Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

“ கப்பு முக்கியம் “ 

“வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருக்கும் தாழமுக்கம் ரெண்டு நாளில் வலுப்பெற்று கொட்டும் மழையோடு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்” எண்டு வானிலை அறிக்கையை radio வில சொல்லிக் கொண்டிருந்திச்சினம். இதைக் கேட்ட மனிசி “சூறாவளி வந்தாலும் வரும் கொஞ்ச நாளைக்கு வள்ளம் போகாது இண்டைக்காவது மீன் வாங்கித்தரலாம் தானே“ எண்டு கேக்க, சரியெண்டு வெளிக்கிட்டன். 

எங்க மீன் வாங்கினாலும் பாசையூர் மீன் மாதிரி ருசி இருக்காது. அதோட சந்தைக்குப் போய் விடுப்புப் பாத்த படி, வள்ளம் வாறதை, மீன் இறக்கிறதை , அதைக் கூறிறதை எல்லாம் ரசிச்ச படி, wholesale விலை வாசியை தெரிஞ்சு கொண்டு அப்பிடியே சந்தையில சில்லறை வியாபாரத்தில மீனை வாங்கி வெட்டிக்கொண்டும் வரலாம். மாரிகாலத்தில பிடிக்கிற மீன் ருசி கூட , அதிலேம் மழைவெள்ளம் கடலில கலக்கிற நேரம் வாற குதிப்பு மீன் தனி taste. 

கைபிடீல மூண்டு shopping bag உள்ள வைச்சு கொழுவின படி இருந்த plastic கூடையோட சைக்கிளை உழக்கினன். 

மெல்லப் போய் அந்தோனியாரைத் தாண்டி கடற்கரைப் பக்கம் திரும்பின உடனேயே ஒரு காலநிலை மாற்றம் வந்த மாதிரி இருந்திச்சுது. கடற்கரை ரோட்டில திரும்பக் கடல் எங்க முடியுது மேகம் எங்க தொடங்குது எண்டு விளிம்பு தெரியாம இருந்த கடலுக்குள்ள மழை பெய்யிறது மட்டும் தெரிஞ்சுது.

மழை பெய்யிறதை ரசிக்கிற மாதிரி மழை இந்தா பெய்யப் போறன் எண்டு மேகம் மூடிக்கொண்டு வரேக்கேம் ர(ரு)சிக்கலாம் . காலமை கருமையாகி காகம் பறக்கிறது தெரியாமல் கொக்கு மட்டும் வெள்ளை வெளேர் எண்டு தெரியிற மேகம். இன்னும் கொஞ்சம் உழக்க அடிக்கிற குளிரில காது மட்டும் சூடாக, முகத்தில படுற குளிர் காத்து காதில படேக்க சுள்ளெண்டு குத்திற இன்பமான வேதனை, முயற்சி செய்தும் நிறுத்தேலாமல் கிடுகிடுக்கிற பல்லு , இழுத்த மூச்சு சுவாசப்பையோட நிக்க அடிவயித்தால காலுக்குள்ள இறங்கி காலை மட்டும் நடுங்கப் பண்ணிற குளிர், ஒடிற எங்களை விட்டிக் கலைச்சுக்கொண்டு சடசடவெண்டு சத்தத்தோட கலைச்சுக்கொண்டு வாற மழை எண்டு ரசிச்சுக்கொண்டு போக , அதை ரசிக்கவிடாம ஒண்டுரெண்டு மழைத்துளி தலையில விழ இன்னும் கொஞ்சம் இறுக்கி உழக்கினன். 

திரும்பிப் பாக்க கடலுக்க மட்டும் பெஞ்ச கன மழை அலையோட கரைப்பக்கம் வாறது தெரிஞ்சுது. காத்தோட மழை பெய்யிறதையும் அந்த இருட்டுக்குள்ள இருந்து வாற அலையில வள்ளங்கள் எழும்பி விழுந்து வாறதைப்பாக்க, “மெழுகுவர்த்தி ஏத்தி , மண்டியிட்டு “ மாதாவே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மகனை நீ தான் இந்தப் புயலில இருந்து காப்பாற்ற வேண்டும் என்று தாய் மன்றாடினாள் “ எண்டு ஐஞ்சாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில வாசிச்ச ஞாபகம் வந்திச்சுது. 

