Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF+-+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணத்துக்குப் பொறுப்பு கூறவேண்டியவர் எனக் கூறப்படும் நபரொருவர் தொடர்பான தகவல்களைக் குறித்த மாணவியின் பெற்றோர் வெளிப்படுத்தியுள்ளனர். 

கொட்டாஞ்சேனை – கல்பொத்த வீதியில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பிலிருந்து விழுந்து, கடந்த 29 ஆம் திகதி 16 வயதுடைய மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டார். 

இந்தநிலையில், நேற்றைய தினம் ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டிருந்த அவரது பெற்றோர் தங்களது மகளின் மரணத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். 

இவ்வாறான பின்னணியில் இன்றைய தினம், உயிரிழந்த மாணவியின் வீட்டுக்கு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சென்றிருந்தனர். 

அதன்போது, குறித்த அதிகாரிகளுடன் இடம்பெற்ற உரையாடலின்போது, குறித்த தரப்பினர் தொடர்பான தகவல்களை உயிரிழந்த மாணவியின் பெற்றோர் வெளிப்படுத்தியிருந்தனர். 

அதன்படி, கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி, கொட்டாஞ்சேனையில் உள்ள பிரபல கல்வி நிறுவகம் ஒன்றில் வைத்து அதன் உரிமையாளரால் அவமானத்துக்கு உள்ளாக்கப்பட்டமையே தமது மகளின் மரணத்துக்கான பிரதான காரணம் என, மாணவியின் பெற்றோர் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். 

குறித்த நபர் அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர் எனவும், அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்திருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

குறித்த நபர் தமது கல்வி நிறுவகத்தில் வைத்து, தமது மகளிடம், காவல்துறை முறைப்பாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளமையினால் இனி இங்கே கல்வி கற்ற வரவேண்டாம் என எச்சரித்திருந்ததாகவும், அவர்கள் குறிப்பிடுகின்றனர். 

இந்த சம்பவத்தையடுத்து, தமக்கு உயிர் வாழ்வதற்கு விருப்பமில்லை என தமது மகள் பல தடவைகள் தம்மிடம் கூறியதாகவும், உயிரிழந்த மாணவியின் தாய் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். 

'இங்கும் பல ஆசிரியர்கள் உள்ளனர், உன்னால் அவர்களுக்குச் சிக்கல் ஏற்படலாம் நீ இங்கு வருவதைத் தவிர்த்துக்கொள்' என கூறியமையினால் தமது மகள் மிகவும் உள ரீதியாக அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்தநிலையில், தமது மகளை பாரிய மன அழுத்தத்துக்கு உள்ளாக்கி அவரை உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளிய நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என, குறித்த மாணவியின் தாயார் வலியுறுத்தியுள்ளார்.

https://www.hirunews.lk/tamil/404692/கொட்டாஞ்சேனையில்-தன்னுயிரை-மாய்த்துக்-கொண்ட-சிறுமி-மனித-உரிமைகள்-ஆணைக்குழு-விசாரணை

  • Replies 50
  • Views 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    இச் சிறுமி ராமநாதன் மகளீர் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த வேளை அங்குள்ள கணித ஆசிரியரால் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளார். அங்குள்ள கணித ஆசிரியர் (பெயர்: சங்கரன்) தன் ஆணுறுப்பை இச் சிறு

  • நிழலி
    நிழலி

    இலங்கை ஊடகங்கள் ஊடக தர்மம் என்ற பெயரில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர்களைக் கூட பிரசுரிக்க மறுக்கின்றது. இதுவே கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட பிரச்சனை என்றால், கூசாமல் அத்தனையையும் பிரசுரிப்பர். குற்

  • குமாரசாமி
    குமாரசாமி

    ஊரில் கட்சி மற்றும் அதிகார செல்வாக்குகளால் தான் பல அஜாரகங்கள் நடக்கின்றன. இதை நாம் எல்லோரும் கண்கூடாகவே பார்த்திருப்போம். அதாவது ஊர்களில் பாவிக்கப்படும் வசனம்... "நான் ஆரெண்டு தெரியும் தானே" எண்டால்

Posted Images

இச் சிறுமி ராமநாதன் மகளீர் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த வேளை அங்குள்ள கணித ஆசிரியரால் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளார். அங்குள்ள கணித ஆசிரியர் (பெயர்: சங்கரன்) தன் ஆணுறுப்பை இச் சிறுமிக்கு காட்டியது தொடக்கம் மேலும் பல வழிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளார்.

இச் சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோருக்கு கூற, அவர்கள் பாடசாலை அதிபரிடம் முறையிட்டுள்ளனர். அந்த பெண் அதிபரோ இச் சிறுமிக்கு நிகழ்ந்த அநியாயத்திற்கு குரல் கொடுக்காமல் கணித ஆசிரியரை பாதுகாக்க முனைந்ததுடன், இச் சிறுமியையே குற்றவாளியாக்க முனைந்துள்ளனர்.

தொடர்ந்து அங்கு கல்வி கற்றால், பிள்ளையின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என அஞ்சிய பெற்றோர், அப் பிள்ளையை கொட்டாஞ்சேனையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் சேர்த்துள்ளனர்.

ஆனால் அங்கும் இச் சிறுமிக்கு முன்னைய பாடசாலையில் நிகழ்ந்த பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் தொடர்பான தகவல் பரவியதால் மனரீதியாக கடும் அழுத்தங்களை எதிர்நோக்கியிருந்திருக்கின்றார்.

இதற்கிடையில் கொட்டாஞ்சேனையில் உள்ள ராஜேஸ்வரி தனியார் ரியூசன் சென்ரரிற்கும் இம் மாணவி ரியூசன் கிளாஸ்களுக்காக சென்று கொண்டு இருந்திருக்கின்றார். இவ் தனியார் ரியூசன் சென்ரரின் அதிபர் / நடாத்துபவரான நாராயணபிள்ளை சிவானந்த ராஜா இவ் மாணவியை கேலி பண்ணியதுடன், இனி இங்கு வரக்கூடாது என திட்டி அனுப்பியுள்ளார்.

இதனால் மனம் உடைந்த இச் சிறுமி தற்கொலை செய்துள்ளார்.

இந்த சிறுமியை திட்டி வெளியே அனுப்பிய நாராயணபிள்ளை சிவானந்த ராஜா கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் கட்சியின் சார்பாக தேர்தலில் நின்று தோற்றவர். இன்றும் இவர் தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்கள் மீது கடும் அழுத்தங்களை பிரயோகின்றார் என அறிய முடிகின்றது.

தகவல்களை தொகுத்தது: நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மனவேதனையோடு நான் இந்த பதிவை எழுதுகிறேன். இந்த பதிவை எழுதும்போது மிகவும் பயமும், இன்னும் ஏதோவெல்லாம் எனக்கு தோன்றுகிறது. இவ்வாறு ஒரு பதினாறு வயதுள்ள பெண் குழந்தை இவ்வளவு மனிதர்கள் வாழ்கிற இந்த உலகில் இருந்து மனமுடைந்து தனது மரணத்தை தேடிக்கொண்டது குற்றவுணர்சிக்கு உள்ளாக்குகிறது. டில்ஷி எனது சொந்த சகோதரியை போன்றவர். வாசிப்பின் மீதும், இந்த உலகத்தின் மீதும் அன்பு நிறைந்த குழந்தை அவள். இது தொடர்பில் நான் ஆரம்பத்தில் எழுதாமல் விட்டதற்கு காரணம் குடும்பத்தாரின் மனநிலையை கருத்தில் கொண்டு, இப்போது நான் எழுதுவது அவர்கள் அது தொடர்பில் நியாயம் வேண்டி நின்று நடந்த உண்மைகளை பகிர்வதால், நானும் எழுதுகிறேன்.

