Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரதி said:

சிஸ்டர் கிறிஸ்டபெல் என்னும் பெயர் கேள்விப்பட்ட மாதிரி இருக்குது.

சிசிலியாஸ் கொன்வென்ட்டில் 80 களில் கணிதம் படிப்பித்தவர்.

  • Like 1
  • Thanks 1
  • Replies 82
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

நான் இறுதியாக ஊருக்குச் சென்றது 2018 இல். எனது சித்தியைப் பார்ப்பதற்காக அன்று சென்றிருந்தேன், கூடவே குடும்பமும். சித்தியைப் பற்றி முதல் ஒரு பதிவில் கூறியிருக்கிறேன். 1988 இல் எனது தகப்பனாரின் கொடுங்கர

ரஞ்சித்

காலை 8 மணியிருக்கும். தான் கூறியதுபோலவே மைத்துனரின் வீட்டு வாயிலில் நண்பனது கார் வந்து நின்றது. "வெளிக்கிட்டியாடா?" என்று நண்பன் தொலைபேசியில் கேட்டான். "ஓம், வாறன்" என்று சொல்லிவிட்டு மைத்துனரின் வீட்

ரஞ்சித்

மாலை 5:30 இலிருந்து 6 மணிக்குள் பாஷையூரிலிருக்கும் ஓய்வுபெற்ற கன்னியாஸ்த்திரிகளைப் பராமரிக்கும் இல்லத்திற்குச் சென்றோம். பாஷையூர் அந்தோணியார் கோயிலில் இருந்து ஒரு 50 மீட்டர் தூரத்தில் உயர்ந்த மதில்களா

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

காலை 8 மணியிருக்கும். தான் கூறியதுபோலவே மைத்துனரின் வீட்டு வாயிலில் நண்பனது கார் வந்து நின்றது. "வெளிக்கிட்டியாடா?" என்று நண்பன் தொலைபேசியில் கேட்டான். "ஓம், வாறன்" என்று சொல்லிவிட்டு மைத்துனரின் வீட்டிலும் விடைபெற்று கிளம்பினேன். 

ஆனைப்பந்தியூடாக, பலாலி வீதியை குறுக்கறுத்து பருத்தித்துறை வீதியில் ஏறினோம். பருத்தித்துறை வீதியில் நல்லூருக்கு அண்மையில் ஒரு அசைவக உணவகம். காலைச்சாப்பட்டிற்காக வண்டியை நிறுத்தி வாங்கிக்கொண்டோம். சுடச்சுட பட்டீஸும், ரோல்ஸும். அருமை. ஒரு பை நிறைய வாங்கிக்கொண்டு வந்தான். பயணம் முழுதற்கும் என்று யோசித்திருக்கலாம். 

மீண்டும் பலாலி வீதியில் வண்டி ஏறியது. தின்னைவேலி, பாமர்ஸ் ஸ்கூல், கோண்டாவில்ச் சந்தி, டிப்போவடி என்று நான் சிறுவயதில் தவழ்ந்து திரிந்த வீதிகளும் ஊர்களும் நண்பனது வாகனத்தில் பயணிக்கும்போது சடுதியாகத் தோன்றி மறைந்தது போலவும், வீதிகள் சுருங்கிவிட்டது போலவும் ஒர் உணர்வு. இந்தவிடங்கள் எல்லாவற்றிலும் நிறையவே நினைவுகள் கலந்திருக்கின்றன. பசுமரத்தாணி போல என்று சொல்வார்களே? அதுபோல. என்றும் பசுமையான நினைவுகள். எளிதில் எழுத்தில் வடித்துவிடமுடியாதவை. ஆதலால் தொடர்ந்து செல்கிறேன். 

சிட்னியிலிருக்கும் நண்பர் ஒருவரது தகப்பனாரைப் பார்ப்பதே உரும்பிராய்ப் பயணத்தின் நோக்கம். ஊரில் பிரபல வர்த்தகரான அவர் அண்மைக்காலமாகச் சற்று சுகயீனமற்று இருந்தார். அவரது உடல்நிலை குறித்த கவலைகள் நண்பருக்கு இருந்து வருகின்றன‌. ஆகவே நான் யாழ்ப்பாணம் போகிறேன் என்று கேள்விப்பட்டதும், "ஒருக்கால்ப்போய் அப்பாவையும் பார்த்துவிட்டு வரமுடியுமா?" என்று கேட்டபோது ஆமென்றேன். டிப்போவடி தாண்டியதும் வரும் சிற்றொழுங்கையில் வீடு. விசாலமான இரண்டுமாடிக் கட்டடம். ஒழுங்கையினிரு மரங்கிலும் கமுக மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்க, வீட்டைச் சுற்றி சோலைபோன்று மரங்கள் நடப்பட்டிருந்த  அமைதியான அழகான வீடு. நண்பன் தான் வாகனத்திலேயெ இருப்பதாகக்கூறிவிட நான் உள்ளே சென்றேன். என்னை முதன்முதலாகப்பார்ப்பதால் அவர் அதிகம் பேசவில்லை. பலவீனமாகத் தெரிந்தார். சிறிதுநேரம் மட்டுமே அவரால் வெளியில் வந்து அமர்ந்துகொள்ள முடிந்தது. "தம்பி, எனக்கு இப்படி கனநேரம் இருக்கேலாது, நான் உள்ளுக்கை போகப்போகிறேன், இருந்து தேத்தண்ணி ஏதாச்சும் குடிச்சுப்போட்டு போம்" என்று சொன்னார். "இல்லை அங்கிள் உங்களை பார்க்கத்தான் வந்தேன். நீங்கள் உள்ளுக்கைபோங்கோ, முடிந்தால் கொழும்பு போகுமுன் இன்னொருமுறை வந்து சந்திக்கிறேன்" என்று கூறிவிட்டுக் கிளம்பினேன்.

உரும்பிராயிலிருந்து பலாலி வீதியூடாக கோண்டாவில்ச் சந்திநோக்கிச் சென்றோம். அங்கிருந்து இடதுபுறம் திரும்பி இருபாலை, பின்னர் செம்மணிப் பகுதியூடாகச் சென்று  கண்டிவீதியில் ஏறினோம். 

செம்மணி பற்றி 80 களிலும் 1995 இலும் நாம் கேள்விப்பாடிருக்கிறோம். புளொட் அமைப்பின் ஆரம்பகால உள்வீட்டுப்பிரச்சினைகளின்போதும் பின்னர் கிருசாந்தி குமாரசாமி மற்றும் அவரது தாய், சகோதரர், உறவினர் ஆகியோரின் படுகொலைகளின் போதும் இப்பெயர் தமிழர்களுக்கு மிகுந்த பரீட்சயமாகிப்போனது. செம்மணிச் சுடலையூடாக வரும்போது, "இதுதான் மச்சான் செம்மணிச் சுடலை, இங்கதான் கிருசாந்தியையும் மற்ற ஆக்களையும் கொண்டு புதைத்தவங்கள்" என்று நண்பன் கூறிக்கொண்டு வந்தான். 

கண்டிவீதிவழியாக பூநகரி நோக்கித் திரும்பி பயணிக்கத் தொடங்கியது நண்பனின் வாகனம். பூநகரி என்று கேள்விப்படும்போதெல்லாம் 1993 இல் புலிகள் நடத்திய தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையும் நாகதேவந்துறை என்கிற பெயரும் என்னால் தவிர்க்கமுடியாமல் மனதில் வந்துபோகிறது. பூநகரியின் புதிய பாலத்தினூடு வரும்போது இருவகையான உணர்வுகள். முதலாவது தமிழ்மக்களின் பயணம் இப்பகுதியில் சற்று இலகுவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது, எம்மீதான இனக்கொலை புரிந்தவர்கள் கட்டியிருக்கும் இப்பாலத்தில் நாம் பயணிக்கிறோம் என்பது. மக்களுக்கு இப்போது எது தேவையானதோ, அது இருந்தால்ப் போதும் என்று மனதை ஆறுதல்ப்படுத்திக்கொண்டேன்.

 மப்பும் மந்தாரமுமாக இருந்த அந்த முற்பகல் வேளையில், சனநடமாட்டம் இல்லாத அப்பாதையில் நண்பன் 130 - 140 வேகத்தில் வாகனத்தைச் செலுத்திக்கொண்டு சென்றான். சிறுவயதில் இருந்தே காரோட்டுவதில் நன்கு பரீட்சயமானவன். ஆகவே, அவனது திறமையில் முழு நம்பிக்கை வைத்து இருக்கையில் அட்டை போல ஒட்டிக்கொண்டேன். பாலம் கடந்து இருமருங்கிலும் அண்மையில் பெய்த வெள்ளத்தில் வழிந்தோடாது இன்னும் மிச்சமாய் இருக்கும் நீர் வீதியின் ஓரங்களில் தரித்து நிற்க, பனை வடலிகளும், பற்றைகளும் செழித்து வளர்ந்து நிற்க, நன் இதுவரை வந்திராத தாயகத்தின் ஒரு பகுதியூடாகச் சென்றுகொண்டிருந்தேன், நண்பனின் அனுக்கிரகத்தில்.

யாழ்ப்பாணத்தில் நான் வாழ்ந்த 7 வருடங்களில் குடாநாட்டைத் தவிர வேறு எந்தப் பகுதிகளுக்கும் சென்றது கிடையாது. அதற்கான தேவையும் அப்போது இருந்ததில்லை. ஆகவே, தாயகத்தில் கிட்டத்தட்ட 90 வீதமான பகுதிகள் நான் வாழ்நாளில் பார்க்காதவை. எனவேதான் அக்கராயன் நோக்கிய பயணத்தில் எல்லாமே புதிய இடங்களாக எனக்குத் தெரிந்தது. 

நாவற்குழி - கேரதீவு - மன்னார் வீதியிலிருந்து விலகி கிளிநொச்சி நோக்கிப் பயணித்தோம். இந்த வீதியின் இருமருங்கிலும் தெரிந்த இயற்கை அழகு அபரிமிதமானது. சிட்னியில் சில இடங்கள் பார்க்கும்போது அழகாக இருப்பதாகத் தோன்றும். ஆகா ஓகோ என்று செயற்கையாகப் புகழ்ந்துந்துகொள்கிறோம் என்றுகூட நினைப்பதுண்டு. ஆனால், தாயகத்தில் இருக்குமிந்த அழகையெல்லாம் பார்க்க மறந்துவிட்டோமே என்று பெரிய ஏக்கம் வந்துபோனது. அத்துடன் நான் இங்கு இருக்கப்போவது ஓரிரு நாட்களுக்கு மட்டுமே என்று நினைத்தபோது ஏக்கமும் சேர்ந்துகொண்டது. தாயகத்தில் வாழும் மக்கள்பேறுபெற்றவர்கள் என்று நான் நினைப்பதற்கு இந்த இயற்கை அழகும் இன்னொரு காரணம். 

