Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் போதனாவில் மருத்துவ தவறால் சிறுமியின் கை அகற்றம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் போதனாவில் மருத்துவ தவறால் சிறுமியின் கை அகற்றம் !

யாழ் போதனாவில் மருத்துவ தவறால் சிறுமியின் கை அகற்றம் !

யாழில். மருத்துவ தவறால் 08 வயது சிறுமியின் இடது கை, மணிக்கட்டின் கீழ் அகற்றப்பட்டுள்ள நிலையில் சிறுமி தொடர்ந்தும் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியை சேர்ந்த 08 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக கடந்த 25ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

26ஆம் திகதி, சிறுமியின் கையில் “கனுலா” (குளுக்கோஸ் , மருந்துகள் ஏற்றுவதற்காக மணிக்கட்டின் கீழ் பொருத்தப்படும் ஊசி) பொருத்தப்பட்டு, நோய் எதிர்ப்பு மருந்து (அன்டி பயோடிக்) ஏற்றப்பட்டுள்ளது.

“கனுலா” உரிய வகையில் சிறுமியின் கையில் பொருத்தாததால், சிறுமிக்கு வலி ஏற்பட்டுள்ளது. அது குறித்து சிறுமி கூறிய போதிலும் தாதியர்கள் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.

இந்நிலையில் சிறுமியின் இரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு, மணி கட்டின் கீழ் செயலிழந்துள்ளது. இதன் காரணமாக சிறுமியின் கையை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1348258

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண வைத்தியசாலைகளில் ஆளணிப் பற்றாக்குறை : சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் : வருத்தம் தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர்

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பளார் த. சத்தியமூர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது என்றும் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு தொலைபேசி ஊடாகவும் எழுத்து மூலமாகவும் அறிவித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் சார்ள்ஸின் உத்தரவின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1348264

  • கருத்துக்கள உறவுகள்
04 SEP, 2023 | 12:44 PM
image
 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு ஊசியின் மூலம் மருந்தினை ஏற்றியதில் ஏற்பட்ட தவறு காரணமாக சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் துண்டிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது:

காய்ச்சல் காரணமாக குறித்த சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், அவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக ஊசி மூலம் மருந்து ஏற்றப்பட்டுள்ளது.

ஊசி செலுத்தப்பட்ட மறுநாள் இரவு சிறுமி வலியினால் அவதிப்பட்டுள்ளார். 

இந்நிலையில், அவ்வேளை விடுதியில் கடமையில் இருந்த தாதியர்களிடம் சிறுமியின் நோய் நிலைமை தொடர்பில் தாயார் கூறியபோது, 'ஊசி ஏற்றப்பட்டால் இப்படித்தான் வலி இருக்கும்' என தாதியர்கள் பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்ததாக பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சிறுமியின் கை நரம்பு பாதிக்கப்பட்டதை உணர்ந்த வைத்தியர்கள் அதனை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

அதன் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை (02) காலை சத்திர சிகிச்சை மூலம் சிறுமியின் மணிக்கட்டுடனான கையின் பகுதி அகற்றப்பட்டது.

சிறுமி அனுமதிக்கப்பட்ட விடுதிக்கு பொறுப்புடைய வைத்தியர் சம்பவ தினத்தன்று கடமையில் இருந்தாரா என்பது தொடர்பில் சந்தேகங்கள் எழும்பும் நிலையில், அவ்விடுதியில் கடமையாற்றிய தாதியர்களின் அலட்சியப்போக்கும் சிறுமியின் கை அகற்றப்பட்டதற்கு காரணமாகிறது என்ற குற்றச்சாட்டு வலுவாக முன்வைக்கப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தியை தொடர்புகொண்டு கேட்டபோது அவர், 

சிறுமிக்கு நடந்த சம்பவம் மனவேதனை ஏற்படுத்துகிறது. இது தொடர்பில் விசாரணை செய்ய மூவர் அடங்கிய விசாரணைக் குழுவை நியமித்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சுக்கும் இவ்விடயம் தொடர்பாக அறிவித்துள்ளேன்.

விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பாரபட்சமின்றி எடுப்பேன் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/163793

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியசாலையின் அசமந்தப் போக்கு காரணமாகவே எனது பேர்த்தியின் கை அகற்றப்பட்டது - பேரன் கதறல்

Published By: VISHNU

04 SEP, 2023 | 08:12 PM
image
 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அசமந்தப் போக்கு காரணமாக எனது பேர்த்தியின் கையானது துண்டிக்கப்பட்டு விட்டது என பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் தந்தையார் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - மல்லாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து திங்கட்கிழமை (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்னது பேர்த்தி வைசாலிக்கு கடந்த 22 ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சலுக்காக ஏழாலையில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இரத்த பரிசோதனையின்படி அவருக்கு கிருமி இருப்பதாக கூறப்பட்டது.

