Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூபாலசிங்கம் புத்தகக்கடையின் கதை இது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பூபாலசிங்கம் புத்தகக்கடையின் கதை இது முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் கலாச்சார அடையாளமாக இருந்தது. கவிஞர் நுஃமானால் பாடல்பெற்ற தலம்.
 
ஈழத்துப் புத்தக விற்பனைச் சந்தையின் முக்கிய பாத்திரமாக பூபாலசிங்கம் புத்தகசாலை அமைவதை எவரும் அறிவர். அதன் தாபகர் அமரர் ஆர்.ஆர். பூபாலசிங்கம் அவர்கள் வர்த்தகப் பிரமுகரான குடும்பப் பின்னணியிலோ அதன் செல்வாக்கிலோ வர்த்தகத்துறையைத் தேர்ந்தவரல்ல. 1922 ஜுன் மாதம் 03ஆம் திகதி நயினாதீவில் பிறந்த இவர் இளமையிலேயே தந்தையை இழந்தவர். இளமையின் ஏழ்மையால் பிழைப்புக்காக சிறுவயதிலேயே பத்திரிகைப் பையனானவர். “பூபாலசிங்கம் அவர்கள் சிறுவயதிலிருந்து புத்தகத் தொழிலில் இறங்கி வளம் பல கண்ட சீமான்” என்று அந்நாளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் தன் இரங்கலுரையில் குறிப்பிடுகின்றார். அவர் தொடர்ந்து “பூபாலசிங்கம் புத்தகசாலை தமிழறிஞர் சந்திக்கும் ஒரு அறிவுக் கூடமாகக் காட்சியளிக்கிறது” என்கிறார்.
பேராசிரியர் கா.சிவத்தம்பி தனது இரங்கலுரையில்
“தோழமை நிறைந்த வாழ்க்கையொன்று முடிந்து விட்டது. அந்தரங்க சுத்தியுடன் பழகிக் கொண்டவர்களுக்கு அவர் அன்பின் ஆழம் தெரியும். அந்த நட்புரிமையை அனுபவித்தவன் என்கிற வகையில் நான் அவரது இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாதவனாக இருக்கின்றேன். இங்கு இருக்கும் பொழுது தெரியாது. வல்வெட்டித்துறையிலிருந்து நான் யாழ்ப்பாணத்துக்கு வந்து 751 பஸ்ஸால் இறங்கி 764க்குப் போவதற்கு முன் புத்தகக் கடைக்குள் எட்டிப் பார்க்கும் பொழுதுதான் அந்த வெற்றிடம் எனக்குப் புலப்படப்போகிறது”
என்ற அவரது உணர்வுபூர்வமான வரிகளுள் ஒரு நட்பின் வலி புலப்படுகின்றது. ஆக ஒரு சாதாரண புத்தகப் பையன் தன் விடா முயற்சியால் கற்றோரும் மற்றோரும் நட்புடன் மெச்சி நாடிடும் ஒரு அறிவியல் சாம்ராஜ்ஜியத்தின் மையமாக உருமாற்றம் பெற்ற வரலாறு தான் அமரர் பூபாலசிங்கத்தின் வரலாறு.
 
வறுமை காரணமாகப் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் 1931ம் ஆண்டில் தனது ஒன்பதாவது வயதில் பிறந்த மண்ணான நயினாதீவிலிருந்து யாழ்ப்பாணம் வந்து உறவினர்களின் உதவியால் வ.தம்பித்துரை புத்தகசாலையில் ஒரு ஊழியனாகச் சேர்ந்து பத்திரிகைகளைச் சுமந்து சென்று பஸ்நிலையம், புகையிரதநிலையம், போன்ற சனக்கூட்டம் நிறைந்த இடங்களில் விற்பனை செய்வது இவரது ஆரம்பகால வேலை. பத்திரிகை களை விற்பனை செய்வதுடன் அவகாசம் கிடைக்கும்போதெல்லாம் தான் விற்பனை செய்யும் பத்திரிகைகளை வாசித்து அதன் மூலம் அந்த இளம் வயதிலேயே நாட்டு நடப்புகளை நன்கு தெரிந்துவைத்திருந்தார். தமிழகத்தின் சிலம்புச்செல்வர் ம.பொ.சி (மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்) அவர்கள் சிறுவயதில் ஏழ்மை காரணமாக 3ம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை முடித்து நெசவாலையில் குழந்தைத் தொழிலாளியாகச் சேர்ந்து பின்னர் அச்சகமொன்றில் அச்சுக்கோப்பாளராகப் பணியேற்ற வேளையில் தான் வாசிப்பை நேசித்தாராம். பின்னாளில் சென்னை அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் அவருக்கு கலாநிதிப் பட்டங்களை வழங்கின. தமிழகத்தின் ம.பொ.சி.யின் வரலாறு பல இடங்களில் அமரர் பூபாலசிங்கத்தின் வரலாற்றுடன் பொருந்துகின்றது.
 
