Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் களம், ருவிற்றர்;. கொள்கை விளக்கமும் கொஞ்சம் கோபமும்

Featured Replies

140 வார்த்தைகளில் புத்தக விமர்சனம் என்ற ருவிற்றர் முனை பற்றிய அண்மைய வானொலிச் செய்தி ஒன்று இப்பதிவினை எழுதத் தூண்டியது. யாழ்களத்திலும் முகமூடி உறவாடல் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி அவ்வப்போ கருத்துக்கள் முன்வைக்கப்பட்டவண்ணம் உள்ள நிiலையில் யாழ் களம் சார்ந்தும் பொதுவாகவும் இப்பதிவு அமைகிறது.

பின்னணி

ஓய்வு நேரம் என்பது மனிதனின் பொது அவா. எதற்கு மனிதன் ஓய்விற்கு ஆசைப் படுகிறான்? உடற் கழைப்பு உளக் கழைப்பு என்பனவற்றின் தாக்கத்தில் இருந்து மறுநாளின் தேவைகளிற்காய் விடுபடுவற்கு ஓய்வு அவசியம் என்பதனாலா?; அத்தகைய ஓய்வினை நித்திரை கொடுக்கும். அப்படியாயின் வேலையால் வந்து உண்டு விட்டு நித்திரை கொள்ளின் கழைப்பு நீங்கி விடுமா? சரி வேண்டுமாயின் வேலையால் வந்து, உடற் பயிற்சி செய்து ஆரோக்கியமாய் உண்டபின் நித்திரை கொண்டால் கழைப்பு நீங்கி விடுமா?

பொழுதுபோக்கு என்பதன் பாத்திரம் என்ன? உளம் சாhந்த நெருடிக்கொடுப்புக்களின் பாத்திரம் என்ன?

இயல் இசை நாடகம் என்ற ரீதியில் அமைந்த பொழுதுபோக்குக்கள் மனிதனி;ன் இன மொழி கலாச்சார வேறுபாடுகளைக் கடந்து மனித வாழ்வின் ஒரு அங்கமாக இருந்து வருகின்றன. தொழில் நுட்ப வளர்ச்சியோடு சேர்ந்து, வாழுகின்ற வாழ்வு முறைகளிற்கு ஏற்ப, இயல் இசை நாடகத்தின் தன்மையும் மாறிவருகின்றது. எனினும், குறிப்பாக ஒரு படைப்பின் நீளம் என்பதே இன்று பலரும், அதுவும் குறிப்பாக இருபதுகளிலும் அதற்குக் கீழும் உள்ளவர்கள் விரும்புகின்ற மாற்றமாக இருக்கின்றது. சந்தையின் செல்வாக்கு நுகர்வோரிலும் நுகர்வோரின் செல்வாக்கு சந்தையிலும் இருப்பது இயல்பு. எனினும் வலைத்தள வெளி என்று பார்த்தால், அங்கு துரதிஸ்ரவசமாக ஆழம் தொலைத்த படைப்புக்களையே நுகர்வோர் வேண்டுவதும் அவற்றையே சந்தை கொடுப்பதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆழமற்ற படைப்புக்களை ஆழம் அறியா நுகர்வோர் வேண்டுவதால், ஆயிரக்கணக்கில் அனைவரும் படைத்துக் கொட்டச் சந்தை மகிழ்ந்து நிற்கிறது. இத்தகைய துரதிஸ்ர நிலையின் வெளிப்பாடே 140 வார்த்தைகளில் புத்தக விமரிசனம் என்பது எனது அபிப்பிராயம்.

திருக்குறழ் இருவரிகள் தானே. 140 வார்த்தைகள் 20 வரி தாண்டுமே

ஒருவனின் வாசிப்பின் தன்மை அவனது அனுபவம் சார்ந்து அமைகிறது. வாசிப்பு மட்டுமன்றி உளம் சார்;ந்த அனைத்துமே அனுபவத்தின் செல்வாக்கால் மட்டுமே செதுக்கப்படுகின்றன. வாசிப்பு என்று எடுத்தால், அனுபவத்தைப் பொறுத்து வாசிப்பு வரிகளிற்கு இடையிலும் நிகழும். வாசிக்கும் வரிகளிற்; பல தனிப் புத்தகங்கள் ஆகும் அளவிற்குச் சிந்தனை நம் மனதுள் நிகழும். திருக்குறழ் என்பது தமிழர் வரலாற்றில் ஆரம்ப வாசிப்பாய் இருந்ததில்லை. பண்பட்ட வாசகர் ருசிக்க விரும்புகின்ற சவாலான வாசிப்பு வகைகளில் ஒன்றாகவே திருக்குறழ் இருந்து வருகிறது. ஆனால் ருவிற்றரில் என்ன நிகழ்கிறது என்றால், இருபது பக்கக் கட்டுரையைக் கூட வாசிக்கப் பொறுமை அற்றவர்கள், இருபது பக்கங்களை இருபது வரிகளிற்குள் சாராம்சம் கூறி விபரிக்கக் கூறுகின்றார்கள். இவர்களது கவனம் இருபது வரிகளை தாண்டி சிதறிப்போகிறது. அது இரண்டாயிரம் பக்கங்கள் உடைய நாவலாய் இருக்கட்டும் சில பக்கங்கள் கொண்ட கட்டுரையாய் இருக்கட்டும் இருபது வரிகளிற்குள் அறிந்து விட நுகர்வோரும் அதை இருபது வரிகளிற்குள் கொடுப்பதற்குத் தயாராய் சந்தையும் உள்ள விபரீதம் நடந்து கொண்டிருக்கின்றது.

இரண்டாயிரம் பக்கத்தில் நாவல் எழுதியவன், இருபது வரிச் சுருக்கம் தெரியாமல் தான் எழுதினானா? நிச்சயம் இல்லை. இரண்டாயிரம் பக்கங்களை நிரப்பச் சங்கதி இருப்பவன், அதுவும் அப்புத்தகம் காவியம் என்று கொண்டாடப்படும் வகை எழுதியவன், இரண்டாயிரம் பக்க்ங்களிற் தான் கூறியவற்றிற்கும் பல மடங்கு அதிகமான அனுபவத்தைப் பெற்றிருப்பான். அந்த அனுபவங்கள் அவனது பார்வையைச் செதுக்கியிருக்கும். அவனது காவியத்தை வாசிப்பதால், அவனது அனுபவங்களை இன்று நாம் இன்புற முடியும். சில அனுபவங்கள் நாம் நேராய்ப் பெறமுடியா வண்ணம் மாறிப்போயிருக்கும். அந்த முன்னைநாள் அனுபவங்களளை அவற்றை அனுபவித்தவர் வாயிலாக மட்டுமே நாம் அனுபவிக்க முடியும். ஆனால் ருவிற்றர் என்ன செய்கிறது என்றால், இரண்டாயிரம் பக்கங்களில் எழுதியவன் மடையன் இதோபார் அதன் சாராம்சம் 20 வரிகளில் என்கிறது. இதனால் ஒரு “சாராம்ச சந்ததி” உருவாகிக்கொண்டிருக்கின்றது.

“என்னண்டா மச்சான், ஒரு பெடியன் பக்கத்து வீட்டுப் பெட்டையக் காதிலிக்க, கொப்பர் குளறியதால ஓடிப்போய், பிறகு செத்துப் போனாங்கள்” என்பது சாராம்சமாய் இருக்கலாம். ஆனால் அக்காட்சி எங்கு எப்போ நடந்து யாரால் வர்ணிக்கப்பட்டது என்பதைப் பொறுத்து மேற்படி சாராம் சொல்லாத எத்தனையோ சங்கதிகள் எமது வாழ்வு சார்ந்து எமக்குப் புலப்படுவது சாராம்சத்தில் தொலைந்து போகும்.

மண்டை கிறுகிறுத்து, கண்டதையும் கற்று என்னத்தைக் கிழிக்கிறது

மனித மூழையின் வீச்சு என்ன என்பதை முற்றாய் அறிவது மனித மூழைக்கு இதுவரை கைகூடவில்லை. ஆனால் பாவிக்கப் பாவிக்கப் புதிய முனைகள் வெளிப்படுவது நிறுவப்பட்டிருக்கின்றது. கூர்ப்பியல், உயிரினங்களின் பாவனை அற்ற அவயங்கள் மழுங்கிப் போனமை பற்றிச் சொல்லி நிற்கின்றது. மொழியின் ஆரம்பம் வெறும் சத்தங்களாக மட்டுமே இருந்து வளர்ச்சி அடைந்தது. ஆனால் இன்றைய ருவிற்றர் உலகம் மொழியினை மறுபடி அதன் குழந்தை நிலைக்கு அழைத்துச் செல்வதற்கு வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றது.

