்ப்பணமாக முன்வைத்தார்கள்.

அந்த விடயங்களை நாங்கள் மறுத்திருந்தோம். மேலும் கடந்த காலங்களிலும் இவ்வாறான தடையுத்தரவு கோரப்பட்ட போது, நிகழ்வினை சுமூகமாக நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இது மட்டுமல்லாமல் அமைச்சரவை ஒப்புதலுடன் திலீபனின் நினைவுதூபி புணரமைப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டது என்பதையும் மன்றில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

இருந்த போதும் எமது சமர்ப்பணங்கள் நிராகரிக்கப்பட்டு, பொலிஸாரினாலே கோரப்பட்டவாறு நினைவேந்தல் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையுத்தரவு தொடர்பில் மேன்முறையீடு செய்யப்படும்” எனவும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/திலீபனின்-நினைவேந்தல்-நட/

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திலுள்ள நீதிமன்றில் நீதியாளராக யாராவது தமிழர்தான் பதவி வகிப்பார். இந்தத் தீர்பை வழங்கியவர் தென்னிலங்கை சார்பாகவும் தீர்ப்பளித்திருக்கலாம் ஒரு நாலு பேருக்குத் தெரிகிறமாதிரியாவது தீர்ப்பளித்த நீதியாளரது பெயரை அறிவியுங்கோ.

காரணம் ஓய்வுபெற்றது அரசியலில் ஆசைவந்து அதே தமிழர்களிடம் தமிழ்தேசியம் தமிழர் உரிமை என பேசுவார் அப்போது அடையாளம் காணலாம்

  • கருத்துக்கள உறவுகள்

சமூகங்களிடையே பிரச்சனைகளை தூண்டும் இந்து எழுச்சி மாநாடு செய்ய தடையில்லை, இன்னும் பல அரசியல் கூட்டங்கள் நடத்த தடையில்லை தன் இனத்தின் விடுதலை வேண்டி இறந்த ஒருவரை நினைவு கூருவதற்கு மட்டும் தடை.  நாம் சிங்களவனோடு சேர்ந்து வாழ்ந்தால் பிரச்சனை இல்லை என்று போதிக்க ஒரு கூட்டம் ஓடி  வரும். 

  • கருத்துக்கள உறவுகள்

இதே நீதி??மன்றம் கடந்த ஆண்டு கடந்த சிங்கள அரசின் காலத்தில் அனுமதி அளிக்குது.. இந்த ஆண்டு.. இந்தச் சிங்கள அரசின் காலத்தில்.. தடை விதிக்குது.

இது நீதிமன்றமா.. அல்லது சிங்கள பேரினவாதக் கட்சிக் கூடாரங்களா.. அங்குள்ள தமிழர்கள் உள்ளடங்க.. இருப்பவர்கள்.. நீதிபதிகளா.. அல்லது சிங்கள பெளத்த பேரினவாத.. அரச கூலிகளா..???!

அதுசரி.. சென்ற ஆண்டு.. தமிழ் தேசிய மக்கள் முன்னணியோடு போட்டி போட்டுக் கொண்டு திலீபனின் நினைவு நாளை அனுஷ்டிக்க... கோட் படி ஏறிய சும் அங்கிள்.. இந்த முறை தேர்தல் முடிஞ்சு தானே.. என்று.. சுருண்டு படுத்துவிட்டாரோ..?!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தேவையில்லாமல் குந்தியிருக்கும் இந்திய தூதகரத்தை அகற்றணும் அவர்கள் அங்கிருந்தால் நமக்கு நல்லதாகத்தான்னும்  செய்யணும் அதுவும் கிடையாது பிறகென்ன மசிருக்கு குந்தி இருக்கினம் .

 

தேவையில்லாமல் குந்தியிருக்கும் சிங்கள ராணுவத்தை விட கேவலமானவர்கள்  இந்திய தூதரக அதிகாரிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று தடை

 
 

எதிர்மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் ஆவணங்களை சமர்ப்பித்து பொலிஸாரின் வாதத்துக்கு சரியான சட்ட ஏற்பாடுகளை முன்வைக்காத நிலையில் பொலிஸாரின் கடும் ஆட்சேபனை விண்ணப்பம் நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எனினும் இன்றைய தினம் முன்னிலையாகாத எதிர் மனுதாரர்கள் தரப்பு நாளை நகர்த்தல் பத்திரம் அணைத்து வழக்கை மீள அழைத்து பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட குற்றவியல் நடைமுறை சட்டக்கோவைக்கு எதிராக தமது கடும் ஆட்சேபனையை முன்வைப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைய, நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை கோரி யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸாரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் நினைவேந்தலுக்கு எதிராக கோப்பாய் பொலிஸாரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று தனித் தனியே வழக்குகளைத் தாக்கல் செய்தனர்.

