Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது?  — வி. சிவலிங்கம் — 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது?

ரஷ்யா – உக்ரெய்ன் போர்!   உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது?

 — வி. சிவலிங்கம் — 

ஐரோப்பாவில் மூன்றாம் உலகப் போருக்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்படுகின்றன. ரஷ்யாவின் கொல்லைப்புறத்தை நோக்கி நேட்டோ படைகள் நகர்வதாக ரஷ்யாவும், ஐரோப்பாவின் கொல்லைப்புறத்தை நோக்கி ரஷ்யா நகர்வதாகவும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் ஆரம்பமாகியுள்ளன. போர் ஆரம்பித்துள்ள இவ் வேளையில் நாம் சில கேள்விகளோடு இக் கட்டுரையை ஆரம்பிக்கலாம்.  

–           இப் போரின் தாற்பரியங்கள் என்ன? 

–           நேட்டோ நாடுகளின் சதி வலைக்குள் உக்ரெய்ன் வீழ்ந்துள்ளதா? 

–           உக்ரெயின் வலதுசாரி தேசியவாதிகளினதும், நாக்ஸிஸ தரப்பினரதும் இலக்கு என்ன? 

–           இப் போரின் விளைவாக உக்ரெய்ன் அடையும் பலன் என்ன? 

–           ஐரோப்பிய, அமெரிக்க ஆயுதச் சந்தையாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மாறுகின்றனவா? 

–           சரிந்து வரும் உக்ரெய்ன் பொருளாதாரத்திற்கு மேற்கு உலகம் உதவுமா? 

–           இப் போரின் விளைவாக பல லட்சம் அகதிகள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில் யார் அவர்களைப் பராமரிப்பது? 

இவ்வாறான பல கேள்விகளுடன் நாம் பயணிக்க வேண்டியுள்ளது. தற்போது ஊடகங்களின் கவனம் உக்ரெய்ன் நாட்டின் சுதந்திரம், சுயாதீனம், நேட்டோ ராணுவக் கூட்டில் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான உரிமையை ரஷ்யா தீர்மானிக்க முடியுமா? என்பதிலிருந்தே ஆரம்பிக்கிறது. அது மட்டுமல்ல, இப் போர் ஐரோப்பாவின் கொல்லைப்புறத்தில் ஆரம்பித்திருப்பது ஐரோப்பிய நாடுகள் மத்தியில் பெரும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.  

அமெரிக்காவும், இதர மேற்குலக நாடுகளும் ஈராக்,சிரியா, ஆப்கானிஸ்தான், லிபியா போன்ற நாடுகளில் போரினை ஆரம்பித்த வேளையில் ஐரோப்பிய மக்கள் மௌனமாக இருந்தார்கள். இப்போ தமது கொல்லைப்புறம் என்றவுடன் மனித உரிமை முதல், சர்வதேச ஒற்றமை வரை அதிகளவு பேசப்படுகிறது. இப் போர் தொடர்பான பல முக்கிய அம்சங்களை நாம் ஆராய்வது அவசியமாகிறது. அதாவது நாடுகள் தத்தமது எதிர்காலத்தினைச் சுயமாகத் தீர்மானிக்க முடியாதா? உக்ரெய்ன் நாடு ஐரோப்பிய நேட்டோ ராணுவ இணைப்பில் சேருவதை ரஷ்யாவிடம் கேட்டு முடிவு செய்ய வேண்டுமா?என்பதிலிருந்தே இன்றைய விளக்கங்கள் ஆரம்பிக்கின்றன. ஆனால் உண்மையில் இதற்கான அடிப்படைத் தாற்பரியங்கள் வேறாகும்.  

உதாரணமாக, இலங்கைத் தேசம் சீனாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்ய எண்ணினால் ஒரு சாரார் அதனைச் சரியென வாதிக்கவும் உள்ளனர். ஏனெனில் இலங்கை ஒரு பூரண இறைமையுள்ள நாடு என்பது அவர்களின் வாதமாகும். ஆனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கையின் முடிவுகள் பாதகமாக அமையுமானால் இலங்கை தனது முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது. இன்று உலக நாடுகள் பலவும் ஒன்றில் ஒன்று தங்கி வாழ்வதோடு பாதுகாப்பும் அவ்வாறே மாற்றமடைந்துள்ளது. எனவே இவற்றை நாம் பூச்சிய நிலையிலிருந்து பார்க்க முடியாது. உலகின் இன்றைய நிகழ்வின் போக்கிலிருந்தே அதனை நோக்க வேண்டியுள்ளது.  

முதலாம், இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் இடம்பெற்ற போது ரஷ்ய மக்களே அதிக விலை கொடுத்தனர். போரினது கொடுமையை அந்த மக்கள் நன்கு உணர்வார்கள். எனவே போர் ஏற்படாமல் தடுப்பதும், போர் ஏற்பட்டால் தடுப்பதும் என இரண்டு பிரச்சனைக்குள் ரஷ்ய மக்கள் வாழ்கிறார்கள். ஐரோப்பாவில் நில அளவிலும்,மூலவள அளவிலும் மிக அதிகளவு பரப்பைக் கொண்டுள்ள ரஷ்யா இன்றைய முதலாளித்துவ மூலவள அபகரிப்புப் போட்டியில் தன்னைப் பாதுகாப்பதும் பிரதான தேவையாகிறது. 1917ம் ஆண்டில் ரஷ்யப் புரட்சி ஏற்பட்ட பின்னர் அமெரிக்க, ஐரோப்பிய முதலாளித்துவ சக்திகள் பல நாடுகளைக் கூறுபோட்டு தமது உற்பத்தியின் சந்தைகளாக அவற்றை மாற்றிக் கொண்டன. சோவியத் ரஷ்யாவின் அபரிமிதமான குறுகியகால தொழிற்துறை வளர்ச்சியும், அதன் கோட்பாடுகளும் பல நாடுகளை விடுதலையை நோக்கி உந்தித் தள்ளின. 

சோவியத் ரஷ்யாவின் குறுகிய கால வளர்ச்சியும், சுதந்திரத்தை நோக்கிய விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவை வழங்கிய நிலையில் பல ஆசிய, ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் காலப் போக்கில் சுதந்திரமடைந்தன. இதற்குப் பிரதான காரணம் 1917ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் நடைபெற்ற அக்டோபர் புரட்சியாகும். இப் புரட்சியின் பின்னர் பல நூற்றாண்டுகளாக உலக வளங்களைச் சுரண்டி வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள் சோவியத் ரஷ்யாவில் நிர்மாணிக்கப்படும் கம்யூ. அரச கட்டுமானம் மனித சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலானது எனக் கூறி அங்கு நிர்மாணிக்கப்படும் தொழிலாள வர்க்க சார்பு ஆட்சியைக் குலைக்க முதலாளித்துவ நாடுகள் மிகவும் திட்டமிட்டே செயற்பட்டன.  

சோவியத் ரஷ்யா மிகவும் விவசாய நாடாக இருந்த நிலையில் அந்த நாட்டை தொழிற்துறை நாடாக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. மிகவும் குறுகிய காலத்தில் தொழில் வளர்ச்சி மட்டுமல்ல,அணுக் குண்டு தயாரிப்பதிலும் சிறந்து முன்னேறியது. இந் நிலையில் சோவியத் நாட்டின் அபரிமிதமான தொழில் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிதான தந்திரம் மேற்கு நாடுகளால் வகுக்கப்பட்டது. அதாவது ஐரோப்பாவில் இன்னொரு போர் ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமாயின் ஐரோப்பிய நாடுகள் பலவும் இணைந்து தமக்கான பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நியாயங்களுடன் ‘நேட்டோ’ ராணுவக் கட்டமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது. இன்னொரு போர் ஏற்படாமல் தடுக்கும் நோக்குடன் தோற்றுவிக்கப்பட்ட நேட்டோ ராணுவக் கட்டமைப்பு அமெரிக்க நாட்டுடன் இணைந்து பல நாடுகளில் போரை நடத்தியது. ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், லிபியா போன்ற நாடுகளில் போரை ஏற்படுத்தி இந் நாடுகளில் செயற்பட்ட அரசுகளைச் சிதைத்து இன்று அந்த நாட்டு மக்கள் அகதிகளாக உலகம் முழுவதும் அலைகிறார்கள்.  

ஐரோப்பாவிற்கு வெளியில் போரை நடத்தும்போது மனித உரிமைகளுக்கு எவ்வித மதிப்பும் இந்த நாடுகள் அளித்ததில்லை. உதாரணமாக,மன்னராட்சி நடைபெறும் சவூதி அரேபியாவுடன் இந்த நாடுகள் சிறந்த உறவைப் பராமரித்து வருகின்றன. இந்த நாடு இன்று வரை யேமன் நாட்டில் சவூதி அரேபியா குண்டுகளை வீசி படுகொலைகளை நடத்துகிறது. இம் மனித உரிமை மீறல்கள் குறித்து யாரும் பேசுவதில்லை. ஏனெனில் இந்த நாடுகளில் இருக்கும் எண்ணெய் வள வருமானம் இந்த நாடுகளில்தான் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் இந்த நாடுகளால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் பெரிதாகப் படுவதில்லை. 

தற்போது நடைபெறும் இந்த யுத்தம் ஐரோப்பாவிற்குள் உள்ள வலுவான நாட்டினால் மேற்கொள்ளப்படுகிறது. ஐரோப்பாவில் இன்னொரு போர் இடம்பெறாமல் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த நேட்டோ அமைப்பு இப் போருக்கான ஆரம்ப விதைகளைப் போட்டிருக்கிறது. 1917ம் உருவாகிய சோவியத் அரசு குலைந்து 90களில் ரஷ்யக் குடியரசாக மாற்றமடைந்த பின்னரும் ஏன் ரஷ்ய எதிர்ப்புத் தொடர்கிறது? ரஷ்ய நாடு கம்யூ. கட்டுமானத்திலிருந்து விலகி முதலாளித்துவப் பாதையைத் தெரிந்தெடுத்த பின்னரும் ரஷ்யாவை நோக்கிய எதிர்ப்புகள் ஏன் தொடர்கின்றன? ரஷ்யா ஒரு கம்யூ. நாடு அல்ல. அங்கு செயற்படுவது முதலாளித்துவ கட்டுமானமாகும். அது மட்டுமல்ல, ரஷ்யா தாமும் நேட்டோ ராணுவக் கட்டமைப்பில் இணையத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இருப்பினும் ரஷ்ய எதிர்ப்புகள் ஏன்? என்ற கேள்வி எழுகிறது.  

