Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி, தமிழர் நாகரிகம், இந்திய தொல்லியல் துறை, அமர்நாத் ராமகிருஷ்ணன்

பட மூலாதாரம்,ARCHAEOLOGICAL SURVEY OF INDIA

படக்குறிப்பு,கீழடி

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் இந்தியத் தொல்லியல் துறையின் சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை அவர் தாக்கல் செய்திருக்கும் நிலையில், சில விளக்கங்களைக் கோரி அந்த ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி என்ன?

982 பக்க அறிக்கை தாக்கல்

மதுரையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி தொல்லியல் தளத்தை 2014-ஆம் ஆண்டுவாக்கில் இந்தியத் தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் கண்டறிந்தார்.

இதற்குப் பிறகு இந்த இடத்தில் 2014-15, 2015-16 ஆகிய இரண்டு ஆண்டுகளில் அவரது தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்குப் பிறகு, இந்தியத் தொல்லியல் துறை மேலும் ஒரு முறை அகழாய்வு நடத்தியது. இதன் பின்பு மாநிலத் தொல்லியல் துறை அங்கு தொடர்ந்து அகழாய்வுகளை மேற்கொண்டுவருகிறது.

இந்தியத் தொல்லியல் துறை நடத்திய முதல் இரண்டு அகழாய்வுகளின் ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏஎஸ்ஐயிடம் சமர்ப்பித்தார். இந்த அறிக்கை 982 பக்கங்களுக்கு எழுதப்பட்டிருந்தது.

கீழடி, தமிழர் நாகரிகம், இந்திய தொல்லியல் துறை, அமர்நாத் ராமகிருஷ்ணன்

பட மூலாதாரம்,KEELADIMUSEUM.TN.GOV.IN

படக்குறிப்பு,கீழடி அகழாய்வுத் தளம் - வான்வழிப் பார்வை

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டாண்டுகள் கழிந்துவிட்டாலும் இந்த அறிக்கையை ஏஎஸ்ஐ வெளியிடவில்லை. தற்போது, இந்த அறிக்கை தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி, அறிக்கை அமர்நாத் ராமகிருஷ்ணனிடமே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது.

அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்ப்பித்த அறிக்கையை இரண்டு நிபுணர்களிடம் அனுப்பியதாகவும், அறிக்கையை மேலும் நம்பகத்தன்மையுள்ளதாக ஆக்க, அந்த நிபுணர்கள் சில கேள்விகளை எழுப்பியிருப்பதாகவும் ஏஎஸ்ஐ தெரிவித்திருக்கிறது.

இரண்டு அகழாய்வுகளிலும் கிடைத்த பொருட்களை வைத்துப் பார்க்கும்போது, அந்த இடத்தில் மூன்று பண்பாட்டு காலகட்டம் நிலவியிருக்க வேண்டும் எனக் கருதுவதாக அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியிருந்தார். இதில் முதலாவது காலகட்டம் கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும் என்றும் இரண்டாவது காலகட்டம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவு வரை இருந்திருக்கலாம் என்றும் மூன்றாவது காலகட்டம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டின் முடிவிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில் சில கேள்விகள் ஏஎஸ்ஐயால் எழுப்பப்பட்டுள்ளன.

கீழடி, தமிழர் நாகரிகம், இந்திய தொல்லியல் துறை, அமர்நாத் ராமகிருஷ்ணன்

பட மூலாதாரம்,KEELADIMUSEUM.TN.GOV.IN

படக்குறிப்பு,இரண்டு அகழாய்வுகளிலும் கிடைத்த பொருட்களின் அடிப்படையில் மூன்று பண்பாட்டு காலகட்டம் அங்கே நிலவியிருக்க வேண்டும் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையில் கூறியிருந்தார்

ஏஎஸ்ஐயால் எழுப்பப்பட்ட கேள்விகள்

1. கீழடியில் நிலவியதாகச் சொல்லப்படும் மூன்று காலகட்டங்களுக்கும் சரியான பெயர்களை (nomenclature) வழங்க வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

2. முதலாவது காலகட்டம், கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும் என அறிக்கை கூறும் நிலையில், அதற்கு உறுதியான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மற்ற இரண்டு காலகட்டங்களையும் ஏஎம்எஸ் காலக் கணிப்பு முறைப்படி (Accelerator Mass Spectrometry) உறுதிசெய்ய வேண்டும். முதல் காலகட்டத்திற்கு தற்போது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலக் கணிப்பு மிகக் கூடுதலாகத் தெரிவதாகவும் அதிகபட்சமாக இந்தக் காலகட்டம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் குறிப்படப்பட்டுள்ளது.

3. அறிவியல்ரீதியாக கிடைத்த தேதிகளுக்கு ஆழத்தைக் குறிப்பிடுவது மட்டும் போதுமானதல்ல. பண்பாட்டு அடுக்குகளின் எண்களையும் தரவேண்டும். அப்போதுதான் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.

4. அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள வரைபடங்களுக்குப் பதிலாக மேம்பட்ட வரைபடங்களை வழங்க வேண்டும். கிராமத்தின் வரைபடம் தெளிவில்லாமல் உள்ளது. ஏற்ற இறக்கங்களைக் குறிப்பிடும் வரைபடம், பண்பாட்டு அடுக்குகளின் வரைபடம், எங்கு தோண்டப்பட்டது என்பதைக் குறிப்பிடும் வரைபடங்கள் தேவை என இந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

கீழடி, தமிழர் நாகரிகம், இந்திய தொல்லியல் துறை, அமர்நாத் ராமகிருஷ்ணன்

பட மூலாதாரம்,KEELADIMUSEUM.TN.GOV.IN

படக்குறிப்பு,கீழடி அகழ்வாய்வு தளம் (கோப்புப்படம்)

நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம்

இந்தத் தகவல் வெளியான நிலையில், மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். "கீழடியின் உண்மைகளை அதிகாரபூர்வமாக அறிவிக்க ஒன்றிய தொல்லியல் துறை எளிதில் முன்வராது. தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரிகள் யார் என்பதை ஒன்றிய தொல்லியல் துறையின் ஒவ்வொரு செயலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது" என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

சு. வெங்கடேசன் வேறொரு குற்றச்சாட்டைச் சுமத்துகிறார். "அதாவது, கீழடி ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்பித்த பிறகு, அந்த அறிக்கை எப்போது வெளியிடப்படும் என நாடாளுமன்றத்தில் பல முறை கேள்வியெழுப்பப்பட்டிருக்கிறது. கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் கூட கேள்வி எழுப்பப்பட்டது. விரைவில் சமர்ப்பிப்போம் எனத் தெரிவித்தார்கள்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறதா என்பதை ஆராயும் நாடாளுமன்ற உறுதிக்குழுவின் கூட்டம் வரும் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஊட்டியில் நடக்கவிருக்கிறது. கீழடி அறிக்கையை தாக்கல் செய்யாதது ஏன் என அங்கு பதிலளிக்க வேண்டும் என்பதால் இப்போது கேள்வி எழுப்பியிருக்கின்றனர்," என்கிறார் சு. வெங்கடேசன்.

கீழடி, தமிழர் நாகரிகம், இந்திய தொல்லியல் துறை, அமர்நாத் ராமகிருஷ்ணன்

பட மூலாதாரம்,SU VENKATESAN MP/FACEBOOK

படக்குறிப்பு,இந்திய தொல்லியல் துறையின் நடவடிக்கைக்கு சு.வெங்கடேசன் கண்டனம்

இது ஒரு வழக்கமான நடவடிக்கையா?

இது குறித்து பிபிசியிடம் பேசிய உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் Journey of a Civilization: Indus to Vaigai நூலின் ஆசிரியருமான ஆர். பாலகிருஷ்ணன், இது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகத் தெரிவித்தார். "இந்த நடவடிக்கை மிக விசித்திரமானதாக இருக்கிறது. அறிக்கையைத் தாக்கல் செய்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இது நடக்கிறது. இந்த அறிக்கையை உருவாக்கி, பதிப்பிப்பதற்கே நீதிமன்றம் தலையிட வேண்டியிருந்தது. இது பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த அகழாய்வு. இது ஒரு தனித்த நிகழ்வல்ல. ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கைகூட 15 ஆண்டுகள் கழித்துதான் வெளியானது" என்கிறார் அவர்.

மேலும், "எந்த ஒரு நாட்டின் தேசிய வரலாறும் பிராந்திய வரலாற்றுப் போக்குகளை ஒரு அடிப்படைக் கட்டுமானமாகக் கொள்ள வேண்டும். தமிழ்ச் சமூகத்தின் தனித்துவமிக்க பண்பாட்டு ஆழத்தையும் இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் அதற்கான சரியான இடத்தையும் புறக்கணிக்க முடியாது. இது வருத்தத்தை அளிக்கிறது. அறிவியல் கருத்துகள்கூட, கேள்வியெழுப்பப்பட்டு, மதிப்பிடப்பட வேண்டியவைதான். ஆனால், ஓர் அனுபவம் மிக்க தொல்லியலாளரின் அறிக்கை பதிப்பிக்கப்படுவதற்கு முன்பாகவே இம்மாதிரியான ஒரு நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்க வேண்டியதில்லை" என்கிறார் அவர்.

ஆனால், இது ஒரு வழக்கமான நடைமுறைதான் என்கிறார் ஏஎஸ்ஐயின் முன்னாள் கண்காணிப்பாளரான தி. சத்தியமூர்த்தி. "ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு, அந்த அறிக்கை நிபுணர்களிடம் கருத்துக்காக அனுப்பப்படும். அவர்கள் சில கேள்விகளை எழுப்புவார்கள். அதாவது, தற்போது அகழாய்வுச் செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த முடிவுகளை வைத்து மட்டும் பார்க்காமல், மற்ற இடங்களோடும் ஒப்பீடு செய்தும் கேள்வியெழுப்புவார்கள். இது வழக்கமான நடைமுறையே தவிர, வேறு இல்லை. எல்லாவற்றையும் தமிழ்நாட்டிற்கு எதிரானதாகப் பார்க்க வேண்டியதில்லை" என்கிறார் தி. சத்தியமூர்த்தி.