ஒருவாறு கிளிநொச்சி நகரை அடைந்தோம். நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று மாவீரர் நாள். கண்டி - யாழ்ப்பாணம் பிரதான வீதியிலும், அவ்வீதியிலிருந்து கனகபுரம், அக்கராயன் நோக்கிச் செல்லும் வீதியிலும், வீதியின் மேலாகக் கம்பீரமாக அலங்கரிக்கப்பட்டிருந்த வளைவுத் தோரணம் "மாவீரர் நாள் 2023" என்று சொல்லிற்று. ஆக்கிரமிப்பாளனின் ஏதோவொரு படைத் தலைமையகம் முன்னால் இருக்க, மாவீரர் நாள் அனுஷ்ட்டிக்கப்படும் கொட்டகைகளும், வளைவுகளும், தோரணங்களும் அப்பகுதியெங்கிலும் சிவப்பு மஞ்சள் வர்ணத்தை  அள்ளித் தெளித்திருந்தன‌. எமது விடுதலை வீரர்களை அழித்துவிட்டோம், எச்சங்களையும் தோண்டி எறிந்துவிட்டோம் என்று ஆக்கிரமிப்பாளன் கொக்கரித்து வந்தபோதும் மக்களின் மனங்களில் அவர்கள் இன்னும் வாழ்கிறார்கள் என்பதற்கு நான் அன்று பார்த்த காட்சிகள் சாட்சியம். மாவீரர் நாள் வளைவுகளூடாக நாம் பயணிக்கும்போது அவற்றை முடிந்தளவு படமாக்கிகொண்டேன். "மச்சான் , கவனம், பாத்தெடு. உன்ர போனை நோண்டினாங்கள் என்டால் பிரச்சினை வரலாம்" என்று நண்பன் கூறவும், "உவ்வளவு சனம் நிண்டு அவனுக்கு முன்னாலை உதைச் செய்யுது?" என்று கேட்டேன். "ஆருக்குத் தெரியும், பிரச்சினை குடுக்கிறதெண்டால் குடுப்பாங்களடா" என்று பதில் வந்தது. 

கிளிநொச்சியிலிருந்து அக்கராயன் போகும் வீதியில்த்தான் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் வருகிறது. நாம் அவ்விடத்தை அடையும்போது மாலையாகிவிட்டிருந்தது. மாவீரர் துயிலும் இல்லம் ஆக்கிரமிப்பாளனினால் அழிக்கப்பட்டபோது மாவீரர் கல்லறைகள் தோண்டப்பட்டு, நடுகற்கள் உடைத்தெறியப்பட்டிருந்தன. ஆனால், தொடர்ந்து வந்த வருடங்களில் அப்பகுதி மக்கள் துயிலும் இல்லத்தைப் புணரமைத்து, நடுகற்களைச் சேகரித்து ஒரு மலைபோல குவித்து வைத்திருந்தார்கள். அக்குவியலின் அடிவாரத்திலிருக்கும் இன்னும் முற்றாக உடையாத நடுகற்களில் மாவீரரது பெயர்கள்  உச்சரித்துக்கோன்டிருந்தன. இவற்றோடு அந்தத் துயிலும் இல்லம் எங்கும் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கவென தென்னங்கன்றுகள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. அப்பகுதியெங்கும் வீதிகளும், வளைவுகள் மஞ்சள் சிவக்கு நிறக் கொடிகளில் அலங்கரிக்கப்பட்டிருக்க, தேசம் எழுச்சி பெற்று நின்ற‌து போன்ற உணர்வு. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல வாயிலில் பெருத்த சனக்கூட்டம். நிகழ்வுள் ஆரம்பிக்கப்பட இன்னும் பல மணித்தியாலங்கள் இருக்கவே மக்கள் பெருவாரியாக அப்பகுதிக்கு வந்துகொண்டிருந்தார்கள். மழை தூரத் தொடங்கியிருந்தது. ஆனால் மக்கள் வெள்ளமும் குறையவில்லை. அக்கூட்டத்தைப் படமெடுக்கவென ஒரு சிலர் வீதியின் எதிர்க்கரையில் நின்றுகொண்டிருந்ததைக் காணக்கூடியதாய் இருந்தது. அவர்கள் எமது மக்களில்லை என்பதும் தெளிவாகத் தெரிந்தது.

 எனது தம்பியின்  பூதவுடலும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலேயே விதைக்கப்பட்டதாக அறிந்தேன். துயிலும் இல்லத்தைக்கடந்து கார் மெதுவாகச் சென்றுகொண்டிருக்கும்போது அவனுக்காகவும் இன்னும் மரணித்த ஆயிரமாயிரம் மாவீரகளுக்காகவும் மனம் வேண்டிக்கொண்டது. இப்போதைக்கு இதைத்தவிர வேறு என்னதான் செய்ய முடியும் என்னைப்போன்றவர்களா? உங்கள் கனவுகள் வீண்போகாது என்று மனதிற்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேன். வீண்போகக்கூடாது.

Edited by ரஞ்சித்
Spelling
  • Like 12
  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, ரஞ்சித் said:

இருபாலை,

நான் பிறந்து தவழ்ந்து வளர்ந்த இடம்.

28 minutes ago, ரஞ்சித் said:

எனது தம்பியின்  பூதவுடலும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலேயே விதைக்கப்பட்டதாக அறிந்தேன். துயிலும் இல்லத்தைக்கடந்து கார் மெதுவாகச் சென்றுகொண்டிருக்கும்போது அவனுக்காகவும் இன்னும் மரணித்த ஆயிரமாயிரம் மாவீரகளுக்காகவும் மனம் வேண்டிக்கொண்டது. இப்போதைக்கு இதைத்தவிர வேறு என்னதான் செய்ய முடியும் என்னைப்போன்றவர்களா? உங்கள் கனவுகள் வீண்போகாது என்று மனதிற்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேன். வீண்போகக்கூடாது.

இதைப் பற்றி கேட்க வேண்டும் என எண்ணிக் கொண்டு கீழே வாசிக்க தம்பியைப் பற்றி எழுதியுள்ளீர்கள்.

அந்தநேரம் என்ன மனநிலையில் இருந்திருப்பீர்கள் என்பது புரிகிறது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

னகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவிலேயே அக்கராயன் பகுதி வருகிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்ட எழில்மிகுந்த சாலையும் இப்பகுதியிலேயே இருக்கிறது. பிற்பகல் 3 மணியளவில் அக்கராயனில் அமைந்திருக்கும் நண்பனின் குடும்பத்திற்குச் சொந்தமான கமத்தினை அடைந்தோம். 90 ஏக்கர்கள் வயற்காணியும், தோட்டக்காணியும் கொண்ட பாரிய காணித்தொகுதி அது. நண்பனின் சகோதரர்கள் அனைவருக்கும் இங்கே காணித்துண்டுகள் அவர்களது தந்தையினால் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.

வயல்கள் விதைக்கப்பட்டிருந்தன. அண்மையில் பெய்த கடும் மழையினால் வயல்களுக்குள் வெள்ளம் நிற்பது தெரிந்தது. நண்பனின் கமத்தில் பணிபுரிவோர் அடுத்த மழை ஆரம்பிக்கும் முன்னர் மருந்தடிக்கும் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. 

அவ்வாறே தோட்டக் காணிகளில் தென்னை மரங்களும் பழம் தரும் மரங்களும் காணப்பட்டன. சூரிய வெளிச்சம் நிலத்தில் விழுவதே அரிதாகும் அளவிற்கு அக்காணி சோலைபோன்று காட்சியளித்தது. மரமுந்திரிகை, தேக்கு மரங்களும் வரிசைக்கு நேர்த்தியாக நடப்பட்டிருந்தது. நண்பனின் சகோதரகள் அடிக்கடி இங்கு வந்து தங்கிச் செல்வதுண்டு, குறிப்பாக வெளிநாட்டில் வசிப்போர். விருந்தாளிகள் வந்தால் தங்குவதற்கென்று சகல வசதிகளுடனும் கூடிய விருந்தினர் மாளிகை ஒன்றினை அவர்கள் கட்டியிருந்தார்கள். மேற்கத்தைய பாணியில் அமைக்கப்பட்ட குளியல் அறைகள், கழிவறைகள், விருந்தினர் மண்டபம், படுக்கையறைகள் என்று நகரப்பகுதியில் இருந்து தொலைவாக அமைந்திருக்கும் ஒரு விவசாயக் கிராமத்தில் இவ்வாறான வசதிகளுடன் கூடிய விருந்தினர் மாளிகையினைக் காண்பது அருமையே. இந்த விருந்தினர் தங்குமிடத்தைப் பராமரிக்கவும், வயற்காணிகளையும், தோட்டக்காணிகளையும் பராமரிக்கவும் என்று சில பணியாளர்கள் இங்கே வசித்துவந்தனர். அவர்களுக்கென்று தனியான வீடுகளும் அங்கே கட்டப்பட்டிருந்தன.

 

நாம் செல்லும் வழியில் கிளிநொச்சி நகரில் இருந்த அங்காடியொன்றிலிருந்து மீன்கள் சிலவற்றையும், இறால்களையும் வாங்கிச் சென்றிருந்தோம். நண்பனின் விருந்தினர் தங்குமிடத்தைப் பராமரிக்கும் அம்மா ஒருவர் அவற்றைத் துப்பரவு செய்து சமைக்கத் தொடங்கினார். 

சற்று ஓய்வெடுத்தபின், கமத்தில் இருந்த கிணற்றில் குளித்துவிட்டு சுற்றவர இருக்கும் காணிகளைப் பார்ப்பதற்கு நடந்துசென்றோம்.