ரஷ்யாவின் பூகோள நிலப் பரப்பும், அதிலுள்ள இயற்கை வளங்களையும் கொள்ளையடிப்பதாயின் அந்த நாட்டினைத் துண்டுகளாக்க வேண்டும். அதனைப் பலமிழக்கச் செய்ய வேண்டும். சோவியத் குடியரசில் இணைந்திருந்த பல நாடுகள் தற்போது தனி நாடுகளாகப் பிரிந்துள்ளன. இந்த நாடுகள் முதலாளித்துவ நாடுகளில் செல்வம் கொழிப்பதாக கனவு காண்கின்றன. முதலாளித்துவ பிரச்சாரங்களும், கற்பனைகளும் மேற்கு நாடுகளில் சுதந்திரம் மலர்ந்திருப்பதாக கருதுகின்றனர். சோவியத் அரசு காலத்திலிருந்த இந்த நாடுகளில் செல்வந்தர்களுக்கும், வறுமையானவர்களுக்கும் இடைவெளி இருந்ததில்லை. சக்திக்கேற்ற உழைப்பும், தேவைக்கேற்ற ஊதியமும் கிடைத்தது. ஆனால் மேற்கு நாடுகளில் பாரிய வருமான ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. இந்த ஏற்றத்தாழ்வுகளை அச் சமூகம் வெளியில் காண்பிப்பதில்லை. அச் சமூகத்திற்குள் வாழும்போதுதான் அவை தென்படுகின்றன.  

உதாரணமாக, ஜேர்மனி நாடு சோவியத் ஆட்சிக் காலத்தில் கிழக்கு, மேற்காகப் பிரிக்கப்பட்டு மேற்கு ஜேர்மனியில் முதலாளித்துவ அரசும், கிழக்கு ஜேர்மனியில் சோசலிச அரசும் செயற்பட்டன. கிழக்கு ஜேர்மனியில் காணப்பட்ட வருமானப் பற்றாக்குறையும், மேற்கு ஜேர்மனியில் கட்டப்பட்ட பெரும் தொழில்துறை வளர்ச்சியும் கிழக்கு மக்களை மேற்கு நோக்கி ஈர்த்தது. இதனால் பாதுகாப்பு அரண்களை உடைத்து பலர் மேற்கை நோக்கி வர முற்பட்டு மரணத்தைத் தழுவியவர்களும் உண்டு. ஆனால் தற்போது இரண்டு ஜேர்மனிகளும் இணைக்கப்பட்ட பின்னர்தான் கிழக்கு மக்களுக்கு மேற்கு ஜேர்மனியின் போலித் தோற்றம் புலப்பட்டது. வருமான ஏற்றத்தாழ்வு துலங்கியது. அவர்களில் பலர் இன்னமும் தமது சோசலிச ஆட்சியின் இனிய வாழ்வுகளை எழுதி மகிழ்ந்து வருகின்றனர். 

அதே போலவே உக்ரெயின் நாட்டு மக்களுக்கு ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சி ரஷ்ய வளர்ச்சியை விட பிரமாதமாகத் தெரிந்தது. எவ்வாறு கிழக்கு ஜேர்மனி மக்கள் மேற்கு நோக்கிச் செல்ல விரும்பினார்களோ அதேபோன்ற நிலை உக்ரெயின் நாட்டிலும் ஏற்பட்டது. இதற்குப் பிரதான காரணம் சோவியத் அரசிலிருந்து பிரிந்து தனி நாடாக உருவாகிய உக்ரெயின் அங்கு வளர்ச்சியடைந்து வரும் ரஷ்ய ஆதிக்கம் காரணமாக தமது உக்ரெயின் ஆதிக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுவிடலாம் என்ற அச்சம் படிப்படியாக வளர்ந்தது. மிகவும் சிறுபான்மையினராகிய தென் பிராந்தியத்திலிருந்த ரஷ்யர்கள் தமது சுயாதீனத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கருதினார்கள். இதனால் படிப்படியாக அந்த மக்களின் அடையாளங்களை அழிக்க உக்ரெயின் பெரும்பான்மை ஆட்சியாளர்கள் தலைப்பட்டார்கள். 

உதாரணமாக, இலங்கையிலுள்ள பெரும்பான்மையினராகிய சிங்கள மக்கள், வடக்கு, கிழக்கில் வாழும் சிறுபான்மையினராகிய தமிழ் மக்கள் தமது சிங்கள பௌத்த ஆட்சிக் கட்டுமானத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கருதி பல கொடுமைகளை இன்றுவரை எவ்வாறு நடத்துகிறார்களோ, தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்க முற்படுகிறார்களோ அதே நிலமைகளே உக்ரெய்ன் தென் பிராந்தியத்திலுள்ள பெரும்பான்மையினராகிய ரஷ்யர்கள் உக்ரெய்ன் பெரும்பான்மை வாதிகளால் ஒடுக்கப்படுகிறார்கள். எவ்வாறு இலங்கையின் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் வாழும் தமிழர்கள் தொன்றுதொட்டு அங்கு வாழ்கிறார்களோ அதேபோன்றுதான் உக்ரெயினின் தென்பகுதி ரஷ்யர்களும் வாழ்கிறார்கள். அதாவது தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் இடையேயான உறவு உள்ளதோ அதேபோன்ற உறவுதான் ரஷ்ய நாட்டு மக்களுக்கும் உக்ரெயின் தென் பிராந்திய ரஷ்யர்களுக்கும் இடையேயான உறவாகும். இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படும்போது இந்திய மக்கள் கவலைப்படுவது போலவே உக்ரெயின் ரஷ்யர்கள் பாதிக்கப்படும் போது ரஷ்ய மக்கள் கவலை கொள்கிறார்கள். எவ்வாறு இலங்கைத் தமிழர்கள் இந்தியாவிற்கு விசுவாசமாக இருப்பார்கள் என சிங்கள பெரும்பான்மைவாதிகள் கருதுகிறார்களோ அதே போன்றே தென் பிராந்திய ரஷ்யர்கள் ரஷ்யாவுக்கு விசுவாசமாக இருப்பதாக உக்ரேனிய பெரும்பான்மைவாதிகள் எண்ணுகின்றனர்.  

இலங்கையில் எவ்வளவு சிங்கள -தமிழ் உறவு மோசமாக உள்ளதோ அதே போலவே உக்ரெயின் நாட்டிலும் ரஷ்ய மொழி பேசும் மக்களுக்கும், உக்ரெயின் மொழி பேசும் மக்களுக்குமிடையே பிரச்சனைகள் தொடர்ந்து காணப்பட்டன. அதே போலவே இலங்கையில் சிங்கள – தமிழ் உறவுகள் மோசமடைந்து மோதலாக மாற்றமடைந்த வேளையில் சர்வதேச தலையீடுகள் அதிகரித்ததோ, எவ்வாறு இலங்கையில் சிங்கள பெருந்தேசியவாதம் பெரும்பான்மை வாதத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றியதோ அதே போலவே உக்ரேனிய தேசியவாதம் உக்ரெனிலும் உக்கிரப்படுத்தி உள்நாட்டு மோதல்களை அதிகரிக்க உதவியது.  

சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்க தேசிய அளவில் அம் மக்களின் அடையாளங்களை ஒழிக்க தனிச் சிங்கள சட்டம், ஒரு நாடு, ஒரு சட்டம், தொல்பொருள் பாதுகாப்பு என பல வழிகளில் முயற்சிக்கிறதோ அவ்வாறான செயல்கள் அங்கும் நிகழ்ந்தன. இந்த வரலாற்றினை அறிவதன் மூலம் பல பாடங்களை நாம் கற்க முடியும். உதாரணமாக, ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சில முயற்சிகள் எடுக்கப்பட்ட வேளையில் ரஷ்யா, உக்ரெயின் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டன. இன்று இப் போரில் இலங்கை நடுவுநிலை வகிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையை இலங்கையால் தொடர்ந்து வைத்திருக்க முடியுமா? 

(தொடரும்)  
 

 

https://arangamnews.com/?p=7225

 

பகிர்வுக்கு நன்றி கிருபன்ஜி 

இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளவாறு இலங்கையில் சிங்களவர்கள் தம் இருப்புக்கு தமிழர்கள் சவாலாக இருப்பார்கள் என நினைத்து அடக்க முற்படுவது போன்று உண்மையில் உக்ரேனின் தென் பிராந்தியத்தில் வாழும் ரஷ்யர்கள் அடக்கப்படுகின்றார்களா? இன்று தான் இதைக் கேள்விப்படுகின்றேன். 
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

பகிர்வுக்கு நன்றி கிருபன்ஜி 

இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளவாறு இலங்கையில் சிங்களவர்கள் தம் இருப்புக்கு தமிழர்கள் சவாலாக இருப்பார்கள் என நினைத்து அடக்க முற்படுவது போன்று உண்மையில் உக்ரேனின் தென் பிராந்தியத்தில் வாழும் ரஷ்யர்கள் அடக்கப்படுகின்றார்களா? இன்று தான் இதைக் கேள்விப்படுகின்றேன். 
 

உக்கிரேனியரால் ரஷ்யர் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டதாகத் தெரியவில்லை. உக்கிரேனில் 17 வீதமானோர் மாத்திரமே ரஷ்யர்கள். 80 வீதமானோர் உக்கிரேனியர். இரு மொழிகளுக்கும் அதிகம் வேறுபாடு இல்லை என்று கருதுகின்றேன். உக்கிரேன் சுதந்திரமானதன் பிற்பாடு பல ரஷ்யர்கள் உக்கிரேனிலிருந்து ரஷ்யாவுக்கு புலம்பெயர்ந்துமுள்ளனர்.

