Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உயிர்கள் எரிகிற நெருப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"உவனொரு இந்தியாக்காரன். சிறிலங்கன் தமிழ் என்று பொய் சொல்லி அகதித் தஞ்சம் கேட்டிருக்கிறான். " என்று பூலோகத்தார் காட்டிய பெடியன் எங்களைக் கடந்துபோய்க் கொண்டிருந்தான். அவனைப்பார்த்தால் புதுசு போலத்தான் இருந்தது. ஒன்றிரண்டு தடவைகள் எங்களைப் பார்க்கவும் செய்தான். அவன் பார்த்தபோதெல்லாம் பூலோகத்தார் உம் என்று முறைச்சுப்பார்த்தார். அவர் சொன்னால் சரியாகத்தானிருக்கும். பிபிசி என்றும் வீரகேசரி என்றும் விடுப்பு டொட் கொம் என்றும் முதுகுக்குப்பின்னால் கூப்பிடப்படுகிற பூலோகத்தார் இந்தமாதிரிக் கதைகளை விரல் நுனியில் வைத்திருப்பார். அதை அகப்படுகிற நாலைஞ்சு பேருக்குச் சொல்லாமலும் விடமாட்டார். அப்பிடியாப்பட்ட ஒவ்வொருக்காவும் "எப்பிடித்தெரியும்?" என்று நானும் கேட்காமல் விடுவதில்லை. எனக்குத் தெரியும் இப்ப பூலோகத்தாரிடமிருந்து ஒரு வெடிச்சிரிப்பும் நூற்றுப்பன்னிரண்டாவது தடவையாக அந்தப்பதிலும் வருமென்று. "எடேய்.. இந்தப் பூலோகத்தான் கண்ணால பார்த்தே கதையைச் சொல்லுவானடா. " பூலோகத்தாருக்கு அப்பிடியொரு குவாலிபிக்கேசன் உண்மையிலேயே இருக்குதோ என்று எனக்கும் டவுட் இருக்கிறது. அதுக்கொரு காரணமும் இருக்கிறது. மூன்று வருசத்துக்கு முதல் பின்னேரப்பொழுதொன்றில் ட்ரெயினால இறங்கி நடந்தபோது படிக்கட்டுகளில் கம்பளிக்கோட்டும் காதுகளை மூடிய மப்ளரோடும் கையில் பியர் கானோடும் ஒராளைப்பார்த்தேன். அவரும் என்னைப்பார்த்தார். அடுத்தநாளும் அவர் என்னைப்பார்த்தார். மூன்றாம் நாள் அவர் என்னைக் கூப்பிட்டார். "டோய் தம்பி .. டோய் உன்னைத்தான்". கையில சுருட்டி வைத்திருந்த சுவான்சிக் மினிட்டன் பேப்பரை விரிச்சுப்படிக்கிறமாதிரி நான் விலகி நடந்தேன். ஒரு வெள்ளைக்கார மனிசி தோளைத்தட்டி "அவர் உன்னை கூப்படுகிறார்" என்றாள். நான் பக்கத்தில் போய்நின்று என்ன என்பது போல் பார்த்தேன்.

"நீ இன்னாற்றை பெடியன் தானே"

"ஓம்"

"நீ இன்னாற்றை புரிசன்தானே.."

"ஓம்.."

"நீ இந்தவேலைதானே செய்யிறாய்..."

"நீ இப்ப இங்கைதானே போட்டுவாறாய்.."

நான் அவரைச்சுற்றி ஒருக்கா நோட்டம் விட்டேன். இவரொரு சாத்திரியாக இருக்கலாம். இப்பவெல்லாம் இந்தியாவில் இருந்து சாத்திரக்காரர்கள் இப்படி வருகிறார்கள். ஒரு சின்னக் காட்போட் மட்டையில் குருஜி சோதிட மைய்யம் என்றோ ஆதிபகவான் அற்புத சோதிடமென்றோ எழுதி ஏதாவது தமிழ்கடையின் ஓரத்தில் குந்திக் கொள்கிறார்கள். கத்தரிக்காய் வாங்கப்போனால் அப்படியே சாத்திரத்தையும் பாருங்கோவன் என்று கடைக்காரர் புரொமோட் பண்ணுகிறார். அல்லது ஆக்கினைப் படுத்துகிறார். அங்கிருந்து கொஞ்சம் முன்னேறி இவர் வீதிக்கு வந்திருக்கலாம். இனி இவர் என்னிடம் பிராங்குகள் கேட்கக்கூடும். அப்படியொரு ஆள் இங்கே சுற்றித்திரிகிறார். அவர் ஒரு சீக்கியர். கொஞ்சம் வயசானவர். ஜீன்ஸ் ரீ சேட்டில் எடுப்பாகத் திரிவார். ஆங்கிலத்தில்தான் பேசுவார். ஒருநாள் ட்ரெயினுக்குள் வைத்து உனக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்றார் அவர். நான் புளுகம் தாங்காமல் தாங்ஸ் என்றேன். உனக்கு வர்த்தக ஆற்றல் இருக்கிறது என்றார். அதற்கும் தாங்ஸ் என்றேன். இன்னும் இரண்டு மூன்று தாங்ஸ் என்னிடமிருந்து வாங்கின பிறகு அவர் இப்பொழுது எனக்கு ஐம்பது பிராங்குகள் கொடு என்றார்.