தட்டாதருவில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில், குழந்தை வைத்திய நிபுணர் சரவணபவன் அவர்களிடம் சிறுமியை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றவேளை காய்ச்சலுக்கு மருந்து வழங்கப்பட்டது.

தொடர்ந்து காய்ச்சல் இருந்ததன் காரணமாக திருநெல்வேலி உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு சிறுமியை அழைத்துச் சென்று, ஒருநாள் விடுதியில் அனுமதித்திருந்தோம். ஆனால் அங்கு வழங்கப்பட்ட சிகிச்சைக்கும் காய்ச்சல் குறையவில்லை என்ற காரணத்தினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சிறுமியை அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

அன்றைய தினமே இரவு எட்டு மணிக்கு யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலைக்கு சிறுமியை அழைத்துச் சென்று பன்னிரண்டாம் இலக்க விடுதியில் அனுமதித்தோம். அங்கே சிறுமிக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டன. அத்துடன் ஊசி மருந்தை செலுத்துவதற்காக கையில் ஒரு ஊசி போன்ற கருவி ஏற்றி அதனூடாக மருந்து ஏற்றப்பட்டது.

அந்த மருந்து ஏற்றப்பட்ட பின்னர் கையானது வீக்கம் அடைந்திருந்ததுடன் எனது பேர்த்தி வலியால் துடித்தார். இந் நிலையில் அந்த விடுதியில் கடமையில் இருந்த தாதியருக்கு இது சம்பந்தமாக தெரியப்படுத்தப்பட்டது. 

ஆனால் அவர்கள் அதைப் பற்றி கவனம் எடுக்கவில்லை. அன்டிபைட்டிக் மருந்து ஏற்றினால் அப்படித்தானம்மா இருக்கும் என்று கூறினார்கள்.

அன்று இரவே பேர்த்தியின் கை கறுப்பாக மாறிக்கொண்டிருந்தது. இதுகுறித்து தாதியர்களிடம் சொன்ன போதும் அவர்கள் எந்த விதமான கவனமும் எடுக்கவில்லை. அதனை அடுத்து அடுத்த நாள் காலை வைத்தியர்கள் வந்த போது இது தொடர்பாக வைத்தியர்களுக்கு கூறப்பட்டது.

இந்நிலையில் அன்டிபைட்டிக் மருந்து கை முழுவதும் பரவி உள்ளதாகவும் அதனால் கையில் உள்ள நரம்புகள் முழுமையாக செயலிழந்து விட்டதாகவும் வைத்தியர் கூறினார். 

பின்னர் அவசர மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு குழந்தை மாற்றப்பட்டது. அவர்கள் அந்த நரம்பினை வெட்டி சத்திர சிகிச்சை செய்வதாக கூறி எங்களிடம் கையொப்பம் வாங்கினார்கள். 

சரித்திர சிகிச்சை செய்த பின்னர் குழந்தையை விடுதிக்கு அழைத்து வந்தனர். ஆனால் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை.

அடுத்த நாளும் மீண்டும் சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என அழைத்துச் சென்றனர். அதற்குப் பின்னரும் எந்த முன்னேற்றமும் இல்லை. 

மீண்டும் அடுத்த நாளும் சத்திரசிகிச்சை செய்யவேண்டும் எனக்கூறி தியேட்டருக்கு அழைத்துச் சென்றனர். சத்திரசிகிச்சைக்கு பின்னர் தான் எமக்கு தெரியும் கை அகற்றப்பட்ட விடயம்.

கிருமி கைகளுக்கு மேலே வரை சென்றால் முழு கையையும் அகற்ற வேண்டி வரும். எனவே மணிக்கட்டு வரை கையை அகற்றியுள்ளோம் என கூறப்பட்டது.

 ஆனால் கையை அகற்றுவதற்கு முதல் எங்களுக்கு முழுமையாக எதுவும் சொல்லப்படவில்லை. தற்போதுவரை குழந்தை அவசரசிகிச்சைப் பிரிவில் தான் உள்ளது.

வைத்தியசாலையில் உள்ள உயர் அதிகாரிகள் வரை நாங்கள் அறிவித்திருக்கின்றோம். ஆனால் இதுவரை எமக்கு எந்த விதமான தீர்வும் சொல்லப்படவில்லை.