அமரர் பூபாலசிங்கத்திற்கு ஒரு அரசியல் வரலாறுமுண்டு. இலங்கையின் முதலாவது இடதுசாரிக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி 1935 டிசம்பர் 18ந் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஏற்கெனவே புரட்சிகர சிந்தனைகளைக் கொண்டிருந்த திரு. பூபாலசிங்கம் அவர்கள் லங்கா சமசமாஜக் கட்சியைப் பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் அறிந்திருந்தார். இக்காலத்தில் லங்கா சமசமாஜக் கட்சியின் வடபுல பிரமுகராகவிருந்த சட்டத்தரணி சிற்றம்பலத்தின் தொடர்பு இவருக்கு ஏற்பட்டது. லங்கா சமசமாஜக் கட்சியின் பத்திரிகையான சமதர்மம் பத்திரிகைகளையும் அட்வகேற் சிற்றம்பலத் திடமிருந்து பெற்று விற்கத் தொடங்கினார். அப்பத்திரிகை விற்பனையைத் தொழிலாகக் கருதாமல் பணியாகச் செய்தார்.
பதினாறாவது வயதில் – 1938இல் மார்க்சிய சித்தாந்தத்தால் கவரப்பட்டு பின்னர் இருபத்தொரு வயதில் – 1950இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகிக் கட்சியை வடபுலத்தில் ஸ்தாபிப்பது முதல் வடக்கில் அதன் படிப்படியான வளர்ச்சியிலும், நெருக்கடியான காலகட்டங்களில் கட்சியைப் பாதுகாப்பதிலும் மகத்தான பங்களிப்பினை வழங்கியவராக இவர் சக தோழர்களால் விதந்து போற்றப்பட்டுள்ளார். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளையை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தவர்களுள் தோழர் ஆர்.ஆர்.பூபாலசிங்கமும் ஒருவர். மு.கார்த்திகேசன், எம்.சி.சுப்பிரமணியம், இராமசாமி ஐயர், சு.வே.சீனிவாசகம், நீர்வேலி கந்தையா ஆகிய தோழர்களுடன் தோழர் ஆர்.ஆர்.பூபாலசிங்கமும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தாலேயே யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வலுவான ஒரு அடித்தளத்தைப் பெறக்கூடியதாக இருந்தது என்று தனது கட்டுரையில் சிவா சுப்பிரமணியம் அவர்கள் குறிப்பிடும் வரிகள் முக்கியமானவை.
 
அமரர் பூபாலசிங்கமும் மற்றைய தோழர்களும் யாழ்ப்பாணத்தில் கட்சிக் கிளையை ஆரம்பிப்பதற்காகச் செயற்பட்ட காலம் நாட்டில் மார்க்சிசக் கருத்துக்கள் பரவுவதைத் தடுப்பதற்கு ஆட்சியாளர்கள் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்ட காலப்பகுதியாகும். அப்போது போஸ்டர் களை ஒட்டுதல், கட்சிப் பிரசுரங்களை விநியோகித்தல் போன்ற செயற்பாடு களுக்குத் தடையுத்தரவு அமுலில் இருந்தது. தோழர்கள் கார்த்திகேசன், எம்.சி.சுப்பிரமணியம், இராமசாமி ஐயர் ஆகியோருடன் இளைஞராகவிருந்த பூபாலசிங்கம் அவர்களும் போஸ்டர்களை ஒட்டுவதில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டது முண்டு.
 