டில்ஷி அழகான, அன்பான தாய், தந்தையருக்குள்ள ஒரே குழந்தை, கொழும்பு இராமநாதன் இந்துக்கல்லூரியில் 11 வகுப்பில் கற்று வந்தார். அவர் கல்வியிலும், கலை சார்ந்த விடயங்களிலும் மிகவும் திறமையான பிள்ளை. அன்பான குழந்தை, வீட்டிலோ, உறவினர்களிடத்திலோ அவளுக்கு எந்த பிரச்சினையும் இருந்திருக்க வாய்ப்பில்லை. கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக அந்த குடும்பத்தில் உள்ள மனிதர்களை தெரியும். நல்ல அன்பான மனிதர்கள். அந்த குழந்தையும் அப்படித்தான். பூரண மனநலம் மிக்க திறமையான சகோதரி அவள்.

எங்கள் சகோதரிக்கு அவள் கல்வி கற்ற பாடசாலையின் கணித ஆசிரியர் அவளை பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கத்திற்கு உள்ளாக்கியுள்ளான். இந்த உலகத்தை மிகவும் நல்லது என நம்பிய எனது சகோதரிக்கு இது மிகப்பெரிய ஏமாற்றம். அவள் அந்த கொடூர நிகழ்வுக்கு பிறகு மிகவும் மனமுடைந்து போனாள். அன்பான, ஒழுக்கமான எந்த பெற்றோரால் வளர்க்கப்படும் எந்த பிள்ளையும் இந்த உலகம் இவ்வளவு அசிங்கமானது, தனக்கு படிப்பித்த ஆசிரியரே இப்படி செய்வார் என நினைத்திருக்க வாய்ப்பில்லை.

குறித்த சம்பவத்தை தொடர்ந்து அவளது பெற்றோர்கள் குறித்த ஆசிரியர் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்த போதும், பாடசாலையின் அசட்டை போக்கு, துஷ்பிரயோகங்கம் செய்த, அந்த கேவலமான ஆசிரியரை பாடசாலையில் வைத்து பாதுகாத்ததோடு மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட பிள்ளையின் பக்கம் இல்லாமல், குற்றம் செய்தவனை ஆதரித்து எங்கள் சகோதரியின் மனம் வேதனையடையும் வகையில் தொடர்ந்து நடந்ததால், தனக்கு நடந்த கொடூரத்தை தாங்க முடியாமல் கடந்த இரு நாட்களுக்கு முன் ஐந்தாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டாள்.

இது மிகவும் வேதனையான நிகழ்வு, இதுபோல பரவலாக நடந்தாலும் சட்டம் ஒழுங்காக இல்லாததால், இந்த சமூகம் ஒழுங்காக இவ்விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காததால் தொடர்ந்து டில்ஷி மாதிரியான வாழ வேண்டிய பெண்கள், தற்கொலை செய்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நிகழ்வு வேலியே பயிரை மேய்வது போன்றது.

நாங்கள் படித்த காலங்களில் தந்தை, சகோதரர் போன்ற சிறந்த ஆண் ஆசிரியர்களும் இருந்தார்கள். அதே நேரம் எங்களுக்கு தனியார் வகுப்பெடுத்த, சிலர் சிறிய குழந்தை என்றுகூட பார்க்காமல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்திய ஆசிரியர் இருக்கிறார்கள். அன்று அதை சொல்லக்கூடிய சூழல் எங்களுக்கு இல்லை. இன்று நான் அதை பகிர்கிறேன் Me too. எமது குழந்தைகள் நன்றாக வாழத்தானே இந்த உலகத்தில் எல்லாவற்றையும் உருவாக்கி வைத்துள்ளோம், பாடசாலை, பல்கலைக்கழகம், படிப்பு எல்லாமே, வாழவே பிடிக்காமல் அந்த குழந்தையை இப்படி இந்த சமூகம் தள்ளுமானால் நாங்கள் உருவாக்கி வைத்த எல்லாம் இறந்து விட்டன என்றே அர்த்தம். சில விசயங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவை, அது போன்ற ஒன்று தானே காமம்கூட, அழகான ஒரு விசயம் இப்படி வன்முறையாக, அவளின் விருப்பம் இன்றி ஒரு பெண்ணின் மீது பிரயோகிக்க படும் போது அந்த குழந்தை எப்படி இந்த உலகை எதிர்கொள்ளும், பிள்ளைகளுக்காகதானே ஓடுகிறோம். யாரோ ஒரு பிள்ளை என ஒதுங்கி இருந்தால் நாளை உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கும் இதே நிலைதான். குழந்தைகள் நிம்மதியாக வாழ இந்த உலகத்தை உருவாக்கி கொடுங்கள்.

Justice for Dilshi

பதிவு மூலம்: Raja Narmi

https://www.facebook.com/share/p/19o7TXuNsr/

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கான தண்டனை விரைவாக வழங்கும் விதமாக சட்டமியற்றப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும்.

அயற்கிராமத்தை சேர்ந்த 15 வயதான சிறுமி பாலியல் தொழிலாளியாக இரண்டு பெண்களால் மிரட்டி துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். 2 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டு 3ஆவது முறை கருக்கலைப்பு செய்தபோது ஆபத்தான நிலையில் மருத்துவமனை சென்றதால் மருத்துவர்கள் மூலமாக பொலிசில் முறைப்பாடளித்ததால் செய்தி வெளியே வந்ததாக தெரியவருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

இந்த சிறுமியை திட்டி வெளியே அனுப்பிய நாராயணபிள்ளை சிவானந்த ராஜா கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் கட்சியின் சார்பாக தேர்தலில் நின்று தோற்றவர்.

அவர் ஜேவிபி தற்போதைய தேசிய மக்கள் சக்தி யின் ஆளாம்

  • கருத்துக்கள உறவுகள்

brilient.jpg?resize=750%2C375&ssl=1

மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

கொழும்பு- கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த மாணவி, தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக, இன்று காலை கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்தா வீதிக்கு முன்பாக அமைதியான முறையில் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்தா வீதிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டிருந்த போராட்டம் கொட்டாஞ்சேனை  ராஜேஸ்வரி கல்விக்கூடம் வரை முன்னெடுக்கப்படுகின்றது.

கொழும்பில் உள்ள பிரபல தமிழ் பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்விக் கற்றுவந்த மாணவி ஒருவர் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7வது மாடியில் இருந்து கீழே பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி கல்வி கற்றுவந்த பாடசாலையில் கற்பித்த கணித பாட ஆசிரியர் குறித்த மாணவியை பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளதாக பொற்றோர் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக பாடசாலை நிர்வாகத்திடம் முறையிட்ட போதும் பாடசாலை நிர்வாகம் மாணவியின் மீது போலியாக மனநிலை சரியில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கணிதபாட ஆசிரியரைப் பாதுகாத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

brilient.jpg?resize=750%2C375&ssl=1

இதனை தொடர்ந்து மாணவிக்கு ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் அவமானம் காரணமாக மாணவி விரக்தியடைந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

முன்னதாக பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு அளித்திருந்தபோது  சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு சிறைக்குச் சென்று பின்னர் விடுதலையானார்.