"என்ன.. ?" நான் முகத்தைச்சுருக்கி அவரைப்பார்த்தேன்.

"ஆம்.. நான் எனது தொழிலைச் செய்தேன். நீ பணம் தரவேண்டும்" என்று எடுத்த எடுப்பிலேயே குரலை உயர்த்தினார். சீக்கியர்களுக்குப் பயந்த காலம் ஒன்றிருக்கிறது. அப்போது அவர்களிடம் துவக்குகளும் கிரேனைட்டுகளும் கத்திகளும் இருந்தன. ட்ரெயினுக்குள் சனங்கள் எங்களைப் பார்த்தார்கள். சீக்கியர் குரலை உயர்த்திக்கொண்டே போனார். நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி "நீயும் இறங்கு பேசலாம்" என்றேன். சீக்கியர் இறங்காமலே போய்விட்டார்.

இப்போதைய சாத்திரியை எப்படிச்சமாளிப்பது என்று ஒரு தீர்மானத்திற்கு என்னால் வரமுடியவில்லை. தலையைச் சொறிந்துகொண்டு நின்றேன். "என்னடா முழுசுறாய்.. இதெல்லாம் எப்பிடித்தெரியுமெண்டோ.." என்றவர் முதலாவது தடவையாக வெடிச்சிரிப்பையும் அந்த ஸ்ரேற்மென்ரையும் சொன்னார். "எடேய் இந்தப் பூலோகத்தான் கண்ணாலை பார்த்தே கதையைச் சொல்லுவானடா.."

தொடக்கத்தில் ஒரு பேச்சுக்கு நூற்றுப்பன்னிரண்டாவது தடவை பூலோகத்தார் ஸ்ரேற்மென்ட் விடுறார் என்று சொல்லியிருந்தாலும் ஒழுங்கா எண்ணியிருந்தால் அதுக்குக் கிட்டவான கணக்கு வரும்தான். "பாலன்ரை பெட்டையும் மூர்த்தியின்ரை பெடியனும் தனியப்போய் இருக்கினம். இரண்டு வீட்டிலயும் பெரும் சண்டை. பெட்டைக்கு இந்த வைகாசி வந்தால் பத்தொன்பது வயசு. " என்றதையெல்லாம் கண்ணாலே பார்த்துச் சொல்லமுடியுமா என்பது குழப்பமாகத்தான் இருக்கிறது. "அண்ணை உண்மையைச் சொல்லுங்கோ, நீங்கள் அவனை வெருட்டிக் கேட்டுத்தானே இந்தியாக்காரன் என்று கண்டுபிடிச்சனியள்.. " என்றபோது பூலோகத்தார் அவசர அவசரமாக மறுத்தார். "அதொண்டுமில்லை." என்று மட்டும் சொன்னார். அந்தப்பெடியன் வளைவொன்றில் திரும்பி மறைந்தான். பூலோகத்தார் டக்கென்று சொன்னார். "எங்கடை சனங்களின்ரை பிரேதம் எரியிற நெருப்பில அவங்கள் குளிர் காயுறாங்கள்". நான் பதிலெதுவும் சொல்லவில்லை. ஆனால் இது ஒரு கோக்கு மாக்குக் கதை. "ஏன் நாங்கள் குளிர்காயலாமோ" என்று நான் இப்போது கேட்கலாம். அதற்கு " ஓம்.. நாங்கள் குளிர்காயலாம். ஆனால் கொழுத்தினவன் குளிர்காயலாமோ" என்றொரு பதிலை அவர் வைத்திருப்பார்.