பூபாலசிங்கம் அவர்கள் சமசமாஜக் கட்சியின் வாலிபர் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றிருந்த வேளையில் கட்சியின் பிரச்சார ஏடான சமதர்மம் பத்திரிகையை அரசாங்கம் தடைசெய்திருந்த நிலையிலும் அதன் பிரதிகளை விற்பதை நிறுத்தவில்லை. இக்காலத்தில் ஒருநாள் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் பூபாலசிங்கம் சமதர்மம் பத்திரிகை விற்றுக் கொண்டிருப்பதைக் கண்ட ஏ.எஸ்.பி. சிட்னி டீ சொய்சா அப்பத்திரிகைகளைப் பறிமுதல் செய்ததோடு இவருக்குச் சவுக்கால் அடித்தார். அதன் தழும்பு அவரது மறைவு வரை அவரது உடலில் விழுப்புண்ணாக இருந்துள்ளது.
 
கட்சிப் பணியுடன் நிற்காமல் சமூக சீர்திருத்த விடயங்களிலும் அவரது பங்களிப்பு அதிகளவில் இருந்தது. நயினாதீவு அபிவிருத்திச்சபை தீவுப்பகுதி மோட்டார்சேவை, அமுதசுரபி அன்னதான சபை, ஆகிய சமூக நலசேவைத் திட்டங்களின் உருவாக்கத்தில் இவரது பங்களிப்பு இருந்துள்ளது. தான் சார்ந்த கட்சிசார்பாக தாழ்த்தப்பட்டோரின் இந்து ஆலயப் பிரவேச நடவடிக்கைகளில் ஈடுபட்ட இவர், நயினாதீவு பிடாரி கோவில் வேள்வியை நிறுத்துவதில் உண்ணாவிரதமும் சத்தியாக்கிரகமும் மேற்கொண்டு இறுதியில் வெற்றிகண்டார். நயினாதீவு மணிபல்லவ தேவி பொது நிலைக் கழகத்தின் ஸ்தாபகர்களில் ஆர்.ஆர்.பியும் ஒருவர். அக்கழகமே பிற்காலத்தில் அமுதசுரபிஅன்னதான சபையாகியது. இராமேஸ்வர ஆலயத்திற்கு இலங்கையில் உள்ள சொத்துக்களுக்கு அறங்காவலராகவும் இவர் நியமிக்கப் பெற்றிருந்தார்.
 
அமரர் ஆர்.ஆர். பூபாலசிங்கம் அரசியலில் காட்டிய ஈடுபாட்டுக்கு நிகராகவே அவரது ஈழத்துப் புத்தகச் சந்தை ஈடுபாடும் காணப்பட்டது. பத்திரிகை, புத்தகச் சந்தையில் நேரடியாக ஈடுபடும் நோக்கில் தனது 23ஆவது வயதில் 1945ஆம் ஆண்டிலே அவர் பூபாலசிங்கம் புத்தகசாலையை நிறுவினார். அது பின்னாளில் மூன்று தடவை தீக்கிரையானதும், அவரது ஐந்து கடைகள் எரிந்து சாம்பலாகியதும் கசப்பான வரலாறு. யாழ்ப்பாண நூலகம் 1981 ஜுன் 1ம் திகதி எரியூட்டப்பட்ட அன்று அதே அரச கைக்கூலிகளால் பூபாலசிங்கம் புத்தகசாலையும் எரியூட்டப்பட்டதும் வரலாற்று நிகழ்வாயிற்று.
 