நண்பனின் சகோதர்களின் காணிகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவை. சிலவற்றில் எல்லைகளே காணப்படவில்லை. இடையிடையே செல்லும் குறுக்கு வீதிகள் அவற்றை பிரித்துச் சென்றபோதும், அவை அனைத்துமே ஒரே பணியாளர்களால் பராமரிக்கப்பட்டு வந்தன. இக்காணிகளில் இருந்த பனை மற்றும் தேக்கு மரங்களில் மயில்கள் இருப்பதைக் கண்ணுற்றேன். மயில் இங்கு அடிக்கடி காணப்படும் ஒரு பறவை. அப்பகுதியில் எங்கேயோ ஒரு மூலையில் இருந்து மயில் அகவுவது கேட்டுக்கொண்டே இருக்கும். 

அக்காணிகளை அண்டிய வீடொன்றிற்குச் சென்றோம். நன்கு பரீட்சயமானவர்கள். அவ்வீட்டில் வசிக்கும் இளைஞன் ஒருவன் சண்டைக்கு வளர்க்கும் வெள்ளடியான் சேவல்களை வைத்திருந்தார். குறைந்தது 80 இலிருந்து ‍ 100 வரையான சேவல்களும், குஞ்சுகளும் அவரிடம் இருந்தன. தமக்குள் சண்டைபிடிக்கும் சேவல்களைத் தனியாகப் பிடித்து அடைத்து வைத்திருந்தார்கள். இப்போதும் சண்டைக்கு சேவல்களை வளர்க்கும் ழக்கம் இருக்கிறதா என்று கேட்டபோது, ஆம், ஆட்கள் வந்து வாங்கிச் செல்வார்கள். கறிக்கும் எடுப்பது உண்டு என்று அந்த இளைஞன் கூறினார். 

அப்படியே காணிகளிருந்து வெளியே வந்து வீதிக்கு ஏறினோம். அதுதான் ராசா அண்ணை மரம் நட்டு வளர்த்த வீதி. வீதியின் ஒரு எல்லையிலிருந்து மற்றைய எல்லைக்கு நடந்து சென்று சுற்றவர இருக்கும் வயற்காணிகளைக் கண்டு களித்தோம். இடையிடையே புகைப்படங்கள், செல்பிகள்.

வீதிக்குச் சமாந்தரமாக ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்காலுக்கு மேலாக சீமேந்தினால் பாலம் ஒன்றைக் கட்டியே நண்பனின் வீட்டிற்குச் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. அக்கட்டிலிருந்து சிறிது நேரம் பழங்கதை பேசினோம்.

சிறிதுநேரம் பேசிக்கொண்டிருக்கப் பசியெடுத்தது. நாம் கொண்டுவந்திருந்த மீன், இறால் என்பவற்றைக் குழம்பாக வைத்திருந்தார் அந்த அம்மா. அவற்றுடன் கரட் சம்பலும், உருளைக்கிழங்குக் கறியும் பரிமாறப்பட்டது. வீட்டுக்கிணற்றில் ஆசைதீர குளித்த குளியலும், தோட்டக்காணிகளைச் சுற்றிவர நடந்த நடையும் களைப்பினையும் பசியினையும் ஒருங்கே ஏற்படுத்தியிருக்க வயிறார உண்டோம். தோட்டத்தில் காய்த்த பப்பாளிப்பழமும், வாழைப்பழமும் கொண்டுவந்தார்கள்.  

சிறிது நேரத்தில் களைப்பு மிகுதியால் தூங்கிப்போனோம்.

 

  • Like 9
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பயணக் கதை நன்றாக தொடர்கிறது.... வாழ்த்துக்கள்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருமை தொடருங்கள்,......வாசிக்கின்றேன்   வாழ்த்துக்கள் 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாலை ஆறு மணிக்கு எழுந்திருப்போம் என்று நினைக்கிறேன். இன்னமும் வெளிச்சம் இருந்தது. வீட்டின் வெளிப்பகுதியிலிருந்து பேசத் தொடங்கினோம். கொழும்பில் கல்விகற்ற நாட்களில் நடந்தவை, தெரிந்த நண்பர்கள் பற்றிய விபரங்கள், அந்தநாள்க் காதல்கள், குடும்ப வாழ்க்கை என்று பல விடயங்கள் அலசப்பட்டன. 

நண்பர்களுடனான தனி விடுமுறைக் காலங்கள் குறித்துப் பேச வேண்டும். நாம் நாமாக இருப்பது நண்பர்களுடன் இருக்கும் வேளையில் மட்டும் தான் என்று நான் நினைப்பதுண்டு. எந்த விடயத்தையும் ஒளிவு மறைவின்றி, வெளிப்படையாக, கூச்சமின்றி, என்னைப்பற்றி என்ன நினைப்பான் என்கிற சிறிய அச்சமும் இன்றி எந்த விடயத்தையும் பேசமுடியும். உங்களுக்கு இதில் மாற்றுக் கருத்துக்களிருக்கலாம். ஆனால், நான் உணர்ந்துகொண்டது இதைத்தான். 

ஆகவே, பல விடயங்களை ஒளிவுறைவின்றிப் பேசினோம். ஏமாற்றங்கள், துரோகங்கள், வஞ்சனைகள், பிணக்குகள் கூட சம்பாஷணைகளில் வந்துபோயின. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிக்கிடும்போது ராசா அண்ணையையும் கூடிவரலாம் என்றே ஆரம்பத்தில் நண்பன் சொன்னான். அவருடன் பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவது கூடத் தெரியாது, ஆகவே நானும் உடனேயே ஓம் என்று கூறிவிட்டேன். ஆனால், உரும்பிராயிலிருந்து கிளம்பும்போது எமது முடிவை மாற்றிக்கொண்டோம். "மச்சான், அண்ணை வந்தால் எங்களால சுதந்திரமாக் கதைக்கேலாது. நீ அவரோட ஊர்க்கதை பேசிக்கொண்டிருப்பாய், அவர் நிக்கட்டும், நாங்கள் போட்டு வருவம். அவர் நாளைக்கு நாளண்டைக்கு எப்படியும் அங்க போவார்" என்று கூறவும் நானும் சரியென்றேன். 

ஆக, இந்தப் பயணம் நானும் நண்பனும் மட்டும் எமது கடந்தகால வாழ்க்கையை அலச, எடைபோட, சுக துக்கங்களை அலச நடத்தப்பட்டது என்றே வைத்துக்கொள்ளலாம். சிட்னியிலிருந்து கிளம்பும்போது "நீங்கள் பச்சுலர்ஸ் பாட்டிக்குத்தான் போறியள்" என்று சொல்லப்பட்ட குற்றச்சாட்டை ஓரளவிற்கு உறுதிப்படுத்தியிருக்கிறது அக்கராயன் நோக்கிய எனது பயணம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். 

நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தபின்னர் 9 மணியளவில் இரவுணவு ஆயத்தமாகியிருந்தது. தேங்காய்ப்பூ பிசைந்த மா ரொட்டி. கூடவே கோழிக்கறி. அருமையான சாப்பாடு. பேசியபடியே இரவுணவை முடித்தோம். இருள் படர்ந்த இரவு, சுற்றியிருக்கும் மரங்களில் கூடுகளுக்குள் அடைக்கலாமிவிட்ட குருவிகளின் இரைச்சல். இடைக்கிடையே கிளைகள் வழியே தாவித் திரிந்த குரங்குகள், இடைவிடாது இரைச்சலிட்டுக் கொண்டிருந்த சில்வண்டுகள், இவை எல்லாவற்றிற்கிடையிலும் தொலைவில் கேட்ட புகையிரதச் சத்தம் என்று பல வருடங்களுக்குப் பின்னர் நகரத்தின் சலசலப்பும், அவசரமும் இன்றி, சிட்னியிலிருந்து வெகு தூரத்தில், மறுநாள் பற்றிய எந்தக் கவலையுமின்றி ஒரு இரவை முற்றாக உணரவும் அனுபவிக்கவும் முடிந்தது.

10 மணியளவில் தூங்கியிருப்போம். காலை 5 மணிக்கே தூக்கம் கலைந்துவிட்டது. வழமைபோல நண்பனுக்கு சிரமம் கொடுக்காது காலைக்கடன்களை முடித்துவரலாம் என்று கிளம்பினேன். வெளியில் வெளிச்சம் மெதுமெதுவாகப் பரவிக்கொண்டிருந்தது. காலைக்கடன் முடித்து, குளித்துவிட்டு வெளியே வரும்போது அந்த அம்மா காப்பி கொண்டுவந்திருந்தார். குடித்துக்கொண்டிருக்க நண்பன் எழும்பிவந்தான். "எப்படி நித்திரை?" என்று கேட்டேன். "மச்சான், சொன்னால்க் குறைநெய்க்கக் கூடாது, நல்லாத்தான் குறட்டை விடுறாய் நீ" என்று சொன்னதும் தூக்கிவாரிப்போட்டது எனக்கு. அட, இங்கையுமா? கடந்த சில‌ மாதங்களாக நித்திரை கொள்வதென்பது என்னைப்பொறுத்தவரையில் ஒரு பிரச்சினையாகவே மாறியிருந்தது. இரண்டு, மூன்று மணித்தியாலங்கள் தூங்கினாலே போதும் என்கிற நிலையில்த்தான் நான் இருந்து வருகிறேன். யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் ஒழுங்குகள் செய்யத் தொடங்கிய நாளிலிருந்து இருந்த நித்திரையும் காணாமற் போய்விட்டிருந்தது. விமானத்தில் தூக்கம் வராது என்பதனால் சில நாட்களாகவே தூங்குவதென்பது பெரிய பிரச்சினையாக மாறிப்போயிருந்தது. ஆகவேதான், அக்கராயனில் தங்கிய இரவன்று அசதியில் நன்றாகவே நான் தூங்கியிருக்க வேண்டும். அது நண்பனின் தூக்கத்தைக் கலைத்துப் போட்டு விட்டது.

காலை சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியது. காலையுணவு இடியப்பமும் சொதியும். அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு கிளம்புவதற்குத் தயாரானோம். நண்பனின் மோட்டார்ச் சைக்கிள் வியாபார ஸ்த்தாபனம் யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் அமைந்திருக்கிறது. அடிக்கடி தொலைபேசியில் நிலையத்தின் ஊழியர்களைத் தொடர்புகொண்டு அலுவல்கள் கிரமமாக நடப்பதை உறுதிப்படுத்திக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. மேலும், ஒருநாள் என்னுடன் செலவிட்டதனால் காலையிலேயே நிலையத்திற்குச் சென்று காரியங்களை மேற்பார்வை செய்ய நினைத்திருக்கலாம். "உன்ர பிளான் என்ன?" என்று கேட்டான். "கரவெட்டிக்குப் போய், மற்றைய இரண்டு சித்திமாரையும் கூட்டிக்கொண்டு சிஸ்ட்டர் அன்ராவிடம் போய்வரவேண்டும். இண்டைக்கு அதுமட்டும்தான்" என்று கூறினேன். 