கீழடியில் ஏஎஸ்ஐ மேற்கொண்ட அகழாய்வின் ஆய்வறிக்கையை வெளியிட வேண்டுமென தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சு. வெங்கடேசன், து. ரவிக்குமார், கனிமொழி உள்ளிட்டோர் தொடர்ந்து கேள்வியெழுப்பிவந்துள்ளனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. அந்த வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பதிலளித்த ஏஎஸ்ஐ, இன்னும் 9 மாதங்களில் அறிக்கை வெளியிடப்படும் எனக் கூறியது. அப்படிக்கூறி ஒன்றேகால் ஆண்டுகளுக்குப் பிறகு அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் விரும்பவில்லை. அவர் தற்போது மத்தியத் தொல்லியல் துறையின் Antiquity பிரிவின் இயக்குநராக இருந்துவருகிறார்.

கீழடி, தமிழர் நாகரிகம், இந்திய தொல்லியல் துறை, அமர்நாத் ராமகிருஷ்ணன்

பட மூலாதாரம்,R.BALAKRISHNAN/FACEBOOK

படக்குறிப்பு, இந்த நடவடிக்கை மிக விசித்திரமானதாக இருக்கிறது என ஆர்.பாலகிருஷ்ணன் கருத்து

அமர்நாத் ராமகிருஷ்ணன் அளித்த கீழடி அறிக்கையில் என்ன தகவல்கள் இடம்பெற்றுள்ளன?

கீழடியில் தான் மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்தார். அந்த ஆய்வறிக்கையில் பின்வரும் முக்கிய முடிவுகள் குறிப்பிடப்பட்டிருந்தன:

1. கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகளிலும் கிடைத்த பொருட்களை வைத்துப் பார்க்கும்போது, இங்கே மூன்று பண்பாட்டு காலகட்டங்கள் நிலவியிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. இதில் முதலாவது காலகட்டம் கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும். இதற்கான தரவுகள் 2 மீட்டர் ஆழத்தில் உள்ள மண் அடுக்கில் கிடைத்திருக்கின்றன. இந்த காலகட்டத்தில், கீழடியில் எளிதில் மட்கிப் போகக்கூடிய (செங்கல் அல்லாத, மரம் போன்ற) பொருட்களால் கட்டுமானங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. கீழடி இரும்புக் காலத்தில் வளரத் தொடங்கியிருக்கலாம் என்ற முடிவுக்கு வர முடியும் என்றாலும்கூட, தொடர்ந்து இந்தத் திசையில் ஆய்வுகளை நடத்த வேண்டும்.

2. கீழடியின் இரண்டாவது காலகட்டம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவுவரை இருந்திருக்கலாம். இதுதான் கீழடி, ஒரு முதிர்ந்த வாழிடப் பகுதியாக இருந்த காலகட்டம். பெரிய மற்றும் சிறிய அளவிலான செங்கல் கட்டுமானங்கள் இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இங்கே கிடைத்த செங்கலால் ஆன மேடைகள், சிக்கலான செங்கல் கட்டுமானங்கள், இரட்டைச் சுவர்களைக் கொண்ட உலைகள் ஆகியவை இந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை. இந்த காலகட்டத்தில் கீழடி நகரப் பண்புகளைக் கொண்ட மிக முக்கியமான இடமாக இருந்திருக்க வேண்டும். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, கீழடி மதுரைக்கு அருகில் இருப்பதும், வரலாற்றுக் கால துறைமுகமான ஆலங்குளத்திற்கு செல்லும் வழியில் இருப்பதும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், மிக முக்கியமாகக் கவனிக்கத்தக்கது இங்கு கிடைத்த கட்டடத் தொகுதிகள்தான். அரிக்கமேடு, காவிரிப்பட்டனம், கொற்கை போன்ற ஒரு சில இடங்களைத் தவிர, தமிழ்நாட்டில் வேறு எங்கு இந்த காலகட்டத்தைச் சேர்ந்த கட்டடத் தொகுதிகள் கிடைத்ததில்லை. இந்தப் பின்னணியில்தான் கீழடியில் கிடைத்த கட்டடத் தொகுதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

3. கீழடியின் மூன்றாவது காலகட்டம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டின் முடிவிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்கிறது. இந்த இரு அகழாய்விலும் இங்கு கிடைத்த காசுகள், அதற்கு முன்பாக இங்கு கிடைத்த ராஜராஜன் காலத்து காசுகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, இந்த மூன்றாவது காலகட்டம் பத்தாம் நூற்றாண்டு வரை நீண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆகவே, கீழடியின் காலகட்டம் என்பது கி.மு. எட்டாம் நூற்றாண்டில் துவங்கி கி.பி. பத்தாம் நூற்றாண்டுவரை நீண்டிருக்கிறது.

4. கீழடியில் குதிரையின் எலும்புகள் கிடைத்திருப்பது தென்னிந்திய தொல்லியல் ஆய்வுகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சங்கப் பாடலான பட்டினப்பாலையில் குதிரை குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதன் எச்சங்கள் முதல் முறையாக கீழடியில்தான் கிடைக்கின்றன.