பூபாலசிங்கம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் தனது புத்தகச்சந்தையை விரிவாக்கிய முறை சிந்திக்கத்தக்கது. பெரும்பாலான ஈழத்து பொது நூலகர்கள் இன்று செய்துகொண்டிருப்பதைப் போன்று நாடி வருவோருக்குக் கேட்ட பத்திரிகை, புத்தகத்தை -இருந்தால் கொடுப்பதும் இல்லாவிட்டால் கைவிரித்துவிடுவதும் அல்ல அவரது முறை. இன்று நவீன ஐரோப்பிய புத்தக நிறுவனங்கள் பரவலாகக் கையாளும் வியாபார தந்திரத்தை அந்நாளிலேயே பரிசோதித்து வெற்றிகண்டவர் அவர்.
 
வி.ரி.இளங்கோவன் அமரர் பூபாலசிங்கம் பற்றிய தனது கட்டுரையில் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார். ஒரு தடவை இலவசமாக வாசிக்க வரும் அன்றைய எழுத்தாளர்களை ஏளனமாக நகைத்த தனது ஊழியரிடம்; ‘தம்பியவை அவர்கள் இலக்கியவாதிகள். எங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள். நம்பிக்கையானவர்கள், மரியாதைக்குரியவர்கள். அவர்கள் எதை எடுத்து வாசித்தாலும் ஒன்றும் சொல்லாமல் பண்பாக நடந்து கொள்ளுங்கள்’ என்று சொன்னாராம்.
 
“பாலர் முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர் வரை அங்காடி வியாபாரி முதல் அலுத்துப்போன தொழிலாளிவரை கேள்வி அறிவாலும், அவருடைய இலவச வாசிப்பு வசதியாலும் உலக, உள்ளுர் செய்திகளையும் அரசியல் விடயங்களையும் அசை போடுவார்கள். சிலவேளைகளில் அவருடைய புத்தகசாலைகளின் தாவாரங்கள் அரசியல் மேடைகளாகவும், இலக்கிய மன்றங்களாகவும், பட்டி மன்றங்களாகவும், கவியரங்கங்களாகவும் மாறும். இதிலே வருவோர் போவோர் எல்லோருமே பங்குபற்றுவர்“
என்று தனது கட்டுரையில் நயினாதீவு மகாவித்தியாலய அதிபராயிருந்த நா.க.சண்முகநாத பிள்ளை குறிப்பிடுவதையும் இங்கு கவனத்திற்கெடுக்கலாம்.
 
ஒரு சமூகத்தில் வாசிப்புக் கலாச்சாரத்தை ஏற்படுத்தாது போனால் அச்சமூகத்தினரிடையே புத்தக வியாபாரம் செய்யமுடியுமா? இதை அமரர் பூபாலசிங்கம் தெளிவாகவே புரிந்துகொண்டிருந்தார். வாசிப்பின்பால் ஆர்வத்தை ஏற்படுத்துவதில் அவர் கைக்கொண்ட யுக்தியே இலவச வாசிப்பு வசதி. இன்று லண்டனில் பிரபல்யமான வோட்டர்ஸ்டோன் புத்தக நிலையத்தில் வீட்டு வரவேற்பறையில் இருப்பதுபோன்ற வசதியான இருக்கைகளை வைத்து வாசகர்களைக் கவர்ந்திழுப்பதற்காக ஏராளமாகச் செலவிடுகிறார்கள். மணிக்கணக்கில் இருந்து வாசிப்பவர்கள்- பின்னர் தேர்ந்த நூல்களை வாங்கிச் செல்கிறார்கள்.
 
எமது இளஞ்சிறார்களிடையே வாசிப்புக் கலாச்சாரம் அருகி வருவதாகக் குற்றஞ்சுமத்தும் கல்வியியலாளர்கள் அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களில் எத்தனை வீதத்தினர் தத்தமது பாடவிதானம் தவிர்ந்த பொது வாசிப்பில் ஈடுபட்டுள்ளார்கள் என்ற கேள்வியை ரகசியமாகக் கேட்டு வைத்தால் அருகிவரும் வாசிப்புக் கலாச்சாரத்தின் சூட்சுமம் புரிந்துவிடும்.
 