தோட்டத்தில் கிடந்த தேங்காய்கள் சிலவற்றை அங்கிருந்தவர்கள் உரித்து காரில் வைத்தார்கள். அவற்றையும் எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டோம். அக்கராயன் வந்த அதே பாதை வழியே திரும்பினோம். முன்னைநாள் மாலை மாவீரர் தினம் நடைபெற்ற கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் மீண்டும் அநாதரவாகக் கிடந்தது. சுற்றிவரக் கொடிகள் இன்னும் அசைந்துகொண்டிருக்க, மக்களின்றி அமைதியாகக் கிடந்தது. முதள்நாள் கண்ட தென்னங்கன்றுகளும் காணாமற் போயிருந்தன. அக்கராயனிலிருந்து கிளிநொச்சி வரையிலான வீதிகளில் பல விடங்களில் மாவீரர்தின ஏற்பாடுகளின் மிச்ச சொச்சங்களை காலையிலும் காண முடிந்தது.  

மன்னார் பூநகரி நாவற்குழி பாதை வழியே யாழ்ப்பாணம் திரும்பினோம். இடையில் நிற்கும் எண்ணம் இருக்கவில்லை. முடிந்தளவிற்கு வேகமாகவே வண்டி பயணித்தது. காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் நண்பன் என்னை இறக்கிவிட, கன்னாதிட்டி வீதி நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

  • Like 9
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்ப்பாணம் வந்து சித்தியைப் பார்ப்பது என்று முடிவெடுத்த கணத்திலேயே இன்னொரு விடயத்தையும் நிச்சயம் செய்யவேண்டும் என்று மனதிற்குள் எண்ணியிருந்தேன். அதுதான் வன்னிக்குச் செல்வது. குறிப்பாக பரந்தனிலிருந்து புதுக்குடியிருப்பூடாக 2009 இல் எமது மக்கள் இடம்பெயர்ந்து சென்ற பாதை வழியே சென்று முள்ளிவாய்க்காலை அடைவது. அங்கிருந்து வட்டுவாகல் பாலத்தினூடாகச் சென்று முல்லைத்தீவு நகரை பார்ப்பது.

இந்த விடயம் குறித்து வீட்டில் பேசியிருந்தால் நிச்சயம் எனது பயணம் தடைப்பட்டிருக்கும். ஆகவே, இதுகுறித்து மூச்சு விடுவதையே தவிர்த்திருந்தேன். ஆனால் தவறாது மைத்துனரிடம் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு இப்பயணத்தை ஒழுங்குபடுத்துமாறு கேட்டிருந்தேன். அவரும் தனக்குத் தெரிந்த வான் சாரதியொருவரை ஒழுங்கு செய்து தனது வேலைக்கும் லீவு போட்டுவிட்டதாக அறிவித்தார். 

கரவெட்டியில் எனது தாயருக்குக் கொடுக்கப்பட்ட சீதன வீடொன்று இருந்தது. அதனை எனது சித்தியொருவர் வாங்கிக்கொண்டார். ஆனாலும், அவ்வீடு எப்போதும் எனக்கு அம்மம்மாவினதும் அம்மாவினதும் வீடுதான். சித்தியும் என்னைத் தனது மகன்களில் ஒருவராக நடத்திவந்தார். ஆகவே இலங்கை வரும்போது அவரையும் பார்த்துவிட விரும்பினேன். அவருக்கும் வயது 70 ஐக் கடந்திருந்தது. அவ்வாறே எனது தாயாரின் இன்னொரு தங்கையும் கரவெட்டியில் இருந்தார். அவரையும் பார்த்துவிட நினைத்தேன். இனிமேல் எப்போது வரக்கிடைக்கப்போகின்றதோ? அல்லது அவர்களுக்குத்தான் ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது? என்கிற கேள்விகள் மனதில் எழ, அவர்களைப் பார்த்துவிட கரவெட்டிக்குச் செல்ல ஆயத்தமானேன்.

மைத்துனர் வீட்டிற்குச் சென்று, சித்திமாருக்குக் கொடுப்பதற்கென்று கொண்டுவந்த சில பொருட்களையும் எடுத்துக்கொண்டு கண்ணாதிட்டி வீதியிலிருந்து யாழ்ப்பாணம் அரச போக்குவரத்து நிலையத்திற்குச் சென்று, நெல்லியடியூடாக பருத்தித்துறை செல்லும்  750 ஆம் இலக்க பேரூந்து தரித்துநிற்கும் பகுதிக்குச் சென்றேன். காலை வெய்யிலே கொழுத்த ஆரம்பித்திருந்தது. 1980 களின் ஆரம்பத்தில் கட்டப்பட்டிருந்த அதே பேரூந்துத் தரிப்பிட நிலையக் கட்டடம், அழுக்காக, சிறிய இடிபாடுகளுடன் காணப்பட்டது.  பஸ்நிலையச் சுற்றாடல் குண்டும் குழியுமாக, மழைநீர் தேங்கிச் சேறாகிக் கிடந்தது. 40 வருடங்களுக்கு மேலாகியும் அப்பகுதி மாறவில்லை. ஒரே வித்தியாசம் மணிக்குரல் விளம்பர சபையின் பாட்டுக்களும் ரேலங்கியின் கணீரென்ற குரலும் இல்லாததுதான் என்று தோன்றியது.

ஒரு அரை மணித்தியாலம் அங்கு நின்றிருப்பேன். பருத்தித்துறை செல்லும் பேரூந்து வரவேயில்லை. நண்பன் தொலைபேசியில் வந்தான், "எங்கயடா நிக்கிறாய், பஸ்ஸில ஏறீட்டியோ?" என்று கேட்க, "இன்னும் இல்லை, பஸ் ஸ்டாண்டில நிக்கிறன்" என்று சொல்ல. "மச்சான், சி.டி.பி பஸ் பெரிசா ஓடாது, மினிபஸ்ஸ் ஸ்டாண்டுக்குப் போனியெண்டால் பஸ் கிடைக்கும்" என்று  கூறினான். அதன்படியே செய்தேன். அரச பேரூந்து நிற்கு சாலைக்கு வெளியே தனியார் பஸ் நிறுத்துமிடத்தில் மினிபஸ் ஒன்றிலிருந்து , "பருத்தித்துறை, பருத்தித்துறை" என்று கூவிக் கூவி அழைத்துக்கொண்டிருந்தார்கள். அதில் ஏறி அமர்ந்துகொண்டேன். இறுதியாக யாழ்ப்பாணத்தில் மினிபஸ் ஒன்றில் ஏறியது 1986 இல் என்று நினைக்கிறேன். கோண்டாவிலில் இருந்த காலத்தில் பாடசாலை பஸ்ஸைத் தவறவிட்டு விட்டால் யாழ்ப்பாணம் வந்து அங்கிருந்து கச்சேரி நோக்கிச் செல்லும் மினிபஸ்ஸில் ஏறிக்கொள்வோம். அக்காலத்திற்குப் பிறகு மீண்டும் ஏறியிருப்பது இன்றுதான், ஏறத்தாள 37 ஆண்டுகளுக்குப் பின்னர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

யாழ்ப்பாண நகரப்பகுதியில் வேண்டுமென்றே மெதுவாக ஓட்டிச் சென்றார் சாரதி. போகும் வழிநெடுகிலும் மக்களைக் கூவி அழைத்து ஏற்றிக்கொண்டார் நடத்துனர். வயோதிபர்கள், இளம்பெண்கள், இளைஞர்கள் என்று பல்வேறு வயதினரும் ஆங்காங்கே ஏறி இறங்கிக்கொண்டார்கள். நடத்துனர் இளவயதுக்காரர், ஓரளவிற்கு கண்ணியமாகவே பயணிகளுடன் நடந்துகொண்டார். இருமுறை வீதியின் அருகாக அமைக்கப்பட்டிருந்த ஆலயங்களுக்கு அருகில் வாகனத்தை மெதுவாக நிறுத்தி உண்டியலில் பணம் போட்டுவிட்டு வணங்கினார். இந்து, கிறிஸ்த்தவம் என்று அவர் வேறுபாடு காட்டவில்லை. இருபாலையினைத் தாண்டியதும் வாகனம் வேகமெடுத்தது. ஆசுர வேகம். பின்னால் அரச பேரூந்து வந்திருக்கலாம். அதுவரை மெதுவாக ஓடிக்கொண்டிருந்தவர் திடீரென்று தூக்கத்தால் விளித்துக்கொண்டவர்போல செலுத்திக்கொண்டுபோனார். அச்சுவேலிச் சந்தியப் பார்க்கலாம் என்று எண்ணியிருந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வண்டி அச்சுவேலியை விடுத்து ஆவரங்கால் ஊடாக வல்லை வெளி நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

வல்லைவெளி பற்றி ஒரு சிறிய அனுபவம் இருக்கிறது. உங்களுக்குச் சலிப்பில்லாமல் இரத்திணச் சுருக்கமாக (சும்மாதான்) சொல்லிவிடுகிறேன். பாடசாலை விடுமுறைநாட்களில் தெல்லிப்பழைக்கோ அல்லது கரவெட்டிக்கோ போவது வழமை. அவ்வாறே 1987 ஆம் ஆண்டு ஆடியில் வாரவிடுமுறை ஒன்றிற்காக கரவெட்டியில் அமைந்திருக்கும் அம்மமாவின் வீட்டிற்குத் தம்பியுடன் சைக்கிள் சென்றிருந்தேன். அன்றிரவு நாம் உறங்கிக்கொண்டிருக்கையில் வானத்தில் மின்னல் வெட்டியது போன்ற வெளிச்சமும் அதனைத் தொடர்ந்து பாரிய வெடியோசையும் கேட்டது. சத்தம் கேட்டுப் பலர் வீடுகளை விட்டு வெளியே வந்துவிடவே தெருக்களில் மக்கள் கூடிநின்று அங்கலாய்ப்புடன் பேசுவது கேட்டது. எவருக்கும் நடந்தது என்னவென்று அப்போது தெரியாது. காலை விடிந்தவுடன் சித்தி என்னையும் தம்பியையும் உடனேயே கோண்டாவிலுக்குச் சென்றுவிடடுமாறு கூறினார். "கொப்பர் கொல்லப்போறார், இஞ்ச என்ன நடக்கப்போகுதோ தெரியாது, வெளிக்கிடுங்கோ" என்று கூறவும், நானும் தம்பியும் அவசரமாக புறப்பட்டுவிட்டோம்.

