Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாவம் அந்தச் சனங்களை விட்டுவிடலாம்..

Featured Replies

நான் தேடுகிறேன்.

தொலைந்தது கிடைத்தபின்னும்

தொடர்ந்தும் தேடுகிறேன்

பொருளை அல்லஅதன் அடையாளத்தை..

எப்போதோ நான் எழுதியது நினைவுக்குள் மீளெழுகிறது. நான் எப்போதுமே இப்படி நிகழும் என்று எண்ணியதேயில்லை. எனது பால்யத்தில் இச்சையின்றித் திரும்பிய எனது வீட்டொழுங்கையைக் கடந்தும் என் கால்கள் நடந்தன. எதுவும் பழகியதாயில்லை. எல்லாம் விலகியிருந்தது. என்னைவிட்டும் தம் ஆன்மாவை விட்டும். என் பதின்ம வயது இரவுகளில் மின்சாரமற்ற தெருக்களினூடே ஏமம் சாமம் பார்க்காமல் திரிந்து விட்டு நடுராத்திரியில் வீடு திரும்புகையில் என்னைக் கேளாமலே என் சைக்கிள் எங்கள் ஒழுங்கையில் திரும்பும். அந்த வீதியின் மேடு பள்ளங்களை என் சைக்கிளின் சக்கரங்கள் இருட்டிலும் விலத்தும். ஆனால் இன்றைக்கு பட்டப்பகலில் எனது தெருவுக்கு இரண்டு தெரு தாண்டிப்போய் நிற்கிறது கால்கள். எல்லாம் மாறிற்று எனக்குள் நினைவுகள் தடுமாறிற்று. 23 வருடங்கள் என்னோடிருந்த நிலம் அடையாளமற்றுக்கிடக்கிறது. எதையும் பிரித்தறிய முடியாத படி எல்லாம் ஒரே அளவாய்ச் சிதைந்து கிடந்தன. போர் எல்லாவற்றையும் விழுங்கிவிட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது. சனங்கள் நினைவுகளில் இருக்கிற தங்கள் வசந்தகாலங்களை விழுங்கிச் செரிக்கமுடியாது விழிகளில் ஏந்தியவர்களாக அலைகிறார்கள்.

வன்னியில் எல்லாவற்றினதும் ஆன்மா காயப்பட்டிருக்கிறது. சனங்களின், மிருகங்களின்,கட்டிடங்களின்,தெருக்களின், மரங்களின்,புல் பூண்டுகளின் இன்னும் பறவைகளின் என்று சகலமும் ஆன்மாவைத் தொலைத்து விட்டு அலைகின்றன.

வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் நண்பர் ஒருவருடன் நான் வவுனியா வைத்திய சாலைக்குப் போனேன். போரின் முக்கால்வாசித் தீனக்குரல்களைக் விழுங்கிக்கொண்டிருக்கும் அந்தச் சுவர்களுக்கிடையில் இன்னமும் அழுகுரல்கள் மிச்சமிருக்கின்றன. நண்பரைப் பணிசெய்ய விட்டுவிட்டு புத்த பிக்குகளிற்காக வவுனியா மாவட்ட வைத்திய சாலையினுள் கட்டப்படும் விடுதிக்கு முன்பாக நிற்கிறேன். பிக்குகள் நிறையப் பேரிராத ஊரில் விகாரைகள் அதிகமில்லாத ஊரில் எதற்காக தனியே பிக்குகளிற்கான விடுதி. கேள்விகள் குடைகிறது.

நான் சனங்களைப் பார்க்கிறேன் ஏதாவது தெரிந்த முகத்தை ஒரு தெரிந்த மனிதனைத் தேடுகிறேன். தங்களைத் தேடியலையும் சனங்களுக்கிடையில் எனக்குத் தெரிந்தவனை எங்கே தேடுவது. ஒட்டியுலர்ந்த தேகங்களுக்குள் எனக்குத் தெரிந்தவர்கள் ஒளிந்துகொண்டிருக்கலாம்.

