Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அங்காடித் தெரு-பட விமர்சனம்! இது பண்ணப்பட்ட கதையல்ல...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடிகர்கள்: மகேஷ், அஞ்சலி, ஏ வெங்கடேஷ், பழ கருப்பையா, பிளாக் பாண்டி

ஒளிப்பதிவு: ரிச்சர்டு எம் நாதன்

வசனம்: ஜெயமோகன்

இசை: விஜய் ஆண்டனி - ஜிவி பிரகாஷ்

பின்னணி இசை: விஜய் ஆன்டனி

மக்கள் தொடர்பு: டைமன்ட் பாபு

எழுத்து - இயக்கம்: ஜி வசந்தபாலன்

தயாரிப்பு: கே கருணாமூர்த்தி - சி அருண்பாண்டியன்

மிழ் சினிமாவில் அபூர்வமாக சில குறிஞ்சிகள் மலர்வதுண்டு. வசந்த பாலனின் அங்காடித் தெரு அப்படியொரு குறிஞ்சி!.

இது பண்ணப்பட்ட கதையல்ல... விளிம்பு நிலை மனிதர்கள் வாழும் வாழ்க்கையின் இன்னொரு பரிமாணம். அத்தனையும் நிஜம்!.

பத்து மாடி, பதினைந்து மாடி என உயரமான கட்டடங்களில் பரபரப்பாக நடக்கும் பளபள வர்த்தகங்களுக்குப் பின்னே அதன் முதலாளிகள் செய்யும் சில்லறைத்தனங்களும், மனிதனை மனிதன் காலில் போட்டு நசுக்கி நாயினும் கீழாய் நடத்தும் கொடுமைகளும் பத்திரிகைகளில் செய்தியாக வரும்போது படித்துவிட்டு, அந்த காகிதத்தை பஜ்ஜியிலிருந்து எண்ணெய் இறக்க பயன்படுத்துவதோடு மக்களின் பச்சாதாபம் முடிந்து போகிறது.

16671_NpAdvSinglePhoto.jpg

ஆனால் வசந்தபாலன், அத்தனை செய்திகளின் பின்னணியையும் தேடிப் பிடித்து, அந்த மனிதர்களையும் அவர்களுடன் புதைந்துபோன சில உண்மைகளையும் பேச வைத்துள்ளார். தாங்க முடியவில்லை. உண்மையின் வீர்யம் அப்படி!.

வழக்கமான காட்சிகளுடன் விரிகிறது கதை. மழையில் குளித்த 'அழகான' சென்னைத் தெருக்களில், பின்னிரவில் பாட்டுப் பாடும் ஜோதியும் சேர்மக்கனியும் (மகேஷ்- அஞ்சலி), அப்படியே உதயம் தியேட்டர் நடைபாதையோரம் இடம் தேடுகிறார்கள்... அன்று இரவுப் பொழுதை உறங்கிக் கழிக்க! வேறு போக்கிடமில்லாத ஜீவன்கள்... நல்ல முறையில் விடியும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் படுக்க, அடுத்த சில மணி நேரங்களில் அவர்கள் வாழ்க்கையை சிதைத்துப் போடுகிறது அந்த கோர விபத்து!

மருத்துவமனையில் கிழிந்த துணியாய் அந்த இருவரும்...

நாயகன் பார்வையில் பிளாஷ்பேக் விரிகிறது.

தெற்கத்திச் சீமையின் தேரிக் காடுகளில் விளையாடி மகிழும் அந்த ப்ளஸ் டூ இளைஞனின் வாழ்க்கை, தந்தை ஒரு ஆளில்லா லெவல் கிராஸ் விபத்தில் அகால மரணமடைந்ததும், தடுமாறி வழிமாறிப் போகிறது. பள்ளியிலேயே முதலாவதாகத் தேறியும், சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு பெரிய்ய்ய கடையில் வேலைக்கு சேரத்தான் அவனுக்கு கொடுப்பினை இருக்கிது. கூடவே அவனது நண்பனும் புறப்பட்டு வந்து அந்த உழைப்பாளர் சந்தையில் ஐக்கியமாகிறான்.

வாழ வழியற்ற அத்தனை மனிதர்களின் சங்கமமாகத் திகழ்கிறது அந்த கடையிருக்கும் அங்காடித் தெரு. பெரிய கடையில் வேலைக்குச் சேர்கிறோம் என்று கனவோடு வந்தவனுக்கு, கடையின் பிரமாண்டத்துக்குப் பின்னே இருக்கும் கோர முகம் திடுக்கிட வைக்கிறது. ஆடு மாடுகளிலும் கேவலமாக கடை முதலாளியும் அவனது எடுபிடி மேனேஜரும் தொழிலாளர்களை நடத்தும் விதம்...

