Jump to content

கொவிட்-19 பொதுமுடக்க / பயணத்தடை கால மாற்று வழிமுறைகள்


Recommended Posts

பதியப்பட்டது

உலகின் பல்வேறு தேசங்களிலும் பரந்து வாழும் நாம் இன்றளவுக்கும் எத்தனையோ பொதுமுடக்கங்களை / பயணத்தடைகளை எதிர்கொண்டு சமாளித்து வருகிறோம். எனவே, இவ்வாறான சவாலான சூழ்நிலைகளைக் கையாளும் பக்குவத்தையும் நம்மில் பலர் பெற்றிருக்கக்கூடும். 

எனினும், இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த அசாதாரணமான சூழல் நாம் வாழும் தேசங்களிலோ, தாயகத்திலோ நீடிக்கப் போகிறதோ என்று எவருக்கும் தெரியாது. 

இந்த நிலையில் இவ்வாறான பொதுமுடக்க / பயணத்தடை காலங்களை எவ்வாறு சமாளிக்கலாம் என்பது பற்றிய சில வழிமுறைகளைக் கீழே தருகிறேன். நம்மில் பலருக்கு ஏற்கெனவே தெரிந்த / பலரும் கைக்கொள்ளும் வழிமுறைகளாக இவை இருக்கலாம். எனினும், இந்த விடயத்தில் உதவி தேவைப்பட்டோருக்கும், ஒரு நினைவூட்டலுக்காகவுமே இந்தப் பதிவை இங்கு எழுதுகிறேன். 

இனி, அந்த வழிமுறைகளைப் பார்க்கலாம்: 


1) கோயில்களே ஆயினும் அவை பலரும் புழங்கும் பொதுவெளிகள் ஆகும்; எம்பெருமான் சந்நிதியில் மனிதர்க்கு மட்டுமன்றி கொறோனாக்கும் இடம் உண்டு தானே! எனவே, வீட்டுப் பூஜை அறை, வீட்டு வளவில் உள்ள சிறு கோயில்களை இயன்றவரை வழிபாட்டிற்காகவும், வீட்டிலுள்ளோரின் கூட்டுப் பிரார்த்தனை / பஜனைகளுக்காகவும் பயன்படுத்துவது சிறந்தது.

இது நமது ஆன்ம பலத்தை அதிகரித்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்; குடும்ப உறவுகளும் வலுப்பெறும்.

2) அடிக்கடி பொழுதுபோக்காகவோ, வேலை நிமித்தமோ பயணம் செய்து பழகியோருக்கு பொதுமுடக்கத்தால் வீட்டிலேயே மணி/நாட்கணக்கில் முடங்கியிருப்பது மன அழுத்தத்தைத் தரலாம். அவர்கள் தமது கவனத்தைத் திசை திருப்பத் தமக்குப் பிடித்த ஓரிரு பொழுதுபோக்கான செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம். உதாரணமாக, வீட்டுத் தோட்டம் செய்வது, வீட்டிலுள்ள சிறுவர்களுக்குக் கற்பிப்பது, சமையல், தையல் போன்றவற்றைப் பழகுவது, ஆடல், பாடல், எழுத்து, ஓவியம், பேச்சு, இசைக்கருவிகள் இவற்றில் ஏதாவது ஒன்றையேனும் பயிற்சி செய்வது போன்றவற்றைக் கூறலாம். 


இதன் மூலம் நம் திறமைகளை வளர்ப்பது மட்டுமன்றி, நமது மனமும் பலவழிகளில் சிதறாது ஒருமுகப்படுத்தப்படுகிறது. உள்ளத்தில் இனம்புரியாத ஆனந்தமும், தன்னம்பிக்கையும் தோன்றுகிறது. அத்துடன் நம் வாழ்க்கையை வண்ணமயப்படுத்துவதுடன், மனநிறைவையும் தந்து நாம் வாழ்வதன் அர்த்தத்தையும் நமக்குப் புரிய வைக்கிறது.