கடற்கரை ரோட்டால அப்பிடியே போக , MGR சிலைக்கு போன கிழமை நடந்த விழாவுக்குப் போட்ட மாலை காத்துக்குப் பறந்து கொண்டிருந்திச்சுது. முன்னால இருக்கிற தேத்தண்ணிக்கடையில “ தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான் “ எண்டு situationக்கு ஏத்ததாய் TMS பாடினார். சந்தையடியில மழைக்குளிர் எண்டால் என்ன எண்டு கேக்கிற சமூகம் , மற்றச் சனத்தின்டை சாப்பாட்டுக்காய் ஓடிஓடி வேலை செய்து கொண்டிருந்தது.

இந்த மழைக்கேம் நாலு பேர் காத்துப் போன பந்தைப் போட்டு அடிச்சுக்கொண்டு இருந்தாங்கள். பேருக்கு மட்டும் அது கடற்கரை ஆனாலும் முள்ளோ கல்லோ குத்தாம மண்ணில நடக்கவும் ஏலாது , முக்கிக் கடல்ல குளிக்கவும் ஏலாது . ஆனாலும் அலைக்கு கூட அரிக்காத கடற்கரை கல்லெல்லாம் கால் மிதிப்பில கரையிற அளவுக்கு அங்க விளயாட்டு நடக்கும் . இருட்டுக்க கடல்ல இருக்கிற மீனே தெரியிறவன் கண்ணுக்கு பந்து எப்பவும் தெரியும் எண்டதால விளையாட்டுக்கு நேரம் காலம் கிடையாது. 

என்னதான் கிரிக்கட் நல்ல விளையாட்டா இருந்தாலும் அது நெச்ச உடன எல்லா இடத்திலேம் விளயாடேலாது. அதோட Cricketஐப் பற்றி அதை விளயாடினவங்கள் மட்டும் தான் கதைப்பாங்கள். ஆனால் football அப்பிடியில்லை விளையாடின ஆக்களிலும் பாக்க விளையாட்டைப் பாக்கிற ஆக்கள் கதைக்கிறது கூட . யாழ்ப்பாணத்தில கூடுதலா விளையாடிறதும் விரும்பிப் பாக்கிறதும் football தான். விளையாட்டுத் தொடங்க முதல் இருந்து முடிஞ்சு வீட்டை போனாப்பிறகு கூட பரபரப்பா பாக்கிறதும் கதைக்கிறதும் football தான். 

இந்த ஊரில வீட்டில என்ன தான் வசதி் இல்லாட்டியும் ஒவ்வொரு வீட்டிலேம் ஒரு Maradona, Baggio, Ronaldo கனவோட ஒருத்தனாவது இருப்பாங்கள் . சாப்பாடே அவங்களுக்கு பந்தடிக்கிறது தான். நாவாந்துறையில இருந்து பருத்தித்துறை வரை இது தான் நிலமை . அவை இல்லாமல் யாழ்ப்பாணத்தில football இல்லை. 

செல்லடி, துவக்குச்சூடு, மழை எண்டும் பாக்காம ஒவ்வொரு நாளும் தொழிலுக்குப் போறவங்கள் ஆனாலும் தங்கடை ஊர் club விளையாடிற match எண்டா தொழிலுக்கும் போகாம வந்திடுவாங்கள். வந்தவனும் சும்மா நிக்கமாட்டாங்கள். உள்ள போட்டிருக்கிற shorts தெரிய சாரத்தை மடிச்சுக்கட்டீட்டு பந்து போற இடமெல்லாம் தானும் ஓடித்திரிவாங்கள் . coach க்கும் மேலால “ நல்ல தமிழில”சத்தம் போடுவாங்கள். ஆனாலும் தப்பித்தவறி தோத்திட்டால் referee, எதிரணி , தங்கடை அணி எண்டு எல்லாருக்கும் விழும் , பேச்சு மட்டுமில்லை சிலநேரம் அடியும் தான். இப்பிடியான match முடிஞ்ச உடனயே பாஞ்சு வீட்டை ஓடிப் போறது referee மாரும் tournament வைச்சவையும் தான். சிலவேளை பரிசளிப்பு விழா கூட நடக்குறேல்லை, பேப்பரில பாத்துத்தான் முடிவு தெரிய வரும். இயக்கம் இருக்கேக்க சண்டைபிடிச்சா விளையாடத் தடை எண்டு தொடங்கினாப்பிறகு தான் கொஞ்சம் குறைஞ்சுது.