வைத்தியசாலையில் தாதியர்களின் அசமந்த போக்கு காரணமாக, அவர்கள் தமது வேலையில் சரியாக ஈடுபடாமையினால் எனது பேர்த்தியின் கை அகற்றப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/163843

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:
 
 
அன்று இரவே பேர்த்தியின் கை கறுப்பாக மாறிக்கொண்டிருந்தது. இதுகுறித்து தாதியர்களிடம் சொன்ன போதும் அவர்கள் எந்த விதமான கவனமும் எடுக்கவில்லை. அதனை அடுத்து அடுத்த நாள் காலை வைத்தியர்கள் வந்த போது இது தொடர்பாக வைத்தியர்களுக்கு கூறப்பட்டது.

https://www.virakesari.lk/article/163843

கறுப்பாக மாறியிருக்கிறது என்றால் gangrene நிலை! இதைக் கூடக் கண்டுபிடிக்க முடியாமல் எப்படி தாதியாக வேலை செய்கிறார்கள், அதுவும் அரச மருத்துவ மனையில்? இப்படி gangrene ஏற்படுத்தும் அன்ரிபையோரிக் மருந்து என்ன என்று யாராவது அறிய முற்பட்டிருக்கின்றனரா?

நான் நினைக்கிறேன், இது அன்ரிபையோரிக்கினால் ஏற்பட்டதல்ல, கதீற்றரைப் போட்ட போது தோலை சுத்தம் செய்யாமல் Staph aureus போன்ற ஏதோ கிருமியை உள்ளே அனுப்பி விட்டார்கள் அல்லது ஏற்றிய மருந்தில் கிருமி இருந்திருக்கிறது. வெளி மாவட்ட மருத்துவ மனையொன்றினூடாக இதை விசாரிப்பது உண்மையை வெளிப்படுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பொறுப்பில்லாமல் நடப்பவர்களை என்ன செய்வது?? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில். சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்; நீதி கோரி நிற்கும் பெற்றோர்

யாழில். சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்; நீதி கோரி நிற்கும் பெற்றோர்

யாழ். போதனா வைத்தியசாலையில், நேற்றைய தினம் மருத்துவத் தவறினால்  8 வயதுச்  சிறுமியொருவரின்  இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்   பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்  இச்சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி வைத்தியசாலை பணிப்பாளருக்கு  கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

அக்கடிதத்தின் பிரதிகளை வடமாகாண ஆளுநர் , மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் , வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் , இலங்கை மருத்துவ சங்கம் , யாழ்.மாவட்ட செயலர் , தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை , சுகாதார அமைச்சு, பெண்கள், சிறுவர் விவகார அமைச்சு ஆகிய தரப்புக்களுக்கும் அவர்கள் அனுப்பியுள்ளனர்.

குறித்த கடிதத்தில் ” எமது மகளின் இந்நிலைக்கு 12ஆம் விடுதியின் தாதிய உத்தியோகத்தர்களும், வைத்தியர்களும், வைத்திய நிபுணரும் வைத்தியசாலை நிர்வாகமுமே காரணமாகும்.

எனவே எமது மகளுக்கு நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக குறித்த தாதிய உத்தியோகத்தரை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும், குறித்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், விடுதிக்குப் பொறுப்பான வைத்திய சிகிச்சை நிபுணர் அனைவருக்கும் எதிராக உரிய விசாரணைக்கு உத்தரவிடப்படுவதுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

அத்துடன் என் பிள்ளைக்கு ஏற்பட்ட உடல் உளரீதியான மீள முடியாத தாக்கத்திற்காகவும் எமக்கும் எமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட மீள முடியாத தாக்கத்திற்காகவும் தங்களிடமிருந்து நீதியானவிசாரணையையும் நியாயமான தீர்ப்பையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

விசாரணை முடிவில் குறித்த சம்பவத்துக்கான (கை அகற்றப்பட்டதற்கான) சரியான மருத்துவ காரணத்தையும் எழுத்து மூலம் அறியத்தர வேண்டும் எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான மருத்துவ நிராகரிப்புக்களினால் உயிர் இழப்புக்கள் அவய இழப்புக்கள் ஏற்படா வண்ணம் எங்களுடைய சமூகத்தை பாதுகாக்கும்படி பாதிக்கப்பட்ட எங்களது குழந்தையின் சார்பில் வேண்டி நிற்கின்றோம்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1348330

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடைய அனைவரையும் பொதுவெளியில் பகிரங்கப்படுத்த வேண்டும் - முன்னாள் திடீர் மரண விசாரணை அதிகாரி

06 SEP, 2023 | 05:35 PM
image
 

(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 8 வயது சிறுமியினது கையின் ஒரு பகுதி அகற்றப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பொதுவெளியில் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதுடன் இதற்கு வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர் சத்திய மூர்த்தியே பொறுப்பேற்க வேண்டும் எனவும் யாழ். போதனா வைத்தியசாலையின் முன்னாள் திடீர் மரண விசாரணை அதிகாரி முத்துக்குமாரு உதயஸ்ரீ தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அவர் நடத்திய  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 8 வயது சிறுமி ஒருவரின் கையானது உரிய முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்படாமையினால் அகற்றப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் மிகுந்த மன வேதனையையும் கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

download.jpg

குறித்த சிறுமி படிப்பிலும் விளையாட்டிலும் திறமையானவராக விளங்கியதுடன் பரதநாட்டியத்திலும் திறமை உள்ளவராக காணப்பட்டார். 