உக்கிரேனில் கிரைமியா மட்டும்தான் ரஷ்யப் பெரும்பான்மை கொண்ட இடமாக இருந்தது. எனினும் 1991 இல் சுதந்திரநாடாக உக்கிரேன் ஆவதற்கு கிரைமியாவில் 55 வீதமானோர் ஆதரவு தெரிவித்தனர். 2014 இல் ரஷ்யா ஆக்கிரமித்து பின்னர் தனது நாட்டுடன் சேர்த்துக்கொண்டுவிட்டது. கிழக்கு டொன்பாஸ் பகுதியில் ரஷ்யர்கள் அதிகம் இருந்தாலும், உக்கிரேனியர்களின் சனத்தொகையை மீறவில்லை. எனவே அவற்றை ரஷ்ய மொழிபேசுவோரின் நாடுகள் என்று பூட்டின் அண்மையில் அங்கீகரித்ததும் கேள்விக்குரியதே.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

உக்கிரேனியரால் ரஷ்யர் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டதாகத் தெரியவில்லை. உக்கிரேனில் 17 வீதமானோர் மாத்திரமே ரஷ்யர்கள். 80 வீதமானோர் உக்கிரேனியர். இரு மொழிகளுக்கும் அதிகம் வேறுபாடு இல்லை என்று கருதுகின்றேன். உக்கிரேன் சுதந்திரமானதன் பிற்பாடு பல ரஷ்யர்கள் உக்கிரேனிலிருந்து ரஷ்யாவுக்கு புலம்பெயர்ந்துமுள்ளனர்.

உக்கிரேனில் கிரைமியா மட்டும்தான் ரஷ்யப் பெரும்பான்மை கொண்ட இடமாக இருந்தது. எனினும் 1991 இல் சுதந்திரநாடாக உக்கிரேன் ஆவதற்கு கிரைமியாவில் 55 வீதமானோர் ஆதரவு தெரிவித்தனர். 2014 இல் ரஷ்யா ஆக்கிரமித்து பின்னர் தனது நாட்டுடன் சேர்த்துக்கொண்டுவிட்டது. கிழக்கு டொன்பாஸ் பகுதியில் ரஷ்யர்கள் அதிகம் இருந்தாலும், உக்கிரேனியர்களின் சனத்தொகையை மீறவில்லை. எனவே அவற்றை ரஷ்ய மொழிபேசுவோரின் நாடுகள் என்று பூட்டின் அண்மையில் அங்கீகரித்ததும் கேள்விக்குரியதே.

 

கொஞ்சம் கிழக்கைரோப்பிய தென் கிழக்காசிய செய்திச் சேவைகளையும் வாசியுங்கோவன், புண்ணியமாகப் போகும். 

😆

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kapithan said:

கொஞ்சம் கிழக்கைரோப்பிய தென் கிழக்காசிய செய்திச் சேவைகளையும் வாசியுங்கோவன், புண்ணியமாகப் போகும். 

😆

ரஷ்யாவின் செஞ்சேனை மீதும், சீனாவின் செம்படை மீதும் பிடிப்புடன் இருப்பவர்கள் ரஷ்யா, சீன மொழிகளைப் கற்றறிந்து அவர்களின் மொழிகளிலிலேயே செய்திகளைப் படித்து மொழியாக்கம் செய்யும்போது நமக்கு புண்ணியம் தேடவேண்டிய அவசியம் இல்லை😎

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கிருபன் said:

ரஷ்யாவின் செஞ்சேனை மீதும், சீனாவின் செம்படை மீதும் பிடிப்புடன் இருப்பவர்கள் ரஷ்யா, சீன மொழிகளைப் கற்றறிந்து அவர்களின் மொழிகளிலிலேயே செய்திகளைப் படித்து மொழியாக்கம் செய்யும்போது நமக்கு புண்ணியம் தேடவேண்டிய அவசியம் இல்லை😎

சரியாகத்தான் கூறியுள்ளீர்கள். மேற்குலகின் மொழியை மட்டுமே புரிந்து /தெரிந்து கொண்டவர்களுக்கு கிழக்கின் மொழி புரியாது என்பது உண்மைதான். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

RT ஆங்கிலத்தில் தான் ஒளிபரப்புகிறார்கள்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/3/2022 at 20:00, கிருபன் said:

எவ்வாறு இலங்கையில் சிங்கள பெருந்தேசியவாதம் பெரும்பான்மை வாதத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றியதோ அதே போலவே உக்ரேனிய தேசியவாதம் உக்ரெனிலும் உக்கிரப்படுத்தி உள்நாட்டு மோதல்களை அதிகரிக்க உதவியது. 

உக்கிரேனிய தேசியவாதத்தை போலித்தேசிய வாதம் என்று கம்யூனிய சித்தாந்தத்தில் ஊறிய, ஏகாதிபத்தியவாதத்துக்கு எதிர்ப்பாளரான தோழர் வி.சிவலிங்கம் அடுத்த கட்டுரையில் சொல்லியுள்ளார். ரஷ்யா இன்னும் கம்யூனிச நாடு என்றும், பூட்டின் சோஷலிச சித்தாந்தத்தின் மீட்பர் என்றும் பல இடதுசாரிகள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள் நம்புகின்றார்கள்.

இவர்கள் 1917 அக்டோபர் புரட்சியில் இருந்து லெனின் மரணிக்கும்வரைதான் கம்யூனிச ஆட்சி சோவியத் யூனியனில் இருந்தது என்பதை தெரியாதவர்கள் அல்லர். அதன் பின்னர் ஸ்டாலின் ஆட்சியில் இருந்து சர்வாதிகாரப் போக்கும், கம்யூனிசத்தின் வீழ்ச்சியும் ஆரம்பித்தது.

பூட்டின் விரும்புவது 1917 க்கு முன்னர் ஸார் மன்னர் காலத்து ரஷ்யப் பேரரசை மீள அமைப்பதுதான். அதனால்தான் உக்கிரேன் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிரான குரல்களை ரஷ்யாவில் ஒடுக்கிவருகின்றார். பூட்டினது ஒடுக்குமுறை அரச இயந்திரங்களுக்கு எதிராகக் குரல்கொடுப்பவர்கள், நியோநாஜிகளின் ஆதரவாளர்கள் இல்லை. ஒரு போர் மக்களுக்கு எவ்வளவு அழிவைக் கொண்டுவரும், தங்கள் நாட்டையும், உலகையும் எவ்வளவு தூரம் பின்னுக்குத் தள்ளும் என்பதைப் புரிந்தவர்கள் அவர்கள்.

ஆனால் ஷார் மன்னர் காலத்து ரஷ்யப் பேரரசின் புகழை மீண்டும் தனது வாழ்நாளில் கொண்டுவரவேண்டும் என்று இப்போரை ஆரம்பித்த பூட்டின் அழிவை உக்கிரேனுக்கு மாத்திரம் அல்ல, ரஷ்யாவுக்கும், ஐரோப்பாவுக்கும், உலகுக்கும் கொண்டுவருகின்றார். எனவே இந்த அழிவுப்பாதையில் செல்லும் பூட்டினை ஆதரிப்பது என்பது அழிவில், மற்றவர்களின் இறப்புக்களில் மகிழ்ந்து திளைப்பவர்களால்தான் முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா, உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? (பகுதி 2)

ரஷ்யா, உக்ரெய்ன் போர்!   உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? (பகுதி 2)

— வி. சிவலிங்கம் — 

பகுதி 

ஐரோப்பாவில் மூன்றாம் உலகப் போர் தோற்றுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுகின்றன. ரஷ்ய ஜனாதிபதி   தனது அணு ஆயுதப்படைகளை உசார்நிலையில் வைத்திருக்குமாறு உத்தரவிட்டுள்ளார. ஏனெனில் அமெரிக்கா மற்றும் சில நாடுகள் உக்ரெயினிடம் அவ்வாறான ஆயுதங்களைக் கையளித்துள்ளதாகத் தெரியவருகிறது. உக்ரெயினில் நான்கு அணு உலைகள் செயற்படுவதாகத் தெரிய வருகிறது. எனவே போர் விஸ்தரித்துச் செல்வதற்கான நிலமைகள் காணப்படுகின்றன. அது மட்டுமல்ல, ரஷ்ய தாக்குதல்கள் போலந்து, ருமேனியா போன்ற எல்லை நாடுகளுக்குள் சென்றால் அதனைச் சாக்காக வைத்து ரஷ்யாவைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கருதப்படுகிறது. ஏற்கெனவே பல லட்சம் உக்ரேனியர்கள் போலந்து, ருமேனியா ஆகிய நாடுகளுக்குள் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர். எனவே அணு ஆயுதப் போர் தவிர்க்க முடியாமல் ஏற்படலாம் என்ற சந்தேகங்கள் பலமாகவே உள்ளன. 

தற்போது நடைபெற்று வரும் ரஷ்ய – உக்ரைன் போர் தற்செயலானது அல்ல. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டில் இடம்பெற்று வரும் நாக்ஸிச நோக்கிலான தேசியவாதம் மிகவும் உக்கிரமாக செயற்பட்டு வந்தது. உக்ரைன் நாடு சோவியத் குடியரசிலிருந்து பிரிந்து தனியான நாடாக செயற்பட்டு வருகிறது. அதே போலவே போலந்து, கங்கேரி, ருமேனியா போன்ற முன்னாள் சோவியத் குடியரசு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகச் செயற்படுவதோடு,ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து வருகின்றன. உதாரணமாக, கடந்த காலங்களில் பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகள் பல ஆசிய, ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றை தமது குடியேற்ற நாடுகளாகக் கட்டுப்படுத்தி வைத்திருந்தன. 1917ம் ஆண்டு ரஷ்யாவில் ஏற்பட்ட தொழிலாளர் புரட்சியும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இரண்டாவது உலகப் போரும் ஏகாதிபத்தியங்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி சுதந்திர நாடுகளாக அவை மாற்றமடைய உதவின. இந்த நாடுகள் தம்மை ஒடுக்கி வைத்திருந்த குடியேற்ற ஆதிக்க நாடுகளின் கொடுமைகளை, பொருளாதாரச் சுரண்டல்களை இன்னமும் மறக்கத் தயாரில்லை. அது போலவே சோவியத் குடியரசில் இணைந்திருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை தமது குடியேற்ற ஆதிக்க நாடாகவே வர்ணிக்கின்றனர். இதற்குப் பல காரணங்கள் காணப்பட்ட போதிலும் சோவியத் குடியரசின் வீழ்ச்சியும், அதன் சோசலிச நிர்மாணத் தோல்விகளும் புதிதாக விடுதலையடைந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளை முதலாளித்துவத்தை நோக்கித் தள்ளின.  