ஆனால் என்னால் ஒரு தெரிந்தவனைக் கூட அடையாளம் காணமுடியவில்லை ஒரு ஒல்லிக்குச்சிப் பெடியனாய் ஊரைவிட்டுப் போய்.. கொஞ்சம் குண்டாய் நிறைய மொட்டையாய்த் திரும்ப வந்திருப்பவனை அவர்களுக்கும் அடையாளம் காணச் சிரமமாய் இருக்கலாம். எந்தத் தெரிந்தமுகமுமில்லை எல்லா முகங்களும் ஒரே மாதிரியானதாக இருக்கிறது. மனங்களே முகங்களைச் செய்கின்றன. எல்லார் மனங்களிலும் ஒரே துயரம் அதனால் எல்லா முகங்களும் ஒரே மாதிரியானதாய்ப் போயிருந்தன. அன்றைக்கு வெசாக்கிற்கு முதல்நாள், புத்தர் ஞானம் பெறப்போகிறார். வைத்திய சாலைக்குள் வெசாக் கூடுகள் வெளிச்சம் காட்டத் தொடங்கின பரவுகிறது ஞானத்தின் ஒளி ஆனாலும் என்ன மனங்களுக்குள் புகமுடியாத வெளிச்சம் அது.

மறுக்கப்பட்டிருந்த எல்லாம் இப்போது வவுனியாவைக் கடந்து வன்னிக்குப் போகின்றன. மூன்று தசாப்த யுத்தம் நிகழ்ந்த இடம் புதிய சந்தையாகிறது. வண்ண வண்ண விளம்பரத் தட்டிகள் வழியெங்கும் உங்களை அழைத்துச் செல்கின்றன. வன்னி மூன்று தசாப்தங்களாக இராணுவம் நுழையாத மண். தனி புலிகளின் தனி ராசதானியாக ஆளப்பட்ட மண். இலங்கையோடு ஒட்டாமல் துருத்திக்கொண்டிருந்த நிலம். சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் மின் பற்றாக்குறை காரணமாக அவர் இலங்கையின் நேரத்தை அரை மணி நேரத்தால் அதிகரித்தார். அதாவது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் ஒரே நேர அளவுதான் கடைப்பிடிகப்பட்டது. ஆனால் சந்திரிகா அம்மையார்இந்திய நேரப்படி காலை ஐந்தரை மணியை இலங்கையின் 6 மணி ஆக்கினார். அரைமணிநேரம் அதிகரித்தது இலங்கை நேரம். ஆனால் அப்போதும் வன்னியில் பழைய நேரமுறைமையே கடைப்பிடிக்கப்பட்டது. இரண்டு தேசங்களிற்கான வித்தியாசம் அதிலிருந்தது. அதனால் தானே என்னவோ இப்போது இலங்கையின் முக்கியமான தொலைபேசிச் சேவைகளை வழங்கும் டயலொக் பின்வருமாறு தன் விளம்பரத்தை செய்கிறது. “இலங்கையர்களுக்கென்றால் டயலொக் தான்” என்று. எனக்கென்னவோ அந்த விளம்பரத் தட்டி வன்னிச்சனங்களை நீங்கள் இலங்கையர்களா? என்று கேட்கிறதா இல்லை அவர்களது பாவங்களைக் கழுவி அவர்களை இலங்கையர்களாக புனிதப்படுத்துகிறதா? எனும் கேள்வி ஓடிற்று.

ஆனால் இப்போது பலாத்தகாரத்தை, வன்முறையை சகித்துக்கொள்ளப் பழகிவிட்ட அல்லது எதிர்க்கத் திராணியற்ற ஒரு பெண்ணைப் போல எதிர்ப்பின்றி வீழ்ந்து கிடக்கிறது நிலம். நான் வாழ்ந்த காலத்தில் மறுக்கப்பட்டிருந்த எல்லாவற்றையும் வன்னிக்குள் கண்டேன். ஆனால் தங்களுக்கு மறுக்கப்பட்டவையெல்லாம் திரும்பக் கிடைக்கிறபோது அதை எதிர்கொள்ளத் திராணியற்ற சனக்கூட்டமாக வன்னிச்சனத்தை காலம் மாற்றிவிட்டது. அவர்களது எதிரிகளும், அவர்களது காவலர்கள் என நம்பியவர்களுமாகச் சேர்ந்து அவர்களைத் கோவணாண்டிகள் ஆக்கிவிட்டனர்.