எனது முதலாவது நூலகப்பணி சுன்னாகம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் தான் ஆரம்பமானது. தென்னிந்திய ஜனரஞ்சக வார இதழ்கள் அனைத்தையும் இணுவிலில் உள்ள ஒரு சிறிய புத்தகக்கடையில் தான் ஓடருக்குப் பெற்றுக்கொள்வது வழக்கம். வாராந்தம் தொடர்கதைகளை வாசிக்கும் ஆசிரியர் மாணவர்களுக்கு (குறிப்பாக ஆசிரியர்களுக்கு) அச்சஞ்சிகைகளை ஒழுங்காகப் பெற்றுக்கொடுப்பது நூலகரின் கடமைகளுள் ஒன்று. ஒரு தடவை ஏதோ காரணத்தால் குமுதம் இதழ் ஒன்று தவறிவிட்டது. அந்த இணுவில் புத்தகக் கடைக்காரர் – அது அவரது தவறாக இருந்தும்கூட- கையை விரித்துவிட்டார். நான் அந்த வார இறுதியில் பூபாலசிங்கம் புத்தக சாலையில்- அவரது மகன் ராஜனுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். (அமரர் பூபாலசிங்கத்தின் புத்திரர்களான ஸ்ரீதர்சிங்கும், ராஜனும் நூலகர் என்ற தொழில்துறைக்கு அப்பால் எனது நட்புக்குரியவர்கள்.) தற்செயலாக தவறவிடப்பட்ட சஞ்சிகை பற்றிப் பிரஸ்தாபித்தபோது தந்தையின் ஆணையின்படி பழைய புத்தகக் கட்டுக்குள்ளிருந்து நான் கேட்ட குமுதம் பிரதியை எடுத்துத் தந்தார். அதற்கான பணத்தைக்கூட வாங்க மறுத்துவிட்டார். ஒன்றரை மாத இடைவெளியின் பின்னர் இராமநாதன் கல்லூரிக்கு தவறவிடப்பட்ட குமுதம் பிரதி சென்றடைந்தது.
 
அமரர் பூபாலசிங்கம் தனது புத்தக வியாபாரத்தை வாடிக்கையாளரின் நம்பிக்கைக்குரிய வகையில் நடத்துவதில் வெற்றிகண்டவர். அவரைச்சுற்றி எப்போதும் ஒரு எழுத்தாளர் கூட்டமோ, அரசியல்வாதிகளின் கூட்டமோ இருந்துகொண்டே இருக்கும். அவரது இருக்கையில் தனியனாக அவரைச் சந்தித்த வாய்ப்புகளே குறைவு எனலாம். நூலகங்களுக்கான புத்தகத் தேர்வுக்காக அவரது இல்லத்துக்கு அடிக்கடி செல்லநேர்வதுண்டு. எப்போதும் வீடு முழுவதும் புத்தகச் சிதறலாகவே காணப்படும். முழுக்குடும்பமுமே எனது நூல்தேர்வில் பங்கேற்கும் இனிய சந்தர்ப்பங்களும் இடையிடையே இருக்கும். வாழ்வின் இனிய நினைவுகள் அவை. அன்று என்னை ஆட்கொண்ட அந்த நட்பும் மதிப்புமே என்னை அமரரின் முப்பதாண்டுகால முடிவில் இக்கட்டுரையை முப்பதாண்டுகளுக்கு முந்தைய அதே உணர்வுடன் எழுதத் தூண்டியதெனலாம்.
- என்.செல்வராஜா
 
#பிற்குறிப்பு: தந்தையார் பூபாலசிங்கத்தால் சிறுகச்சிறுக கட்டிச்சமைத்த இந்த நிறுவனத்தை தனயர்கள் சரியாக சமுகப்பொறுப்புடன் இயக்குவதில்லை என்ற குற்றச்சாட்டு இப்போது பல நகரங்களில் பல கிளைகளைக்கொண்ட இப்புத்தகக்கடைகள் மீது உண்டு. ஊழியர்களுக்கு சரியாக புத்தகங்களைப்பற்றி பயிற்சியளிப்பதில்லை என்று பலர் குற்றஞ் சாட்டுகிறார்கள். காத்திரமான எழுத்தாளர்கள் மற்றும் ஈழத்து புத்தகங்கள் என்பவற்றின் பெயர் தெரியாதஊழியர்கள் புத்தகம் வாங்க வருபவர்களை சரியாக கவனிப்பதில்லை, உதவுவதில்லை என்கிறார்கள்.
 