இப்பிடி இருக்கேக்க தான் ஊரில போன கிழமை சமாசத்தின்டை வருசக் கூட்டம் வாசிகசாலையிலை நடந்தது. வரவு செலவுக் கணக்கு முடிய, இந்த முறை சேத்த காசில என்ன செயவம் எண்டு கதை்தொடங்கிச்சுது. 

“ ஒரு வருசம் தடைக்குப் பிறகு போனகிழமை தான் விளையாட விட்டவங்கள் இவங்களை , பெரிய ரோயும் சின்ன ரோயும் என்ன விளயாட்டு , உவன் கெவின் அடிச்ச அடி விண் கூவிச்சுது எண்டாலும் கடைசீல ஒரு goal அடிச்சு அவங்கள் வெண்டிட்டாங்கள், இவங்ககளுக்கு நல்ல சப்பாத்தும் சாப்பாடும் தேவை ,நாங்கள் தான் இந்த முறை சமசத்தால வாங்கிக் குடுக்கோணும்” எண்டு மதி சொன்னதுக்கு கொஞ்சப் பேர் ஒமெண்ட, கனக்கப் பேர் புறுபுறுக்க சமாசத்தின்டை தலைவர் கையைத்தூக்கினார் . அந்தச் சலசலப்பு அடங்க முதல், “ ரெண்டு வருசமா ஊரில நிறையப் பிரச்சினை நான் எத்தினை தரம் சொன்னான் உந்தக் கோயிலை திருத்துங்கோ எண்டு” ஒரு ஆச்சி சொல்ல இளசுகள் கூக்காட்டத் தொடங்கிச்சுதுகள். 

“ கருவாடு காய வைக்க , வலை தைக்க இடம் வேணும்” எண்டு மகளிர் வேண்டுகோளும் வர முடிவெடுக்கேலாமல் கடைசியாய் ஓரமா இருந்த மாஸ்டரைக் கேட்டச்சினம். மாஸ்டர் ஊரில மரியாதைக்கு உரியவர் பழைய football விளையாட்டுக்காரன். “ பிள்ளைகளுக்குப் பிராக்கில்லை, விட்டால் கெட்டுப் போடுவங்கள் இப்பத்தை நிலமையில விளையாட்டுக்குச் செலவு செய்யிறது நல்லம்” எண்டார் மாஸ்டர் . 

விளையாடிறதில்லை விளையாடி வெண்டாத்தான் ஊருக்கு மரியாதை எண்டு முடிவோட, இந்த மூண்டு மாதத்துக்கு சமாகத்துக்கும் , ஐக்கிய விளையாட்டுக் கழகத்துக்கு ஒண்டு காணாது ரெண்டு மீனாத் தாங்கோ , கழகத்துக்கு காசைக்குடுப்பம் ஆனா “ கப்பு “ முக்கியம் எண்ட condition ஓட meeting முடிஞ்சுது. 

வலையை பாறையில காய வைக்க , ரோட்டோரமா மீனைக் காயப்போட , மாதா கோயில் கூரைக்கு ஆரோ பழைய தகரம் ரெண்டைக் கொண்டந்து போட சம்மதிக்க, சமரசம் வந்திச்சுது கூட்டத்தில. 

வள்ளம் கிட்டவர முதலே இஞ்சின் சத்தத்திலையே உசாரான மதி ,“இந்தா வருது “ எண்டு சொல்லி கூற ஆய்த்தமானான். பாத்துக்கொண்டிருந்த வியாபாரிமார் கிட்ட வந்திச்சினம். வள்ளத்தை கரைக்கு கொண்டு வந்து நிப்பாட்டீட்டு வாயை மட்டும் வெட்டின பிளாஸ்டிக் bucket க்கு கட்டி இருந்த நைலோன் நூலைப் பிடிச்சு இறக்கிக் கொண்டு வந்திச்சினம் வள்ளக்காரர்.