5. இந்திய தொல்லியல் துறை நடத்திய இரண்டு அகழாய்வுகளிலும் 88 கரிம பொருட்கள் கிடைத்தன. இவற்றில் 18 கரிமப் பொருட்கள் ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகள் லெபோரட்டரியில் ஏஎம்எஸ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 5 கரிமப் பொருட்கள் புது டெல்லியில் உள்ள இன்டர் யுனிவர்சிடி அக்சலரேட்டர் சென்டரில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

6. இரண்டு அகழாய்வுகளிலும் சேர்த்து மொத்தமாக 2,447 பானை ஓட்டு கிறுக்கல்கள் கிடைத்துள்ளன. பல தமிழ் பிராமி எழுத்துகளும் கிடைத்துள்ளன. 'திசன்' போன்ற பிராகிருத வார்த்தைகளும் கிடைத்துள்ளன. கீழடியில் கிடைத்த பிராகிருத வார்த்தைகள் இலங்கையின் தாக்கத்தில் வந்தவை. இங்குள்ள தமிழ் பிராமி அல்லது தமிழி எழுத்து, அசோக பிராமியின் தாக்கத்தைக் கொண்டதல்ல. மாறாக இலங்கையில் கிடைத்த பிராமி எழுத்துகளோடு ஒத்துப்போகக்கூடியவை என்றது அறிக்கை.

7. வைகை நதிக் கரையில் அமைந்த ஒரு நகர நாகரீகத்தின் ஆரம்பக்கட்டத் தகவல்களை மட்டுமே இந்தத் தொல்லியல் ஆய்வு முடிவுகள் அளித்திருக்கின்றன என்றும் அந்தத் தொல்லியல் தளத்தில் மேலும் பல ஆய்வுகளைச் செய்ய வேண்டுமென்றும் அவர் கூறியிருக்கிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c14ke648kexo

  • கருத்துக்கள உறவுகள்
https://www.vikatan.com/
No image preview

கீழடி: Amarnath Ramakrishnan அறிக்கை வெளியாவது சிலருக்குப...

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியா டதொல்லியல் உள்ளவர்கள் பாகுபாடு காட்டுவதாக இருக்கலாம்.

அனால், இந்த ஆய்வுகளை பகுதி பகுதியாக ஆகக்குறைந்தது தரவு அடிப்படையிலாவது, சர்வதேச சர்வதேச துறைசார் peer review க்கு உட்படுத்தி ருக்க வேண்டும்.

சர்வதேச peer review க்கு சமர்பிர்ப்பதற்கும் அனுமதி வேண்டும் அல்லது மறுத்தால், நீதி மன்றத்தை நாடுவவது இலகு.

அப்போது அது அரசியல் மயமாகி இருக்கும். சர்வதேச peer review க்கு சமர்பிர்ப்பதற்கும் அனுமதி வேண்டும் அல்லது மறுத்தால், நீதி மன்றத்தை நாடுவவது இலகு.

அப்போது அது அரசியல் மயமாகி இருக்கும்.

On 24/5/2025 at 07:00, ஏராளன் said:

6. இரண்டு அகழாய்வுகளிலும் சேர்த்து மொத்தமாக 2,447 பானை ஓட்டு கிறுக்கல்கள் கிடைத்துள்ளன. பல தமிழ் பிராமி எழுத்துகளும் கிடைத்துள்ளன. 'திசன்' போன்ற பிராகிருத வார்த்தைகளும் கிடைத்துள்ளன. கீழடியில் கிடைத்த பிராகிருத வார்த்தைகள் இலங்கையின் தாக்கத்தில் வந்தவை. இங்குள்ள தமிழ் பிராமி அல்லது தமிழி எழுத்து, அசோக பிராமியின் தாக்கத்தைக் கொண்டதல்ல. மாறாக இலங்கையில் கிடைத்த பிராமி எழுத்துகளோடு ஒத்துப்போகக்கூடியவை என்றது அறிக்கை.

இலங்கையில் தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பண்டைய கால பொருட்கள் ஏற்கனவே கண்டு பிடித்து இருக்கின்றார்களா? ஓம் எனில் எங்கெங்கு கண்டு பிடிக்கப்பட்டன என எவருக்காவது தெரியுமா?

கீழடியில் கண்டு பிடிக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துகளில் இலங்கை தமிழ் பிராமி எழுத்துகளின் தாக்கம் இருக்குமாயின், இலங்கை தமிழ் பிராமி எழுத்துகள் கீழடிக்கும் அதிகம் தொன்மை வாய்ந்ததாக அல்லவா இருக்க வேண்டும்.

---

இந்த ஆய்வுகள் தொடர்பான அறிக்கையையும், அது வெளிப்படுத்தும் நாகரீகத்தையும், தமிழ் நாகரீகத்தின் தொன்மையையும் பிஜேபி யின் சங்கி அரசு ஒரு போதுமே விரும்பப் போவதில்லை. சிந்து வெளி நாகரீகம் தான் உச்சம் என கட்டமைக்கப்பட்டு இருக்கும் பிம்பம் உடைந்து விடும் என்று அது அச்சம் கொள்வதில் வியப்பும் இல்லை.