140 வார்த்தைகளிற் புத்தக விமரிசனம் செய்பவர் (தற்போது கனேடிய தேசிய வானொலியல் இவரிற்கு வேலை வேறு கொடுத்து வைத்துள்ளார்கள்) செவ்வி காணப்பட்டபோது அவர் கூறுகின்றார்: “ஓரு நூல் பிடித்துப் போனால் அதை 140 வார்த்தைகளிற்குள் சொல்லி விடுவது மிக இலகு. பிடிக்காத பட்சத்தில் தான் ஏன் பிடிக்கவில்லை என்று கூற அதிகம் வார்த்தைகள் தேவைப்பட்டுச் சிரமப்படுத்துகின்றது” என்று. எதையும் கோபாவேசத்துடன் செய்யும் பதின்ம வயதுத் தன்மை இந்த பதின்மத்தைத் தாண்டிய எழுத்தாளரில் காணப்படுகின்றது. அதனால் தான் பிடிக்காத புத்தகத்தை தூற்றுவதற்குத் தான் வார்த்தைகள் அதிகம் தேவைப் படுகின்றன என்ற கத்துக்குட்டித் தனம் வெளிப்படுகிறது. இந்த வியாபாரி வாழ்வில் எதையேனும் முழுமையாய் இரசித்திருந்தால், ஒரு பிடிப்பு அல்லது லயிப்பு உள்ளுர ஏற்படுத்தும் அதிர்வினை அனுபவித்திருந்தால், பிடித்ததைப் பற்றி அதிகம் சொல்லும் தேவை இல்லை என்ற மடைத்தனம் வெளிப்பட்டிருக்காது. பூவைப் பாத்துக் கவிதை எழுதியவன் பூ மீது வெறுப்பினாலா எழுதுகிறான்?

ருவிற்றர் உலகின் மிகப்பெரிய ஆபத்து எங்கிருந்து எழுகிறது என்றால், 140 வார்த்தைகளிற்குள் காவியங்களை விமரிசனம் செய்ய முடியும் என்ற எண்ணம் கத்துக்குட்டிகளிற்கு மட்டுமே தோன்றும். இதனால் ருவிற்றர் சந்தைக்குள் கத்துக் குட்டிகள் தான் அதிகம் திரியும். ருவிற்றர் உலகில் மட்டுமே வாழுகின்ற, அதை மட்டுமே வாசிக்கும் நுகர்வோர் கத்துக் குட்டிகள் கொட்டியதை முழுங்கிய முடங்களாகவே பரிணமிக்கும்.

அது சரி சிம்பிளா இருக்கிறதால என்ன தான் ஆபத்து

வனத்தில் ஆரம்பித்த மனிதன் உடல் வலு பெற்றிருந்தான். தன்னைப் பாதுகாக்க உடற்பலம் அவனிற்கு உதவியது. காலப்போக்கில் மனிதன் உடலில் இருந்து உளத்தின் காதலனாய் ஆனான். நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு முட்டி மோதுவதற்குப் பதில் மூழையால் உயிர் சேதமின்றித் தப்பித்துச் சேர்ந்து வாழக் கற்;றான். கூர்ப்பு, மனிதனின் உடலை காட்டு மனிதனின் உடலில் இருந்து மூளைப் பாதையில் மாற்றி வருகிறது. இப்போ தொழில் நுட்பத்தின் துரதிஸ்ரமான சில குழிகளிற்குள் பலர் சிக்கி, குறிப்பாக இளையோர்கள், மூழையினை மட்டுப்படுத்தத் தொடங்குவது உடலும் உளமும் மழுங்கிய உயிரினத்தையே வெளிப்படுத்தும். சுதந்திரம் அதிகரிப்பதாய்த் தோன்றினும் ஒட்டுமொத்தமாய் சுதந்திரம் குறையும் அல்லது ஒரு கட்டத்தில் சுதந்திரம் இல்லாது போகும். கட்டழைகளை நிறைவேற்றும் உயிரியல் இயந்திரங்களாக, கட்டளை வழங்கியும் பெறுனரும் சுதந்திரம் அற்றவர்களாக சடங்களாக வாழும் நிலை தோன்றும்.

அனைத்தையும் போன்றே, சடமாக வாழும் நிலையும் காலப்போக்கில் பழகிப் போகும் தான். ஆனால், தற்போதைய நிலையில் இருந்து பார்க்கையில் அத்தகைய சடப்பொருள் நிலை கவர்ச்சியானதாய் எனக்குப்படவில்லை. என்னைச் சார்ந்து மட்டும் தான் நான் பேச முடியும் என்பதால், அத்தகைய சட நிலைக்கு எதிரான எனது போர்க்கொடி மட்டுமே இப்பதிவு.

யாழ்களத்தின் ஆதங்கங்கள்

யாழ்களத்தில் அண்மையில் வாசித்த இரு விடயங்கள் எனது கவனத்தை ஈர்தன. ஒன்று முரளி கூறியிருந்தார் “வலைத்தளத்தை எனது வாழ்வாகப் (அல்லது வாழ்வின் பலத்த ஒரு பாகமாகப); பாhக்கின்றேன். அதனால் வெறும் முகமூடிகளாக மட்டும் அல்லாது கருத்தாளர்கள் தமது சுயமுகத்தைக் காட்டி நட்பை வலுப்படுத்த வேண்டும் என்று”. மற்றையது அர்யுன் கூறியிருந்தார், மற்ற வேலைகளை முடித்து விட்டு எப்போதேனும் தேவைப்படும் நேரத்தில் மட்டும் யாழில் கருத்து எழுதுபவர்களாக இல்லாது தினமும் கிரமமாக யாழில் கருத்தாளர்கள் எழுத வேண்டும் என்று. மேற்படி இரு கருத்துக்கள் தொடர்பிலும் எனது கருத்தைப் பகிர்ந்து இப்பதிவினை நிறைவு செய்கின்றேன்.

சிறுவயதில் ஊரில் என்னைக் குழப்பிய மிகப்பெரும் பிரச்சினைகளில் ஒன்று செவ்வரத்தை மலர். மகரந்த மணிகள் தான் மலர்கள் கனி கொடுக்கப்பதற்கு அவசியம் என்று இனப்பெருக்கம் பற்றிப் படிப்பதற்கு முன்னர் அறிந்திருந்தேன். செவ்வரத்தை மலர்களின் நடுவில் மகரந்தம் நிறைந்து கிடக்கும். தொட்ட மாத்திரத்தில் விரலை மஞ்சளாக்கும் அளவிற்கு மகரந்தம் நிறைந்து கிடைக்கும். ஆனால், நானறிந்த வரை, செவ்வரத்தை காய்ப்பதில்லை. இது என்னை மிகவும் குழப்பியிருந்தது. காய்பபத்கு இன்றியமையாத மகரந்தம், நான் பார்த்த மலார்களுள் நிறைந்து கிடந்த செவ்வரத்தை காய்கொடுப்பதில்லை என்பதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வருடக்கணக்கில், தேனீக்களுடன் போட்டி போட்டுக் கொண்டு செவ்வரத்தைப் பூக்களின் மகரந்தங்களை ஒரு மலரில் இருந்து பிற மலரிற்கு விரல்களால் கடத்திக் கொண்டிருந்தேன். ஒரு முறை எனது முயற்சி வெற்றி பெற்றதாய் தோன்றினும், பின்னர் அது வெறும் மொட்டு ஒன்று என்றே அறிந்து ஏமாந்தேன். பின்னர் செவ்வரத்தை மகரந்தத்தை பிற மலாகளல் தடவிப் பார்த்தேன். செவ்வரத்தங்காய் இறுதிவரை எனக்குக் கிடைக்கவில்லை. கல்வித்துறை வேறு பாதையில் சென்றதால் இன்றுவரை எனது குழப்பம் தீரவில்லை. இதையேன் இங்கு கூறுகின்றேன்?

வலைத்தளத்தை வாழ்வின் பெரும்பாகமாக வைத்திருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இயற்கை சூட்சுமமாய் சொல்லுகின்ற சங்கதிகள், கேள்விகள் புகைப்படத்திலோ, ஓவியத்திலோ, வலைத்தளத்திலோ கடத்தப்பட முடியாதன. அவை இயற்கையில் மட்டுமே அனுபவிக்கப்படக்கூடியன. மேலும் இதுவரை கூறப்பட்டுவிட்ட விடயங்களைப் புத்தகங்களை வாசித்து முடிப்பதற்கே வாழ்வு நேரமின்றி இருக்கின்றது. பல எழுத்தாழர்கள் இறந்து போய்விட்டார்கள். இவர்களின் எழுத்துக்கள் பற்றித் தான் வலைத்தளம் பேச முடியுமே அன்றி இவர்கள் வலைத்தளத்தில் பேசப்போவதில்லை. இறந்து போன சிற்பிகளின் படைப்புக்கள் இன்னுமொருவர் வாயிலாக எம்மை அடைகையில் பல விடங்கள் எம் உணர்வில் படாது போய்விடும் ஆபத்துத் தவிர்க்க முடியாதது. இதனால் இந்நூல்களை நேரடியாய் வாசிப்பது அவசியமாகின்றது.