இந்த சிறுமியின் கை அகற்றப்பட்டமையினால் அவரின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த சிறுமி வாழ்க்கை பூராகவும் பாரிய துன்பத்துக்கு ஆளாகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதற்கு முழு காரணமான சம்பந்தப்பட்ட தாதியர்கள், வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும். 

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் பெயர் விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு செய்தால்தான் இனிமேலும் இத்தகைய தவறுகள் நிகழாமல் இருக்கும். 

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி வடக்கு மாகாண சுகாதார சேவைகளின் பணிப்பாளராகவும் விளங்குகிறார். 

இவர் ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய விரும்புகிறார். ஒரு போதனா வைத்தியசாலையில் நிகழ்ந்த இந்த சம்பவத்துக்கு பொறுப்புக்கூற வேண்டியவர் இவரே. மாகாணத்தில் ஒரு தவறு நடந்தாலும் அதற்கும் மாகாண ரீதியில் பொறுப்புக்கூற வேண்டியவர் சத்தியமூர்த்தியே ஆகும். 

ஆனால், அண்மைக்காலங்களாக வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவில் காணப்படும் அரச வைத்தியசாலைகளில் நடக்கும் தவறுகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 

அண்மையில் கிளிநொச்சியில் பெண் ஒருவரின் கர்ப்பப்பை அகற்றப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் சத்தியமூர்த்தியின் கவனத்துக்கு கொண்டு வந்தபோது, அது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என அவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், அவர் இந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர்களை நியாயப்படுத்தும் வகையில் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்துக்களையும் தெரிவித்திருந்தார். இவ்வாறானதொரு நிலையில் மக்கள் இவரிடம் எவ்வாறு நியாயத்தை பெற்றுக்கொள்ளமுடியும். 

அரச நிறுவனம் ஒன்றில் தொடர்ச்சியாக ஒருவர் பணியாற்ற முடியாது. ஆனால், இவர் தற்போது தொடர்ச்சியாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றி வருகிறார். 

இவருடைய காலத்திலேயே அதிகளவிலான முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. மாகாணத்திலும் மாவட்டத்திலும் தகுதியான பல வைத்தியர்கள் இருக்கின்றபோதும் தொடர்ச்சியாக இவர் இந்த பதவியில் இருந்து வருகிறார். இதனால் ஏனையோர் தகுதி இருந்தும் இந்த பதவிக்கு வரமுடியாத நிலை காணப்படுகிறது என்றார்.

https://www.virakesari.lk/article/163973

  • கருத்துக்கள உறவுகள்

பல தவறுகள் செய்திகளில் வராமலே நடந்திருக்கின்றன (சூலகத்தை மாற்றி அகற்றியமை, பென்சிலின் ஒவ்வாமை இருந்தவருக்கு பெனிசிலின் ஏற்றியமை, பாம்பு கடித்தவரை ஒட்சிசன் வழங்காமல் சாதாரண அம்புலன்சில் அனுப்பி வைத்தமை..என நான் அறிந்தவை சில).

மருத்துவ சேவைக்கு, இலங்கையில் ஒரு ஆகக் குறைந்த தராதரம் (minimum standard of care) என்ற வரைவிலக்கணம் கொண்டு வரப்பட வேண்டும். அந்த தராதரத்தைப் பேணா விட்டால் நடவடிக்கை எடுக்க அமைச்சுக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும்.

 "யாழ் மருத்துவமனை பணிப்பாளர்" சத்தியமூர்த்திக்கு, "மாகாணப் பணிப்பாளரான" சத்திய மூர்த்தியே பொஸ் என்றால் என்ன கூத்தென்று எனக்குப் புரியவில்லை😂! அவ்வளவுக்கு தகுதியான சீனியர் மருத்துவர்கள் இல்லையாமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/9/2023 at 20:32, nunavilan said:

இப்படி பொறுப்பில்லாமல் நடப்பவர்களை என்ன செய்வது?? 

இலங்கையில் மருத்துவ தாதிமார்கள் மிக மிக மோசமானவர்கள்.ஏதோ பெரிய வைத்தியர் மாதிரி நடந்து கொள்வார்கள். பல இடங்களில் மனிதநேயம் இல்லாதவர்கள். கர்ப்பிணிகள் விடயத்தில் கூட மிக மோசமாக திட்டுவார்கள். இதை நான் நேரிலேயே கண்டிருக்கின்றேன்.

என்ன ஒன்று இப்படியான வேலைகளுக்கு அதிகம் பேர் முன்வராததால்  தங்கள் கிராக்கியை காட்டுகின்றார்கள்.