கொண்டு வந்த பெட்டியோட கவிட்டுக் கொட்டின கும்பலில ரெண்டு மீன் சமாசத்துக்கும் ஒண்டு கூறிற ஆளுக்கும் எண்டு எடுத்து வைச்சிட்டு கூறத்தொடங்கினான் மதி. குவிச்ச மீன் கும்பலை பரவி விட , கண்ணால நிறை பாத்து , கலந்திருக்கிற மீன் பாத்து , அடிப்படை விலை பாத்து கையில இருக்கிற காசைப்பாத்து வியாபாரிமார் விலை கேட்டு காசைக் குடுத்துக் கணக்கை முடிச்சிட்டு சைக்கிளில இருந்த பெட்டீல கொட்டீட்டு விக்கிறதுக்கு வெளிக்கிட அடுத்த கூறல் தொடங்கிச்சுது. 

இதைப் பாத்த படி, தாண்டிப் போய் சில்லறை வியாபாரீட்டை என்ன மீன் வாங்கிறது எண்டு குழம்பி கடைசீல “சீலையை வித்தாவது சீலா வாங்கோணும்” எண்டு முந்தி ஆச்சி சொன்ன ஞாபகத்தில, சீலாவும், விளையும் வாங்கி, அதோட கூனிறால் கூறும் , நூறு ரூவாய்க்கு காரலும் பொரிக்க எண்டு வாங்கிக் கொண்டு வீட்டை போக மனிசி மண் சட்டியை கழுவி அடுப்பை மூட்டீட்டு பாத்துக் கொண்டிருந்திச்சுது. 

அம்மீல கூட்டரைச்சு சீலாத் துண்டைப் போட்டு வைச்ச மீன் குழம்பும், றால் வறையும், விளைமீன் பொரியலும் சோத்தோட மழைக் குளிருக்க சாப்பிட, அடுத்த நாளும் பாசையூருக்கு சைக்கிள் தன்டபாட்டை போகும். 

Dr. T. கோபிசங்கர்

யாழப்பாணம்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நிழலி said:

அம்மீல கூட்டரைச்சு சீலாத் துண்டைப் போட்டு வைச்ச மீன் குழம்பும், றால் வறையும், விளைமீன் பொரியலும் சோத்தோட மழைக் குளிருக்க சாப்பிட, அடுத்த நாளும் பாசையூருக்கு சைக்கிள் தன்டபாட்டை போகும். 

வாசித்ததும் ஏங்க வைக்கிறது. மீன் சமைக்கும் வாசம் வந்து போகிறது.

எனக்குப் பிடித்தது காளை மீன்.  இங்கே,  ‘குதிப்பு’ மீன் என்று டொக்டர் எதைச் சொல்கிறார்? ஒருவேளை முரல் மீனாக இருக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையில் நல்ல நல்ல பழைய ஞாபகங்கள் எல்லாம் வருது.......!

கடலில் மீன் பிடித்துக் கொண்டு அந்த முகத்துவாரத்துக்கு வாற வள்ளங்கள் பின் பிரிந்து கொழும்புத்துறை ஜெற்றி, பாஷையூர்,காரையூர் என்று போய் தரித்து நிக்கும்......அப்போது வள்ளங்களில் மறித்து நேரடியாக மீன்கள் வாங்குவது சிறப்பானது......ஒன்று ரெண்டு கூடைக்குறைய போடுவார்கள்.....!

2 hours ago, Kavi arunasalam said:

வாசித்ததும் ஏங்க வைக்கிறது. மீன் சமைக்கும் வாசம் வந்து போகிறது.

எனக்குப் பிடித்தது காளை மீன்.  இங்கே,  ‘குதிப்பு’ மீன் என்று டொக்டர் எதைச் சொல்கிறார்? ஒருவேளை முரல் மீனாக இருக்குமா?