இந்தியாவிலிருந்து இங்கு வருவதும் இலங்கைத் தமிழ் அகதி என தஞ்சம் கேட்பதுவும் பரம ரகசியமல்ல. அப்படி அவர்களில் ஒருவரை நான் சந்தித்திருக்கிறேன். ஜெர்மன் மொழிக் கடிதமொன்றை வாசித்துச் சொல்வார் என யாரோ என்னைக் காட்டி விட்டிருக்கிறார்கள். அவர் தன்னை சதீஸ் என அறிமுகப்படுத்தினார். சொந்த ஊர் தஞ்சாவூர். வந்து ஏழு மாதங்கள் முடிகிறதென்றார். அவர் தனது வழக்கு நிராகரிக்கப்பட்ட கடிதத்தைக் கொண்டுவந்திருந்தார். கடிதத்தில் அவர் யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளையில் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதாம் ஆண்டு பிறந்திருக்கிறார். மகாஜனாவில் படித்திருக்கிறார். தெல்லிப்பளையை இராணுவம் கைப்பற்றியதும் பிறகது உயர்பாதுகாப்பு வலயமானதும் கடிதத்தில் சொல்லப்பட்டிருந்தது. சதீஸ்குமார் இயக்கத்தில் ஐந்து வருசம் இருந்திருக்கிறார். இயக்கம் அவரை மலேசியாவிற்குப் படிக்க அனுப்பியிருக்கிறது. அங்கு இயக்கத்தோடு மனக்கசப்புக்கள் ஏற்பட அவரைத் திரும்பவும் வன்னிக்குக் கூப்பிட்டிருக்கிறார்கள். அச்சம் காரணமாக அவர் அதை மறுத்தார். இயக்கத்தில் இருந்ததனால் அவரால் கொழும்புக்கும் திரும்ப முடியவில்லை. அதனால் தஞ்சக் கோரிக்கைக்கு விண்ணப்பிப்பதாக கடிதத்தின் முதல் பன்னிரண்டு பக்கங்களில் இருந்தது. தஞ்சக்கோரிக்கை கேட்ட இடத்தில் வைத்து இலங்கை அடையாள அட்டையையும் இலங்கை பிறப்புச் சான்றிதழையும் சதீஸ்குமார் கையளித்திருக்கிறார். தெல்லிப்பளை கிராமசேவகர் இவரை இன்னார்தான் என உறுதிப்படுத்திய கடிதமொன்றையும் கொடுத்திருக்கிறார். கடிதத்தின் மிகுதிப் பக்கங்களில் வழக்கு ஏன் நிராகரிக்கப்பட்டது என்றிருந்தது. சதீஸ்குமார் எல்.ரி.ரி. ஈ யில் இருந்தார் என விசாரணைகளில் சொல்லியிருந்தாலும் அதனை நிரூபிக்கும் ஆவணங்களைத் தராதபடியினாலும் மேலும் மலேசியாவில் விமானம் ஓட்டும் பயிற்சிக்கான படிப்பு படித்ததற்கான ஆதாரங்களையும் அவர் தரவில்லையென்பதினாலும்... இப்படியாக அது இல்லை இது இல்லையென்றும் கொழும்பில் இருக்கலாம் கண்டியில் இருக்கலாம் என்றும் போய் கடைசியாக நாட்டை விட்டு வெளியேற அல்லது மேன்முறையீடு செய்ய முப்பது நாட்கள் அவகாசம் உள்ளதென கடிதம் முடிந்தது. ஆனால் சதீஸ்குமார் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதில் சந்தேகமிருக்கிறது என்ற வார்த்தை ஒரு இடத்திலும் இருக்கவில்லை.

"என்னத்துக்கு பிளேன் ஓட்டப் படிச்சனான் என்று கொடுத்தனியள்.. புரூப் இல்லாமல்" என்றேன் நான். யாரோ தமிழீழ இசைக்குழுவில் மிருதங்கம் வாசித்தனான் என்று சொல்ல மிருதங்கத்தைக் கொடுத்து வாசித்துக் காட்டச் சொன்னதாக உலவுகிற கதையொன்றை நினைத்துக்கொண்டேன். சதிஸ்குமார் எனக்குப் பதில் சொல்லாமல் திரும்பவும் "நான் தஞ்சாவூர்ண்ணே" என்றார். அவருக்கென்ன தெரியும். எழுதிக்கொடுத்த விண்ணன் திரைக்கதையில் பிளேன் கெலிகொப்டர் எல்லாம் வந்தால் த்ரில்லா இருக்குமென்று யோசிச்சிருக்கிறான். அவன் இப்படியும் யோசித்திருக்கலாம். பிளேன் குண்டுபோட வந்தது என்றால் அது எல்லாருக்கும் பொது என்று நிராகரிக்கிறார்கள். சதிஸ்குமாரே பிளேனில் குண்டுபோடப் போனார் என்றால்..