1 minute ago, நிழலி said:

இலங்கையில் தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பண்டைய கால பொருட்கள் ஏற்கனவே கண்டு பிடித்து இருக்கின்றார்களா? ஓம் எனில் எங்கெங்கு கண்டு பிடிக்கப்பட்டன என எவருக்காவது தெரியுமா?

2009 ற்கு முன்னர் யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது கொழும்பு கடற்கரைப் பகுதியில் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதி பிராமி எழுத்துகள் பொறிக்கப்படிருந்ததாக ஞாபகம். இது தொடர்பாக தமிழ்நெட் அப்போது செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. தேடிப் பார்க்கிறேன். பின்னர் அக் கல்வெட்டு காணாமல் போயிருந்ததாக அறிந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர் பற்றிய பிராமிக் கல்வெட்டுக்கள் – ஓர் அறிமுகம்

September 28, 2022 | Ezhuna

இலங்கைத் தமிழர்களுக்கு 2500 ஆண்டுகளுக்குக் குறையாத வரலாறு மற்றும் வழிபாட்டு பாரம்பரியம் உள்ளது. பண்டைய இலங்கைத் தமிழர் பற்றி இதுவரை பலரும் அறிந்திராத, இதுவரை வெளிச்சத்துக்கு வராத, அரிய உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் எனும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டதாக இலங்கையில் ‘பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர்’ எனும் இவ்வாய்வு அமைகிறது. இலங்கையில் வாழ்ந்த தமிழர் பற்றிய முக்கிய சான்றாக விளங்குவது 2300 ஆண்டுகளுக்கு முன்பு கற்குகைகளில் பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களாகும். இவ்வாறான ஐந்து பிராமிக் கல்வெட்டுக்கள் இலங்கையில் காணப்படுகின்றன. அந்த கல்வெட்டுக்களில் தமிழர்கள் தொடர்பில்  குறிப்பிடப்பட்ட விடயங்களை இக்கட்டுரைத்தொடர் வெளிப்படுத்துகின்றது. அத்தோடு சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த ஒரு வேலைத் திட்டத்தில், இலங்கையில் காணப்படும், 1500 பிராமிக் கல்வெட்டுகளை மீள்வாசிப்பு செய்ததன் பயனாக வெளிக்கொணரப்பட்ட பல்வேறு அம்சங்களை ஆதாரங்களுடன் தெளிவுப்படுத்துவதாகவும் இத்தொடர் அமைகிறது. இவ் ஆய்வில் தமிழர் பற்றி கூறும் மேலும் பல பிராமிக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. அத்துடன் சோழர் காலத்திற்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 600 சிங்களக் கல்வெட்டுக்களையும் ஆராய்ந்து அவற்றிலும் தமிழர் பற்றிக் கூறப்பட்டுள்ள பல விபரங்கள் பற்றியும் இத்தொடர் கட்டுரை கூறுகிறது.

இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் தமிழும் தமிழரும்

இலங்கையில் கல்மேல் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. இவற்றில் முதலாவதாக எழுதப்பட்டவை பிராமிக் கல்வெட்டுக்கள் என அழைக்கப்படுகின்றன. இவை பொ. ஆ. மு. 3ஆம் நூற்றாண்டு முதல் பொ. ஆ. 5ஆம் நூற்றாண்டு வரை பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றை கல்வெட்டு ஆய்வாளர்கள் முற்காலப் பிராமி, பிற்கால பிராமி என இரு வகையாக பிரித்துள்ளனர்.  

கோமரன்கடவல காட்டுபகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு

இலங்கை முழுவதிலும் சுமார் 2500 பிராமிக் கல்வெட்டுக்கள்  காணப்படுகின்றன. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கல்வெட்டுக்கள் தெற்காசியாவில் இலங்கையைத் தவிர வேறெந்த பிரதேசங்களிலும் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவை இங்குள்ள இயற்கையான கற்குகைகளிலும், கற்பாறைகளிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1500 கல்வெட்டுக்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 1000 கல்வெட்டுக்கள் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. இவற்றில் தமிழர் மற்றும் இந்து சமயம் தொடர்பான கல்வெட்டுகள் பல உள்ளதாகத் தெரிய வருகிறது. இலங்கையில் இதுவரை பதிவு செய்யப்பட்ட 1500 கல்வெட்டுக்களில் தமிழர் பற்றிய 5 கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.  மேலும் இந்து தெய்வங்கள் சம்பந்தமான 300 கல்வெட்டுக்களும் உள்ளன.  இவற்றைத்தவிர முனிவர்கள் அல்லது சித்தர்களின் பெயர்கள் பொறிக் கப்பட்ட சுமார் 250 பிராமிக் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. தமிழர் என்ற பெயரைத் தவிர இலங்கையில் வாழும் ஏனைய இனங் களின் பெயர் பொறிக்கப்பட்ட எந்த ஒரு பிராமிக் கல்வெட்டேனும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

“தமெத” (தமிழ்) எனப் பொறிக்கப்பட்டுள்ள பிராமிக் கல்வெட்டுக்கள் 

இலங்கையில் கிடைக்கப் பெற்ற பிராமிக் கல்வெட்டுக்களில் 5 கல்வெட்டுக்களில் “தமெத” எனும் சொல் பொறிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் என்பதன் பிராகிருத வடிவமாகும்.