நாவலர் மடத்திலிருந்து வல்லை வெளிநோக்கிப் போகும் சாலையில் எம்மைத்தவிர வேறு எவரையும் அந்தக் காலை வேளையில் காண முடியவில்லை. மனதில் பயம் தொற்றிக்கொள்ள, வேகமாக சைக்கிளை உதைந்துகொண்டு போய்க்கொண்டிருந்தோம். மூத்தவிநாயகர் கோயிலடி, குஞ்சர் கடையடி, வல்லை வெளியின் ஆரம்பம் என்று வீதியின் எந்தப்பக்கத்திலும் சனநடமாட்டம் இருக்கவில்லை.

சிறிதுதூரம் வல்லை வெளியில் ஓடியிருப்போம், வீதியின் வலதுபக்க வெளியில் ஒரு சில நூறு மீட்டர்களுக்கப்பால் வரிசையில் இராணுவம் கரவெட்டி நோக்கி தொண்டைமானாறு பகுதியிலிருந்து முன்னேறிக்கொண்டிருந்தது. எம்மை நிச்சயம் கண்டிருப்பார்கள், நினைத்திருந்தால் சுட்டுக் கொன்றிருக்கலாம்.  ஆனால் சுடவில்லை, மெதுவாக சைக்கிளை விட்டுக் கீழிறங்கி உருட்டத் தொடங்கினோம். பின்னால் வந்த வயோதிபர் ஒருவர், "தம்பியவை உதில நிக்காதேயுங்கோ, ஏறி ஓடுங்கோ. எப்ப சுடத் தொடங்குவாங்களோ தெரியாது" என்று சொல்லிக்கொண்டு எங்களைக் கடந்து போனார். அவரைப் பிந்தொடர்ந்து நாமும் வேகமாக சைக்கிளில் ஏறி மீண்டும் ஓடத் தொடங்கினோம்.

வல்லைவெளி என்கிற பெயர் கேட்கும்போதெல்லாம் நினைவிற்கு வருவது இந்தச் சம்பவமும் சந்நிதிக் கோயில் தேர் எரிப்பும் தான்.

  • Like 9
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடருங்கோ அண்ணை

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாயக  நினைவுகளை  இரைமீட்க்கும் போது   அழகான இசை போல மனம் ரசிக்கும் .இளைஞ்சன் போல ஒரு உத்வேகம் வரும் கூடவே மெல்லிய சோகமும்  இழந்த்தை எண்ணி ஏக்கமும் வரும்.  அழகாக கோர்வையாக கதை நகர்கிறது. பகிர்வுக்கு நன்றி தொடருங்கள். கூடவே பயணிக்கிறோம். 

  • Like 1
Posted

அருமை. தொடருங்கள் ரகு. முடிந்தால் படங்களை இணையுங்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, nunavilan said:

அருமை. தொடருங்கள் ரகு. முடிந்தால் படங்களை இணையுங்கள்.

படங்களை இணைக்க முடியவில்லை நுணா

Posted
5 hours ago, ரஞ்சித் said:

படங்களை இணைக்க முடியவில்லை நுணா

சசியின் திரியை பார்க்கவும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

large.Pannaicauseway.JPG.9042cf97c20be8f7f767390fedf132b1.JPGlarge.PannaiCauseway2.JPG.279faadd587e45dedf8610e6326ee4c5.JPGlarge.Nalluratnight.JPG.e3258dd974ee47b41e54e0a81a7cb1ea.JPGlarge.Sangupiddybridge.JPG.70fbfa01adb9cfe66cd6c8e8d8f5811b.JPGlarge.Mannar-Kerathivu-Navatkuzibridge.JPG.9a78d09467258b80439e4676891531d9.JPGlarge.MaviirarNaalset1.JPG.e1cb361ca52b9d44925cfa086389c98f.JPGlarge.Karthikaivilakkiiduatjeyashouse2.JPG.569c9c36f2c2ee07b44a430638b8320e.JPGlarge.VelladiyanRooster.JPG.a81be992dfba8865bab9211dda240b0b.JPGlarge.Guesthousefront.JPG.5d714e85b8ada3a7d928503a389eaf56.JPGlarge.Ammammashousekaraveddy.JPG.522fc9b01dffa6a66e67d49a60ec4d6a.JPG

படம் 1 ‍& 2 பண்ணைப் பாலத்தின் கரை
படம் 2 : நல்லூர் முருகன் கோவில் இரவு வெளிச்சத்தில்
படம் 3 & 4 : நாவற்குழி கேரதீவு மன்னார் வீதி
படம் 5 : மாவீரர் நாள் அலங்காரம்
படம் 6: கார்த்திகை விளக்கீடு ஜெயாவின் வீட்டில்
படம் 7 : வெள்ள‌டியான் சண்டை சேவல்
படம் 8 :அக்கராயன் விருந்தினர் விடுதி
படம் 9 : கரவெட்டியில் அம்மம்மா வீடு

Edited by ரஞ்சித்
பிள்ளைகளின் படம் நீக்கப்பட்டிருக்கிறது
  • Like 9
  • கருத்துக்கள உறவுகள்
Posted

large.Akkarayanroad3.JPG.dc3f7549be014a18f45106adcf5847df.JPGlarge.Akkarayanroad2.JPG.ff3ae4128d61b1051b57977445a88b14.JPGlarge.AkkaraayanRoad.JPG.e1a54b4138b2a2800e6a2ba10100daa9.JPGlarge.AkkarayanPaddyfield.JPG.63b9ac53b8758e8083a124413492f7e4.JPGlarge.Akkarayancoconutplantation.JPG.b00b53f4796b06f3cbcd4b2c4b07895a.JPG

படம் 1,2 & 3 : அக்கராயன் சாலையும் ஓரத்தில் சோலையும்
படம் 4 : அக்கராயம் கமம்
படம் 5 : அக்கராயன் தென்னந்தோட்டம்

  • Like 9
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

large.MaaviirarNaalvalaivu.JPG.62b86801af48e841c5b2b7cef0f2e2f7.JPGlarge.MaviirarNaalwinaividam2.JPG.5bc754a0d31110719d63f12e43a039c3.JPGlarge.MaviirarNaalset1.JPG.5605a4cac22443593253400345594e9c.JPGlarge.BigtreeAkkarayan.JPG.e2e8eb5c4006b0e0d29ce7bde64c71e2.JPGlarge.Akkarayanguesthousebridge.JPG.13bb5994411eb910e93cc6d2cbab8f80.JPG


மாவீரர் நாள் வளைவு கிளிநொச்சி
மாவீரர் நாள் நினைவு இடம் அக்கராயன்
மாவீரர் கொட்டகை கிளிநொச்சி
உயர்ந்த மரம், அக்கராயன்
ஜெயரட்ணத்தின் விருந்தினர் வீட்டின் வாய்க்காலின் மேலான சீமேந்துக் கட்டு

Edited by ரஞ்சித்
தனிநபர்களின் படம் நீக்கப்பட்டிருக்கிறது
  • Like 7
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ல்லை வெளியிலிருந்து நெல்லியடி நோக்கி ஓடிக்கொண்டிருந்தது மினிபஸ். வழியெங்கிலும் நான் சைக்கிளில் ஓடித்திருந்த இடங்கள். அன்றைய தென்னோலையினாலும், பனையோலையினாலும் வேயப்பட்ட பதிவான கூரைகளைக்கொண்ட பழைய பலசரக்குக் கடைகளும், சைக்கிள் திருத்தும் நிலையங்களும் மறைந்துவிட்டன. வீதியின் இருமரங்கிலும் சீமேந்தினால் கட்டப்பட்ட கடைகள் முளைக்கத் தொடங்கியிருந்தன. மூத்தவிநாயகர் கோயில் புதிய வர்ணத்தால் பூசப்பட்டு அழகாகக் காட்சியளித்தது. நாவலர் மடத்திலிருந்து நெல்லியடிச் சந்திவரையான பகுதி நன்றாக அபிவிருத்தியடைந்திருந்தது. புதிய கடைகள், வங்கிகள் என்று சுறுசுறுப்பான பகுதியாக மாறியிருந்தது. 

நெல்லியடிச் சந்தியில் என்னை இறக்கிவிட்டார்கள். "இறங்கின உடனே ஓட்டோவில ஏறிப்போடாதை, கனக்கக் காசு சொல்லுவாங்கள். மகாத்மா தியெட்டர் மட்டும் நடந்துவந்து அங்கையிருந்து ஓட்டோ பிடி" என்று சித்தி கூறியது நினைவிற்கு வரவே நடக்கத் தொடங்கினேன். கடைவீதிகளில் சனம் அலைமோதியது. யாழ்ப்பாணத்திற்குப் பிறகு அதிக சனநடமாட்டம் உள்ள பகுதிகளில் நெல்லியடியும் ஒன்றென்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். 

ஒரு ஐந்து அல்லது ஆறு நிமிட நடையில் மகாத்மா தியெட்டருக்கு அருகில் வந்தாயிற்று. வரிசையாக நின்ற மூன்று ஓட்டோக்களில் முதலாவதாக நின்றவரிடம் "உச்சில் அம்மண் கோயிலடிக்குப் போக எவ்வளவு எடுப்பீங்கள்" என்று கேட்டேன். சாரதிக்கு 35 வயதிருக்கும். வலதுகை மணிக்கட்டுடன் வெட்டப்பட்டிருந்தது. இடதுகையினால் ஓட்டோவைச் செலுத்திவருகிறார் போலும். "உச்சில் அம்மண் கோயிலுக்குக்கிட்டவோ அல்லது அதுக்கு முதலோ?" என்று கேட்டார். சித்தியின் பெயரைச் சொன்னபோது புரிந்துகொண்டார். "ஏறுங்கோ அண்ணை, 400 ரூபா தாங்கோ" என்றார். வழியில் பேசிக்கொண்டே போனோம். கையில் என்ன நடந்தது என்று கேட்டேன். சிரித்துக்கொண்டே, "நான் முன்னாள்ப் போராளியண்ணை, தீபன் அண்ணையின்ர குறூப்பில இருந்தனான். சண்டையில் கை போட்டுது. முகாமில இருந்து வெளியில வந்துட்டன். உங்கட தம்பி (சித்தியின் மகன்) எங்களோட‌ கொஞ்சக்காலம் இருந்தவர்" என்று கூறினார். இறுதிப்போர்க்கால நிகழ்வுகள் சிலவற்றை அவர் சொன்னபோது வலித்தது. மிகுந்த அன்புடன் அவர் பேசியது பிடித்துப்போயிற்று. என்னைப்பற்றிக் கேட்டார். 2018 இற்குப்பிறகு இப்போதுதான் வருகிறேன் என்று கூறினேன். 