அடுத்து, இன்று நாம் குழந்தைப் பருவத்தைத் தாண்டியிருப்பினும் நாம் பெற்றோராய் ஆககைகயில் எமது குழந்தைகளிற்கு இவ்வுலகத்தின் முனைகளை இயன்ற அளவு அறிமுகப்படுத்தத் தவறுவோமேயாயின் பறவைகளையும் விலங்குகளையும் காட்டிலும் மனிதன் என்ற விலங்கு மழுங்கி விடும். வலைத்தளத்தின் ஊடாக மட்டும் மலர்களை அறியும் குழந்தைகள் ருவிற்றர் நுகர்வோராய் தான் ஆகமுடியும். இவை வலைத்தள நுகர்வு சார்ந்து நேரப்பற்றாக்குறை சார்ந்த சில பிரச்சினைகள். எனது அபிப்பிராயத்தில் ஒரு தளத்தில் தினமும் எழுதித்தான் தீர வேண்டும் என்ற கட்டாயம் நியாயம் அற்றது.

அடுத்து முகமூடிகளின் சுய உருவம். ஒருவரை நேரடியாய்த் தெரியும் என்பதால் மட்டும் அவரின் சுய உருவத்தை நாம் அறிந்து விட்டோம் என்று கொள்ள முடியாது. நாளாந்த வாழ்வில் பெரும்பான்மையான சந்திப்புக்கள் நியத்திலும் கூட முகமூடித்தனமாகவே நிகழ்கின்றன. நிய உலகிலும் பலர் தமது அவதாரங்களை மட்டுமே பிறரிற்குக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். பலரிற்குத் தமது உண்மையான உருவம் எத்தகையது என்பது தமக்தே தெரியாத படி அவர்கள் தமது தாம் தொடர்பான சிருஸ்ட்டிப்புக்களிற்குள் கட்டுண்டு கிடக்கின்றார்கள். எனவே ஒருவரை நேரடியாய்த் தெரியும் என்பதால் அல்லது அவருடன் தொலைபேசியில் உறவாடியதால் அவரின் சுயமுகம் தெரியும் என்று நாம் கொள்ள முடியாது.

அடுத்து, எழுதுவதற்கு, சிந்தனைகளை ஒருங்கமைப்பது இன்றியமையாதது. எழுதத் தொடங்கியதும் அங்கு ஒரு தற்காலிக ற்றான்ஸ்பர்மேசன் நிகழ்ந்து விடும். உணர்வுகள் சிந்தனைகள் கட்டுப்படுத்தப்பட்டு கோர்வையாக வெளியேறும். எழுத்தை மட்டும் வாசித்து ஒருவரை நாம் எடைபோட முடியாது. யாழ்களம் என்பது கருத்துக்களிற்கானது. அதுவும் அவதாரங்களின் கருத்துக்களிற்கானது. நிஜவாழ்வில் இவ்வதாரம் எவ்வாறு இருக்கின்றது என்பது யாழ்களத்திற்கு அவசியமானது என்று நான் கருதவில்லை.

யாழ்களத்திற்கு ஒவ்வொருவர் ஒவ்வொரு காரணத்திற்காய் வரலாம். நெற்வேக்கிங் மற்றும் புதிய தொடர்புகள் முதலியன இன்றைய வலையுலகில் அனைத்து உறவாடல்களிலும் பின்னிப்பிணைந்து கிடக்கின்ற விடயங்கள் தான். இருப்பினும், நிஜ உலகில் இருந்து தப்பித்து அவதார உலகில் சற்று ஓய்வெடுப்பது என்பதும் கூடச் சிலரது யாழ்கள வருகையில் நோக்கமாக இருக்கலாம் என்பதையும் நாம் மறந்து விடமுடியாது. அவ்வாறு நிஜ உலகில் இருந்து ஓய்வு பெறுவதற்காக அவதார உலகு வரும் ஒருவர் சக கருத்தாளர்களின் நிஜ உலக அடையாளங்களைத் தெரிந்து கொள்வதற்கோ தமது நிஜ உலக அடையாளங்களைப் பகிர்ந்து கொள்வதற்கோ ஆசைப்பட மாட்டார். அவதார உலகில் நான் முகமூடி அணிந்த ஒரு அவதாரம் மட்டுமே என்று கூறுவதில் ஒரு நேர்மை இருக்கின்றது. ஆனால் நிஜ வாழ்வில் நான் முகமூடி அணியாத நிஜம் என்று கூறிக்கொண்டு போலிகளாய் இருப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். அதற்காக நிஜ உலகே போலி என்று நான் கூறுவதாய் தப்பாய் நினைத்து விடாதீர்கள். என்னைப் பொறுத்தவரை, எனது நிஜ உலக நண்பர்;கள் அதுவும் உண்மையாய் முழுமையாய் இயன்றவரை பழகும் நிஜ உலக சந்திப்புக்கள் மிகச் சொற்பம். எனது நண்பர்கள் ஒற்றைக் கையில் எண்ணுவற்கும் குறைவானவர்கள். தயவு செய்து இதனைத் தலைக்கனம் என்றோ அல்லது எனது நண்பர்கள் பற்றிய அபரிமித புகழ்ச்சி என்றோ கருதி விடாதீர்கள். இதை நான் எனது பலகீனம் என்றே பார்க்கிறேன். நூறு நபர்களுடன் இயல்பாகப் பழகி மகி;ழ்ந்து இருப்பவர்கள் உண்மையில் அதிஸ்ரசாலிகள் தான். ஆனால் எல்லோரிற்கும் அது கைவருவதில்லை. அதுவும் நேரப்பற்றாக்குறை மிக்க வாழ்வில் கிடைக்கின்ற சொற்ப நேரம் மகிழ்வாய் கழிவதற்கு சொற்பமான நிஜஉலக தொடர்புகள் என்போன்ற பலவீனம் உடையவர்களிற்கு உதவுகின்றன.

எனவே யாழ்கள உறவுகள் நேரடியாக சுய அடையாளம் அறிவித்துப் பழகாதிருப்பதை அயோக்கியத்தனமாய் பார்க்கவேண்டும் என்பதில்லை. அவதாரங்களின் உலகம் நிஜத்தைக் காட்டிலும் சில சமயம் அழகானதாய் அமைதியானதாய் இருக்கலாம்.

எங்கள் வாழ்க்கைச் சக்கரம் குறுகியது. யார் எப்போது இவ்வுலகில் இருந்து விடைபெறுவார்கள் என்று எமக்கு தெரியாது. இப்படியான நிலையில் வெறும் கனவாக முகமூடிகளாக பழகிவிட்டு செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதாவது, மற்றவர்கள் அப்படி வாழ்வது அவர்கள் தெரிவு. ஆனால்.. யாராவது என்னுடன் நல்ல நண்பர்களாக நட்பை அல்லது உறவை வளர்க்க விரும்பினால் நான் வலைத்தளத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓர் எல்லையினுள் மட்டும் நிற்பதற்கு விரும்பவில்லை.

இங்கு கவனிக்கவேண்டிய விடயம்… நிஜவுலகில் நேரில் கண்டு பழகுபவர்கள் ஆழமான புரிந்துணர்வுடன் உண்மையான தோழமையுடன் உறவாடுவார்கள் என்று இல்லை. அவர்கள் ஆபத்து மிகுந்தவர்களாகவும் காணப்படலாம். ஆனால்… முகமூடியுடன் மட்டுப்படுத்திக்கொள்ளும்போது நாங்கள் நிஜவுலகின் சுவாசத்தை பெற்றுக்கொள்ள முடியாதவாறு எம்மை சிறையினுள் தள்ளிக்கொள்கின்றோம், இவ்வாறே நான் நினைக்கின்றேன். முகமூடி என்பதை ஓர் பாதுகாப்பு கவசமாக கொள்ளமுடியும், அதேவேளை அது ஓர் சிறைக்கூடத்தின் சுவர்களாகவும் உள்ளது.

அடுத்ததாக… வாழ்வின் மெய்யிற்கான தேடல்கள், தத்துவ ஆராய்ச்சிகள் என்று சென்றால்… அங்கு நிஜம் என்று எதுவும் இல்லாமல் அமையலாம். ஒருவிதத்தில் பார்த்தால் இங்கு நாங்கள் நிஜவுலகு என்று கூறுவதும் கூட ஓர் கனவே. அத்துடன் எமது முகங்கள்.. உடல் என்பன உண்மையில் நாங்கள் இல்லை என்கின்ற எண்ணப்பாடும் தோன்றக்கூடும். இவ்வாறான நிலையில் உள்ளவர்கள் யாராவது நிச்சயம் முகமூடியை களைவது பற்றி கவலைப்படாவிட்டால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதும் இல்லை.