இவற்றில் வட மாகாணத்தில் உள்ள வவுனியா மாவட்டத்தில் 2 கல்வெட்டுக்களும், கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை மாவட்டத்தில் 1 கல்வெட்டும், கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் 1 கல்வெட்டும், வடமத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரத்தில் 1 கல்வெட்டும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டு சான்றுகள் மூலம் 2000 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது உறுதியாகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழர் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கும், தமிழ் மொழி பேசப்பட்டுள்ளது என்பதற்கும் இக்கல்வெட்டுக்கள் முக்கிய சான்றுகளாக விளங்குகின்றன. இது பற்றி இலங்கையின் மூத்த வரலாற்று பேராசிரியர் எஸ். பத்மநாதன் அவர்கள் சில முக்கிய குறிப்புக்களை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அவரின் குறிப்பு பின்வருமாறு.

155-1.jpg

“கி. மு. மூன்று நூற்றாண்டுகளில் இலங்கையிலே தமிழ் ஒரு பேச்சு மொழியாக வழங்கியமைக்கு ஆதாரமாய் அமைகின்ற பிராமிச் சாசனங்கள் தமிழர் பற்றியும் தமிழர் சமுதாயப் பிரிவுகளைப் பற்றியும் குறிப் பிடுகின்றன. அவற்றிலே பல இனங்களைச் சேர்ந்த சமூகங்களின் பெயர்களும், சமுதாயப் பிரிவுகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. தமிழர், நாகர், முருண்டி, காபோஜி என்னும் இனப் பெயர்கள் அவற் றில் உண்டு. பரதர், பதர், பிராமணர் என்போர் பற்றியும் அவற்றிலே குறிப்புகள் உண்டு. இரண்டாயிரத்துக்கும் மேலான பிராமிச் சாசனங்கள்  காணப்படுகின்ற பொழுதிலும் அவற்றிலே சிங்களர் பற்றிய குறிப் பெதுவும் காணப்படவில்லை. “சிங்களர்” எனும் இனம் பிராமிச் சாசனங்கள் எழுதப்பட்ட காலத்தில் உருவாகியிருக்கவில்லை என்று கருத வேண்டியுள்ளது. சிங்க உருவம் பொறித்த மிகப் புராதனமான நாணயமும் நாகராசன் ஒருவனின் பெயரையே குறிப்பிடுகிறது.”  என பேராசிரியர் எஸ். பத்மநாதன் தனது இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழரின் குடியிருப்புகளும், சமுதாயமும் பிராமிச் சாசனங்களின் காலம் முதலாக உற்பத்தியானவை என்று கொள்ள முடிகிறது” எனக் கூறியுள்ளார்.

தமிழர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள இக்கல்வெட்டுக்கள் பற்றி பேராசிரியர் இந்திரபாலா பின்வருமாறு கூறியுள்ளார். “இலங்கையில் வாழ்ந்த தமிழ் இனக்குழு பிராமிக் கல்வெட்டுக்களில் தமெட என்ற பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இக் கல்வெட்டுக்கள் அநுராதபுரத்தில் மட்டுமன்றி, அப்பால் இன்று தமிழர் வாழும் இடங்களாகிய வவுனியா மாவட்டம் (பெரிய புளியங்குளம்), மட்டக்களப்பு மாவட்டம் (ஸேருவில)மற்றும் அம்பாறை மாவட்டம் (குடிவில்) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.”   

“இலங்கையில் தமிழ் மக்கள் பற்றிக் கிடைக்கும் மிகப்பழைய எழுத்து மூலாதாரங்கள் பொ. ஆ. மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமிக் கல்வெட்டுக்களாம். எனினும் அதற்கு முன் அவர்கள் இலங்கையில் இருந்திருக்கக்கூடும் என்று கொள்ளத் தொல்லியல் சான்றுகள் உள்ளன. அத்துடன் பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னரே, தமிழ் பேசுவோர் பரவலாகத் தமிழ் நாட்டிலும் மற்றும் அயல் இடங்களிலும் இருந்தனர் என்று கொள்ள இடமுண்டு எனக் கொண்டால் இலங்கைக்கும் அதே காலமளவில் அவர்கள் வந்திருக்கலாம் என்று கூறலாம். தமிழ் பேசுவோர் மட்டுமன்றி வேறு திராவிட மொழிகளைப் பேசுவோரும் அங்கு இருந்திருக்கலாம்”. இவ்வாறு பேராசிரியர் இந்திர பாலா தனது “இலங்கைத் தமிழர்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

 இலங்கையில் காணப்படும் பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றி பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் சில முக்கிய விடயங்களை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அவரின் குறிப்பு பின்வருமாறு, “தென்னாசியாவில் பெளத்த மதம் பரவிய நாடுகளில் எல்லாம் அம்மத மொழியான பிராகிருதம் கல்வெட்டு மொழியாக இருந்தபோது இலங்கையில் தான் பிராகிருத மொழியில் தமிழ் மொழியின் செல்வாக்கு கூடுதலாகக் காணப்படுகிறது.  இதில் அவதானிக்கக் கூடிய சிறப்பம்சம் ஆரம்பகாலக் கல்வெட்டுக்களில் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பிராகிதம் மற்றும் தமிழ் மொழிக்குரிய பெயர்கள், சொற்கள் காலப்போக்கில் தமிழ் மயப்படுத்தப்பட்ட நிலையில் எழுதப்பட்டிருப்பதாகும்.”