சதிஸ்குமாருக்கு நான் என்ன சொல்வதென்று தெரியவில்லை. "ரீயைக் குடியுங்கோ" என்றேன். "நான் எல் ரீ ரீ ஈயில் இருந்தேன்னு எப்பிடியாச்சும் புருப் பண்ண முடியாதா" என்றவர் அடுத்ததாத் தூக்கிப்போட்ட கேள்வியில் எனக்கு குடிச்சுக் கொண்டிருந்த ரீ புரக்கேறியது. "அவங்களோட தலைவர் கிட்ட லெட்டர் ஏதாச்சும் வாங்கலாமா.."

நான் சதீஸ் குமாருக்கு அப்பீல் செய்யச் சொன்னேன்.

"கிடைச்சிடுமா.."

"நிச்சயமாச் சொல்லத் தெரியேல்லை. ஆனால் இன்னும் ஒன்றிரண்டு வருசம் இழுக்கலாம்.. இடைப்பட்ட காலத்தில என்ன வேலையென்றாலும் செய்து காசு சேர்க்கப்பாருங்கோ" நான் காசுக்கதை கதைச்சதாலோ என்னவோ சதீஸ்குமார் தான் பத்து லட்சம் இந்தியரூபாய்க்களை செலவழித்து இங்கு வந்ததாகச் சொன்னார். இந்தியாவில் பத்தென்றால், இலங்கையில் இருபத்தைந்துகளுக்குக் கிட்டவருகிறது. சரியாகக் கணக்குப் பண்ணியிருக்கிறார்கள். சதீஸ்குமார் மேலும் சொன்னார். "நாங்க குடும்பத்தில மூணு பையன்கள்.. ஒரு பொண்ணு, எனக்கு மூத்தவங்க அவங்க.. தஞ்சாவூருதான் பூர்வீகம். விவசாயக் குடும்பம் நாங்க, எல்லாருமே விவசாயம்தான் பாத்திட்டிருந்தோம். கேள்விப்பட்டிருப்பீங்க.. தண்ணிர் பிரச்சனை அப்புறம் நிறைய பிரச்சனைகள். முன்னைய மாதிரி இல்லை. விவசாயம் சரியாகல்லை. அப்பா தவறிட்டாங்க , முதல்ல எங்காவது மிடில்ஈஸ்ற்தான் போவோம்ணு நினைச்சேன். அப்புறம் நம்ம கூட்டாளியொருவன் பாரீசுக்கு போனான். அதான் விவசாய நிலத்த வித்திட்டு வந்திட்டேன். அக்கா கல்யாண வயசில இருக்கிறாங்க.. தம்பிங்களைப் பாக்கணும்.." சதீஸ்குமாருக்குச் சென்னையை அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. நான் சென்னை பற்றிப் பேசிய போதெல்லாம் "அது வேற உலகம், நமக்கு அவங்களைத்தெரியாது. அவங்களுக்கு நம்மைத்தெரியாது. நாங்கெல்லாம் தனித்தீவு" என்றார்.

சதீஸ்குமாரு ஒரு கமரொ உதவியாளராக வந்திருக்கிறார். வருசத்தொடக்கத்தில் இங்கத்தைய தியேட்டர்களில் இரவு பன்னிரண்டு மணிக்கும் கவுஸ் புல்லாக ஓடிய படத்தின் பாட்டொன்றை இங்குதான் எடுத்திருந்தார்கள். கொட்டும் ஸ்னோவில் நடிகையால் குளிரைச் சிம்பிளாகத் தாங்கமுடிந்தது. நடிகர்தான் முடியாமல் கைக்கு க்ளவுஸ் ஜக்கெட் சால்வ் என அந்தரப்பட்டார். சதீஸ்குமார் அவர்களோடு வந்தார். வருவதற்குமுதல் சதிஸ்குமார் இருபது தரத்திற்கு மேல் தெனாலி படத்தைப்பார்த்தாராம். அவருக்கு ஏற்பாடு செய்தவர்கள் தெனாலி கன்னத்தில் முத்தமிட்டால் நளதமயந்தி என்று எக்கச்சக்கப் படங்களைப்பார்த்து இலங்கைத்தமிழ் படிக்கச் சொல்லியிருக்கிறார்கள். கடைசியா அவர் சொன்னார். "உங்களை மாதிரித்தாண்ணே.. நாட்டில வாழ முடியல்ல.."