ஜேர்மனியில் கூட மருத்துவ தாதிகளுக்கு பெருந்தட்டுப்பாடு. பிலிப்பைன்ஸ்சில் இருந்து வருகின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

பல தவறுகள் செய்திகளில் வராமலே நடந்திருக்கின்றன (சூலகத்தை மாற்றி அகற்றியமை, பென்சிலின் ஒவ்வாமை இருந்தவருக்கு பெனிசிலின் ஏற்றியமை, பாம்பு கடித்தவரை ஒட்சிசன் வழங்காமல் சாதாரண அம்புலன்சில் அனுப்பி வைத்தமை..என நான் அறிந்தவை சில).

மருத்துவ சேவைக்கு, இலங்கையில் ஒரு ஆகக் குறைந்த தராதரம் (minimum standard of care) என்ற வரைவிலக்கணம் கொண்டு வரப்பட வேண்டும். அந்த தராதரத்தைப் பேணா விட்டால் நடவடிக்கை எடுக்க அமைச்சுக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும்.

 "யாழ் மருத்துவமனை பணிப்பாளர்" சத்தியமூர்த்திக்கு, "மாகாணப் பணிப்பாளரான" சத்திய மூர்த்தியே பொஸ் என்றால் என்ன கூத்தென்று எனக்குப் புரியவில்லை😂! அவ்வளவுக்கு தகுதியான சீனியர் மருத்துவர்கள் இல்லையாமா?

இலங்கையில் ஒரு  தாதியர் குழு ஆர்ட்ஸ் 3 பாடம் இருப்பவர்களை சேர்த்துக்கொண்டது அரசு அவர்கள் விஞ்ஞான அறிவு மருத்துவ அறிவு எந்தளவு இருக்குமென தெரியவில்லை ? 
எனது ஊரில் சாதாரணமாக தற்போது வரைக்கும் நாட்டை விட்டு வெளியேறிய தாதியர் எண்ணிக்கை 20 பேர் வரை இந்த இடங்களை அரசு எப்படி நிரப்பும் ?? இப்படி இலங்கை முழுவதுமாக வெளியேறிய வைத்தியர் தாதியர்களைன் எண்ணிக்கை பல ஆயிரங்களை தாண்டுகிறது  அது மட்டுமல்லாமல் அவர்கள் சம்பளத்துக்கு விதித்த வரி இதனால் பலர் நாட்டை விட்டு செல்வதால் இலங்கையில் பூரண மருத்துவம் கிடைக்கவில்லை 

போன கிழமை மகளுக்கு காய்ச்சல் அடிக்காடி வர போய் இரத்தத்தை கொடுத்து விட்டு மகளை சோதனை செய்தார்கள்  சரி மகளை விட்டு விட்டு வருகிறேன் வயசு  மூண்டரை நிற்க மாட்டார்  என நான் சொல்ல கொஞ்ச நேரம் தான் போதும் நில்லுங்கள் என சொல்லி 4 மணி நேரம் காக்க வைத்தார்கள் மகளோ காய்ச்சல் வேற  சின்ன பிள்ளையை வைத்திருப்பதை நினைத்து ப்பாருங்கள் இதுதான் நிலை வெறுத்துப்போனது 
இப்ப கன சனம் வருத்தம் வந்தாலே போகப்பயப்படுது ஆஸ்பத்திரிக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் – யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம்!

jaffna-news-01.jpg

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சலுக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை ஒன்று அகற்றப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை 9.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பந்தப்பட்ட தாதியை பணி நீக்கம் செய், பணிப்பாளரே விசாரணைகளை மூடி மறைக்காதே உள்ளிட்ட கோஷங்கள் இதன்போது எழுப்பபட்டது.

ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மகஜர் ஒன்றை கையளிப்பதற்கு பொதுமக்களிடமும் கையெழுத்து சேகரிப்பும் இடம்பெற்றுள்ளது.

jaffna-news-02.jpg

https://thinakkural.lk/article/272156

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் – தாதியொருவருக்கு வெளிநாடு செல்ல தடை

jaffna-hospital.jpg

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 வயதான சிறுமியினுடைய, கையின் ஒரு பகுதி சத்திரசிகிச்சை மூலம் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த சந்தர்ப்பத்தில் வைத்தியசாலையில் கடமையில் இருந்த தாதியொருவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

4 நாட்களுக்கு மேலாக நிலவிய காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் – மல்லாகம் – பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி யாழ்ப்பாணம் பேதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது இடது கையின் மணிக்கூட்டுக்கு கீழ் பகுதி சத்திரச் சிகிச்சையின் ஊடாக துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/272243

  • கருத்துக்கள உறவுகள்

"இனி வைசாலினி எப்படி தன் நகங்களுக்கு நிறந்தீட்டுவாள்? இனி அவளால் இருக்கிற ஒருகையால் ஸ்மாட் போனை தாங்கிக்கொண்டு  கைநாட்டு வைப்பதுபோல ஒற்றைப் பெருவிரலால் தான்  அதில் எழுதமுடியும்" 
   
சிறுமி வைசாலினிக்கு நடந்த அநீதி ஒரு சம்பவமல்ல. சரித்திரம். (ஈழ) தமிழர்களின் தரித்திரம்.