அம்மா அழுதுகொண்டேயிருக்கிறாள். அவளது அழுகை தீராத அழுகை அதை அவள் ஒரு வன்முறையை நிகழ்த்துவதைப்போலவே நிகழ்த்துகிறாள். அவளால் காப்பாற்ற முடியாது போன இளைய மகனைப்பற்றிய நினைவுகள் அவளை அழுத்துகின்றன. அம்மா நான் சின்ன வயசுக் கதைகளினூடு கற்பனை பண்ணிய சூனியக்காரக் கிழவியைப் போல இருக்கிறாள். அச்சமாயிருக்கிறது அவளை எதிர்கொள்வது. அம்மாவைப்போல அம்மாக்களினால் சபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது நகரம். அம்மாவின் இளைய மகனைப்போல தமது மகவுகளைப் பிரிந்த தாய்களின் கண்ணீர் பெருகுகிறது. அம்மாக்கள் மட்டுமே மிஞ்சியிருக்கிறார்கள் உயிர் மிஞ்சியிருக்கும் விருப்பின்மையோடு.

வன்னி இப்போது ஆண்களற்ற நகரம். ஆண்களைப் போர்விழுங்கிவிட்டது. ஆண்கள் இறந்து போய்விட்டார்கள் அல்லது கைது செய்யப்பட்டு விட்டார்கள்.

இப்போது பெண்கள் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள். பெண்களின் கண்ணீரால் வன்னித்தெருக்களின் புழுதி அடங்குகிறது. இதுவரைகாலமும் குடும்பத்தின் வருமான வேராக இருந்த ஆண்கள் இல்லாமல் போக இப்போது சுமக்க முடியாத சுமையை பெண்கள் சுமந்தலைகின்றனர். யாரவது துரைமார் வரமாட்டார்களா? எங்களது துயரங்களைக் களைந்துவிட மாட்டார்களா? என்று அவர்கள் ஏங்குகிறார்கள். பசியும் தேவைகளும் அவர்களை நெருக்குகின்றன. ஏதாவதொரு அரசியல் வாதியோ, அதிகாரியோ, அல்லது பன்னாட்டு நிறுவனமோ எது வந்தாலும் பிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு அவர்களிடம் ஓடுகிறார்கள். ராசாக்களோவெனில் பொத்தாம் பொதுவாகத் தலையசைத்தபடி அந்தச் சனங்களை ரட்சிக்கிறார்கள். பெண்கள் மனுக்களை ஏந்தியபடி அலைந்து கொண்டேயிருக்கிறார்கள். நாளைக்கான சாப்பாட்டில் தொடங்கி பிள்ளையினதோ கணவனினதோ விடுதலை வேண்டி அல்லது அவர்களை கண்டுபிடித்துத் தரச்சொல்லி. இன்னும் இன்னும் தம் வாழ்வுக்கான கருணையாசிக்கும் வேண்டுதல்கள் நிறைந்த மனுக்கள் ராசாக்களால் சேகரிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. இவர்கள் வழக்கம் போல பதிலுக்காக காத்திருக்கிறார்கள். அல்லது காத்திருக்காமல் திரும்பவும் திரும்பவும் இரங்கல் கடிதங்களை ராசாக்களிடம் கையளித்தபடி இருக்கிறார்கள்.

வவுனியா வைத்தியசாலையில் இருக்கிற உளவியல் மருத்துவர் ஒருவர் சொன்னார். சிறப்பு முகாமில் இருந்து தன்னிடம் அழைத்து வரப்பட்டிருந்த தற்கொலைக்கு முயற்சித்து தப்பிய நபரைப்பற்றி. தற்கொலைக்கான காரணமாக அவர்சொன்னது “ஒரு சிங்களக் குழந்தைக்கு தகப்பனாக எனக்கு விருப்பமில்லை” என்பது. அவர்விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருந்தவர். சிறப்பு முகாமில் இருந்து அவரை விடுவிப்பதற்கான பேரமாக அவரது மனைவியின் உடல் கோரப்படுகிறது சிங்கள இராணுவ அதிகாரி ஒருவரால். பெண்கள் வஞ்சிக்கப்பட்டபடியே இருக்கிறார்கள். எல்லாவிதமாகவும் பெண்கள் சுரண்டப்படுகிறார்கள். அவர்கள் திசைதெரியாப் பயணிகளாக தாங்கள் இதுவரையும் பயணிக்காத புதிய பாதைகளில் தனித்து நிற்கிறார்கள் கூடவே பெருஞ்சுமைகளோடு.