ஒருவேளை சாப்பாட்டுக்காக கழிப்பறையை விட கேவலமான ஒரு கூடத்தில் அடித்துக் கொள்ளும் அவலம், இரவில் ஒருவர் மேல் ஒருவர் படுத்து உறங்க, வெளியில் கம்புடன் காவலாளி நிற்கும் சிறை வாழ்க்கை...

விட்டுப் போய்விடலாம்தான்... ஆனாலும், கிராமத்தின் வறுமை, அம்மா தங்கைகளின் வாழ்க்கையை நினைத்து கொடுமைகளை ஜீரணிக்கப் பழகிக் கொள்கிறார்கள்.

அந்த சகதிக்குள் தட்டுத்தடுமாறி நடைபோட முயலும் ஜோதிக்கு சின்ன ஆறுதலாக வருகிறாள் சேர்மக்கனி. ஆரம்பத்தில் சின்னச்சின்ன சண்டை. அவள் படும் பாடுகளைப் புரிந்த பின் தன் தோளை ஆதரவாகத் தர முன்வருகிறான். இரண்டு ஆதரவில்லாத கொடிகள் ஒன்றையொன்று பற்றிக் கொள்வது போன்ற நிஜமான, வலிகள் புரிந்த நேசம்.

ஆனால் கடைக்கார அண்ணாச்சிக்கு இந்த காதல் தெரிந்துவிட, சித்திரவதையின் உச்சத்தை அனுபவிக்கிறார்கள். போராடி வெளியேறுகிறார்கள்.

இனி சுய முயற்சியால் வாழலாம் என்ற முடிவோடு, முதல் நாளிரவை சென்னையின் நடைபாதையில் கழிக்க முயல, மாநகரின் கோர முகம் அவர்களை தூங்கவிடாமல் விரட்டுகிறது. மறுநாள்தான் அந்த உதயம் தியேட்டர் பக்கத்து பிளாட்பாரத்தை காட்டித் தருகிறார் தெருவிலிருக்கும் வியாபாரி ஒருவர். அங்கே இரவில் படுத்து காலையில் விழிக்கும் முன்பே விபத்து அவர்களை கிழித்துப் போட்டுவிடுகிறது.

அதன் பிறகு அந்த இருவரின் கதி என்ன என்பது ஒரு எதார்த்தமான க்ளைமாக்ஸ்...

எந்தக் காட்சியைப் பாராட்டுவது... எதை விடுவது என்றே புரியவில்லை. அத்தனை அர்த்தமுள்ள, கருத்துச் செறிவான படமாக்கம். ஒரு படைப்பாளனை நினைத்து ரசிகர்கள் பெருமைப்படுமளவுக்கு, தனது ஆளுமையைக் காட்டியுள்ளார் வசந்தபாலன்.

படத்தில் வருகிற சின்னச் சின்ன காரெக்டர்கள் கூட, நினைவில் நிற்கிறார்கள். உழைப்பு, விற்கும் திறன் தெரிந்தவன் பிழைத்துக் கொள்வான் என்பதற்கு, பிச்சைக்காரனாய் வந்து, ஒரு சிதிலமடைந்த பொதுக் கழிப்பிடத்தை சுத்தமாக்கி, கட்டணம் வசூலித்து, பின் டிப் டாப்பாக வாழ்க்கையை நடத்தும் ஆசாமி உதாரணம்.

மானத்தோடு வாழவேண்டும் என்பதே ஒவ்வொரு பெண்ணின் மனக்கிடக்கையாகவும் இருக்கிறது.. அது எப்பேர்ப்பட்ட சூழலாக இருந்தாலும் என்பதற்கு அந்த 'முன்னாள் விபச்சாரி' ஒரு உதாரணம்... இப்படி நிறைய சொல்லலாம்.

ஆதரவுக்கு யாருமில்லாத ஒரு பெண் வயதுக்கு வந்த பிறகு, சடங்கு செய்ய முடியாத கையறு நிலையில் தவிக்கும் கனிக்கு, ஒரு மரத்தடி அம்மனும் அதைச் சுற்றி வாழும் மனிதர்களும் காட்டும் பரிவு இருக்கிறதே... ஈர மனசுக்காரர்களும் இருக்கிறார்கள் என்பதை நசசென்று சொல்லுமிடம் அது.