இதனை தொடர்ந்து மாணவியை கொழும்பில் உள்ள வேறு ஒரு பிரபல மகளிர் பாடசாலைக்கு பெற்றோர் மாற்றியுள்ளனர்.
இந்த நிலையில் மாணவி பகுதிநேர வகுப்புக்குச் செல்லும் கற்கை நிலையத்தில் ஆசிரியராக இருந்தவரும், மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியரின் நண்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

class.jpg?resize=600%2C290&ssl=1

தனது நண்பரான கணிதபாட ஆசிரியருக்கு எதிராக மாணவி வழக்கிய முறைபாடு தொடர்பாகவும் மாணவியின் நடத்தை தொடர்பாகவும் தனியார் கல்வி நிலைய ஆசிரியர் தவறான தகவலை திட்டமிட்டு பொது வெளியில் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

இதனால் மன அழுத்தம் மற்றும் அவமானம் தாங்க முடியாமல் குறித்த மாணவி தாம் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 7வது மாடியில் இருந்து கீழே பாய்ந்து தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த ஆசிரியர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதுடன் இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பும் பாடசாலை நிர்வாகவே ஏற்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்னர். உடனடியாக பொலிஸார் மாணவியின் தற்கொலைக்கு பொறுப்புக் கூற வேண்டிய அனைவரையும் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு உரிய தண்டனைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர் கோருகின்றனர்.

இந்நிலையில் இன்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்லர்கள், சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1431222

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாணவியின் தற்கொலை சம்பவம்: பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன்; குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் - மனோகணேசன்

Published By: Vishnu

08 May, 2025 | 12:51 AM

image

(நா.தனுஜா)

பதினாறு வயதுடைய பாடசாலை மாணவியின் தற்கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் எனவும், இதுகுறித்து தான் ஏற்கனவே நாட்டின் பொறுப்புவாய்ந்த நபர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், இவ்வாரம் இதுபற்றி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவியொருவர் அவர் வசிக்கும் தொடர்மாடிக்குடியிருப்பின் 7 ஆவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி கொட்டாஞ்சேனையில் பதிவானது. இச்சம்பவம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மனோகணேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 'கொழும்பு கொட்டாஞ்சேனையில் கடந்த மாதம் 29 ஆம் திகதி 16 வயதான இளம் தமிழ் மாணவி தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பான விபரங்கள் எனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு வருகின்றன' என அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 அத்தோடு அம்மாணவி முதலில் தென் கொழும்பின் பிரபல மகளிர் பாடசாலையொன்றில் கல்வி பயின்றபோது கடந்த வருட இறுதியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சம்பவம், அதுகுறித்து கல்வி வலயம், பாடசாலை, பொலிஸ், நீதிமன்ற விசாரணை விபரங்களையும் தான் பெற்றுக்கொண்டிருப்பதாக மனோகணேசன் கூறியுள்ளார். 

அதேவேளை, 'இத்துயர சம்பவத்தால் பிள்ளையை இழந்து வாடும் பெற்றோருக்கு பிள்ளையை மீண்டும் பெற்றுக்கொடுக்கமுடியாது. அது மிகப்பெரும் துயரம். காலம் தான் அவர்களுக்கு ஆறுதலளிக்கவேண்டும்' எனவும் அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 அதேபோன்று 18 வயதை அடையாத அம்மாணவியை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, அவரது அகால மரணத்துக்குக் காரணமான சகல நபர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் எனவும், இதுகுறித்து தான் ஏற்கனவே நாட்டின் பொறுப்புவாய்ந்த நபர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்திருப்பதாகவும் மனோகணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இவ்வாரம் இதுபற்றி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவிருப்பதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

https://www.virakesari.lk/article/214148

  • கருத்துக்கள உறவுகள்

school-fb.jpg?resize=750%2C375&ssl=1

பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பாடசாலைக்கு முன்னால் போராட்டம்!

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.

பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு முன்னால் இந்த போராட்டம் இடம்பெறுகிறது.

குறித்த போராட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

இந்த போராட்டதால் டுப்ளிகேஷன் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உயிரிழந்த மாணவி குறித்த பாடசாலையின் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகம் இருப்பதாகவும், அதன் விளைவாக மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.

எனவே அந்த மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதேவேளை இன்று காலை கொழும்பு- கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த மாணவி, தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக, இன்று காலை கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்தா வீதிக்கு முன்பாக அமைதியான முறையில் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1431267

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-111.jpg?resize=750%2C375&ssl

கொழும்பில் பாடசாலை மாணவி மரணம்: கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை!

கொழும்பில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவியின் மரணம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், பாடசாலை அதிபரை விளக்கம் கேட்டு வரவழைத்ததாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் உடனடியாக பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது, மேலும் அது கிடைத்தவுடன் தேவையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.

அதேநேரம், தற்போது மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் தற்கொலை செய்து கொண்ட 16 வயது பாடசாலை மாணவிக்கு நீதி கோரி, பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு பிரபல மகளிர் பாடசாலையின் முன் இன்று (08) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்வு செய்து, அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாடசாலையின் ஆண் ஆசிரியரை உடனடியாக இடைநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

குற்றவாளியைப் பாதுகாத்ததாக குறித்த பாடசாலையின் அதிபர் மீதும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியதுடன், அவருக்கு எதிரான அதிருப்தியை வெளியிட்டனர்.

கொழும்பின் பம்பலப்பிட்டியில் உள்ள டூப்ளிகேஷன் வீதியை போராட்டக்காரர்கள் பாடசாலைக்கு முன்னால் மறித்துக்கொண்டிருந்ததால், பொலிஸார், கலவரத் தடுப்பு காவல்துறை அதிகாரிகளை அந்த இடத்திற்கு அனுப்பினர்.

குறித்த மாணவியின் மரணத்திற்கு பின்னர் ஊடகங்களிலும் பேசிய அவரது பெற்றோர், பம்பலப்பிட்டியில் உள்ள அவரது முன்னாள் பாடசாலை ஆண் ஆசிரியர் ஒருவரால் தமது மகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறினர்.

மேலும், அந்தச் சிறுமி இறப்பதற்கு முன்பு, ஒரு தனியார் கல்வி நிலையத்தில் சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

ஆனால் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது.

https://athavannews.com/2025/1431297

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

mano.jpg?resize=700%2C375&ssl=1

மாணவி அம்ஷியின் மரணம் தொடர்பில் அரசியிடம் நீதி கோரிய மனோ கணேசன்!

டில்ஷி அம்ஷிகாவின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெறும் பெற்றோரின் ஆர்ப்பாட்டத்திற்கு நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ள பொலிஸார் தயாராகியுள்ள நிலையில் அதனை தடுத்து நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ‘ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆயுதபோராளிளோ, கலககாரர்களோ அல்ல, அநீதியை தட்டிக்கேட்க வந்தவர்கள் எனவும் மனோ கணேசன் தெரிவித்துத்துள்ளார்.

அத்துடன் மாணவி படித்த தனியார் கல்வி நிலையத்தின் நிறுவனர் உங்கள் கட்சி சார்ந்தவர் எனவும், இதனால் தான் மக்களுக்கு சந்தேகம் வருகின்றது எனவும், எனவே அரசியல் அழுத்தமில்லாத நீதியான விசாரணை வேண்டும்’ எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் குறித்த  விடயம் தொடர்பில் அரசு ஒரு விசாரணைக்குழு ஒன்றை அமைத்து உடனடியாக விசாரிக்க வேண்டும்  எனவும் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Athavan News
No image preview

மாணவி அம்ஷியின் மரணம் தொடர்பில் அரசியிடம் நீதி கோரிய மனோ...