சதீஸ்குமார் நிராகரிக்கப்பட்ட வழக்கை மேன்முறையீடு செய்தார். வன்னியோடு தொடர்பில்லாமல்ப் போனதால் எந்த ஆதாரங்களையும் பெறமுடியவில்லையென்று கரித்தாஸ் அவருக்காக வாதாடியது. சரியாக எட்டாவது மாதத்தில் பதிவுத்தபால் ஒன்றில் தஞ்சக்கோரிக்கை ஏற்கப்பட்ட கடிதமும் சுவிஸில் வாழும் பிரஜைக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய புத்தகமும் சதிஸ்குமாருக்கு வந்து சேர்ந்தது. சதீஸ்குமார் ரெஸ்ரோரன்ற் ஒன்றில் வேலை தேடிக்கொண்டார். அக்காவின் கல்யாணத்திற்கு இந்தியாக்கு போக இருப்பதாகச் சொன்னார். பிறகொருநாள் இலங்கையின் வடக்குக் கிழக்கில் பிறந்த தமிழர்களுக்கு இந்திய எம்பசியில் விசா கொடுக்க மறுக்கிறார்கள் என்றும் தனக்கும் விசாத் தரவில்லையென்றும் சதீஸ்குமார் சொன்னார்.

சதீஸ்குமாரின் கதையை நான் பூலோகத்தாருக்குச் சொல்லியிருக்கிறேன். அவர் பதிலுக்கு ஒரு விழல் கதை சொல்லியிருப்பார். என்னால் ஞாபகப்படுத்த முடியவில்லை. ஆனால் இன்னொரு பனிக்கதை நினைவிருக்கிறது. உண்மையாகவே அப்ப பனி பெய்து கொண்டிருந்தது. ஒருநாள் பூலோகத்தார் போன் பண்ணி "வாவன் மாவீரர் தினக் கொண்டாட்டத்துக்குப் போட்டு வருவம் என்றார்." ரேடியோவாகட்டும் ரிவியாகட்டும் சிலர் மாவீரர் தினக் கொண்டாட்டம் என்றுதான் சொல்கிறார்கள். நாட்டில்த்தான் நினைவு கூருகிறார்கள், இங்கே கொண்டாடுகிறார்கள் என்று யாரோ எழுதியுமிருக்கிறார். விசுவமடுவோ, முள்ளியவளையோ தங்கள் சாவு வெளிச்சப்புள்ளியாக இருக்கும் என்று நம்பியவர்கள், நிற்கும் நிலத்திற்கு கீழே இருக்கிறார்கள் என்ற நினைப்புத் தருகிற உள்ளொடுக்கம் வேறை எங்கையும் கிடைக்காதென்று நான் நம்பினேன். அதனாலேயே பூலோகத்தாரை "நீங்கள் போட்டு வாங்கோ" என்றேன். அவர் டக்கென்று நீயெல்லாம் ஒரு தமிழனோ என்று கேட்டார். மேலும் வலு சிம்பிளாக இரண்டாயிரம் வருடங்களாகத் தமிழன் அடிமையாக இருப்பதற்கு நான்தான் காரணமென்றார். நான் பூலோகத்தாருடன் போனேன். பிறகு வந்தேன். வரும்போது பூலோகத்தாருக்கு இப்படிச் சொன்னேன். "இதுகள் பிழையென்றதாக நான் சொல்லவில்லை. ஆனால் இப்பிடியாப்பட்ட ஒருநாளில் அங்கை வைச்சு ஒரு பெடியன் தன்ரை போன் நம்பரை எழுதி ஒருத்தியிடம் கொடுத்ததும் அவளுடையதைக் கேட்டதும் பதிலுக்கு அவளும் எழுதிக்கொடுத்ததும் என்னாலை சீரணிக்க முடியாமல் கிடக்கு.. " இப்பொழுது பூலோகத்தாரின் முகம் சீரியஸானது. அவர் மேலேயெங்கையோ பார்த்தார். அவர் எச்சில் விழுங்குவது தொண்டைக்குழிகளில் தெரிந்தது. பெருமூச்சுக்குப் பிறகு சொன்னார். "இந்த மாதிரியான ஒரு சுதந்திரத்திற்காகவும் தான் எங்கடை பிள்ளைகள் உயிர்களை விட்டார்கள்"