“இந்த மாற்றத்திற்கு இலங்கையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த மக்கள் புதிதாக பெளத்த மதத்துடன் அறிமுகமான பிராகிருத மொழியை அம்மொழிக்குரிய வடபிராமி எழுத்தில் எழுதிய போதும், காலப்போக்கில் தமக்குப் பரிச்சயமான தமிழ் பிராமியிலும் பிராகிருத மொழியை எழுத முற்பட்டமை காரணம் எனலாம்”. இவ்வாறு பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றி பேராசிரியர் பரமு புஷ்பரட்னம் தனது இன்னுமோர் நூலில் கூறியுள்ள சில முக்கிய விடயங்கள் பின்வருமாறு: “இக்கல்வெட்டுக்கள் பெளத்த சங்கத்திற்கு அக்கால சமூகத்தின் பல தரப்பட்ட மக்கள் அளித்த நிலம், குளம், கால்வாய், குகை, கற்படுக்கை, பணம், உணவு போன்ற தானங்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றில் பலவற்றில் தானமளித்தவர் பெயரோடு அவரின் வம்சம், பட்டம், பதவி, தொழில், மதம், இனம் போன்ற தரவுகளும், அவர்கள் வாழ்ந்த இடம், ஊர், நாடு போன்ற செய்திகளும் கூறப்பட்டுள்ளன. இதனால் இக்கல்வெட்டுகள் இலங்கையின் குறிப்பிட்ட காலப்பகுதிக்குரிய மொழி, எழுத்து, மதம், பண்பாடு, சமூகம், இடப்பெயர் என்பவற்றை அறிந்துக்கொள்ளவும், சமகாலப் பாளி இலக்கியங்கள் கூறும் வரலாற்றின் நம்பகத் தன்மையை மதிப்பிடவும் உதவுகின்றன.” 

பக்கத்தில் ஏன் கத்தரிக்கோல் வைக்கிறன் என்றால் தவறாக இருந்தால்..வெட்டி விடவும்.✂️🖐


https://www.ezhunaonline.com/brahmic-inscriptions-on-tamils-in-ceylon-an-introduction/

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

‘கீழடி அறிக்கையை வெளியிடுவதில் அக்கறை காட்டவில்லை என்பது கற்பனை’ - தொல்பொருள் ஆய்வு நிறுவனம்

1363446.jpg

கீழடி அகழாய்வுப் பணி | கோப்புப் படம்

புதுடெல்லி: கீழடி அறிக்கையை வெளியிடுவதில் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அக்கறை காட்டவில்லை என்பது ஒரு கற்பனைக் கதை என்றும், இது வேண்டுமென்றே துறையை தவறாக சித்தரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது என்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை விளக்கம் அளித்துள்ளது.

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கை வெளியீடு குறித்து ஊடகங்களின் ஒரு பகுதியினரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட செய்திக் கட்டுரைக்கு எதிராக இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையானது தலைமை இயக்குநரின் பெயரில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்களின் அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு அகழ்வாராய்ச்சிப் பணியிலும் அதிக நேரம், ஆற்றல் மற்றும் பணம் செலவிடப்படுவதால், இந்த அம்சத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இல்லையெனில் அகழ்வாராய்ச்சிப் பணியின் அடிப்படை நோக்கம் நிறைவேற்றப்படாமலேயே இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டில், அகழ்வாராய்ச்சியாளர்களால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அவை பல்வேறு துறை நிபுணர்களுக்கு அனுப்பப்படுகின்றன. அவர்கள் அறிக்கைகளை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். துறை வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு மாற்றங்கள் அகழ்வாராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக வெளியீட்டிற்காக மீண்டும் சமர்ப்பிக்கப்படுகின்றன. பின்னர் இவை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் நினைவுக் குறிப்புகளாக வெளியிடப்படுகின்றன.

கீழடி அறிக்கையிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. அதில் அறிக்கை நிபுணர்களுக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. அதன்படி, கீழடியின் அகழ்வாராய்ச்சியாளரால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு அறிக்கையில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கான நிபுணர்களின் பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர் தற்போதுவரை திருத்தத்தை மேற்கொள்ளவில்லை.