பெரும்பாலான தமிழ் வைத்தியர்களும் தாதிகளும் கடமை தவறியவர்களாக, சேவை மனப்பான்மையின்றி அதிகாரவெறியோடு கொடுமைப்படுத்தும் சண்டியர்கள் போல நடந்து கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உண்டு. வைத்தியர்களும் தாதிகளும் இதில் கூட்டுக்களவாணிகள்.

குறிப்பாக தமிழ்ப்பகுதிகளில் தாதிகள் தங்கள் தொழிலுக்கு  சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட சேவைகளை செய்வதில்லை. வலுவற்ற, இயங்கமுடியாத நோயாளிகளுக்கான உணவூட்டுதல், குளிப்பாட்டுதலோ சுத்தஞ்செய்தலோ போன்ற அடிப்படையான கடமைகளை செய்வதில்லை. அது தமது கடமையில்லை என்றும் நோயாளிகளின் உறவினர்களின் கடமையென்ற எழுதாத இல்லாத விதிப்படி இயங்குகிறார்கள். நோயாளியின் இப்படியான அத்தியாவசியமான கடமைகளை செய்யக்கூடிய உறவினர்களோ நண்பர்களோ இல்லாவிடின் நோயாளி தன் பணத்தில் ஒருவரை வாடகைக்கு அமர்த்தவேண்டுமாம். அப்படியான வாடகை பராமரிப்பார்களின் முகவர் நிறுவனங்களின் விபரங்களை தாதிகளே உங்களுக்கு தருவார்கள்.  அதாவது இலவச மருத்துவத்தை வழங்கும் சிறீலங்கா சோசலிசக் குடியரசின் அரசமைப்பு சட்டத்தை மீறி தாதிகளின் கடமைகளையும் சேவைகளையும் தமிழ் வைத்தியர்களும் தாதிகளும் பணத்துக்காக outsourcing செய்திருக்கிறார்கள்.அப்பட்டமான பகல் கொள்ளை.

வாடகைக்கு பராமரிப்பாளரை அமர்த்த வசதியற்ற நோயாளியாயின் அவர் குணமாகாது இறப்பதை இந்த தாதிகளே உறுதிப்படுத்துவார்கள். 

கொரோனா கொடுந்தொற்று காலத்தில் என் நண்பனின் முதியவரான மாமானார் கொடுந்தொற்று என்று சொல்லி  யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சமூக விலக்கல் சட்டமாக இருந்த அக்காலத்தில் சட்டப்படி அவரின் மனைவிகூட அவரைப்பராமரிக்க முடியாது. குறித்த முதிய நோயாளி உணவு உண்ணுவதற்கும் சக்தியின்றிருந்தார். தம்மால் அவர் உணவுண்பதை உறுதிப்படுத்த முடியாது. ஊட்ட முடியாது. நீங்கள் வேணுமென்றால் ஒரு பராமரிப்பாளரை வாடகைக்கு அமர்த்துங்கள் என்று அடம்பிடித்தார்கள் தாதிகள். சமூக விலக்கு இருந்த காலத்தில் தாதியர்,  வைத்தியர் அல்லாத ஒரு பராமரிப்பாளரை அனுமதிப்பது குற்றம். அதையும் மறுத்து, மறந்து, அவருக்கு உணவூட்ட மறுத்தார்கள். ஈற்றில் அவரின் துணிந்த  மனைவி லஞ்சம் கொடுத்து சட்டவிரோதமாக தன் கணவரின் வாட்டுக்கு சென்று உணவூட்டிப் பராமரித்தார். அப்போது காலம் கடந்துவிட்டது. அம்முதிய நோயாளி மோசம் போய்விட்டார். அவர் பெருந்தொற்றால் இறந்தாரா? வயிற்றோட்டத்தால் இறந்தாரா என்பது இன்றுவரையும் யாருக்கும் தெரியாது. அவரை சட்டத்தை மீறிப்பராமரித்த முதிய மனைவிக்கு பெருந்தொற்று வரவில்லை. இன்றும் சாட்சியாக உயிரோடிருக்கிறார். 

வைசாலினியின் குடும்பம் ஓரளவு வசதியானது என்பதால் அவளுக்கு நடந்த அநீதி இன்று சந்திக்கும் சமூகவலைத்தளங்களுக்கும் வந்திருக்கிறது. வைசாலியின் பெற்றோரும் சமூகப் பொறுப்போடு இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல ஒத்துழைப்பதால் அவர்கள் போற்றப்படவேண்டியவர்கள். இனி ஒருபோதும் தன் மகளுக்கு இழந்த கை கிடைக்கப்போவதில்லை என்றாலும் இனி இப்படியொரு சம்பவம் நடக்கக்கூடாது என்ற ஓர்மத்தோடு போராடும் அவள் பெற்றோர் மெச்சத்தக்கவர்கள். 