நல்லூர் நினைவுத் தூபியில் நினைவேந்தல் நடத்தக் கோரி மனுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திகுமார், கஜேந்திரன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் ஆனல்ட், முன்னாள் மாகாணச சபை அமைச்சர் அனந்தி சசிதரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், க. சுகாஸ், த.காண்டீபன், மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன், தமிழரசுக்கட்சி இளையோர் சங்கத்தலைவர் கே.பிருந்தாபன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி இளையோர் அமைப்பு தலைவர் கி.கிருஸ்ணமேனன், நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் பொன் குணரத்தினம், ராகவன் யதுர், அரசியல் செயற்பாட்டாளர் க.விஸ்னுகாந்த், வாசுகி சுதாகரன்,காளிரூபன்,சுவிகரன், காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் தலைவர் யோ.கனகரஞ்சினி,செயலாளர் ஆ.லீலாதேவி ஆகிய 20 பேரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கழகத்தில் நினைவேந்தலை நடத்தத் தடை கோரிய மனுவில் பல்கலைக்கழக துணைவேந்தர், கலைப்பீட மாணவர் ஒன்றியம், மாணவர் ஒன்றியத் தலைவர் உள்ளிட்டோரின் பெயர்களும் முன்வைக்கப்பட்டன.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் ஊடாக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக் கோவை 106ஆம் பிரிவின் கீழ் குழப்பம் ஏற்படும் என்று பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் இன்று தனித்தனியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

“திலீபனின் நினைவேந்தலை நடத்த அனுமதித்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க துணை நிற்கும். அத்தோடு சமூகத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். முன்னைய அரசு போல் அல்லாமல் தற்போதைய அரசு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்களை நினைவு கோருவதற்கு அனுமதியளிக்காது” என்று மன்றுரைத்த பொலிஸார், அதற்கான ஆவணங்களையும் மன்றில் சமர்ப்பித்தனர். மேலும் அனுமதியின்றி வெளிநாட்டில் இருந்து வருகைதந்த பலர் குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள இருப்பதால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனர்.

எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், க.சுகாஷ் ஆகியோர் நீண்ட சமர்ப்பணத்தை மன்றில் முன்வைத்தனர்.

பொலிஸாரால் ஆவணங்கள் தமிழில் முன்வைக்கப்படவில்லை. தியாக தீபம் திலீபன், தமிழ் மக்களின் விடுதலைக்காக உணவு ஒறுப்பில் இருந்து உயிர்கொடை வழங்கியவர் உள்ளிட்டவற்றை எதிர்த்தரப்பு மன்றில் சமர்ப்பித்து சமர்ப்பணம் செய்தனர்.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான், எதிர்த்தரப்பு ஆவணங்களை சமர்ப்பிக்காத நிலையிலும் சட்ட ஏற்பாட்டுக்கு உள்பட்டு சமர்ப்பணத்தை முன்வைக்காத நிலையிலும் பொலிஸாரின் கடும் ஆட்சேபனையை ஏற்று தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை உத்தரவு வழங்கியது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகியோர் சார்பிலும் பொது நோக்காக சில தரப்புகளாலும் இந்த வழக்கில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் அணைத்து மீள அழைக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதன்போது பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட சட்ட ஏற்பாட்டின் காரணமாக தியாக தீபன் நினைவேந்தலை தடை விதித்தால் சமூகத்தில் குழப்ப நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என தமது வாதத்தை முன்வைக்க உள்ளனர். அத்தோடு தியாக தீபன் திலீபனின் நினைவேந்தலை நடத்த அனுமதியளித்து 2018 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று வழங்கிய உத்தரவும் நாளை முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

http://www.ilakku.org/தியாக-தீபம்-திலீபனின்-நி-3/

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் தூபிக்கு பொலிஸ் காவல்

IMG_20200914_192702-960x640.jpg?189db0&189db0

 

தியாக தீபம் திலீனின் நினைவேந்தலுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று (14) தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபி முன்னால் பொலிஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நீதிமன்ற தடைக்கு எதிராம நாளை (15) நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தியாகி திலீபனின் நினைவேந்தல் வாரம் ஆரம்பம் – யாழில் அமைக்கப்பட்ட உருவப்படங்கள் அகற்றப்பட்டன

யாழ்ப்பாணம் – நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப்படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளன.

தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகின்றது.

இந்த நிலையில் நீதிமன்றத் தடையை நேற்றுப் பெற்றிருந்த யாழ்ப்பாணம் பொலிஸார், இரவோடு இரவாக நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப்படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகளை அகற்றியுள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இடத்தையும் கோப்பாய் பொலிஸார் அகற்றியுள்ளனர்.

நல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்ட திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நேற்று (திங்கட்கிழமை) காலை நடந்த வழக்கு விசாரணையின்போதே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

பொலிஸாரினால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை நிராகரித்து, திலீபனின் நினைவேந்தலை நடத்த அனுமதி தர வேண்டும் என்று நீதிமன்றில் கோரியபோதிலும் தமது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையிலேயே நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப்படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளன.

தியாக தீபம் திலீபன் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி ஐந்து கோரிக்கைகைளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தண்ணீர் அருந்தப்போவதில்லை என்றும் அறிவித்தார்.

எனினும் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், அவர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட பனிரெண்டாம் நாளான செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி வீர மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/யாழில்-அமைக்கப்பட்ட-தியா/

 

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் நினைவேந்தல் இன்று: தடையை அடுத்து நல்லுர், பல்கலைக்கழகத்தில் பொலிஸ் குவிப்பு

 

தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் இன்று ஆரம்பமாகும் நிலையில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் நேற்று மாலை முதல் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிக்க யாழ். நீதிமன்றம் நேற்று தடைவிதித்தது. இதனையடுத்து, நேற்று மாலை முதல் திலீபன் நினைவேந்தல் நடைபெறும் எனக் கருதும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லூரிலுள்ள திலீபனின் நினைவுத் தூபிமற்றும் யாழ். பல்கலைக்கழகப் பகுதிகளில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

http://www.ilakku.org/திலீபன்-நினைவேந்தல்-இன்ற/

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டு – சிவாஜிலிங்கம் கைது

நீதிமன்ற தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பாகியுள்ள நிலையில், குறித்த நினைவேந்தல் நிகழ்வினை நடத்த நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவில் யாழ்.நீதவான் நீதிமன்றில் தடையுத்தரவை பொலிஸார் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் தடைகளை மீறி எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றைய தினம் காலை கோண்டாவில் பகுதியில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியபோது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

http://athavannews.com/திலீபனின்-நினைவு-தினத்தை/

ஒவ்வொரு மக்களும் வீட்டில் நினைவு தினம் அனுஷ்டிப்பார்கள், இதில எங்கே நீதி மன்று தலையிடும். மக்கள் மனதில்  வாழும் தெய்வம் 

இதுதான்ஆரம்பம், நல்லாட்சி

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனை நினைவு கூர்வதற்கு மீண்டும் தடைவிதித்தது யாழ் நீதிமன்றம்!

தியாகி திலீபனின் நினைவேந்தலிற்கு அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன் முறையீட்டு மனுவை யாழ் நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல் இன்று(15) நிராகரித்துள்ளார்.

கடந்த 14ம் திகதி தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நடத்துவதற்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இன்று திருத்த மனுவை பரிசோதனை செய்த யாழ் நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல், திலீபனை நினைவுகூர்வது தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பொன்றின் உறுப்பினரை நினைவுகூர்வதாக அமைவதோடு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படக்கூடிய குற்றம் என தெரிவித்துள்ளார்.

குறித்த மன்றலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், வ.பார்த்தீபன் உள்ளிட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சார்பில் சட்டத்தரணிகள் வி.திருக்குமரன், கு.குருபரன் ஆகியோர் முன்னிலையாகிமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/திலீபனை-நினைவு-கூர்வதற்க/

  • கருத்துக்கள உறவுகள்

தடைகளால்.. வன்மத்தை தான் வளர்க்க முடியுமே தவிர..  தீர்வுகளை தேட முடியாது.

மீண்டும் மகிந்த கும்பல் தவறான வழியை சரியான வழி என்று நினைத்துக் கொண்டு பயணிக்கிறார்கள்.

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனே தமிழனை காட்டிக்கொடுக்கிறான்.. தமிழனே தமிழனுக்கு எதிராக தீர்ப்பும் எழுதுகிறான்..

