பகுதி 2:
சிறு நீர் தொற்று என்று தான் முடிவு வரும், டொக்டர் அன்ரி பயோடிக் பத்து தருவார், அதை தவறாமல் எடுப்பன், பார்மசியில் மருந்து தரும் போது வார இறுதியில் பிரண்டி அடிச்சால் அன்ரி பயோடிக் பிரச்சனை கொடுக்குமா என்றும் கேட்க வேண்டும், பத்து நாட்களில் எல்லாம் சரியாகி விடும், மீண்டும் கும்மாளம் அடிக்கலாம் என்று மனக்கணக்குகள் நிறைய போட்டு கொண்டு "ரிசட்ல் என்ன டொக்டர்" என்று ராசுக்குட்டி கேட்டார்.
"ஒரு தொற்றும் இல்லை... எல்லாம் கிளியராக இருக்கு" என்று டொக்டர் கொஞ்சம் யோசனையுடன் சொல்ல ராசுக்குட்டி மீண்டும் சுருண்டு போனார். தொற்று என்றால் சிம்பிளா எல்லாம் முடிஞ்சிடும், பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை என்று நிம்மதியாக இருக்கலாம் என்ற எண்ணமும் தவிடு பொடியாகி விட்டது.
ஒருவேளை உந்த கிளினிக்கில் உடனே செக் பண்ணி சொல்வது பிழையாகுமோ தெரியாது என்று விட்டு, "அப்ப ஏன் டொக்டர் அப்படி வந்தது " என்று கேட்க," எதுக்கும் ஒருக்கால் இதற்கென்று இருக்கும் ஒரு Lab இற்கு போய் Urinalysis எனும் இன்னும் கொஞ்சம் ஆழமான செக்கப் ஒன்று செய்து பார்ப்பம் சொல்லி ஒரு சீட்டில் எழுதி தர அடுத்த நாளே காலைமை எழும்பி lab இற்கு ஓடிப் போய் - 12 மணித்தியாலம் எதுவும் சாப்பிடாமல் போய்- எடுத்து கொடுக்க, ரிசல்ட்ஸ் வர நாலு நாளாகும். கொரனா காலம் என்பதால் இன்னும் கொஞ்ச நாட்கள் கூட எடுக்கும் என்று சொல்லி அனுப்பி விட்டனர்.
ராசுக்குட்டி தான் ஒரு பெரிய இரும்பு மனிசன், எதுக்கும் கலங்காதவன் என்ற ஒரு பில்டப்பை மனிசிக்கும், பிள்ளைகளுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் கட்டி வைத்திருந்தவர். (ஆனாலும் மனிசிக்கு தெரியும் இது இரும்பு மனிசன் இல்லை, எல்லாம் சும்மா வெறும் பில்டப்பு என்று, ஆனாலும் நம்பினமாதிரி பாவனை செய்வதை உண்மை என்று தான் ராசுக்குட்டி நம்பிக் கொண்டு இருந்தவர்.). தான் இப்படி வருத்தத்துக்கு பயந்ததை வெளியே காட்டினால் தான் கட்டின பில்டப்பு உடைந்து விடும் என்று "இது எல்லாம் எனக்கு ஜுஜுப்பி என்ற மாதிரி முகத்தை வைச்சுக் கொண்டு நடந்து திரிந்தாலும் முகம் என்னவோ பேயறைந்த மாதிரி இருந்ததை மனிசி கவனிக்க தவறவில்லை.
இதில வேற "உங்களுக்கு ஒன்றும் இல்லை....சும்மா உந்த கூகிளை பார்த்து பயப்பட வேண்டாம் " என்று மனிசி சொல்லி தன் பாட்டுக்கு சந்தோசமாக இருந்ததை பார்த்து ராசுக்குட்டிக்கு விசர் ஏறிக் கொண்டு இருந்தது.
அடுத்த எட்டு நாட்களிலும், ஒவ்வொரு நாளும் கூகிளை நோண்டுவதும் அதில் சொல்லப்பட்டு இருக்கும் அறிகுறிகள் எல்லாம் தனக்கும் இருக்கு என்று கற்பனை பண்ணுவதும், குடும்ப வைத்தியருக்கு போன் அடிப்பதுமாக இருந்தார்.