நாங்கள் மற்றவர்களின் படத்தை - முகத்தை பார்க்க விரும்புகின்றோம். இங்கு ஒருவருக்கு அவரது முகத்தை கண்ணாடியில் பார்த்தால்தான் அது அவரது முகம் என்று அறிந்துகொள்ள முடியும். அதாவது ஒருவரது முகம் என்பது அது அவர் இல்லை. இங்கு நான் கூறவருவது என்ன என்றால்… ஒரு அளவுக்கு மேல் சகலதும் கனவே. ஆயினும்… சமநிலைப்படுத்தபட்ட எண்ணங்களுடன்.. மற்றவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வதற்கு.. சில விம்பங்களை, கனவுகளை நிஜமாக கொள்ளவேண்டிய தேவை காணப்படுகின்றது.

இறுதியாக.. முகமூடியை களைந்து ஒருவர் தன்னை அறிமுகம் செய்யும்போது அங்கு ஓர் நம்பிக்கை - Trust தோன்றுகின்றது. ஓர் பொருட்டாக ஒருவரை கணக்கெடுக்காமல் போகக்கூடிய நிலமை நேரடியான சந்திப்புக்களின்பின்னர் தோன்றாது என்று கூறப்படமுடியாதாயினும்.. முகமூடிகளினால் எல்லைகள்தாண்டி வலைத்தள உறவுகளுடன் உறவாடமுடியாது என்பதே யதார்த்தம்.

மனித உறவுகள் என்பவை வாழ்கையின் ஓர் பகுதி. உறவுகளே தேவையில்லை என்று ஒருவர் விலத்திச்சென்றால்… அது அவரது தெரிவு. ஆனால்.. இங்கு வலைத்தளம் வாழ்க்கையல்ல, அதற்கு வெளியில் நிஜவுலகம் வாழ்க்கையை தருவதற்காக காத்திருக்கின்றது என்று கூறப்படும் நிலையில்.. முகமூடிகளை களைந்து வலைத்தள உறவுகளுடன் வெளியுலகில் உறவாடுவதற்கு தயக்கம் ஏது என்பது அவரவரை பொருத்தது.

  • தொடங்கியவர்

ருவிற்றர் அளவு 140 எழுத்துக்கள், வார்த்தைகள் அல்ல என்று தவறைச் சுட்டிக் காட்டிய இணையவனிற்கு நன்றி. பின்னர் மாற்றி விடுகின்றேன்.

  • தொடங்கியவர்

கரும்பு,

எது நிஜம், போலி என்று ஒன்று உண்டா, அப்படியாயின் அது என்ன என்ற முனையிலான உங்கள் கேள்விகளளோடு பூரணமாக உடன்படுகின்றேன். எமது மனதின் கட்டமைப்புக்களைத் தாண்டி ஒரு விடயத்தை உண்மையிலேயே அதாக, அனைவரிற்கும் ஒன்றானதாக பார்க்க முடியாது என்பது உண்மை தான். எனினும் இக்கட்டுரையினை, தத்துவ விசாரணைகளிற்கு வெளியே சாதாரண நடைமுறைகள் சார்ந்து மட்டுமே எழுதியுள்ளேன்.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் எழுத்தை விளங்குவது கஸ்டம்[பின் நவீனத்துவம் என்கிறார்களே அதுவா இது] ஆயினும் நான் விளங்கியதில் இருந்து யாழ் களத்தில் கருத்து எழுதுபவர்கள் தங்கள் முகமூடிகளை களைய வேண்டிய கட்டாயம் இல்லை என எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்... ஏன் முகமூடிகளை களைந்தால் பிறகு அவர்களை எதிர்த்து கருத்து எழுத முடியாதா?...எல்லோரும் நல்லவர்களாய் இருக்க மாட்டார்கள் ஆனால் அவர்களோடு பழகி பார்த்து மிகவும் நல்லவர்களாய் இருந்தால் இணைந்து செயற்படலாம்...எங்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாவிடின்!

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் நல்லதொரு இடுகை. ஆனால் என்னால் முகமூடியைக் களட்டிப்போட்டு தற்போது வரமுடியாது. காரணம் எனக்குள் பாம்பு தேள் நட்டுவாக்காலி போன்ற விசித்திர மிருகங்கள் எல்லாம் வாழ்கின்றன. யாழில் நான் உறவாடும் நேரம் அவைகளையெல்லாம் நித்தா கொள்ளவைத்துவிட்டோ அன்றேல் அவைகளுக்குத் தெவையான தீனியைப் போட்டுட்டோதான் யாழ் களம் புகுகின்றேன். மற்றப்படி யாழ்களத்தை எனது தேடல்களது ஒரு தளமாகவே கருதுகிறேன். மேலும் வயோதிபத்தைப்பற்றிய பயம் எனக்குச் சின்னவயதிலோயே வந்து விட்டது ஆகவே வாசிப்பது எதிர்காலத்தில் வயோதிபம் எனைத்தாக்கும்போது சறிதுகாலம் அரணாக இருக்கும் என்பதால் அதிகமாக வாசிக்கிறேன் அவை எந்தக்களிசடைத்தனமான எழுத்துக்கள் எனினும் விட்டவைப்பதல்ல. ஆகவே யாழ்களத்தில் பலநூறு அங்கத்தவர்களில் நான் ஒரு பொருட்டல்ல எனினும் எனது கருத்தினை முன்வைக்கிறேன். எனது கருத்தினை முன்வைப்பதற்கு களம் அமைத்துக் கொடுத்ததே நான் எனது முகத்தினை அசிங்கமாக மறைத்துவைத்திருப்பதே ஆகும்.

  • தொடங்கியவர்

யாழ் களத்திற்கு வருவதில் எனக்குக் கிடைக்கும் மிகப்பெரும் நன்மைகளில் ஒன்று சுயவிசாரணை. எனது நம்பிக்கைகள் சிந்தனைகள் யாழ்களத்தால் செப்பனிடப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தப் பதிவில் “முகமூடி கழட்ட மறுப்பது ஒற்றுமையின்மையின் வெளிப்பாடு” என்ற ரதியின் வாதம் உண்மையில் நான் நினைத்தே பாத்திராத ஒரு கோணம். எடுத்த மாத்திரத்தில் இல்லை என்று அடித்துக் கூறிவிடமுடியாத படி ரதியின் வாதம் அமைகிறது.

ஒரு இறந்த எழுத்தாளர், உதாரணத்திற்காக 17ம் நூற்றாண்டு எழுத்தாழர் என்று வைத்துக் கொள்வோம். அந்த எழுத்தாழர் இறந்த பல நூற்றாண்டுகளின் பின்னர் பிறந்த எங்களிற்கு அவ்வெழுத்தாழரின் வாழ்வு பற்றிய தரவுகளைக் காட்டிலும் அவர் என்னத்தைச் சொல்லிச் சென்றார் என்பதனi அவரது எழுத்துக்கள் வாயிலாக அறிவது இலகு. எத்தனையோ தலை சிறந்த எழுத்தாழர்கள் புனைபெயர்களிற் கூட பலவற்றை எழுதிச் சென்றுள்ளார்கள். அவர்களின் படங்கள் என்று நாம் அறிந்துள்ளவை ஒரு வேளை அவர்களின் முகமூடிகளாகக் கூட இருக்கலாம். ஆனால், இவர் தான் இன்னார் என்று ஒரு படத்தைப் பார்த்த மாத்திரத்தில் எமது மனம் அமைதி கொள்கிறது—படம் இல்லை என்றால் குளப்பமாகிறது. இன்றைய உலகில் எமக்குப் பிடித்த எழுத்தாழர்களின் குரலையும் உருவையும் அறிந்து கொள்ள யூ ரியூப்பில் தேடுகிறோம். ஏனோ எங்களால் ஒருவரின் எழுத்துக்களோடு மட்டும் நின்று விட முடியவில்லை. சொன்னவர் பற்றிய தகவல்கள் தேவைப்படுகின்றன.

கோவிலில் கடலை வாங்குகிறோம். கடலை சுற்றப்பட்டிருந்த கடதாசியில் ஏதோ கிறுக்கப்பட்டிருக்கிறது. பெயர் எதுவும் இல்லை. கடலைக் காரியிடம் எங்கு அந்தக் கடதாசியை அவர் பெற்றார் என்கிறோம். அவர் தெரியவில்லை பலரும் தருவார்கள் என்கிறார். இத்துப் போன அந்த பழைய கடதாசி எமது துப்பறிவிற்கு அதிக தகவல்களைக் கொண்டிருக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அந்தக் கடதாசியில் சொல்லப்பட்டிருந்த சிந்தனை எம்மைக் கவர்கிறது அல்லது சிந்திக்க வைக்கிறது என்று எமக்குப் பட்டால் எழுத்தாளர் பற்றித் தெரியவில்லையே எனறு அந்தச் சிந்தனை மீது எமக்கு அவநம்பிக்கை எழுவது நியாயமானதா? ஒரு சிந்தனை கவர்கையில் அல்லது சிந்திக்க வைக்கையில் அதைச் சொன்னவர் மீதான நம்பிக்கை எதற்கு அவசியம்? இன்னுமொரு புறத்தில் பார்த்தால், எமக்கு நம்பிக்கையானவர் சொல்லிவிட்டார் என்பதற்காக மட்டும் அவர் சொல்பவற்றை நாம் ஏற்றுவிடுவோமா? எமக்கும் சுயசிந்தனை உள்ளது, எமக்கும் பெறுமதிகள் உள்ளன என்ற நிலையில் எங்கு நாம் உடன்படுவோம் எங்கு முரண்படுவோம் என்பது எமது தெரிவில்லையா? அவ்வகையில் சொன்னவரைத் தெரியாதிருப்பது எமது சுய முடிவெடுத்தலிற்கு மேலும் உதவாதா?