கடந்த காலங்களில் உலக விவகாரங்கள் அமெரிக்க –சோவியத் என்ற இரண்டு வல்லரசுகளின் போட்டிக் களங்களாக மாறியிருந்தன. 90களில் ஏற்பட்ட சோவியத் ரஷ்யாவின் கம்யூ. கட்டுமானத் தோல்விகள் காலப் போக்கில் அமெரிக்கா மட்டுமே உலகின் போக்கைத் தீர்மானிக்கும் ‘தனிக் காட்டு ராஜா’ என்ற நிலைக்குத் தள்ளியிருந்தன. இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா போரை நடத்த உதவியது மட்டுமல்லாமல், அப் போரின் பின்னர் ஐரோப்பாவின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப அமெரிக்க முதலீடுகள் உதவின. இதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் மிகவும் வளர்ந்தது. அது மட்டுமல்லாமல் பலமான ராணுவத்தைக் கட்டியிருந்த அமெரிக்கா ஐரோப்பாவில் மீண்டும் ஒரு போர் வராமல் தடுத்தல் என்ற யோசனையின் அடிப்படையில் தனது ராணுவத்தின் தலைமையில் ‘நேட்டோ’ என்ற ராணுவக் கட்டமைப்பை ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் உருவாக்கியது.  

சோவியத் சோசலிசக் குடியரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் குறிப்பாக பிளவுபட்ட ஜேர்மனி இரண்டும் ஒன்றாக்கப்பட்ட வேளையில் நேட்டோ தரப்பினர் சோவியத் குடியரசிலிருந்து விலகிய நாடுகளை நேட்டோ ராணுவக் கூட்டில் இணைப்பதில்லை என வாக்குறுதி அளித்திருந்தனர். காலப் போக்கில் அமெரிக்க வல்லரசு ஆதிக்கம் ஒற்றை ஆதிக்கமாக உலகம் முழுவதிலும் வியாபித்த வேளையில் ஐரோப்பிய நாடுகளில் சில நேட்டோ ராணுவக் கூட்டில் இணைந்தன. கொடுத்த வாக்குறுதிகளை மீறி நேட்டோ ராணுவம் ரஷ்யக் குடியரசின் அண்மித்த நாடுகளை நோக்கியும் தனது வலையை விரித்தது. இதன் விழைவுதான் இப் போராகும். ஆனாலும் உக்ரெயின் நாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது, நேட்டோ ராணுவக் கூட்டில் இணைவது என்பது மிகுந்த விவாதப் பொருளாக அமைந்தது. அரசியல் கட்சிகள் மிகவும் பிளவுபட்டிருந்தன. இப் பிளவுகள் புதிய வடிவத்தைக் கொண்டிருந்தன. 

போலித் தேசியவாதமும், நாக்ஸிசமும் 

இலங்கை அரசியலை இந்த நிகழ்வோடு ஒப்பிடுகையில் 1970 களின் பின்னர் இலங்கை அரசியலைத் தனிக் கட்சி தீர்மானிக்க முடியாத அளவிற்கு அரசியல் போக்குகள் மாறியிருந்தன. கூட்டு அரசாங்கங்களே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றின. இதனால் சிறிய அரசியல் கட்சிகளும் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வலுவைப் பெற்றிருந்தன. இதனால் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் தமது நிகழ்ச்சி நிரல்களை நடைமுறைப்படுத்த முடியாத நிலை காணப்பட்டது. இலங்கையைப் பௌத்த சிங்கள நாடாக மாற்றும் முயற்சிகளுக்கும், நாட்டின் ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதற்குமான திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் முதலாளித்துவ சிங்கள அரசியல் தலைமைகள் திறந்த பொருளாதாரக் கோட்பாடுகளை முன்வைத்து நாட்டைச் சிங்கப்பூராக மாற்றுவதாக புதிய நியாயங்களைக் கற்பித்தன.  

ஏற்கெனவே வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஜனநாயக உரிமைக்கான போராட்டங்கள் ராணுவ ஒடுக்குமுறைக்குள் தள்ளப்பட்ட நிலையில் அதற்கு எதிரான வன்முறைப் போராட்டங்கள் படிப்படியாக வலுப்பெற்று வந்தன. அதே போலவே சுதந்திரத்திற்குப் பின்னதான அரசுகள் காத்திரமான பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தத் தவறியதால் தெற்கில் ஆட்சிக்கு எதிரான இளைஞர் போராட்டங்கள் ஆயுத வன்முறையாக மாறியிருந்தன. இவை அரசுக்கு எதிரான போராட்டங்களாகக் காணப்பட்ட போதிலும் உள்ளடக்கத்தில் ஒரு புறத்தில் சிங்கள பௌத்த தேசியவாதமாகவும், மறு புறத்தில் தமிழ்க் குறும் தேசியவாதமாகவும் மாற்றமடைந்து சென்றன. இத் தேசியவாதங்கள் ஒன்றிற்கு ஒன்று எதிர்நிலையை நோக்கிச் சென்றன. சிங்கள பௌத்த பெருந்தேசியவாத சக்திகள் நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனங்களைக் குறிப்பாக தமிழ் மக்களை எதிரி நிலைக்குத் தள்ளின. அதே போலவே தமிழ்க் குறும் தேசியவாதம் ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் தனது எதிரியாக சித்தரிக்கும் அரசியலை நோக்கிச் சென்றது. சிங்கள பெருந்தேசியவாதம் நாட்டின் இதர சிறுபான்மைத் தேசிய இனங்களது ஜனநாயக உரிமைகளை நிராகரித்து இலங்கை என்பது சிங்கள பௌத்த நாடு எனவும், தனிச் சிங்கள வாக்குகளால் நாட்டின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும் என்ற நாக்ஸிசவாதம் முன்னெடுக்கப்பட்டது. இதன் பின்னால் சிங்கள பௌத்த ராணுவம் பக்கபலமாகச் செயற்பட்டது.  

இதுவே உக்ரெயினிலும் நடைபெற்றது. எவ்வாறு சிங்களப் பெருந்தேசியவாதம் தனது இலக்குகளை அடைய சிங்கள பௌத்த அடையாளங்களை முன்னிலைப்படுத்தியதோ அதே போலவே உக்ரேனியர்கள் நாட்டில் வாழும் 30 சதவீத ரஷ்ய மொழி பேசும் மக்கள் தமது அடையாளத்திற்குத் தடையாக இருப்பதாகப் போலித் தேசியவாதத்தை முன்னெடுத்தார்கள். தமது இப் போலித் தேசியவாத நடவடிக்கைகளுக்கு ரஷ்யா தடையாக இருப்பதாக பிரச்சாரம் செய்தார்கள். எவ்வாறு இலங்கைத் தமிழ் மக்களின் பின்னணியில் இந்தியா செயற்படுவதாகக் கூறி சிங்களப் பகுதிகளில் இந்திய எதிர்ப்புப் பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றனவோ அவ்வாறே ரஷ்ய எதிர்ப்புப் பிரச்சாரங்களும் இடம்பெற்றன.  

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐ நா சபையில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரஷ்யா உடனடியாகத் தனது படைகளை உக்ரெயினிலிருந்து விலக்கவெண்டுமெனக் கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 141 நாடுகளும், 5 நாடுகள் எதிராகவும், 35 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமலும் தவிர்த்துக் கொண்டன. ஐ நா சபைத் தீர்மானங்கள் பல இஸ்ரேல் நாடு பாலஸ்தீனர்களுக்கு எதிராக நடத்தும் கொடுமைகளுக்கு எதிராக இவ்வாறான பல நாடுகள் இணைந்து வாக்களித்த போதிலும் இன்றுவரை பிரச்சனைகள் தீரவில்லை. அது போலவே உலக நாடுகள் பல அமெரிக்காவோடு இணைந்து வாக்களித்த போதிலும் மாற்றங்கள் ஏற்படுமா? என்பது சந்தேகமே. இங்கு இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் ரஷ்யா படைகளை உக்ரெயினிலிருந்து விலக்க வேண்டுமெனக் கோரும் தீர்மானத்தை சிறிய நாடுகளான பூட்டான், நேபாளம்,மாலைதீவு போன்ற நாடுகள் ஆதரித்து வாக்களித்த நிலையில் இலங்கை வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துக் கொண்டது அதன் குழப்ப நிலையை எடுத்துக் காட்டுகிறது.  

தற்போது மிகவும் அச்சமூட்டும் வகையில் போர் நிலமைகள் மாறிவரும் நிலையில் உக்ரெய்ன் நாடு சோவியத் குடியரசிலிருந்து விலகிய சகோதர நாடு தமது மூத்த சகோதரரின் தாக்குதலுக்கு முகம் கொடுத்திருப்பது பல குழப்ப நிலமைகளை ஏற்படுத்தியுள்ளது. உக்ரெயின் நாட்டிலுள்ள தேசியவாதிகளல்லாத அமைதியை விரும்பும் மக்கள் இந்த நிலமைகள் குறித்து மிகவும் கவலையடைந்துள்ளனர். உதாரணமாக, சிங்கள மக்களும், தமிழ் மக்களும் இணைந்து வாழ்வதை விரும்பும் பல சிங்கள தேசபக்த சக்திகள் 30 ஆண்டுகாலப் போரின்போது எதுவுமே பேச முடியாத நிலையிலிருந்தனர். ஏனெனில் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் அவ்வாறான கருத்துக்களுக்கு இடமளிக்காதது மட்டுமல்ல, அவர்கள் தமக்கு மத்தியில் வாழும் எதிரிகளாகவும் பட்டம் சூட்டினர். இவ்வாறான நிலையே உக்ரெயினிலுள்ள அமைதியையும், சமாதானத்தையும் விரும்பும் மக்கள் நிலையுமுள்ளது.  