இந்தப் படம் சில சட்டச் சிக்கல்களைச் சந்திக்கவும் நேரலாம் என்பது தெரிந்தும் அதனை தயங்காமல் படமாக்கியிருக்கும் வசந்தபாலனின் துணிச்சலுக்கு ஒரு சல்யூட்.

நடிகர்கள் மகேஷ், அஞ்சலி, பிளாக் பாண்டி, கடை மேனேஜர் ஏ வெங்கடேஷ், முதலாளி பழ கருப்பையா என அனைவருமே பிரமாதப் படுத்தியிருக்கிறார்கள். இவர்களைத் தவிர அத்தனை புதுமுகங்களுமே அருமையான பங்களிப்பைச் செய்துள்ளனர். காதலன் ஏமாற்றிய சோகத்தில் நொடியில் மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் அந்த ராணி கேரக்டர் மனதில் பெரும் வலியை ஏற்படுத்துகிறது.

அஞ்சலி அத்தனை தத்ரூபமாகச் செய்துள்ளார். சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருப்பது அவருக்கு இன்னும் அழகு சேர்த்துள்ளது.

மகேஷை புதுமுகம் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். பிளாக் பாண்டி கச்சிதமாக செய்துள்ளார். மிரட்டிவிட்டார் ஏ.வெங்கடேஷ். பழ கருப்பையா உண்மையிலே கடை முதலாளியோ என்று ரசிகர்கள் கேட்கும் அளவு மகா எதார்த்தமான நடிப்பு.

இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகள் சற்று மெதுவாக நகர்வது போலத் தோன்றும். ஆனாலும் இதுபோன்ற படங்களில் என்ன குறையிருக்கிறது என்று தேடுவதை விட்டுவிடலாம்.

ரிச்சர்டின் ஒளிப்பதிவு, ஸ்ரீகர்பிரசாத்தின் எடிட்டிங் அனைத்துமே சிறப்பாக உள்ளது. ஜெயமோகனின் வசனங்கள் இன்னொரு ப்ளஸ்.

விஜய் ஆண்டனி இயக்குநருக்கு வலதுகரம் மாதிரி கைகொடுத்துள்ளார். பின்னணி இசையும், அவள் அப்படி ஒன்றும் அழகில்லை பாடலும் அருமை. இந்த பாணியை அவர் தொடர வேண்டும்.

தலை நிமிர்ந்து நிற்கும் தலைநகர் சென்னையில், மனித இனத்தையே தலைகுனிய வைக்கும் இந்த இழிவுகள் இன்னும் தொடர்கின்றன- ஆள்பவர்கள், சட்டத்தின் காவலர்களின் பலத்த துணையுடன். எதிர்த்துக் கேட்பவனை நசுக்கிவிடும் அந்த மிருகபலத்துக்கு, ஓங்கி பலமாக வசந்தபாலன் கொடுத்திருக்கும் சாட்டையடி இந்தப் படம்.

ஒரு புலனாய்வு பத்திரிகையாளன் செய்யும் வேலையை வசந்தபாலன் செய்திருக்கிறார்.

thatstamil.com

  • கருத்துக்கள உறவுகள்

இப்படத்தின் பாடல்கள் கேட்டதுண்டு. மிக அருமை.

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அங்காடித்தெரு, நூறாவது நாள்.

July 3rd, 2010

angadi-theru-02.jpg

இன்று அங்காடித்தெரு நூறுநாளை தொடுகிறது. இவ்வருடத்தின் மாபெரும் வெற்றி இந்தப்படம்தான் என்று திரையுலகில் சொன்னார்கள். எளிமையான முதலீட்டில் எடுக்கப்பட்டு பற்பலமடங்கு லாபம் கண்ட படம். ஒரேசமயம் விமரிசகர்களின் பாராட்டையும் வணிக வெற்றியையும் பெறுவதென்பதே எந்த திரைப்படைப்பாளிக்கும் கனவாக இருக்கும். அதை வசந்தபாலன் சாதித்திருக்கிறார்

188 அரங்குகளில் வெளியிடப்பட்ட அங்காடித்தெரு 30 க்கும் மேல் அரங்குகளில் நூறாவதுநாள் கொண்டாடுகிறது. பெரும்பாலான பிரதிகள் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. திருப்பூர் முதல் நாகர்கோயில் வரை பல ஊர்களில் ஐம்பது நாட்களை கடந்த பின் மீண்டும் திரையிடப்பட்டு மேலும் இருபத்தைந்து நாள் ஓடியது