ஒரு சிந்தனையைச் சொன்னவர் தனது வாழ்வில் தான் சொன்னதைக் கடைப்பிடித்து வெற்றி கண்டாரா என்று அறிவதற்குச் சொன்னவரை அறிவது அவசியம் என்று ஒரு எதிர்வாதம் முன்வைக்கப்படலாம். ஆனால், சொன்னவரின் வாழ்வில் தோற்றதால் சொன்னது அனைவரிற்கும் தவறாய்த் தான் இருக்க வேண்டு;ம் என்பதில்லை. எமக்குள் ஒரு சிந்தனை ஒரு அதிர்வினை ஏற்படுத்துகின்றது என்றால் அது எமது சுயம் சார்ந்து ஏதோ ஒரு வகையில் ஏற்புடையதாய்ப் படுகிறது என்பதே இயல்வு. அவ்வகையில் அச்சிந்தனை பற்றி நாம் சிந்திப்பதற்குச் சொன்னவர் பற்றிய தகவல் தேவையற்றது.

ஆனால் எழுத்தாழர் யார் என்பதை அறிந்து கொள்வதன் அவசியம் அவரது சிந்தனையைப் பொறுத்து மாறுபடும். உதாரணத்திற்கு இன்ன மருந்தை இத்தனை நாட்கள் பாவியுங்கள் இன்ன வருத்தம் குணமாகும் என்று ஒருவர் சொன்னால், சொல்பவரின் தகமையை ஊர்ஜிதப்படுத்திக் கொள்வது அவசியம். அதுபோன்றே உங்களது பணத்தை இவ்வாறு முதலிடுங்கள் என்று ஆரும் கூறின் அல்லது சட்டப்படி இன்னதைச் செய்யுங்கள் என்று யாரேனும் ஒரு பிரச்சினை பற்றிக் கூறின் சொல்பவர் மீது ஒரு நம்பிக்கை அல்லது அவரின் கிறடிபிலிற்றியை ஊர்ஜிதப்படுத்திக் கொள்வது இங்கு அவசியம். ஆனால், சமூகவியல் சார்ந்து முன்வைக்கப்படும் ஒரு அவதானம் அல்லது கலை இலக்கியம் சார்ந்து முன்வைக்கப்படும் கருத்து என்பது ஒருவருடைய கருத்து. அக்கருத்தோடு உடன்படுவதற்கும் முரண்படுவதற்கும் சொன்னவர் யார் என்பது எதனால் அவசியம்?

சிலர் சொல்லக் கூடும், நச்சுத் தனமான உள்ளெண்ணங்களோடு சமூகம் சார்ந்த கருத்துக்கள் முன்வைக்கப்படலாம் என்பதனால், யார் சொல்லுகிறார்கள் என்பதனை அறிந்திருந்தால் சொல்லப்படும் கருத்துக்களை நம்புவது இலகுவாய் இருக்கும் என்று. ஆனால், நம்பகமானவர் சொல்வதால் மட்டும் சொல்லப்படுவதை நம்பிவிடுவது நியாயமானதா?

ஓற்றுமை என்பது என்ன? ஒரு இலக்கு நோக்கி இருவர் அல்லது பலர் சேர்ந்து முனைவது என்று கொள்ளலாமா? இலக்குத் தொடர்பில் உடன்பாடு இல்லாத பட்சத்தில் ஒற்றுமை நல்ல வார்த்தை நல்ல பண்பு என்று நினைத்து அதனால் மட்டும் சேர்ந்து முனைவது சாத்தியமா? ஓற்றுமை என்பது எப்போதும் நல்ல வாhத்தையாய்த் தான் இருக்குமா? முகமூடி கழட்டுவது அவசியம் என்று பத்துப் பேர் கூறுகையில் இல்லை அவசியம் இல்லை என்று கூறுவது உண்மையில் ஒற்றுமையீனம் தான். ஆனால், இந்த ஒற்றுமையீனம் இங்கு கெட்டவார்த்தையாகத் தான் இருக்க முடியுமா?

இன்னுமொரு புறத்தில் பார்த்தால், ரதி சொல்லும் ஒற்றுமை என்பதனை, ஒருவரை ஒருவர் கருத்தாளர்கள் அறிந்து கொள்வதால் பரஸ்பரம் நிஜவாழ்வில் பலன் பெற முடியும் (உதாரணம், அனுபவப் பகிர்வு, தொழில் முனை அணைவுகள் முதலியன) என்பதாயும், அவ்வாறு கருத்தாளர்களுடன் பழக மறுப்பவர்கள் தாம் கருத்துக் கூறுகின்ற இந்தச் சமூகத்திற்குப் பலன் கொடுக்க மறுப்பவர்களாக வாழ்கிறார்கள் என்ற அர்த்தத்திலும் பார்க்கலாம். அதாவது சமூகத்தின் பால் நேசம் உடையவர்கள், அச்சமூகத்தின் அங்கத்தவர்களை நேசிப்பவர்களாகவும் இருப்பது தானே நியாயம் என்ற வகையிலும் பார்க்கலாம். இதை மறுப்பதற்கில்லை. ஆனால், யாழ் களத்தில் முகமூடியாய் இருப்பதனால் சமூகத்தில் நடமாட்டம் அறவே இல்லை என்று கொள்ள முடியாது அல்லவா. யாழ் களம் என்பது வாழ்வின் ஒரு அங்கம்; மட்டுமே. மேலும் இவ்வங்கத்திற்கு என்று ஒரு தன்மை இருக்கிறது. அது முகமூடி மூலம் மட்டுமே பார்க்கப்படவேண்டியது என்பது எனது தேவை. அவ்வளவு தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் பதிவு.

Eyes Wide Shut படத்தில் வரும் பாத்திரங்கள் போன்று முகமூடிகள் அணிந்துதான் பலர் நிஜ உலகத்திலும், இணையவுலகிலும் உலவுகின்றனர்.

நமக்கே நமது நிஜ உருவம் தெரியாதபோது எப்படி முகமூடிகளைக் கழற்றமுடியும்? நேரில் சந்தித்துப் பழகினாலும், மனம்விட்டுப் பழகாவிட்டால் நம்பிக்கை வராது!

  • கருத்துக்கள உறவுகள்

முக மூடி நீக்குதல் அவசியமா? இல்லையா என்பது பற்றி கனடா வாழ் உறவுகள் தங்கள் அனுபவ ரீதியான கருத்துகளை எழுதினால் உதவியாய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்னுமொருவன் எழுதிய இப் பதிவையும் அதற்கு கீழே கலைஞன் எழுதிய பதிவையும் வாசித்து விட்டு கலைஞன் எழுதியது தான் சரியாக இருக்கும் என நினைத்தேன்...தற்போது தான் புரிந்தது முகமூடி நீக்குவது எவ்வளவு ஆபத்து என்டு

தவறான வாதம் ரதி. நீங்கள் இன்னமும் முகமூடியுடன்தான் இருக்கின்றீர்கள். எனவே முகமூடியை நீக்கியபின் பெறக்கூடிய அனுபவங்கள் பற்றி உங்களுக்கு பரீட்சயம் இல்லை. அடுத்ததாக, முகமூடியை களைந்திருந்தால்.. ஆள் இவர் என்று தெரியும்போது... சக கருத்தாளருடன் தொலைபேசியூடாக நேரடியாக பேசக்கூடிய வாய்ப்பு காணப்படும்போது... சக கருத்தாளரை நேரடியாக சந்திக்கக்கூடிய வாய்ப்பு காணப்படும்போது சக கருத்தாளருடன் வலைத்தளத்தில் புரிந்துணர்வு இல்லாமல் மனஸ்தாபப்பட்டுக்கொள்வதற்கு வாய்ப்புக்கள் குறைவு.