சிங்களவன் நினைச்சதை செய்து முடிக்கிறான்.. ஹிந்தியன் எக்காளமிடுகிறான்.. சீனன் வாரிக்கொடுக்கிறான்.

Image may contain: text and outdoor

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பிழம்பு said:

யாழ் நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல், திலீபனை நினைவுகூர்வது தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பொன்றின் உறுப்பினரை நினைவுகூர்வதாக அமைவதோடு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படக்கூடிய குற்றம் என தெரிவித்துள்ளார்.

ஒரு அடக்கப்பட்ட இனத்தில் இருந்து வந்த  நீதிபதிக்கே அடக்குமுறை தெரியல, விடுதலை அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று கூறுகிறார், இறந்தவரை நினைவு கூர்ந்தால் பயங்கரவாதம் மீள உருவாகும் என்று உளறுகிறார். இனியென்ன? சர்வதேச விசாரணை தேவையில்லை. எங்கட நீதிபதிகளும், வக்கீல்மாரும் காணும் எமக்கு நீதியைப் பெற்றுத்தர. 

  • கருத்துக்கள உறவுகள்

தீலிபனை நினைவு கூர சாணக்கியனுக்கு தடையுத்தரவு –ஊடக சந்திப்பு

 
 

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கப்படுவதாகக் கூறி தடையுத்தரவு ஒன்று களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றத்தின் ஊடாக வெல்லாவெளி பொலிஸாரினால் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

நீதிமன்றத்தினைத் தவறான முறையில் வழிநடாத்தி இந்த தடையுத்தரவினை பொலிஸார் பெற்றுள்ளதாகவும் அவர்  குற்றம்சுமத்தியுள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“நேற்று இரவு வெல்லவெளி பொலிஸாரினால் நீதிமன்ற தடையுத்தரவு ஒன்று அவசரமாக என்னிடம் கையளிக்கப்பட்டது.தியாக தீபம் திலீபனின் நினைவுதினம் தொடர்பாக அந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

உண்மையில் மிகவும் அவசரமான முறையில் எந்தவிதமான விபரங்களையும் அறியாமல் ஒரு நிகழ்வினை தடைசெய்ய வேண்டும் என்ற ஒரேநோக்கத்துடன் ஏதோ ஒரு காரணத்தைக் கூறி தடைசெய்யவேண்டும் என்ற நோக்குடன் நீதிமன்றத்திற்கு கூட தவறான தகவல்களை வழங்கி நீதிமன்றத்தையே பிழையான வழியில் வழிநடத்திய பொலிஸ் பிரிவு இந்த தடையுத்தரவை எடுத்திருக்கின்றது. இது தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சியின் பொறுப்பாளர் என்று நகுலன் என்பவரின் பெயரும் இடப்பட்டு இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

 

இவ்வாறான நபர் அப்பகுதியில் இல்லை. அதேபோன்று அந்த கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நீதிமன்றத்தினைத் தவறானப் பாதையில் வழிநடத்தி வெல்லாவெளி பொலிஸாரினால் இந்த தடையுத்தரவு பெறப்பட்டு என்னிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளவர்களின் வரிசையில் முதல் இடத்தில் எனது பெயர் உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. என்னை இலக்குவைத்தே நீதிமன்ற தடையுத்தரவினை பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதை அவதானிக்கமுடிகின்றது.

சர்வதேச சமூகத்தின் மத்தியில் இந்த விடயங்களை நான் கொண்டு செல்லலாம், அடக்குமுறைகளுக்கு எதிராக கூடுதலாக குரல்கொடுப்பதன் காரணமாக நீதிமன்ற உத்தரவுகள் எனக்கு வழங்கப்படுவதாக கருதலாம்.

தியாக தீபம் திலீபன் அவர்கள், இந்திய படையினருக்கு எதிராக அகிம்சை ரீதியாக போராடியவர். அவரை நினைவுகூரமுடியாத நிலையேற்பட்டுள்ளது.குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸார் விடுதலைப்புலிகள் என்ற பெயரை பயன்படுத்தி தடையுத்தரவுகளை பெறுவது என்பது வேடிக்கையான விடயமாகவுள்ளது.

அண்மையில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்திலும் விடுதலைப்புலிகளை மீள கட்டியெழுப்பும் செயற்பாடு என்று தெரிவித்து தடையுத்தரவு அந்த போராட்டத்திற்கு பெறப்பட்டிருந்தது. 60வயது 70வயது தாய்மார்கள் செய்த போராட்டத்தினை விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்தியது ஒரு வேடிக்கையான விடயம்.