3) நம் வாழ்வில் எவை வேண்டியன, எவை வேண்டாதவை என்பதை ஆற அமர இருந்து யோசித்து வேண்டாதவையைக் கழிக்கவும், வேண்டியவற்றைத் தேடவும் இந்தப் பொதுமுடக்க காலம் உகந்தது. அவை பொருட்களாக இருக்கலாம்; அல்லது உங்கள் நம்பிக்கை/கொள்கை போன்றனவாகவும் இருக்கலாம்.

எதுவாக இருப்பினும் உங்கள் விருப்பு - வெறுப்புக்களை அலசி ஆராய்ந்து அவற்றை மாற்றியமைத்துக் கொள்ள உதவும் அரிய சந்தர்ப்பமே இந்தப் பொதுமுடக்க காலம். அதை உங்கள் கற்பனா சக்தியிடமே விட்டுவிடுகிறேன்! 

4) வீட்டிலுள்ள உறவுகளுடன் நமது தொடர்பாடல் திறனை அதிகரிக்க நமக்குக் கிடைத்திருக்கும் கால அவகாசமாகவும் இந்தப் பொதுமுடக்க காலத்தைக் கொள்ளலாம். 'தொடர்பாடல் திறனா!' என நீங்கள் ஏளனமாக நகைக்கலாம். ஆனால் நம்மில் பலர் நினைப்பது போல நாம் தொடர்பாடலில் சிறந்தவர்கள் அல்ல. தினமும் தெரிந்தோ, தெரியாமலோ ஏராளமான தொடர்பாடல் தவறுகளைச் செய்கிறோம். அதனால் ஏற்படும் விளைவுகள் சில சமயங்களில் பாரதூரமாகவும் இருக்கின்றன. எனவே சிறந்த தொடர்பாடல் திறனை வளர்ப்பதில் அதிக சிரத்தையையும், நேரத்தையும் தற்போது எடுத்துக்கொள்ளல் நீண்ட கால நோக்கில் மிகவும் பயனுள்ளது. ஆம், இது ஒரு மிகச் சிறந்த முதலீடு தான்!

தொடர்பாடல் பற்றி YouTubeஇலும் பல்வேறு காணொளிகள் உள்ளன. அவற்றில் தரமானவற்றை இனங்கண்டு அவற்றிலிருந்து கற்று உங்கள் தொடர்பாடல் திறனை விருத்தி செய்யலாம். இது பெரும் சமுத்திரம் போல் பரந்த விசாலமான விடயம். ஓரிரவில் வளர்த்துக் கொள்ளும் திறனல்ல. எனினும் இன்றே அதனைப் பயிற்சி செய்யத் தொடங்குதல் உங்கள் உறவு, நட்பு, சமூகத்துடன் நல்ல ஆரோக்கியமான உறவைப் பேண உதவும். (Search in YouTube 'Communication skills', 'listening skills' etc.)

5) பொதுமுடக்க காலத்தில் நாம் வீட்டிலிருந்து அலுவலக வேலை பார்க்கும்போதோ, அல்லது சமையல், சுத்தம் செய்தல் போன்ற வீட்டுவேலைகளைச் செய்யும்போதோ பின்னணியில் அமைதிதரும் இசையை இசைக்கவிட்டுவிட்டு நம் கருமங்களை ஆற்றும்போது ஓர் நேர்மறையான சூழலில் இருப்பதாக உணர்வோம். இது நாம் செய்யும் கருமங்களை மனமொன்றிச் செய்ய உதவும். அது மட்டுமன்றி வீட்டுச் சூழல் நிம்மதியானதாகவும், நேர்மறை எண்ணங்களைத் தருவதாகவும் அமைய இனிய இசை உதவும். 

YouTubeஇல் வீணை, வயலின், புல்லாங்குழல், சக்க்ஷபோன், பியானோ இசை வடிவங்கள் இந்தியா, சீனா போன்ற கீழைத்தேச இசைவடிவங்களிலும், இன்னும் பல மேலைத்தேச இசை வடிவங்களிலும் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. தவிரவும் எத்தனையோ meditation music கோர்வைகள் பலவும் மணிக்கணக்கான videoகளாக உள்ளன. (உங்களிடம் unlimited internet வசதி இருந்தால் இன்னும் நல்லது!) 
அமைதியான இசை நாம் இருக்கும் சூழலை இனிமையானதாகவும், நிம்மதியானதாகவும் மாற்றவல்லது. 😊