"சாரு நிவேதிதாவின் புத்தகம் இருக்கிறதா"
என்று கேட்ட வாடிக்கையாளருக்கு ஊழியப்பெண்
"அந்தம்மாவின் புத்தகம் எங்களிடமில்லை"
என்று பதிலளித்திருக்கிறார்.
 
கவிஞர் நுஃமானின் கவிதை👇
நேற்று மாலை
நாங்கள் இங்கிருந்தோம்.
சனங்கள் நிறைந்த யாழ்நகர்த் தெருவில்
வாகன நெரிசலில்
சைக்கிளை நாங்கள் தள்ளிச் சென்றோம்.
பூபால சிங்கம் புத்தகநிலைய
முன்றலில் நின்றோம்.
பத்திகைகளைப் புரட்டிப் பார்த்தோம்.
பஸ் நிலையத்தில் மக்கள் நெரிசலைப்
பார்த்தவாறிருந்தோம்.
பலவித முகங்கள்
பலவித நிறங்கள்
வந்தும் சென்றும்
ஏறியும் இறங்கியும்
அகல்வதைக் கண்டோம்.
சந்தைவரையும் நடந்து சென்றோம்.
திருவள்ளுவர் சிலையைக் கடந்து
தபாற்கந்தோர்ச் சந்தியில் ஏறி
பண்ணை வெளியில் காற்று வாங்கினோம்.
'றீகலின்' அருகே
பெட்டிக் கடையில்
தேனீர் அருந்தி - சிகரட் புகைத்தோம்.
ஜ‌க் லண்டனின்
வனத்தின் அழைப்பு'
திரைப்படம் பார்த்தோம்.
தலைமுடி கலைந்து பறக்கும் காற்றில்
சைக்கிளில் ஏறி
வீடு திரும்பினோம்.
இன்று காலை
இப்படி விடிந்தது.
நாங்கள் நடந்த நகரத் தெருக்களில்
காக்கி உடையில் துவக்குகள் திரிந்தன.
குண்டுகள் பொழிந்தன:
உடலைத் துளைத்து
உயிரைக் குடித்தன.
ப‌ஸ் நிலையம் மரணித் திருந்தது.
மனித வாடையை நகரம் இழந்தது.
கடைகள் எரிந்து புகைந்து கிடந்தன.
குண்டு விழுந்த கட்டடம் போல
பழைய சந்தை இடிந்து கிடந்தது
வீதிகள் தோறும்
டயர்கள் எரிந்து காந்து கிடந்தன.
இவ்வாறாக
இன்றைய வாழ்வை
நாங்கள் இழந்தோம்.
இன்றைய மாலையை
நாங்கள் இழந்தோம்.
-- எம்.ஏ.நுஃமான் (1977)
May be an image of 7 people and text
 
 
 

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

பூபாலசிங்கம் புத்தக சாலை யாழ்ப்பாணத்தில் வாசிப்பார்வலர்களுக்கு பரிச்சயமான ஒரு அடையாள இடம் - landmark. பாடசாலையில் பரிசளிப்பு விழாவில் சில பரிசுகள் தரும் போது பூபாலசிங்கம் புத்தகசாலையில் செல்லுபடியாகும் பண வவுச்சர்கள் தருவார்கள் (தற்போதைய gift cards போல). இதை பூபாலசிங்கம் புத்தகசாலையில் கொடுத்து டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் பல நூல்களை வாங்கி, வாசித்து, சேமித்து வைத்திருந்தேன், ரிவிரச இடம்பெயர்வின் போது அம்மாவிடம் திட்டு வாங்கியபடி வன்னிக்கு எடுத்து வந்த சேமிப்பை பின்னர் ஜெயசிக்குறு இடம்பெயர்வின்  போது அப்படியே விட்டு விட்டு உயிரைக் கையில் பிடித்தபடி குடும்பத்தினர் இடம்பெயர்ந்தனர்.