இப்படியாக எங்கு முடிவதெனத்தெரியாது அங்குமிங்குமாக இந்தக் கதை அலைந்த போதுதான் அது நடந்தது. கதையின் தொடக்கத்தில் எங்களைத் திரும்பிப்பார்த்து நடந்தவனும் பார்த்தபோதெல்லாம் பூலோகத்தாரால் முறைக்கப்பட்டவனுமான பெடியன் என்னைச் சந்தித்தான். அவன் மிக மெலிதாகக் கதைத்தான். "உங்களோட அவரைப் பார்த்திருக்கேன். அவர்கிட்ட சொல்லுவீங்களா" என்றே தொடங்கினான். என் தலையிலிருந்து மூன்று நான்கு வட்டங்கள் பெரிதாகிப் பெரிதாகி கடைசிப் பெரும் வட்டத்திற்குள் பூலோகத்தாரின் வெடிச் சிரிப்புடன் கூடிய முகம் முளைத்தது. அவன் தொடர்ந்தான். "அவர் என்னை கண்ட இடங்களில் இந்தியாக்காரன் எனத்திட்டுகிறார். நான் எவ்வளவோ சொன்னேன். அவர் நம்புகிறார் இல்லை" என்று அழுவானைப்போல அவன் சொன்னான். "சே.. அவர் அப்பிடித்தான். அதை பெரிசா எடுக்காதேங்கோ, நான் அவரிட்டைச் சொல்கிறேன்" என்று நான் ஆறுதல் சொன்னேன். "இல்லையே.. என்று தொடங்கியவன் சொல்லச் சொல்ல எனக்கு பூலோகத்தார் மீது பத்திக்கொண்டு வந்தது. எப்போதும் பூலோகத்தாரைக் காய்வெட்டி விட்டு விலகிச் செல்ல விரும்புகிறவன் அன்றைக்குப் பூலோகத்தாரைத் தேடி படிக்கட்டுகளுக்குப் போனேன். அவரைக் காணவில்லை. இரண்டு மூன்று இடங்களில் தேடியபிறகு ஏரிக்கரையில் வைத்து அவர் அகப்பட்டார்.

"அவன் ஆரெண்டு உங்களுக்குத் தெரியுமோ" என்றபோது பூலோகத்தார் எவன் என்பது போலப் பார்த்தார். கொஞ்சத்துக்கு முதல் அவன் சொன்ன கதையை நான் அவருக்குச் சொல்லத் தொடங்கினேன்.