6) பிரார்த்தனை: வீட்டுப் பூஜை அறையிலோ அல்லது ஒரு அமைதியான இடத்திலோ அமர்ந்துகொண்டு சற்று நேரம் சுவாசப்பயிற்சி செய்து நம் மனதை ஒருநிலைப்படுத்தி அமைதிப்படுத்திக்கொண்டு, நமக்கெல்லாம் மேலான பிரபஞ்சப் பேராற்றலை / இறைவனை வணங்கிவிட்டுப் பின்வருவனவற்றை நாம் நமது கற்பனா சக்திக்கேற்பச் செய்யலாம்: 

1. நன்றியுணர்ச்சியை வெளிக்காட்டுதல் - உதாரணத்துக்கு, நமக்கெல்லாம் சக்தியையும், வளங்களையும் தந்து நம்மை வாழ வைத்துக்கொண்டிருக்கும் இந்தப் பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி! இந்தச் சவாலான சூழலில் நம்மைக் காக்க இயன்ற நடவடிக்கைகளை எடுக்கும் நாட்டு/நகர/பிரதேச நிர்வாகத்துக்கு நன்றி! வைத்திய நிலையங்களில் போராடிக்கொண்டிருக்கும் மருத்துவர், தாதியர் போன்ற சுகாதாரத் தொழிலாளர்களுக்கு நன்றி! நம்முடன் கூட இருக்கும் உறவுகளுக்கு நன்றி! - இப்படி யாருக்கெல்லாம் நாம் நன்றி சொல்ல விரும்புகிறோமோ அதை நாம் உளமாரவும், உண்மை அன்புடனும் உணர்ந்து சொன்னால் நம்முள்ளேயே ஒரு பெரிய ஆத்ம திருப்தியும், நேர்மறை எண்ணங்களும் உருவாகும். இந்த உணர்வு நமது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம். 

2. இதுபோலவே, 'மன்னிப்பு (கேட்டல்/கொடுத்தல்)', 'வாழ்த்துதல்' போன்ற ஏனைய நல்ல உணர்வுகளுக்கும் உங்கள் கற்பனா சக்தியைப் பொறுத்துச் செய்யலாம். இந்தப் பயிற்சி ஒரு வேடிக்கையானதாகவோ, கேலிக்குரியதாகவோ தோன்றலாம். எனினும் அதைப் பயிற்சி செய்து அனுபவித்தால் அவற்றின் நன்மை உங்களுக்கே புரியும். 😊

7) பொதுமுடக்கத்தால்/பயணத்தடையால் வீட்டில் முடங்கியிருக்கும் நிலையில், எவ்வளவு தான் நாம் நேர்மறை எண்ணங்கள் மூலம் அதனைச் சமாளிக்க முயன்றாலும் ஒருவித சலிப்புத் தன்மை, வெறுமை, மன அழுத்த உணர்வு போன்றவை அவ்வப்போது தோன்றுவது இயல்பு. இந்த இயல்பான உணர்வுகளை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகினால் மேலும் மன அழுத்தமடைவதை நாம் தவிர்க்கலாம்.

அது தவிரவும், பொதுமுடக்கத்தை எதிர்கொள்ளும் நம்மில் பலர் யுத்தகாலத்தில் ஊரடங்கிற்கு நன்கு பழக்கப்பட்டிருப்போம். அதே யுத்த காலங்கள் தாம் நம் சமூகத்திடையே நெருக்கமான நல்ல உறவுகளைப் பேண உதவின என்று சொல்வது மிகையல்ல. நமக்கெல்லாம் பொதுவான ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டிய அந்த யுத்தச் சூழலில் நாமெல்லாம் ஒற்றுமையாக உறவு, நட்புக்களை மதித்து கூட்டுறவாய் வாழ்ந்தோம். பின்னர் வந்த நுகர்வோர் கலாசாரம், அவசர வாழ்க்கை முறை இந்தக் கூட்டுறவு வாழ்க்கையைச் சாத்தியமற்றதாக்கிவிட்டது.

எனினும் தற்போது நாம் எதிர்கொள்வதும் உலகளாவிய ரீதியில் ஒரு பெரும் யுத்த சூழ்நிலையைத்தான் - அதுவும் கண்ணுக்குத் தெரியாத அந்தக் கிருமி தான் நம் எதிரி. 