விதவைகளும், காணமல் போனவர்களிள் மனைவிகளும், கைதிகளின் தாய்மாரும் தங்களிடம் எஞ்சியிருக்கும் குடும்பத்தை காப்பாற்ற போராடுகிறார்கள். ஆயுதப் போராட்டம்,அகிம்சைப் போராட்டம் என்று எல்லாவகையான போராட்டங்களும் கைவிட்டபின் இப்போது வயிற்றுக்கான போராட்டம் மட்டுமே அந்த மண்ணில் எஞ்சி இருக்கிறது. அந்தச் சனங்களிடம் கோபமிருக்கிறது தாங்கள் வஞ்சிக்கப்பட்ட ஏமாற்றம் எரிகிறது. முதுகிலும் நெஞ்சிலும் குத்திய ஆயுதம் தாங்கிகளை சனங்கள் வெறுக்கிறார்கள். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய இயலுவதில்லை அவர்களிடம் போராட்ட குணம் எஞ்சியிருக்கிறது ஆனால் அது அன்றாட வாழ்வுக்கான போராட்டமாய் நிகழத்தவே அவர்களிடம் இயலுமையிருக்கிறது.அவர்கள் யார்போனாலும் யாசிக்கிறார்கள் அவர்களின் தேவைகள் யாரால் தீர்த்து வைக்கப்பட்டாலும் ஏற்றுக்கொள்கிறார்கள். அது எதிரியா துரோகியா எந்த முத்திரைகளும் இப்போது அந்தச்சனங்களிடம் இல்லை. அந்தச் சனங்களிடம் இருப்பது எல்லாம் எதிர்காலம் இருண்டுகிடக்கும் போதான உயிர்வாழ்தல் குறித்த அச்சம் மட்டும்தான். அவர்களுக்கு வேறெதைப்பற்றியும் அக்கறைகளிலில்லை. அடுத்த வேளைதான் அவர்களது இலக்கு. அவர்கள் அதைக்கடப்பதற்கே போராடுகிறார்கள்.

தங்கள் பெயரால் வெளியில் நடத்தப்படும் அரசியல் குறித்துக் கவனிப்பதற்கெல்லாம் அவர்களுக்கு திராணியில்லை. அல்லது அந்த அரசியலின் மீது சலிப்பிலும் வெறுப்பிலும் இருக்கிறார்கள் அந்தச்சனங்கள். தப்பிச் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டு களத்தில் தவிர்க்க முடியாமல் இறக்கிவிடப்பட்டிருக்கிற ஆட்கள் அவர்கள். அவர்கள் பெயரால் உலகமெங்கும் நிகழ்த்தப்படுகிற வாய்ச் சவடால்களுக்கும் தங்களுக்கும் எந்தத் சம்பந்தமும் இல்லை என்பதை உரக்கச் சொல்லும் திராணி அவர்களுக்கில்லை அந்த அக்கறையுமில்லை. அவர்களின் கழுத்தில் சுருக்குகள் உள்ளன. அரசிடம் சுருக்குகளின் மறு நுனிகள். முள்வேளி முகாம்களிலிருந்து சொந்த இடங்களிற்கு குடியமர்த்தப்படுகிறவர்களை நாடுகடந்து செய்யப்படுகிற வாய்ச்சவடால்கள் அச்சமூட்டுகின்றன. களத்தில் இல்லாதவர்களின் வாய்வீரத்தால் அவர்களின் கழுத்துச் சுருக்குகள் இறுகுகின்றன. அவர்கள் பாவம். வன்னியின் குடிகளாயிருப்பதைத் தவிர வேறெந்தப் பாவமும் செய்யாதவர்கள். அவர்களை பிழைக்கவிட்டுவிடலாம். அவர்களுக்கான அரசியலை அவர்களே நிகழ்த்துவார்கள். முதலில் பட்டினி நோயிலிருந்த மீண்டு தெம்பாய் எழுந்திருக்க அவர்களை அனுமதிக்கவேண்டும். பாதுகாப்பான வெளிகளில் பதுங்குழிகளிற்கு அவசியமிராத தேசங்களில் இருந்து அவர்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளாதவர்களின் சவடால்களால் அந்தச்சனங்களின் வாழ்க்கை அச்சமூட்டப்படுகிறது. முதுகுகளில் ஏற்றப்படும் சிலுவைகளை மறுக்கவும் திராணியற்ற பாவிகள் அவர்கள். பாவம் அந்தச் சனங்களை விட்டுவிடலாம் பிழைத்துப் போகட்டும்.