டில்ஷி அம்ஷிகாவின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெறும் பெற்றோரின் ஆர்ப்பாட்டத்திற்கு நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ள பொலிஸார் தயாராகியுள்ள நிலையில் அதனை தடுத்து நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கண...
  • கருத்துக்கள உறவுகள்

கொட்டாஞ்சேனையில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவிக்கு நீதிகோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

Published By: DIGITAL DESK 3

08 MAY, 2025 | 12:08 PM

image

கொட்டாஞ்சேனையில் அண்மையில் உயிரை மாய்த்த பாடசாலை மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை (08) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு மாணவிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

கொட்டாஞ்சேனை விவேகாந்தர் சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, ஹின்னி அப்புஹாமி மாவத்தையில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு முன்னாலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

அத்துடன், கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் அமைந்துள்ள மாணவியின் வீட்டுக்கு முன்னால் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு மாணவியின் பெற்றோருக்கு ஆறுதலை தெரிவித்ததுடன், மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டனையின் முன்நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவித்து தங்களது ஆதரவு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததுடன் உயிரிழந்த மாணவிக்காக ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

இதேவேளை, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள மாணவி ஆரம்பத்தில் கல்வி பயின்ற பாடசாலைக்கு முன்னாலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2025-05-08_at_11.25.32_AM

WhatsApp_Image_2025-05-08_at_11.25.29_AM

WhatsApp_Image_2025-05-08_at_11.25.25_AM

WhatsApp_Image_2025-05-08_at_11.23.13_AM

WhatsApp_Image_2025-05-08_at_11.25.22_AM

d7b268a9-c81f-47b5-8f2b-e6fe8c610de5.jpg

WhatsApp_Image_2025-05-08_at_11.22.56_AM

https://www.virakesari.lk/article/214173

இலங்கை ஊடகங்கள் ஊடக தர்மம் என்ற பெயரில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர்களைக் கூட பிரசுரிக்க மறுக்கின்றது. இதுவே கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட பிரச்சனை என்றால், கூசாமல் அத்தனையையும் பிரசுரிப்பர்.

குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகி பிணையில் வெளியாவனர் பெயர்: சங்கரன்

படம்:

Sankar.png

ராஜேஸ்வரி கல்வி நிலையத்தின் உரிமையாளரும் மாணவியின் தற்கொலைக்கு தூண்டப்பட்டவர் எனச் சொல்லப்படுகின்றவரும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நாராயணபிள்ளை சிவராஜா

படம்:

Sivanantha.png

பிரபல பாடசாலை என்று குறிப்பிடப்படும் பாடசாலையின் பெயர்:

இராமநாதன் மகளிர் கல்லூரி

Edited by நிழலி
மேலதிக விபரங்கள் இணைக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சைக்குரிய ஆசிரியரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு

கொட்டாஞ்சேனை மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படும்  பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின் இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (09)  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறித்த மாணவியின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பிரதமர் ஹரிணி பாராளுமன்றத்தில் குறிப்பிட்டபோதே, முஜிபுர் ரஹ்மான், இந்த விடயத்தில் நீதியான விசாரணைகள் நடப்பதாக தெரியவில்லை என்று சாடினார்.

நீதியான விசாரணைகள் நடக்குமாயின் இந்த விடயத்தில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் ஆசிரியரின் இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுமா என்றும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் இடமாற்றம் மட்டும் போதுமானதல்ல எனவும் கூறினார். R https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/சர்ச்சைக்குரிய-ஆசிரியரின்-வீட்டுக்கு-பொலிஸ்-பாதுகாப்பு/150-357046

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டில்ஷியின் மரணத்துக்கு நீதிகோரி தலைநகரை ஸ்தம்பிதமடையச்செய்த மாபெரும் போராட்டம்

Published By: Vishnu

09 May, 2025 | 02:33 AM

image

(நா.தனுஜா)

பதினாறு வயதுடைய மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரணத்துக்கு நீதிகோரி வியாழக்கிழமை (09) பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர், யுவதிகள், மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் இணைந்து பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பிரபல தமிழ் பாடசாலைக்கு முன்பாக கொட்டும் மழைக்கு மத்தியில் மேற்கொண்ட மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டம் கல்வியமைச்சு உள்ளடங்கலாக சகல தரப்பினரதும் கவனத்தைப் பெற்றதுடன், தலைநகரை ஸ்தம்பிதமடையச்செய்தது.

 கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய டில்ஷி அம்ஷிகா எனும் மாணவி, அவர் வசிக்கும் தொடர்மாடிக்குடியிருப்பின் 7 ஆவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியில் பதிவானது.

இச்சம்பவத்தை அடுத்து குறித்த மாணவிக்கு நீதிகோரியும், அம்மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் பிரபல தமிழ் பாடசாலையொன்றின் கணித ஆசிரியர் மற்றும் அம்மாணவியை பிரத்யேக வகுப்பில் பல மாணவர்கள் முன்னிலையில் முறையற்ற விதத்தில் பேசி அவமதித்தாகக் கூறப்படும் தனியார் கல்வி நிலைய உரிமையாளர் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் 'ஜஸ்டிஸ் ஃபோர் அம்ஷிகா' (உயிரிழந்த மாணவியான அம்ஷிகாவுக்கு நீதி) எனும் ஹாஷ்டக்குடன் பலராலும் பதிவுகள் இடப்பட்டன.

 இவ்வாறானதொரு பின்னிணயில் அம்மாணவியின் உயிரிழப்புக்கு நீதிகோரி வியாழக்கிழமை (8) கொழும்பு கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு முன்பாகவும், அம்மாணவி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பிரபல பாடசாலைக்கு முன்பாகவும் இருவேறு கவனயீர்ப்புப்போராட்டங்களை நடாத்துவதற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் பேஸ்புக் ஊடாக மேற்கொள்ளப்பட்டதுடன், அப்போராட்டங்களில் சகலரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்கப்பட்டது.

 அதன்படி நேற்றைய தினம் கொட்டாஞ்சேனை விவேகானந்தா வீதியிலும், அங்கு அமைந்துள்ள தனியார் கல்வி நிலையம் முன்பாகவும் காலை 10.00 மணியளவில் கவனயீர்ப்புப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

 அதேவேளை பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பிரபல பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமான அமைதிப்போராட்டம் சில மணித்தியாலங்களின் பின்னர் நண்பகல் 12.00 மணியளவில் பெருமளவானோரின் பங்கேற்புடன்கூடிய மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டமாக மாற்றமடைந்தது.

பாலின பேதமின்றி பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் என நூற்றுக்கணக்கானோரின் பங்கேற்புடன் 'நீதி வேண்டும், நீதி வேண்டும்: அம்ஷிகாவுக்கு நீதி வேண்டும்' எனும் கோஷத்துடன் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டம், படிப்படியாக கொழும்பு மாநகரின் முழுமையான கவனத்தைப்பெற்று, தேசிய ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் முக்கிய பேசுபொருளாக மாறியது.

நண்பகல் வேளையில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் பாடசாலை அதிபரை வெளியே வருமாறும், பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கணிதபாட ஆசிரியரைக் கைதுசெய்யுமாறும், உயிரிழந்த மாணவிக்கு உடனடியாக நீதியைப் பெற்றுத்தருமாறும் தொடர்ச்சியாகக் கோஷங்களை எழுப்பியவாறும், 'பெண்களுக்கு உரிமை கிடைக்கவேண்டும் - வார்த்தைகளில் அல்ல, செயல்களில்' மற்றும் 'அம்ஷிகாவுக்கு நீதி' எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், குறித்த கணிதபாட ஆசிரியர் மற்றும் தனியார் கல்வி நிலைய உரிமையாளரின் உருவப்படங்களை செருப்பால் அடித்து தமது கோபத்தையும், ஆற்றாமையையும் வெளிப்படுத்தினர்.