பேசிக்கொண்டே வீடு வந்தோம். ஆயிரம் ரூபாயைக் கொடுத்தேன். "சில்லறை இல்லையோ அண்ணை?" என்று கேட்க‌, "மிச்சம் வேண்டாம், வைச்சுக்கொள்ளும்" என்று சொன்னபோது, நன்றியண்ணை என்று சொன்னார். அவரின் கதையினைக் கேட்கும்போது அழுகை வந்தது. இவ்வாறானவர்களையல்லவா நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்? என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். இவர்போல் இன்னும் எத்தனைபேர் எமது சமூகத்தில் இருக்கிறார்கள்? எம்மை நம்பியல்லவா எமக்காகப் போராடப் போனார்கள்? இன்று அவர்களின் நிலையென்ன?

அவரை வழியனுப்பி வைத்துவிட்டு அம்மம்மாவின் வீட்டினுள் நுழைந்தேன். எனது வருகையைப் பார்த்துக்கொண்டிருந்த சித்தி, "ஓட்டோவுக்கு எவ்வளவு குடுத்தனீ?" என்று கேட்டார். "நானூறு கேட்டு ஆயிரம் குடுத்தேன்" என்று கூறினேன். "உனக்கென்ன வருத்தமே? ஏன் அவ்வளவு குடுத்தனீ?" என்று கேட்க, "இல்லை, அவர் முன்னாள்ப் போராளி சித்தி, கையும் இல்லை, பாவமாக் கிடக்கு" என்று கூறவும் அவர் அடங்கிவிட்டார்.  

large.Ammammashousekaraveddy.JPG.ecf0527a0adca55c00bf4c2f409a082b.JPG

அம்மாவின் வீட்டின் பெயர் இராணி இல்லம். அதற்கொரு காரணம் இருக்கிறது. எனது அம்மாவுடன் சேர்த்து ஆறு பெண்களும் இரண்டு ஆண்களும் குடும்பத்திலிருந்தனர். எல்லாப்பெண்களுக்கும் இராணி என்ற சொல்லில்த் தான் பெயர் முடிவடையும். அன்னராணி, செல்வராணி, புஷ்ப்பராணி, யோகராணி, இதயராணி, கலாராணி என்று ஆறு ராணிகள். அதனால், ஐய்யா (அம்மாவின் தகப்பனார்) 1960 இல் அவ்வீட்டைக் கட்டும்போது இராணி இல்லம் என்று பெயர் வைத்துவிட்டார். அந்நாட்களில் அப்பகுதியில் கட்டப்பட்ட வீடுகளில் விசாலமானதும் அழகானதுமாக அவ்வீடு இருந்தது. கொழும்பில் எனது குடும்பம் வாழ்ந்த காலத்தில் மார்கழி விடுமுறைக்கு அங்கு வந்து தங்குவோம். எம்மைப்போன்றே யாழ்ப்பாணத்திற்கு வெளியே வாழ்ந்துவந்த அம்மாவின் சகோதரர்களும் அதேகாலப்பகுதியில் விடுமுறைக்கு வருவார்கள் அம்மம்மாவின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று பெரும் பட்டாளமே அவ்வீட்டில் நிற்கும். அம்மம்மாதான் எல்லோருக்கும் கட்டளை வழங்குவது. பாடசாலை ஆசிரியரான அவர் இயல்பாகவே கண்டிப்பானவர். ஆனால், அன்பானவர். 

வீட்டில் உள்ள சின்னக் கிணற்றில் துலாமரத்தினால் அள்ளிக் குளிப்பது ஒரு சுகம். மாமா எல்லாச் சிறுவர்களையும் வரிசையில் இருத்திவைத்து குளிக்கவைப்பார். "உனக்கு மூண்டு வாளி, எனக்கு நாலு வாளி" என்று போட்டி போட்டு மாமாவிடம் வாங்கிக் குளிப்போம். கடைசி வாளியை வார்க்கும்போது "சுகம், சுகம், சுகம்" என்று சொல்லிக்கொண்டே வார்ப்பார். ஏனென்றால், குளிர்தண்ணியில் குளிப்பதால் வருத்தம் ஏதும் வந்துவிடக்கூடாதென்பதற்காக அப்படிச் சொல்வது வழமையாம். 

large.Ammammaasmangotree.JPG.2d7ee0b7900d68ef2c3fce529054a245.JPG

அப்படியிருந்த வீட்டில் இப்போது சித்தி மட்டும் ஒற்றை ஆளாக வாழ்ந்துவருகிறார். அன்றிருந்த கலகலப்பும், மக்கள் கூட்டமும் அற்றுப்போய் வெறிச்சோடி அமைதியாகக் கிடந்தது எங்கள் அம்மாமாவின் வீடு. சிறுவயதில் வீட்டின் விறாந்தையில் இருந்து விளையாடிய இடங்களை ஆசையுடன் தொட்டுப்பார்த்தேன். மழைகாலத்தில் கப்பல்விட்டு விளையாடிய முன் விறாந்தை, பின்முற்றத்தில் பரந்து விரிந்து வளர்ந்து அப்பகுதியெங்கும் இலைகளையும் மாம்பிஞ்சுகளையும் கொட்டும் கிளிச்சொண்டு மாமரம் என்று ஒவ்வொரு இடத்தையும் மனம் தேடிப் பார்த்துக்கொண்டது. விறாந்தையில் போடப்படிருந்த வாங்கில் அமர்ந்தபடியே சித்தியுடன் பேசினேன். அவரை இறுதியாக 2022 புரட்டாதியில் அவுஸ்த்திரேலியாவில் பார்த்தேன். திருமண நிகழ்வொன்றிற்காக வந்திருந்தார். ஆகவே, சிட்னியில் இருக்கும் குடும்பங்கள் குறித்து நலம் விசாரித்தார். பின்னர் ஊர்க்கதைகள் மேடைக்கு வந்தன. ஒரு இரண்டு மணிநேரமாவது பேசியிருப்போம், "குளிச்சுப்போட்டு வா சாப்பிடுவம்" என்று கூறவும் பழைய நினைப்பில் கிணற்றில் துலாவினால் அள்ளிக் குளிக்கலாம் என்று போனால் துலாவைக் காணோம். "எங்கே சித்தி துலா?" என்று நான்கேட்க, "இந்தவயசில என்னால துலாவில அள்ளிக் குளிக்க ஏலுமே? உள்ளுக்கை வக்குக்கட்டியிருக்கிறன், மோட்டர் போட்டால் தண்ணிவரும், அங்கை போய்க்குளி" என்று சொன்னார். அங்கிருந்த வெய்யில்ச் சூட்டிற்கும், வியர்வைக்கும் குளிரான நீரில் அள்ளிக் குளித்தது உடலுக்கு மிகுந்த புத்துணர்ச்சியைத் தந்தது. ஆசைதீரக் குளித்தேன். குளித்து முடிந்து வந்ததும், அருகில் வசிக்கும் இன்னொரு சித்தியும் இணைந்துகொள்ள மதிய உணவு உட்கொண்டோம். சித்தியின் சமையல் அசத்தலாக இருக்கும். கோழி, ஆடு, கத்தரிப்பொரியல், இறால்ப்பொரியல், பருப்பு என்று அட்டகாசப்படுத்தி வைத்திருந்தார். பசியொரு புறம், அவரது சமையலின் சுவை இன்னொருபுறம் என்று ஆகிவிட இருமுறை போட்டுச் சாப்பிடாயிற்று. மாம்பழம் வெட்டிவைத்திருந்தார். அதையும் ருசித்தாயிற்று.

 தொடர்ந்து கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம். "இண்டைக்கு இங்கதானே நிற்கிறாய்?" என்று சித்தி கேட்கவும், "இல்லைச் சித்தி உங்களையும் மற்றச் சித்தியையும் கூட்டிக்கொண்டு சிஸ்ட்டர் அன்ராவைப் பாக்கப் போயிட்டு, நீங்கள் திரும்பி வாங்கோ, நான் யாழ்ப்பாணத்திலை நிற்கிறன்" என்று சொன்னேன். அவருக்கு அது அவ்வளவாக மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. "ஏன், நிக்கிறன் எண்டுதானே சொன்னனீ? இப்ப ஏன் இல்லையெண்டுறாய்?" என்று மீண்டும் கேட்டார். "இல்லைச் சித்தி, நாளைக்கு வன்னிக்குப் போறதெண்டு நெய்ச்சிருக்கிறன். இங்க நிண்டுட்டு நாளைக்குக் காலையில யாழ்ப்பாணம் போய் பிறகு வன்னிக்குப் போறதெண்டால் நேரம் காணாது. அடுத்தநாள் கொழும்புக்கும் போறன், குறை நெய்க்காதேங்கோ" என்று கூறினேன். அதன்பிறகு, "உன்ர" விருப்பம் என்று விட்டுவிட்டார். 

மாலை 4:30 மணிக்கு சித்தியின் வீட்டிற்கு அருகில் சொந்தப் பாவனைக்கென்று ஓட்டோ ஒன்றினை வைத்திருக்கும் நண்பர் ஒருவரை எம்மை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டோம். நண்பர் ஆதலால் யாழ்ப்பாணம் போய்வர 3500 ரூபாய்கள் மட்டுமே கேட்டார். நியாயமான விலைதான்.