மக்கள் புரட்சியாகூட்டுச் சதியா

இலங்கையில் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைப் போராட்டங்கள் எவ்வாறு பயங்கரவாதம் என வர்ணிக்கப்பட்டதோ அதே போன்றே உக்ரெயின் தென் பிராந்தியங்களில் வாழும் ரஷ்ய மக்களின் போராட்டங்களும் வர்ணிக்கப்பட்டன. ஒடுக்கப்பட்டன. தற்போது உக்ரெயின் நாடு ரஷ்யாவுக்கு எதிராக போராடும் நிலையை ஒரு சாரார் மக்கள் புரட்சி என வர்ணிக்கிறார்கள். குறிப்பாக மேற்கு நாடுகள் உக்ரெய்ன் மக்கள் தமது சுதந்திரத்திற்காகப் போராடுவதாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால் இன்னொரு சாரார் மேற்குலக நாடுகளின் சதி வலைக்குள் குறிப்பாக நேட்டோ ராணுவ விஸ்தரிப்புப் பொறிக்குள் உக்ரெய்ன் அகப்பட்டுள்ளதாகவும், இது மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டுச் சதியெனவும் குறிப்பிடப்படுகிறது.  

எனவே இவ் விவாதம் குறித்து நாம் ஆராய்வது அவசியமாகிறது. உக்ரெய்ன் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி விக்டர் ஜனகோவிச் (Victor Yanakovich) என்பவர் 2014ம் ஆண்டு செயற்பட்டார். அவர்  உக்ரெயினிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்குமிடையே உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தினைக் கைச்சாத்திடுவதில் தாமதித்தார். ஏனெனில் பாராளுமன்றத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம் குறித்துப் பல கருத்து வேற்றுமைகள் இருந்தன. இருப்பினும் பாராளுமன்றத்திலிருந்த தேசியவாதிகளின் பயமுறுத்தல்களின் பின்னணியில் அத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனாலும் ஜனாதிபதியின் கையொப்பம் பெற்றால் மட்டுமே அது சட்டமாகும். இச் சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திப் பொருட்கள் உக்ரெயின் சந்தைகளில் நிறைந்து விடும். இதனால் உள்நாட்டின் உற்பத்தி சுமார் 150 முதல் 160 பில்லியன் ஐரோ நாட்டிற்கு நட்டமேற்படும். எனவே ஐரோப்பிய சந்தையில் இணைவது குறித்து மேலும் சிந்திப்பது அவசியம் என்ற கருத்தை ஜனாதிபதி கொண்டிருந்தார்.  

ஆனால் உக்ரெயின் தேசியவாதிகளும், ஐரோப்பிய சந்தை நாடுகளின் ஆதரவாளர்களும் ஜனாதிபதி பாராளுமன்றத் தீர்மானத்திற்கு எதிராகச் செயற்படுவதாகக் கூறி ஆர்ப்பாட்டங்களை முடுக்கி விட்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் பல ஐரோப்பிய ஒன்றிய அரசியல்வாதிகள் செயற்பட்டனர். மேற்குலக பத்திரிகை நிறுவனங்கள் ஜனாதிபதி ரஷ்ய ஆதரவாளர் எனவும், அவர் பாராளுமன்றத் தீர்மானத்திற்கு எதிராகச் செயற்படுவதாகவும் செய்திகளைப் பரப்பி ஆர்ப்பாட்டங்களை மேலும் விஸ்தரித்தனர். ஆர்ப்பாட்டங்கள் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் சென்றதால் பொலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையே வன்முறை தொடர்ந்தது. இதன் விளைவாக ஆர்ப்பாட்டக்காரர்களும், பொலிசாரும் பலர் இறந்தனர். சாத்வீக ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறிய வேளை இச் சம்பவங்களைப் பயன்படுத்தி உக்ரெயினிய தேசியவாதிகள் மேலும் உக்கிரப்படுத்தினர். இந்த ஆர்ப்பாட்டங்களை ஆதரித்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் பலர் நேரடியாகவும், வெளிப்படையாகவும் பேசினர். இந்த ஆர்ப்பாட்டங்களின்போது அமெரிக்க ராஜாங்க அமைச்சின் உத்தியோக பிரதிநிதியாகிய விக்டோரியா நூலன்ட் (Victoria Nuland) அங்கு பிரசன்னமாகியிருந்ததை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. 

இவ்வாறு நிலமைகள் படிப்படியாக மாற்றமடைந்து சென்றிருந்த நிலையில் 2014ம் ஆண்டு பெப்ரவரி 20 ம் திகதி நிலமைகள் திடீரென மாறின. 

( தொடரும்)  
 

 

https://arangamnews.com/?p=7281

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கட்டுரையாளர் தனது கேள்வித் தலைப்பிற்கு இப்படி நீட்டி முளங்கியிருக்கத் தேவையில்லை.

ஏனென்றால், உக்ரேனின் எதிர்காலம் எப்படியிருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் உக்ரேனியர்களே!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

இந்தக்கட்டுரையாளர் தனது கேள்வித் தலைப்பிற்கு இப்படி நீட்டி முளங்கியிருக்கத் தேவையில்லை.

ஏனென்றால், உக்ரேனின் எதிர்காலம் எப்படியிருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் உக்ரேனியர்களே!

முதலில் இணைப்புக்கு நன்றி கிருபனுக்கு .

கட்டுரையாளர் புதிதாக ஒன்றையும் சொல்லவில்லை அரைத்த மாவையே மறுபடியும் மறுபடியும் அரைக்கிறார் .

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ரஷ்ய – உக்ரெய்ன் போர்! (பகுதி – 3)

ரஷ்ய – உக்ரெய்ன் போர்! (பகுதி – 3)  

    — வி.சிவலிங்கம் — 

  • ஒரு சில நாட்களில் தலைநகர் ‘கியவ்’ரஷ்ய படைகள் வசம்.  
  • –        உக்ரெய்ன் தலைநகர் சுற்றி வழைக்கப்பட்டது. 
  • –        உக்ரெய்ன் ஜனாதிபதி ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்றார். 
  • –        உக்ரெய்ன் நாடு அமெரிக்காவிடம் ஆகாய பாதுகாப்புக் கோரிய போதிலும் அமெரிக்கா நிராகரித்தது. 
  • பல லட்சம் அகதிகள் போலந்து, ருமேனியா, மல்டோவா நாடுகளை நோக்கி நகர்வு    

இன்று உலகின் கவனம் ரஷ்ய– உக்ரெய்ன் போரை நோக்கித் திரும்பியுள்ளது. இப் போரின் தாக்கம் காரணமாக பல நாடுகளில் பொருளாதாரத் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. உலகிலே அதிகளவு கோதுமை, எரிவாயு, பெற்றோலியம் போன்றவற்றை உற்பத்தி செய்யும் நாடாக ரஷ்யா உள்ளது. போர் காரணமாக எரிவாயு, எரிபொருள், கோதுமை போன்றன ஐரோப்பிய நாடுகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளைப் போட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தற்போது ரஷ்ய இறக்குமதிகள் தடைப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்து மிகவும் மௌனமாக இருப்பதோடு, தமது ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் அங்கு பெரும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளதாக எவ்வித ஆதாரங்களுமில்லாமல் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.   

உக்ரெய்ன் நாடு ‘நேட்டோ’ ராணுவக் கூட்டில் இணைய எடுத்த முயற்சியின் தாக்கம் இன்று உலக அளவில் உணரப்பட்டுள்ளது. உக்ரெய்ன் நாடு சுயாதீனமுள்ளது எனவும், அந்த நாடு தனது எதிர்காலத்தைத் தாமே தீர்மானிக்கும் உரிமை உள்ளது எனவும், நேட்டோவில் இணையும் உரிமையை ரஷ்யா தடுக்க முடியாது எனவும் ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் உசுப்பேத்திய அரசியல் தற்போது அந்நாட்டின் கட்டுமானங்கள் நிர்மூலமாகி, பல லட்சம் மக்களை அண்டை நாடுகளுக்குள் அகதிகளாக தள்ளியுள்ள நிலையில் நேட்டோவில் இணைவது உக்ரெய்னின் இறைமை எனக் கூறிய நாடுகள் இன்று கைவிரித்துள்ளன. உக்ரெய்ன் ஜனாதிபதி தனது நாட்டு மக்களை விமானக் குண்டு வீச்சிலிருந்து காப்பாற்ற தனது நாட்டிற்குள் விமானங்கள் வராதவாறு தடுக்கும்படி பலதடவை ‘நேட்டோ’ நாடுகளைக் கெஞ்சிக் கேட்டும் இந்த நாடுகள் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து வியாபாரத்தை நடத்தும் அவலம் தொடர்கிறது. 

ரஷ்ய நாடு உக்ரெய்ன் நாட்டின் எல்லைக்குள் படைகளை அனுப்பியது சர்வதேச சட்டங்களுக்கு மாறானது என ஐ நா பொதுச்சபை தீர்மானம் இயற்றியும் எதுவும் சாத்தியமாகவில்லை. இதற்குக் காரணம் என்ன? ரஷ்யாவின் பூகோள அரசியல் நலன்களுக்கு எதிராக உக்ரெய்ன் நாடு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் சூழ்ச்சிகளை நம்பிச் செயற்பட்டதே காரணமாகும்.  

உக்ரெய்ன் பிரச்சனையை நாம் வெறுமனே போர்ச் சம்பவங்களோடு மட்டும் நோக்க முடியாது. இதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. உக்ரெய்ன் நாடு ரஷ்யாவின் பகுதி என ரஷ்யர்கள் இன்னமும் நம்புகின்றனர். சோவியத் குடியரசு 90களில் சிதைந்த வேளையில் உக்ரேனியர்கள் தமக்கும் சுதந்திரம் கோரி ரஷ்யாவிலிருந்து தனி நாடாகப் பிரிந்தனர். இப் பிளவுகளின் பின்னணியில் செயற்பட்ட பல ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ரஷ்யாவின் எல்லையிலுள்ள அந்த நாட்டை எதிரியாக்கி எந்த நேரமும் ரஷ்ய – உக்ரேனிய உறவுகளைக் கொதி நிலையில் வைத்திருக்க பல திட்டங்களை நிறைவேற்றினர்.  