மழைக்கு மத்தியிலும் கலைந்து செல்லாமல், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுடன் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டதுடன், கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப்பிரயோகம் மேற்கொள்வதற்கான வாகனங்களும் தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அதுமாத்திரமன்றி பிற்பகல் ஒரு மணியின் பின்னர் டுப்ளிகேஷன் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. 

இவ்வாறு பாடசாலை வாயிலை மறித்து மாலை வரை போராட்டம் தொடர்ந்த நிலையில், கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரியபண்டாரவுடன் அவ்விடத்துக்கு வருகைதந்த மேல்மாகாண பதில் கல்விப்பணிப்பாளர், இவ்விவகாரம் தொடர்பில் கல்வியமைச்சின் சார்பில் தான் அறிவிப்பொன்றை விடுக்கவிருப்பதாக ஒலிபெருக்கியில் அறிவித்தார்.

அதன்படி குற்றஞ்சாட்டப்பட்ட கணிதபாட ஆசிரியர் புத்தளத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், பொலிஸாரிடமிருந்து அறிக்கையைப் பெற்றுக்கொண்டவுடன் நாளைய (இன்றைய) தினத்துக்குள் அந்த ஆசிரியர் பணி இடைநிறுத்தம் செய்யப்படுவார் எனவும் தெரிவித்தார். அத்தோடு குறித்த மாணவியின் உயிரிழப்பு தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைவதாகவும், இச்சம்பவம் தொடர்பில் விரைவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் உத்தரவாதமளித்தார்.

 போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவ்வறிவிப்பை ஏற்றுக்கொண்ட போதிலும், அவர்கள் அங்கிருந்து கலைந்துசெல்லவில்லை. மாறாக இச்சம்பவம் தொடர்பில் மேலும் வெளிச்சம் பாய்ச்சும் வகையில் பாடசாலை முன்றலில் இருந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.

ஜனாதிபதி செயலகம் முன்பாக அம்ஷிகாவுக்கு நீதிகோரி போராட்டத்தை முன்னெடுத்த அவர்கள், அம்மாணவியின் உயிரிழப்புக்கு நீதிகோரி ஜனாதிபதியிடம் மகஜரொன்றைக் கையளிப்பதற்கு அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் அனுமதிகோரினர். சிறிது நேர தர்க்கத்தின் பின்னர் அம்ஷிகாவின் நடன ஆசிரியை உள்ளடங்கலாக மூவரை ஜனாதிபதி செயலகத்துக்குள் செல்வதற்கு பொலிஸார் அனுமதியளித்தனர்.

 https://www.virakesari.lk/article/214245

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொடுந் துயரம்

sudumanal

பகடிவதையின் மனவக்கிரம் ஒரு பல்கலைக் கழக மாணவனை தற்கொலை செய்ய வைத்த காலம் காயுமுன், கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட பதினாறு வயது பாடசாலை மாணவி ஒருத்தி தற்கொலை செய்கிறாள். இவை தற்கொலை என்ற வகைமைக்குள் அட்டவணைப்படுத்தப் படலாம். ஆனால் யதார்த்தத்தில் இவைகள் கொலைகள்.

அந்த மாணவன் நிர்வாணமாக நிறுத்தப்பட்டு ஒரு கும்பல் வன்முறை வக்கிரத்தின் நடுவில் சுழன்றோட விடப்படுகிறான். இங்கு இந்தச் சிறுமியை தனியார் வகுப்பில் (ரியூசன்) மாணவர்களுக்கு நடுவில் வைத்து அவமானப்படுத்துகிறான் ஒரு ஆசிரியப் பதர். இரண்டுமே பாலியல் வக்கிர மனோபவாவமும், அவமானப்படுத்தி இரசிப்பதுமான ஆணாதிக்க மனக்கட்டமைப்பு நிகழ்த்திய கொலைகள்.

பல்கலைக் கழக பகடிவதை ஒன்றின்போது முன்னர் ஒருமுறை பேசப்பட்ட விடயமாக இருந்த ஒன்றை இங்கு ஞாபகப்படுத்தலாம். ஒரு பல்கலைக் கழகத்தில் நடந்தது இது. நான்கைந்து மாணவன்கள் தத்தமது இடுப்பைச் சுற்றி கட்டிய நூலில் முன்பகுதியில் வாழைப்பழத்தை தொங்கவிடுகின்றனர். அது காற்சட்டையின் சிப்ற் இருக்கும் பகுதிக்கு முன்னால் தொங்குகிறது. ஒவ்வொருவர் முன்னும் ஒவ்வொரு மாணவிகளை முழங்காலில் இருத்துகின்றனர் அவர்கள். அந்த மாணவிகள் பின்னால் கையைக் கட்டியபடி அந்த வாழைப்பழத்தை கடித்துத் தின்ன வேண்டும். அதைச் சுற்றி கொஞ்ச மாணவர்கள் இரசித்துக் கொண்டு நிற்கின்றனர்.

என்னவிதமான வக்கிர மனது ஆணாதிக்க சமூகத்தில் நிலவுகிறது என்பதற்கு இது ஒரு மறக்க முடியாத காட்சி. இவன்கள் ஆசரியன்களாகவோ பேராசிரியன்களாகவோ சேவைத்துறைகளிலோ வரும்போது என்னதான் நிகழும். இத் தொழில்களில் கிடைக்கும் அதிகாரமும் சமூக அங்கீகாரமும் மேலதிகமாகச் சேரும்போது இந்தப் லும்பன்கள் எதைச் செய்வார்கள். இந்தவகைப் லும்பன்கள் மட்டுமல்ல, ஆணாதிக்க வக்கிரம் பிடித்த சமூகப் பொறுக்கிகளும் சந்தர்ப்பம் தேடி அலைகிறார்கள். அல்லது சந்தர்ப்பத்தை பயன்படுத்துகிறார்கள்.

ஒரு பெண்ணை இந்த வக்கிர மனோபாவத்துக்கு வெளியில் வைத்து சக மனிதஜீவியாக பரஸ்பர மதிப்புடன் பழக விடாதபடி நிலவும் தடைகள் உடைக்கப்பட வேண்டும். அதற்கு மாணவர்கள் சிறுவயதிலிருந்தே கற்றுக்கொள்ளவும், அதை வாழ்வியலாக வரித்துக் கொள்ளவுமான தொடக்கத்தை ஆசிரியர்களே தொடங்க வேண்டும். அப்படியொரு சமூகத்தை உருவாக்க தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டிய ஆசிரியன் ஒருவன் செய்யும் இந்தவகை பாலியல் கிரிமினல்தனத்துக்கு சட்ட ரீதியில் இரட்டிப்புத் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இந்த மாணவி சென்ற வருடம் (கொழும்பில்) படித்த பாடசாலையில் ஒரு கணித ஆசிரியனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகிறாள். “வெளியில் சொன்னால் உன்ரை எதிர்காலத்தை இல்லாமல் பண்ணிப் போடுவன்” என எச்சரித்து அனுப்புகிறான் அவன். அவள் அதை தனது பெற்றோர்க்கு சொல்லி அழுகிறாள். பொலிசாரால் அந்த லும்பன் கைது செய்யப்படுகிறான். பின் விடுதலை செய்யப்படுகிறான்.

படிப்பு விளையாட்டு என எல்லாவற்றிலும் ஆர்வம் காட்டிய அந்தச் சிறுமியை அவையெல்லாம் விட்டு விலகுகிறது. பெற்றோர்கள் கவுன்சிலிங்குக்கு அனுப்புகிறார்கள். சக மாணவர்களுக்கு படிப்படியாக தெரியவரும்போது எல்லோரும் அவளை தனிமைப்படுத்துகிறார்கள். இதன்மூலம் அவள் மேலதிகமாக உளவியல் சித்திரவதைக்கும் உள்ளாகிறாள்.