பிற்குறிப்பில் சொல்லப் பட்ட தற்போதைய பூபாலசிங்கத்தின் நிலை, கொழும்பு கொட்டேனாவில் இருக்கும் கடையைப் பொறுத்த வரை உண்மையாக இருந்தது. முத்துலிங்கம், பாலகுமாரன் புத்தகங்கள் இருக்கின்றனவா எனக் கேட்டேன். பாலகுமாரன் தெரிந்திருந்தது, முத்துலிங்கத்தைத் தெரியவில்லை  கடையில் முன்னால் நின்ற இளம் பெண்ணுக்கு!  

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்+

1981ம் ஆண்டு யாழ் நூலகத்தை சிங்களக் காடையர் அழிச்ச போது இதையும் சேர்த்து எரிச்சதாய் ஒரு ஞாபகம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

மக்மிலன் புத்தக கடையும் ஞாபகத்தில் வந்து போகிறது.

பின்னேரப்பேப்பருக்கு அடிபட்டு நின்று வாங்கிப்போய் கொடுப்பது உறவினர் மத்தியில் ஒரு கதாநாயக விம்பத்தை தோற்றுவித்து இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வீட்டில் மு வரதராசன் முதல் பி டி சாமி வரை புத்தகங்கள் குவிந்து கிடக்கும். 

ஆனால் அந்த வயதில் ரத்னபாலா, பாலமித்திரா, அம்புலிமாமா, இராணி காமிக்ஸ், உள்ளூர் தயாரிப்பான அருச்சுனா இவைதான் விருப்பத்தெரிவுகள்.

வீட்டில் உள்ளதை வாசித்து முடித்து, பள்ளியில் கடன் வாங்கி வாசித்து முடிந்து, உள்ளூர் நூலகத்தையும் துலாவி முடித்து….அடுத்த முறை வாசலில் வைத்தே நூலகர் “தம்பி புதுசா ஒண்டும் வரேல்ல்ல” என்று சொல்லும் நிலை வந்த பின்…  

இனி என்ன செய்யலாம்? என்று யோசித்து கொண்டிருக்கும் போதுதான் அப்பா டவுனுக்கு போகிறார் என்ற செய்தி வரும்.

எப்படியோ சைக்கிள் பூபாலசிங்கம் போய்த்தான் வரும் என்ற நம்பிக்கையில் பாரில் ஏறி குந்தி விடுவேன்.

அங்கே போனால் டியூப் லைட் வெளிச்சத்தில் புது புது புத்தகமாக மினுங்கும். ஒவ்வொரு புத்தகத்தை எடுக்கும் போதும் ஒரு “புது மணம்” வீசும்.

கிட்டதட்ட மாயாஜால உலகில் சிக்குண்ட   நிலைதான்.

ஒருவழியா கெஞ்சி கூத்தாடி, ஒரு நாலு புத்தகத்தை வாங்கி கொண்டு வீடு வந்தால்….

அடுத்த ஒரு மாதம் பள்ளியிலும், டியூசனிலும், கிரிகெட் விளையாடும், பட்டம் விடும் இடங்களிலும் நான் தான் முடிசூடா மன்னன்🤣.

பின்னாளில் கொழும்பிலும், அண்மையில் யாழிலும் போய் பார்த்த போது இந்த மேஜிக் இல்லை. ஏதோ ஸ்டேசனரி கடைக்குள் போன உணர்வு.

  • கருத்துக்கள உறவுகள்

இவரது வீடு, யாழ் கந்தர்மடம், அம்மன் வீதியில் இருந்தது. இவரது ஒரு மகன் லண்டனில் ஈஸ்ட்ஹாம் பகுதியில் இருந்தார் என்று நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