கடும் மழை பெய்யத் தொடங்கியது. முன்னால் செல்லும் வாகனத்தைப் பார்க்க முடியாதளவிற்கு மழை. ஓட்டோவின் இருபக்கத்திலும் இருந்த ரப்பர் சீலையினை சாரதி இறக்கிவிட்டார். மெதுமெதுவாக யாழ்ப்பாணம் நோக்கிய எமது ஓட்டோப் பயணம் ஆரம்பித்தது. வழிநெடுகிலும் அவருடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டு வந்தேன். நான் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறேன் என்பதால் இடங்கள் குறித்து எனக்கு அவ்வளவாகத் தெரியாது என்று நினைத்திருக்கலாம். ஆகவே, வழியில் பலவிடங்களின் பெயர்களைக் கூறிக்கொண்டு வந்தார், நானும் தெரியாவர் போல்க் கேட்டுக்கொண்டு வந்தேன்ஊரில் உள்ள பிரச்சினைகள், அரசாங்கம், இளைஞர்கள் என்று  பலவிடயங்கள் குறித்துக் கூறினார். கலியாணக் கொண்டாட்டங்கள், வெளிநாட்டுக் காசு படுத்தும் பாடு என்றும் அலசப்பட்டன. சித்திமார் இருவரும் அமைதியாக இருக்க நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே வந்தோம்.

Edited by ரஞ்சித்
  • Like 9
  • கருத்துக்கள உறவுகள்
Posted

5:30 மணியளவில் பாசையூரை அடைந்தோம். ஆட்டோச் சாரதியை வீதியில் காத்திருக்கச் சொல்லிவிட்டு சிஸ்ட்டர் அன்ராவை பார்க்க கட்டடத்தின் உள்ளே நுழைந்தோம். எங்களை விருந்தினரை வரவேற்கும் அறையில் அமரச் சொல்லிவிட்டு அவரை சில நிமிடங்களின் பின்னர் அழைத்து வந்தார்கள். என்னுடன் வந்த மற்றைய இரு சித்திகளும்கூட சிஸ்ட்டர் அன்ராவை பல மாதங்களுக்குப் பிறகுதான் காண்கிறார்கள். ஆகவே, அவருடன் இருந்து பேச ஆரம்பித்தோம். ஒவ்வொருவராக எங்களிடம் விபரங்களைக் கேட்கத் தொடங்கினார் அவர். சில விடயங்களைப் பற்றிப் பேசியபோது அவருக்கு அதுகுறித்த நினைவுகள் எதுவும் இருக்கவில்லை. ஆகவே, முதன்முறையாகக் கேள்விப்படுவதுபோல‌ நாம் கூறியவற்றைக் கேட்டுக்கொண்டிருந்தார். 

அவர பேச்சில் ஈடுபடும் ஆர்வம் நேரம் செல்லச் செல்ல குறைவடைவது தெரிந்தது. சிறிது நேரத்திற்குப் பின்னர் என்னுடன் வந்த சித்திமாருடன்  நான் பேசிக்கொள்ள சிஸ்ட்டர் அன்ரா அமைதியாக எங்கள் மூவரையும் பார்த்துக்கொண்டிருந்தார். ஏன் அமைதியாகவிருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு சிரிப்பைத் தவிர வேறு பதில் இல்லை. எனக்குப் புரிந்தது. அவரால் தொடர்ந்து அங்கே இருக்க முடியவில்லை. சரி, அவருக்கு இனிச் சிரமத்தைக் கொடுக்கக் கூடாது என்று எண்ணிவிட்டு, "உங்களை நாளைக்கு வந்து சந்திக்கலாமா?" என்று கேட்டேன். "ஏன், இண்டைக்குத்தானே வந்தனீர், ஏன் நாளைக்கும்?" என்று அவர் கேட்கவும், "அவன் நாளண்டைக்கு அவுஸ்த்திரேலியாவுக்குப் போயிடுவான் , இனி எப்ப வாறானோ தெரியாது. வந்து ஒருக்கால் பயணம் சொல்லிப்போட்டுப் போகட்டுமன், ஏன் வேணாம் எண்டுறீங்கள்?" என்று ஒரு சித்தி கூறவும், "அப்ப சரி, பின்னேரம் 5 மணிக்குப்பிறகு வாருமன்" என்று  சொன்னார். 

அவரது நிலை எனக்குப்புரிந்தது. கன்னியாஸ்த்திரியாக இருந்த காலத்தில் .பொ. சாதாரணதரம் வரை கணித ஆசிரியராக பல பாடசாலைகளில் பணிபுரிந்தவர். கற்பித்தல் முடிவடைந்த காலத்திற்குப் பின்னர் யாழ்ப்பாணம் திருக்குடும்பக் கன்னியாஸ்த்திரிகள் மடத்திற்குப் பொறுப்பாக இருந்தவர். மத நிகழ்வுகள், மக்கள் பணிகள், உளநலச் சேவைகள் என்று மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்றியவர்.தேசியத்தின்பால் மிகுந்த பற்றுக்கொண்ட அவர் வன்னியில் போயிருந்து பல கிராமங்களில் புலிகளின் மருத்துவப் பிரிவு மற்றும் பொதுமக்கள் மனோவியல் சேவைகள் போன்றவற்றில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டவர். சி -  90 எனப்படும் மோட்டார் சைக்கிளில் எப்போதும் சுறுசுறுப்பாக வலம்வரும் அவர் தன்னால் நடக்க இயலாது போகும்வரை சமூகத் தொண்டில் ஈடுபட்டவர். 2002 இல் புலிகளுக்கும் ரணில் அரசிற்கும் இடையே இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது ஏ- 9 பாதை திறப்பு நிகழ்விற்காக இவரும் சென்றிருந்தார். ஆக, சமூகத்திற்காக இடைவிடாது தொண்டாற்றி, பலருக்கும் உதவிய தன்னால் இன்று தன்னைத்தானே பார்த்துக்கொள்ள முடியாமல் இருப்பதென்பது கவலையளிப்பதாகவே எனக்குப் பட்டது. தனது சாதாரண கடமைகளைச் செய்யவே இன்னொருவரின் உதவி தேவைப்படும் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீழ்ந்து ஏற்பட்ட காயத்தினையடுத்து பிறரின் உதவியுடனேயே கட்டிலில் அமரவும், எழுந்துகொள்ளவும், சக்கர நாற்காலியில் தன்னை ஏற்றி இறக்கவும் முடிகிறது என்றகிவிட்டபோது, தன்னைப் பார்க்க வருபவர்களை அடிக்கடி வரவேண்டாம் என்று அவர் கோருகிறார் என்பதும் புரிந்தது. ஆகவேதான் இன்று மாலையும் வந்துவிட்டு நாளையும் வரப்போகிறேன் என்று நான் சொன்னபோது அவரை அறியாமல் "ஏன்" என்று கேட்டுவிட்டார் என்பதையும் புரிந்துகொண்டேன், ஆகவே, முடிந்தால் வருகிறேன், இல்லையென்றால் தொலைபேசியில் அழைக்கிறேன் என்று கூறிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்று கிளம்பினோம். 

வெளியில் இன்னமும் மழை பெய்துகொண்டிருந்தது. எமக்காகக் காத்துநின்ற ஓட்டோச் சாரதியுடன் மீண்டும் பேச்சுக்கொடுத்துக்கொண்டே ஆரியகுளம் நோக்கிப் பயணமானோம். ஆரியகுளத்தை அடைந்ததும் சித்திமார் இருவருக்கும் பயணம் சொல்லி வழியனுப்பி வைத்துவிட்டு கண்ணாதிட்டியில் அஅமைந்திருக்கும் மைத்துனர் வீட்டிற்கு நடக்கத் தொடங்கினேன். மழை இன்னும் மெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது.

 

நாளை வன்னிநோக்கிய பயணம் என்று மனம் சொல்லிக்கொண்டது.

  • Like 7
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 24/1/2024 at 17:45, ரஞ்சித் said:

large.Ammammashousekaraveddy.JPG.522fc9b01dffa6a66e67d49a60ec4d6a.JPG


படம் 9 : கரவெட்டியில் அம்மம்மா வீடு

இப்படி ஒரு வீட்டைப் பார்த்த நினைவு உள்ளது

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 25/1/2024 at 17:06, ரஞ்சித் said:

கடைசி வாளியை வார்க்கும்போது "சுகம், சுகம், சுகம்" என்று சொல்லிக்கொண்டே வார்ப்பார்

சின்ன வயதில் இப்படி நானும் குளிப்பாட்டப்பட்டிருக்கின்றேன். 😊

மறந்ததை நினைவுக்கு கொண்டு வந்ததற்கு நன்றி.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, கிருபன் said:

இப்படி ஒரு வீட்டைப் பார்த்த நினைவு உள்ளது

உண்மையாகவா? அப்படியானால் நீங்கள் கரவெட்டியில் வாழ்ந்திருக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கார்த்திகை 29. 

நான் இலங்கைக்கு வந்த காரணங்களில் இரண்டாவது முக்கியமானது. முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம்.

2009 வைகாசியிலிருந்து முள்ளிவாய்க்கால் எனும் பெயர் எனது மனதில் மிக ஆளமாகப் பதிந்துவிட்டது. எனது இனத்தின் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட இனக்கொலையும், எமது ஒரே நம்பிக்கையாகவிருந்த போராட்டம் முற்றாக அழிக்கப்பட்டதும், தாயக விடுதலைக்கான கனவு முற்றாகக் கலைந்துபோனதும் இந்த இடத்தில்தான். பல்லாயிரக்கணக்கான எனது சொந்தங்களின் குருதி வழிந்து உறைந்துபோனதும் இந்த மணற்றரையில்த்தான். ஆகவே, முள்ளிவாய்க்கால் என்கிற பெயர் உச்சரிக்கப்படும் ஒவ்வொரு கணமும் மனதில் தாங்கொணாத் துயரும், ஏமாற்றமும், விரக்தியும் வந்துசேர்ந்துவிடும்.

காணொளிகள் மூலம் முள்ளிவாய்க்காலைப் பார்க்கும்போது அப்பகுதியில் இருந்து காற்றோடு காற்றாகக் கலந்து மாவீரரினதும், மக்களினதும் ஆன்மாக்களை மனம் தேடும். அவர்களின் உயிர் கடற்காற்றோடு கலந்து இன்னும் அங்கேயே இருப்பதாக மனம் நினைக்கும். ஆகவே அந்தவிடத்தைப் போய்ப்பார்த்துவிடவேண்டும் என்பது எனது நெடுநாள்த் தவம். ஆகவேதான் இலங்கை நோக்கிய எனது அண்மைய பயணத்தை அதற்காகத் தேர்ந்தெடுத்தேன்.