அவன் சொன்ன கதை

இரண்டு வருசத்துக்கு முந்திய நாளொன்றில் இங்கு வந்து சேர்ந்ததில் இருந்து எனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. நான் பிரான்சிலும் கொஞ்சக்காலம் அகதியாய் இருந்தேன். இங்கும் கேஸ் முடியாதபடியால் சரியான விசா இல்லை. விசா இல்லாதபடியால் வேலையும் தருகிறார்கள் இல்லை. கிழமைக்கு எழுபது பிராங்குகள் முகாமில் தருகிறார்கள். நாளுக்குப் பத்து பிராங்குகளை வைத்து என்ன செய்துவிட முடியும் என்று உங்களுக்கு நன்றாகத்தெரியும். இருந்தும் அதிலும் நான் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டியிருக்கிறது. அப்பாவையும் அக்காவையும் வெளியே எடுத்துவிட வேண்டும். அவர்கள் செட்டிக்குளம் முகாமில் இருக்கிறார்கள். பாருங்கள்.. நானும் முகாமில்.. அவர்களும் முகாமில்.. உங்களுக்குத் தெரியுமா..? யாருக்கோ பணம் கொடுத்தால் முகாம்களில் உள்ளவர்களை வெளியே எடுக்கலாமாம். விசாரிக்க வேண்டும். ஆனாலும் எப்பிடியும் எடுத்துவிட வேண்டும். அவர்கள் வெளியே வந்த பிறகு எங்கே செல்வார்கள்... என்பதுதான் புரியவில்லை. அப்பா புசல்லாவவிற்கு போவாரா தெரியவில்லை. புசல்லாவ எங்கிருக்கிறது என்று தெரியுமா? அது நுவரெலியாவிற்கு கிட்டவாக இருக்கிறதாம். அல்லது கண்டிக்கு கிட்டவோ தெரியாது. பாருங்கள் அப்பா அம்மாவின் சொந்தஇடம் எங்கிருக்கிறதென எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அப்பா தன் சொந்த இடமென ஒருபோதும் புசல்லாவவைச் சொன்னதில்லை. அவர் செட்டிக்குளம் முகாமிலும் தன் சொந்த இடமென கிளிநொச்சி என்றே கொடுத்திருப்பார். நான் புசல்லாவவிற்குப் போனதில்லை. அண்ணனும். ஆனால் அவன் அங்கேதான் பிறந்தான். ஏதோ கலவரத்தில் வன்னிக்கு ஓடிவந்தபோது அவனுக்கு ஒன்றோ இரண்டு வயது நடந்துகொண்டிருந்தது. அவன் கிளிநொச்சியிலேயே வளர்ந்தான். கிளிநொச்சியிலேயே படித்தான். கிளிநொச்சியிலேயே இயக்கத்துக்குப் போனான். கிளிநொச்சிச் சண்டையிலேயே செத்தும்போனான். அந்தச் சண்டையில் கிளிநொச்சியிலிருந்து ஆமி ஓடிப்போனது. நாங்கள் திரும்பவும் கிளிநொச்சிக்குப் போனோம். ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு கண்ணைத்துடைச்சுக் கொண்டு அப்பா சொன்னார். அண்ணன் தனது மண்ணைக் காப்பாற்ற உயிரைக்கொடுத்ததாய்.. கிளிநொச்சியில் எங்களுக்குப் பெரிய காணி இருந்தது. அது முன்னர் பற்றைக் காடாக இருந்ததாம். அப்பா தன்னந்தனியனாக அதை வெட்டிச் சீரமைத்தாராம். நான் உங்களுக்கு அம்மாவைப் பற்றியும் அக்காவைப்பற்றியும் சொல்லவில்லை. அம்மா என் சின்ன வயதுகளிலேயே செத்துப்போனா. ஏதோ ஒரு இங்கிலிஸ் வருத்தம். அக்காவிற்கும் எனக்கும் நாலைந்து வயது வித்தியாசம். ஆனால் அவள்தான் என் அம்மாவாய் இருந்தாள். அப்பா அவளுக்கொரு கல்யாணம் முடித்துவைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தார். யாருக்குத்தெரியும்..? இப்படியெல்லாம் .. இம்முறையும் கிளிநொச்சியிலிருந்து அவராக வெளிக்கிட்டிருக்க மாட்டார். போனமுறை நானும் அக்காவும் அவரை இழுத்துக்கொண்டு வந்தோம். "நீங்க போங்க நான் வரலை" என்றார் அவர். அப்பா பேசுவது போலவே எனதும் அக்காவினதும் அண்ணாவினதும் பேச்சு இருக்கும். யாழ்ப்பாணத்தில் பேசுகிற தமிழை நான் தொன்னூற்றைந்துகளுக்குப் பிறகுதான் கேட்கத்தொடங்கினேன். அப்போதெல்லாம் திருவிழா போல கிளிநொச்சி சனங்களால் நிறைந்திருந்தது. எங்கள் காணியிலும் கொட்டில்கள் போட்டு சிலர் தங்கியிருந்தார்கள். கொஞ்சக்காலத்தில் யாழ்ப்பாணம் போய்விட்டார்கள். நாங்களும் புசல்லாவவிற்குப் போயிருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனால் அப்பா ஒருபோதும் மாட்டார். பாவம் நோய்களோடு முகாமில் என்ன செய்வாரோ.. அவரையும் அக்காளையும் வெளியே எடுக்கவேண்டும். காசு சேர்க்க வேண்டும். உங்களுக்குத் தெரிந்த இடங்களில் ஏதாவது வேலை இருக்கிறதா..

0 0 0

கதையைக்கேட்டு பூலோகத்தாரின் முகம் கலவரமடையும் என நான் எதிர்பார்த்தேன். அவர் சலனமற்று இருந்தார். அவர் என்னிடம் சிலசமயம் மன்னிப்புக் கேட்கக்கூடும். வயதில் மூத்த ஒருவர் என்னிடம் மன்னிப்புக் கேட்கையில் அதை எப்படி எதிர்கொள்வதென்று எனக்குத் தெரியாமல் இருந்தது. "சரியண்ணை முடிஞ்சால் அவனுக்கொரு வேலை தேடிக்கொடுங்கோ" என்று சொல்லவேண்டும். கொஞ்ச அமைதிக்குப்பிறகு பூலோகத்தாரிடமிருந்து வெடிச்சிரிப்புக் கிளம்பியது. "ஹா.. ஹா.. ஹா.. அப்பிடிப்பாத்தாலும் அவன் இந்தியாக்காரன் தானே" என்ற பூலோகத்தார் என்னைத் தனிய விட்டுவிட்டு எழும்பி நடந்தார்.

Edited by sayanthan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சயந்தன் நீங்கள் நல்ல கதை சொல்லி.

மகிழ்ச்சியுடன்

ஜெயபாலன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அண்ணை.. நலமா?

  • கருத்துக்கள உறவுகள்

அவனும் தமிழன் தானே என்று பூலோகத்தார் சொல்லியிருக்கலாம் ....ஆனால் சொல்லவில்லை காரணம் ..... மண்வாசனை விடவில்லை போலகிடக்கு

தொடரட்டும்.....வாழ்த்துக்கள்

நல்ல கதை.