இன்றுதான் பார்த்தேன் நல்லதொரு பதிவு.யாழ் களம் எனக்கு யாழில் பிரபலமாக இருந்த எனது நண்பரால் அறியதரப்பட்டது.பலவிதமான அனுபவங்களை வாசிப்பதுடன் அந்த அனுபவத்தை எங்களாலும் அதை உடன் பங்கிட்டுகொள்ளக் கூடியதாக இருப்பதே யாழின் சிறப்பு.இங்கு தான் யாரென்று அடையாளப்படுத்துவது பலருக்கும் பிடிக்காத ஒருவிடயமாகத்தானிருக்கும்.காரணம் சிலர் பல பெயர்களிலும் சிலரது எழுத்திற்கும் அவர்களது உண்மைநிலைக்கும் பெரிய இடைவெளி இருக்கும்.

மனிதர்களை எடை போடுவதென்பதொன்றும் இலகுவான விடயமல்ல.பல விதமான பல கரக்டர்கள் தினம் தினம் புதுவிதமாகச் சந்தித்துக் கொண்டே இருக்கின்றோம்.தேவையும் வசதியும் ஒரு நிலையான போக்கில் மனிதனை வைத்திருக்க விடுவதில்லை.பொய்யாக வாழ்க்கைமுழுக்க சந்தோசமாக வாழ்ந்துமுடித்தவர்களே இருக்கின்றார்கள்.

எதையும் சீரியஸாக எடுப்பவர்தான் வாழ்க்கை முழுக்க கஸ்டபடுகின்றார்.யாழில் கூட நான் பலருடன் முரண்படுவதற்கு காரணம் எமது போராட்டதில் கூட நாங்கள் உண்மையாக இருக்காத படியால் தான் நாம் தோற்றுப் போனோம் என்று நான் முழுமையாக நம்புகின்றேன்

  • தொடங்கியவர்

எழுஞாயிறு,

உங்கள் கருத்திற்கு நன்றி. உங்களிற்குள் பாம்பு தேள் நட்டுவக்காலி இருப்பது பற்றிய உங்கள் கருத்துத் தொடர்பில் இருவிடயங்களைப் பகிரத் தோன்றுகின்றது. ஒன்று உங்களைப் பற்றி நீங்கள் விசாரிக்கீன்றீர்கள். இது நிச்சயம் அனைவரிற்கும் தேவையானது. அடுத்தது, சில சமயங்களில் நட்டுவக்காலியாயும் பாம்பாயும் சமூகம் சித்தரிக்கும் அனைத்தும் உண்மையிலேயே பாம்பாயும் நட்டுவக்காலியாயும் தான் இருக்கவேண்டும் என்பதோ, அல்லது பாம்பும் நட்டுவக்காலியும் தீயனவாய் தான் இருக்கமுடியும் என்பதோ இல்லை. ஒரு காலத்தில் (இப்போதும் சில இடங்களில்) விதவைப் பெண் வர்ணச்சேலை அணிந்தாலோ அலங்காரம் செய்தாலோ அவளிற்குள் பாம்பும் நட்டுவக்காலியும் உள்ளதாய் சமூகம் கூறிக்கொண்டிருந்தது. ஒரு பியர் குடிப்பனும் ஒளித்துக் குடிக்க வேண்டிய நிலை எங்கள் சமூகத்தில் இப்போதும் உள்ளது. பூமி உருண்டை என்று முதலில் கூறியவன் பாம்பினதும் நட்டுவக்காலியினதும் பிடியில் இருந்தாய் சமூகம் அன்று கூறியது. எனவே எடுத்த எடுப்பில் பாம்புகள் பற்றியும் நட்டுவக்காலிகள் பற்றியும் ஒரு முடிவிற்கு வந்து விடாதீர்கள்.

ஆனால் அதே நேரம், உலகில் பாம்பும் நட்டுவக்காலியும் இருக்கத் தான் செய்கின்றன. எனினும், பல சமயங்களில் நாம் நினைப்பதைக் காட்டிலும் அதிகபட்சம் சாத்தியமான உதவிகள் உலகில் இருக்கின்றன என்பதை நாம் அறிவதில்லை. பூதாகரமாய்த் தெரியும் பல பிரச்சினைகள் உரிய உதவியோடு அணுகப்படுகையில் இலகுவில் தீர்க்கப்படும் சாத்தியம் உள்ளதையும் நாம் மறந்து விடக்கூடாது.

கிருபன் சஜீவன் உங்கள் பின்னூட்டங்களிற்கு நன்றி.

ரதி,

நீங்கள் இப்போது தான் முகமூடி களட்டுவது ஆபத்து என்று புரிகின்றது என்று குறிப்பாக எதை வைத்துக் கூறுகின்றீர்கள் என்று கூற முடியுமா?

கலைஞன்,

நேரடிப்பழக்கமுள்ள ஒருவருடன் மனஸ்தாபப் படும் அவசியம் குறைவு, முகமூடிகளுடன் மனஸ்தாபத்திற்கான சந்தர்ப்பம் அதிகம் என்ற கூற்றோடு, கருத்தினைக் கருத்தால் மட்டும் சந்திக்கும் உங்கள் நிலைப்பாடு எவ்வாறு ஒத்துப்போகின்றது? கருத்துக்கள் என்று பார்க்கையில் அங்கு மனஸ்தாபத்திற்கான தேவை ஏன் எழுகின்றது. உதாரணமாக, ஒருவர் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுகிறார் என்றால், அவர் தெரிந்தவரோ இல்லையோ அத்தனிநபர் தாக்குதல் பிரச்சினையானது தான். தனிநபர் தாக்குதல் செய்யும் ஒருவர், தனக்குத் தெரிந்தவர்கள் என்றால்; தனிநபர் தாக்குதலில் ஈடுபடமாட்டார், தெரியாதவர்கள் என்றால்; தனிநபர்தாக்குதல் செய்வார் என்று ஒரு நிலை ஒருவர் பற்றி இருக்குமாயின், தெரிந்தவர் என்பதால் அவர் தனது சுயநிலைக்குப் புறம்பான ஒரு முகமூடியைத் தான் அணிகிறார் என்று நீங்கள் கருதவில்லையா? அப்படியாயின் எவ்வாறு அது முகமூடி களட்டல் என்றாகும்?

இன்னுமொரு விதத்தில் பார்த்தால், தனிநபர் தாக்குதல் என்பது ஏன் எம்மை அத்தனை தூரம் பயப்படுத்தவேண்டும். எனது அவதாரத்தை நோக்கி ஒருவர் பயங்கரவாதி என்றோ, வன்முறையாளன் என்றோ, மடையன் என்றோ, பாலியல் பலவீனன் என்றோ, உளவியல்; பாதித்தவன் என்றோ இன்னும் வேறு எதையெல்லாம் கற்பனை பண்ணமுடியுமோ அத்தனையும் முன்வைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இது தொடர்பில் எனது எதிர்வினை எவ்வாறு இருக்கவேண்டும்? மேற்படி நபர் முன்வைக்கும் அடைமொழியினை அவரின் மனதில் எவ்வாறு நான் ஏற்படுத்தினேன். அவரது அடைமொழிக்குக் காரணமான எனது செயலை அல்லது கருத்தை இப்போது நான் மீள் ஆராயும் போது அவரது அடைமொழியுடன் நான் ஒத்திசைகிறேனா. ஆப்போதாயின் என்னால் எதையேனும் திருத்திக் கொள்ளவோ புரிந்து கொள்ளவோ முடிகிறதா? இல்லையேல் எந்த ஆதாரமும் இன்றி குறிப்பிடுபவர் என் மீது அத்தகைய வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொள்ளின், இதனால் எனது பாதிப்பு என்ன? எனது அவதாரத்தின் மரியாதை யாழ் களத்தில் குறைந்து போகுமா? ஏவ்வாறு அது சாத்தியம்? நான் நண்பர்கள் என்றோ நல்லவர்கள் என்றோ கருதுபவர்கள், யாரோ ஒருவர் என்னை யாழ்களத்தில் வசைபாடியதால் என்னைப் பற்றிய தமது எண்ணத்தை மாற்றிக் கொள்வர் என்று நான் பயப்படுகிறேனா. அவ்வாறாயின் அத்தகைய நண்பரும் நல்லவரும் எனக்குத் தேவை தானா? இவ்வாறு நாம் விசாரிக்க முடியாதர்? ஏதற்காக ஆளைத் தெரிந்து தான் ஆபத்தை குறைக்கத் தோன்றுகின்றது?

இதை நான் எழுந்தமானத்தில் கூறவில்லை, என்னைநோக்கியும் எனது கருத்து தனக்கு என்மேல் அருவருப்பை உருவாக்குகி;ன்றது என்று முன்னர் ஒரு திரியில் ஒரு உறவு கூறிஇருந்தார். அருவருப்பு என்பது பெரிய சொல் தான். ஆனால் எனது என்ன கருத்து தனக்கு அருவருப்பு ஏற்படுத்தியது என்றும் அவர் கூறியதால் என்னால் அவரைப் புரிந்து கொள்ள முடிந்தது. எனது குறிப்பிட்ட கருத்தை மாற்றும் படி எனக்குத் தோன்றாததால் நான் மாற்றவில்லை. ஆனால் அருவருப்பு குறிப்பிட்ட நபரிற்கு அக்கருத்தின் மூலம் ஏன் ஏற்பட்டது என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இங்கு மனஸ்தாபத்திற்கோ வக்கிரத்திற்கோ பழி உணர்விற்கோ அவசியம் இருப்பதாய் எனக்குப் படவில்லை.