இது ஓரா மீனாகத்தான் இருக்கும்.....இடி முழக்கத்துடன் மேகம் கருத்து மழை பெய்யும்போது ஓராக்கள்தான் அடிப் பாறைகளில் இருந்து கூட்டம் கூட்டமாய் கிளம்பி நீருக்கு மேலால் குதித்து வருபவை.  அந்நேரம் பண்ணைப்பாலத்தில் வெட்டுத் துண்டில் (இரை இல்லாமல்) போட்டுப் பிடிப்பார்கள்.....மீன் கூட்டங்களைப் பார்த்து வெடி எறிந்து விட்டு அதோடேயே குதித்து செத்து மிதக்கும் மீன்களை பைகளில் கட்டிக்கொண்டு வருவார்கள்.....இதில் சில ஆபத்துக்கள் உண்டு......வெடி பிந்தி வெடிச்சால் குதிப்பவர் மீனுக்கு முதல் போயிடுவார்......அடுத்தது கோட்டைக்குள் இருந்து சூடுகளும் நடக்கும்......மற்றது அந்நேரம் கடல் கொந்தளிப்பாய் இருக்கும். பாய்ந்து வரும்  இந்த மீன்கள் வந்து கரையோரம் கல்லுகளில் அடிபட்டு கற்குவியலுக்குள்ளும் வீதியிலும் கூட வந்து விழும்......!

நான் அப்போது அருகில் உள்ள கராஜில் வேலை செய்த காலங்களில் இவையெல்லாம் காணக்கிடைக்காத  அனுபவங்கள்......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

வாசித்ததும் ஏங்க வைக்கிறது. மீன் சமைக்கும் வாசம் வந்து போகிறது.

எனக்குப் பிடித்தது காளை மீன்.  இங்கே,  ‘குதிப்பு’ மீன் என்று டொக்டர் எதைச் சொல்கிறார்? ஒருவேளை முரல் மீனாக இருக்குமா?

சாளை மீன்?

குதிப்பு எண்டிறது ஒட்டி மீன் மாதிரி இருக்கும். ஓராவை விடவும் கொஞ்சம் வெளிறிய நிறமாக இருக்கும்!

டாக்குத்தர் பழைய நினைவுகளைக் கிளறிப்போட்டார்..!

  • கருத்துக்கள உறவுகள்

‘சித்தப்பா’ என்றுதான்  அவனை அழைப்போம். கடற்தொழிலாளி. எனது நண்பன். மீன்கள் பிடிக்கும்போது அரிதாக இந்த ‘காளை’ மீன் அகப்படும். அதை சந்தைக்கு அனுப்பாமல், தாங்களே சமைத்துச் சாப்பிடுவதாகவும் மிகவும் ருசியாக இருப்பதாகவும் அவன் என்னிடம் சொல்லி இருக்கிறான். நானும் அதை சாப்பிட ஆசைப்பட, எப்பொழுது அந்த மீன் அவன் விரித்த வலையில் விழுந்தாலும் அது என் வீட்டுச் சட்டிக்குள் வந்து விடும்.

மேற்கொண்டு அந்த காளை மீன் பற்றிய விபரங்கள் எனக்குத் தெரியாது. காளை மீன் சாப்பிட்டு நாலு தசாப்தங்களுக்கு மேலாயிற்று. சும்மா இருந்த சங்கை எடுத்து டொக்டர் ஊதிப் போட்டு போட்டார்.

சென்ற வருடம் அங்கு போயிருந்தபோது நானும் மைத்துனனும் பாசயூர் மீன் சந்தைக்குப் போயிருந்தோம். ஆவலில் துடிக்கத் துடிக்க குவித்து வைத்திருந்த மீன் நண்டு இறால் என்று ஏரளமாக வாங்கிவிட்டோம். பெரிய உரப் பை ஒன்றை வங்கி அதற்குள் எல்லாவற்றையும் போட்டு ஸ்கூட்டரில் ஒருவாறு வீட்டுக்குக் கொண்டு வந்தோம். கிணற்றடியில் தென்னை நிழலில் இருந்து எல்லாவற்றையும் வெட்டி முடிக்க இரண்டு மணித்தியாலங்கள் பிடித்தன. கூழுக்குத் தேவையானவற்றை முதலில் வெட்டிக் கழுவிக் கொடுத்திருந்தோம். மதியம் ஏற்பட்ட அகோரப் பசியில் அன்று குடித்த அளவு கூழ் வாழ்க்கையில் குடித்ததில்லை.