எனவே ஊரடங்கு காலங்களைச் சமாளித்து  இன்றளவும் நலமாக வாழும் நாம் தற்போதய பொதுமுடக்க காலத்தையும் தைரியமாக எதிர்கொள்வோம். இதுவும் கடந்து போகும் என்ற உறுதியான மனநிலையுடன் பொதுமுடக்க விதிமுறைகளை மதித்து அநாவசிய ஊர் சுற்றல்களைத் தவிர்ப்போம் - இயன்றவரை வீட்டு வளாகங்களுக்குள்ளே இருப்போம். 

உறவுகளை வளம்படுத்த அரிய ஓர் சந்தர்ப்பமாக இந்தப் பொதுமுடக்க காலத்தைப் பயன்படுத்துவோம். வீட்டிலுள்ள உறவுகளோடு செலவழிக்க நேரமில்லையே என்ற குறை முன்பு இருந்திருக்கும். எனவே தற்போது கிடைத்த வாய்ப்புக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம். நிலைமை சுமுகமடைந்ததும் பின்னாளில் இப்படி ஓர் வாய்ப்பு அமையுமோ தெரியாது. எனவே நல்ல இனிய நினைவுகளைச் சேகரிப்போம். ❤️ அன்பே சிவம். ❤️
 

8 ) 📖வாசிப்புப் பழக்கம்: இதில் நான் சொல்ல புதிதாக ஒன்றும் இல்லை. எனினும் இதை ஒரு நினைவூட்டலாக (reminder) எழுதுகிறேன். அதுவும் இந்த பொதுமுடக்க காலம் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கவோ, மீள ஆரம்பிக்கவோ உகந்ததாக இருக்கும் என்பதாலேயே இதையும் குறிப்பிடுகிறேன்.

வாசிப்புப் பழக்கத்தின் நன்மைகளையும் நான் சொல்லித் தான் நீங்கள் தெரிய வேண்டும் என்பதில்லை. எனினும் நினைவூட்டலாக சில நன்மைகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்:
1. அறிவு வளர்ச்சி மட்டுமல்லாது, ஒரு மொழியில் ஆளுமையையும் வளர்க்கிறது. அதாவது வாசிப்புப் பயிற்சியால் புதிய சொற்களை, வசன அமைப்புக்களை, அவற்றை எந்தச் சந்தர்ப்பங்களில் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவைத் தருகிறது. வெறுமனே இலக்கணத்தைக் கற்பதாலும், சொற்களை மனப்பாடம் செய்வதாலும் எந்த ஒரு மொழியிலும் புலமை பெற்றுவிட முடியாது. இவற்றுடன் வாசிப்புப் பழக்கத்தையும் சேர்த்தல் மிகவும் அவசியமாகும். வாசிப்புப் பழக்கம் உங்களது மொழிப் பயிற்சியை துரிதப்படுத்துகிறது. உங்களுக்குப் பிடித்த விடயங்கள் சம்பந்தமான புத்தகங்களை வாசிப்பது அதனை இன்னும் துரிதப்படுத்தும். 

2. மனமொன்றி வாசிப்பதில் மூழ்குவது ஒருவிதத்தில் தியானப் பயிற்சி போன்றது. 'அதே தியானமாக இருக்கிறார்' என்று பேச்சுவழக்கில் சொல்வது இதைத்தானோ என்று தெரியவில்லை! மனதை ஒருமுகப்படுத்த வாசிப்புப் பயிற்சி மிகவும் உதவுகிறது. நித்திரைக்குச் செல்லும் முன் தொலைக்காட்சி, செல்போன் இவற்றில் மூழ்குவதை விட, புத்தக வாசிப்பைச் செய்வது மிகவும் ஆரோக்கியமானது. நிம்மதியான உறக்கத்தைத் தரலாம்; கண்களுக்கும் பாதகமில்லை. 