எங்களுக்குச் செய்யவும் சொல்லவும்

ஏதுமில்லை

எங்களை வைத்து

அதிகாரங்கள் செய்ய

அடிமைசெய்ய

அரசியல் செய்ய

முடிந்தால் பிச்சையெடுக்கவும்

ஆட்களிருக்கிறார்கள்..

ஆனால்

எங்களுக்குத்தான் செய்யவும்

சொல்லவும் ஏதுமில்லை

த .அகிலன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வீணா...........அழகான் எழுத்து நடை . எம் தாயக வாழ்க்கை வலியை யை நினைவு படுத்துகிறது.

அகிலனின் படைப்பா அல்லது உங்களதா? படைப் பாளிக்கு என் பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்

அகிலனின் படைப்பு அக்கா

களத்தில் இல்லாதவர்களின் வாய்வீரத்தால் அவர்களின் கழுத்துச் சுருக்குகள் இறுகுகின்றன. அவர்கள் பாவம். வன்னியின் குடிகளாயிருப்பதைத் தவிர வேறெந்தப் பாவமும் செய்யாதவர்கள். அவர்களை பிழைக்கவிட்டுவிடலாம். அவர்களுக்கான அரசியலை அவர்களே நிகழ்த்துவார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை வைத்து அரசியல் செய்யும் புலத்து மற்றும் களத்து மேதாவிகள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

நன்றி வீணா

வாத்தியார்

********

உங்களை மாதிரி நாலுபேர் இருந்தால் எமது பிழைப்ப்பில மண்வீழ்ந்துவிடும்.

அதுக்கத்தான் கஸ்டப்பட்டு இவ்வளவு மீடியாக்களை வைத்திருகின்றோம். இனி புலம் பெயர்ந்தவர்களின் கையில் தான் போராட்டமே.தலைவரே சொல்லிப் போட்டு போய்விட்டார்.

நாட்டில நாலு பாலியல் வல்லுறவுகள்,களவுகள்,கொள்ளைகள் நாட்டில நடக்க வேண்டும்.ஒன்றை பத்தாக்கி பின் நூறாக்கமாட்டம்.இடைக்கிடை அகதிக் கப்பல்கள் வரவேண்டும் நாமும் கொடியுடன் தூதுவராலயங்களுக்கு முன் கூட வேண்டும்.வாரவிடுமுறையில் மீண்டும் எழுவோம்,உயிர்த்து எழுவோம்,சாவிலும் துளிர்போம் என சும்மா அசத்தவேண்டும்.

அதைவிட்டு வன்னி மக்களை பற்றி எழுதி சும்மா டென்சனை கிளப்பாதையுங்கோ.

கனடாவில் ஏதாவது ஒரு தேர்தலில சீட்டுக் கிடைக்க மட்டுமாவது உந்த சிங்களவன் எமது மக்களை முகாம்களில் வைத்து படாதபாடு படுத்தினான் என்றால் காணும் அடுத்த முறை ஜ்யப்பனுக்கு மாலையும் போட்டு நேர தரிசனத்துக்கும் வாறன்.

  • கருத்துக்கள உறவுகள்

.