பலமுறை பல ஊர்களில் திரையரங்குக்குச் சென்று இந்தப்படத்தின் மாபெரும்வெற்றியைக் கூர்ந்து கவனித்து வந்தேன். படத்துக்கு வரும் கூட்டம் சீராக இருந்துகொண்டே இருக்கிறது. இப்போது படம் பார்க்க வருபவர்கள் பலர் ஏற்கனவே பார்த்தவர்கள். நிறையெபேர் வழக்கமாக படம் பார்க்காத பெண்கள், வயதானவர்கள். அவர்களை மீண்டும் பார்க்க வைப்பது அங்காடித்தெருவின் துயரம் மிக்க காட்சிகள்தான்.

ஐம்பதுநாட்களுக்குப் பின் பார்ப்பவர்களின் ரசனை மாறியிருக்கிறது . ஆரம்பநாட்களில் திரையரங்கில் பெரிய சலனத்தை உருவாக்காத காட்சிகளில் ஒன்று கனியின் அப்பா [விக்ரமாதித்தன்] சொல்லும் வசனம். ‘குட்டிகளை தூக்கிட்டுபோய் அங்கங்கே போட்டிட்டு போற நாய் மாதிரி நான் தம்பி..நாய் சென்மம்..’ இப்போது அந்தக் காட்சி பெரிய அளவில் பாதிப்பை உருவாக்குகிறது. அதைப்பற்றித்தான் அதிகம்பேர் பேசினார்கள்.

ஏனென்றால் அந்த அனுபவம் பல பெற்றோர்களுக்கு இருப்பதுதான். பிள்ளைகள் கடுமையாக உழைக்க அந்த பணத்தில் வாழும் நோயாளிப் பெற்றோரின் குரல் அது. நம் சமூகத்தில் நகரங்கள் ஊதிப்பெருத்து தராசின் ஒரு தட்டு கீழே இறங்கிக்கொண்டே இருக்கிறது. கிராமங்கள் காலியாகிக்கொண்டே இருக்கின்றன. நகரங்கள் அழுகிக்கொண்டிருக்கின்றன. அந்த யதார்த்ததைச் சொன்ன படம் அங்காடித்தெரு. ‘ஊர்ல வக்கிருந்தா ஏன் இங்க வரப்போறோம்’ என்று படம் சொல்லிக்கொண்டே இருக்கிறது- குப்பையாக வீசப்பட்ட தொழிலாளியின் குரலில்.

அதேபோல அந்த தங்கை அனாதையாக வயசுக்கு வரும் காட்சி. கிட்டத்தட்ட அதே காட்சியை நான் மீண்டும் கண்டேன். சென்னையில் பாரிமுனையில் நடுத்தெருவில் வெயிலில் தெருவாழ் சிறுமிக்கு சடங்கு நடந்துகொண்டிருந்தது. அங்காடித்தெருவில் கைவிடப்பட்ட பெண்ணுக்கு ‘தைரியமா இருக்கணும்’ என்று அறிவுரை சொல்லும் பாட்டி, அவர்களின் தெய்வம் நெற்றியில் பயங்கரமான பொட்டுடன் உக்கிரமான அன்னையாக இருப்பது, அந்தப்பெண் அந்த கையறுநிலையில் இருந்து மீண்டு அபாரமான தைரியத்தை அடைவது என விரியும் காட்சிகள் ஒரு தனியான குறும்படம். நம் நடுத்தர வற்கத்து ரசிகர்களால் அந்த காட்சியை உள்வாங்க முடியவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் திரையரங்குக்கு வரும் அடித்தள மக்களுக்கு அந்தக்காட்சி அவர்களின் வாழ்க்கையாகவே தெரிகிறது.

அங்காடித்தெருவின் கதையை ஒற்றைக்கோடாக எடுத்தால் இந்தக் காட்சிகள் தேவையே இல்லை. ஆனால் இம்மாதிரி சில கணங்களாகவே உண்மையான வாழ்க்கை சினிமாவில் வர முடியும். ஆகவேதான் அடித்தள உழைப்பு நிறைந்த திருப்பூர் சிவகாசி கரூர் போன்ற ஊர்களில் அங்காடித்தெரு தொடர்ந்து பார்க்கப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் பல ஊர்களில் மீண்டும் திரையரங்குக்கு வரும் இப்படம்.