இப்போது நாம் செய்யவேண்டியவைகள் என்ன? 

இன்னும் ஒரு மாதத்தில் சமூக வலைத்தளங்களில் வைசாலினிக்கு நடந்த அநீதி மறைந்துவிடும். காலந்தாழ்ந்து நீதி வந்தாலும் நாம் தொடர்ந்து போராடவேண்டும். அது வைசாலினிக்கு மட்டுமானதல்ல. அவளது தந்தை தெளிவாகச் சொன்னார். 
" இனி இதுபோல ஒரு அநீதி நடக்கக்கூடாது" 

ஒரு முறையான விரிவான விபரமான நீதி விசாரணை செய்யப்படவேண்டும். 

1. இக்குற்றத்தில் Dr. சரவணபவனினதும் அவரின் தனியார் வைத்தியசாலையினதும் பங்கு. 

2. பின் யாழ் போதனா வைத்தியசாலையினதும் அங்கு Dr. சரவணபவனினதும் குறித்த தாதி ஜனனி ரமேசினதும் பங்கு. இவர்கள் இருவரினதும் கவனயீனமான குற்றங்கள்(Criminal Negligence)

3. இக்குற்றத்தில் யாழ் போதனா வைத்தியசாலையின் பங்கு. பொறுப்பு. 

4. விசாரணையில் குற்றவாளிகளாகக் காணப்படும் வைத்தியர்களினதும் தாதிகளினதும் தொழில் உரிமங்கள் அவசியமானால் ரத்துச்செய்யப்படவேண்டும். 

5. கவனயீனமான குற்றங்கள் செய்தவர்களாகக் தீர்ப்பளிக்கப்படும் வைத்தியர்களும் தாதிகளும் அவர்களது தொழில் உரிமங்கள் ரத்துச்செய்யப்படுவதோடு சிறைத்தண்டனைகளுக்கும் உரித்தானவர்கள். 

6. ஒரு சிறுமியின் கையின் விலை மதிப்பிடமுடியாதது. வரையும் கையாகவோ சிலை வடிக்கும் கையாகவோ வொலிபோல் கையாகவோ வழமான கையாயின் அதின் விலை என்ன? விலைமதிப்பற்றது. வாழ்நாளில் தனியார் மருத்துவராக Dr. சரவணபவன் சேர்த்த சொத்துக்களை விட பலமடஙகு அதிகமானது. Dr.சரவணபவன் குற்றவாளியானால்  குறைந்தது 5 கோடி வைசாலினிக்கு நட்ட ஈடாக செலுத்தவேண்டும்.

7. இறுதிக்குற்றம் நடந்தது ஸ்ரீலங்கா வைத்தியசாலையில் என்பதால் அரசும் பொருத்தமான நட்ட ஈடு வழங்கவேண்டும்.

இனி இப்படியான குற்றங்கள் யாழ்ப்பாணத்திலோ தமிழ்ப்ப் பகுதிகளிலோ நடக்கக்கூடாது என்பதற்காக தன்னார்வ இயக்கங்கள் அமைக்கப்படவேண்டும். போர்க்கால எண்பதுகளின் நடுப்பகுதியில் தமிழ்ப்பகுதிகளில் பிரசைகள் குழு என்ற அமைப்புக்கள் ஆரோக்கியமாக இயங்கின. அதுபோன்ற ஒரு இயக்கம்தான் நமக்கு இப்போ தேவை. உண்மையைச் சொன்னா என்ன? மருத்துவர்களும் தாதிகளும் இப்போ மாபியாக்களைப்போலத்தான் தமிழ்ப்பகுதிகளில் இருக்கிறார்கள். யாழ் போதனா வைத்தியசாலை போன்ற அனைத்து தமிழ்ப்பகுதிகளிலும் மாபியாக்களைப்போல இயங்கும் மருத்துவர்களையும் தாதிகளையும் கேள்விக்குட்படுத்த நமக்கு ஒரு பிரசைகள் குழு தேவை.

"இனியொரு விதி செய்வோம்
அதை எந்நாளும் காப்போம்"
   - பாரதி
#JusticeForVaishali!
 

https://m.facebook.com/story.php?story_fbid=293794869927432&id=100078907622237

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கிருபன் said:

மருத்துவர்களும் தாதிகளும் இப்போ மாபியாக்களைப்போலத்தான் தமிழ்ப்பகுதிகளில் இருக்கிறார்கள். யாழ் போதனா வைத்தியசாலை போன்ற அனைத்து தமிழ்ப்பகுதிகளிலும் மாபியாக்களைப்போல இயங்கும் மருத்துவர்களையும் தாதிகளையும் கேள்விக்குட்படுத்த நமக்கு ஒரு பிரசைகள் குழு தேவை.