உக்ரெய்ன் நாட்டு அரசியலில் ரஷ்யாவிற்கு எதிரான உக்ரேனிய தேசியவாத சக்திகள் மிக நீண்ட காலமாக செயற்பட்டு வந்தனர். குறிப்பாக, சோவியத் சோசலிசக் குடியரசு ஸ்தாபிக்கப்பட்ட வேளையில் உக்ரெய்னின் ஒரு பிரிவினர் ஹிட்லர் தலைமையிலான நாக்ஸிகளுடன் இணைந்து செயற்பட்டிருந்தனர். இந்த அமைப்பின் கோட்பாடுகளை இன்னமும் நம்பும் சில நாக்ஸி அமைப்புகள் தற்போதும் செயற்படுகின்றன. இவர்கள் ரஷ்ய மொழி பேசும் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை மிகவும் திட்டமிட்டே புரிந்தனர். சோவியத் ரஷ்யாவை உருவாக்குவதில் பிரதான பங்கு வகித்த  பிரஸ்னேவ், குருஷ்ஷேவ் போன்றவர்கள் உக்ரெய்ன் நாட்டினைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இவர்கள் உக்ரெய்ன் நாட்டினை தொழில் வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றுவதில் அதிகம் கவனம் செலுத்தினர். உக்ரெய்ன் நாட்டின் எல்லையின் ஒரு பகுதி கருங்கடலால் சூழப்பட்டுள்ளது. இக் கரையோரங்கள் பலவற்றில் பல தொழிற்சாலைகள், அணு உலைகள், பல துறைமுக நகரங்கள் என உண்டு. அதற்கான மூல வளங்களும் உண்டு. தற்போதைய போரின்போது ரஷ்யப் படைகள் சுற்றி வழைத்திருக்கும் பகுதிகளை அவதானித்தால் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கருங்கடல் பகுதிகள் கைப்பற்றப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.  

இவ்வாறான தொழில் வளம் மிக்கதும், வாழ்க்கைத் தரம் உயர்ந்த நாடாகவும் உக்ரெய்ன் உள்ளது. இந்த நாட்டினைத் தமது சந்தையாக மாற்ற ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டிருந்தன. ஐரோப்பிய யூனியனில் இணைந்தால் செல்வம் பெருகும் என்ற நம்பாசை அங்கு காணப்பட்ட மத்திய தர வர்க்கம், தேசியவாதிகள் மத்தியிலே பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது தொடர்பான விவாதங்கள் அன்றைய அரசியலில் பிரதான விவாதமாக மாறியது. ரஷ்யாவிற்கு எதிராகச் செயற்படும் தீவிர தேசியவாதிகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை மறைமுகமாக ஆதரித்தனர். இதனால் நாட்டின் பொருளதாரத்தில் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள் குறித்த விவாதங்கள் அங்கு பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தின. 

2014ம் ஆண்டு பெப்ரவரி 20ம் திகதி 

இவ்வாறான நெருக்கடிகளின் பின்னணியில் 2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ம் திகதி நிகழ்வுகள் பெரும் அச்சத்தை ஊட்டும் வகையில் மாற்றமடைந்தன. பாராளுமன்றத்திற்கும் ஜனாதிபதிக்குமிடையே பெரும் நெருக்கடி ஏற்கெனவே ஏற்பட்டிருந்தது. பிரதமருக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தினருக்குமிடையே ஏற்பட்டிருந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஜனாதிபதி ‘விக்டர் யனுகோவிச்’ தாமதித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வருகை நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள் குறித்துப் பரிசீலனை செய்யவேண்டும் என வற்புறுத்தினார். ஆனால் தேசியவாதிகள் தயாராக இல்லை.  

தேசியவாதிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். இதனால் பொலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டுப் பலர் மரணமாகினர். இதனால் குழப்ப நிலை அதிகரித்தமையால் போலந்து வெளிநாட்டமைச்சர், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சு அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் தலைமையில் சந்தித்து குழப்பங்களைத் தடுக்க ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டனர். 

2014ம் ஆண்டு பெப்ரவரி 20ம் திகதி நிகழ்வுகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், மோதல்கள், படுகொலைகள் என்பனவற்றின் பெறுபேறாக அவற்றைத் தடுக்க எடுக்கும் முயற்சி என்ற பெயரில்தான் ஒப்பந்தம் தயாரானது. சகலரும் ஒப்பமிட்டனர். அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி 48 மணி நேரங்களுக்குள் குழப்ப நிலமைகளைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி புதிய விசேட சட்டம் ஒன்றினைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றினர். 

இந் நிகழ்வே அங்கு ஜனநாயக அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசைக் கவிழ்ப்பதற்கான முதல் நிகழ்ச்சியாக அமைந்தது.  

2014ம் ஆண்டு பெப்ரவரி 21 – 22ம் திகதிகளில் ஐரோப்பிய சந்தையில் இணைவதற்கு ஆதரவான சக்திகள் படிப்படியாக அரச கட்டிடங்களை முற்றுகையிட்டனர். 22ம் திகதி மாலை பாராளுமன்றத் தலைவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டுப் புதிய தலைவர் தெரிவானார். அவர் பதவியேற்ற சில மணி நேரங்களில் அவரது அரசியல் தீர்மானங்கள் வெளியாகின.  

அடுத்த கட்ட நடவடிக்கையாக ஜனாதிபதி தாமாக பதவி விலகவேண்டுமெனவும், அவர் அரசியல் அமைப்பு அதிகாரங்களைச் செயற்படுத்த முடியாது எனவும் தீர்மானம் இயற்றினர்.  

மறு நாள் 23ம் திகதி ஜனாதிபதியின் அதிகாரங்களைத் தற்காலிகமாக பாராளுமன்றத் தலைவர் பதில் ஜனாதிபதி என்ற பெயரில் பொறுப்பேற்றார். இம் மாற்றத்தை ஆதரிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் இம் மாற்றங்களை உடனடியாகவே அங்கீகரித்தது. இச் சம்பவங்களை வரிசையாக அவதானித்தால் உக்ரெய்னில் எவ்வாறு தேசியவாதிகளும், நாக்ஸிஸ்டுகளும் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரசைக் கவிழ்த்தார்கள் என்பதும், ஜனநாயகம் பற்றி அதிகளவு பீத்திக் கொள்ளும் ஐரோப்பிய நாடுகள் இவ் ஜனநாயகப் படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட விபரங்களையும் காணலாம்.  

போரின் பின்னணியின் சூத்திரதாரிகள் யார்

பெப்ரவரி 23ம் திகதி இடம்பெற்ற மாற்றங்கள் காரணமாக ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் ரஷ்யாவில் அடைக்கலம் பெற்றார். அதன் பின்னர் பதில் ஜனாதிபதி பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தை ஏவும் பிரகடனத்தை 2014ம் ஆண்டு ஏப்ரல் 13ம் திகதி வெளியிட்டார். இதன் காரணமாக’டொனெஸ்க்’ (Donetsk) லுகான்ஸ்க் (Luhansk) என்ற பிரதேசங்களில் (தற்போது குடியரசாக மாற்றமடைந்துள்ள பகுதிகள்) வாழும் ரஷ்யர்களின் போராட்டங்களை நசுக்கப் படைகளை அனுப்பினார். இதன் விளைவாக அப் பிரதேசங்களில் போராட்டங்களை நடத்திய ரஷ்யர்கள் ஏப்ரல் 27ம் திகதி தமது பிரதேசத்தினைத் சுதந்திரக் குடியரசாகப் பிரகடனப்படுத்தினர்.  

உக்ரேய்ன் அரசு தாமாகவே போர் நிலமைகளை உருவாக்கியதோடு, நாட்டைப் பிளவுபடுத்துவதற்கும் அவர்களே வாய்ப்பை ஏற்படுத்தினர். உக்ரேனிய படைகள் அப் பிரதேசத்தில் நுழைந்து சுமார் 30 ஆர்ப்பாட்டக்காரர்களை தொழிற்சங்க கட்டிடத்திற்குள் வைத்து தீயிட்டுக் கொழுத்தினர். 2014ம் ஆண்டு மே மாதம் 9ம் திகதி நிராயுதபாணியினான மக்கள் பேரணியாகத் தாம் மாபெரும் தேசபக்தி யுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.  

அங்குள்ள உள்ளுர் பொலீஸ் நிலையம் முன்பதாக சென்ற மக்களை தீவிர வலதுசாரி பட்டாளத்தினர் சுட்டுக் கொன்றனர். இங்கு உக்ரேனிய ராணுவம் மட்டுமல்ல, வலதுசாரி தீவிரவாத நாக்ஸிச சக்திகளும் இப் போரில் இணைந்திருப்பதை உணர்த்தியது. பொலீசாரும், பொது மக்களும் இச் சம்பவத்தில் உயிரிழந்தார்கள். இச் சம்பவங்கள் குறித்து மனித உரிமை இயக்கங்கள் குரல் எழுப்பினார்களே தவிர அதன் பின்னால் எதுவுமில்லை. அங்கு ஐரோப்பிய எதிர்ப்புக் கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டன.  

உக்ரெயினின் தென் பிராந்தியங்களில் அந்நாட்டின் ராணுவத்தால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து உக்ரெயின் அரசு அலட்சியப்படுத்தியது. ரஷ்ய மொழி நூல்கள், தொலைக்காட்சி சேவைகள் முற்றாகத் தடுக்கப்பட்டன. ரஷ்யா ஆதரவு எழுத்துக்கள், கருத்துக்கள் போன்றன ரஷ்ய ஆதரவு எனக் கூறிக் கடும் தண்டனை வழங்கப்பட்டது. ரஷ்யத் தலையீடு ஆரம்பிப்பதற்கு முன்பதாக இதுவரை சுமார் 15000 மக்கள் அங்கு உக்ரெய்ன் ராணுவத்தால் கொல்லப்பட்டிருந்தார்கள்.                           