உங்கள் கருத்தினை இது தொடர்பில் அறிய ஆவலாய் உள்ளேன்.

அர்யுன்,

உங்கள் ஆதங்கத்துடன் நான் உடன்படுகின்றேன். பின்னூட்டத்திற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் நான் நினைக்கிறேன் யாழ் களம் என்பது கருத்துக்களை நியாயமான முறையில் பறிமாறிக் கொள்ளும் ஒரு தளம்...எமக்கு சரியெனப்பட்டதை எழுதுகிறோம்,தெரியாதவற்றை தெரிந்து கொள்கிறோம்...ஆனால் நேர‌டியாக சந்தித்தால் அல்லது தொலைபேசியினூடாக உரையாடினால் பிறகு ஏன் கருத்துக்களத்தில் வந்து எழுத வேண்டும் நேர‌டியாக கருத்துகளை பறிமாறலாமே...மற்றது இன்னுமொருவன் எழுதின மாதிரி கருத்துகளத்தினூட‌க உறவுகளோடு நன்கு பழகி விட்ட பிறகு எதாவது விவாதம் என்டு வந்தால் எதிர்த்து வாதடுவது மிகவும் கஸ்ட‌ம் அல்லவா...கருத்துக்களத்தில் எழுதும் போது புரிந்துனர்வு இல்லாமல் எழுதுபவர்கள் நேர‌டியாக பார்த்த பின் புரிந்து கொள்வார்கள் என்பது என்னைப் பொறுத்த வரை ஏற்க கூடியது இல்லை...அப்படி ஒருவருக்காக கருத்துகளை விட்டுக் கொடுப்போமாயின் கருத்துக்களம் ஆரோக்கியமான விவாத களமாய் அமையாது

இன்னுமொருவன் நான் திடீரென மனம் மாறியதற்கு கார‌ணம் பயம் தான்...நான் பெண்ணாக இருந்தாலும் எனது மனதிற்குப் பட்டதை எழுதுகிறேன்...அநேகமாக எல்லாத் தலைப்பிலும் எழுதுகிறேன்...ஒரு பதிவு எழுதினால் அடுத்த பதிவுற்கு போகும் போது முதல் எழுதிய பதிவை மறந்து போய் விட வேண்டும் ஆனால் இங்கே கருத்தெழுதும் பலர் அப்படி இல்லை ஒரு அமைப்பிற்கோ ஒருவரையோ ஆதரித்து எழுதி விட்டால் உட‌னே மற்றவர்களை துரோகியாக்கி தான் பார்க்கிறார்களே தவிர‌ ஆரோக்கியமான கருத்துகளைப் பதிகிறார்கள் இல்லை...நான்

முதலில் லண்ட‌னில் கலந்துரையாட‌ல் செய்வோமா என எழுதியதிற்கு 1,2 பேர் தான் தங்கள் முகங்களை காட்ட‌ ஒத்துக் கொண்டார்கள்...ஆனால் அவர்களில் தப்பு இல்லையோ என்டு என்ட‌ மனதிற்குப்படுகிறது...கருத்துக்களத்தினூட‌க கருத்தாட‌ல் செய்யும் போதே வார்த்தைகளை இப்படி அள்ளிக் கொட்டுபவர்கள் நேர‌டியாய் முகத்தைக் காட்டும் போது மட்டும் எப்படி நல்லவர்களாய் இருப்பார்கள் என நம்ப முடியும்?

எனக்குத் தெரியவில்லை பொதுவாக நான் இர‌ண்டில் ஒரு முடிவு எடுத்து விடுவேன் ஆனால் இத் தலைப்பை பொறுத்த வரை முடிவு எடுப்பது கஸ்ட‌மாய் உள்ளது.

அடிப்படையில் எம்மிடம் வெளிப்படையான இயல்பான முகங்கள் இல்லை. ஏதொ ஒரு முகமூடியை நாம் அணிந்துகொண்டுதான் இருக்கின்றோம். நாம் அணிந்திருக்கும் முகமூடிகளில் ஏற்றதாள்வுகள் அடிமைப்படுத்துதலுக்கும் அடிமைப்படுவதற்குமான வேசங்கள் மலிந்தே கிடக்கின்றது. ஒரு திருமணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் முதலில் தோண்டப்படும் சுயவிபரம் ஒழுக்கம் குறித்தோ பால்வினை நோய் குறித்தோ கிடையாது. எந்த ஊர் என்ன சாதி. இதுவே அடிப்படை. எந்த வித அடிப்படையும் அற்ற இந்த சமூகச் சீரளிவு நெறிமுறைகள் தான் சமூகத்தின் கெளரவமாக இன்றுவரை இருந்துவருகின்றது. ஒருவன் எவ்வளவுதான் படிப்பு பதவி பணம் புகழை அடைந்த போதும் இந்த ஏற்றதாழ்வில் சமநிலையை அடய முடிந்ததில்லை. இது ஒரு வேசம். உண்மைக்குப் புறம்பான வேசம். இதைக் கழைய முடியாது. இவ்வாறான ஒரு அடிப்படையில் ஒவ்வொரு மனிதனும் சமநிலைக்கான தேடலில் தமது சுயத்தை தொலைப்பதும் சமூக உறவுகளில் இருந்து அந்நியப்படுதலுக்குமான அடிப்படை விரிந்தே கிடக்கின்றது.

எமது முகங்களில் நேர்மை என்பதற்கும் தூய்மை என்பதற்கும் ஒரு எல்லை நிரந்தரமாக இருக்கின்றது. வெளிப்படையான பழக்கம் என்பது எவ்வகையிலான நெருக்கத்தை பரஸ்பரம் ஏற்படுத்தும் என்பதிலும் கேள்விக்குறிகள் இருக்கின்றது. நாம் சாதராணமாக சொல்லிவிடலாம் வெளிப்படையாக பழகலாம் என்று ஆனால் ஒருவனை ஒருவன் அறிந்த பின்னர் ஏற்படும் விரோதங்கள் மீளவும் சுயத்தை கிண்டுவதாகவும் சிறுமைப்படுத்துவதாகவும் அமைந்துவிடும அசச்ம் இருக்கின்றது. இந்தக் களத்திலே சில கருத்துக்கள் எழுத்துவாக்கில் வந்து விழுவதுண்டு குறிப்பாக இவர் இந்த இடம். ஊரைப்பார்த்தலே தெரிகின்றது. இவ்வாறான கருத்துக்களை எதிர்த்து நான் முன்னர் கருத்து எழுதியும் இருக்கின்றேன்.

என்னுமொரு புறம் போர்ச்சூழல் அதன் சம்மந்தம் போன்றனவும் முகத்தை மறைப்பதற்கு பெருமளவானவர்களுக்கு காரணமாக அமைகின்றது. எமக்குள்ளான தனிமனித தாக்குதல் விரோத வளர்ச்சி என்பதற்கு எல்லை வரையறை கிடையாது. எமது சமூகத்தின் பல்வேறு குறைபாடுகளால் இந்தப் பண்பு எம்மிடம் இல்லை. எமது சமூகத்தில் இருந்து நாம் படிப்படியாக தொலைந்து காணாமல் போகின்றோம். இதற்குரிய நிர்ப்பந்தங்கள் நிறைய இருக்கின்றது. இது கவலைக்குரிய ஒரு விடயம் தான். ஆனால் மனிதாபிமானத்துக்கு புறம்பான குணத்தாலும் சமூக சீர்கேடுகளே எமக்கான பண்பு கெளரவமாக இருப்பதற்குமான தண்டனையாகவே இதை எடுத்துக்கொள்ளவேண்டியுள்ளது.

எல்லாவற்றையும் கடந்து நானும் தமிழன் நீயும் தமிழன் என்ற எல்லையே உண்மை. அந்த எல்லையையே நம்புகின்றோம் என்ற உறுதியுடன் யாரும் உண்மையாக வெளிப்படும்போது இருப்பில் நிரந்தரமாக இருக்கும் முகமூடிகள் கழட்டப்படும். ஆளையாள் வேட்டையாடவேண்டிய தேவை இருக்காது. அப்போது எல்லோரும் வெளிப்படலாம். ஆனால் அது ஒரு அழகான கனவாகவே இருக்கின்றது.