வன்முறை புரிபவர்களை விட்டுவிட்டு, அவனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை தண்டிக்கும் வகையில் உளவியல் பாதிப்புக்கு உள்ளாக்க முடிகிற முரண்நிலை ஆணாதிக்க கருத்தியலுக்குள் வைத்துத்தான் நிகழ்த்தப்படுகிறது என்பதே முக்கியமானது. அவளை வேறு பாடசாலைக்கு மாற்றுகிறார்கள் பெற்றோர். அவள் தனியார் வகுப்புக்கும் படிக்கப் போகிறாள். அங்கும் -அந்த கணிதபாட ஆசிரியனின் நண்பனாக இருக்கும்- ஒரு லும்பன் அவளை நிற்க வைத்து மற்றைய மாணவர்களுக்கு முன் அவமதிப்புச் செய்கிறான். எதுவரை ஓடுவது அவள். அவள் தனது மரணம்வரை ஓடினாள்.

தமக்கு நேரும் கொடுமையை அல்லது பாலியல் சம்பந்தமான பிரச்சினைகளை -பெற்றோரை விடவும்- துணிந்து நம்பிக்கையோடு ஆசிரியர்களிடம் போய்ச் சொல்லி ஆறுதல் அடையும் அல்லது ஆலோசனைகள் கேட்கும் அல்லது உளவழிச் சிகிச்சைபெறும் நிலை இந்த புகலிட நாடுகளில் காணப்படுவதை நினைத்து பெருமை கொள்ள வேண்டி இருக்கிறது. இது ஏன் நமது நாடுகளில் சாத்தியமாகாமல் இருக்கிறது என ஆதங்கப்பட வேண்டியும் இருக்கிறது. “என்ன.. ஒரு வாத்தி வேலைகூடக் கிடைக்கயில்லையா உனக்கு” என சொல்லவைக்குமளவுக்கு ஆசிரியத்துவமும் அரசியல் செல்வாக்கும் பிணைந்துபோய்க் கிடக்கிறது. நேர்மையான வழியிலும் கடின உழைப்பிலும் சேவை மனப்பான்மையுடனும் ஆசிரியத் துறைக்கு வரும் ஆசான்களுக்கு நாம் தலைவணங்க வேண்டும்.

இந்த தனியார் வகுப்பு நடத்தும் லும்பன் கடந்த பாராளுமன்றத்தில் என்பிபி வேட்பாளராக கொழும்பில் போட்டியிட்டதாகச் சொல்லப்படுகிறது. இவனுக்கெல்லாம் அந்த அதிகாரமும் கிடைத்திருந்தால் எப்படி நடந்துகொள்வான்?. இனம் மொழி மதம் கடந்து திறமையானவர்களை ஊழல் இலஞ்சம் இல்லாதவர்களை கழுவியெழுத்து தேர்தலில் களமிறக்கியதாக அல்லது பதவிகள் வழங்கியதாக சொன்ன என்பிபி இது விடயத்தில் வெளிப்படையாக பேசவேண்டிய கடப்பாடு உள்ளது. இதை வைத்து என்பிபிக்கு எதிரான பிரச்சாரம் செய்வது இன்னொரு அயோக்கித்தனம். அதேநேரம் ஒரு பொறுப்பு வாய்ந்த கட்சி தனது கட்சி சார்பாக இதுகுறித்து வெளிப்படையாகப் பேசி, கட்சியிலிருந்து இவனைப் போன்றவர்களை தூக்கி எறிய வேண்டும். சிறுமிக்கு நீதி வழங்கும் முறையில் அரசியல் தலையீடு எதுவுமின்றி நடந்து கொள்ள வேண்டும். கல்வி முறைமைகளில் ஆசிரிய நியமனங்களில் செழுமையாக்கம் செய்ய வேண்டும்.

பாடசாலை ஆசிரியன்களிலிருந்து பல்கலைக் கழக விரிவுரையாளன்கள் வரை இந்தவகை மனவக்கிரம் படைத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது தம்மை அர்ப்பணித்து சேவையாற்றும் ஆசிரியர்களை, விரிவுரையாளர்களை அவர்களின் சமூகப் பங்களிப்பை புறந்தள்ளக்கூடிய மனநிலையை மக்களிடம் தோற்றுவிக்காதபடி பேண, குற்றமிழைத்தவர்களுக்கு இரட்டிப்புத் தண்டனை வழங்க சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுதல் நல்லது.

தமக்கு நடந்ததை வெளிப்படையாகப் பேச ஒரு பெண்ணுக்கு இந்த ஆணாதிக்கச் சமூகம் சுதந்திர வெளியினை அங்கீகரித்து வைத்திருக்கவில்லை. அவ்வப்போது பொதுவெளிக்கு வருகின்ற இதுபோன்ற சம்பவங்களுக்கு அப்பால் பாதிக்கப்பட்ட பெண்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களின் குரலாகவும் எழுந்து இந்தச் சிறுமியின் மரணம் எழுப்பியிருக்கிற கேள்விக்கு அரசும் சமூகமும் என்ன பதிலை வழங்கப் போகிறது!

https://sudumanal.com/2025/05/06/கொடுந்-துயரம்/

லும்பன் - ஒழுக்கக்கேடானவர்கள், சமூகத்திற்குப் பயனற்றவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-38-1.jpg?resize=600%2C300&ss

கொட்டாஞ்சேனை மாணவியின் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று வாதப்பிரதிவாதங்கள்!

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவி, தற்கொலை சம்பவம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் வாதப்பிரதிவாதம் இடம்பெற்றது.

கொட்டாஞ்சேனை மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக சொல்லப்படும் கொட்டாஞ்சேனை பிரத்தியேக வகுப்பின் ஆசிரியரின் இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (09) காலை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உயிரிழந்த மாணவியின் விவகாரம் தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூர்ய பாராளுமன்றத்தில் குறிப்பிட்டபோது அதற்கு கருத்து வெளியிட்ட முஜிபுர் எம்.பி , இந்த விடயத்தில் நீதியான விசாரணைகள் நடத்தப்படுவதாக தெரியவில்லை என்று சாடியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், நீதியான விசாரணைகள் நடக்குமாயின் இந்த விடயத்தில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் ஆசிரியரின் இல்லத்திற்கு 7, 8 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக்கு இடப்படுவார்களா? என்று கேள்வியெழுப்பிய முஜிபுர் ரஹ்மான் , இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் இடமாற்றம் மட்டும் போதுமானதல்ல எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, மாணவியை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய சம்பந்தப்படட ஆசிரியருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் மேலதிக வகுப்பு ஆசிரியருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த பிரச்சினையில் அரசியல் இலாபம் தேடக்கூடாதென சபைமுதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நயக்கவும் இதன்போது கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியரை கைதுசெய்யுமாறு நேற்று கொட்டாஞ்சேனை உள்ளிட்ட சில இடங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இளைஞர்கள் குழு ஒன்று கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1431398

  • கருத்துக்கள உறவுகள்

மாணவியின் மரணத்துக்கு நீதிகோரி மாணவர்கள் கொழும்பில் அமைதி போராட்டம்

Published By: DIGITAL DESK 3

09 MAY, 2025 | 01:23 PM

image

16 வயதுடைய மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரணத்துக்கு நீதிகோரி இன்று வெள்ளிக்கிழமை (09) மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக கொழும்பு, கொட்டாஞ்சேனை, ஜோர்ஸ் ஆர்டி சில்வா மாவத்தை வீதியில் நடைபெறுகிறது.

இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மாணவர்கள் நடை பவணியாக காலி முகத்திடலுக்கு செல்ல உள்ளார்கள். அங்கு  மாலை 4 மணி வரை அமைதி போராட்டத்தை தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

7e6dc384-16bc-43f3-b90b-7a3efcebf5e7.jpg

WhatsApp_Image_2025-05-09_at_12.17.54_PM

WhatsApp_Image_2025-05-09_at_11.26.29_AM

WhatsApp_Image_2025-05-09_at_11.26.30_AM

https://www.virakesari.lk/article/214271

  • கருத்துக்கள உறவுகள்

சமூக வலைதளங்களை நோக்கி மக்களின் ஏக்கங்கள்; அரசாங்கத்தின் பதில்களுக்கெதிராக அனுஷா சந்திரசேகரன் கண்டனம்!

Published By: DIGITAL DESK 2

09 MAY, 2025 | 04:54 PM

image

மாணவி அம்ஷிகா தொடர்பில் அரசாங்கம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டுமே தவிர இழைக்கப்பட்ட அநீதிக்கு சமூக வலைதளங்களில் தீர்வை தேட தேவையில்லை என கூறுவது பொறுத்தமற்றது, இந்த கூற்றுக்கெதிராக நான் எனது கண்டனங்களை தெரிவிக்கிறேன் என சட்டத்தரணியும் சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கொட்டாஞ்சேனையில் கடந்த 29ம் திகதி 16 வயதான, ஒரு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் எம் அனைவரையும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

குறித்த மாணவி ஒரு பிரபல மகளிர் பாடசாலையில் கல்வி கற்றுவந்த நிலையிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியதாகவும் அதனுடன் அந்த பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது. 

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த மாணவி பாடசாலைக்கு அறிவித்தும் கூட இதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படாமல் குறித்த மாணவி பாடசாலையை விட்டு இடைவிலகியதாகவும் அறிய வந்துள்ளது.

இந்நிலையில் இந்த துயர சம்பவம் நிகழ்வதற்கு முன்னராக குறித்த மாணவி அதிக மனவுளைச்சலுக்கு உள்ளாகியிருந்தமையும் தெரியவந்துள்ளது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பில் பெற்றோர்களுக்கு நீதி கிடைக்காத ஒரு அவல சூழ்நிலையிலேயே சமூக வளைத்தளங்கள் வாயிலாக இந்த விடயம் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் தான் அனைத்து தரப்பினரது கண்களும் திறந்து இது தொடர்பில் நடவடிக்கை  மேற்கொள்ளப்படுகிறது.

இது தொடர்பில் மகளிர் அமைச்சரின் பாராளுமன்ற உரையில் "சமூக வளைத்தளங்களினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது என்ற கூற்று எமக்கு வேதனையளிக்கிறது.

காரணம் ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் நாசகார அரசாங்கத்தின் ஆட்சியையே தலைகீழாக மாற்றிய பெருமை இந்த சமூக வலைத்தளங்களுக்கு உண்டு என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறேன். இந்த அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக கூட இந்த சமூக வலைத்தளங்கள் அளப்பரிய பங்காற்றியது என்பதை எவரும் மறுக்கவும் முடியாது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கமாக, பொறுப்பு வாய்ந்த ஒரு மகளிர் விவகார அமைச்சராக, ஒரு பெண்ணாக இன்னுமோர் பெண்ணுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதிக்கு எதிராக எழுப்பபட்டிருக்க வேண்டிய குரல் மகளிர் அமைச்சரது குரலாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் அவரது கூற்று அது மக்களின் பக்கம் குற்றம் சாட்டும் முகமாக மாறியிருப்பது, பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தை சட்டை செய்யாத, பதவியிலிருந்தும் தனது இயலாமையை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பது துரதிஷ்டவசமானது. பொதுமக்களுக்கு இந்த அரசாங்கத்தின் மீதான வெறுப்பை அதிகரிப்பதாக இந்த சம்பவம் அமைந்துவிட்டது.

எதிர்காலத்தில் இவ்வாறான துரதிர்ஷ்ட சம்பவங்கள் நிகழவே கூடாது என்பதற்காக இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அம்ஷிகாவுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காகவும், எம் சமூகத்தில் எதிர்காலத்தில் இவ்வாறான துயர சம்பவங்கள் நிகழாமல் இருக்க, என்னுடைய ஒத்துழைப்பு அனைத்து வழிகளிலும் இருக்கும் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

https://www.virakesari.lk/article/214298

  • கருத்துக்கள உறவுகள்

495372092_10078504255505161_914560931543

495334807_10078504455505141_170220753588

495376725_10078504665505120_476486404420

கொழும்பில் தமிழ் பாடசாலை மாணவியை தற்கொலைக்கு தூண்டிய ஆசாமி யார் ?

புங்குடுதீவை சேர்ந்த எங்கள் தந்தையின் நெருங்கிய உறவினர் ராஜேஸ்வரி அம்மா. கொழும்பு மருதானை கப்பித்தாவத்தை பிள்ளையார் கோவிலின் அறங்காவலராகவும் நீண்டகாலமாக அவர் செயற்பட்டிருந்தோடு தான ,தர்மங்களை மேற்கொள்வதிலும் சிறந்தவர்.

மிகச் சிறந்த ஆங்கில ஆசிரியராக விளங்கிய ராஜேஸ்வரி அம்மையாருக்கு உடைமையான கொழும்பு 13 ல் அமைந்துள்ள ராஜேஸ்வரி கல்வி நிலையத்தினை முழுமையாக விழுங்கியவரே இந்த சிவா என்கிற நபர் . ராஜேஸ்வரி அம்மாவுக்கு ஒரு பெண் பிள்ளை மாத்திரமே இருந்ததால் இந்த நபர் வளர்ப்பு பிள்ளை போன்று பராமரிக்கப்பட்டிருந்தார். மகள் அவுஸ்ரேலியாவுக்கு சென்ற பின்னர் ராஜேஸ்வரி அம்மையாரின் முதுமையை பயன்படுத்தி கல்வி நிலையத்தின் உடைமைகள் கைமாற்றப்பட்டிருந்தன .

ஊழலை ஒழிப்போம் , நல்லதொரு நாட்டை உருவாக்குவோம் என்று கூவிக்கொண்டு ஜனாதிபதி ஆகிய அநுரகுமார திசாநாயக்கவின் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக இந்த நபர் நியமிக்கப்பட்டபோதே இத்தனை தமிழர்கள் அங்கு வாழக்கூடிய நிலையில் இவ்வாறான ஒரு ஆசாமியை ஜேவிபி தலைமை தெரிவு செய்தமை தொடர்பாக நான் பகிரங்கமாக விமர்சித்திருந்தேன். அத்தேர்தலில் திசைகாட்டி பாரிய வெற்றிகளை பெற்றிருந்த போதிலும் இந்நபர் படுதோல்வி அடைந்திருந்தார்.

இன்று உண்மை எல்லோருக்கும் தெரியவந்துள்ளது. இதேபோன்றுதான் யாழ் மாவட்டத்திலும் நாடாளுமன்ற தேர்தலிலும் , உள்ளூராட்சித் தேர்தலில் பெரும்பாலான சமூக விரோதிகள் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிட்டிருந்தார்கள் . அவர்களில் சிலர் வெற்றியும் பெற்றிருக்கின்றார்கள்.