சென்னையில் பல அரங்குகளில் ஓடுகிறது என்றாலும் நூறாவது நாள் விழா காஞ்சிபுரம் அரங்கு ஒன்றில் நிகழ்கிறது. சென்னையில் படம் ஓடுவது புதிதல்ல. ஆனால் காஞ்சீபுரம் போன்ற ஒரு சிறிய ஊரில் ஒரு படம் நூறுநாள் ஓடுவதென்பது அனேகமாக சாத்தியமே இல்லாத விஷயம். ஆகவே வசந்தபாலனுக்கு அதுதான் பெரும் கௌரவம் என்று பட்டிருக்கிறது .மேலும் இன்னொன்று, தயாரிப்பாளர்களுக்கு பதிலாக திரையரங்க உரிமையாளரே நடத்தும் விழா இது. வசந்தபாலன் அஞ்சலி மகேஷ் எல்லாரும் செல்கிறார்கள்.

ஆரம்பகாலத்தில் இப்படத்தின் துயரக் காட்சிகளை பலர் விமரிசித்தார்கள். நம் வாழ்க்கை இபப்டி இல்லை என இவர்களால் சொல்ல முடியவில்லை. அதை ஏன் காட்ட வேண்டும் என்றுதான் கேட்டார்கள். ஒருவருடம் வெளிவரும் படங்களில் ஒன்றோ இரண்டோதான் இப்படி இருக்கிறது. மிச்ச படங்களெல்லாம் கேளிக்கையை மட்டுமே காட்டுகின்றன. இந்த படமும் அப்படி இருக்கலாகாதா என்பவர்களிடம் என்ன பேச?

முதல் பத்துநாட்கள் படம்பார்த்தவர்கள் இருவகை. ஒருசாரார் எல்லா படங்களையும் பார்ப்பவர்கள். மானசீகமாக தங்களை படமெடுப்பவர்களாக எண்ணிக்கொள்பவர்கள். ரசிகனாக அல்லாமல் படைப்பாளியாக நின்று கருத்து சொல்ல முற்படுபவர்கள். சினிமாவழியாகவே சினிமாவை பார்ப்பவர்கள். இரண்டாம் சாரார் தனிமை காரணமாக, கேளிக்கையை மட்டும் விரும்பி, எல்லா படங்களையும் பார்ப்பவர்கள்.

ஆகவே நம்மைச்சுற்றி உள்ள வாழ்க்கையின் உண்மையான துயரம் அவர்களுக்கு ‘அழுவாச்சி’யாக ப் பட்டது. அவர்களில் சிலரின் கருத்துக்களைக் கண்டு வசந்தபாலனே கூட படம் ரொம்பவும் அழுகையாகி விட்டதா என சந்தேகம் கொண்டார். ஆனால் இன்று அந்த அப்பட்டமான கனத்த துயரம் காரணமாகவே படம் மீண்டும் மீண்டும் பார்க்கப்படுகிறது.

‘வாழ்க்கை துக்கமாக இருக்கிறது, சினிமாவில் துக்கம் எதற்கு’ என ஒரு குரல் கேட்கிறது. அது கலையை புரிந்துகொள்ளாதவர்களின் குரல். வாழ்க்கையில் இருக்கும் துக்கமே கலையின் துக்கம். சொந்த வாழ்க்கையின் துக்கங்களை கலை வழியாக மீண்டும் நிகழ்த்தி, கண்ணீர் விட்டு, தூய்மை கொண்டு திரும்பிச்செல்கிறார்கள் ரசிகர்கள். அதை கதார்ஸிஸ் என்றார் அரிஸ்டாட்டில்.

ஐம்பதுநாட்கள் கழிந்த பின் அங்காடித்தெரு அரங்கில் விசும்பி விசும்பி அழுபவர்களை கண்டு நானே ஆச்சரியத்துடன் அதை நினைத்துக்கொண்டேன். உண்மையில் அரிஸ்டாடில் சொன்னது எனக்கு இப்போதுதான் பூரணமாக புரிந்தது, நம்பிக்கையும் வந்தது. மானுட உணர்ச்சிகளை சந்தேகப்படும் சுந்தர ராமசாமியின் பரம்பரையில்தானே நானும் வந்தேன்.