பூபாலசிங்கம் புத்தகசாலையுடன் எனது தொடர்பானது அந்தக் கடை கஸ்தூரியார் வீதியின் விளிம்பில் ( அப்போது நவீன சந்தை கட்டிடம் கிடையாது, இப்ப அண்ணா கோப்பி இருக்கும் இடம் என்று சொல்லலாம்) ஒரு பெரிய பூவரச மரத்தின் கீழ் இருந்தது. அதன் அருகில் ஒரு கடைச்சல் படடரையும் இருந்தது. நான் படிக்கும் காலத்தில் இருந்தே அங்கு புத்தகங்கள் வாங்குவது வழக்கம்.....பின் வேலை செய்ய ஆரம்பித்தபின் அந்தக் கடைச்சல் பட்டறைக்கு அடிக்கடி போகவேண்டிய தேவை இருந்தது அதனால் வாங்கும் புத்தகங்களும் அதிகமானது......கல்கி, குமுதம் (அப்போது குமுதத்தை ஒளித்து வைத்துத்தான் படிப்பது) விகடன் ( அன்றைய விகடன் சிறுவர்களில் இருந்து பெரியவர்கள் வரை படிப்பார்கள். நிறைய நகைச்சுவைகளும் வண்ண வண்ண படங்களுமாய் அழகாக இருக்கும். இப்போது விகடனுக்கும் குமுதத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை) காதம்பரி, பேசும்படம், பொம்மை ( இது சுமார் நான்கு வருடப் புத்தகங்கள் நான்கு பகுதிகளாகக் கட்டி வைத்திருந்தேன்) சினிமாப் பாட்டுப் புத்தகங்கள், கலைமகள், கலைக்கதிர், சிரித்திரன் என்று பல புத்தகங்கள்.....இவற்றுள் சில மாதத்துக்கு ஒன்றும், வேறு சில மாதத்துக்கு இரண்டும் என்று வரும். எங்கட அயலில் சுமார் பத்து, பதினைந்து வீடுகளுக்கு மூன்று கிணறு இருந்தது.அதனால் எல்லாரும் அடிக்கடி ஒன்று கூடுவார்கள்.....புத்தகங்கள் வாங்குவது நானாக இருந்தாலும் அக்காமார், சின்னம்மா போன்ற அம்மாமார் எல்லாரும் தங்களுக்குள் காசுகள் சேர்த்து தருவார்கள்.....அப்படியே இந்தப் புத்தகங்களும் எல்லோரும் படிப்பார்கள்.....அது ஒரு வசந்த காலம். பின்பு புதிய சந்தை வந்து பேரூந்து நிலையமும் பக்கத்தில் வந்து புத்தகக் கடையும் அந்த மூலையில் வந்து விட்டது.......எல்லோரும் திக்கு திக்காக  போய் விட்டோம் ..... நிறைய எழுதலாம்......ம்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் மறக்க முடியாத ஒரு இடம்.. ஆனால் பழைய பூபாலசிங்கம் புத்தகசாலை நினைவில் இன்று அங்கே போனால் ஏமாற்றமே கிடைக்கும்.. 

யாழ்ப்பாண bus standற்குப் பக்கத்தில் இருப்பதும் சரி.. நல்லூர் கோயிலுக்கு அருகில் இருப்பதும் சரி.. புத்தகங்களை அவற்றின் சரியான பிரிவுகளுக்குள் இருக்காது. கொழும்பில் வெள்ளவத்தையில் ஒன்று இருந்தது.. ஆனாலும் எதிர்பார்த்தளவிற்கு புத்தகங்களின் வகைகள் இல்லை. 

யாழ்ப்பாணத்தில் ஆசீர்வாதம் புத்தகசாலை கூட அப்படித்தான்.. பெரிய கடை ஆனால் புத்தகங்களைப் அதற்கேற் வகையில் அடுக்கி பாதுகாக்கத் தெரியவில்லை. அங்கே வேலைபார்ப்பவர்களுக்கும் தேடித் தரவோ, இல்லை பகுதிகளை காட்டவோ மனமில்லை(இதற்கு காரணங்கள் இருக்கலாம் - சம்பளம்/வேலையிடத்தின் விதிகள் etc) 

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இப்ப ஓரளவிக்கு பரவாயில்லை என்டால் வெண்பா புத்தக சாலையை சொல்லலாம்....ஓரளவிற்கு நல்ல புத்தகங்களை எடுக்க கூடியதாயிருந்தது...பூபாலசிங்கம் புத்தகசாலை உதவாது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.