நான் ஏற்கனவே கூறி இருக்கின்றேன் நேரடியாக முகமூடி களைந்து உறவாடினால்கூட அங்கு காணப்படக்கூடிய எல்லைகள் – Limitations பற்றி. உ+ம்: ஆபத்து, புரிந்துணர்வின்மை. ஏனெனில்.. வழமையில்அமையக்கூடிய மனிதரின் அடிப்படை குணாம்சங்கள், போட்டிகள், கோப தாபங்கள், கருத்து முரண்பாடுகள் முகமூடி களைந்து உறவாடினாலும் தொடரக்கூடும்.

இங்கு அடுத்ததாக உள்ள சிக்கல்.. ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட முகங்களை வலைத்தளத்தில் கொண்டிருக்கக்கூடியது. எனவே நேரடியான உறவாடலின்போது அவர் தனது ஒரு முகத்தை களைந்தாலும் அவரது இதர முகங்கள் களையப்படாமல் காணப்படலாம். எல்லோரும் தங்கள் எல்லா விடயங்களையும் நேரடியாக உறவாடும்போது கூறப்போவதில்லை. அதாவது ஒரு முகத்தை மட்டும் களைந்து மறுமுகங்களை களையாமல் உறவாடுவதனால் வரக்கூடிய சிக்கல்கள் பற்றியே நாம் பரந்த கோணங்களில் பார்க்க முடியும்.

ஒருவரை ஒருவர் அறிந்த உறவுகள் நேரடி அறிமுகத்தின் பின்னர் காட்டமான ஓர் வாதத்தில் ஈடுபட்டு மனஸ்தாபப்பட்டதை நான் பார்த்து இருக்கின்றேன். காட்டமாக உணர்ச்சிவசப்பட்டு கருத்தாடலில் ஈடுபடும்போது ஒருகட்டத்தில் ஒரு தனிநபர் பற்றி நேரடியான சந்திப்பின் மூலம் அறிந்தவிடயங்களை இன்னொருவர் வலைத்தளத்தில் மற்றவர்களும் பார்க்கும் வகையில் பரிமாறிக்கொள்வதற்கும் சந்தர்ப்பம் உள்ளது. இப்படியான சந்தர்ப்பத்தில் நம்பிக்கை – Trust என்பது கேள்விக்குறியாகின்றது. இவ்வாறே, ஏதாவது ஏடாகூடமான பிரச்சனை வந்து ஒருவர் இன்னொருவருக்கு சட்டரீதியாக அழுத்தம் கொடுக்க, காவல்துறையிடம் செல்வதற்குக்கூட சாத்தியம் உள்ளது. இவ்வகையில் பார்த்தால் முகமூடி என்பது ஓர் பாதுகாப்பு கவசமே.

ஒரு குடும்பத்தை எடுத்தாலே வீட்டில் கூட பலவித பிரச்சனைகள் வருகின்றன. தாயும் - தந்தையும், கணவனும் – மனைவியும், அண்ணாவும் – அக்காவும், தம்பியும் – தங்கையும், அண்ணனும் – தம்பியும், அக்காவும் – தங்கையும்.. இவ்வாறு இவர்கள் பலத்த கருத்துமுரண்பாடுகளை கொண்டிருந்து சிலவேளைகளில் நிலமை பாரதூரமாக சென்று காவல்துறை, நீதிமன்றம் என்றுகூட பிரச்சனை பூதாகரமாகி விரியக்கூடும். உறவுகளை கையாள்வதில் எங்களுக்கு உள்ள ஈடுபாடு, அனுபவம், ஆற்றல் மேற்கண்ட விடயங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன.

பிரயாணம் செய்யும்போது நாங்கள் நடந்து செல்லமுடியும், துவிச்சக்கரவண்டியில் செல்லமுடியும், எங்கள் சொந்த வாகனத்திலும் செல்ல முடியும். இங்கு ஒவ்வொரு வழிமுறையிலும் நன்மைகள் உள்ளன, தீமைகளும் உள்ளன. முகமூடி களைந்து வலைத்தளத்தில் உறவாடினாலும் முகமூடியுடன் உறவாடினாலும் எங்கும் ஆபத்துக்கள் உள்ளன. நான் ஒருவரையும் முகமூடியை களையுமாறு ஆலோசனை கூறவில்லை. நான் முகமூடி களைந்து உறவாடுவது எனது தனிப்பட்ட விருப்பத்தெரிவு, அவ்வளவுதான்.

Edited by கலைஞன்

எல்லாவற்றையும் கடந்து நானும் தமிழன் நீயும் தமிழன் என்ற எல்லையே உண்மை.

நானும் தமிழன் நீயும் தமிழன் என்பதைவிட நானும் மனிதன் நீயும் மனிதன் என்று கூறியிருந்தால் இன்னமும் பொருத்தம்.

அப்படி ஒருவருக்காக கருத்துகளை விட்டுக் கொடுப்போமாயின் கருத்துக்களம் ஆரோக்கியமான விவாத களமாய் அமையாது.

நான் கருத்துக்களை விட்டுக்கொடுத்து எழுதுவதாகவா உங்களுக்கு தெரிகின்றது? நான் எழுதும் பல கருத்துக்களுடன் நான் நேரடியாக சந்தித்து உறவாடும் உறவுகள் பலர் நிச்சயம் முரண்படுவார்கள் என்பது எனக்கு தெரியும். ஆயினும், நான் எனது சிந்தனைகளை வெளிப்படையாக கூறுகின்றேன். இங்கு நான் கூறுவது நேரடியாக முகம் பார்த்து பழகினால் எல்லைகள் தாண்டி உணர்ச்சிவசப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவதற்கு சந்தர்ப்பம் உள்ளது என்பதே. அதற்காக அது நிச்சயம் குறையும் அல்லது தவிர்க்கப்படும் என்று இல்லை. வெவ்வேறு சிந்தனையாளர்கள் கலந்துகொள்ளும் நேரடி தொலைக்காட்சி விவாதங்கள் இதற்கு நல்லதொரு உதாரணமாக உள்ளன.

ஏதற்காக ஆளைத் தெரிந்து தான் ஆபத்தை குறைக்கத் தோன்றுகின்றது?

ஆளை தெரிவதால் ஆபத்து குறையும் என்று இல்லை, சிலவேளைகளில் ஆளை அறிந்தபின்னரே உண்மையில் ஆபத்து தோன்றலாம். இங்கு அறிமுகம், உறவாடல் என்பன சினேகபூர்வமான முறையில் வலைத்தளத்திற்கு வெளியிலும் வளர்க்கப்படுகின்றன. இது பலவித நன்மைகளை ஏற்படுத்தலாம். அதேசமயம் தீமைகள் பலவும் இதனுள் அடங்கியுள்ளன.

Edited by கலைஞன்

நானும் தமிழன் நீயும் தமிழன் என்பதைவிட நானும் மனிதன் நீயும் மனிதன் என்று கூறியிருந்தால் இன்னமும் பொருத்தம்.

உண்மைதான்.. நீங்கள் சொல்லும் பதமே அடிப்படையானது

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் ஒரு நாடக மேடை அதில்

நாங்கள் எல்லோரும் நடிகர்கள்

இதை மாற்ற முடியுமா?

முகமூடி அணிந்தவர்கள் தான் மனிதர்களாக இருக்க முடியும்.

முகமுடியை அகற்றி விட்டு இந்த உலகில் வாழ முடியாமல் தோற்பவர்கள் அதிகம்.

முகமுடியை அகற்றி விட்டு இந்த உலகில் வாழ்ந்து ஜெயித்தவர்கள் மகான்கள்

என்னைப் பொறுத்தமட்டில் என்னால் மகானாக இருக்க முடியாது.

வாழ்க்கையில் தோல்வியையும் காண விரும்பவில்லை.

அதனால் முகமூடியுடனேயே இருக்க விரும்புகின்றேன்.

அதாவது ஒரு நடிகனாக ......

வாத்தியார்

*********

வாத்தியார், நீங்கள் சற்று ஆழமாக போய்விட்டீர்கள் என்று நினைக்கின்றேன். இங்கு நாங்கள் வலைத்தள முகமூடிகள் பற்றி பேசுகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களம் ஒரு கருத்துமேடை அதில்

நாங்கள் எல்லோரும் முகமூடிகள்

இதை மாற்ற முடியுமா?

முகமூடி அணிந்தவர்கள் தான் யாழில் நிலைத்து இருக்க முடியும்.

முகமுடியை அகற்றி விட்டு இந்த யாழில்கருத்து எழுத முடியாமல் தோற்பவர்கள் அதிகம்.

முகமுடியை அகற்றி விட்டு இந்த யாழில் கருத்து எழுதி ஜெயித்தவர்கள் குறைவு

என்னைப் பொறுத்தமட்டில் என்னால் என் முகத்தைக் காட்ட முடியாது.

யாழில் இருந்து விரைவில் ஒதுங்குவதை நான் விரும்பவில்லை

அதனால் முகமூடியுடனேயே இருக்க விரும்புகின்றேன்.

அதாவது ஒரு கருத்தாளனாக ...... :blink:

வாத்தியார்

*********

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.