அந்த வகையில் தியாக தீபம் திலீபன் அவர்களை விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்தி அந்த காரணத்தினால்தான் இந்த நிகழ்வினை தடைசெய்கின்றார்கள் என்று சொன்னால், இந்த நாட்டில் தமிழர்கள் மீதான ஜனநாயகம் குறைந்து செல்கின்றது என்பதை நாங்கள் உணரவேண்டும்.

இவ்வாறான விடயம் தொடர்பில், இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுபவர்கள் இதுவரையில் எந்தவிதமான குரலும் வழங்கவில்லை. தங்களின் மக்கள் இந்த நிகழ்வினை நடாத்துவதை விரும்பவில்லையென அவர்கள் கருதுகின்றார்களா என்ற கேள்வியும் எழுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயரளவில் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் கூட தமிழர் தரப்பில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களே களத்தில் இருப்பதை காணடிமுடியும்.

மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கூடிய பொறுப்பினை நாங்கள் கொண்டிருகின்றோம். வருங்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் அனுஸ்டிப்பதற்கு தடைகள் வருமானால் இந்த அரசாங்கத்திற்கு எதிரான செய்தியை விரைவில் தமிழ் மக்கள் தெரிவிப்பார்கள்.

தியாக தீபம் திலீபன் அவர்கள், அகிம்சை ரீதியாகப் போராடி உயிர் நீர்த்தவர் என்ற அடிப்படையில், அவரை நினைவுகூரும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை இந்த தடையுத்தரவினால் மீறப்படுவதன் காரணமாக இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ள ஏனையவர்களும் என்னுடன் தொடர்புகொள்ளுமிடத்து உயர்நீதிமன்றத்தில் இந்த தடையுத்தரவுக்கு எதிராக செல்லமுடியும்.

இன்று பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தன்னை அலுவலகத்திற்கு வந்து சந்திக்குமாறு அழைத்திருந்தார். அவர் பொலிஸ் உயர் அதிகாரியாக இருந்தாலும் கூட அவர் என்னை சந்திக்கவிரும்பினால் அவர் வந்து என்னை என்காரியாலயத்தில் சந்திக்கலாம். நீதிமன்றினால் அழைப்பு விடுத்தால் நாங்கள் செல்லமுடியும். ஆனால் பொலிஸ் அதிகாரி அழைக்கும்போது செல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நீதிமன்ற தடையுத்தரவு கிடைக்கப் பெற்றவர்கள் தடையுத்தரவுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவிரும்பினால் என்னை தொடர்புகொள்ளுங்கள்.

நாங்கள் எமது ஜனநாயகம் மீறப்படுவது தொடர்பில் 72வருடமாக நாடாளுமன்றத்தில் கதைத்துதான் வருகின்றோம் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தும் முறையாகமட்டுமே இது இருக்கும்.

இன்று தெற்கு அரசியல் எஜமானார்களுக்கு கீழ் வேலை செய்யும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் இவ்வாறான நிகழ்வுகளை அனுஸ்டிப்பதில் தமிழ் மக்களுக்கு விரும்பம் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பினரே இவ்வாறானவற்றை செய்கின்றனர் என்கின்ற கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்.

தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறான அனுஸ்டிப்புகளை செய்வதில் உள்ள ஆர்வத்தினையே நாங்கள் சொல்லிவருகின்றோம். இது தமிழ் மக்களின் உணர்வான விடயம் அவர்களின் உரிமை தொடர்பான விடயம் என்பது மக்கள் மத்தியில் இருந்து எழுவேண்டும்” என்றார்.

http://www.ilakku.org/thileepan-r-sanakiyan-revolution/

 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, உடையார் said:

சர்வதேச சமூகத்தின் மத்தியில் இந்த விடயங்களை நான் கொண்டு செல்லலாம், அடக்குமுறைகளுக்கு எதிராக கூடுதலாக குரல்கொடுப்பதன் காரணமாக நீதிமன்ற உத்தரவுகள் எனக்கு வழங்கப்படுவதாக கருதலாம்.