மீண்டும் இப்படியானதொரு தருணத்தை எதிர்பார்த்தபடி... 🙂

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, இணையவன் said:

என்ற வருடம் அங்கு போயிருந்தபோது நானும் மைத்துனனும் பாசயூர் மீன் சந்தைக்குப் போயிருந்தோம். ஆவலில் துடிக்கத் துடிக்க குவித்து வைத்திருந்த மீன் நண்டு இறால் என்று ஏரளமாக வாங்கிவிட்டோம். பெரிய உரப் பை ஒன்றை வங்கி அதற்குள் எல்லாவற்றையும் போட்டு ஸ்கூட்டரில் ஒருவாறு வீட்டுக்குக் கொண்டு வந்தோம். கிணற்றடியில் தென்னை நிழலில் இருந்து எல்லாவற்றையும் வெட்டி முடிக்க இரண்டு மணித்தியாலங்கள் பிடித்தன. கூழுக்குத் தேவையானவற்றை முதலில் வெட்டிக் கழுவிக் கொடுத்திருந்தோம். மதியம் ஏற்பட்ட அகோரப் பசியில் அன்று குடித்த அளவு கூழ் வாழ்க்கையில் குடித்ததில்லை.

மீண்டும் இப்படியானதொரு தருணத்தை எதிர்பார்த்தபடி... 🙂

சின்ன திருத்தம் செய்து கொள்ளுங்கள். (சென்ற) 

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஊரில்

கூழுக்கு கலவாய் மீன்(கூடுதலாக தலை)

கறிக்கு விளைமீன் ஓரா ஒட்டி

பொரியலுக்கு சூடை,சூவாரை,கொய்மீன்.கொய்மீன் குழம்பும் சுவை.ஆனால் முள்ளு.

19 hours ago, நிழலி said:

மெல்லப் போய் அந்தோனியாரைத் தாண்டி கடற்கரைப் பக்கம் திரும்பின உடனேயே ஒரு காலநிலை மாற்றம் வந்த மாதிரி இருந்திச்சுது. கடற்கரை ரோட்டில திரும்பக் கடல் எங்க முடியுது மேகம் எங்க தொடங்குது எண்டு விளிம்பு தெரியாம இருந்த கடலுக்குள்ள மழை பெய்யிறது மட்டும் தெரிஞ்சுது.

இந்த அந்தோனியார் கோவில் பக்கத்திலேயே நல்ல ஒரு நண்பன் இருந்தான்.

பெயர் கனீசியஸ்.கென்றி என்று வீட்டுப் பெயர்.இப்போது ஜேர்மனியில் இருப்பதாக கேள்வி.தொடர்புகள் ஏதும் இல்லை.

வாழ்க்கையில் ஒரேஒரு தடவை ஆமைக்கறி இவரது வீட்டிலேயே சாப்பிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

எமது ஊரில்

கூழுக்கு கலவாய் மீன்(கூடுதலாக தலை)

கறிக்கு விளைமீன் ஓரா ஒட்டி

பொரியலுக்கு சூடை,சூவாரை,கொய்மீன்.கொய்மீன் குழம்பும் சுவை.ஆனால் முள்ளு.

அரைத்து குழம்பு வைக்க சிறந்தது வாளைமீன் .......நிறைய முள்ளு .....அனுபவமிக்கவர்கள் அதை சாய்வாக வெட்டி ஆக்குவார்கள்......அப்போது அந்த முட்களை சுலபமாய் பிரித்து எடுக்க முடியும்......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

அரைத்து குழம்பு வைக்க சிறந்தது வாளைமீன் .......நிறைய முள்ளு .....அனுபவமிக்கவர்கள் அதை சாய்வாக வெட்டி ஆக்குவார்கள்......அப்போது அந்த முட்களை சுலபமாய் பிரித்து எடுக்க முடியும்......!  😂

இன்னுமொரு மீன்பாரை.

இது கருவாடும் நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

அரைத்து குழம்பு வைக்க சிறந்தது வாளைமீன் .......நிறைய முள்ளு .....அனுபவமிக்கவர்கள் அதை சாய்வாக வெட்டி ஆக்குவார்கள்......அப்போது அந்த முட்களை சுலபமாய் பிரித்து எடுக்க முடியும்......!  😂

அடுத்தாநாள் வச்சி சாப்பிடும் வாளை மீன் குழம்பு  அதீத சுவை 
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.