ஊடகங்களின் ஒரு பகுதியில் பரப்பப்படும் செய்தி தவறாக வழிநடத்துகிறது. இது உண்மைக்குப் புறம்பானது மற்றும் முற்றிலும், கடுமையாக மறுக்கப்படுகிறது. ஒரு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்தின் முக்கியத்துவத்தை தலைமை இயக்குநரும் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவன அதிகாரிகளும் புரிந்துகொள்கின்றனர். ஆனால் அனைத்து அறிக்கைகளும் வெளியீட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு முறையான ஆய்வு, திருத்தம், சான்று வாசிப்பு மற்றும் வடிவமைப்பு தேவையாக உள்ளது. கீழடி அறிக்கையை வெளியிடுவதில் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அக்கறை காட்டவில்லை என்பது ஒரு கற்பனைக் கதையாகும். இது வேண்டுமென்றே துறையை தவறாக சித்தரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

ஊடகங்கள் ஒரு விஷயத்தின் நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு, அதிலும் தொல்லியல் போன்ற தொழில்நுட்ப விஷயத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்து, வெளியிடுவதற்கு முன் முழுமையான புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுமாறு இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கீழடி அறிக்கையை வெளியிடுவதில் அக்கறை காட்டவில்லை என்பது கற்பனை’ - தொல்பொருள் ஆய்வு நிறுவனம் | ASI is uninterested in publication of Keeladi report is a figment of imagination: ASI - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பிழம்பு said:

ஆனால் அனைத்து அறிக்கைகளும் வெளியீட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு முறையான ஆய்வு, திருத்தம், சான்று வாசிப்பு மற்றும் வடிவமைப்பு தேவையாக உள்ளது.

முன்பு (நான்) சொன்னது.

On 26/5/2025 at 12:57, Kadancha said:

அனால், இந்த ஆய்வுகளை பகுதி பகுதியாக ஆகக்குறைந்தது தரவு அடிப்படையிலாவது, சர்வதேச சர்வதேச துறைசார் peer review க்கு உட்படுத்தி ருக்க வேண்டும்.

சர்வதேச peer review க்கு சமர்பிர்ப்பதற்கும் அனுமதி வேண்டும் அல்லது மறுத்தால், நீதி மன்றத்தை நாடுவவது இலகு.

(நானே) ஆய்வு சேட்டு விட்டு, வேறு எந்த துறைசார் மீள்பகுப்பாய்வு இல்லாமல் பிரசுரிக்குமாறு கேட்பது. (சிங்களம் இதையே எதிர்பார்க்கிறது)

அனல், இந்திய தொல்லிய துறை இப்படி எல்லாவற்றுக்கும் துறைசார் கறாராக இருக்கிறதா என்பது முக்கிய கேள்வி.

தமிழ் நாடு எழுப்ப வேண்டும், குறிப்பாக அனுராதபுர இரசியத்துக்கும், குஜராத்துக்கு தொடர்பு இருந்தது என்று தொல்லியல் மூல உறுதி செய்ததாக அறிவித்ததுக்கு.

குறிப்பாக அனுராதபுர இரசியத்துக்கும், குஜராத்துக்கு தொடர்பு இருந்தது என்று தொல்லியல் மூல உறுதி செய்ததாக அறிவித்ததுக்கு.

(அப்படி நடந்ததாக முதலில் தெரிந்து இருக்க வேண்டும், அந்த நேரத்தில் செய்த்து இருக்க வேண்டும்)

  • கருத்துக்கள உறவுகள்
On 26/5/2025 at 14:01, நிழலி said:

இலங்கையில் தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பண்டைய கால பொருட்கள் ஏற்கனவே கண்டு பிடித்து இருக்கின்றார்களா? ஓம் எனில் எங்கெங்கு கண்டு பிடிக்கப்பட்டன என எவருக்காவது தெரியுமா?

கீழடியில் கண்டு பிடிக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துகளில் இலங்கை தமிழ் பிராமி எழுத்துகளின் தாக்கம் இருக்குமாயின், இலங்கை தமிழ் பிராமி எழுத்துகள் கீழடிக்கும் அதிகம் தொன்மை வாய்ந்ததாக அல்லவா இருக்க வேண்டும்.

---

இந்த ஆய்வுகள் தொடர்பான அறிக்கையையும், அது வெளிப்படுத்தும் நாகரீகத்தையும், தமிழ் நாகரீகத்தின் தொன்மையையும் பிஜேபி யின் சங்கி அரசு ஒரு போதுமே விரும்பப் போவதில்லை. சிந்து வெளி நாகரீகம் தான் உச்சம் என கட்டமைக்கப்பட்டு இருக்கும் பிம்பம் உடைந்து விடும் என்று அது அச்சம் கொள்வதில் வியப்பும் இல்லை.

On 26/5/2025 at 14:12, இணையவன் said:

2009 ற்கு முன்னர் யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது கொழும்பு கடற்கரைப் பகுதியில் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதி பிராமி எழுத்துகள் பொறிக்கப்படிருந்ததாக ஞாபகம். இது தொடர்பாக தமிழ்நெட் அப்போது செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. தேடிப் பார்க்கிறேன். பின்னர் அக் கல்வெட்டு காணாமல் போயிருந்ததாக அறிந்தேன்.

https://ta.m.wikipedia.org/wiki/திசமகாராமை_தமிழ்_பிராமிச்_சாசனம்

https://www.tamilguardian.com/content/tamil-brahmi-inscription-found-tissamaharama

https://en.m.wikipedia.org/wiki/Tissamaharama_inscription_No._53

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.