‘இந்த ஒருத்தன் கிட்டயவது மானமா இருந்துக்கறேனே’ என்று கனி சொன்னபோது சத்தம் போட்டு அரங்கில் விசும்பிய ஒர் அம்மாளை திரும்பி மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தேன். அக்கணம் மிக வலுவாக என்ன உணர்ந்தேன் என்றால் நான் அப்படி அவளுடன் சேர்ந்து அழ முடியாது என்பதைத்தான். நான் வாசித்த அத்தனை புத்தகங்களும் சேர்ந்து எனக்கு தடையாக ஆகின்றன

http://way2online.com/?p=67742

http://www.jeyamohan.in/?p=631

http://www.jeyamohan.in/?p=624

http://www.jeyamohan.in/?p=7295

Edited by கிருபன்

ஒரு வரியில் சொல்லப் போனால், நூறு நாட்களுக்கு மேல் ஓடவேண்டிய ஒரு திரைப்படம் தான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு வரியில் சொல்லப் போனால், நூறு நாட்களுக்கு மேல் ஓடவேண்டிய ஒரு திரைப்படம் தான்!

நான் பார்த்த படங்களில் எனக்கு ரொம்ப பிடிச்ச படம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நல்ல சினிமா! :)

அருமையான படம் இது ... எம் வாழ்வு முறையுடன் பயணிக்காத சில காட்சிகளை அதன் பின்புலம் சார்ந்து உள்வாங்கிக் கொள்ள கடினமாக இருந்ததாலும் உணர்வு ரீதியாக உள்வாங்கிக் கொள்ள கூடியதாக இருந்தது. என் மனைவிக்கும் மிகவும் பிடித்துப் போய் இருமுறை பார்த்தார்

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்லதொரு படம்...நான் தேர்ந்தெடுத்து தான் படம் பார்ப்பேன் அப்படி சமீபத்தில் பார்த்த படங்களில் மிகவும் பிடித்த படம் இதுவாகும்...இந்திய முதலாளிமார்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை தோலுரித்து காட்டுகிறது இப் படம்...துணிந்து படத்தை எடுத்த வசந்தபாலனுக்கு எனது பாராட்டுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வாரம்தான் இப்படத்தைப் பார்த்தேன். முன்பே பார்த்திருந்தால் சில உடுப்புக் கடைகளில் பேரம் பேசியபோது அங்கு வேலை செய்யும் இளைஞர்/இளைஞிகளுடன் வேறுவிதமாக நடந்துகொண்டிருக்கலாம் என்று பட்டது.

வந்த உடனேயே போய் திடேட்டரில் பார்த்தேன்.ஒரு 20,25 பேர்கள் தான் இருந்தார்கள்.பக்கத்து தியேட்டரில் "பையா" கவுஸ் புல்.

இனி படத்திற்கு வருவோம்.ரங்கனாதன். தெரு இந்தியா போகும் போதெல்லாம் எனது மனைவி இந்த தெருவிற்கு போகாமல் திரும்ப மாட்டா.அந்த தெருவிற்குள் இவ்வளவு அவலங்களா?அழகாக அவலங்களை காட்டிய வசந்தபாலனுக்கு பாராட்டுக்கள்.கடைசியில் படம் கொஞ்சம் சினிமாத்தனத்தை எட்டி பார்த்துவிட்டது. அது ஒரு சின்ன குறை.மலசல கூடம் கழுவும் கதாபாத்திரம் அற்புதம்.எல்லோருமே மிக சிறப்பாக நடித்திருந்தார்கள்.

வசனம் ஜெயமோகன்.எனது அபிமான எழுத்தாளர்களில் இருவர்.இவர் கனடா வந்த போது சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தது.இலக்கியம் பற்றி கதைக்கும்போது நீங்கள் ஏன் சினிமாவிற்கு வரக்கூடாது எனக் கேட்டேன்.தான் பிச்சை எடுத்தாலும் சினிமாவிற்கு வரமாட்டேன்.அதைவிட குமுதம்,ஆனந்த விகடன் போன்ற மூன்றாந்தர பத்திரிகைகளிலும் எழுத மாட்டேன் என்று சொன்னார்.நான் அதற்கு ஒரு சிறு கதையை உதாரணம் காட்டி இப்படி அடம் பிடிப்பவர்கள் கடைசியில் பிச்சை எடுத்து எவருமே அறியாத ஒரு எழுத்தாளனாக மறைந்துவிடுகின்றார் எனச் சொன்னேன்.தனக்கு ஒருபோதும் அந்த நிலை வராதென சிரித்துக் கொண்டு சொன்னார்.அவருக்கு அந்த நிலை வரமுதல் இலட்சியத்தை காற்றில் பறக்கவிட்டு விட்டார் போலிருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.