இலங்கைக்கான  பயணம் ஓரளவிற்கு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முள்ளிவாய்க்கால் பயணத்தை மைத்துனர் மூலம் ஒழுங்குசெய்திருந்தேன். தனது வேலைக்கு லீவு போட்டுக்கொண்ட அவர் தனது இளைய மகனையும் அப்பயணத்திற்கு அழைத்திருந்தார். இப்பயணத்தில் மைத்துனரும் பங்குகொள்வதற்கு அவருக்கென்றொரு காரணமும் இருந்தது.

மைத்துனரும் அவரது குடும்பமும் 2009 ஆம் ஆண்டு வைகாசி 17 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, முகாமில் வதைபட்டு சில மாதங்களின் பின்னர் வெளியே வந்தவர்கள். 2008 இலிருந்து 2009 வரையான படுகொலைகளையும் இறுதி இனக்கொலையினையும் நேரடியாகக் கண்டு மரணத்துள் வாழ்ந்து மீண்டவர்கள். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவந்தபோதும் இனக்கொலையின் ரணங்களும், அவலங்களின் அதிர்வுகளும் அவர்களை மீண்டும் அப்பகுதிக்குச் செல்வதைத் தடுத்தே வந்திருந்தன. ஆனால், நான் இப்பயணம் குறித்து அவரிடம் கேட்டபோது அவரும் வர ஒத்துக்கொண்டார். மேலும், தனது பிள்ளைகளுக்கும் நடத்தப்பட்ட அவலங்கள் குறித்த பதிவுகளை புரியவைப்பதற்கு இதனை ஒரு சந்தர்ப்பமாகவும் அவர் பாவிக்க நினைத்தார். 

  • Like 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலை 7 மணியளவில் முல்லைத்தீவு நோக்கி எம்மை அழைத்துச் செல்வதற்கான வாகனம் வந்து சேர்ந்தது. வாகனத்தின் சாரதிக்கு அருகில் மைத்துனரின் மகன் அமர்ந்துகொள்ள நானும் மைத்துனரும் பின் இருக்கைகளில் வசதியாக அமர்ந்துகொண்டோம். 

வாகனம் கண்டிவீதியூடாக கிளிநொச்சி நோக்கிப் பயணித்தது. வழிநெடுகிலும் முள்ளிவாய்க்கால் குறித்த பேச்சுத்தான். உணர்ச்சிகள் கொந்தளிக்கப் பேசுவதும் பின்னர் அமைதியாவதும் மீண்டும் பேசுவதுமாக கண்டிவீதியில் ஓடிக்கொண்டிருந்தோம். வீதியோரங்களில் அவ்வப்போது தவறாமல் கண்களையும் மனதையும் புண்படுத்திய இராணுவ முகாம்களைக் கடந்துசென்றபோது இயல்பாகவே எழும் ஆற்றாமையும், விரக்தியும் பேச்சுக்களில் கோபமாகக் கொப்புளித்தது. இவர்கள் ஏன் இங்கு இருக்கிறார்கள்? எனும் கேள்வி திரும்பத் திரும்ப மனதிற்குள் வந்துபோனது.  கொடிகாமத்திலிருந்து பச்சிலைப்பள்ளி வரையான பகுதியில் இராணுவ முகாம்களும் அவற்றோடு அவர்களின் விவசாய நிலங்களும் தெரிந்தன. கொல்லப்பட்டவர்கள் போக, விரட்டியடிக்கப்பட்ட தமிழர்களின் காணிகளில் ஆக்கிரமிப்பு இராணுவம் அடாத்தாகத் தங்கியிருப்பது மட்டுமன்றி தமிழரின் நிலவளத்தைச் சுரண்டிக்கொண்டும் இருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனையிறவை நாம் அடைந்தபோது இடதுபுறத்தில் ராணுவ முகாமை ஒட்டி மண்டபம் போன்றதொரு கட்டடம் காணப்பட்டது.  முற்பகுதியில் இராணுவத்தின் சிற்றுண்டிச்சாலை அமைந்திருக்க தென்பகுதியில் இருந்து வந்திருந்த சிங்களவர்கள் பலர் அப்பகுதியில் அமர்ந்திருந்து உணவு உட்கொள்வதும், இன்னும் ஒரு பகுதியினர் தமது இராணுவ வெற்றியின் அடையாளத்தைப் பார்வையிடுவதுமாக இருந்தனர். எமது வண்டியைக் கண்டதும் தடைமுகாமில் வீதியோரத்தில் நின்ற ஆக்கிரமிப்பாளன் மறித்தான். சாரதியிடம் "எங்கே போகிறீர்கள்?" என்று கொச்சைத் தமிழில் கேட்டான். கிளிநொச்சி என்று சொன்னதும் அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பார்த்துக்கொண்டே "எத்தனைபேர் போகிறீர்கள்?" என்று கேட்டான். நால்வர் என்றதும் சரி என்று வழிவிட்டான். "வழமையாகவே மறிப்பார்களோ?" என்று நான் கேட்டபோது, "இல்லை, மாவீரர் நாள் முடிந்த கையோடு கெடுபிடி அதிகமாக இருக்கிறது" என்று சாரதி சொன்னார்.  ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி நோக்கிய பயணம் மனதிற்கு கடும் அழுத்தத்தைத் தந்தது.   இப்பகுதிகளை மீட்டெடுக்க மாவீரர் கொடுத்த உயிர்க்கொடையும், போராளிகளின் இழப்புக்களும் இன்று வீண்போய்விட்டதே என்கிற ஆதங்கம் மனதில் தவிர்க்கமுடியாமல் வந்துபோனது.

கிளிநொச்சியை அடையும்போது காலையுணவை அங்கே உட்கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். சாரதியும் அம்மாச்சி உணவகத்தினருகே வீதியோரத்தில் வண்டியை நிறுத்தினார். அக்காலை வேளையிலும் உணவகம் மக்களால் நிரம்பியிருந்தது. நியாயமான விலைக்கு தரமான சைவ உணவு. அப்பம், புட்டு, இடியப்பம், தோசை என்று அனைத்து வகை உணவுகளும் உடனுக்குடன் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டுக்கொண்டிருந்தன. சமூகத்தின் அனைத்து மட்டத்திலிருந்தும் மக்கள் அங்கே உணவருந்திக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது. அப்பம், புட்டு, இடியப்பம், தோசை என்று ஆளாளுக்கு ஒவ்வொன்றாக ஓடர் செய்து உண்டோம். சுடச்சுட பரிமாறப்பட்ட உணவு பசிக்கு அமிர்தமாக இருந்தது. உணவை முடித்துக்கொண்டு இஞ்சி போட்ட தேநீர் அருந்தினோம். பணத்தைச் செலுத்திவிட்டு உணவகத்திற்குள்ளேயே இருக்கும் பனம்பொருள் விற்கும் சிறிய கடையில் சத்துமாவும், ஒடியல்மாவும் வாங்கிக்கொண்டேன். தாயகத்தில் வாழும் பெண்களால் தயாரிக்கப்பட்டவை என்பதால் விசேடமாக இருக்கும் என்பது எனது எண்ணம். அதுமட்டுமல்லாமல் அவர்களையும் ஊக்குவிக்க வேண்டும். 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரஞ்சித் said:

உண்மையாகவா? அப்படியானால் நீங்கள் கரவெட்டியில் வாழ்ந்திருக்க வேண்டும்

கரவெட்டி இல்லை. நம்ம ஊர் கரணவாய்.😀 ஆனால் உள்ளொழுங்கை, குச்சொழுங்கை, பனங்கூடல் ஒற்றையடிப் பாதைகள் என்று சைக்கிளில் உழக்கியதால் இந்தப் பிரதேசங்கள் எல்லாம் நன்றாகவே தெரியும்🤓

ஆனால் யாழ்ப்பாணம் நகரம் இப்பவும் தெரியாது

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, கிருபன் said:

கரவெட்டி இல்லை. நம்ம ஊர் கரணவாய்.😀 ஆனால் உள்ளொழுங்கை, குச்சொழுங்கை, பனங்கூடல் ஒற்றையடிப் பாதைகள் என்று சைக்கிளில் உழக்கியதால் இந்தப் பிரதேசங்கள் எல்லாம் நன்றாகவே தெரியும்🤓

ஆனால் யாழ்ப்பாணம் நகரம் இப்பவும் தெரியாது

அது கரணவாயேதான். அது எனது அம்மமாவின் வீடு. நீங்கள் எப்படி அங்கே? 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவர் ஏற்றுக்கொண்ட கொள்கை வேறு நாம் ஏற்றுக் கொண்ட கொள்கை வேறு சுரக்கமாக முடித்திருக்கிறார்.
    • சபாநாயகர் பதவிக்காக எதிர்க்கட்சியில் இருந்து ஒருவரின் பெயர் முன்மொழியப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வு  கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.   அத்துடன், எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் அந்நபரின் பெயர் முன்மொழியப்படும் எனவும் நளின் பண்டார கூறியுள்ளார்.  சபாநாயகர் பதவிக்கு எதிர்கட்சி முன்மொழியவுள்ள நபர் - தமிழ்வின்
    • குத்தரிசிக் கஞ்சியா பச்சையரிசிக் கஞ்சியா?  (Paanch தலையில் கை வக்க்கப் போகிறார்  🤣) பிழைகளை மூடி மறைப்பவர்களாலும் பிழைகளுக்கு வக்காலத்து வாங்குபவர்களாலும் , பிழைகளை நியாயப் படுத்துபவர்களாலும் அது முடியும்.  ஆனால் நடைமுறையில் வெள்ளையும் சொள்ளையுமாகத் திரிபவர்கள் மேற் கூறப்பட்டவர்களே. 
    • கூடுதலான மொழியறிவு எம்மை மேம்படுத்த உதவும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில், இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியை பூர்த்தி செய்த யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன், இன ஐக்கியத்துக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் கற்கும் வகையில் இலவசமாக வகுப்புக்களை நடத்திவரும் சூரிய நிறுவகத்தையும், அதன் நிறுவுனர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் ஆளுநர் பாராட்டியுள்ளார். இரண்டாம் மொழி இங்கு சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்பது இந்த நாட்டில் எங்கும் சென்று சேவையாற்றக் கூடிய வாய்பை உருவாக்கும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.   மேலும், எமது திறன் மற்றும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து! - ஐபிசி தமிழ்
    • படு மோசமான கொலைகளுக்கும் அதை செய்த கொலைகாரர்களுக்கும்   கூட வக்காலத்து  வாங்கி அதை நி யாயப்படுத்துவது தான் அந்த அரிசிக்கஞ்சி. 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.