எனவே, பொதுமுடக்கத்தை நல்ல முறையில் பயன்படுத்தும் ஒரு வழியாக வாசிப்புப் பழக்கத்தையும் நடைமுறைப்படுத்தலாமே! 😊📚
 

9) 🏃🏃‍♀️உடற்பயிற்சி: பொதுமுடக்கமல்லாத சூழ்நிலையில் பல்வேறு அலுவல்கள் நிமித்தம் ஓடியாடித் திரிந்த நமது இயக்கத்தை இந்த அசாதாரண சூழல் மட்டுப்படுத்துவதால் ஏற்படும் விசனம் இயல்பானதே. இதனை ஆரோக்கியமாகக் கையாளும் வழிமுறைகள் சிலவற்றை மேலே குறிப்பிட்டிருந்தேன். 

எனினும், பலருக்குத் தெரிந்திருந்தாலும் நடைமுறைப்படுத்த தயங்கும் ஒரு செயல் இந்த உடற்பயிற்சியாகும். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதன் அவசியம் தற்போது அதிகரித்துள்ளது. பொதுவெளிகளில் மட்டுப்படுத்தப்பட்ட நமது உடல் இயக்கத்துக்கு ஓரளவுக்கேனும் மாற்றீடே இந்த உடற்பயிற்சி. 

வீட்டில் இருந்து நொறுக்குத் தீனிகளை அதிகம் உண்ணும் வாய்ப்பு இருப்பதால் நமது உடல் எடையும் அசாதாரணமான அளவுக்கு அதிகரிக்கலாம். எனவே உடற்பயிற்சி அவசியமாகிறது.

பரந்த வளவுடன் கூடிய வீட்டில் வாழ்ந்தாலும் சரி, சிறு பிளாட்டில் வாழ்ந்தாலும் சரி நம் சூழலுக்கும், உடல்நிலைக்கும் உகந்த உடற்பயிற்சிகளைச் செய்யலாம். இது பற்றிய பல காணொளிகள் YouTubeஇல் உண்டு. எனினும், அவற்றைப் பின்பற்றும்போது உங்கள் பொது அறிவையும் பயன்படுத்துதல் பாதுகாப்பான முறையில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள உதவும்! உங்கள் வைத்திய நிபுணர்கள், உடற்பயிற்சி பயிற்றுனர்கள் போன்றோரின் ஆலோசனையை இந்த விடயத்தில் பெறுவது சிறந்தது. 😊

10) 'சின்னச் சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே எங்கும் எங்கும் கொட்டிக் கிடக்கு!' என்ற சினிமாப் பாடலை நாம் கேட்டிருப்போம். அதன் அர்த்தம் இன்றைய காலத்தில் இன்னமும் ஆழமானதாகத் தோன்றுகிறது. எத்தனை பெரிய சவாலான சூழல் வந்தாலும், நம்மைச் சூழவுள்ள சின்னச் சின்ன நல்ல விடயங்களையும் ரசித்து அனுபவிக்கக் கற்றுக்கொள்வோம். 

உதாரணத்துக்கு, வீட்டுத் தோட்டத்தில் உள்ள மலர்களின் அழகை ரசிக்கலாம்; அதைக் கவிதையால் வர்ணிக்கலாம்; கமராவில் படமாக்கலாம். 

அவரவர் விருப்பங்களுக்கேற்ப ரசிக்கக்கூடிய ஏராளமான சின்ன விடயங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. கண்ணுக்கு, காதுக்கு, மூக்குக்கு, வாய்க்கு, தோலுக்கு என ஐம்புலன்களுக்கும் விருந்தாகும் விடயங்கள் பல உள்ளன. அவற்றைக் கண்டறிந்து ரசிப்போம். 

ஐம்புலன்களை அடக்க வேண்டியதில்லை; ஆரோக்கியமான முறையில் நெறிப்படுத்துதலே முக்கியம். நல்ல ரசனையாலும் அவை நெறிப்படுத்தப்படும் - நல்ல ரசனையும் ஒரு வித தியானமே! 😊

************************************

நான் கற்ற, அனுபவித்து உணர்ந்த வகையில் மேலுள்ள தகவல்களை எழுதியுள்ளேன். 

இந்த விடயத்தில் நம் எல்லோருக்கும் பயன் தரக்கூடிய உங்களது ஆலோசனைகளை / தகவல்களையும் கீழே பின்னூட்டமாகப் பதியலாம். 
 

நன்றி 😊

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.