இது அரசின் தடையல்ல, நீதிமன்றத்தின் தடை உத்தரவு. அதுவும் தமிழ் நீதியரசர்கள் விடுத்த தடை. குறித்த சில கட்சிகளும் அவர்கள் இயக்கும் மக்களுமே இப்படியான நிகழ்வுகளை இயக்குகிறார்கள் என்று அரசாங்கம் நிரூபிக்கும்.  இப்படியான சந்தர்ப்பங்களிலேயே அன்றும்  சிலரை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

விடுதலைக்கான பயணத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூருவது அடிப்படை உரிமை – இரா.சம்பந்தன்

 

 


 

விடுதலைக்கான பயணத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூருவது அடிப்படை உரிமையாகும் என்றும் அதனை யாரும் தடுக்க முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அதேநேரம், உரிமைகள் மறுக்கப்படும் சந்தர்ப்பங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைத்து பலமான செயற்பாடுகளை முன்னெடுக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் செயற்பாடுக்கு அவர் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

தியாக தீபம் திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவுகூரலுக்கு வடக்கு கிழக்கில் நீதிமன்றங்களின் ஊடாக தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இவ்விதமான விடயங்களில் எம்மிடையே ஒற்றுமை மிகவும் முக்கியமானது என சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன் தொடர்ச்சியாக பொதுவிடயங்களில் ஒற்றுமையாக செயற்பட வேண்டியதும் அவசியமாகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். (நன்றி கேசரி)

 

http://athavannews.com/விடுதலைக்கான-பயணத்தில்-உ/

  • கருத்துக்கள உறவுகள்

 

திலீபனுக்காக எப்படியேனும் உணர்வுகளை வெளிப்படுத்துவோம் – ஜெயசிறில்

jayasirile.jpg?189db0&189db0

திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு வழிவிடத்தவறினால், ஏதோ ஒரு வழிமுறையில் ஒவ்வொரு தமிழனும் உணர்வினை வெளிப்படுத்துவார்கள் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறில் தெரிவித்தார்.

அம்பாறை – காரைதீவு பிரதேச சபையின் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று (20) இடம்பெற்ற திலீபன் நினைவு தினம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“ஜனாதிபதி மற்றும் தற்போதைய பிரதமர் தமிழர்களுக்கு அநீதி இழைக்க மாட்டோம் என தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். உண்மையில் இவர்களின் இக்கூற்றுகள் வரவேற்கப்பட வேண்டியவையாகும். இதேபோன்று இவர்கள், இலங்கையில் ஒருநீதி, ஒரு சட்டம் என வலியுறுத்தி வருகின்றனர். இதனடிப்படையில் வட கிழக்கு தமிழர்களின் மனநிலையினை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

எமது சுதந்திரத்திற்காகவும் தமிழர்களின் விடுதலைக்காகவும் பாடுபட்டு மறைந்த மாமனிதர் திலீபன் ஆவார். தியாகியாகிய தீலீபன் பயங்கரவாதியாகவோ அல்லது ஆயுததாரியாகவோ இல்லாமல் சாத்வீக போராட்டத்தை முன்னெடுத்தவராவார்.

தமிழ்ர்களின் வரலாற்றில் இடம்பிடித்திருக்கும் இவரின் நினைவு தினத்தை தமிழர்கள் வாழும் இடங்களில் அனுஸ்டித்து வருகின்றார்கள். ஆனால் இப்போதைய அரசாங்கம் இந்நினைவு நிகழ்வை மேற்கொள்ள தடை விதித்துள்ளது.

இது அடக்குமுறை சர்வதிகார போக்கு என்பவற்றை காட்டுகின்றது. இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் பல கடிதங்களை ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பி இருக்கின்றது. எனவே எனது வேண்டுகோள் யாதெனில் நாட்டில் சட்டம், நீதி எல்லோருக்கும் சமனாயின் இந்நிகழ்விற்கு அனுமதி தரவேண்டும்.

இந்நாட்டிற்காக போராடிய இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்ள முடிந்தால் அது உங்களது உரிமை. ஆயுதம் ஏந்தாது அகிம்சை ரீதியாக போராடி இறந்த திலீபனை நினைவு கூறுவது என்பது எங்களது உரிமை. எங்களது இவ்விடயத்தை புறக்கணிக்காது தமிழர்களின் உணர்வினை அரசாங்கம் மதித்து செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்” – என்றார்.

https://newuthayan.com/திலீபனுக்காக-எப்படியேனு/

 

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் நினைவு வாரத்தில் கடற்படையினருடன் தமிழ் ஊடகவியலாளர்கள் சுற்றுலா

 