ரஷ்யத் தலைவர் புட்டினைக் கொல்லும்படி அமெரிக்க செனட்டர்கள் 

அமெரிக்க அரசுத் தலைவர்கள் தற்போது மிகவும் அச்சமடைந்துள்ளதோடு அமெரிக்காவினால் எதுவும் செய்ய முடியாது என்பது உலகளவில் தெரிந்துள்ளது. மூன்றாவது உலகப்போரை தமது பிராந்தியத்தில் நடத்த ஐரோப்பியர்கள் தயாராக இல்லை. அமெரிக்கப் பொருளாதாரம் சரிந்து தற்போது சீனப் பொருளாதாரம் வளர்ந்துள்ள நிலையில் மூன்றாவது உலகப் போர் நடக்குமானால் அதில் சீனா, ரஷ்ய அணியுடன் ஆசிய நாடுகள் இணைந்து கொள்ளும் என்பதையும் இந்த நாடுகள் புரிந்துள்ளன. 

அதன் காரணமாக அமெரிக்க வலதுசாரி செனட்டர்கள் யூலியஸ் சீசரைக் கொல்ல ஒரு’புருட்டஸ்’ போல் ஒரு ரஷ்யர் அந்த நாட்டில் இல்லையா? எனத் தேடுகின்றனர். இந்த ஆட்சியாளர்கள் உலகம் முழுவதும் ஜனநாயகத்தைப் போதிக்கும் அதேவேளை கியூபாவின் தலைவர் பிடல் கஸ்ரோ, லிபியத் தலைவர் கேணல் கடாபி எனக் கொலை செய்யவும் தயாராக இருக்கும் நிலையே இன்றைய அரசியலாகும். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற நாடுகளின் தனித்துவமான பலத்தினைத் தற்போது உணர்ந்து வருகின்றன. உலகப் பொருளாதார வளர்ச்சி தற்போது கிழக்கு நோக்கித் திரும்பியிருக்கிறது. ஒரு காலத்தில் கிழக்கின் மூல வளங்களைச் சுரண்டி அந்த நாடுகளைக் குடியேற்ற நாடுகளாக ஒடுக்கி வைத்திருந்த காலங்கள் மாறிவிட்டன.  

இந்தியா மிகவும் சுயமாகவே தனது வெளிநாட்டுக் கொள்கையைத் தீர்மானிக்கும் அளவிற்குப் பலமாக வளர்ந்துள்ளது. ஐநா சபையில் அமெரிக்கா கொண்டுவந்திருந்த பல தீர்மானங்களில் இந்தியா வாக்களிக்கவில்லை. அதே போலவே சீனா, ரஷ்யா ஆகியனவும் பலமாக வளர்ந்துள்ள நிலையில் எதிர் காலத்தில் புதிய கூட்டிற்கான ஆரம்பமாகவே ரஷ்ய –உக்ரெய்ன் போரின் விளைவுகள் அடையாளப்படுத்துகின்றன. 

உக்ரெய்ன் எதிர்காலம் என்ன

இஸ்ரேல் நாடு தனக்கு அண்மையிலுள்ள நாடுகளை மிகவும் பயமுறுத்தி வருகிறது. தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக எந்த நாடு இருப்பினும் அந்த நாட்டை தானே முதலில் தாக்குகிறது. உதாரணமாக, தனது பாதுகாப்பைக் காரணம் காட்டியே பல தசாப்தங்களாக பாலஸ்தீனர்கள் மீது தாக்குதலைத் தொடுத்து வருகிறது. அதேபோலவே ஈரான் நாடு அணு ஆயுதங்கள் தயாரிக்க இடமளிக்க முடியாது என கூறி வருகிறது. இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்காக என்ற பெயரில் நடத்தும் சகல அடாவடிகளுக்கும் அமெரிக்கா ஆதரவளிக்கிறது.  

இதே வாய்பாட்டையே தற்போது ரஷ்யாவும் கூறுகிறது. தனது அண்டைய நாடு தமக்கு அச்சுறுத்தலாக இருப்பதை அனுமதிக்க முடியாது எனவும், உக்ரெயினிடம் அணு ஆயுதங்கள் இருப்பதால் அதிலிருந்து தம்மைப் பாதுகாப்பது தமது கடமை எனவும், அதே போலவே ‘நேட்டோ’ இல் இணைந்து தமது எல்லையில் ஆயுதங்களைக் கொண்டுவருவதற்குத் தம்மால் இடமளிக்க முடியாது என்பதால் உக்ரெய்ன் ‘நேட்டோ’ இல் இணைவதில்லை எனவும், நாட்டின் தேவைக்கு அதிகமான அளவில் ராணுவத்தை வைத்திருக்க அனுமதிக்க முடியாது எனவும் ரஷ்யாவின் ஐ நா பிரதிநிதி பொதுச் சபையில் தெரிவித்தார்.  

1994ம் ஆண்டு ஜேர்மனியில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் உக்ரெய்ன் ஜனாதிபதி விலாடிமிர் ஷெலன்ஸ்கி தனது நாடு அணு ஆயுதங்களை இன்னொரு நாட்டிடம் கையளிக்க விரும்பவதாகவும், அதற்குப் பதிலாக தனது நாட்டின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தரவேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார். தற்போது அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டிருப்பதாகவே கருதப்படுகிறது.  

ரஷ்யா அங்கு நிரந்தரமாகத் தங்குமா

அமெரிக்கர்கள் ஈராக் நாட்டில் ஜனநாயகத்தைக் கட்டுவதாகக் கூறி சுமார் 25 ஆண்டுகள் தங்கி அந்த நாட்டின் வளங்களைச் சூறையாடினார்கள். அங்கு ஜனநாயகம் துளியேனும் இல்லை. அறிஞர்களின் கருத்துப்படி ரஷ்யாவின் போர் தந்திரங்களை அவதானிக்கையில் தலைநகரான ‘கியவ்’ இல் தேசியவாதிகள் கெரில்லா யுத்தமொன்றை நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேற்கு நாடுகள் அதற்கான விதத்தில் ஆயுதங்களைக் கையளித்து வருவதாகத் தெரிகிறது. அதனால் ரஷ்யர்கள் உக்ரெயினின் எல்லைகளை முதலில் கைப்பற்றி அதனூடாக முக்கிய பிரதேசங்களின் நகரங்களைப் பலப்படுத்தி மத்திய அரசு பலம் குறைந்ததாகவும், மாநிலங்களில் பலம் வாய்ந்த அரசியல் கட்டுமானங்களை உருவாக்க எண்ணுவதாகக் கூறப்படுகிறது.  

அவ்வாறான அமைப்புத் தோற்றுவிக்கப்படுமாயின் தேசியவாதிகளின் கனவும் கலைவதோடு, வெளிநாட்டுக் கொள்கை என்பது பிரதேசங்களின் சம்மதத்துடன் மேற்கொள்ளும் பொறிமுறையாக மாற்றமடைய வாய்ப்பு உண்டு எனக் கருதப்படுகிறது. அதாவது ஒருவகை சமஷ்டி வடிவத்திலான அரசியல் கட்டமைப்பு உருவாக்கப்படலாம். எனவே ரஷ்ய – உக்ரெய்ன் மோதல்களை நாம் நேட்டோ பிரச்சனையினூடாகப் பார்க்காமல் அதன் வரலாற்றுப் பின்னணியோடு அணுகுவது அவசியமாகிறது.  

இப் பின்னணியில் மேற்கு நாடுகளின் அணுகுமுறைகளை ஆதரித்து இதே ஊடகத்தில் கட்டுரை வரையப்பட்டு வருகிறது. எனவே அவை பற்றிய சில அம்சங்களைக் குறிப்பிடுவது அவசியம் எனக் கருதுகிறேன். 

உதாரணமாக, சோவியத் சோசலிசக் குடியரசு கலைக்கப்பட்ட வேளையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் சோவியத் குடியரசிலிருந்து விலகிய நாடுகளை ‘நேட்டோ’அமைப்பில் இணைப்பதில்லை என வாக்குறுதி அளித்திருந்ததாகவும், அதை அந் நாடுகள் மீறியுள்ளன என்ற செய்திகள் வெளிவந்த நிலையில் அவை பற்றி அக் கட்டுரை தெரிவிக்கையில் முன்னாள் சோவியத் குடியரசுத் தலைவர் ‘குர்பச்சேவ்’ அவ்வாறு நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் பற்றிய பேச்சே எழவில்லை என அவர் 2014இல் குறிப்பிட்டார் என நியாயம் கற்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் அக் குறிப்பு பற்றிய விபரங்களை அக் கட்டுரை வெளியிட்டிருக்க வேண்டும். பதிலாக இல்லாத ஒரு உறுதி மொழியை ரஷ்யா மீள ஒப்புவித்து மண்டையைக் கழுவுகிறதா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. 

அக் கட்டுரையைப் படிக்கும்போது அமெரிக்கா எப்போதுமே எழுத்து மூலமான ஒப்பந்தங்களைக் கௌரவிக்கும் ஒரு நாடு எனவும், எழுத்து மூலமான ஒப்பந்தம் இல்லாத நிலையில் அரசுகள் மக்கள் ஆணையோடு நேட்டோவில் இணைய விண்ணப்பிக்கும்போது அதனை நேட்டோ தடுக்க முடியாது என்ற கருத்து நியாயமாக முன்வைக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.. அமெரிக்காவின் நியாய அநியாயங்களை சிறு பிள்ளையும் அறியும். அமெரிக்கா அருகிலுள்ள கியூபா இன்று வரை பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை அல்லது அதன் தலைவரை எத்தனை தடவைகள் முயற்சித்தார்கள். மத்திய கிழக்கில் ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் அரசுகள் கவிழக்கப்பட்ட விபரங்கள் உலகம் அறியாததல்ல.  