விசாரணைகள், நடவடிக்கை அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கிருபன் said:

அப்படியான வாடகை பராமரிப்பார்களின் முகவர் நிறுவனங்களின் விபரங்களை தாதிகளே உங்களுக்கு தருவார்கள்

அவர்களுக்கென்றொரு யூனியனும் இருக்குது பாருங்கோ! அவையள் யாருமில்லாத நோயாளிகளின் உடைமை, உணவுகளை கையாடல் செய்வதுமுண்டு.

 

32 minutes ago, கிருபன் said:

மருத்துவர்களும் தாதிகளும் இப்போ மாபியாக்களைப்போலத்தான் தமிழ்ப்பகுதிகளில் இருக்கிறார்கள்.

நோயாளிகளால் கடவுளாக கையடுத்து கும்பிடப்பட வேண்டியவர்கள், அவர்களின் இயலாமையை தங்களின் வாய்ப்பாக பயன்படுத்துகின்றனர். மகப்பேற்று தாதியர் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பிரயோகிப்பதும், சில குழந்தைகளின் இறப்பிற்கும் காரணமாய் இருந்ததோடு, தம் குழந்தைகளை இழந்த தாய்மாருக்கு அனுதாபம் கூட தெரிவிக்காமல் தங்கள் சேவை நேரத்தில் வம்பளப்பதில் செலவிட்டதையும் கண்டிருக்கிறேன். பணம் ஒன்றே கடவுள். அது இல்லாதவனெல்லாம் பிணம் என்று நினைக்கிறார்கள், நடத்துகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமியின் அகற்றப்பட்ட கையின் பாகம் கொழும்பிற்கு

சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ள யாழ்ப்பாண நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு கையில் பொருத்தப்பட்ட “கானுலா” உரிய முறையில் பொருத்தப்படாததால் , சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் , மத்திய சுகாதார அமைச்சு என்பன விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , சிறுமியின் பெற்றோரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய , பொலிஸார் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து, வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை குறித்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , நீதிமன்றினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரணைகள் முடிவடையவில்லை எனவும் , அதற்கு தமக்கு மேலதிகமாக 10 நாட்கள் தேவை எனவும் மன்றில் தெரிவித்தனர்.

அதனை அடுத்து , துண்டிக்கப்பட்ட கையின் பாகத்தை பொலிஸார் ஊடாக கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டு , அது தொடர்பிலான அறிக்கையை பெற்றுமாறு மன்று உத்தரவிட்டு , வழக்கினை எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைத்தது.
 

http://www.samakalam.com/சிறுமியின்-அகற்றப்பட்ட-க/

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்டமை : அடுத்த வார இறுதிக்குள் முழு அறிக்கை - கெஹலிய 

16 SEP, 2023 | 08:52 PM
image
 

ஆர்.ராம்

யாழ். சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் அடுத்த வார இறுதிக்குள் முழுமையான அறிக்கை தனக்கு கிடைக்கவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமியான சாண்டில்யன் வைசாலியின் இடது கையில் பொருத்தப்பட்டிருந்த மருந்து ஏற்றுவதற்காக பொருத்தப்பட்ட கனூலா காரணமாக ஏற்பட்ட தாக்கத்தால் அவரது கை மணிக்கட்டுக்கு கீழ் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் சுகாதாரத்துறை அமைச்சின் நடவடிக்ககைள் பற்றி வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

சிறுமியின் கை அகற்றப்பட்டமை துரதிர்ஷ்டவசமான நிகழ்வாகும். அந்த விடயம் சம்பந்தமாக வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல தரப்பட்டவர்கள் எனது கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர். 

இதனையடுத்து எனது பணிப்புரையின் பேரில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஊடான விசாரணைகள் உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டிருந்தன. 

இந்த நிலையில் அடுத்த வாரத்துக்குள் அந்த விசாரணைகள் பற்றிய முழுமையான அறிக்கை எனக்கு கிடைக்கவுள்ளது. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/164730

  • கருத்துக்கள உறவுகள்

கை அகற்றப்பட்ட விவகாரம் : மீண்டும் பாடசாலைக்கு சென்ற சிறுமி !

news-06-1.jpg

யாழ். போதனா வைத்தியசாலையில், 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது கற்றலைத் தொடர்வதற்காக இன்றைய தினம் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சிறுமியை வரவேற்றுள்ள பாடசாலை சமூகத்தினர் அவர் கற்றலைத் தொடர்வதற்கு அனைத்துவிதமான உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

https://thinakkural.lk/article/273688

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.