தமிழ் ஊடகவியலாளர்களை திசை திருப்ப சிறீலங்கா அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்கு ஏதுவாக சிறீலங்கா கடற்படையினரின் வடக்கு பிராந்திய கட்டளை மையம் ஊடகவியலாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

வடபகுதியில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் அழத்துக் கொண்டு தீவுப் பகுதிகளுக்கு கடல் சுற்றுலா ஒன்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று (20) இடம்பெறும் இந்த நிகழ்வில் தாம் ஒரு நாள் முழுவதும் நடுக்கடலில் சிறீலங்கா கடற்படையினரின் உபசரிப்பில் இருக்கப்போவதாக இதில் கலந்துகொள்ளும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை தன்வசப்படுத்தி அவர்களின் அரசியல் அபிலாசைகளை அழிக்கும் நோக்கத்துடன் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் சிறீலங்கா அரசு தற்போது ஊடகவியலாளர்களை குறிவைத்துள்ளதுடன், தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுக்கு தடைவித்துள்ள சிறீலங்கா அரசு தற்போது அவரின் நினைவு நாளில் ஊடகவியலாளர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது இங்கு குறிப்பிடத்தக்கது

 

http://www.ilakku.org/திலீபனின்-நினைவு-வாரத்தி/

உயிர் நீத்தவர்களை நினைவுகூருதல் அடிப்படை உரிமை – சம்பந்தன்

 

 

Rajavarothayam-Sampanthan-Opposition-Leader.jpg?189db0&189db0

விடுதலைக்கான பயணத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூருவது அடிப்படை உரிமையாகும். அதனை யாரும் தடுக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அதேநேரம், உரிமைகள் மறுக்கப்படும் சந்தர்ப்பங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைத்து பலமான செயற்பாடுகளை முன்னெடுக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சேனாதிராஜாவின் செயற்பாடு பாராட்டப்பட வேண்டியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தியாக தீபம் திலீபனின் 33வது ஆண்டு நினைவுகூரலுக்கு வடக்கு கிழக்கில் நீதிமன்றங்களின் ஊடாக தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

https://newuthayan.com/உயிர்-நீத்தவர்களை-நினைவு/

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனை நினைவுகூர்வதுஎப்படி பயங்கரவாதமாகும்?

திலீபனை நினைவுகூர்வது, எப்படி பயங்கரவாதமாகும்? எனக் கேள்வி எழுப்பிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், ஜே.ஆர். பொதுமன்னிப்பு வழங்கியது அரசுக்கு தெரியாதா என்றும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வுகளை நடத்த அரசாங்கம் தடை விதித்த நிலையில், இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

“இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கு அமைவாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆயுத இயக்கங்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். அதன் பின்னரே, தியாக தீபம் திலீபன் 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சா வழியில் உணவு ஒறுப்பு போராட்டத்தை முன்னெடுத்து வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். எனவே திலீபனை நினைவுகூர்வது எப்படிப் பயங்கரவாதமாகும்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு இப்போது பயங்கரவாதச் சாயம் பூசப்படுகின்றது. தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு ஆட்சியிலிருப்பவர்கள் எப்போதும் தூக்கும் ஆயுதம்தான் ‘பயங்கரவாதம்’. 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் மக்கள் தியாக தீபம் திலீபனை பொது வெளியில், யாரும் இடையூறின்றி, நல்லிணக்கத்துக்கு குந்தகமில்லாமல் நினைவுகூர்ந்து வந்தனர்.

2018ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பொலிஸார் இதற்கு நீதிமன்றம் ஊடாகத் தடை கோரிய போதும் அதற்கு மன்று மறுப்புத் தெரிவித்திருந்தது. இப்போது ராஜபக்சக்களின் யுகம். தமிழர்களை மிதித்து அடிமைகளாக வைத்திருப்பது அவர்களின் நோக்கம். அதற்காக எதுவும் செய்வார்கள். நினைவுகூரல் என்பது எங்களின் மரபுரிமை சார்ந்தது. அதனைச் செய்வதற்குக் கூட அவர்களின் அனுமதியில் நாங்கள் தங்கியிருக்கவேண்டியிருக்கின்றது.