எமக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாங்கள் எல்லாரேயும் எப்படிப் பார்க்கிறோம் என்பது விசித்திரமானது.

எமது தாயக விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் தியாகங்களைப் போலவே எமக்காக உயிர் கொடுத்த அப்துல் ரவூப், முத்துக்குமார் உள்ளிட்ட உத்தனையொ தமிழக இளைஞர்களும் இருந்திருக்கறார்கள் என்பது எப்போதும் நினைவில் வைக்கப்பட வேண்டியது.

  • கருத்துக்கள உறவுகள்

"உயிர்கள் எரிகிற நெருப்பு" இந்த உரையாடல் கதைக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் உச்சரித்துப் பார்க்கிறேன். துணுக்குற வைக்கிறது. எங்கள் சமூகத்தில் சில விடயங்களை மாற்றம் செய்யவே முடியாது என்பதுபோல் இன்னும் புரையோடிக்கிடக்கும் மனிதநேயமற்ற பண்பு புலம்பெயர்ந்த நாட்டில் அதிகமாக நான் தரிசிக்கும் ஒன்றாக இருக்கிறது. எங்கள் சமூகத்தில் அதிகமாக இல்லாவிட்டாலும் சில குணவியல்புகள் ஆழமாக சில வர்க்கத்தினரிடம் இருக்கத்தான் செய்கின்றன. பூலோகத்தானின் புதினக்கதைகளே சிறந்த சாட்சிகள். சயந்தன் உங்களுடைய கதை சொல்லும் பாங்கு ஒரு பிரத்தியேகமான தன்மையைக் கொண்டதாக இருக்கிறது. வெற்றுக் கண்களுக்குப் புலப்படாத சமூக அவலங்களை உங்கள் புனைவில் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. சக படைப்பாளியான உங்களை நட்போடு பாராட்டுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சகாரா..

  • கருத்துக்கள உறவுகள்

-----------

கதையைக்கேட்டு பூலோகத்தாரின் முகம் கலவரமடையும் என நான் எதிர்பார்த்தேன். அவர் சலனமற்று இருந்தார். அவர் என்னிடம் சிலசமயம் மன்னிப்புக் கேட்கக்கூடும். வயதில் மூத்த ஒருவர் என்னிடம் மன்னிப்புக் கேட்கையில் அதை எப்படி எதிர்கொள்வதென்று எனக்குத் தெரியாமல் இருந்தது. "சரியண்ணை முடிஞ்சால் அவனுக்கொரு வேலை தேடிக்கொடுங்கோ" என்று சொல்லவேண்டும். கொஞ்ச அமைதிக்குப்பிறகு பூலோகத்தாரிடமிருந்து வெடிச்சிரிப்புக் கிளம்பியது. "ஹா.. ஹா.. ஹா.. அப்பிடிப்பாத்தாலும் அவன் இந்தியாக்காரன் தானே" என்ற பூலோகத்தார் என்னைத் தனிய விட்டுவிட்டு எழும்பி நடந்தார்.

பூலோகத்தாரின் மனம் கலவரமடையுமென்று நானும் எதிர்பார்த்தேன் .

இவ்வளவு நடந்த பின்பும் இப்படியானவர்கள் ...... இன்னும் இருக்கிறார்களா ? என்று எண்ணத்தோன்றுகின்றது.

திருந்தாத ஜென்மங்கள் .

நல்ல ஒரு கதையை , தந்த சயந்தனுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு அருமையான படைப்பை வாசித்த திருப்தி. உங்களின் கதைகளை நீங்கள் புத்தகமாக வெளியிடலாம் தானே சயந்தன்.

  • 1 month later...

இன்றுதான் இந்தக் கதையை வாசித்தேன். தன் சமூகத்தில் இருக்கும் போலித்தனங்களையே கதையின் மைய கருவாக்கி அதன் மூலம் தன் சமூகத்தையும், தன்னையும் மீள் விமர்சனம் செய்வது ஒரு நேர்மையான இலக்கியவாதியின் தன்னியல்பான பணி. அதனை சயந்தன் நீங்கள் தெளிவாகச் செய்கின்றீர்கள்.

ரஞ்சகுமார், திருக்கோயில் கவியுவன் போன்றோரிற்கு பின் ஈழத்து மொழியில் தெளிவாகவும், சமூக பிரக்ஞையுடனும் எழுதும் எழுத்தை மீண்டும் உங்களிடம் காணக்கிடைக்கின்றமை மகிழ்சியை அளிக்கின்றது

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.