விதவைகளும், காணமல் போனவர்களிள் மனைவிகளும், கைதிகளின் தாய்மாரும் தங்களிடம் எஞ்சியிருக்கும் குடும்பத்தை காப்பாற்ற போராடுகிறார்கள். ஆயுதப் போராட்டம்,அகிம்சைப் போராட்டம் என்று எல்லாவகையான போராட்டங்களும் கைவிட்டபின் இப்போது வயிற்றுக்கான போராட்டம் மட்டுமே அந்த மண்ணில் எஞ்சி இருக்கிறது. அந்தச் சனங்களிடம் கோபமிருக்கிறது தாங்கள் வஞ்சிக்கப்பட்ட ஏமாற்றம் எரிகிறது. முதுகிலும் நெஞ்சிலும் குத்திய ஆயுதம் தாங்கிகளை சனங்கள் வெறுக்கிறார்கள். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய இயலுவதில்லை அவர்களிடம் போராட்ட குணம் எஞ்சியிருக்கிறது ஆனால் அது அன்றாட வாழ்வுக்கான போராட்டமாய் நிகழத்தவே அவர்களிடம் இயலுமையிருக்கிறது.அவர்கள் யார்போனாலும் யாசிக்கிறார்கள் அவர்களின் தேவைகள் யாரால் தீர்த்து வைக்கப்பட்டாலும் ஏற்றுக்கொள்கிறார்கள். அது எதிரியா துரோகியா எந்த முத்திரைகளும் இப்போது அந்தச்சனங்களிடம் இல்லை. அந்தச் சனங்களிடம் இருப்பது எல்லாம் எதிர்காலம் இருண்டுகிடக்கும் போதான உயிர்வாழ்தல் குறித்த அச்சம் மட்டும்தான். அவர்களுக்கு வேறெதைப்பற்றியும் அக்கறைகளிலில்லை. அடுத்த வேளைதான் அவர்களது இலக்கு. அவர்கள் அதைக்கடப்பதற்கே போராடுகிறார்கள்.

தங்கள் பெயரால் வெளியில் நடத்தப்படும் அரசியல் குறித்துக் கவனிப்பதற்கெல்லாம் அவர்களுக்கு திராணியில்லை. அல்லது அந்த அரசியலின் மீது சலிப்பிலும் வெறுப்பிலும் இருக்கிறார்கள் அந்தச்சனங்கள். எங்களுக்குச் செய்யவும் சொல்லவும்

ஏதுமில்லை

எங்களை வைத்து

அதிகாரங்கள் செய்ய

அடிமைசெய்ய

அரசியல் செய்ய

முடிந்தால் பிச்சையெடுக்கவும்

ஆட்களிருக்கிறார்கள்..

ஆனால்

எங்களுக்குத்தான் செய்யவும்

சொல்லவும் ஏதுமில்லை

த .அகிலன்

இதுதான் நிலமை.

நல்ல கதையை இணைந்த வீணாவுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

அகிலன் இந்த மாத ஆனந்தவிகடனில் எழுதியதா இது...கிட்டடியில் வாசித்ததாக ஞாபகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

41008_488109204950_725549950_6883775_1152330_n.jpg

சுவிஸ் ஆதவன் ஓகஸ்ட் இதழில் வெளியான கட்டுரை.

அது சரி யாரப்பா நல்ல கதையென்று இதற்கு பதில் எழுதியவர் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி யாரப்பா நல்ல கதையென்று இதற்கு பதில் எழுதியவர் :D

நானும் கேட்க நினைத்தனான் பிறகு இடக்கு மடக்காய் கேட்டு ஏன் பேச்சு வேண்டுவான் என விட்டு விட்டன் :rolleyes:

  • தொடங்கியவர்

முகநூலில் பகிரப்பட்டிருந்தது நான் இதை கட்டுரை என்று ஊர்ப்புதினத்தில் இணைத்தேன் அது கதை கதையாம் பகுதிக்கு நகர்த்தி இருந்தார்கள்..... :rolleyes:

  • 2 years later...

எங்களுக்குச் செய்யவும் சொல்லவும்

ஏதுமில்லை

எங்களை வைத்து

அதிகாரங்கள் செய்ய

அடிமைசெய்ய

அரசியல் செய்ய

முடிந்தால் பிச்சையெடுக்கவும்

ஆட்களிருக்கிறார்கள்..

ஆனால்

எங்களுக்குத்தான் செய்யவும் சொல்லவும்

ஏதுமில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.