பொதுமன்னிப்பு

இலங்கை – இந்திய ஒப்பந்தம் 1987ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைச்சாத்திடப்பட்டது. ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி அந்த உடன்பாட்டுக்கு அமைவாக தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை பலாலி இராணுவ முகாமில் வைத்து, இந்திய, இலங்கை இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அப்போது இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சின் செயலராக இருந்த ஜெனரல் சேபால ஆட்டிக, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பிரதிநிதியாக இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார். சகல போராளிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கடிதத்தை, அந்த நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் ஆயுதக் கையளிப்பில் பங்கேற்றிருந்த யோகியிடம் அவர் வழங்கியிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட பின்னர், அந்த அமைப்பிலிருந்த உறுப்பினர்களுக்கு இலங்கை அரசு பொதுமன்னிப்பு வழங்கிய பின்னரே, தியாக தீபம் திலீபன் தனது உணவு ஒறுப்புப் போராட்டத்தை 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15ஆம் திகதி ஆரம்பித்தார். அவரது 5 அம்சக் கோரிக்கைகளில் தனி நாட்டை வலியுறுத்தும் எவையும் இடம்பெறவில்லை. இவ்வாறான நிலையில், அவர் செப்ரெம்பர் 26ஆம் திகதி வீரச்சாவடைந்தார்.
இப்படியான நிலையில் தியாக தீபம் திலீபனை அரசு எவ்வாறு பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் என்று முத்திரை குத்த முடியும். அவரை நினைவுகூர்வதை பயங்கரவாதச் செயற்பாடு என்று, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயற்பாடு என்று எப்படிக் கூறமுடியும். இன்று ராஜபக்ச அரசில் அமைச்சராக இருக்கும் வாசுதேவ நாணயக்கார, தியாக தீபம் திலீபன் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த போது நேரில் வந்து பார்வையிட்டிருந்தார்.

திலீபனை நினைவுகூர்வது ஒருபோதும் பயங்கரவாதமாகாது. அரசு அதை உணர்ந்து கொள்ளவேண்டும். வெறுமனே தமிர்களை வஞ்சிப்பதற்காகவே ‘பயங்கரவாத’ கோசத்தை ராஜபக்ச அரசு தூக்கிப் பிடிக்கின்றது என்பதை சர்வதேச சமூகம் உள்ளிட்ட சகலரும் உய்த்தறிந்து உணர்ந்து கொள்ளவேண்டும்.

ஒற்றுமை

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு அரசு விதித்த தடையால், தமிழர் தாயகத்தில் மிகப் பெரிய மாற்றம் நடந்தேறியிருக்கின்றது. தமிழ்த் தேசியத்தை உயிர்நாடியாகக் கொண்ட அனைத்துக் கட்சிகளும் ஓர் புள்ளியில் இணைந்துள்ளன.

ஆயுதப் போராட்டத்தின் பின்னரான தமிழரசியலில் பிரிவுகளால் தமிழ் மக்கள் வெந்து வெதும்பி வெறுத்துபோயிருந்த சூழலில், இந்த ஒற்றுமை என்பது புதியதொரு ஒளிக்கீற்றாய் பிரகாசிக்கத் தொடங்கியிருக்கின்றது. இந்த ஒற்றுமை இன்னமும் வலுப்படவேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்களை தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் இதயத்தில் இருத்திக் கொள்ளவேண்டும்.

இந்த ஒற்றுமைக்கு வேட்டு வைப்பதற்கு, கட்சிகளைப் பிளவுபடுத்தி அதில் வெற்றிகாணும் தென்னிலங்கை அரசியல் தரப்புக்களின் எடுபிடிகள் முயற்சிகளை முன்னெடுப்பார்கள். தமிழ் கட்சிகள் அவதானமாகச் செயற்படவேண்டும்.

அரசே பொறுப்பு

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையைக் கண்டு ராஜபக்ச அரசு மிரண்டுபோயுள்ளது. அதனால்தான் அமைச்சரவைப் பேச்சாளர் ஹெகலிய, நினைவேந்தலுக்கான தடையை அரசு விதிக்கவில்லை. அங்குள்ள நீதிமன்றங்களே விதித்துள்ளன என்று கூறுகின்றார். அவர் ஒன்றை விளங்கிக் கொள்ளவேண்டும். நீதிமன்றங்களில் நினைவேந்தலுக்கான தடையைக் கோரியது பொலிஸார், அவர்கள் அரசின் ஓர் அங்கம். பொலிஸார் ஊடாக நீதிமன்றங்களில் தடை உத்தரவுகளைப் பெற்றுவிட்டு, அதற்கும் தமக்கும் தொடர்பில்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க ஹெகலிய முற்படக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

http://www.ilakku.org/e-saravanapavan-thileepan-hunger-strike-sri-lanka/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.