யாழ்ப்பாணத்திலும் இதே போன்றதொரு மோசடியான கல்வி நிலையத்தினை நடாத்திக்கொண்டு லயன்ஸ் கிளப்பை வைத்து வாழ்க்கையை ஓட்டுபவரே பேரினவாத கட்சியில் முக்கிய பதவிநிலையில் காணப்படுகின்றார்.

Kunalan Karunagaran

  • கருத்துக்கள உறவுகள்

494998099_1133906465418877_8251904475437

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வன்கொடுமையை மூடி மறைத்து, சிறுமி மீதே மனபிறழ்வு உள்ளவர் எனவும் விமர்சிக்கிறார் ஜேவிபி யின் சரோஜா அக்கா.

எங்கே யாழ்கள அனுர காவடிகள்?

பள்ளி மாறி போனபின் இன்னொரு பள்ளியில் உள்ள இந்த நபரின் ஆசிரியர்-நண்பர், இதே வன்கொடுமை விடயத்தை பலநூறு மாணவர்களுக்கு முன் சொல்லி அவமானப்படுத்தியதாலேயே சிறுமி உயிரை மாய்த்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

பாலியல் வன்கொடுமையை மூடி மறைத்து, சிறுமி மீதே மனபிறழ்வு உள்ளவர் எனவும் விமர்சிக்கிறார் ஜேவிபி யின் சரோஜா அக்கா.

எங்கே யாழ்கள அனுர காவடிகள்?

அவை "சுமந்திரனோடு இந்த லும்பன்களுக்கு தொடர்பிருக்குமா?" என்று தேடுவதில் பிசி😎!

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுப் பல்லக்கு, தம்பி கால் நடை என்ற மாதிரி NPP இன் செயல்கள் உள்ளன. பிரதேச சபை தேர்தலிலும், நல்ல அடி வாங்கி உள்ளார்கள். இப்படியே போனால் கோத்தபாய மாதிரி அவர்கள் வீட்டுக்கு போக அதிகம் காலம் எடுக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறுமி அம்ஷிகாவுக்கு நீதி கேட்கும் போராட்டத்தில் தமிழ் மக்களுடன் சிங்கள மக்களும் இணைந்து போராடுவதை அவதானிக்க முடிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

மாணவி தற்கொலை சம்பவத்துடன் எமது அமைப்பாளருக்கு தொடர்பில்லை - லக்ஷ்மன் நிபுணாராச்சி

Published By: DIGITAL DESK 2

09 MAY, 2025 | 05:35 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை சம்பவத்துடன் எமது கட்சி அமைப்பாளர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி திரிபுபடுத்தப்பட்டதாகும். அவர் இதில் சம்பந்தப்பட்டவில்லையென ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி தெரிவித்தார்.

கணக்காய்வு அறிக்கைகளின் ஊடாக முன்வைக்கப்படுகின்ற பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக வேலைத்திட்டமொன்றை தயாரிப்பது தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியினால்  வெள்ளிக்கிழமை (9) பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

விவாதத்தில் முஜிபுர் ரஹ்மான் உரையாற்றும் போது,

பாடசாலை மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்டமை தொடர்பில் இந்த சபையில் நாங்கள் கதைத்தோம். 2024 ஒக்டோபர் மாதத்தில் குறிப்பிட்ட சம்பவம் நடந்துள்ளதுடன், டிசம்பர் மாதத்திலேயே பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு பெற்றோர் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் 2025 ஜனவரி மாதத்திலேயே கைது செய்யப்படுகின்றார். சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இவர் இரண்டு நாட்களில் பிணையில் விடுவிக்கப்படுகின்றார். 

சிறுவர் துஷ்பிரயோகத்தில் அவர் சம்பந்தப்பட்டிருந்தால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த மாதம் 8 ஆம் திகதியே அவருக்கு இடமாற்றம் வழங்கப்படுகின்றது. போராட்டம் மேற்கொள்ள திட்டமிட்ட பின்னரே இந்த நடவடிக்கைகளை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளது. இந்த 5 மாதங்களாக என்ன செய்தது கல்வி அமைச்சு, பிரதமர் கல்வி அமைச்சராக பதவியேற்று 6 மாதங்களாகியும் ஏன் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. நீதி கிடைக்காத காரணதத்தினாலேயே மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர்.

உங்கள் கட்சி அமைப்பாளர் ஒருவருக்கு இதில் குற்றச்சாட்டு முன்வைவக்கப்பட்டுள்ளதாக நிபுணாராச்சி எம்.பி உரையாற்றுகையில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த குற்றச்சாட்டு சும்மா தெரிவிக்கப்படவில்லை. மாணவியின் பெற்றோர் அது தொடர்பில் கூறுகின்றனர். குறித்த நபரே வகுப்பரையில் அந்த மாணவியை நிற்கவைத்து, பாடசாலையில் நடந்த சம்பவம் தொடர்பில் மற்றைய மாணவர்களின் முன்னால் மாணவியை அவமதித்துள்ளார். அவர் உங்களின் கட்சியின் அமைப்பாளர் என்று நாங்கள் காலையில் கூறவில்லை. நீங்களே இதனை அரசியலாக்க வேண்டாம் என்று கூறினீர்கள்.

குறித்த ஆசிரியர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான முறைமை எப்படி இருந்திருக்கிறது என்பதனை பாருங்கள். அந்த செயற்பாட்டு முறை வேகமானதான இருந்திருந்தால் அந்த மாணவியின் உயிரை காப்பாற்றியிருக்கலாம்.

சம்பந்தப்பட்ட அமைப்பாளரின் வீட்டுக்கு முன்னால் 7 பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்படும் ஒருவருக்கு இப்படி பாதுகாப்பு கொடுப்பதா? சிறுமியின் மரணத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பொறுப்பு கூற வேண்டியவரின் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமா? அவர் வேறு கட்சியை சேர்ந்தவராக இருந்திருந்தால் இன்று சிறையில் இருந்திருப்பார்.

அவர் மறைமுகமாகவோ, நேரடியாகவோ இந்த மாணவியை அவமதிப்பு செய்துள்ளதாக பெற்றோரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையிலேயே அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் அமைப்பாளர் மட்டுமல்ல கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டவர். 35ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளார். அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளில் தீர்மானிக்கப்படும்.

மக்கள் அரசாங்கத்திடம் முறைமை மாற்றம் தொடர்பிலேயே  எதிர்பார்த்தனர். இதனையே நீங்களும் எதிர்பார்த்தனர். ஆனால் நீங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் மெதுவானதாக இருக்கிறது என்றார்.

இதன்போது முஜிபுர் ரஹ்மான் எம்.பி. முன்வைத்த சில விடயங்கள் தொடர்பில் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி பதிலளித்த ஆளும் கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி எம்.பி. கூறுகையில்,

இந்த விடயத்தை இவர்கள் அரசியல் செய்யப் போவதில்லை என்று கூறிக்கொண்டே எமது அமைப்பாளர் ஒருவரை இதனுள் சம்பந்தப்படுத்துகின்றனர். எமது அமைப்பாளர் இதற்குள் கிடையாது. அவர் குறித்த கல்வியகத்தின் உரிமையாளரே, அவர் ஆசிரியரும் கிடையாது. முழுமையாக திரிபுபடுத்தலையே செய்கின்றனர். திரிபுபடுத்தியே ஊடகங்களுக்கு கூறுகின்றனர்.

அந்த பிள்ளை தொடர்பான கவலை எங்களிடையே இருக்கிறது. பிரதமரும் இது தொடர்பில் கூறியுள்ளார். தவறுகள் மற்றும் தாமதங்கள் இருந்தால் அது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/214299

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.