குடும்பிமலையின் அமைவிடமும், புதிதாக அல்லை ஓடை மற்றும் மாவட்டான் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் ராணுவச் சோதனைச் சாவடிகளும்.
இனவழிப்பு அரசின் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் லால் பெரேரா என்பவன் ஆடி மாதத்திற்கிடையில் இத்திட்டத்தைனைப் பூர்த்தியாக்குவேன் என்று சூளுரைத்திருக்கும் நிலையில், அரசின் மீள்குடியேற்ற, இணக்கப்பாட்டு துணையமைச்சரும் துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் இப்பகுதியிலிருந்து மக்களை ராணுவத்தின் சொற்படி உடனடியாக வெளியேற வேண்டும் என்று வற்புறுத்திவருகிறார்.
ராணுவத்தால் அமைக்கப்படும் புதிய வீதிகள் இப்பகுதியை அபிவிருத்தி செய்யவே என்று கூறப்பட்டாலும், இவ்வீதிகளை தமிழ் மக்கள் பாவிப்பதை ராணுவம் தடுத்துவருவதாக மக்கள் முறையிட்டிருக்கிறார்கள்.
மக்களுக்கான பொதுப் போக்குவரத்து வசதிகளற்ற இப்பகுதியில் மக்கள் கால்நடையாகவே நெடுந்தூரம் பயணித்துக்கொண்டிருக்கையில், இவ்வீதிகள் ஊடாக ராணுவமும், உல்லாசப் பயணிகளும் சொகுசு வாகனங்களிலும், கனரக டிரக் வண்டிகளிலும் பவணிவருவதாகத் தெரிவிக்கும் மக்கள், இவ்வீதியூடாக நடந்துசெல்வதற்குக் கூட வெலிக்கந்தைப் பகுதியிலுள்ள ராணுவச் சோதனைச் சாவடியில் அனுமதிபெற்றபின்பே முடியும் என்றும் தெரிவிக்கிறார்கள்.
ஆக்கிரமிப்பு ராணுவத்தினருக்கு அடுத்தபடியாக சிங்கள ஆக்கிரமிப்பிற்கு நேரடியாக உதவிவரும் தெற்கின் அரச சார்பற்ற நிறுவனங்களின் முகவர்களும் இவ்வீதிகளை பாவித்துவருவதாகத் தெரிகிறது.
இரு வருடங்களுக்கு முன்னர், ஜனாதிபதி மகிந்தவின் சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி மற்றும் உல்லாசப் பயணத்துறை அபிவிருத்தி என்கிற பெயரில் மாவட்டத்தின் எழுவான்கரைப்பகுதியின் பெருமளவு கரையோரக் காணிகளை அபகரித்து, மூலிகைக் காடுகள் உட்பட பாரிய காடழிப்பில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
இதேவேளை சிங்கள ராணுவத்தினதும், கடற்படையினதும் உதவியுடன் பெருமளவு சிங்கள மீனவர்கள் தமிழ்ப் பகுதிகளில் மீன்பிடிக்கத் தொடங்கியிருப்பதுடன், கரையோரக் கிராமங்களான கோரளைப்பற்று வடக்கு, ஏறாவூர்ப்பற்று, மண்முனைப்பற்று வடக்கு ஆகிய பகுதிகளில் குடியேறிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இனவழிப்புப் போரினால் இவ்விடங்களிலிருந்து துரத்தப்பட்ட தமிழர்கள் இன்றுவரை அகதிமுகாம்களில் வாழ்ந்துவரும் நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட தமிழரின் காணிகளில் உல்லாசப்பயண விடுதிகளையும், புத்த தாதுகோபங்களையும் கட்ட அரசிற்கு எங்கிருந்து நிதிவருகிறதென்றும் இம்மக்கள் கேட்கின்றனர்.
அபிவிருத்தி என்கிற பெயரில் இனவழிப்பு அரசுக்கு பண உதவிகளை வழங்கும் சர்வதேச நாணைய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய முதலீட்டாளர்கள் இதுபற்றிப் பதிசொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்று கிழக்கின் புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.