இரண்டு வகையானவர்கள் உள்ளனர். ஒன்று வைத்தியர் சொல்லுவதைக் கேட்டு பயப்படுகின்றவர்கள். மற்றது, வைத்தியரையே பயப்பட வைப்பவர்கள். இதில் ராசுக்குட்டி இரண்டாம் வகை என்று இவ்வளத்தையும் வாசிக்கும் உங்களுக்கும் புரிந்து இருக்கும். அறப்படிச்ச குணம் உள்ளவர்ளுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர்கள் ஒரு வகையில் பாவம் செய்வதர்கள் போலும்.
சரியாக எட்டாவது நாள், குடும்ப வைத்தியர் தொலைபேசியில் அழைத்து Urinalysis சிலும் ஒன்றும் வரவில்லை...எல்லாம் சரியாக இருக்குது என்று சொல்ல, "இனி என்ன செய்வது டொக்டர்... ஏன் அப்ப அண்டைக்கு இரத்தம் வந்தது " என்று குடல் உடைந்து கேட்க வைத்தியரும் "ஒரு ஸ்பெசலிஸ்ட் இடம் உன்னை அனுப்புறன், அவர் இன்னும் கொஞ்சம் அதிகமாக டெஸ்ட் செய்யச் சொல்லுவார்" என்று அனுப்பி வைத்தார். அப்பொயிண்ட்மெண்ட் உடனே கிடைக்குமா டொக்டர் என்று கேட்க.. "இல்லை நாளேடுக்கும்... உன்னை மாதிரி கனக்க பேர் காத்திருப்பர் என்பதால் மூன்று மாதமாவது எடுக்கும்" என்று சொல்ல ராசுக்குட்டி மனசுக்குள் போட்ட சின்ன அலறலை அவர் கவனிக்கவில்லை.
உந்த கனடவில் எல்லாத்துக்கு லைனில் தான் நிற்க வேண்டும். ஜஸ்ரின் ருடோவாக இருந்தாலும் சரி, ராசுக்குட்டியாக இருந்தாலும் சரி, வரிசையில் தான் நிற்க வேண்டும். ஊரில் என்றால் காசு கூடக் கொடுத்து உடனே எல்லா பரிசோசதனைகளையும் செய்து பார்க்கலாம்...ஆனால் கனடாவில் நாளெடுக்கும். ராசுக்குட்டியின் நேரம் கொரனா காலமாக வந்து சேர்ந்ததால் காத்திருப்பு நீளுமோ என்று பயந்து போயிருக்கும் போது மூன்றாம் நாளே ஸ்பெசலிஸ்ட் இடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
"முதலில் அல்ரா சவுண்ட் எடுத்துப் பார்ப்பம். சிறு நீரகத்தில் கல் என்றால் அது காட்டிக் கொடுக்கும். அனேகமாக உனக்கு அதுதான் பிரச்சனை என்று சந்தேகின்றேன் என்று கூறி மூன்று நாட்களில் அல்றா சவுண்ட் இற்கு அனுப்பி வைத்தார்.
இக்காலப்பகுதியில் கொரனா கூத்துக்காட்டிக் கொண்டு இருந்தது. ஒவ்வொரு Lab உம் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்து இருந்தனர். ராசுக்குட்டி மூன்றாம் நாள் உள்ளே போகும் போது அங்கிருந்தவர்கள் உடல் முழுதும் மூடிய ஆடையுடன் இருந்ததை பார்த்து லைட்டாக பயந்து விட்டார். அந்தப் பயத்தில் அரண்டு இருந்தவர். அவர்கள் அவரை மேலாடையை மட்டும் கழட்டி படுங்கோ என்று சொல்லியதை சரியாக காதில் வாங்காமல், முழு ஆடைகளையும் களைந்து விட்டு படுத்துக் கிடக்க, வந்த நேர்ஸ் தன் தலையில் அடித்து, உன்னை கீழே கழட்ட சொல்லவில்லையே என்று அலுத்துக் கொண்டு கீழாடையை போடச் சொன்னார்.
பாவம் மனுசி ஆர் முகத்தில் அன்று முழிச்சதோ தெரியவில்லை.
- தொடரும்;