இங்கு இன்னொரு வியப்பான நியாயம் எதுவெனில் நேட்டோ விரிவாக்கம் தொடர்பாக அன்றிருந்த அமெரிக்க வெளியறவு அமைச்சர் ஜேம்ஸ் பேக்கர் அவ்வாறான உறுதியை வழங்கியுள்ளார். அதாவது அவர் ‘கிழக்கு நோக்கி ஒரு அங்குலம் தானும் நேட்டோ நகராது’ என்ற வாய்மொழி வாக்குறுதியை அளித்ததாக ஏற்றுள்ள அக் கட்டுரை அவை எழுத்து மூலமாக இல்லை என சப்பைக்கட்டுப் போடுகிறது. இதன் மூலம் அமெரிக்கர்களின் வாய்மூல வாக்குறுதிகள் பெறுமதியற்றவை என்பது தெளிவாகிறது. இங்கு ஒப்பந்தம் உள்ளதா?இல்லையா? என்பதல்ல பிரச்சனை. ஆனால் நேட்டோ விஸ்தரிப்புத் தொடர்பாக அங்கு பேசப்பட்டிருக்கிறது. உறுதி மொழிகள் வழங்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா அதனை மதிக்குமா? இல்லையா? என்பதை வாசகர் தீர்மானிக்கலாம்.  

இப் போர் உலக அளவில் புதிய ஒழுங்கை நோக்கிய கவனத்தை ஈர்த்திருக்கிறது. பொருளாதார மற்றும் ராணுவ பலமுள்ள நாடுகள் சிறிய நாடுகளை ஓடுக்கி தமது வலையத்திற்குள் வைப்பது தொடர்ந்து நடைபெறுகிறது. இதுவரை காலமும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அவற்றை மிகவும் வெளிப்படையாக மேற்கொண்டன. இதனால் சில சிறிய நாடுகள் அமெரிக்க பாதுகாப்பை நோக்கிச் சென்றன. ஆனால் மிகவும் பலவீனமான உக்ரெய்ன் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் வாக்குறுதிகளை நம்பி ‘நேட்டோ’ ராணுவ அணியில் இணைவதாகக் கூறி ரஷ்யாவுக்கு எதிராகப் பயன்படுத்தும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய எண்ணியதால் ஏற்படக்கூடிய விழைவு என்ன? என்பது மிகவும் தெளிவாகவே உணர வைக்கப்பட்டுள்ளது. இதுவே இலங்கை அரசு சீனாவை நோக்கி நகருமானால் இதே பிரச்சனைகள் எழ அதிக வாய்ப்பு உண்டு.  

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் பத்திரிகையாளர் ‘நீங்கள் விலாடிமிர் ஷெலன்ஸ்கியின் இடத்தில் இருந்திருந்தால் என்ன முடிவு எடுத்திருப்பிர்கள்?’ என வினவிய போது ‘நிச்சயமாக அவ்வாறான தற்கொலை முடிவுக்கு நாட்டை எடுத்துச் சென்றிருக்கமாட்டேன்’ எனத் தெரிவித்தார். இதுவே நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் எடுக்கக்கூடிய விவேகமான முடிவாகும். இன்றுள்ள பூகோள அரசியல் போட்டியில் சிறிய நாடுகள் மிகவும் விவேகமாக அணிசேரா அணியில் இணைவதாகக் கூறித் தப்பிக்கின்றன. ஆனால் தற்போதைய இலங்கை ஆட்சித் தலைவர்கள் சீனாவுடன் கொண்டாட்டம் நடத்தலாம் எனக் கனவு காணுவதும், பௌத்த சிங்கள அரசை சீனாவின் உதவியுடன் நிர்மாணிக்கலாம் எனக் கனாக் காண்பதும் ‘ஷெலென்ஸ்கி’இன் இன்றைய உக்ரெய்ன் நிலமைகளையே உருவாக்கும். 

அமெரிக்கா தம்மைக் காப்பாற்றும் எனக் கனவு கண்ட ‘ஷெலென்ஸ்கி’ தற்போது நேட்டோவை மட்டுமல்ல, நாட்டை அண்டை நாடுகளுக்கு எதிராக தூண்டும் ராணுவக் கட்டமைப்பையும் இல்லாதொழித்திருக்கிறது. இங்கு ரஷ்யாவின் செயல் நியாயமானதா? என்பதை விட சிறிய நாடான உக்ரெய்ன் தனது எதிர்காலத்தை மிகவும் கவனமாக முடிவு செய்திருக்க வேண்டும். அங்கு வாழும் ரஷ்ய மக்களின் நியாயமான அபிலாஷைகளை நியாயமான விதத்தில் அணுகித் தீர்த்திருக்க வேண்டும்.  

இலங்கை ஆட்சியாளர்கள் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக அந் நாட்டில் வாழும் தேசிய சிறுபான்மையினரின் குறிப்பாக தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுதலித்தது மட்டுமல்ல, ராணுவ ஒடுக்கு முறைகளையும் உபயோகித்தனர். இன்று முழு நாடுமே பொருளாதாரச் சீரழிவில் சிக்கியுள்ளது. இதுவே உக்ரெய்ன் இன்றைய ஆட்சியாளர்களின் செயற்பாட்டின் முடிவாகவும் இன்று மாறியுள்ளது. தேசியவாதத்தை உக்கிரப்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றலாம். ஆனால் அங்கு ஜனநாயகத்தைத் தோற்றுவிக்க முடியாது. அமைதியை ஏற்படுத்த முடியாது. இலங்கையில் சிங்கள பௌத்த இனவாதம் நாட்டின் பொருளாதாரத்தையே சீரழித்தது. உக்ரேனிய தேசியவாதத்தின் முடிவும் அதே கதையாக முடிந்துள்ளது.  

முற்றும்.     

 

https://arangamnews.com/?p=7444

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரையாளரை மேற்குலகில் வசிக்கின்ற ரஷ்ய ஆதரவு இலங்கை தமிழர்கள் வார்த்தையில் சொல்வதானால் ரஷ்யாவுக்கு செம்பு தூக்குபவர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இந்த கட்டுரையாளரை மேற்குலகில் வசிக்கின்ற ரஷ்ய ஆதரவு இலங்கை தமிழர்கள் வார்த்தையில் சொல்வதானால் ரஷ்யாவுக்கு செம்பு தூக்குபவர்.

செம்பு தூக்குபவர் என்கின்ற போது கவுண்டமணி செந்தில் "சாப்பிட்டநீங்களா அண்ண" நகைச்சுவைதான் நினைவுக்கு வருகிறது.

😆

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையை எழுதியவர் உக்கிரேன் மக்களின் அழிவுகளைப் மீதான கவலையைக் காட்டாத வெறும் சித்தாந்தவாதி என்றுதான் தெரிகின்றது. முதலாளித்துவத்தை இல்லாமலாக்க எந்தப் பேயுடன் கூட்டுச் சேரலாம் என்ற கொள்கையுடையவராக இருக்கின்றாராக்கும்!

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

முதலாளித்துவத்தை இல்லாமலாக்க எந்தப் பேயுடன் கூட்டுச் சேரலாம் என்ற கொள்கையுடையவராக இருக்கின்றாராக்கும்!

இவர் மாதிரி சிலரும், பேயை கதாநாயகனாக கொண்டாடி பேயின் அழிவுகளை எப்படி அடி என்று ஆரவாராம் செய்யும் பலரும் எம்மவர்களில் மேற்குலகில் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இவர் மாதிரி சிலரும், பேயை கதாநாயகனாக கொண்டாடி பேயின் அழிவுகளை எப்படி அடி என்று ஆரவாராம் செய்யும் பலரும் எம்மவர்களில் மேற்குலகில் இருக்கிறார்கள்.

நிர்வாணிகளின் உலகில் உடை உடுத்தியவன் பைத்தியக்காறன் என்பது உண்மைதானே .

5 hours ago, கிருபன் said:

கட்டுரையை எழுதியவர் உக்கிரேன் மக்களின் அழிவுகளைப் மீதான கவலையைக் காட்டாத வெறும் சித்தாந்தவாதி என்றுதான் தெரிகின்றது. முதலாளித்துவத்தை இல்லாமலாக்க எந்தப் பேயுடன் கூட்டுச் சேரலாம் என்ற கொள்கையுடையவராக இருக்கின்றாராக்கும்!

பேய்களில் எந்தப் பேய் நல்ல பேய் என்பது காலத்தால் தீர்மானிக்கப்படுகிறது.

😀

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழ் சித்தாந்தவாதிகள் பற்றி ஐரோப்பாவில் முன்பு இருந்த பெரியவர் ஒருவர் தெரிவித்தார். கொழும்பில் இருந்து ரஷ்ய விமானம் எடுத்து ரஷ்யா மற்றும் ஐரோப்பாவில் உள்ள கொம்யுனிஸ்ட் நாடுகளுக்கு  தமிழர்கள் முதலில் செல்வார்களாம். பின்பு அங்கே இருந்து தீமையான வெள்ளை தோல் மேற்குலக நாடுகளுக்கு செல்வார்களாம்.மேற்குலகநாடுகளின் அகதி முகாமில் இருந்த போது இவர்கள் பேசிகொண்டார்களாம்  அந்த கொம்யுனிஸ்ட் நாடுகளைவிட இந்த நாடுகள் மிகவும் திறமாக தானே இருக்கிறது. அங்கே இருந்த தமிழ் சித்தாந்தவாதிகள் உடனே சொன்னார்களாம் நீங்கள் இலங்கையில் இருந்து இங்கே வருவதற்கு இவ்வளவு நல்ல வாழ்க்கை கிடைப்பதற்கு உங்களை கொண்டு வந்து சேர்த்தது ரஷ்ய விமானம் என்பதை மறக்ககூடாது. ஆகவே ரஷ்யாவுக்கு எப்போதும் நீங்கள் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனுக்கு மேலும் 2250 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உபகரணங்கள் வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை சமாளித்து பதில் தாக்குதல் நடத்தவும், உக்ரைனின் பாதுகாப்பு திறனை வலுப்படுத்தவும் ராணுவ உபகரணங்களை வழங்க உள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான சர்வதேச தெரிவித்துள்ளது.

ராணுவத் தொகுப்பில் லேசர் ராக்கெட், ட்ரோன்கள், இருளிலும் குறிபார்த்து தாக்க உதவும் கருவிகள், பாதுகாப்பு தொலைத் தொடர்பு கருவிகள், மருத்துவ உபகரணங்கள், தோட்டாக்கள், வெடி மருந்துகள், தளவாட உதிரி பாகங்கள் உள்ளிட்டவைகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 106 கோடி டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு வழங்கியதாக சர்வதேச செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  

 

உக்ரையினைத் தரைமட்டமாக்கி அழிக்காது அமெரிக்கா உறங்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.